Friday, September 24, 2010

பிள்ளையார் பாக்கலாமா?

எங்க? - உம்மாச்சி காப்பாத்து ப்ளாக்ல

என்ன ஸ்பெஷல் - அழகான போட்டோ இருக்கு!

ஸ்லோகம் உண்டா? - குட்டி கதையும் உண்டு

கமண்ட் போடனுமா? கட்டாயம் இல்லை, உம்மாச்சியை வந்து பாத்தாலே தக்குடுவுக்கு சந்தோஷம்தான்

ம்ம்ம்ம்! இன்னும் என்ன யோசனை? சீக்கரம் படிக்கர்துக்கு வாங்கோ எல்லாரும்!..:)

Wednesday, September 15, 2010

கல்லிடை மாநகரம்

அப்ப்ப்ப்ப்ப்பாடி! ஒரு வழியா ஊருக்கு போய்ட்டு திரும்பி வந்தாச்சு. ஓஓஓஓ! தக்குடுவை இன்னும் காணுமே!!னு மனசுக்குள்ள தவிச்சு போயிருந்தாலும், யாராவது கேட்டா? ஓஓ! அந்த சமத்து இத்தனை நாள் இல்லாம நிம்மதியா இருந்தது!னு சொல்லிண்டே எதாவது ஊர் வம்பு கிட்டுமானு எல்லாரும் ஆசையா ஓடி வருவேள்னு தக்குடுவுக்கு நன்னா தெரியும். நெறையா எல்லாம் விஷயம் ஒன்னும் தேறலை, ஆயிர கணக்குல ரூபாயை செலவு பண்ணி ஊருக்கு போய்ட்டு 2 போஸ்டுக்கு கூட மேட்டர் தேத்த முடியலை, ம்ம்ம்ம்! என்ன பண்ண முடியும் கலி முத்தி போய்டுத்து.கல்லிடை காஸ்போபொலிடன் சிட்டில எல்லா மாமிகளும், அவாளோட பொண்களும், ஒரு ஓஒரமா அவாத்து மாமாக்களும் செளக்கியமா இருக்கா. வாய்க்கால்லையும் ஆத்தங்கரைலையும் தண்ணி கரைபுரண்டு ஓடர்து. என்ன ஒரே குறைனா தெருக்கள் எல்லாம் ஒரு கலகலப்பே இல்லாம இருக்கு. தக்குடு! நீ என்ன சொல்ல வராய்?னு நம்ப ஷோபா அக்கா மாதிரி யாரும் நடிக்க மாட்டேள்னு நான் நம்பறேன்..:)

போன வருஷம் தோஹா கிளம்பி போகும்போதே யார்டையும் அவ்ளோவா சொல்லிண்டு எல்லாம் வரலை, ஏன்னா எங்க தெருல நெறையா மாமா & மாமிகளுக்கு தபோபலம் ஜாஸ்தி, அப்புறம் என்னோட ப்ளைட் தோஹால இறங்கர்துக்கு பதிலா ஆப்கானிஸ்தான்ல லான்ட் ஆயிடும். அதானால பாதி பேர் இன்னும் எங்கிட்ட ‘பெங்களூர்ல அப்பரம் என்ன விஷேஷம்?னு தான் கேட்டா. நானும் ‘பெங்களூருக்கு என்ன! நித்யம் விஷேஷம்தான்!’னு சமாளிச்சுட்டேன். இருந்தாலும் சில மாமிகளுக்கு தெரியும், அவாள்ட்ட எல்லாம் வசமா சிக்கினேன்.
ஒன்னொன்னும் ஒரு ரகமா இருந்தது. ஒரு பயலுக்கும் தோஹா!னு ஒரு ஊர் இருக்கர்தே தெரியலை. 2006 ல காசை எல்லாம் கரியாக்கி asain games எல்லாம் நடத்தியும் ஒரு பிரயோஜனமும் இல்லை. முத்தமிழையும் வளர்க்கும் 'மானாட மயிலாட'வோட பைனலை தோஹால வெச்சு நடத்த சொல்லலாம்னு இருக்கேன். அப்பரம் தோஹா பேரை சொன்னாலே எல்லாம் 'ஆஹா'!னு சொல்லுவா. தோஹா US- ல இருக்கா கனடால இருக்கானு ருக்கு மாமிதான் வாயை பிடிக்கினா மொதல்ல. அந்த மாமியோட அக்கா புள்ளை US-ல இருக்கான், அண்ணா நாட்டுப்பொண் கனடால இருக்கா அதனால அந்த மாமிக்கு அந்த ரெண்டு இடம் தான் வெளிநாடுனு ஒரு எண்ணம். நானும் முகத்துல ஒன்னும் காட்டிக்காம 'ரெண்டுக்கும் நடுசென்டர்ல இருக்கு'னு சொல்லிட்டேன். (இப்ப என்ன கனடால இருக்கர நம்ப இட்லி மாமிட்டயா போன் பண்ணி கேட்டுண்டு இருக்கப் போறா ருக்கு மாமி).

புதுசா உள்ள வீடா இருந்தா ‘குண்டல கோமா மாமியாத்துக்கு அடுத்தாம், ஸ்டைல் மீனா மாமியாத்துக்கு முந்தினாம்’ நு பிரபலமானவாள வெச்சு அடையாளம் சொல்ற மாதிரி நானும் எல்லார்டையும் 'துபாய்க்கு மிக மிக அருகில்'நு சரவணா ஸ்டோர்ஸ் ஸ்னேகா மாதிரி கை எல்லாம் ஆட்டி ஆட்டி சொல்லவேண்டியதா போச்சு. அந்த சமயம் பாத்து பாகவதர் மாமா வந்து தொலைக்கனுமா! அவர் உடனே, 'தோஹாவுக்கும் துபாய்க்கும் எவ்ளோ தூரம் தக்குடு?' னு அவர் பங்குக்கு ஒரு சந்தேகத்தை கிளப்பினார். அவர்ட்ட போய்ண்டு ' By air 45 மினிட்ஸ், by road 6 hrs நு எல்லாம் விலாவாரியா விளக்கிண்டு இருக்கர்து எல்லாம் ஆகாத காரியம்னு மனசுல பட்டதால ஒரே வரில அவருக்கு பதில் சொன்னேன். துபாய்லேந்து யாராவது 'ஜெய் ஜானகி காந்தஸ்மரணம்'னு கத்தி சொன்னாக்கா தோஹாலேந்து நான் 'ஜெய் ஜெய் ராமா ராமா'னு சொல்லிடலாம் மாமா!அவ்ளோ பக்கம்னு சொன்னதுக்கு அப்பரம் அவர் எந்த சந்தேகமுமே கேக்கலை, பேஷ்! பேஷ்!னு சொல்லிட்டு போய்ட்டார்.

இதுக்கு நடுல மெதுவா கிச்சா மாமா பேச ஆரம்பிச்சார். ‘அந்த ஊர்ல இருக்கர்துக்கு எல்லாம் யோகம் பண்ணியிருக்கனும், என்ன ஒரு ஊரு! என்ன ஒரு க்ளைமேட்டு!’னு அவர் ஆரம்பிக்கவும் எனக்கு பால்பாயாசம் குடிச்ச மாதிரி இருந்தது. கிச்சா மாமாவுக்காவது தோஹா பத்தி தெரிஞ்சுருக்கே!னு நான் சாமாதானம் ஆகர்துக்குள்ள, அதுல மண்ணள்ளி போட்டுட்டார். அங்க எல்லாருமே ஜெகஜோதியா இருப்பாளாமே? எல்லாரும் காத்தாட வளைய வந்துண்டு சதா சர்வ காலமும் பீச்லையே தாச்சுண்டு இருப்பாளாமே?னு ஏகப்பட்ட 'மே' போட்டார். எனக்கு ஒன்னும் புரியலை, கலர் கலராவா?? எங்க ஊர்ல ஒரே கலர்தானே உண்டு. ‘கருப்புதான் நேக்கு புடிச்ச கலரு!’னு குழாய் மைக்கு வெச்சு பாட்டு போடவேண்டிய ஊராச்சே! காத்துகூட போகமுடியாம இருப்பா, இவர் என்னடானா காத்தாட இருப்பா!னு சொல்றாரே?னு எனக்கு ஒரே குழப்பம். மங்களூர்லேந்து பக்கம் இல்லையா?னு அவர் கேக்கவும் எனக்கு புரிஞ்சது. நாசமா போச்சு மாமா! அது கோவா, நான் இருக்கர்து தோஹா'னு சொல்லிட்டு நகர்ந்தேன். இத்தனை வயசுக்கு அப்புறம் உங்காத்து மாமாவுக்கு ‘காத்தாட ஜெகஜோதியா’ இருக்கரவாளை பாக்கனுமாம், ஜெகஜோதியா விசாரிக்கறார் மாமா'னு அவாத்து மாமிட்டையும் மறக்காம பத்த வெச்சுட்டு வந்தேன்.