எல்லாரும் செளக்கியம் தானே! ரொம்ப நாளைக்கு அப்புறம் நமிதாவை பிக்பாஸ்ல பாக்கர மாதிரி மறுபடியும் ப்ளாக் பக்கம் வந்தாச்சு. இந்த முறை
ஜெட் ஏர்வேஸை பிடிச்சு மும்பை போயிட்டு அங்கேந்து சென்னை போகர்தா பிளான். என்னோட குரூப்ல
இருக்கும் ஒரு அன்பர், ‘ஜெட்ல எதுக்கு புக் பண்ணினை! அவன்
லேட்டா போவானே! லக்கேஜ் ரெண்டு நாள் கழிச்சு தான் வரும்!’னு சூப்பரா குழப்பி விட்டுட்டார்.
இதுக்கு பயந்தே கைல கொண்டு போகர பைல துணி-Money எல்லாத்தையும் வச்சுட்டு லக்கேஜ் பெட்டில
வழக்கம் போல தட்டுமுட்டு சாமானை போட்டு கட்டிவச்சேன். ப்ளைட்டுக்குள்ள ஏர்ஹோஸ்டஸுக்கு
பதிலா காலகேயனுக்கு ரோஸ்பவுடர் போட்டுவிட்ட மாதிரி வாட்டசாட்டமா ஒரு மாக்கான் வந்தார்.
‘ஆரம்பமே அமக்களமா இருக்குபோ!’னு நினைச்சுண்டு சாப்பாட்டை சாப்டுட்டு தூங்கி எழுந்தா
விசாலமான மும்பை விமான நிலையம். இமிக்ரேசன் முடிக்கவே 2 மணி நேரம் ஆச்சு! இமிக்ரேஷன்ல
ரொம்ப நேரம் ஆனதால பக்கத்து வரிசைல நின்னுண்டு இருந்த கலர் முண்டா பனியன்,ஜமுக்கால துணில டாப்ஸ்,ஸ்விம் சூட்டுக்கு எக்ஸ்ர்டாதுணி
குடுத்து தைச்ச மினிடிராயர்னு எதையுமே சரியா கவனிக்காம லோக்கல் ப்ளைட்டை பிடிச்சு மாமியார்(சென்னை)
விட்டுக்கு வந்து சேர்ந்தேன்.
இந்த தடவை நம்ப மூஞ்சிபுஸ்தக பிரபல பதிவர் அனன்யாக்காவை
நேர்ல பாக்கனும் நினைச்சு முயற்சி பண்ணினேன் ஆனா நடக்கலை. அந்த வருத்தம் தீரர்துக்காக
திருவல்லிக்கேணி ரத்னா கபேல ரெண்டு லிட்டர் சாம்பாரும் அதுக்கு தொட்டுக்க மூனு இட்லி
ஒரு வடை சாப்டுட்டு பார்த்த சாரதி பெருமாளையும் சேவிச்சுட்டு வந்தேன். கல்லிடைக்கு
நான் போய் சேர்ந்த நேரம் இங்க கத்தார்ல பக்கத்தாத்துகாரா (சவுதி,துபாய்,பஹரேன்) கதவை இழுத்து மூடி தாள்பாளை போட்டுட்டா. எங்க ஊர்காராளை பத்தி சொல்லவா
வேணும். அம்மணி மாமியாத்து வாசல்ல உக்காந்துண்டே அமெரிக்காவோட விசா ரூல்ஸை பத்தி வம்பு
பேசற கோஷ்டிகள். வெறும் வாயை மென்னுண்டுருந்தவாளுக்கு அவல் மாதிரி நான் போய் சேர்ந்தேன்.
ஏ தக்குடு! நீ கத்தார்ல தான் இருக்கைல்யோ! அங்க ஒரே கலவரமாமே? எல்லாம் ஆச்சுனு சொல்றாளே? அதான் நீ கிளம்பி வந்துட்டையா?னு அச்சுபிச்சு மாமா மூச்சுவிடாம
கேட்டார்.
‘ஓய் மாமா! தந்தி பேப்பர்காரன் வண்ணாரப்பேட்டை
ஆரெம்கேவி கடை வாசல்ல இருக்கும் டீ கடைல வடையும் டீயும் சாப்டுண்டே எழுதின இன்டர்னேஷனல்
நியூஸை படிச்சுட்டு ஒளரிக்கொட்டாதியும் ஓய்! உமக்கு திண்ணைல கூட உக்காரர்துக்கு ஆள்
இல்லைனா அதுக்கு நானா கிடைச்சேன்! உங்காத்து மாமிக்கும் பக்கத்தாத்து மாமிக்கும் சிலசமயம்
மனஸ்தாபம் வரர்து இல்லையா? உங்காத்து மாமிக்கு எல்லார்கூடையும் தகராறுதான் அது வேற விஷயம் இருந்தாலும் நம்மாத்துல
குடியா மூழ்கி போயிடர்து? அவாத்துலேந்து எப்போதும் வரும் மாங்கா ஊறுகாய் கொஞ்ச நாளைக்கு கிடைக்காது, அதே மாதிரி தான் கத்தார்லையும்
ரெண்டு நாளைக்கு பால் & மோர் கொஞ்சம் தட்டுப்பாடா இருந்தது. இப்ப எல்லாம் சரி ஆயிடுத்து. அந்த ஊர்காரா எல்லாரும் ராஜா பக்கம் நாங்க இருக்கோம்னு முழு சப்போர்ட் பண்ணறா. ஊருக்கு கிளம்பி
வரவா எல்லாரும் ஸ்கூல் லீவுக்காக வந்துண்டு இருக்கா ஓய்!’னு சொல்லி அவரோட வாயை அடைச்சேன்.
'ஊர்ல கல்யாணம் மார்ல சந்தனம்' அப்பிடிங்கர கதையா
தெருல ரெண்டு விஷேஷத்துல கலந்துக்க முடிஞ்சது. பந்தல்ல ஒரு சுவாரசியமான சம்பாஷனை நடந்தது,
வம்பு மாமி - டாக்டராத்து கோமா ஷஷ்ட்யப்த பூர்த்திக்கி ஏன் வரலை?
K காது மாமி - மூர்த்தி மாமா தான் காத்தாலையே வந்தாச்சே!
வ.மாமி - மூர்த்தி இல்லைடீ! கோமா கோமா!
K.காது மாமி - மாமாவா? பந்தல்ல உக்காந்துண்டு இருக்கார்
வ.மாமி - இதுக்கு மேல உன்கிட்ட முண்டினா புதுசா பாக்கரவா என்னை செவிடுனு நினைச்சுப்பா!
கோமா வந்தா எனக்கென்ன? வரலைனா எனக்கென்ன! காதுல திருகாணியை நன்னா முறுக்கிவிட்டுக்கோ!
அதாவது ஒழுங்கா இருக்கட்டும்!
தோஹால இருக்கும் ஒரு சங்கரன்கோவில்காரா அவா பிள்ளைக்கு
திருனெல்வேலில வச்சு பூணல் போட்டா. ஒரு நாள் முன்னாடியே போய் டிபன் காபி சாப்பாடு எல்லாத்தையும்
ஒரு கை பாத்து விழாவை சிறப்பிச்சுட்டு வந்தேன். போன இடத்துல அவா சொந்தக்காரா எல்லாருக்கும்
சங்கரன்கோவில் மாமா என்னை பத்தி இன்ட்ரோ குடுக்கரேன் பேர்வழினு ஒரேடியா தூக்கிட்டார். பூணல் அன்னிக்கு
மேடைக்கு பக்கத்துல நன்னா பளிச்னு மல்டி கலர் காட்டன் சில்க் புடவை கட்டிண்டு இருந்த
ஒரு பொண்ணை பாத்துட்டு ப்ரண்டுக்கு பாக்கலாமேனு(சத்தியமா ப்ரண்டுக்கு தான்) ஐடியா பண்ணி
அவளோட ஒன்னு விட்ட சித்தி கிட்ட இதர சமாசாரங்களை ஜாரிக்கலாம்னு ஆரம்பிச்சா, ‘உங்களோட
ஜாதகத்தை எடுத்தாச்சா?’னு இன்ப அதிர்ச்சி குடுத்துட்டா! வெக்கத்தோட ரவுண்ட் நெக் டீசர்ட்டை
சரிபண்ணின்டு ‘என்னோட ஜாதகத்தை 2011 டிசம்பர்லையே ஒரு ஆள் கைல எடுத்து குடுத்து file-ஐ மொத்தமா 'க்ளோஸ்' பண்ணியாச்சு! தங்கமணியை சென்னைல விட்டுட்டு வந்துருக்கேன் மாமி’னு சொல்லிட்டு மனசை
தேத்திண்டு சாப்பிட போனேன். ராத்ரியே தங்கமணிக்கு போன் பண்ணி விஷயத்தை சொன்னா, ‘இனிமே நாங்க
இல்லாம எந்த விஷேஷத்துக்கும் போய் கிழிக்க வேண்டாம்’னு ஆசையா சொல்லிட்டா. ஊருக்கு கிளம்பரதுக்கு
முன்னாடி நம்ப TRC மாமாவையும் மாமியையும் ஆத்துக்கு போய் பாத்து நமஸ்காரம் பண்ணிட்டு
போன மாதிரியே மறுபடியும் தோஹாவுக்கு வந்து சேர்ந்தாச்சு.