கழிஞ்ச 2020 வருஷம் எல்லாருக்குமே ஒரு மறக்க முடியாத வருஷமா ஆயிடுத்து. 2020
மார்ச் மாசம் மெதுவா ஆரம்பிச்சு டிசம்பருக்குள்ள எல்லாரையும் சோழியை சொலட்டி போடரமாதிரி
போட்டுட்டு பாகம் இரண்டு வேணுமானு கண் சிமிட்டி பயம் காட்டிண்டு இருக்கு. எல்லாருக்கும்
எதாவது ஒரு வழில பாதிப்பு. ஒரு சிலருக்கு ஜோலி போச்சு, ஒருசிலரோட சோலியே முடிஞ்சு போச்சு, ஒருசிலரோ “சாவுபயத்தை கண்ணுல காட்டிட்டான் பரமா!”னு
சொல்லும்படியா சாவின் விளிம்புக்கே போய் திரும்பி வந்துருக்கா. இப்படி ஒரு நிலைமையை
நாம யாருமே எதிர்பாக்கலை. போதும்டா சாமி!னு சொல்லும்படியா ஆயாச்சு. முழு வருஷமும் மாஸ்க்
போடர்துலையும், கையை அலம்பர்துலையும், சானிடைசர் போடர்துலையும் கழிச்சாச்சு. இந்த வருஷத்தின்
ஆரம்பத்துலேந்து அப்பாவை பத்தின கவலையும் பயமும் ரொம்ப ஜாஸ்தியா இருந்தது. அவருக்கு
ஏற்கனவே கிளக்கோமாவால 2012லேந்து கண் பார்வை கிடையாது. அவர்பாட்டுக்கு ஆத்துக்குள்ள
நடமாடிண்டு இருந்தார். கடைசி ரெண்டு வருஷமாதான் சோடியம் & யூரியா கிரியேட்டின் அவரை படுத்த ஆரம்பிச்சது. அம்மாவோட
பலத்துல தான் இத்தனை நாள் சமாளிக்க முடிஞ்சது. கண்ணுக்கு கண்ணாக இருந்து பாத்துண்டா.
போன மாசம் 9ம் தேதி இரவு அப்பாவுக்கு சிவலோகப் பிராப்தி கிடைத்தது.
ராத்திரியே விஷயம் தெரிந்தாலும் எப்பிடி போகர்துனு
தெரியாம எல்லாரையும் மாதிரி நானும் கொஞ்சம் திண்டாடினேன். லீவு கிடைச்சாலும் ப்ளைட்
டிக்கெட் கிடைக்கனும். எல்லாத்துக்கும் நடுல கொரொனா டெஸ்ட் எடுத்தா தான் ஏர்போர்ட்
உள்ளையே போக முடியும். ஆண்டவன் அனுக்கிரஹத்தில் எல்லா தடைகளையும் தாண்டி ஒரு நாளில்
கல்லிடை போயிட்டேன். அண்ணா அமெரிக்காவில் இருந்து வந்து சேர ஐந்து நாள் ஆச்சு. அவன்
வந்ததுக்கு அப்புறம் தாமிரபரணி நதிக்கரையில் வைத்து எல்லா காரியங்களும் செய்ய ஆரம்பிச்சோம்.
எங்க அப்பாவுக்கு கண் பார்வை நன்னா இருந்த வரைக்கும் ஒரு நாள் கூட ஆத்தங்கரை போகாம
இருந்தது கிடையாது. நெல்லை மாவட்ட மக்களுக்கு இந்த ஆத்தங்கரை கிறுக்கு கொஞ்சம் ஜாஸ்தி. "என்ன ஆனாலும் நம்ப ஆத்துல வச்சு ஆகனும், நம்ப ஆத்தங்கரைல வச்சு கிடைக்கனும்"னு சொல்லும் பழக்கம் இங்கு சாதாரணம். அவர் நினைச்ச
மாதிரியே அவருக்கு அந்த நதியில் கிடைத்தது.
அவருக்கு மிகவும் பிடித்தமான இரண்டு விஷயம் சமையல் & சங்கீதம். ராகமா சுவரத்தோட அழகா பாடுவார். அம்மா சமையல் பண்ணும் போது ரேழில உக்கார்ந்தமேனிக்கே, “அதை போட்டுக்கோ! இதை போட்டுக்கோ!”னு செஃப் தாமு மாதிரி குறிப்பு குடுப்பார். கடைசி இரண்டு வருஷத்துல அவரை கட்டிலில் இருந்த எழுப்பனும்னா ரெண்டு விஷயத்தால தான் முடியும் ஒன்னு காமாட்சி ஸ்வீட்ஸ் அல்வா அல்லது மகாராஜபுரம் சந்தானத்தின் ஏதாவது ஒரு பாட்டு(கிட்டத்தட்ட அதுவும் அல்வா மாதிரி தான்). காவிரிக்கரைல இருக்கரவாளுக்கும் தாமிரபரணி கரைல இருக்கரவாளுக்கும் வக்கனை ஜாஸ்தி. ‘எதை போட்டாலும் திங்கர்துக்கு நான் என்ன போக்கத்து போயா இருக்கேன்’ என்று இருவருக்கும் கோவம் வந்துவிடும். அப்பாவும் அதுக்கு விதிவிலக்கல்ல. போன வருடம் சென்னை ராமச்சந்திராவில் ஐசியூவில் இருந்து வெளியில் வந்த போது “பொங்கலும் வடையும் வாங்கிண்டு வாடா!”னு அவர் சொன்ன போது சிரிப்பும் அழுகையும் சேர்ந்தே வந்தது. சின்ன வயதிலிருத்தே அப்பாவிடம் இருந்த முக்கியமான குணங்கள் நேர்மை & வாக்குத் தவறாமை. குடும்பத்தில் ஒரு சமயத்தில் அவருடைய ஒரே சகோதரியின் உரிமைக்காக எல்லா அண்ணன்களையும் பகைத்துக் கொண்ட நேர்மை எங்களுக்கு அம்மாவால் சொல்லிக்குடுக்கப்பட்ட பாடம். “நமக்கு சொந்தமில்லாத பொருள் மீது ஆசை கூடாது, அடுத்தவாளோட பைசா தெருவில் கிடந்தால் அது பேப்பருக்கு சமானம், அடுத்தவன் பைசா நமக்கு வேண்டாம்” இதெல்லாம் அவர் அடிக்கடி உபயோகித்த வார்த்தைகள். வெரும் பேச்சாக இல்லமல் வாழ்ந்தும் காட்டினார். மாவீரன் சிவாஜியின் அம்மா ஜீஜாபாய் பத்தி பாடத்துல தான் படிச்சிருக்கேன் ஆனா அம்மாவோட தைரியம் அதுக்கு நிகரானது. எந்த நிலையிலும் தைரியத்தை கைவிடாத ஒரு ஆளுமை. அப்பாவின் ஆயுளை இத்தனை வருஷம் நீட்டித்து தந்தது அம்மாவின் தைரியமும் தியாகமும் தான்.
அவர் மறைந்தாலும் அவரின் நினைவுகள் எங்கள் மனதில்
எப்போதும் நீங்காத செல்வமாக நிறைந்து இருக்கும்!!!