Thursday, January 22, 2015

தோஹா டு தோஹா Part 4

Part 1  Part 2 & 3  படிக்க


ஆவணியாவட்டம் முடியர்துக்குள்ள வினாயகர் சதுர்த்தி 10 நாள் உத்ஸவம் ஆரம்பம் ஆயிடுத்து. எங்க தெரு பிள்ளையாருக்கு 10 நாள் உத்ஸவம் உண்டு. பத்து நாளும் அவர் பேரை சொல்லிண்டு சக்கரைபொங்கல், பஞ்சாமிர்தம், சுண்டல்னு வகை வகையா உள்ள தள்ளிட்டு திண்ணைல உக்காந்துண்டு வம்படிக்கர்து ஒரு தனி சுகம் தான். பொதுவா இந்த பத்து நாளும் நான் வேற எங்கையும் நகரமாட்டேன். ஆனா இந்த தடவை வேற வழியே இல்லாம ரெண்டு நாள் நகரும் படியா ஆயிடுத்து. இதுல நான் மட்டும் போனா போறாதுனு அம்மா அப்பாவையும் கூட்டிண்டு போகும் படியா ஆயிடுத்து. போகும் போது ரயில்ல போயிட்டு வரும் போது ப்ளைட்டுல வந்தோம். ப்ளைட்டுல வரர்து ஒன்னும் இப்ப எல்லாம் அதிசயம் இல்லைனாலும் 60 வருஷத்துக்கு மேல ப்ளைட் ஏறாத எங்க அப்பாவையும் அம்மாவையும் முதல் தடவையா அதுல ஏத்திவிட்டு அவாளோட மனநிலை எப்பிடி இருக்கும்னு பாக்கர்துல ஒரு தனி சந்தோஷம்.  

காத்தால 9 மணிக்கு ப்ளைட் அதனால 6 மணிக்கே ஏர்போர்ட் கிளம்பனும்னு முடிவு பண்ணி அப்பா அம்மா கிட்ட காலைல ஒரு ஸ்பெஷல் ரயில் விட்டுருக்கான் அதுல போகபோறோம்னு புளுகி வச்சுருந்தேன். இதுக்கு முன்னாடி இன்னொரு விஷயத்தையும் சொல்லணும். எங்க அப்பாவுக்கு கிளாக்கோமானு சொல்லக்கூடிய கண் உபாதை. எனக்கு விபரம் தெரிஞ்ச நாள்லேந்து எனக்கு தெரிஞ்சதெல்லாம் ஒன்னாம் நம்பராத்து கோமா, டாக்டராத்து கோமா & நானி கோமா மட்டும் தான். இந்த க்ளாக்கோமாவை கேள்விபட்ட போது ரொம்பவே கஷ்டமா இருந்தது. எல்லாம் சரியா போயிண்டு இருக்கும் போது திடீர்னு ஒரு நாள் நமக்கு பார்வை இல்லாம போயிடுத்துனா அதுக்கு கிளாக்கோமானு நாமகரணம் பண்ணிடலாம். எதிரிக்கு கூட இந்த நிலைமை வரகூடாதுனு பலதடவை நினைச்சு பாத்து வருத்தப்பட்டதுண்டு. இதுனாலயே நான் அவர் கிட்ட போன்ல எதை பத்தி பேசினாலும் வார்த்தையால மனசுல பாக்கர மாதிரி விலாவரியாதான் பேசுவேன். என்னோட நிலைமையை சொல்லி உங்களையும் சோகமாக்கிடேன் பாருங்கோ! நாம விட்ட இடத்துலேந்து தொடரலாம்.

 

 ஏர்போர்ட் உள்ள நுழைஞ்சதுக்கு அப்புறம் தான் அப்பாகிட்ட விஷயத்தை சொன்னேன். ஒன்னேகால் மணி நேரத்துல நாம திருவனந்தபுரம் போய் அங்கேந்து கார்ல கல்லிடை போயிடலாம்னு சொன்னேன். ‘எங்களுக்கு எதுக்குடா ப்ளைட்’னு ரெண்டு பேருமே சொல்லிண்டா. போர்டிங் பாஸ் போடும்போதே வீல்சேர் வேணும்னு சொல்லி வாங்கி அவரை கூட்டிண்டு போயாச்சு. இன்டிகோ ப்ளைட் சர்வீஸ் உண்மையிலேயே ரொம்ப பிரமாதமா இருந்தது. படிக்கட்டு இல்லாம சாய்வு பாதைல கொண்டு போய் நேரா சீட்டுல கொண்டு போய் அப்பாவை உக்காத்திட்டா. படி ஏறாம எப்பிடி நான் நேரா சீட்டுக்கு வந்தேன்னு அப்பா திரும்ப திரும்ப கேட்டுண்டு இருந்தார். ப்ளைட்டுல இருக்கும் பைலட் & ஏர்ஹோஸ்டஸ் பத்தின விஷயம் எல்லாம் விலாவரியா சொன்னா. ஜாதகம் & நக்ஷத்ரம் மட்டும் தான் பாக்கி!எதுக்கு அவாளோட ஸ்டேட், பாஷை எல்லாம் சொல்லறானு மெதுவா என் கிட்ட கேட்டார். ஏற்கனவே ஆச்சரியம் கலந்த திகிலோட உக்காந்துண்டு இருந்த எங்க அம்மாகிட்ட ‘கீழ எவ்ளோ ஆழத்துல பூமி இருக்கு பாத்தியா’னு கேட்கவும் அவசரமா தண்ணியை எடுத்து குடிச்சுட்டு என்னோட முதுகுல ஒரு அடி போட்டா. திருவனந்தபுரத்துல லேண்டிங் ஆகி லக்கேஜ் எடுத்ததுக்கு அப்புறம் தான் அம்மா முகத்துல ஒரு தெளிவு வந்தது. 

கல்லிடை வந்து பழையபடி சதுர்த்தி உற்சவத்துல கலந்தாச்சு. எங்க தெரு டாக்டர் மாமாவோட ரெண்டு பொண்களும் வந்துருந்தா. டாக்டர் எங்க தெருவோட மறுக்கமுடியாத ஒரு அடையாளம். வரலாறுல கி.மு கி.பி இருக்கரமாதிரி எங்க தெருல யாரா இருந்தாலும் பழைய மனுஷா கேக்கர ஒரே கேள்வி 'உங்க ஆம் மணி டாக்டராத்து வரிசைல இருக்கா இல்லைனா எதிர் வரிசைல இருக்கா?'னு தான் இருக்கும். சதாபிஷேகம் கழிஞ்சு சிவலோகப் ப்ராப்தி அடைஞ்சவர் அப்பிடினாலும் எனக்கு ரொம்ப தோஸ்த். அவர் சிவலோகப்பிராப்தி ஆன தினம் பால்ய ஸ்னேகிதனை பறிகுடுத்த மாதிரி அவாத்துக்கு போய் அழுதுட்டு வந்தேன். எந்த விஷயம் பத்தி பேசினாலும் அதுல நமக்கு தெரியாத ஒரு புது விஷயத்தை சொல்லுவார். கல்யாண சாப்பாட்ல உப்பு உறைப்பு எப்பிடி இருக்குங்கர்தை அவரை மாதிரி யாராலும் ரத்தினசுருக்கமாவும் குசும்பாவும் சொல்லமுடியாது.  டாக்டரோட மூத்தபொண்ணோட பொண்ணுக்கு(ம்) அடியேன் தோஸ்த். இந்தியன் டீமுக்கு ப்ஃளட்சர் இருக்கரமாதிரி அந்த அக்காவுக்கு பம்பரம் விடர்துக்கு கோச்சுக்காம சொல்லிகுடுத்த கோச் நாம தான். இந்த விஷயத்தை மறக்காம அவாளோட ஆத்துக்காரர்கிட்ட வேற சொல்லி அறிமுகம் பண்ணி வச்சதுதான் அதுல காமெடி.   

டாக்டரோட மூத்தபொண் அவாளோட சம்பந்தி சகிதமா வந்துருந்தா.அவாளுக்கும் என்னை அறிமுகம் பண்ணி வச்சா. அதோட நிப்பாட்டி இருக்க கூடாதோ! ‘இவன் ஜோரா ப்ளாக் எழுதுவானாக்கும் உங்களுக்கும் ஜடி தரேன்’னு சொல்லவும் எனக்கு தூக்கிவாரிபோட்டது. ‘ப்ளாக்கை படிச்சதுக்கு அப்புறம் அவாளோட சம்பந்தி இனிமே நம்ப பக்கமே வரமாட்டா’னு நினைச்சுண்டேன். பெண்களூர்ல இருக்கும் ரெண்டாவது பொண் பஞ்சாயத்து தலைவர் தேர்தல்ல நிக்கர அளவுக்கு பிரபல்யம். அவாளுக்கு தெரியாதவா & அவாளை தெரியாதவா ரொம்ப குறைவுனு சொல்லிடலாம். எனக்கு தெரிஞ்சு அந்த மாமி செளக்கியமா இருக்கேளா?னு ஜாரிக்காத ஆள் அந்த வட்டாரத்துலேயே கிடையாதுனு சொல்லலாம்.
 
மதுரை மெட்ராஸ் அனுபவங்களோட அடுத்த வாரம் இந்த தொடரோட சமாப்தி. (உடனே பானகம் பாயஸம் வடை மாலை நைவேத்யம் உண்டானு கமண்ட்ல வந்து வம்புக்கு இழுக்காதீங்கோ!)