Thursday, January 27, 2011

அகிலா மாமியும் ஐ.டி கம்பெனிகளும்....

ஆழ்வார் பேட்டை ரெங்காச்சாரி துணி கடை அருகில் இருக்கும் ஒரு பிரபல பதிவர்கிட்ட போய் மாமி உங்களுக்கு ஹனிவெல் கம்பெனியை தெரியுமா?னு கேட்டா "ஓ வெரிவெல் கம்பெனியாச்சே கண்ணப்பா"னு நாலே வார்த்தைல அழகா சிரிச்ச முகத்தோட சொல்லிடுவா. அம்பத்தூர் எஸ்டேட்ல இருக்கும் ஒரு மூதாட்டி கிட்ட போய் "பாட்டி, உங்களுக்கு ஐகேட் கம்பெனியை தெரியுமா?"னு நாம கேட்டு முடிக்கர்துக்குள்ள "அங்க தான் எங்க நாத்தனாரோட இரண்டாவது நாட்டுபொண் வேலை பாக்கரா, அவள் கூட ஒரு ப்ளாக் வெச்சுருக்கா, அதுல ‘கான்பூர்’ கபாலீஸ்வரர் கோவில் பத்தி எழுதிண்டு இருக்கா, நான் தான் அதை எழுத சொன்னேன். உனக்கு கான்பூர் கபாலீஸ்வரர் பத்தி எதாவது தெரியுமோ?"னு 2 நிமிஷத்துல 50 விஷயம் பேசி நாம என்ன கேட்டோமோ அதை மறக்க வெச்சுடுவா.


இந்த மாதிரி எல்லாம் எங்க ஊர் மாமிகளொட மனசுல ஒரு கம்பெனியை பத்தி அவ்ளோ சுலபமா நல்ல எண்ணம் வராது. அவாளுக்கு வரிசையா ஒரு 5 - 6 கம்பெனி பேர் தெரியும். அதுக்குள்ள நம்ப கம்பேனி பேர் வந்துட்டா நாம பொழச்சோம், இல்லைனா மாமிகளோட தொடர் விசாரணைக்கு ஆளாக வேண்டி இருக்கும். அவாளோட லிஸ்ட்ல முதல் கம்பெனி @#$ஸிஸ். இந்த கம்பெனில மட்டும் ஒருத்தன் வேலை பாத்தாக்க அவன் ஒரு அறிவு கொழுந்து,கணக்கு புலி, கட்டி சமத்துனு அடுக்கிண்டே போகலாம். இயல்பா பாத்தாக்க அவாளும் நம்மை மாதிரியே சமத்துகுடமாத்தான் இருப்பா. இருந்தாலும் @#$ஸிஸ் சமத்துன்னா கொஞ்சம் ஒசத்தி தான்.



அகிலா மாமி...:)

எங்க தெரு அகிலா மாமிக்கு கம்பெனியோட மொதலாளி பேரும் தெரியும். நாமளே நழுவி ஓடினாலும் இந்த மாமி விடமாட்டா! ஏன்டாப்பா! பெங்களூர்ல தானே நோக்கு வேலை?னு மெதுவா சிபிஐ அதிகாரி மாதிரி ஆரம்பிப்பா. அந்த சமயம் நான் வேலை பாத்த கம்பெனிக்கு 83 நாட்டுல ஆபிஸ் இருந்தாலும் அகிலா மாமிக்கு தெரியாத கம்பெனிதான் அது.அதுனால மெதுவா பம்ப ஆரம்பிச்சேன். உடனே அந்த மாமி "என்னோட அண்ணா பிள்ளை பெங்களூர்ல இருக்கும் @$fooooooஸிஸ்ல(பெரிய கம்பெனிங்கர்துனால foooo நீட்டிதான் சொல்லுவா) இருக்கான்டா, அவன்ட சொல்லி உனக்கும் அங்க வேலை வாங்கி தரலாம்னா நீ இஞ்ஜினியர் இல்லையே!"னு சொல்லி கடுப்பேத்துவா. அவாளோட அண்ணா புள்ளையும் கோரமங்கலால(பெங்களூர்ல கலர்புல்லான ஒரு இடம்) என்னோட நித்யம் உடுப்பி உபஹார்ல ராத்ரி டிபன் சாப்டுவான். அவன் நித்யம் புலம்பர்து எனக்கு தான் தெரியும்.


"பேருதான் பெரிரிரிரிரிய @#$ஸிஸ், நயாபைசாவுக்கு ப்ரயோஜனம் இல்லை, “பேரு பெத்த பேரு தாகத்து நீலு லேது”ங்கர கதையா இவன் client வருவாங்கர்த்துக்காக எங்க ப்ராணனை வாங்கரான்டா. திங்கட்கிழமை ஆனா டை கட்டிண்டு வாங்கோ! புதன் கிழமை ஆனா எல்லாரும் கோமணம் கட்டிண்டு வாங்கோ! வெள்ளிக் கிழமை மட்டும் எல்லாரும் காத்தாட வாங்கோ!னு ஸ்கூல் மாதிரி ஆயிரத்தெட்டு ரூல்ஸு வேற. ஊருக்கு வெளில கம்பேனியை கட்டி வச்சுட்டு அங்க அவனோட பஸ்ல கூட்டிண்டு போகர்த்துக்கு அன்னியன்ல வர சதா மாதிரி பஸ் பாஸ் எடுக்கனும்டா! நம்ப கம்பெனிதானே ஒரு மாசம் கழிச்சு எடுக்கலாம்னு இருந்தோம்னா இரண்டு அல்லக்கைகள் செக்கிங் எல்லாம் பண்ணி நாம வித்தவுட்ல வரும் விஷயத்தை மொத்த கம்பெனிக்கும் மெயில் அனுப்பி நாறடிச்சிடுவாங்க. இவ்ளோ களோபரத்துலையும் நீ ஏன் அந்த மானங்கெட்ட பஸ்ல போறாய்?னு நீ நெனைக்கலாம். அதுக்கும் ஒரு காரணம் இருக்கு, ஒரு குஜராத் பிகர் கொஞ்ச நாளா "சுனியே! சுனியே!"னு இப்பதான் பேச ஆரம்பிச்சு இருக்கா. அவளோட கள்ளம் கபடம் இல்லாத தூத்பேடா முகத்துக்காக தான் இவாளோட எல்லா கொடுமையையும் சகிச்சுண்டு அந்த பஸ்ல போயிண்டு இருக்கேன்டா மாப்ளே!"னு மூச்சு விடாம அவன் சொன்னதை எல்லாம் நான் அகிலா மாமி கிட்ட சொல்லிண்டா இருக்க முடியும்.


லிஸ்ட்ல அடுத்து இருப்பது @#ரோ. பஞ்சாப்ல ஆத்துக்கு ஒருத்தரை மிலிட்டரிக்கு அனுப்பர மாதிரி எங்க ஊர் முழுசும் தெருவுக்கு 10 பேர் இந்த கம்பெனிலதான் மண்ணள்ளி போட்டுண்டு இருக்கா. பெருமாள் கோவில்ல தீபாராதனை கற்பூர தட்டு போய் தீர்த்தம் சாதிக்கர்த்துக்கு நடுவில் வரும் இடைவெளியில் “எங்க ப்ரியா காப்பி போட்டாக்க கண்ணை மூடிண்டு குடிக்கலாம்!னு சொன்ன காலம் போய் இப்பெல்லாம் "காயத்ரி முதல் ரவுண்டு இன்டர்வியூ போகும் போதே, 'அம்மா, நேக்கு இங்கையே கிடைச்சா நன்னா இருக்கும்னு தோன்றர்து பஸ் பஸ்ஸா எல்லாரும் இங்க வந்து இறங்கராமா!'னு பெங்களூர்லேந்து போன் பண்ணி இப்ப தான் சொன்ன மாதிரி இருக்கு இப்போ அவளுக்கு கீழ 8 பேர் வேலை பாக்கறாளாம்!" "எங்காத்து ஹரிஷுக்கு கூப்டு வேலை குடுத்தா அந்த கம்பெனில" மாதிரியான மாமிகள் சம்பாஷனைகள் இப்பெல்லாம் சர்வசாதாரணா ஆனதால ரேடிங்ல அசைக்க முடியாத இடத்துல இன்னமும் விடாமல் டால்டா விற்கும் அந்த கம்பெனி இருக்கு.



கோவில் மாமி....:)

மீசை இருந்தா விசு! மீசை இல்லைனா பசு!னு சொல்லும் ஜீன்ஸ் பட செந்தில் மாதிரி இந்த ரெண்டு கம்பேனிக்கும் ஒரு எழுத்து தான் வித்தியாசம். அகிலா மாமியோட அத்தங்கார் பொண்ணு கூட C-ல ஆரம்பிக்கும் அந்த கம்பெனில தான் வேலை பாக்கரா!னு அடிக்கடி பீத்துவா, ஒரு தடவை பீத்தல் ஓவர்ப்ளோ ஆகி அத்தங்கார் பொண்ணு ஆபிஸுக்கு ஒரு நாள் போகலைனா கூட அங்க ஒரு வேலை நடக்காது தெரியுமோ!னு பக்கத்தாத்து கோவில் மாமி கிட்ட சுவாரசியமா சொல்லிண்டு இருக்கும் போது, நடுல போன ஹரிகுட்டி சும்மா இருக்காம "ஏது அவாட்டதான் எல்லா பாத்ரூமோட சாவியும் இருக்கா"னு கேட்டுட்டு ஓடியே.. ஏஏஏஏ போய்ட்டான். “C#$-ல எதை வெச்சு ஆள் எடுக்கரான்னே தெரிலைடா, ஒவ்வொருத்தரும் என்னப் பாரு! உன்னப் பாரு!னு லட்டுலட்டுவா இருக்கா!”னு எங்க அண்ணா சொன்னது எவ்வளவு நிஜம்னு நேர்ல பாத்ததுக்கு அப்புறம் தான் எனக்கு தெரிஞ்சது.


“T#$-ல இருக்கும் எங்காத்து மாப்பிள்ளை அமெரிக்காவுக்கு போயிட்டு போயிட்டு வருவார்!”னு சொல்லும் மாமியிடம் US என்ன லூஸ்மோஷனா? போய்ட்டு போய்டு வரர்த்துக்கு!ன்னு கேக்க வாய் வந்தாலும் சிரிப்பை அடக்கிண்டு ‘ஸ்திரமா ஒரு இடத்துல நம்பாத்து மாப்பிள்ளை இருந்தான்னா நீங்க பாட்டி ஆக முடியும்!’னு ‘ரொட்டிசால்னா’ சேகர் சென்டிமென்டா பாயிண்டை பிடிப்பான்.

இது போக ‘தோசக்கல்’ மாதிரி ஒரு கம்பெனி,’அக்குபஞ்சர்’ மாதிரி ஒரு கம்பெனினு லிஸ்ட்ல இருக்கு. இது தவிர மத்த கம்பெனில நாம சீனியர் மேனேஜராவே இருந்தாலும் அகிலா மாமி ஒத்துக்க மாட்டா. எட்டாம் கிளாஸ் பாஸ் பெரிசா? SSLC-பெயில் பெரிசா? கதைதான்........:)

Thursday, January 20, 2011

எழுதும் கைக்கு.......

எல்லாரும் செளக்கியமா இருக்கேளா? ரொம்ப நாளாவே மனசுல ஒரு எண்ணம் ஓடிண்டு இருக்கு. சில பேரோட எழுத்தை வாசிக்கும் போது அத்தனை சந்தோஷமாவும்,சுவாரசியமாவும் இருக்கு. கிராமங்கள்ல ஒரு வழக்கம் உண்டு, யாராவது நன்னா சமைச்சு இருந்தானாக்க "சமைச்ச கைக்கு வைரவளையே போடலாம்"னு ஒரு சந்தோஷ வார்த்தை சொல்லுவார் மாமா, அந்த மாமியும் ரொம்ப சந்தோஷப் பட்டுப்பா. அதே மாதிரி நல்ல சுவாரசியமான சில வித்வான்களுக்கு தோஹால உருக்கின பசும்தங்கத்தால் கங்கணம் போடலாம்னு ஆசை. தக்குடு ஒட்டகம் மேச்சி வாங்கர சம்பளத்துல எல்லா வித்வான்களுக்கும் மரியாதை பண்ணமுடியாதுங்கர்துனால நம்ப ஷோபா மேடம், சுபா மேடம் & ‘Techops’ மாமி எல்லாரும் உபயதாரர்கள்.




1)கள்ள கிருஷ்ணர்

இந்த வித்வான் சரியான கள்ள கிருஷ்ணர். சாதாரண விஷயத்தை கூட சுவாரசியமா ஆக்கர்துல கெட்டிக்காரர். ஒபாமா மாமா மாதிரி அவுக்காத டையும்,சிரிச்ச முகமுமா காட்சி அளிப்பார். எழுதாத விஷயமே கிடையாது. டிசம்பர் சீசன்ல ஆபோகியை ஆரோஹணத்துல பிடிச்சு பந்துகவராளியை அவரோஹணத்துல விட்டு நடுல நாட்டையை தொட்டுட்டு இவர் பண்ணின 'தர்பார்' 'கனடா' வரைக்கும் கேட்டது. அரக்கு பாவாடை போட்ட பொண்ணை சைக்கிள் ஹண்டில் பார்ல உக்கார வெச்சு இவர் பொங்கலுக்கு சைக்கிள் ஓட்டின கதை அவ்ளோ அழகா இருக்கும். ‘சுவாரசியமே உயிர் மூச்சு’ என்ற பிரிவின் கீழ் இந்த யசோதையின் இளஞ்சிங்கத்துக்கு கமண்ட் போடுவதை கலையாகவும், நயமாகவும் செய்யும் ‘ரசிகமணி’ அவர்கள் கரங்களால் கங்கணம் அணிவிக்கப்படுகிறது.

2)பொல்லாத கொழந்தை

இந்த குழந்தை மகாபொல்லாது,அம்மா திட்டினது,வலிப்பு காட்டினது,கோவப் பட்டதுனு எல்லாத்தையும் அழகு தமிழ்ல பதிவா போட்டு சிரிக்கும். அரங்கத்து அரசனின் நடை தான் அழகுனு கேள்விப் பட்டதுண்டு, இந்த பெண்மனியோட தமிழ் நடை பாத்ததுக்கு அப்புறம் அரங்கத்து அடியவர்கள் எது பண்ணினாலும் அழகுதான் போலருக்குனு தெரிந்தது. இவர் கல்லூரி வந்ததுக்கு அப்புறம் கத்துண்ட தமிழே எல்லாரையும் மயங்கச் செய்வது அதிசயமான உண்மை. இவாளோட மொழி நடையில் அனைவரும் வியப்பதுண்டு. இந்த அரங்கத்து சுட்டிப் பெண்ணுக்கு 'மொழியில் நடை அழகு'என்ற பிரிவின் கீழ், கண்ணப்பா! ராஜப்பா!னு திருக்கண்ணமுதை விடவும் இனிமையான மொழி பழகக் கூடிய 'திருக்குறுங்குடி' வல்லியம்மாவின் தங்க கரங்களால் வளை அணிவிக்கப்படுகிறது.




3)சிரிப்பு வித்துவான்

முதல் முறையாக பெயரை வாசித்தவுடன் 'கிலுக்' என்று சிரிக்க வைக்கும் வித்தை தெரிந்த கல்லிடையின் மாப்பிள்ளை. நாலு வரியை வாசிச்சதுமே இது டுபுக்கோட டச்நு வாசகர்களை உணரச்செய்த ஒரு படைப்பாளி.சுயஎள்ளல், நையாண்டி, நக்கல், கிண்டல் ,உணர்ச்சிகள் என்று வழங்கி தனது ஆயிக்கணக்கான வாசகர்களை மகிழ்வித்து வரும் ஒரு சிரிப்பு வித்துவான். ரத்த பாசத்தையும் தாண்டிய ஒரு ஈர்ப்பு அவரிடம் எனக்கு உண்டு. இவருடைய புகழ் பரப்பும் கழகத்தின் நிரந்தரத் தலைவரும், ‘என்றும் அன்புடன்’ போட்டு போட்டு கைசிவந்த நமது பாசத்துகுரிய பாஸ்டன் நாட்டாமையின் திருக்கரங்களால் வித்துவானுக்கு ஸ்வர்ணகங்கணம் அணிவிக்கப்படுகிறது.

4)மதுரை மங்கை

பார்பதற்கு சாது போல் தெரிந்தாலும் சிங்கப்பூரிலேயே மிகப்பெரிய சமையல் வித்தகி இந்த அம்மையார். இவாளோட வழங்கும் விதம் எனக்கு ரொம்ப பிடிக்கும், சும்மா தட்டுல போட்டு ஒரு போட்டோவை போட்டு ஆச்சுசுசுசு!னு ஆக்காம ரொம்ப அழகாவும் நேர்த்தியாகவும், சாதாரணமானவாளுக்கு கூட புரிய மாதிரியான செய்முறைகள் (சமையல் முடிந்த உடன் அடுப்பை அணைக்கவும்னு கூட போடுவா சில சமயம்) அப்பிடினு சொல்லிண்டே போகலாம். சமீபத்துல எதோ ஒரு பதார்த்தத்துக்கு அடில கூரை புடவை, பக்கத்துல வளையல் எல்லாம் வச்சு இவா எடுத்த போட்டோ என்னோட மனக்கண்கள்ல இன்னும் அப்பிடியே இருக்கு. "அழகான பாகசாலை" என்ற பிரிவின் கீழ் இந்த சமையல் வித்வானுக்கு அதே துறையில் படம் போட்டு பட்டையை கிளப்பும் இன்னோரு சிங்கப்பூர் சமையல் வித்தகியான ராஜி அக்காவின் கைகளால் கங்கணம் அணிவிக்கப்படுகிறது.

5)சிறுவாணியின் சிறு வாணி

உணர்ச்சிப் பிழம்பா கதை எழுதுவதில் ஜித்தி(ஜித்தனுக்கு பெண்பால்). மாவு பொங்காமல் வார்த்ததால் இவருடைய இட்லி எல்லாமே இட்டிலி ஆன கதை உலகமே அறியும். அதன் மூலம் புகழின் உச்சிக்கே சென்று ‘இட்லி மாமி’ என்ற நீங்காத பட்டத்துடன் உலா வரும் கோவையின் ‘குசுப்புக்கார’ பெண்மணி. இவரால் 300 பக்கத்துக்கு கதை எழுதவும் முடியும் மூனு வரியில் கவிதை எழுதவும் இயலும். கதை விடுவதில் வல்லவியான இவருக்கு "காதலுடன் க(வி)தை" என்ற பிரிவின் கீழ் துடுக்குத் தனமான கமண்டுகளில் சிறந்தவரும், கணேஷ் வசந்துக்கு மீண்டும் உயிர் தந்து குட்டி சுஜாதாவானவரும் ஆன சியாட்டில் சிங்காரியின் ராசியான கைகளால் ஸ்வர்ணவளை அணிவிக்கப்படுகிறது.




6)அமெரிக்க அம்பாள்

ஆர்ப்பாட்டமில்லாத பதிவுகளால் நெஞ்சை வருடுபவர். அழகான தாளக் கட்டுடன் கூடிய பாடல் வரிகளை உம்மாச்சிக்காக மட்டும் எழுதுபவர். கோதையின் பதிவுகளில் உயிர் பெற்ற கோதையாய் பாதைகளில் தென்படும் வார்த்தை கோலங்களில் நம் மனம் நிறைவதை கண்கூடாக உணரலாம். இந்த அபிராமியின் ரசிகைக்கு மரியாதை செய்ய பெரியப் பெரிய வித்வான்களை கூட்டிண்டு வந்தாலும், அவாளுக்கு மிகவும் பிடித்த நயாபைசாவுக்கு ப்ரயோஜமில்லாத ஒரு வெத்துவேட்டுப் பயலோட கையால வளை போட்டுண்டா ரொம்ப சந்தோஷப் படுவார்கள் என்பதால் அந்த பித்துக்குளியின் கைகளால் அழகான வளை அணிவிக்கப்படுகிறது.

Thursday, January 13, 2011

ப்ளவுஸ் சங்கரன் II

Part I இவட உண்டு..:)

'ப்ளவுஸ்' சங்கரனுக்கு ஒரு அண்ணா உண்டு, அவன் பேர் என்ன "உ@ பா%$#டை பாலாஜியா?"னு நக்கல் அடிக்காதீங்கோ. அவனுக்கு அந்த மாதிரி எதுவும் பட்டப்பெயர் எல்லாம் கிடையாது அவன் பேரு பாலு. சங்கரனுக்கு நேர் எதிர்மாறான ஆளு அவனோட அண்ணா, சுறுசுறுப்புன்னா அப்பிடி ஒரு சுறுசுறுப்பு. எங்க தெரு கிரிக்கெட் டீம்ல அவனை எடுக்கர்த்துக்கு பயங்கர போட்டியே நடக்கும், சுருக்கமா சொல்லனும்னா கெளதம் கம்பீர் மாதிரி ஆளு, நான் சங்கரன் எல்லாம் கங்குலி மாதிரி சீண்டுவார் இல்லாம இருப்போம். எப்ப பார்த்தாலும் டக் அவுட் ஆனா யாரு எடுப்பா? கிரிக்கெட் மட்டும் இல்லை, கோலிக்காய்,கபடி,பம்பரம்,கிட்டி புல்லுனு எல்லாத்துலையும் பாலு ஆல்-ரவுண்டர். 4 மீட்டர் பம்பரக்கயர் வெச்சு சுத்தினாலும் சங்கரனோட பம்பரம் தலை மாத்திதான் சுத்தும், பாலு அருனாக்கயிரை வெச்சு சுத்தி விட்டாலும் ப்ரமாதமா சுத்தும், சில சமயம் கயரே இல்லாம கையாலையே அகிலா மாமியாத்து திண்ணைல சுத்தி விட்டு 'கோஸ்' எடுத்துடுவான்.



'மைனர்' குஞ்சுமணி!..:)

என்னோட தோஸ்த் சங்கரனுக்கு ஒரு வினோதமான ஒரு குணாதிசியம் உண்டு. புதுசா ஒரு இங்கிலிபீஸ் வார்த்தையை கேட்டுட்டா போதும் ஒரு வாரத்துக்கு அந்த வார்த்தை இல்லாம எதுவும் பேச ஆரம்பிக்க மாட்டான். எங்க தெருல யாரும் இங்கிலிபீஸ் எல்லாம் பேச மாட்டா, ஆனா இந்த பாம்பே,டில்லி,பெங்களூர்லேந்து லீவுக்கு வரும் பையன்கள்/பொண்ணுகள் தான் அதெல்லாம் பேசும். ஹிந்தி எல்லாம் அவ்ளோவா கவனிக்க மாட்டான், ஆனா இங்கிலிபீஸ் வார்த்தை எல்லாம் கூர்மையா கவனிப்பான். ஒரு தடவை ‘சந்தனக்கும்பா’ மாமியாத்துக்கு வந்துருந்த அவாளோட பேத்தி கெளசல்யா எதோ பேசும் போது Ofcourse நு சொல்லிட்டா, அவ்ளோதான் அந்த வார்த்தையை ‘லபக்’னு பிடிச்சுண்டுட்டான் சங்கரன்.

ஒரு வாரத்துக்கு யார் கிட்ட பேசினாலும் Ofcourse இல்லாம பேசலை. எங்காத்து மாமாவை பாத்தியா கோந்தை?னு கேட்ட மாமிக்கு, “Ofcourse மாமா முடுக்குல திருட்டு தம் அடிச்சுண்டு இருக்கார்”னு பதில் சொன்னான். அதே மாதிரி "Ofcourse அகிலா மாமி வாய்க்காலுக்கு குளிக்க போயிருக்கா!” “Ofcourse கோவில்ல தீபாராதனை ஆரம்பிச்சாச்சு! Ofcourse கிச்சா மாமா அடுக்களைல தலப்பா கட்டிண்டு இட்லி வாத்துண்டு இருக்கார்”னு எல்லாத்துலையும் Ofcourse மயம் தான். இங்கிலீபீஸ் பரிட்சைல இவன் வாங்கி இருந்த 22/100 மார்க்கை பாத்துட்டு கடுப்பான எங்க இங்கிலீபீஸ் டீச்சர் கோவத்தோட "என்னை பாத்தா கேனச்சி மாதிரி இருக்காடா உனக்கு?னு கேட்டதுக்கும் வழக்கம் போல “Ofcourse அப்பிடி எல்லாம் இல்லை டீச்சர்!”னு சொல்லி முடிக்கவும் அந்த டீச்சர் பரோட்டா மாஸ்டர் மாதிரி இவனை பிச்சு எறிஞ்சுட்டா. அதுக்கு அப்புறம் தான் அந்த வார்த்தையை விட்டான்.

இந்த சம்பவத்துக்கு அப்புறம் அந்தப் பய இங்கிலிபீஸை கூர்ந்து கவனிச்சாலே எனக்கு திக் திக்னு இருக்கும், இவன் ஏடாகூடமா எதாவது சொல்லி எனக்கும் சேர்த்து தர்ம அடி விழுந்துடுமோனு பயந்துண்டே இருந்தேன். சங்கரன் ஆத்துல ஏற்கனவே நான் சொன்ன மாதிரி தெலுங்கு ரொம்ப நன்னா இருக்கும். போயிஸ்தானு! போன்ஜிஸ்தானு! ஒச்சாயினு! உன்னாலு! அவுனு! இன்டிகே! சேஸ்தானு! பப்பு புலுசு! மஜ்ஜே புலுசு! இதெல்லாம் அவாத்துல நான் கத்துண்ட சுந்தர தெலுங்கு வார்த்தைகள். ஒரு தடவை அவனோட அம்மா எதோ கேட்டதுக்கு “வந்தாச்சு அம்மா!”னு பதில் சொல்ல எத்தனிச்சு அது "வந்துஸ்தானு அவ்வா!"னு தமிலுங்கு ஆயிடுத்து. இனிமே தெலுங்கு பேசினா வடை,பாயாசம் எதுவும் கிடையாதுனு சங்கரன் சொல்லிட்டான். வடைக்கு முன்னாடி தெலுங்கு எனக்கு பெரிசா படாததால அத்தோட தெலுங்குக்கு பை பை சொல்லிட்டேன்.

மார்கழி மாச பஜனை 30 நாள் முடிஞ்சு கடைசி நாள்(பொங்கலுக்கு முந்தினம்) ராத்ரி பஜனை சமாப்தி நடக்கும். அதுக்கு பக்கத்து ஊர்லேந்து எல்லாம் பாகவதர்கள் வருவா. ராத்ரி 8.30 மணிக்கு மேலதான் 'ததரினன்னனா'னு பஜனையை ஸ்டார்ட் மியூசிக் பண்ணுவா. அதுக்கு முன்னாடி பாகவதர்கள் எல்லாருக்கும் ஆஹாரம் ஏற்பாடு பண்ணி இருப்பா. நாங்க தான் பரிமாறுவோம். அந்த சமயத்துல எங்க தெருல ஒரு மாமா ஆத்துக்கு பாம்பேலேந்து தீப்தி வந்து இருந்தா.

அவளுக்கு எல்லாமே அதிசியம் தான். வாய்க்கால்,வாசல்ல போடும் கோலம்,மாமி வெச்சுக்கும் பூ,மாமாவோட பஞ்சகச்சம்,பிள்ளையார் கோவில் மணி,பம்பரம்,கோவில் சுண்டல்/பொங்கல் எல்லாமே அதிசய வஸ்துதான் அவளுக்கு. எங்க கூட பரிமாறும் இடத்துல தீப்தியும் நின்னுண்டு இருந்தது. அப்போ அந்த பக்கம் வந்த மாமா மெதுவா ஒரு வடையை எடுத்து அவரோட பேரன் கைல குடுத்தார். அதை பாத்துட்டு தீப்தி what is this yaa?னு சங்கரன் கிட்ட கேட்டு தொலச்சுருத்து, அவ்ளோதான் சங்கரனுகுள்ள தூங்கிண்டு இருந்த இங்கிலிபீஸ் பூதம் வெளில வந்துடுத்து, “இதுதான் ஷாப் கோக்குனட் டு(tu)க்கு! வே பிளையார் ட(da)க்கு!”னு ஜுனூன் ரேஞ்சுக்கு ஒரு பழமொழியை டிரான்ஸலேட் பண்ணி சொல்ல, அந்த பொண்ணு 10 நிமிஷம் சிரிச்சது.

அந்த பக்கம் ஓசி காபி குடிக்க வந்த ஒரு மாமா "குழந்தேளா, பாகவதாளை எல்லாம் நல்ல கவனிங்கோடா, பாகவத சேவை ரொம்ப ஒசத்தி!னு ப்ளேட் போட்டுட்டு போனார். அவர் போனதுக்கு அப்புறம் பாகவதசேவைனா என்னது?னு தீப்தி கேள்வி கேட்டது. “வாடி என் வானரமே!”னு மனசுக்குள்ள சொல்லிண்டு ஹரிகுட்டி உடனே புளுக ஆரம்பிச்சான். “லெமன் சேவை தேங்காய் சேவை மாதிரி ஒரு வகை, அதை சாப்டா தொண்டை கனீர்னு ஆயிடும், போய் அந்த காபி குடிச்ச மாமா கிட்ட பாகவத சேவை வாளி எங்க இருக்கு?னு கேட்டா சொல்லுவார்"னு சிரிக்காம சொல்லிட்டான்.



பாகவத சேவை..:)

தீப்தியும் போய் அந்த மாமாகிட்ட கேட்க, மாமா தன்னை தான் எடக்கு பண்ணர்து போலருக்கு!னு நினைச்சுண்டு "இந்த காலத்துல குழந்தேளுக்கு சின்னவா பெரியவா வித்தியாசமே இல்லாம போச்சு ஹைய்"னு சொல்லிட்டு போய்ட்டார். பஜனை சமாப்தில ஆரம்பம் எல்லாம் ரொம்ப போரடிக்கும், தீப ப்ரதக்ஷிணம் வரும் போதுதான் நன்னா இருக்கும், ஆம்பளேள் எல்லாருக்கும் நெத்தில எண்ணைல குழைச்ச குங்குமத்தை மார்வாடி மாதிரி நீளமா இட்டு விடுவா. தீபத்தை சுத்தி எல்லா மாமாவும் “ரிங்கா ரிங்கா ரோஸஸ்” மாதிரி ஆடுவா. கடைசில ஆஞ்சனேயர் உத்ஸவம் பாடும் போது எங்க குரூப்ல இருக்கும் ஒரு வானரத்துக்கு நெஜமான ஆஞ்சனேயர் வேஷம் போடுவா. கூடுதலா 4 வடை கிடைக்கும்னு ஆசை பட்டு ‘சக்கப்பழம்’ ஹரீஷ் அந்த வேஷத்தை போடுண்டு வந்தான். அந்த டிரஸ் போட்டுண்டா கடிச்சுபிடிங்கும் அதனால நான் போட்டுக்கலை. ஒரு சின்ன தட்டவொட்டிலேந்து பஜனை நடக்கர இடத்துக்குள்ள பொண்கொழந்தேள் உக்காச்சுண்டு இருக்கர இடத்துல 'தொமார்'னு குதிச்சு சக்கப்பழம் ஸ்பெஷல் எபக்ட் எல்லாம் குடுத்தான்.



ரிங்கா ரிங்கா ரோஸஸ்!...:)

ஆஞ்சனேயரோட மகிமையை பாத்தேளா?னு சொல்லிண்டே பாகவதர் கன்னத்துல போட்டுண்டார். ஆனா பொறாமை பிடிச்ச அகிலா மாமி, “இந்த ஆஞ்சனேயர் நித்யமே இப்படித்தான் குதிப்பார், இன்னிக்கி வாலோட இருக்கார் அவ்ளோதான் வித்தியாசம்!”னு சொல்லவும் எல்லாரும் சிரிச்சா. பொண்கொழந்தேள் பக்கம் குதிச்சதை வெச்சே வேஷம் கட்டி இருக்கர்து சக்கப்பழம்!னு எல்லா மாமிகளும் கண்டுபிடிச்சுட்டா. அதுக்கு அப்புறம் ஆஞ்சனேயர் சகிதமா போய் பாதில ஆத்துக்கு தூங்கப் போன “ஹைப்பர்லிங்” மாமி,”சினிமா” மாமி ஆத்துக்கு எல்லாம் போய் பெல் அடிச்சு எழுப்பிட்டு வருவோம். பஜனை முடிவுல பத்தைலேந்து வரும் ஒரு பாகவதர் “தேஹிலா!தேஹிலா! ஜோகிராத்தராவோ!”னு ஒரு மராட்டி அபங்கம் பாடுவார். எங்க கூட்டத்துக்கு எல்லாம் அதுதான் குத்துப் பாட்டு, அவர் பாடமறந்தாலும் நாங்க விடாம ‘மாமா தேஹிலா! மாமா தேஹிலா!’னு அவரை நச்சரிச்சு பாடச் சொல்லி பாண்டுரெங்கன் மாதிரி இடுப்புல(எங்க இடுப்புல) கை வெச்சுண்டு குதிப்போம் (அப்ப தான் நல்ல பசி வந்து ராத்ரி 2.45 மணிக்கும் நிறையா புளியோதரை சாப்ட முடியும்).

ரொம்ப நாளாவே நானும் ப்ளவுஸ் சங்கரனும் அந்த பாட்டு ‘தேஹிலா!’னு தெரியாமா “கோகிலா! கோகிலா!”னு உச்சஸ்தாயில பாடிண்டு இருந்தோம். அந்த பத்தை பாகவதர் தான் “கோகிலாவும் இல்லை! அகிலாவும் இல்லை!”னு சத்தம் போட்டுட்டு தேஹிலாவுக்கு மாத்திவிட்டார். 2009 செப்டம்பர்ல கல்லிடைல அம்மாவோட நாத்தனாரோட மச்சினராத்துக்கு எதேச்சையா வந்த சங்கரனை பாத்தேன். மெட்ராஸ்ல நல்ல உத்யோகத்துல இருக்கான். பழைய கதை எல்லாம் அவனோட பேசிண்டு இருக்கும் போது.....

யான் - பஜனை பத்தி ஞாபகம் இருக்காடா?

சங்கரன் – Ofcourse, மறக்க முடியுமாடா தக்குடு!

யான் - :))

இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்

Thursday, January 6, 2011

சச்சு மாமி

உங்கள் அபிமான ப்ரவுஸர்களில் உலகெங்கும் பொங்கல் வெளியீடு "ப்ளவுஸ் சங்கரன் II".


வரிசையா உக்காசுண்டு அவசர அவசரமா இன்ஜின்ல கரியை அள்ளிபோட்டுக்கர மாதிரி சாம்பார் ரசம் பாயாசம் எல்லாத்தையும் எதோ கடைசி பெட்டியை துரத்தி பிடிச்சி ஏறப் போறவன் மாதிரி இயந்திரத் தனமா சாப்பிடும் ந(ர)கர பந்திலேந்து முற்றிலும் மாறுபட்ட ஒரு பந்தி போஜனம் பத்தி உங்களுக்கு தெரியுமா?

கல்லிடை நகரத்துக்கு கல்யாணபுரி!னு ஒரு அழகான பெயர் உண்டு. லட்ச ரூபா குடுத்து மண்டபம் எல்லாம் வாடகைக்கு எடுக்க மாட்டா, சில லட்சங்கள் குடுத்து கான்ட்ராக்ட் எல்லாம் விடமாட்டா. தெருல இருக்கும் பண்ணையார் மாமாவுக்கு 3 வீடு இருக்கும்(வீடு மட்டும்), அதுல 2 வீட்டை எப்போதும் தெருக்காரா கல்யாணத்துக்காகவே ஒதுக்கி வெச்சுருப்பார். அந்த ரெண்டு நாளைக்கு ஆகும் கரண்ட் பில் மட்டும் இவா கட்டினா போதும். 2 ஆத்துல ஒரு ஆம் மாப்பிள்ளையாத்துகாரா வந்து இறங்கர்த்துக்கு, இன்னோன்னு பந்தி நடத்த. முக்கியமான சமையல் சாமான் எல்லாம் உரல்ல போட்டு அழகா இடிச்சு அந்த கல் உரல் வாசனையோட சாப்பாடு தயார் பண்ணுவா.



RVS அண்ணா! நல்ல பிள்ளையா லட்சணமா உரலை மட்டும் பாருங்கோ!!...:)

சமையலுக்கு வரும் மாமா சமையல் மட்டும் தான் பண்ணுவார், பரிமாறர்து எல்லாம் தெரு மாமாக்கள் & பசங்க தான். பிரமாதமா சமைச்சா மட்டும் போதாது, அதை அழகா பரிமாறர்தும் ஒரு கலை. பந்தில பரிமாறும் போது வரிசை க்ரமம் மாறாம பரிமாறனும், பட்டுப் பாவாடை போட்ட 'பவ்யாகுட்டி' கேட்டானு பல்லை காட்டிண்டு நட்ட நடுல பாயாச வாளியை கொண்டு போக கூடாது. ஒரு பதார்த்ததோட இன்னொன்னு கலக்காம போடனும், சூடான ரசம் எல்லாம் கைல படக்குனு விட கூடாது, எல்லாருக்கும் சிரிச்ச முகத்தோட பரிமாறனும், சாப்டர்துக்கு கொஞ்சம் நேரம் குடுக்கனும்,கை காயர அளவுக்கு அசமந்தமா போடகூடாது.

வலது பக்கம் ரோஜா பூ வெச்ச காயத்ரியை பாத்துண்டே பாலா மாமி கைல சாம்பக்காய் கூட்டை போடகூடாது(ஆயிலு! புரிஞ்சுதா?). சாதம் எல்லாம் பரிமாறும் போது இலைல சிதறாம பாந்தமா போடனும், பரிமாறும் கரண்டி இலைல படாம பரிமாறனும் அதே சமயம் ரொம்ப உசரத்துலேந்து போட்டு சாப்டரவாளோட பட்டுப்புடவை தலைப்புல தெளிக்கர மாதிரியும் ஆக கூடாது. வேகமா பரிமாறிண்டு போகும் போது நிலை தடுமாறி "பொதகடீர்"னு வாளி சகிதமா இலைல விழாம அழகா போகனும், களத்துல இருக்கும் இலையை காலால் மிதிக்காம சில்வண்டா நகரனும்.

இது எல்லாம் போக கல்லிடைல சிலபல கூத்து எல்லாம் பந்தில வச்சு ஜாலியா நடக்கும், கோபமும் படமுடியாம சிரிக்கவும் முடியாம மாட்டிண்டவா அசடு வழிஞ்சுண்டு முழிப்பா(நம்ப LK மாதிரி). ஒவ்வொரு மாமா ஒவ்வொரு ஐயிட்டம் பரிமாறர்துல கெட்டிக்காராளா இருப்பா, அவாளோட ஏரியா தவிர அடுத்த விஷயத்துல தலையிட மாட்டா. எதோ யுத்தத்துக்கு தயார் ஆகர மாதிரி வாளி கரண்டி எல்லாம் அவாளே எடுத்து ரெடியா வெச்சுப்பா. எங்க ஊர்ல் பொண்ணை கல்யாணம் பண்ணின்ட மாப்பிள்ளைகள் யாராவது பந்தில சிக்கினான்னா தொலஞ்சான். அதுவும் எங்க தெருல பொண்ணு எடுத்தான்னா அவர் எங்க தெருவுக்கே மாப்பிள்ளை . நம்ப மாப்பிள்ளை கோவமே படமாட்டார்! சிரிச்சமுகம்! குணம் கெட்டவர் கிடையாது!னு முதல்லையே ஒரு மாமா பிட்டு எல்லாம் போட்டு பலிக்கு ஆட்டை தயார் பண்ணிடுவார்.

ஸ்டைல்’ மீனா மாமியோட மாப்பிள்ளை(மெட்ராஸ்காரர்)விவரம் தெரியாம கோவில் விஷேஷத்துல சாப்பிட பந்தில உக்காந்துட்டார், அவ்ளோதான்! எல்லா மாமாக்களும் “மாப்ளையை கவனி! மாப்ளையை கவனி!”னு சொல்லி நல்ல கவனிச்சுட்டா. அதுவும் பாயாச வாளி வரும் போது எதோ முறைமாமன் மேல மஞ்சத்தண்ணி விடும் அத்தை பொண்ணு மாதிரி ஆளாளுக்கு வாஞ்சையோட விடுவா. மாப்பிள்ளையை எதுக்கு எல்லாருமா சேர்ந்து பாடாபடுத்தரேள்!னு ‘ஸ்டைல்’ மீனா மாமி சத்தம் போடமாட்டா, மீறி எதாவது சத்தம் வந்தா ஒரு பாயாச வாளியை மாமியோட இலைக்கு திருப்பிவிட்டுடுவா.

டிபன் சாப்பிட உக்காச்சுக்கும் சச்சு மாமிக்கு கொச்சு விட எப்போதும் பெரிய போட்டியே நடக்கும், ஒரு தடவை ஆர்வக்கோளாறுல ஹரிகுட்டி "சச்சு! கொஞ்சம் கொச்சு!"னு சொல்லிட்டு திரும்பினா கிங்காங் மாதிரி சச்சு மாமியாத்து மாமா நிக்கரார். அப்புறம் என்ன, பந்தி வரிசையை தாண்டி குதிச்சு ஹரிகுட்டி ஓட, மாமா பின்னாடி ஓட,அந்த களோபரத்துல ஒரு வாளி சட்னி "டேட்டாபேஸ்" மாமி தலைல அபிஷேகம் ஆகி அந்த மாமி பதிலுக்கு பக்கத்துல இருந்த டம்ப்ளர் ஜலத்தை கோவத்தோட விட, அது மிஸ் ஆகி “பீப்பி”மாமா மூஞ்சில தெளிக்க...கல்யாணாம் கார்கில் ஆயிடுத்து.

99% எல்லாருமே ஸ்வீட் & வடையை கைல வாங்கிண்டு ABT பார்சல் சர்வீஸ் ஆஞ்சனேயர் மாதிரி அதை ஆத்துக்கு கொண்டு போவா. அதுலையும் பசங்க புகுந்து விளையாடுவாங்க. இப்படி கைல வாங்கி வெச்ச ஸ்வீட்டையும் வடையையும் பத்ரமா ஆத்துக்கு கொண்டு போகர்த்துக்கு மாமா/மாமிகள் படும்பாடு ரொம்ப வேடிக்கையா இருக்கும். ஸ்வீட்டை வாங்கி சைடுல வெச்சுருந்தா பின்பக்கம் வழியா எதாவது ஒரு வானரம் அழகா சத்தம் போடாம வந்து எடுத்துண்டு போயிடும். இதுக்கு பயந்தே சில மாமாக்கள் முதல் பந்தில சாப்டுட்டு ஆத்துக்கு போகும் அவாத்து மாமி கிட்ட ஸ்வீட்டையும் வடையையும் எதோ தாவூத் இப்ராஹிம் சரக்கை கை மாத்தி விடர மாதிரி ரகசியமா குடுத்து அனுப்புவார்.

சில சமயம் சைடுல வெச்சுருந்த ஸ்வீட் மேல அரை கரண்டி நெய்யை பின்னாடிலேந்து தெரியாம விட்டுட்டு போயிடுவா. பந்தி முடிஞ்சு அந்த ஸ்வீட்டை கைலயும் எடுக்க முடியாம வெச்சுட்டு போகவும் மனசு இல்லாம பரிதாபமா நிப்பார் அந்த மாமா. சில மாமாக்கள் கெட்ட வார்த்தைல திட்ட ஆரம்பிச்சுடுவா. கேக்கர்த்துக்கே அவ்ளோ ஆனந்தமா இருக்கும்.



சார்! லட்ட்ட்ட்ட்டு

சில மாமாக்கள் ஸ்வீட் வடையை கொண்டு போகர்த்துக்கு குட்டியா ஒரு பை எல்லாம் கொண்டு வருவா. எங்க ஊர் பக்கம் பந்தில பழமும் போடுவா, அதையும் சேர்த்து அந்த மாமா அந்த குட்டி பைல போட்டு வெச்சுட்டு சர்வ ஜாக்ரதையா சாப்டுண்டு இருப்பார். பசங்க அவாளோட முழு சாமர்த்தியத்தையும் பயன்படுத்தி அந்த பையை கொத்திண்டு போக முயற்சி பண்ணுவா. முடியாத பட்சத்துல மெதுவா அந்த பையை கையால ஒரு அமுக்கு அமுக்கிட்டு வந்துடுவா. ஆத்துல போய் அந்த மாமா ஆசையா ஸ்வீடையும் பழத்தையும் அவாத்து மாமிகிட்ட குடுக்க பையை திறந்தா பழனி பஞ்சாமிதம் மாதிரி நசுங்கின கதளிபழமும் லட்டுவும் சேர்ந்து புது தினுசான ஒரு வஸ்து இருக்கும்.

சாயங்காலம் கோவில் தீபாராதனைக்கு கோவில் வாசல்ல நிக்கும் போது மாமா புலம்ப ஆரம்பிச்சுடுவார்.“கொழந்தேளாவா இருக்கு! எல்லாம் கொரங்குகளான்னா இருக்கு! மத்தியானம் பந்தில வெச்சு யாரோ என்னோட ப@#%தை ^&#?!+ போயிடுத்துகள்!”நு மாமா சொல்லி முடிக்கர்த்துக்குள்ள தீபாராதனை பாக்கர்த்துக்கு நின்னுண்டு இருக்கும் மாமா மாமிகள் எல்லாம் ஒன்னுபோல 'க்லுக்'னு சிரிப்பா (எல்லா மாமிகளும் அதிதீவிர பாக்யராஜ் ரசிகைகள்). அதுக்கு அப்புறம் அந்த மாமாவுக்கு ஏன்டா சொன்னோம்னு ஆயிடும். எதுக்கு சிரிச்சானு தெரியாம நாங்களும் பரபிரம்மமாட்டமா நின்னுண்டு இருப்போம். இத்தனை கலாட்டா & குறும்புத்தனத்தோட தோழர்கள் படை சூழ வயிரு நிறைய சாப்பிடும் சுகமே தனிதான்.



கமண்ட் போட்டவா எல்லாம் ஒரு வாய் சாப்டுட்டு போங்கோ!..:)


குறிப்பு - மேல சொன்ன பவ்யாகுட்டி & காயத்ரி ரெண்டு பேரும் 5 வயசு கொழந்தேள். இந்த பாஸ்டன் நாட்டாமை மாதிரி கூலிங் கிளாஸ் போட்டு கற்பனை பண்ணிண்டா அதுக்கு கடை மொதலாளி பொறுப்பு கிடையாது...:)