காலையிலிருந்தே அருண் மிகவும் குழப்பான மனதுடன் இருந்தான். மழை பெய்து முடிந்த பின்னும் தேங்கி நிற்கும் சகதி போல அவன் மனதில் அந்த கசப்பான நிகழ்வின் எச்சங்கள் சொச்சம் அளவு கூட மாறாமல் இருந்தது. கடந்த இரண்டு நாட்களாக தன் கணவன் அருணின் செயல்கள் அனைத்தும் மிகவும் வித்தியாசமாகவே இருப்பதை நிகிலா நன்கு அறிவாள்.இருப்பினும் காதல் கணவனின் கன்னங்கள் புரிந்த அளவுக்கு அவனின் எண்ணங்கள் பிடிபடாமல் தவித்தாள். தேர்தலுக்கு முந்தைய இணக்கமான கூட்டணிகள் தேர்தல் நெருங்கி வரும் வேளையில் பிணக்கமாவது போல் அடிக்கடி எரிந்து விழத் துவங்கிய அருணை நிகிலாவின் மனது ஏனோ அன்னியமாக உணர்ந்தது.
டப்பாவில் வாங்கி வைத்த பால் கூப்பன் முழுவதும் ஒரு நாளில் காலியானது போல நாட்கள் வேகமாக உருண்டோடிக் கொண்டிருந்தது. அன்று மிதமான நிலவொளி, ஆரவாரம் இல்லாத நடு இரவு, புரண்டு புரண்டு படுத்தும் தூக்கம் கண்களை துளியும் தழுவவில்லை. காலில் இருந்த தலையாணியை தலைக்கும், தலையில் இருந்ததை காலுக்கும் மாற்றி முயற்சித்த போது நாத்தம் வந்ததே தவிர தூக்கம் வரவில்லை.விரக்தியோடு கைகளால் அருகில் துளாவிய போது அருண் இல்லை என்பதை நிகில் உணர்ந்தாள். அரை தூக்கத்துடன் எழுந்து சென்று பால்கனியில் பார்த்த போது இதயம் இயக்கத்தை இரு நொடிகள் நிறுத்தும் படியாக உரத்த குரலில் " நோஓஓஓஓஒ!" என்று கத்தினாள் நிகில்.// ஹம்ம்ம்ம்ம்ம், இப்படி எல்லாம் ஒரு பில்டப்போட நானும் ஒரு திகில் கதை எழுதனும்னு தான் ஆசையா இருக்கு. என்ன பண்ண, அதுக்கெல்லாம் ஒரு இது வேணும். "திக்! திக்! திகிலுடன் நிகில்!"னு தலைப்பு தான் பிரமாதமா வருதே தவிர எழுத உக்காச்சுண்டா வெறும் காத்துதான் கவருது! ஒருவேளை 'அடப்பாவி தங்கமணி துணை'னு போட்டு ஆரம்பிச்சா கண்டா வருமோ என்னவோ!

பெட்ரோல் செலவு இல்லாத பைக்!....:)
சரி திகில் கதை தான் வேண்டாம்பா! நடுல நடுல ஒரு சைன்டிபிக் பிட்டை எல்லாம் சொருகி நடுல நடுல அஜால்ஸ் குஜால்ஸா ஜிகினாஷ்ரீ,ஆண்டாளுனு கதாபாத்திரம் எல்லாம் உண்டாக்கி 5 பகுதிக்கு அப்புறம் ஒவ்வொரு கதாபாத்திரமா போட்டுத் தள்ளி ஒரு தொடர் கதை எழுதலாம்னு பாத்தா ம்ம்ம்ம்ம்ம்ம்! ஒன்னும் ஒப்பேர மாட்டேங்கர்து. சினிமா போஸ்டரை சுவாரசியமா திண்ணுண்டே நகராமல் நிற்கும் மாடு போல கதை நகர மாட்டேங்கர்து.
இது எதுவுமே வேண்டாம், நாம பேசாம ஒரு புரட்சி எழுத்தாளரா ஆகலாம்னு முடிவு பண்ணி வெச்சுருந்தேன். புரட்சி பதிவர்னா அமெரிக்காவை கன்னா பின்னானு திட்டனும் அதனால " ஒபாமாவுக்கு ஒன்பது கேள்விகள்" நு ஒரு பதிவு போட்டு கேள்வி கேட்டோம்னா எப்படியும் ஒரு வாரத்துல ஒபாமா பதில் சொல்ல மாட்டார். இதை சாக்கா வெச்சே "ஒபாமாவுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு" "ஒபாமாவுக்கு கடைசி எச்சரிக்கை"னு வரிசையா பதிவு போட்டுட்டு கடைசியா "பதில் சொல்ல பயப்படும் ஒபாமாவே"னு ஒரு பதிவை போட்டு முடிச்சா நிச்சயம் புரட்சி பதிவர் ஆயிடலாம்னு நினைச்சாலும், கமண்ட் போட்டு கலாய்க்கறவாளை நினைச்சா பயமா இருந்தது. அதனால அந்த ஆசைலையும் மண்ணு விழுந்தது. அல்வா தீர்ந்து போகும் போது மைசூர்பா வச்சு சமாளிக்கும் ஸ்வீட்டு கடை மொதலாளி மாதிரி எதுக்கும் இருக்கட்டும்னு "மன்மோஹன் சிங்குக்கு மனம் திறந்த மடல்" ஒன்னு கைவசம் அவுத்து விட ரெடியா வெச்சுருக்கேன். அவுத்து விடர்த்துக்கு இது என்ன நாகுட்டியா?னு யாரும் நக்கல் அடிக்காத சமயத்தில் வெளிவரும்.
சரி போ புரட்சி தான் வரலை பொதுஅறிவு சம்பந்தமா வத்தல் வடாம் போடுவது எப்புடி?னு எழுதலாம்னா வடாம்லாம் ஏற்கனவே எல்லாரும் புழிஞ்சு வெச்சுருக்கா, வத்தல் வடாம் இல்லாட்டி ஒரு கூல் வடாமாவது முயற்சி செய்யலாம்னா இந்த பொறாமை புடிச்ச உலகம் ஏற்கவே கருவடாம் தொடங்கி வெங்காய வடாம் வரைக்கும் எல்லாத்தையும் ஏற்கனவே உலர்த்தி காயபோட்டு வெச்சுருக்கு.
கவிதை எழுதர்து எல்லாம் உண்மைலயே பெரிய்ய்ய்ய்ய விஷயம். கவிதையில் என்னுடைய முயற்சி என்பது முன்னிறவில் மூனு வாழைப்பழம் திண்ணுட்டு அடுத்த நாள் வாய்க்காங்கரையில் "இன்னிக்கி நிச்சயமா வெளிய போயிடும்!" என்ற நம்பிக்கையோடு இருக்கும், கும்ம்ம்ம்! ம்ம்! கிராமத்தான் நிலை தான். "அண்ணலும் நோக்கியா, அவளும் நோக்கியா" நு ஒரு விஞ்ஞான தொடுதலோட ஒரு கவிதை எழுதலாம்னா "தக்குடு! உனக்கு கவிதை ஒன்னுதான் பாக்கியா?"னு கேள்வி வரும் அபாயம் உள்ளதால் ஜாக்ரதையாதான் அடி எடுத்து வைக்கனும். மனசுக்கு தோணினதை எல்லாம் எழுதிட்டு கவிதை/இது கவிதை/இது கவிதை தான் நு லேபில் குடுத்தா ஒரு சிலர் கவிதையா ஏற்றுக் கொள்ளும் வாய்ப்பு அதிகம் என்பதால் முயற்சி செய்ய வேண்டும்.

ஒரு வயது எனக்கும்...:)
இன்னிக்கி என்ன ஆச்சு இந்த பிள்ளைக்கு?னு நீங்க எல்லாரும் யோசிக்கர்து புரியர்து. ஒரு வருஷம் முன்னாடி இதே பிப்ரவரி மாசம் இரண்டாம் தேதி தான் ப்ளாக்க ஆரம்பிச்சேன். உடனே வந்த பாதையை திரும்பி பார்க்கிறேன்! சைடுலேந்து பார்க்கிறேன்!னு எல்லாம் பீலா விட மாட்டேன். எனக்கு தில்லானா மோஹனாம்பாள் படத்துல வரும் ஜில்ஜில் ரமாமணி பாத்திரம் ரொம்ப பிடிக்கும். "மேடைல நடுல நின்னு அவுக ஆடினா, நான் ஒரு ஓரமா நின்னு ஆடிட்டு போறேன், அவுக ஆட்டத்தை 1000 பேரு பாத்தா எங்க ஆட்டத்தை பத்து பேராவது பாக்க மாட்டாகலா"னு வரும் வார்த்தைகள் யாருக்கு பொறுந்தர்தோ இல்லையோ எனக்கு மிகவும் பொறுந்தும். எங்க ஆத்துக்காரரும் கச்சேரிக்கு போனார்ங்கர கதையா தக்குடுவும் உங்களுக்கு நடுல கோமாளி வேஷம் கட்டி ஆடிண்டு இருக்கு.
ஒரு வருஷத்துல பலவிதமான சந்தோஷ அனுபவங்கள் வாய்த்தது. எந்த குழுமத்துலையும் தக்குடு இல்லாம இருந்தாலும் ஆர்வமா விரும்பி வந்து படிக்கும் அன்பு உள்ளங்கள் அனைவருக்கும் அனந்த கோடி நமஸ்காரங்கள்! உலகத்தோட எதோ ஒரு மூலைல இருந்தாலும் உங்காத்து புள்ளை மாதிரி வாஞ்சையுடன் தக்குடு! தக்குடு!னு அன்பு காட்டும் அத்தனை பாசமலர்களுக்கும் அன்பு வணங்கங்கள்! பின்னாடியே வந்துண்டு இருக்கறவா,ஓசிப் பேப்பர் படிக்கறவா, கள்ளப் பயலே!னு உரிமையோட திட்டறவா, Dear Thakkudu போடறவா, பூரிக் கிழங்கு பண்ணி போட்டவா,கமண்டு மட்டும் போடாம பால்கோவாவோட சாப்பாடு போட்டவா எல்லாரோட ஆதரவும் அடியேனுக்கு எப்போதும் தேவை.
என்றும் வம்புடன்,
தக்குடு















