Thursday, September 27, 2012

அவுத்து விட்ட கழுதை (Part I)


எங்க ஊர் தாமிரபரணி ஆத்தங்கரைல அழுக்கு மூட்டை எல்லாத்தையும் இறக்கி வச்சதுக்கு அப்புறம் கழுதையோட முன்னங்கால் கயித்துகட்டை வண்ணான் அவுத்துவிடுவார். அவுத்துவிட்டோனே அந்த கழுதை எடுக்கும் ஒரு ஓட்டம். அதை மாதிரி ரம்ஜானுக்கு ஒரு வாரம் லீவு & 25 நாள் ஒட்டகத்தை எல்லாம் வேற ஒரு ஆள் கிட்ட ஏற்பிச்சுட்டு ஊருக்கு போயிட்டு வாடே!னு எங்க ஷேக் சொன்ன உடனே மனசு அவுத்து விட்ட கழுதையா மாறிடுத்து. லீவுனு சொன்னவுடனே எந்த ஏரோப்ளேன்ல போகர்துன்னு யோசனை பண்ண ஆரம்பிச்சாச்சு. கத்தார் ஏர்லைன்ஸ் ப்ளைட்ல நாலாவது வரிசைல ரெண்டாவது சீட் கொஞ்சம் ஆடும் அப்பிடிங்கர அளவுக்கு போய் போய் போர் அடிச்சு போயாச்சு அதனால இந்த தடவை கொஞ்சம் ‘கலகலப்பா’ வேற எதாவது ஏர்லைன்ஸ்ல போலாம்னு லாப்டாப்பை நோண்ட ஆரம்பிச்சதுல லங்கன் ஏர்லைன்ஸ் வெப்சைட்ல ஒரு யுவதி மசாஜ் பண்ணர மாதிரி போட்டோவோட ‘புதிய உலகம் உங்களை அழைக்கிறது’னு வாசகத்தையும் ரன்னிங்ல ஓட விட்டுருந்தான். டிக்கெட் பைசாவும் ‘நீங்க ஆத்துக்கு போய் சில்லறை மாத்தி தந்தா போதும் கேட்டேளா!’ ரேஞ்சுக்கு இருந்தது. ஆனா ப்ளைட் நேரா இலங்கை போயிட்டு அங்கேந்து சென்னை போகும்னு போட்டுருந்தான். பிரயாண நேரமும் 2 மணி நேரம் ஜாஸ்தியா போட்டுருந்தான். “இல்லையாபின்ன போறவழில மசாஜ்லாம் பண்ணனுமோல்லியோ அதான் செத்த நாழியாகர்து போலருக்கு!”னு எனக்கு நானே சொல்லிண்டு டிக்கெட்டை புக் பண்ணிட்டேன்.

ஆத்துல போய் விஷயத்தை சொன்னா என்னோட தங்கமணி மம்தா பானர்ஜி மாதிரி ஆச்சா! பூச்சா! ஆனை! பூனை! அக்ஷதை!னு செல்லமா சாமியாட ஆரம்பிச்சுட்டா. அப்புறம் பைசா கணக்கெல்லாம் சொல்லி கூட்டணில விழுந்த விரிசலை ராம்கோ சிமிண்ட் போட்டு சரிபண்ணர்துக்குள்ள ப்ராணன் போயிடுத்து. சூப்பர்ஸ்டாரே இதுல போயிருக்கார்னு சொன்னதுக்கப்புறமும் சமாதானம் ஆகாம ‘ஏர்லைன்ஸ் வெப்சைட்டை ஓப்பன் பண்ணி காட்டுங்கோ அவா ஃபைவ்ஸ்டார் ஏர்லைன்ஸானு பாக்கட்டும்’னு ஒரே முரண்டு. ‘பெருமாளே!வெப்சைட்டை ஓப்பன் பண்ணி மசாஜ் போட்டோவை பாத்தா நான் தொலைஞ்சேன்’னு முழிச்சுண்டு இருக்கும் போதே வெப்சைட்ல யானை படம் வந்து உயிர் தப்பியது. சம்ப்ரதாயமா தோஹாலேந்து எல்லாருக்கும் வாங்கிண்டு போகவேண்டிய ‘ஆத்துக்காரியோட அத்தை பொண்னுக்கு பால்பவுடர்,மாமா பொண்ணுக்கு பைனாகுலர், மாமியாருக்கு டின்னர்செட்டு, மச்சினனுக்கு ஷேவிங்செட்டு’ போன்ற வாழ்வின் அத்தியாவசியமான சாமான் செட்டுகளையெல்லாம் மூனு பெட்டில கட்டிண்டு கருங்குளம் மாமாவோட ‘மினிபஸ்’ கார்ல ஏர்போர்ட் போய் ஏரோப்ளேன்ல நுழைஞ்ச உடனே வாயெல்லாம் பல்லா இருந்த ஒரு அம்சவல்லி 'ஹாய் புவன்!'னு சொன்னா. நான் குழம்பி போய் கனடாலேந்து கிளம்பி வந்த பிரபல பதிவர் போன மாசமே கோயம்புத்தூர் வந்துசேர்ந்தாச்சு நான் தக்குடுவாக்கும்!னு சொல்லிட்டு வந்தேன். அப்புறம் கவனிச்சு பாத்தா நம்ப ஊர் நமஸ்காரத்தை தான் ‘ஆய்புவன்!’னு சிங்களத்துல சொல்லியிருக்கானு புரிஞ்சுது.


ஆய்புவன் சொன்ன ஏர்ஹோஸ்டஸ் பாக்கர்துக்கு எப்பிடி இருந்தா அதை சொல்லு முதல்ல!னு நீங்க எல்லாரும் ஆர்வமா கேட்பேள்னு நேக்கு தெரியும். சின்னத்தம்பி படத்துல குஷ்பு பெரியமனுஷி ஆகி மொட்டமாடில உக்காச்சுண்டு பிரபு பாடர்தை பாத்துண்டு இருக்கும் போது ஒரு காஸ்ட்யூம் போட்டுண்டு இருப்பாளே அதை மாதிரி காஸ்ட்யூம் போட்ட 6 ஆய்புவனும் 4 தீவட்டித் தடியன்களும் இருந்தா. காத்தால வாய்க்கால்ல குளிச்சுட்டு ஒரு சுட்டித் துண்டை தோள்ல போட்டுண்டு விஷ்ராந்தியா வரும் எங்க ஊர் நானா மாமா மாதிரி நல்ல காத்தோட்டமான உடையலங்காரம். பிஸினஸ் கிளாஸ்ல இருந்த ஆய்புவன் பாக்கர்துக்கு ‘ஜாக்பாட்’ குஷ்பூ காஸ்ட்யூம்ல வந்த நமிதா மாதிரி இருந்தா. ‘ஹும்ம்ம்! என்ன இருந்தாலும் பிஸினஸ் கிளாஸ் பிஸினஸ் கிளாஸ் தான்!’னு நான் சொல்லும்போது தங்கமணியோட கைல இருந்த 7 கிலோ பெட்டி என்னோட கால்ல நங்ங்ங்!னு விழுந்தது. ‘சாரி! தெரியாம விழுந்துடுத்து!’ மாதிரியான வார்த்தை பிரயோகங்கள் எதுவும் வராம, குறி பாத்து கத்தி எறிஞ்ச நம்பியாரோட வில்லச் சிரிப்பு மேடம் கிட்டேந்து வந்தது. கடைசி வரைக்கும் வெப்சைட்ல போட்ட அந்த மசாஜ் ரூம் எங்கனே தெரியலை ‘கடங்காரன் ஏமாத்திட்டானே!’ கடைசில இந்த சமையல் ப்ளாக்கர்ஸ் மாதிரி போட்டோவை மட்டும் பிரமாதமா போட்டு கவுத்திட்டானே!னு இருந்தது. குறுக்கையும் நெடுக்கையும் போயிட்டு வரும் எதாவது ஒரு ஆய்புவன்கிட்ட கேட்கலாம்னா மேல வச்ச எதாவது ஒரு வி ஐ பி பெட்டி தலைல விழுந்து கபாலமோக்ஷம் வரக்கூடிய சாத்தியங்கள் தங்கமணி ரூபத்துல பக்கத்துலையே இருந்ததால ஏ வி எம் சரவணன் அப்பச்சி மாதிரி கையை கட்டிண்டு சமத்தா உக்காசுண்டு இருந்தேன்.அம்சவல்லிகள்

இலங்கைல போய் இறங்கி சென்னை ப்ளைட்டை பிடிக்க ஒரு மணி நேரம் இருத்தது. இலங்கை ஏர்போர்ட் எந்தவிதமான பரபரப்பும் இல்லாம பெண்களூர்ல இருக்கும் ஹல்சூர் மெட்ரோ ரயில் ஸ்டேஷன் மாதிரி இருந்தது. எங்க ஊர் மாமிகள் சொல்ற மாதிரி ‘வந்த மாட்டை கட்டுவாரும் இல்லை! போன மாட்டை பிடிப்பாரும் இல்லை!’ ப்ளைன்ல இருந்த அஞ்சு ஆய்புவனுக்கே வாய்ல போன ஈ தெரியாம இருந்த எனக்கு பாக்கர இடமெல்லாம் பவளக்கொடியா இருந்ததால ப்ளைட் 2 மணி நேரம் லேட்டா போனாலும் நன்னா பொழுது போகும் போலருக்கே!னு இருந்தது. போரவா வரவாளை பாக்கர்துக்கு செளகர்யமா உள்ள ஒரு இடத்தை தேர்ந்தெடுத்து ரெண்டு பேரும் உக்காசுண்டோம். இலங்கை ஏர்போர்ட்ல எல்லா நாட்டு சமத்துகளையும் பாக்க முடியர்து. அந்த கூட்டத்துல ஒரு ஷேக் பொம்ணாட்டி சிங்கபூரா! சிங்கபூரா!னு சொல்லிண்டு வந்தா. எனக்கு டக்குனு புரிஞ்சுடுத்து “பூரான் தேள் எல்லாம் இந்த ரூம்குள்ள தான் போகனும் போங்கோ போங்கோ!”னு பத்திரமா அனுப்பி வச்சேன். அரபில அமெரிக்காவை அம்ரிக்கா!னு தான் சொல்லுவா அதே மாதிரி சிங்கபூர் அவாளுக்கு சிங்கபூரா ஆயிடுத்து. 'ஏட்டிக்கு போட்டி பேசினாலும் இந்த எஜமான விசுவாசத்துக்கு ஒன்னும் குறைச்சல் இல்லை!'னு சொல்லற மாதிரி தங்கமணி பழிப்பு காட்டினார்கள்.

“இங்க இருக்கர தோஹாலேந்து மெட்ராஸ் வர எவ்ளோ நேரம் ஆகர்து பாருங்கோ! ஹுக்கும் ! தேடிப் பிடிச்சு எங்கப்பா ஒரு பையப்பரஞ்சான் மாப்பிள்ளைக்கு குடுத்துருக்கார்! அடுத்த தடவை டிக்கெடெல்லாம் நான் பாத்து புக் பண்ணிக்கறேன்!” மாதிரியான தங்கமணியோட அஷ்டோத்திர சத நாமாவளி அர்ச்சனைகளுக்கு மத்தில ஒரு வழியா ஒன்பதரை மணிக்கு சென்னை வந்து சேர்ந்தோம். சுலபமான நிர்வாக நடைமுறைகளுக்காகவும், வலது காலில் மறுபடியும் பெட்டி விழும் வாய்ப்பு இருப்பதாலும் அடுத்த நாள் பெண்களூருக்கு நான் மட்டும் தனியா போகர்துன்னு முடிவு பண்ணி ‘என்னத்தையேன் பண்ணி தொலைங்கோ!’என்ற கெளரவமான பர்மிஷனையும் மேலிடத்துல நைசா வாங்கிண்டு பயணமானேன். பெண்களூர்ல என்ன நடந்தது தெரியுமோ..............................

(தொடரும்)