Thursday, February 19, 2015

தோஹா டு தோஹா Part 5

Part 1 2 3 4 படிக்க


 

தெருல எல்லாரும் ரொம்ப சந்தோஷமா பெரிசு பெரிசா கோலம் போட்டு, குழந்தேளுக்கு புதுசு புதுசா டிரெஸ் போட்டு விட்டு பத்து நாள் சதுர்த்தி உத்ஸவத்தை கொண்டாடிண்டு இருந்தா. போன வருஷம் பத்தாயிரம் மோதகம் பண்ணி கணபதி ஹோமம் பண்ணினா. மத்த இடத்துல இருக்கர மாதிரி சமையல் ஆட்களை வச்சு சம்பளம் குடுத்து பண்ணர ஜோலி இங்க கிடையாது. பெரிய இன்டஸ்ட்ரி மாதிரி தெருல இருக்கும் எல்லா மாமிகளும் அவாத்து சமையலை முடிச்சுட்டு வந்து மோதகம் தயார் பண்ணனும். சில குரூப்பு மாமிகள் அபிராமி அந்தாதி, விஷ்ணு ஸஹஸ்ரனாமம்னு சொல்லிண்டே வேலை பாப்பா. சில குரூப்பு அடுத்தாத்து ஆவலாதி,பக்கத்து தெரு வம்பு எல்லாத்தையும் பேசிண்டே வேலை பாப்பா. ‘வம்பளந்துண்டே பண்ணாதீங்கோ!’னு வயசான மாமிகள் சத்தம் போட்டா அதுக்கு வம்பி மாமிகள் ‘நம்ப பிள்ளையாருக்கு எல்லாமே வேண்டிதான் இருக்கு! ஸ்லோகமும் கேட்டுப்பார் நாங்க பேசர வம்பையும் கேட்டுப்பார்!’னு சொல்லி அவாளோட வம்பிகள் கூட்டத்துல பிள்ளையாரையும் பார்ட்னர் ஆக்கிடுவா. மோதகத்தை பொறிச்சு எடுத்துண்டு இருந்த ஒரு மாமி என்னை பாத்ததும் ‘பாரின்ல இருக்கரவா எல்லாருக்கும் இப்ப புதுசா ஒரு வியாதி கபாலத்துல வருதாமே?’னு கேட்டா. ‘மாமி! அது கபாலா இல்லை எபோலா! அரையும்குறையுமா சன் டிவிகாரன் போடர சிறப்புபார்வையை வைச்சுண்டு கேக்காதீங்கோ’னு சொன்னேன்.

 

அஞ்சு வருஷத்துக்கு அப்புறம் பாத்த ஒரு மாமி அப்பிடியே இருக்கா மாமாதான் நிரைச்ச தலையும் தானுமா இருக்கார். டை அடிக்கறேன்னு சொன்னா இப்பெல்லாம் கெளரவ குறைச்சலா இருக்கு அதனால ஹென்னா போட்டுக்கறேன்னு சொல்றா. ஹென்னாவை இவா மட்டும் நன்னா போட்டுண்டு மாமாவை அண்ணா மாதிரி வைச்சா மாமியை திடீர்னு பாக்கும் போது இது இணைவியா இல்லைனா துணைவியானு சந்தேகம் வருது. இது ஒரு தினுசுனா இன்னொரு பக்கம் தெருல ரொம்ப வருஷமா இருக்கும் சில வயசான மாமாக்களோட தொல்லை தாங்க முடியாது. ரொம்ப வருஷத்துக்கு அப்புறம் கோவில் உத்ஸவத்துக்கு வரனும்னு ஆசைபட்டு வந்த சில பழைய மனுஷாளை பக்கத்துல வரசொல்லி சி பி ஐ மாதிரி விசாரணை பண்ணிண்டு இருப்பா. இதுல நடுல நடுல ‘அந்த காலத்துல உங்க அப்பாவும் நானும் எப்பிடி இருந்தோம் தெரியுமா’னு ஒரு பிட்டை நுழைப்பார். இப்படி போகும் பேச்சு சில சமயம் ரொம்ப ஜாலியா போகும், சில சமயம் ‘நீ காலேஜ் படிக்கும் போது வீரவனல்லூர்லேந்து வந்த ஒரு பொண்ணு கூட சுத்திண்டு இருந்தையேடா’னு அந்த மாமாட்ட கேக்கர்துக்கும் அவாத்து மாமி வந்து நிக்கர்துக்கும் சரியா இருக்கும்.
 

இதெல்லாம் கூட சரினு விட்டுடலாம் சில கேள்விகள் ரொம்ப தர்மசங்கடமா போயிடர்து. 'உனக்கு எத்தனை குழந்தெள்? பிள்ளைக்கு ஏது இன்னும் கல்யாணம் பண்ணலை? பொண்ணுக்கு ஏது இன்னும் குழந்தை பொறக்கலை?'னு கேள்விகள் போகும் போது வந்தவாளுக்கு ரொம்ப கஷ்டமா போயிடர்து. பிள்ளைக்கு ஏது கல்யாணம் பண்ணலைனா அவரா கல்யாணம் பண்ணமாட்டேன்னு சொல்லிண்டு இருக்கார்! பொண்ணு கிடைசா கோவில் வாசல்லையே கூட கல்யாணம் பண்ண தயார்தான். பொண்ணுக்கு ஏது இன்னும் குழந்தை பொறக்கலைனு கேட்டா! எல்லாரும் உங்களை மாதிரியே 25 வயசுக்குள்ள 3 குழந்தை பெத்துக்க தயாரா இருக்க வேண்டாமா?  இதே மாதிரி யார்கிட்டையோ ‘உங்க சித்தப்பாவுக்கு நான் தான் லைஃப் குடுத்தேன் தெரியுமா?’னு பிரஸ்தாபிச்சுண்டு இருந்த போது. ‘லைஃப் குடுக்கர்தெல்லாம் இப்ப பெரிய விஷயமா மாமா? நித்தியம் பத்து பேருக்கு நான் லைஃப் குடுத்துண்டு இருக்கேன் & எனக்கு பத்து பேர் லைஃப் குடுத்துண்டு இருக்கா, இதுல பிரமாதமா சொல்லிக்க என்ன இருக்கு’னு சொல்லிண்டே நான் நகந்துட்டேன். அந்த மாமாவுக்கும் புரியலை என்னோட தங்கமணிக்கு நான் சொன்னது புரியலை. ‘கேண்டி கிரஷ்ல(Candy Crush) நித்தியம் எத்தனை பேருக்கு நாம லைஃப் குடுக்கரோம்!’னு கண்ணடிச்சுண்டே நான் சொல்லவும் தங்கமணிக்கு ஒரே சிரிப்பு.  

போன போஸ்ட்ல எங்க தெரு டாக்டர் மாதிரி இந்த போஸ்ட்ல என்னோட இன்னொரு நண்பர். வாஸ்தவமா அவர் எங்க அப்பாவுக்கு நண்பர் ஆனா அவரை விட எனக்கு தான் ரொம்ப சினேகம்னு சொல்லனும். ஏ மாப்ளே!னு என்னை பாத்த உடனே சத்தம் குடுப்பார். தோஹாலேந்து எதை மறந்தாலும் அவரோட அம்பாள் பூஜைல சந்தனத்தோட சேர்த்து அரைக்க குங்குமப்பூ வாங்காம போகமாட்டேன். ஒரு மணிக்கூர் சாதாரணமா என்கிட்ட பேசுவார். ஆள் உயரம் கிடையாது ஆனா நல்ல ஆஜானுபாஹூவா எலுமிச்சம்பழம் மாதிரி இருப்பார்.போன வருஷம் திடீர்னு வந்த மாரடைப்புல காலமாயிட்டார். இப்ப நினைச்சாலும் தாங்கமுடியாத ஒரு வயத்தெரிச்சல். அவரோட ஜாலியான குணத்துக்கு எனக்கு அடுத்த தலைமுறை வந்தாலும் அதுக்கும் அவர் நண்பனா இருந்திருப்பார். பூட்டி கிடந்த அவாத்தை பாக்கும் போதெல்லாம் வாசல்ல நின்னுண்டு ‘ஏ மாப்ளே!’னு சிரிச்ச முகமா கூப்பிடர மாதிரியே இருந்தது. என்ன பண்ணமுடியும் ஆண்டாண்டு காலம் அழுதுபுரண்டாலும் மாண்டவர் மீள்வாரோ!
 

சதுர்த்தி அன்னிக்கு திருச்சிலேந்து ஒரு ப்ளாக்கர் வந்துருந்தார். காதல்கோட்டை சினிமால வரமாதிரி அவரும் நானும் நேர்ல பாத்துக்காமையே  நட்போ நட்பு. எங்க தெரு பிள்ளையாருக்கு பட்டு,வெள்ளி ருத்ராக்ஷமாலை எல்லாம் வாங்கிண்டு வந்து சமர்பணம் பண்ணினார். கோவில்ல ஜோலியா இருந்ததால ரொம்ப பேசமுடியலை. அவரை சந்திச்சது ரொம்ப சந்தோஷமா இருந்தது. அதே மாதிரி சென்னைல வந்து தானைத்தலைவி அக்காவை குடும்பத்தோட சந்திச்சதும் ரொம்ப சந்தோஷமா இருந்தது. வாஸ்தவமா நம்ப ‘கிரேஸி மோகினி’ அனன்யாக்கா உட்பட பல பிரபலங்கள் சகிதமா மாநாடு மாதிரி நடக்க வேண்டிய சந்திப்பு கடைசில ஏதோ ரகசிய ஆலோசனை கூட்டம் மாதிரி முடிஞ்சுடுத்து. தானைத்தலைவி அக்கா ஆல் இன்டியா ரேடியோல வேலை பாக்கராளாம். "ஒரு எஃப் எம் ரேடியோவே ஆல் இன்டியா ரேடியோவில் வேலைபாக்கிரதே அடடா ஆச்சர்யகுறி!"னு கவிதை சொன்னவுடனே அவாளோட ரங்கமணி ரொம்ப ரசிச்சுண்டே ‘தக்குடுவுக்கு இன்னொரு டம்பளர் பாயஸம் குடும்மா!’னு சொல்லி உபசாரம் பண்ணினார்.
 

எல்லா கூத்தையும் முடிச்சுண்டு நல்லபடியா தோஹா வந்து சேர்ந்தோம். எல்லாத்தையும் எழுதி முடிக்கர்துக்குள்ள அடுத்த சதுர்த்தியே வந்துடுமோனு பயந்துண்டு இருந்தேன். நல்ல வேளை தப்பிச்சேன்!.......