தீபாவளிக்கு ரெண்டு நாள் முன்னாடி, “எல்லாராத்துலையும் அந்த குழந்தேள்தான் அவாளுக்கு வெணும்கர ட்ரெஸ்ஸை பாத்து எடுத்துக்கர்து, நம்பாத்துல மட்டும் தான் தலைகீழா இருக்கு!”னு எங்க அம்மா ஒரே பொலம்பல். சொல்லி வெச்ச மாதிரி என்னோட நண்பன் ஒருத்தன் ப்ருகஸ்பதி மாதிரி வந்து சேர்ந்தான். நல்லதா ஒரு பாண்டும் சட்டையும் எடுக்கனும் தக்குடு! நீ வந்து எனக்கு செலக்ட் பண்ணி குடேன்!னு ராகம் போட்டான். எங்க அம்மாவுக்கு கூட கொஞ்சம் கோவம் வந்துருத்து, "தனக்கு ஒரு சட்டை எடுத்துக்க தெரியாத இந்த கோமாளி ஊர்ல இருக்கரவா எல்லாருக்கும் சேவகம் பண்ணீண்டு அலையர்து"னு சொல்லிட்டு, இந்த தடவை நீ தான் உன்னோட ட்ரெஸ்ஸை எடுத்துக்கனும்!னு கண்டிப்பா சொல்லிட்டா. பனியன் பட்டாபட்டி மாதிரியான பெரிய உடை வகையெல்லாம் கல்லிடைலயே கிட்டும், அம்பைல என்னோட பனியன் சைஸ் கிடையாது, அவன்ட்ட இருக்கற சைஸ் பனியன் போடுண்டா அது பொம்ணாட்டிகளோட ஷிம்மி மாதிரி இருக்கும். அதனால சட்டை பாண்ட் மட்டும் எடுக்கர்த்துக்கு அம்பைக்கு கிளம்பி போயாச்சு.
கடைக்கு போன கொஞ்ச நேரத்துலேயே என்னோட நண்பனுக்கு செலக்ட் பண்ணிட்டேன். இது போக அங்க ட்ரெஸ் எடுக்க வந்துருந்தா ஆம்பூர் பிகர்கள் ரெண்டு பேருக்கு ‘நச்ச்’னு ஒரு சல்வார் டிசைனும் சைகைலயே செலக்ட் பண்ணி குடுத்தாச்சு (இதெல்லாம் ஒரு பப்ளிக் சர்வீஸ் மாதிரி). நாங்க ஜவுளி வாங்கிட்டு திரும்பினா ஒரு சுமாரான பிகர் கைல ஒரு மைக்கை வெச்சுண்டு அங்க வந்தவா எல்லார்டையும் எதோ கேட்டுண்டு இருந்தது.
அந்த காலகட்டத்துல தான் நெல்லை மாவட்டத்துல சூரியன் FM ரேடியோ பிரபலம் ஆக ஆரம்பிச்சி இருந்தது. நம்பள்ட போன்ல எல்லாம் கேட்டுட்டு நமக்கு பிடிச்ச ஒரு பாட்டு போடுவா. எங்க தெருல ஒரு மாமாட்ட இதை மாதிரி பேட்டி எல்லாம் எடுத்துட்டு “என்ன பாட்டு வேணும்!”னு கேட்டதுக்கு அந்த மாமா மல மல மருதமலே! பாட்டு போடுங்கோ!னு நம்ப RVS அண்ணா மாதிரி ஜொள்ளினார். அவா மும்தாஜோட மருதமலை பாட்டு போடர்த்துக்கு பதிலா மதுரை சோமு அவர்கள் பாடின “மருதமலை மாமணியே முருகையா!”வை போட்டுட்டா. அதுக்கப்பரம் அந்த மாமாவை தெருல எங்க பாத்தாலும் பசங்க எல்லாம் ஒன்னு சேர்ந்து கோரஸ்ஸா 'அழகிய சந்தனம்! அழகிய குங்குமம்! டிண்டக்கு டிக்டக்கு டிண்டக்கு டிக்டக்கு"னு மியூசிக்கோட பாட ஆரம்பிச்சிடுவோம்.
அதை மாதிரி இந்த பொண்ணும் சூரியன் FM போலருக்குனு நெனச்சுண்டு எங்க கிட்ட வந்தவுடனே பேச ஆரம்பிச்சோம், கூட ஒரு வீடியோ காமிராகாரர் வேற இருந்தார், எனக்கு அப்பவே கொஞ்சம் சந்தேகம், ரேடியோவுக்கு எதுக்கு காமிரானு கொஞ்சம் யோசிச்சேன். அப்புறம் அந்த பிகர், எத்தனை வருஷமா இந்த கடைக்கு வந்துண்டு இருக்கீங்க சார்?னு ஆரம்பிச்சா, எனக்கு முதல்லேந்தே நக்கல் நையாண்டி கொஞ்சம் உண்டு, 4 - 5 வருஷமாவே வரணும்னு ஆசைதான் ஆனா இந்த கடை ஆரம்பிச்சே ஒரு வருஷம் தான் ஆகர்தால இதுதான் முதல் தடவை!னு பதில் சொன்னேன். ஓக்கே சார்! உங்களுக்கு எந்த பாட்டு போடனும்?னு கேட்டா. இது வரைக்கும் பேசாம இருந்த என்னோட நண்பன் படக்குனு ‘ரெட்’ படத்துலேந்து கண்ணை பறிக்கும் சூரியனோ ரெட்! போடுங்கோ!னு சொன்னான்.

அவன் ஒரு அஜீத் ரசிகன், ரெட் படம் வந்து 3 மாசத்துக்கு யாரு என்ன சொன்னாலும் ஏ அது! ஏ அது!னு சொல்லிண்டு இருந்தான், மேலும் வலது கையை மடக்கி மசக்கையா இருக்கர பொம்ணாட்டிகள் மாதிரி இடுப்புலையே வச்சுண்டு இருந்தான். ஒரு தடவை வடக்குமாடத் தெரு பொண்ணு வத்சலாவை பாத்து “ஒல்லிக்குச்சி உடம்புக்காரி”னு பாடிண்டு இருக்கும் போது அந்த பொண்ணோட அம்மா “ஜம்போ ஜானகி மாமி” திடீர்னு அங்க வந்து தலையில் அடிச்சே இவனை சாய்ச்சுபுட்டா. யாராவது போட்டோ வீடியோ எடுக்கரானு தெரிஞ்சா போதும், ‘ஒரு நிமிஷம் மாமா!’னு சொல்லிட்டு வேகமா ஆத்துக்கு போய்ட்டு வந்துட்டு, ‘போட்டோ எடுக்கரா இல்லையா அதான் நல்ல செண்ட் அடிச்சுண்டு வந்தேன்!’னு சொல்லக்கூடிய புத்திசாலிப்பய(தக்குடுவோட நண்பன் பின்ன எப்பிடி இருப்பான்?னு கேக்கக்கூடாது)
எனக்கு “நீங்கள் கேட்டவை” படத்துலேந்து “அடியே! மனம் நில்லுனா நிக்காதடி!” பாட்டு வேணும்னு கேட்டேன். எதாவது ஒன்னு சொல்லுங்க!னு அந்த பிகர் சொல்லிடுத்து. அஜித் ரசிகனை ஒரு மாதிரி சாந்தப்படுத்தி என்னோட பாட்டே போடுங்கோ!னு சொல்லிட்டேன்.
அடுத்த நாள் தெருல நடந்து போனா எல்லாரும் தக்குடு கலக்கிட்டை! தக்குடு ஜமாய்ச்சுட்டை! பாட்டு செம சூப்பர்!னு கமண்ட் அடிச்சா. விசாரிச்சதுல அந்த பேட்டி வந்தது ரேடியோ இல்லை எதோ மயில்/குயில் நு ஒரு லோக்கல் TV சேனல்லையாம். அன்னிக்கினு பாத்து எல்லா மாமா மாமிகளும் அந்த சேனலை பாத்துண்டு இருந்துருக்கா. இந்த பாட்டு நிகழ்ச்சிக்கு அப்பரம் தான் எங்க ஊர் மாமிகள் சுந்தரபாண்டியபுரம் பெருமாள் கோவில்ல ஊஞ்சல் உத்சவத்துக்கு பாடின நிகழ்ச்சி வரப்போகர்துன்னு எந்த மாமியோ கிளப்பிவிட்டதுல தக்குடு மாட்டிண்டான். ஒரு மாமா ஒரு படி மேல போய் “தக்குடு நீயும் சிலுக்கு ரசிகனா?”னு புரளியை கிளப்பிட்டார். அடுத்த தடவை “நேத்து ராத்திரி யம்ம்ம்ம்மா" கேளு!னு அட்வைஸ் வேற பண்ணினார். அவர் சொன்னதுக்கு அப்புறம் தான் அந்த(அடியே! மனம் நில்லுனா நிக்காதடி!” ) பாட்டுல சிலுக்கு ஆடுவாங்கர விஷயமே தக்குடுவுக்கு தெரியும் ( பாஸ்டன் நாட்டாமை ப்ளாக் மேல சத்தியமா!).
அந்த பாட்டுல மேளம் வாசிப்பு நன்னா இருக்கும், நான் அதுக்குத்தான் கேட்டேன். ஆனா எல்லா பயலும் கலாய்ச்சுட்டான்.
இது நடந்து 3 வாரம் கழிச்சி ஒரு நாள் காத்தால பக்கத்தத்து மாமி அவசரமா வந்து “தக்குடு! சீக்கரம் வாடா கோந்தை!”னு நக்கல் சிரிப்போட கூப்பிடா. அவாத்து மாமாவை நெட்டுவாக்காளி கொட்டிர்த்து போலருக்கு அதான் மாமி சந்தோஷமா சிரிச்சுண்டே வரானு நினைச்சுண்டே அவாத்துக்கு போனா அங்க அவாத்து மாமா டிவில டான்ஸ் மாஸ்டர் ‘புலியூர்’ சரோஜாவோட பேட்டியை ஆர்வமா கேட்டுண்டு இருந்தார். என்னவோ நானும் அவரும் ஒரு செட்டு மாதிரி அவர் பக்கத்துல உக்காச்சுக்க சொன்னார். ஒரு சந்தர்பத்துல சிலுக்குக்கு நடனம் சொல்லி குடுத்த அனுபவம் பத்தி பேச ஆரம்பிச்சா அந்த மாஸ்டர். சிலுக்கு பேரை கேட்டவுடனே அந்த மாமா அல்மோஸ்ட் டிவிக்கு உள்ளையே போய்ட்டார். “சிலுக்குக்கு டான்ஸ் சொல்லிகுடுக்கர்து ரொம்ப கஷ்டம், அவளோட இடுப்பு வளையவே வளையாது!”னு ஆவலாதி சொல்லிண்டு இருந்தா. “சிலுக்கோட இடுப்பு வளைஞ்சா என்ன? வளையாட்டி என்ன? பாதி கண்ணை மூடிண்டு ஒரு பார்வை பாப்பா பாரு!! அடா! அடா! அடா! அதுக்கே ஊர்க்காடுல இருக்கர எல்லா வயலையும் அவபேருக்கு எழுதி வைக்கலாம்”னு மாமா பெரிய வர்ணனையே பண்ண ஆரம்பிச்சுட்டார். அவாத்து மாமி "கஷ்ட காலம்"னு தலைல அடிச்சுண்டு போனா. “எல்லாம் சரி இதுக்கு எதுக்கு என்னை கூட்டிண்டு வந்தேள்?”னு நான் என்னோட பால் வடியும் முகத்தோட பாவமா கேட்டேன். “என்னடா இப்படி சொல்லிட்டை! நம்ப தெருலையே எனக்கு அப்புறம் சிலுக்கு பத்தி நல்ல விஷயம் தெரிஞ்சவன் நீ தானே அதான் கூட்டிண்டு வர சொன்னேன்!”னு ஒரு குண்டை தூக்கி போட்டார்.
இதுதான் “தீபாவளி சில்க்” கதை, தக்குடு இன்னும் எதாவது சொல்லுவானா?னு நம்ப TechOps மாமி மாதிரி ஆர்வமா எதிர்பாத்துண்டு இருக்காம போய் தீபாவளிக்கு ஜவுளி எடுக்கர வேலையை பாருங்கோ எல்லாரும்!...:)
குறிப்பு - யாரெல்லாம் கமண்ட் போடாம இந்த போஸ்ட்டை படிக்கராளோ அவாளுக்கு எல்லாம் இந்த தீபாவளி சிலுக்கு கதை படிச்ச புண்ணியம் முழுசா கிடைக்காது!!...:)