Saturday, September 20, 2014

தோஹா டு தோஹா


எல்லாரும் செளக்கியமா இருக்கேளா? யானைகள் புத்துணர்ச்சி முகாமுக்கு போயிட்டு வந்த கோவில் யானை மாதிரி ஒரு மாசம் ஊருக்கு போயிட்டு வந்தது மனசுக்கும் உடம்புக்கும் பாட்டரி சார்ஜ் பண்ணின மாதிரி இருக்கு. தோஹாலேந்து கிளம்பி திரும்பி தோஹா வந்தவரைக்கும் உள்ள வம்புகள் எல்லாத்தையும் சொல்லர்துக்கு உங்களைவிட்டா எனக்கு வேற யாரு இருக்கா சொல்லுங்கோ? இந்த தடவை தங்கமணியும் அத்வைதாவும் கன்னியாகுமரி எக்ஸ்ப்ரஸ் மாதிரி ஒரு மாசம் முன்னாடியே ஊருக்கு கிளம்பி வந்துட்டா. திருனெல்வேலிலேந்து மன்னார்குடி வழியா போகும் செந்தூர் எக்ஸ்ப்ரஸ் மாதிரி நான் ஆடி அசைஞ்சு ஒரு மாசம் கழிச்சுதான் ஊருக்கு வந்து சேர்ந்தேன்.  

ஒரு மாசம் தங்கமணி இல்லாம நன்னா ஆட்டம் போட்டியா தக்குடுனு? யாரும் ஆரம்பிக்காதீங்கோ! ரயில்வே தண்டவாளம் பக்கத்துல வீடு இருக்கரவாளுக்கு 'தடக் தடக்' சத்தம் இல்லைனா எப்பிடி தூக்கம் வராதோ அதை மாதிரிதான் நானும் தங்கமணியும். பழகின இம்சை பக்கத்துல இருக்கரவரைக்கும் அருமை தெரியாது ஆனா ரெண்டு நாள் ஆள் இல்லாம தெண்டவிட்டா தெரியும் சங்கதி. நான் ஊருக்கு கிளம்பர்தெல்லாம் தமிழ் நாடு காங்கிரஸோட காரிய கமிட்டி மீட்டிங் மாதிரிதான் எந்த ஆரவாரமும் இல்லாம முடிஞ்சுடும். தங்கமணி கிளம்பர்து அப்பிடிங்கர்து பெங்களூர் கோர்ட்ல அம்மா ஆஜர் ஆகரமாதிரி, கடைசி நிமிஷம் வரைக்கும் பரபரப்பா இருக்கும். ஒரு வாரம் முன்னாடிலேந்தே மேடம் ஷாப்பிங் ஆரம்பிச்சாலும் பிளைட்டுக்கு முந்தின நாள் நிச்சயமா ஒரு கொசுறு ஷாப்பிங் பண்ணிதான் சமாப்தி ஆகும்.  

சாமான் செட்டோட ஏர்போர்டுக்கு கிளம்பி வந்தாச்சு,எல்லாம் பத்திரமா வச்சுக்கோ! குழந்தையை ஜாக்கிரதையா பாத்துக்கோ! போனதடவை வந்த அந்த குஜராத் ஏர்ஹோஸ்டஸ் வந்தா நான் ரொம்ப ஜாரிச்சதா சொல்லு!னு முக்கியமான விஷயம் எல்லாம் சொல்லிமுடிக்கவும் அத்வைதா என்கிட்ட ‘டபக்’னு தாவிடுத்து. தாவினதோட நிக்காம அம்மாவுக்கு ஜோரா ஒரு டாடா காட்டிருத்து.’ரொம்ப சந்தோஷம்! அப்பாவும் பொண்ணும் செளக்கியமா இருங்கோ! நான் கிளம்பறேன்’னு தங்கமணி சொல்லவும் என்ன பண்ணர்துனே தெரியலை. அப்புறம் சமாதானபடுத்தி அனுப்பிவச்சுட்டு திரும்பி வரும்போது ஒரெ பீலிங்ஸா ஆயிடுத்து. ஜூன் மாச கடைசில அத்வைதாவுக்கு கல்லிடைல வச்சு ஆயுஷ்யஹோமம் ஆச்சு. அதுக்கு நாலு நாள் மட்டும் லீவு போட்டுட்டு ஊருக்கு போயிட்டு தனியா திரும்பி வந்துட்டேன், அதுக்கு அப்புறம் மறுபடியும் ஜீலை கடைசில சதுர்த்திக்காக ஊருக்கு போனேன். ஆயுஷ்ய ஹோமம் ரொம்ப நன்னா கழிஞ்சது.  

அத்வைதா

தெருல இருக்கும் மாமா மாமி எல்லாரும் வந்து ஆசிர்வாதம் பண்ணினா. வழக்கம் போல சில மாமா மாமிகள் நம்ம வாயையும் பிடுங்கினா. ‘ஒரு தடவை ஊருக்கு போயிட்டு வர சுமாரா எவ்ளோ ஆகும்?’ ‘ரெண்டு தடவையும் உங்க முதலாளி டிக்கெட் பைசா தருவாரா?’ ‘தனித்தனியா லீவு எப்பிடி தருவா?’ மாதிரியான எல்லா கேள்விக்கும் கோவப்படாம ‘ரொம்ப நல்ல கேள்வி வாழ்த்துக்கள்! அடுத்த கடிதம் யார் கிட்டேந்து வந்துருக்கு படிங்கம்மா!’னு சமாளிக்கும் தூர்தர்ஷன் ‘எதிரொலி’ நிகழ்ச்சிகாரர் மாதிரி சிரிச்சுண்டே சமாளிக்க பாப்பேன் அதுவும் ஒத்துவரலைனா ‘மாமிக்கு களையான முகம்!’னு சொல்லிண்டே எஸ்கேப் ஆயிடுவேன். ஆயுஷ்ய ஹோமத்துக்கு வந்த ஒரு மாமி சும்மா இருக்காம ‘எங்காத்து வாசல்ல ஜட்டியோட ஒன்னுக்கு போயிண்டுருந்தான் உங்காத்துக்காரன்! இன்னிக்கி அவனுக்கே ஒரு குழந்தை வந்தாச்சுனு நினைக்கரோது ஆச்சரியமா இருக்கு’னு தங்கமணிகிட்ட அளந்துவிட்டுண்டு இருந்தா. நானும் சும்மா இருக்காம ‘காலாகாலத்துக்கும் உங்காத்து வாசல்ல நானே ஒன்னுக்கு போயிண்டு இருக்க முடியுமா சொல்லுங்கோ!’னு சொல்லிண்டே அத்வைதாவை மாமி கைல டயப்பரை அவுத்துட்டு குடுக்கவும் அவாளோட பட்டுபுடவைல மூச்சா போகவும் டைமிங் சரியா இருந்தது. அப்பிடியே அப்பனை கொண்டுருக்குனு அசட்டு சிரிப்பு சிரிச்சுண்டே மாமி இடத்தை காலி பண்ணினா. 

ஆயுஷ்ய ஹோமத்துக்கு போயிட்டு நான் மட்டும் திரும்பி வந்து ஒரு மாசம் கழிச்சி திரும்பி ஊருக்கு கிளம்பினேன். இந்த தடவை ஊருக்கு போக ஓமன் ஏர்வேஸ்ல புக் பன்ணியாச்சு. நாலு மணி நேரத்துல ரீச் ஆகர தூரத்துல இருக்கும் ஒரு இடத்தை தலையை சுத்தி மூக்கை தொடர மாதிரி 8 மணி நேரம் உக்காந்து உங்களாலதான் வரமுடியும் சாமி!னு தங்கமணி எப்போதும் நக்கல் அடிக்கர ஒரு விஷயம் இந்த டிக்கெட் புக்கிங் தான். நம்ப கணக்கே வேற, ஐயாயிரம் ரூபாய் குறைச்சலா எந்த ஏர்லைன்ஸாவது டிக்கெட் குடுத்தான்னா யோசிக்காம 4 மணி நேரம் அவா ஊர் ஏர்போர்ட்ல உக்காந்துட்டு வருவேன். இப்ப நான் சீக்கரம் வந்து பெண்களூர் கோர்ட்ல தீர்ப்பா எழுதபோறேன். தங்கமணி ரொம்ப நாளா லண்டனுக்கு கூட்டிண்டு போங்கோ!னு மனு போட்டுண்டுருக்காங்க, எவனாவது தோஹாலேந்து மெட்ராஸுக்கு லண்டன் மார்க்கமா ப்ஃளைட் விட்டான்னா லபக்னு டிக்கெட்டை புக் பண்ணி தங்கமணியையும் அசத்தலாம்னு பாத்துண்டுருக்கேன் ஆனா ஒரு பயலும் சிக்க மாட்டேங்கரான்.  

ஓமன் ஏர்வேஸ்னால மஸ்கட்ல இறங்கி ஒரு மணி நேரம் பிஸ்கட் சாப்பிடனும்னு டிக்கெட்ல போட்டு இருந்தது. ராத்திரி பத்து மணிக்கு மேல ப்ஃளைட், அதனால டின்னர் அங்க குடுக்கர்தையே சாப்பிடலாம்னு முடிவு பண்ணி செகின் பண்ணும் போது ஏசியன் வெஜ் மீல்ஸ்(ஸ்பெஷல்)னு டிக் அடிச்சுட்டேன். வண்டி செளகர்யமாதான் இருந்தது, ஆனாலும் சீட்டுக்கு நேரா டிவி இல்லை. சகாய விலைல டிக்கெட் எடுத்தவாளுக்கு யாரும் சந்தனகுங்குமம் குடுத்து உபசாரம் பண்ணமாட்டானு தெரிஞ்சதால தூங்க ஆரம்பிச்சேன். ஒரு பத்து நிமிஷம் கண்ணசந்துருப்பேன் அதுக்குள்ள கனவுல யாரோ ‘மிஸ்டர் தக்குடு! மிஸ்டர் தக்குடு!’னு குரல் குடுத்துண்டே என் பக்கத்துல வரமாதிரி இருந்தது. கண் முழிச்சு பாத்தா என்னோட டின்னரை கைல வச்சுண்டு ஒரு ஏர்ஹோஸ்டர்ஸ் நின்னுண்டு இருந்தா.  
 
டின்னர் மீல்ஸ்
 
அதுல என்ன வேடிக்கைனா அந்த ஏரியாலையே யாருக்கும் இன்னும் சாப்பாடு குடுக்க ஆரம்பிக்கலை. நான் சாப்பிட ஆரம்பிச்சா பக்கத்துல இருந்த மாக்கான்  மூக்கால வாசனையை பிடிச்சுண்டே எங்களுக்கேல்லாம் எப்ப சாப்பாடு?’னு ஒப்பாரி வச்சுண்டு இருந்தான். நான் சாப்பிட்டு முடிச்சு அரைமணி நேரம் கழிச்சு ஒரு ஏப்பமும் விட்டதுக்கு அப்புறம் தான் பக்கத்துசீட்காரனுக்கு சாப்பாடே வந்தது. அவனோட தட்டுல ரத்தக்களரியா ஒரு சாப்பாடும், எனக்கு இருந்த மாதிரியே கத்தி/கபடா ஒரு கப் ஜலம், சிரார்த்த பிண்டம் மாதிரி ஒரு உருண்டை சாதம் எல்லாம் இருந்தது. எனக்கும் அவனுக்கும் ஒரு ஆரஞ்சு ஜூஸ் தான் வித்தியாசம்.பொதுவா நான் பக்கத்து இலைல என்ன சாப்பிடரானு எட்டிப் பாக்கர பழக்கம் கிடையாது, இருந்தாலும் ஒரு ஜெனல் நாலேட்ஜுக்கு தெரிஞ்சுக்கலாமேனு பாத்துண்டேன். இனிமே எதுவா இருந்தாலும் ஸ்பெஷல்! ஸ்பெஷல்!னே டிக்கு அடிச்சுட வேண்டியதுதான்னு நினைச்சுண்டேன். 

மெட்ராஸ்ல போய் இறங்கினா கஸ்டம்ஸ்ல அடுத்த கூத்து ஆரம்பம் ஆனது.......