Wednesday, November 23, 2011

டும் டும் டும்

ஆசிரியர் முக்கிய பணியாக வெளியூர் செல்வதால் ஒரு மாதம் புதிய சரக்கு எதுவும் கடையில் கிட்டாது! வாசகர்கள் பொறுத்தருள வேண்டுகிறோம்!

i) 'வைதேகி மாமி! மாடிலேந்து வரும் போது பித்தளை குத்துப்போனியை கொண்டு வருவேளா?

அது ரொம்ப கனமா இருக்குமேடி பானு!

சரி விடுங்கோ! என்னோட புள்ளையை மட்டும் கொஞ்சம் தூக்கிண்டு வந்துடரேளா?

இல்லையில்லை நான் குத்துப்போனியவே கொண்டு வரேன், அப்பிடி ஒன்னும் அது கனம்னு சொல்ல முடியாது!


ii) 'ஏன்னா, எத்தனை தடவை பாத்ரூமுக்கு போயிட்டு போயிட்டு வருவேள்! காணாதுகண்ட மாதிரி உருளைகிழங்கு போண்டாவை திங்காதீங்கோ!னு சொன்னா காதுல வாங்கினாதானே!'


iii) 'கெளசல்யா மாமி! செளக்கியமா இருக்கேளா? பாத்து எவ்ளோ நாள் ஆச்சு?
மாறவேயில்லை 'சிக்'குனு அப்பிடியே இருக்கேளே? மாமி பாரு கோந்தை! டுடுடு டூ!

விஜயாவோட நாட்டுப்பொண் இல்லையோ நீ! கோந்தை எதுக்கு சிணுங்கிண்டு இருக்கான்? நீ எதுக்கு நைட்டியோட லாந்திண்டு இருக்கை?

மாமி! மாமி! ஒரு 5 நிமிஷம் குழந்தையை பிடிங்கோ! புடவை கட்டிண்டு வந்துடறேன்!

ஹுக்க்கும்! இதுக்குதான் மாமி! சாமி!னு சொல்லிண்டு வந்தாளா!


iv) 'வசந்தா மாமி, ஜானுவாசத்துலையே உங்க புடவைதான் பளிச்னு இருக்கு. காட்டன் சில்க்கா? விஜியோட கல்யாணத்து போது கட்டிண்ட புடவையும் காட்டன் சில்க் இல்லையோ? ஆனா அது அவ்ளோ சோபிதம் இல்லையே?

இருக்காதா பின்ன? இது எங்க அண்ணா புள்ளை கார்திக்கோட கல்யாணத்துக்கு கடைக்கே கூட்டிண்டு போய் மாட்சிங் ப்ளவுஸ் சகிதமா எங்கண்ணா வாங்கி தந்த புடவை. அது எங்க நாத்தனாரோட பொண் நிகிலா கல்யாணத்துக்கு ஆடிகழிவுல எடுத்த புடவை.

ஓஓ! உங்க நாத்தனாரே பின்னாடி நிக்கராளே!'

v) 'அருண் ஆய் போயாச்சாடா?

இன்னும் வரமாட்டேங்கர்துபா

எப்போதும் போகரமாதிரி போடா கண்ணா! லேட்டா போனா டிபன்ல அசோகா அல்வா காலியாயிடும்டா கோந்தை!

எனக்கு நம்பாத்துல போனாதான்பா வரும்!

உங்கம்மாவை மாதிரியே ஏட்டிக்கு போட்டி பேசாதே !இதுக்குனு பாம்பே போயாடா ஆய் போயிட்டு வரமுடியும்! போனவரைக்கும் போதும் வாடா கோந்தை!
அம்மா கேட்டா 'நன்னா போனேன்!' னு சொல்லனும் கேட்டையா!'

vi) 'கே கே நகர் அத்திம்பேர் எதுக்கு சுத்தி சுத்தி வந்துண்டு இருக்கார்?

ஜானுவாசம் முடிஞ்சாச்சு, சாப்பாடும் கடைசிபந்தி நடக்கர்து, மாடில தீர்த்தவாரி எதாவது இருந்தா ஓசில ப்ளூலேபிலை கவுத்தலாமேனு நெப்போலியன் மாதிரி படையெடுத்துண்டு இருக்கார்'.

vii) 'சாரதா! உன்னால ஹாண்ட் பேக்கை வச்சுக்கமுடியும்னா மட்டும் கொண்டுவந்தா போதும், சும்மா மினுக்கர்துக்கெல்லாம் கொண்டு வராதே!

இப்ப என்னாச்சுனு ஊரை கூட்டிண்டு இருக்கேள்!

'இந்தோ வந்துட்டேன்!'னு சொல்லிட்டு குடுத்துட்டு போய் 3 மணி நேரம் ஆகர்து. 'ஹாண்ட் பேக் மாமியை விட உங்களுக்கு தான் அம்சமா இருக்கு அங்கிள்!'னு எங்கக்கா புள்ளை நக்கல் அடிச்சுண்டு இருக்கான்!'

viii) 'ஏ வித்யா! கொஞ்சம் பக்கத்துல வாயேன்! நம்ப லோகா மாமி லோக்கல்லதானே இருக்கா?

ஆமாம் மன்னி, சிட்லபாக்கத்துல தான் இருக்கா, 'லோக்கல் லோகா' தானே அவளோட பட்டப்பேர். ஏது? என்ன விஷயம்?

ஒன்னுமில்லை, நாம மதுரை வரைக்கும் போகர்தால கட்டுசாதக்கூடை வாங்கிக்கரோம், அவளும் அவளோட புள்ளை உசரத்துக்கு ஒரு கேரியல்ல ஊறுகாய் முதற்கொண்டு விடாம வாங்கிக்கராளே அதான் கேட்டேன்!

அவாத்துக்காரருக்கும் ஒரு நாள் ரெஸ்ட் வேண்டாமா பாவம்!'


இந்த மாதிரி சம்பாஷனைகள் நடக்கும் ஒரு இடத்துக்கு போகபோறேன். யெஸ்! அதே தான்! டிசம்பர் ஒன்னாம் தேதி அடியேனுக்கு டும் டும் டும்! தக்குடுவோட ப்ளாக்குக்கு வந்துபோகும் நிறையா ஆட்கள்ல ஒரு சிலபேரை தான் நேர்ல பாத்துபேசியிருக்கேன். இருந்தாலும் இங்க வரவா எல்லாருமே 'ஏ தக்குடு! ஓய் தக்குடு! எலேய் தக்குடு!தக்குடு பாஸ்!'னு ரொம்ப உரிமையாவும் அன்போடையும் பாசமழை பொழியும் எல்லா நல்ல உள்ளங்களுக்கும் இந்த நல்ல விஷயத்தை சொல்லர்துல ரொம்ப மகிழ்ச்சி. உங்க எல்லாரோட அன்பும் ஆசிர்வாதமும் ஆதரவும் எப்போதும் தக்குடுவுக்கு வேணும். நக்கலும் நையாண்டியும் பண்ணிண்டு விளையாட்டுப் பிள்ளையா காலத்தை கழிச்சாச்சு. இப்ப திடீர்னு கல்யாணம்,குடும்பம்னு சொன்னா கொஞ்சம் பயமாதான் இருக்கு. இருந்தாலும் என்ன பண்ணமுடியும் அடுக்களையில் அடிவாங்கினாலும் அழாமல் சிரித்த முகமாய் வலம் வரும் அப்பாவி ரங்கமணிகள் சங்கத்துல ஒரு நாள் உறுப்பினர் ஆகியே தீரவேண்டியது காலத்தின் கட்டாயம்.

இத்தனை நாளா விண்டோ ஏர்கண்டிஷன் மாதிரி ஆத்துக்குள்ளையும் வெளிலயும் சூனா பானா வடிவேல் மாதிரி சவுண்ட் குடுத்துண்டு வளையவந்தாச்சு, இனிமே ‘ஸ்பிலிட்’ ஏசி மாதிரி வெளில மட்டும் சவுண்ட் குடுத்துண்டு ஆத்துக்குள்ள சத்தமே இல்லாம நல்லபிள்ளையா பேர் வாங்கணும். இதுவரைக்கும்




இப்படி இருந்த தக்குடு


டிசம்பருக்கு அப்புறம்





.......இப்படி ஆயிடுவான்!னு நிறையா பேர் மனப்பால்/மிளகுப்பால்/மசாலாப்பால் குடிச்சுண்டு இருக்கர்து நன்னாவே தெரியும். நானும் 'என்ன ஆகப்போகர்தோ?'னு ஆச்சர்யம் கலந்த திகிலோடதான் அடியெடுத்து வச்சுண்டு இருக்கேன். இனிமே வரக்கூடிய காலங்களில் 'தங்கமணி வச்ச சாம்பார்(?!), சாப்பாடும் பின்விளைவுகளும், தங்கமணி ஷாப்பிங்'னு வரிசையா போஸ்ட் போட முடியுமானு முயற்சி பண்ணிபாக்கலாம்.

குறிப்பு – "தேர்தல்ல போட்டியிட டிக்கெட் கிடைக்காதவாளுக்கு எல்லாம் நெஞ்சுல இடம் இருக்கு உடன்பிறப்பே!"னு சொல்லி டபாய்ச்சமாதிரி டபாய்க்காம தக்குடு போஸ்ட்ல கமண்ட் போட்டு படிக்கரவா,கமுக்கமா படிக்கரவா எல்லாரும் ஒழுங்கா மொய் பணத்தை ஏமாத்தாம அனுப்பி வைங்கோ! டாலர்,பவுண்ட்,ரியால்,யென்,தினார்,திர்ஹாம், நைஜீரியா கரன்சி எதுவாக இருந்தாலும் ஏற்றுக்கொள்ளப்படும். பாஸ்டன் நாட்டாமையோட வகை,கனடா அக்கா (ஸ்) வகைو ரிச்மெண்ட் அம்மாவோட வகை, நைஜீரியா மாமி வகை,தோஹா மாமா வகை,சிங்கப்பூர் அக்கா வகை,சியாட்டில் சிங்காரியோட வகை,லண்டன் அண்ணாச்சி வகைனு தத்தனியா சபைல வச்சு ஓதியிட்டு குடுக்க ஏற்பாடு பண்ணிடலாம்.

Thursday, November 17, 2011

திக் திக் பிக்னிக்..........

“போன மாசம் குலுமணாலிக்கு போனோம்! முந்தின வருஷம் ஜம்முல போய் ஜம் ஜம்னு போட்ல போனோம்! மைசூர்ல பாத்த அந்த சாமுண்டி கோவில் இன்னும் கண்ணுலையே நிக்கர்து தெரியுமோ!”னு கல்லிடைக்கு கோடை விடுமுறைல வரும் சில ‘பீத்தல்’ மாமிகளோட சம்பாஷனைலேந்து பிக்னிக்குனா எதாவது புது இடத்துக்கு போகர்து போலருக்குனு நாங்க யூகம் பண்ணிப்போம். எங்களை பொருத்தவரைக்கும் மதுரை தான் தூரதேச பிரயாணம். அம்பாசமுத்திரத்துல இருக்கும் எங்க அத்தையாத்துல அடிக்கடி கல்யாணம் வரும். அதுதான் எங்களுக்கு பெரிய்ய்ய பிக்னிக்கு. கல்யாணத்துக்கு பாம்பே டில்லிலேந்து வந்தவா எப்படியும் வேன் வச்சுண்டு அகஸ்தியர் அருவிக்கு குளிக்க போவா. போகும் வழில பொழுதுபோகனுமேனு ‘லொடலொட’னு பேசும் என்னையும் வேன்ல கூட்டிண்டு போவா. சொந்தக்காரா கூட போயிட்டு நன்னா அருவில குளிச்சுட்டு பாட்டும் கூத்துமா இருந்துட்டு வந்தா அந்த குஷிலையே ஒரு வருஷம் தாக்குபிடிக்கலாம். மறுபடியும் எதாவது ஒரு கல்யாணம் அடுத்த வருஷமே வந்துடும். பெண்களூருக்கு வந்ததுக்கு அப்புறம் கொஞ்சம் கொஞ்சம் வெளில எல்லாம் சுத்தி பாக்கர சான்ஸ் கிட்டிண்டு இருந்தது.

தோஹாவுக்கு வந்ததுக்கு அப்புறம் சுத்தமா ஒரு இடமும் போகர்து இல்லை. அடுக்களையே கோவில்! அடுப்பே சாமி!னு காலத்தை ஓட்டிண்டு இருந்தேன். போன வருஷம் கல்லிடைக்கு போயிருந்த போது வடக்குமாடத்தெருல ஒரு அக்கா "எங்காத்துக்காரர் தோஹால தான் இருக்கார், அவர் கிட்ட இந்த லெட்டரை மட்டும் குடுப்பேளா?னு ரொம்ப பவ்யமா கேட்டா. பொதுவா எங்க ஊர்லேந்து தோஹாவுக்கு என்னென்ன சாமான் குடுத்து விடுவானு யூகமே பண்ணமுடியாது. டிடாரங்காய்/ நார்தங்காய் ஊறுகாய்,வேப்பிலைகட்டி,பொருவிளங்காய் உருண்டை, ஆறு மாச மங்கையர்மலர்,சாம்பார்பொடி,ரசப்பொடி,பருப்பு பொடி,கோலப்பொடி,பின்னல்ல மாட்டும் குஞ்சலம்,வத்தல் வடாம்,அப்பளம்,’கொஞ்சம் போல’னு சொல்லிட்டு ஒரு கிலோ ஹார்லிக்ஸ் பாட்டில் நிறைய மாவடுனு ஒரு பெரிய பொட்டலத்தை நம்ப கைல குடுத்து ஏ பி டி பார்சல் சர்விஸ் அனுமார் மாதிரி நம்பளை ஆக்கிடுவா. “நம்பாத்து பிள்ளைனா தக்குடு! மாட்டேன்னா சொல்லமாட்டான்!”னு சக்கரகட்டியா தடுப்புஅணையெல்லாம் முதல்லயே போட்டு வச்சுடுவா. எல்லாத்துக்கும் முன்னாடி அவாத்துக்கு நம்மை கூப்பிட்டு ஒரு டம்பளர் காப்பியும் 2 தேங்குழலும் திங்கர்துக்கு வைப்பா. பக்கி மாதிரி அதை மட்டும் ‘லபக்!’னு சாப்பிட்டு தொலைச்சோம்னா அதுக்கு அப்புறம் “செஞ்சோற்று கடன் தீர்க்க, மாமியோட ஆத்துக்கு வந்து, காப்பியை குடித்தாயடா....!”னு கர்ணன் படபாட்டு தான்.

இதெல்லாம் இல்லாம ஒரே ஒரு லெட்டர்னு சொன்னவுடனே ஆச்சர்யத்தோட அதை வாங்கிண்டு வந்து அவாத்து மாமாட்ட தந்தேன். அதுல என்ன எழுதியிருந்ததோ அது பகவானுக்குதான் வெளிச்சம், ஆனா அந்த மனுஷன் எதோ காதல் கடிதம் வாசிக்கரமாதிரியே முகத்தை வச்சுண்டு பயபக்தியா வாசிச்சார். வாசிச்சுட்டு நேரா ஒரு கும்பல்ல கொண்டு வந்து சேர்த்துவிட்டார். அன்னிலேந்து நமக்கு பிடிச்சது ஏழரை. இன்னிக்கு வரைக்கும் என்னோட சாயங்கால & வீகெண்ட் ப்ரோகராம் எல்லாத்தையும் இந்த குரூப்தான் முடிவு பண்ணர்து. சில சமயம் கொஞ்சம் உபகாரமாவும் இருக்கா. நவம்பர் மாச தொடக்கத்துல தொடர்ந்து 5 நாள் லீவு இருக்குனு சொன்ன உடனே இந்த குரூப்ல இருக்கரவா எல்லாம் எங்கையாவது பிக்னிக்கு போலாம்னு திட்டம் போட ஆரம்பிச்சுட்டா. எத்தனை பேர் கிளம்பினாலும் கருங்குளம் மாமா & மாமி அவாத்து வண்டில எப்போதும் எனக்கு ஒரு சீட்டு போட்டு வச்சுடுவா. மாமா நம்ப ஊர் ‘மினிபஸ்’ சைஸுக்கு ‘ஆர்மதா’னு ஒரு வண்டியை கொண்டுவந்துட்டார். “ஆர்மதாவோ நர்மதாவோ ஒழுங்கா போய் சேர்ந்தா சரி!”னு சொல்லிண்டே எல்லாரும் ஏறி போனோம்.

மூனு கார்ல, எங்க வண்டிக்கு க.குளம் மாமா,இரண்டாவது வண்டிக்கு தஞ்சாவூர் மாமா & மூனாவது வண்டிக்கு வீ கே புரம் மாமா சாரதிகள். நான் கடைசி சீட்ல குழந்தேளுக்கு நடுல தண்ணி பாட்டிலோட பாட்டிலா உக்காசுண்டு வந்தேன். முதல் நாள் பீச்சுக்கு ஒழுங்கா போயிட்டு ஒழுங்கா வந்துட்டோம். இரண்டாவது நாள் மெட்ராஸ் மாமா அவாத்து மாமியோட தனியா கார்ல வந்தார். வீ கே புரம் மாமா வண்டிலதான் ஏலக்காய் மணக்க மணக்க டீ இருந்தது, அதனால நானு அவர் வண்டில ஏறிட்டேன். புறப்பட்டு கொஞ்ச நேரம் எல்லாரும் ஒழுங்கா போனா, திடீர்னு பாத்தா தனியா வந்த மெட்ராஸ் மாமா வண்டியை காணும். அவர் வண்டிலதான் பேல் பூரிக்கு உண்டான சாமான் எல்லாம் இருக்கு அதனால “ஓஒ பேல்பூரியை காணுமே!”னு எல்லாருமே ரொம்ப கவலைபட்டா. எங்க வண்டியை ஓட்டிண்டு இருந்த வீ கே புரம் மாமா திடீர்னு ஒரு வண்டியை ஃபாலோ பண்ணிண்டு வேற ரூட்ல போக ஆரம்பிச்சுட்டார். கடைசில பாத்தா அந்த வண்டில ஒரு லெபனான் பொம்ணாட்டி இருக்கா. லெபனான் பொம்ணாடிகள் & புருஷா ரெண்டு பேருமே நம்ப ஊர் எம் ஜி ஆர் ரை விட மூனு பங்கு ஜாஸ்தி நிறமாவும் லக்ஷணமாவும் இருப்பா. பின் சீட்ல அவாத்து மாமி இருக்கர ஞாபகமே இல்லாம பாவம் வெள்ளந்தியா ஃபாலோ பண்ணிட்டார்.

அப்புறம் ஒரு மாதிரி எல்லாரும் அந்த பிரெஞ்சு பீச்சுக்கு போய் சேர்ந்தோம். கிளம்பர இடத்துலேந்தே கண்ணாடி போட்ட மெட்ராஸ் மாமா “அது என்ன ஓய் பிரெஞ்சு பீச்சு?”னு கேட்டுண்டே இருந்தார். அங்க போய் பாத்தா ஒரே வெள்ளக்காரா கூட்டம். எல்லாரும் காத்தாட குளிச்சுண்டு இருந்தா. “இப்பதான் ஓய்ய்ய் பேர் காரணம் தெரியர்து!”னு அவரோட தங்கமணி முறைக்கர்தை கவனிக்காம எதோ E = 〖MC〗^2 பார்முலா புரிஞ்சமாதிரி பரவசமா இருந்தார். யூ எஸ் லேந்து ஒரு அக்கா தோஹாவுக்கு வந்திருந்தா. அவாளும் முதல்லேந்தே ஆட்டைல உண்டு. அந்த அக்கா எடுத்துண்ட போட்டோ எண்ணிக்கைல ஒரு கல்யாண ஆல்பமே போட்டு இருக்கலாம். க.குளம் மாமியோட காமிரா பயங்கர கிளாரிட்டி. ‘சலங்கை ஒலி’ கமலுக்கு கிடைச்ச ஒரு பொடியன் மாதிரி அந்த அக்காவுக்கு தக்குடுதான் போட்டோகிராஃபர். யூ எஸ் அக்கா கடலுக்கு நடுல போய் நின்னுண்டு “நன்னா முகம் தெரியமாதிரி எடு தக்குடு!”னு சொன்னா. நல்லவேளை நான் என்னோட காமிராவை கொண்டு போகலை. அதுல Zoom in பண்ணனும்னா பத்தடி முன்னாடி போகனும்,Zoom out னா பத்தடி பின்னாடி போகனும் ( “நூத்திபத்து ரூபாய்க்கு சகாயவிலைல காமிரா வாங்கினா அப்பிடிதான் இருக்கும்”னு எங்க அண்ணா நக்கல் அடிப்பான். அவனோட காமிரால 20 அடி பின்னாடி போய் எடுக்கனும்ங்கர்து தனி விஷயம்).


ஆடி பெருக்குக்கு கல்லிடைல ஆத்தங்கரைக்கு போய் தூக்குல கொண்டு போன புளியோதரை & இன்னபிற அயிட்டங்களை எல்லாம் காலி பண்ணிட்டு வரமாதிரி பீச்சுல உக்காசுண்டு எல்லா சோத்துமூட்டையையும் காலி பண்ணினோம். கடலைமாவை வச்சு வீகே புரம் மாமி ‘டோக்லா’னு ஒரு வஸ்து பண்ணி கொண்டுவந்து எல்லாருக்கும் குடுத்து டெஸ்ட் பண்ணிண்டு இருந்தா. அதோட செய்முறையை மெட்ராஸ் மாமி கேட்டுண்டு இருந்தா. ஆனா அவாத்து மாமாதான் ரொம்ப நுட்பமா ரெண்டு சந்தேகம் எல்லாம் கேட்டார் (இருக்காதா பின்ன, பண்ணறவாளுக்குதானே சந்தேகம் வரும்). மாமியும் உடனே தன் பங்குக்கு “கடலை மாவுக்கு பதிலா மைதா மாவு போட்டுக்கலாமா?னு டவுட் கேட்டா. அனேகமா இந்த வாரம் அவாத்துக்கு போனா ஒரு பாத்திரம் மைதாமா பசை கிட்டும். எல்லாம் நல்லபடியா முடிஞ்சாச்சு இன்னிக்கோட மங்களம் பாடுவா!னு பாத்தா “நாளைக்கு காத்தால எல்லாரும் அரைவயிறு மட்டும் சாப்பிட்டுட்டு 12 மணிக்கு ரெடியா இருக்கோ!”னு வீ கே புரம் மாமி குண்டை தூக்கி போட்டா. நானும் நாளைக்கு எதோ ஜெர்மன் பீச்சு போலருக்கு, ‘ஹைய்ய்யா ஜாலி!’னு நினைச்சுண்டு இருந்தேன். கடைசில பாத்தா பாலைவன சவாரிக்கு பொட்டல்புத்தூர் கோவில் யானைக்கு 4 சக்கரம் மாட்டின மாதிரி பொதிகாசலமா ஒரு கார் வந்து நின்னுண்டு இருக்கு. வீ கே புரம் மாமி & மாமா, தஞ்சாவூர் மாமா & மாமி பின்னாடி சீட்ல சாமான் மூட்டை மாதிரி பத்ரமா உக்காசுண்டு இருந்தா. டிரைவருக்கு பக்கத்து சீட்ல அடியேன் நெட்டுவாங்கம். சிட்டியை தாண்டர வரைக்கும் ‘கடமை கண்ணியம் கட்டுப்பாடு!’னு வண்டியை ஒழுங்கா ஓட்டின அந்த டிரைவர் பிரகஸ்பதி திடீர்னு 140 கிலோமீட்டர் வேகத்துல வண்டியை ஓட்ட ஆரம்பிச்சுட்டார்.



பாலைவன சவாரி!!

மத்த ரெண்டு வண்டில பலிகிடாவா முதல் சீட்டுல கருங்குளம் மாமாவும், மெட்ராஸ் மாமாவும் உக்காசுண்டு இருந்தா. 30 - 40 அடி உயரமான மணல் மேடுலேந்து செங்குத்தா வண்டியை ஓட்டிண்டு வந்தா. க.குளம் மாமா பெருமாள் கோவில் துவஜஸ்தம்பத்துல பாதி ஒசரம் இருக்கர்தால அவருக்கு இதெல்லாம் சாதாரணமா இருந்தது. நானும் மெட்ராஸ் மாமாவும் தான் ‘அம்மா’வோட கலெக்டர் மீட்டிங்க்ல ஓ. பன்னீர்செல்வம் மாதிரி ‘திக் திக்’னு நெஞ்சு படபடக்க முழிச்சுண்டு இருந்தோம். ஒரு மாதிரியா கடைசில கடலுக்கு பக்கத்துல போய் எங்கையோ எல்லாரையும் இறக்கிவிட்டா. தப்பிச்சோம் பொழச்சோம்!னு ஓடி போய் கொஞ்ச நேரம் மண்ணுல உக்காசுண்டு ஆசுவாசபடுத்திண்டோம். அதுக்கப்புறம் மாமாக்கள் எல்லாம் வட்டசட்டமா உக்காச்சுண்டு, அமெரிக்க பொருளாதாரம்,மெட்ராஸ்ல சதுர அடி விலை நிலவரம்,ஐஸ்குட்டிக்கு என்ன குழந்தை பிறக்கும்,கனிமொழி,ராஜா,ஜெயலலிதா,அழகிரி மாதிரியான உலக விவகாரங்களையும். மாமிகள் எல்லாம், ‘தங்கம் விலை கூடிண்டே போகர்து பாத்தியோ!’ ‘உங்காத்துல வாஷிங்மெஷின் யாரு போடுவா?’ ‘ஹாவ் யூ சீன் தட் ஏழாம் அறிவு மூவி?’ ‘சுடிதார் மெட்டீரியல் மெட்ராஸ்ல எங்க நன்னா இருக்கும்?’ ‘எங்காத்து மாமா டால் ப்ரை பிரமாதமா பண்ணுவார்.’ மாதிரியான சம்பாஷனைகள்ல பிஸியா இருந்தா.

ராத்ரி அங்க சாப்பாடு கிடைக்கர்துக்குள்ள ப்ராணன் போயிடுத்து. தஞ்சாவூர் மாமா அவாத்து மாமியோட ஹேண்ட் பாங்கை ஸ்டைலா போட்டுண்டு குறுக்கையும் நெடுக்கையுமா போயிண்டு இருந்தார். மத்த மாமாக்கள் எல்லாம் அவரை கூப்பிட்டு ஜாரிச்சதுல அவாத்து டீலிங் வெளிய வந்தது. அவரோட மூனு வயசு பிள்ளை மாமியை மாதிரியே பாக்கர்துக்கு(மட்டும்) பயங்கர சாதுவான பிள்ளை, ஆனா சட்டை/ட்ராயர்/சாக்ஸ்/செருப்பு போட்டாலும் கத்துவான் அவுத்தாலும் கத்துவான். அதனால ஒருத்தர் பையனை வெச்சுண்டா இன்னொருத்தர் ஹேண்ட் பாக்கை வச்சுக்கனும். உள்ளாட்சி தேர்தல் முடிஞ்சு கூடன்குளம் மேட்டர்ல அம்மா 'பல்டி' அடிச்ச மாதிரி கொஞ்ச நேரத்துலயே அவரோட ஒரு கைல பையனையும் இன்னொரு கைல ஹேண்ட்பாக்கையும் மாட்டிவிட்டுட்டு மாமி தோழிகளோட உலாவ போயிட்டா.

ராத்ரி 9 மணியோட திருப்பி கார்ல ஏறி சிட்டிக்கு போயிண்டு இருக்கும் போது அந்த டிரைவர் கிட்ட என்னோட ‘பட்லர்’ அரபில பேச ஆரம்பிச்ச உடனே அவரும் ரொம்ப குஷியாகி அவரோட ‘பட்லர்’ இங்கிலிபீஸ்ல பேய் கதை எல்லாம் சொன்னார். “போனவாரம் பாதிராத்ரி திரும்பி போகும் போது பாலைவனத்துக்கு நடுல வச்சு வெள்ளைகலர் டிரெஸ் போட்ட ஒரு பொம்ணாட்டி வண்டியை நிப்பாட்டி லிப்ஃட் கேட்டா?”னு ராமநாராயணன் மாதிரி அடிச்சுவிட்டார். எங்க வண்டில இருந்த ரெண்டு மாமிகளும் பயந்து நடுங்கிண்டு “பேய்/பிசாசெல்லாம் வருமா? உங்களுக்கு பயம் இல்லையா?”னு அவாளோட ரங்கமணிட்ட கேட்டா. “சமத்து! பேய் பிசாசெல்லாம் வெறும் பொய்! நீ இருக்கும் போது இன்னொரு பேய் இங்க வரமுடியுமா? கல்யாணத்துக்கு முன்னாடி பேய்க்கு கொஞ்சம் பயந்தேன், கல்யாணத்துக்கு அப்புறம் பேய்/பிசாசெல்லாம் பழகி போச்சு”னு வீ கே புரம் மாமாவும் தஞ்சாவூர் மாமாவும் flow-ல கோல் போட்டுண்டு இருக்கும் போதே ஒரு வழியா வீடு வந்து சேர்ந்தோம்.

Thursday, November 3, 2011

சாந்தி மிஸ்

“பூரா துனியாமே சிர்ஃப் ஏக் கஹானிஹை!”னு மத்யமமான குரல்ல சாந்தி மிஸ் வாசிக்க ஆரம்பிச்சாலே எனக்கு கை கால் எல்லாம் உதறல் எடுக்கும். அவாளோட நவாப்பழ கண்ணை உருட்டி உருட்டி முழிச்சுண்டு "இது முதல் கா-வா இல்லைனா இரண்டாவது கா-வா?" கேட்கும் போது, “நாலு ‘கா’ நாலு ‘தா’ எல்லாம் எந்த பிரகஸ்பதி கண்டுபிடுச்சான்!”னு மனசுக்குள்ள திட்டிண்டே அழர்துக்கு தயார் ஆயிடுவேன். சாந்தி மிஸ் என்னோட இரண்டாம் கிளாஸ் ஹிந்தி மிஸ். ஹிந்தியோட அருமை பெருமை எல்லாம் தெரியாத அந்த சின்ன வயசுல சாந்தா மிஸ்ஸை பாத்தாலே கோவம் கோவமா வரும். என்னை மாதிரியே ஹிந்தியை கச்சுவிஷமா பாவிச்ச ரகுதாத்தாக்கள் எல்லாருக்கும் ஹிந்தி பீரியடுக்கு முன்னாடி திடீர் திடீர்னு வயத்துவலி வரும். கொஞ்ச நாளைக்குதான் அந்த நடிப்பு செல்லுபடியாச்சு அதுக்கு அப்புறம் மாத்தி யோசிக்கவேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டோம்.

சாந்தி மிஸ் பாக்கர்துக்கு அகஸ்தியராட்டம் இருந்தாலும் கைல இருக்கும் விரல் எல்லாம் உடும்பு. நம்ப தொடைல வச்சு நிமிட்ட ஆரம்பிச்சானா ‘ஆ’-ல ஆரம்பிச்சு சிலுக்கு மாதிரி ‘ஹாஆஆஆ!’ வரைக்கும் கத்தி அழுதாலும் விடமாட்டா. என்னோட அண்ணா போட்டுண்டு குடுக்கும் பழைய யூனிபார்ம் ட்ராயர் தான் நான் போட்டுப்பேன். 5 வருஷ பழைய ட்ராயர்ங்கர்தால அது 90-ல வந்த படங்கள்ல கிளைமாக்ஸ்ல ஹீரோவோட அம்மாவையும், ஆத்துக்காரியையும் நடு ஹால்ல கட்டி வச்சுட்டு, வில்லன் ப்ளூ லேபில் பாட்டில்ல விட்டு வச்ச நன்னாரி சர்பத்தை குடிச்சுண்டு இருக்கும் போது ‘ஜிகுஜிகு’ லைட்டுக்கு நடுல ஜிங்க் ஜிங்குனு ஆடும் ‘டிஸ்கோ’ சாந்தியோட டைட் டிராயரை இரவல் வாங்கிண்டு வந்து போட்டுண்ட மாதிரி இருக்கும். அர்ஜுனனோட கண்ணுக்கு எப்பிடி கிளியோட கண்ணு மட்டும் தெரியுமோ அதே மாதிரி சாந்தி மிஸ்ஸுக்கும் என்னோட தொடைதான் எப்போதும் தெரியும்.



சந்தோஷ காலங்கள்!! :))

எத்தனை நாளைக்கு தான் வலியை தாங்கமுடியும். நாங்க படிச்ச அந்த நர்சரி ஸ்கூலுக்கு ஒரு பாரம்பரியமே உண்டு. காலேஜ் முடிச்சுட்டு “குரு திசை வந்தவிட்டு வரன் பாக்கலாம் ஓய்ய்!”னு கோட்டை தெரு ஜோசியர் சொன்ன வார்த்தைக்கு கட்டுப்பட்டு 'பாங்க்' மாப்பிள்ளை வரவரைக்கும் கல்யாணத்துக்கு வரன் பாக்கர்தை நிப்பாடி வச்சுருக்கும் அக்ரஹார அக்காக்கள் தான் பெரும்பாலும் அங்க டீச்சரா இருப்பா. சம்பளம்னு ஒன்னும் பெரிசா வந்துடாது. தேங்காய்மூடிக்கு பதிலா 200 ரூபாய் குடுத்தா பெரிய விஷயம். ஆனா நல்ல மனசோட கரசேவை பண்ணர மாதிரி இந்த ஸ்கூல்ல ஏ பி சி டி சொல்லி குடுத்த எல்லா டீச்சராக்காவுக்கும் ஒழுங்கா சந்தியாவந்தனம் பண்ணி சனிக்கிழமை சுந்தரகாண்டம் வாசிக்கர நல்ல குணமான ‘சுந்தரபாண்டியபுரம் ஸ்டேட் பாங்க்’ மாப்பிள்ளையோ இல்லைனா ‘கருங்குளம் ஆடிட்டர்’ மாப்பிள்ளையோ நிச்சயமா வந்து கல்யாணம் பண்ணிண்டு போய் ராணி மாதிரி வச்சு காப்பாத்துவா. மத்த மிஸ் மாதிரி சாந்தி மிஸ் கல்யாணம் ஆகி போயிடுவானு காத்துண்டு இருக்கர்துலையும் பிரயோஜனம் இல்லை. ஏன்னா சாந்தி மிஸ்ஸாத்துல எல்லாரும் பீஷ்மருக்கு தூரத்து சொந்தக்காரா. வேற வழியில்லாம பள்ளிக்கூடத்தையே மாத்திட்டேன்.

ஆரம்பத்துலேந்தே எனக்கு வராத விஷயம் எல்லாம் எங்க அண்ணாவுக்கு ரொம்ப நன்னா வரும். வயத்தெரிச்சலை கிளப்பர்துக்குன்னே எதாவது பண்ணுவான். அவன் என்னவோ பெரிய அயோத்தி ராமன் மாதிரியும் நான் அயோக்யராமன் மாதிரியும் வச்சுண்டு,"உங்க அண்ணாவ மாதிரி இருந்தா என்ன?"னு எல்லாரும் கரிச்சுகொட்டுவா. அவன் ஹிந்தில பெரிய்ய்ய அப்பாடேக்கர். தமிழ் நாட்டுக்கு கவர்னரா வரப்போர பஞ்சாப் சிங்குக்கு இவன் தான் பக்கத்துல இருந்து மொழிபெயர்த்து சொல்ல போகர மாதிரி ஹிந்தியை பயங்கரமா படிச்சான். கேட்டா மத்யமா/தோசமானு பரிட்சை பேர் சொல்லி பிலிம் காட்டுவான். நமக்கு ஹிந்திதான் வராதே தவிர தமிழ்ல நல்ல பிடித்தம்/படித்தம் உண்டு. “வாசனை ரோஜா வாடிப் போகலாமா?”வை "வாடி சரோஜா! ஓடி போகலாமா?"னு செயப்பாட்டுவினையா மாத்தி காமிச்சு வினையை விலைகுடுத்து வாங்கின சமயங்கள் ஏராளம்.

படிப்பெல்லாம் முடிச்சு கல்லிடையோட எல்லையை தாண்டி பெண்களூர் வந்ததுக்கு அப்புறம் தான் ரஹதாதாவோட அருமை புரிஞ்சது. இனிமே புரிஞ்சு என்ன பண்ண. எங்க தெரு சினிமா மாமி சொல்ர மாதிரி " நேத்திக்கு சாயங்காலம் கிளம்பி போன நெல்லை எக்ஸ்பிரஸுக்கு இன்னிக்கு டிக்கெட் எடுக்கலையேனு வருத்தப்பட முடியுமோ!"னு எனக்கு நானே சமாதானம் சொல்லிப்பேன். பெண்களூர் ஆபிஸ்ல முக்கால் வாசி பேர் அச்சாஹை! குச்சாஹை!னு தான் பேசிண்டு இருப்பா. அவா எல்லாரையும் ஹை ஹை!னு வாயப்பாத்துண்டு இருப்பேன். அதுவும் குஜாராத் குமரிகள் கொஞ்சி கொஞ்சி ஹிந்தில அகவும்போது தான் எங்க அண்ணாச்சி எதுக்கு ராப்பகலா கண்முழிச்சி ஹிந்தி படிச்சான்னு விளங்கும். பட்லர் ஹிந்தியை வச்சுண்டு ‘டிகே டிகே!’னு சொல்லி ஓட்டிண்டு இருந்தேன்.

சப்பாத்தி பிகர்களும் மாக்கான்களும் என்ன பேசிண்டு இருந்தாலும் கடைசில மங்களம் பாடர்துக்கு மொஹபத்து! மொஹபத்து!னு தான் முடிப்பா. எனக்கு எங்க ஊர் பெருமாள் கோவில்ல நடக்கும் ராபத்து, பகல்பத்து உத்ஸவம் தான் தெரியும். இது என்னவோ புதுசா மொஹபத்து மொஹபத்து!னு பேசிக்கராளே?னு ஆத்மவிசாரம் பண்ணிப்பேன். ஒருவேளை குஜராத்ல இருக்கும் அவா ஊர் பெருமாள் கோவில்ல நடக்கர உத்ஸவமா இருக்குமோ?னு எனக்கு நானே சமாதானம் பண்ணிப்பேன். என்னோட ஆபிஸ் கேஃப்ல கேப் இல்லாம ரொம்ப செளஜன்யமா பக்கத்துல உக்காசுண்டு வரும் ஒரு பம்பாய்காரி ஹிந்தியை மழை மாதிரி பொழிவா. முதல் நாளே அவள்ட , “அம்மாடி கோந்தை! நாங்கெல்லாம் ஹிந்தியை எதிர்த்து ரயில் வராத தண்டவாளமா பாத்து தலையை வச்சு போராட்டம் பண்ணின வீரபரம்பரைல வந்தவா அதனால வெள்ளக்காரன் பாஷைலயே நாம பேசிக்கலாம்”னு சொல்லிட்டேன். புரிஞ்ச மாதிரியே மண்டையை மண்டையை ஆட்டினாளே தவிர விளங்கின மாதிரி தோனலை. ஆரம்பகாலங்கள்ல இங்கிலிபீஸ்ல கிராமர்ல கொஞ்சம் சந்தேகமா இருந்தா அதை கட் பண்ணிட்டு விஷயத்தை மட்டும் தான் சொல்லுவேன்(ஏன்னா வளவளனு பேசர்து நமக்கு பிடிக்காதே). "ஐ டாக்! யூ டாக்! ஒய் மிடில் மிடில் ஹிந்தி டாக்?"னு சொன்னா புரியர்துல என்ன கஷ்டம்னு நேக்கு தெரியலை.

மத்தவா மாதிரி கேலிபண்ணாம நம்ப பம்பாய்காரி நித்யம் ஒரு ஹிந்தி வார்த்தை புதுசா சொல்லிதருவா. அந்த டீலிங் எனக்கு கொஞ்சம் பிடிச்சுருந்தது. இதே மாதிரி சாந்தி மிஸ்ஸும் சொல்லிகுடுத்து இருந்தா நான் எதுக்கு பள்ளிகூடம் மாறபோறேன்? லடுக்கா லடுக்கி!னு தடுக்கி தடுக்கி ஹிந்தி சொல்லிகுடுத்தா. "மேரா ஹாத்து மே தேரா ஹாத்து ஹை! நடுல எவனாவது வந்தா சாத் சாத்னு சாத்து ஹை!!" அப்பிடின்னு கவிதை சொன்னா நம்ப ஆசான் ரசிச்சு கேட்டுப்பாங்க. 5 வருஷம் கம்பவுண்டரா வேலை பாத்தவா டாக்டர் ஆகர மாதிரி அந்த ஹிந்தியை வச்சுண்டு காலஷேபம் பண்ணிண்டு இருக்கேன்.

கழிஞ்ச ஆகஸ்ட்ல எங்க ஊர் பெருமாள் கோவில் கருடன் சன்னதி பக்கத்துல வச்சு சாந்தி மிஸ்ஸை பாத்தேன். “ஜி ப்ரணாம்!”னு அவாளை பாத்து சொன்னவுடனே மிஸ்ஸுக்கு பயங்கர ஆச்சரியம். “கலிகாலம்ங்கர்து சரியாதான் இருக்கு தக்குடு! நீ கூட உருப்படியா ஆயிட்டையே?”னு சொன்னா. அடுத்த க்ஷணமே ‘உங்க அண்ணா செளக்கியமா?’னு ஆர்வமா கேட்டா. ‘ம்ம்! ம்ம்!’னு சொல்லிட்டு நகர்ந்தேன். “அண்ணா செளக்கியமா? ஆட்டுக்குட்டி செளக்கியமா?” மட்டும் நன்னா கேக்க தெரியர்து. என்ன இருந்தாலும் பாம்பே பாம்பே தான்!

குறிப்பு - தீபாவளிக்கு ஏது போஸ்ட் போடலை தக்குடு!னு நிறையா பேர் ஜாரிச்சா. தீபாவளி/பொங்கலை ஒட்டி புது போஸ்ட் எதுவும் போடர்து இல்லை. ஏன்னா, மோட்டுவளையை பாத்து நாம கஷ்டப்பட்டு ரூம் போட்டு யோசிச்சு புது போஸ்ட் போட்டா அங்க வந்து “இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!”னு எல்லாரும் சொல்லிட்டு போவா. அதுக்கு பழைய போஸ்ட் போறாதோல்லியோ!! :))