Saturday, July 6, 2013
ரெஸ்ட் ரூம்
88-வது வருஷத்துக்கு அப்புறம் தான் கல்லிடை காஸ்மோபொலிடன்ல கக்கா போகர்துக்கு தனியா ரூம் கட்ட ஆரம்பிச்சா. கட்டினதுக்கு அப்புறமும் பல பேர் ஓப்பன் யுனிவர்சிட்டில போய் தான் போயிட்டு வருவா. எதோ ஒரு படத்துல நம்ப கவுண்டமணி சொல்லுவாரே அதை மாதிரி ‘ஆனது ஆச்சு இன்னும் ஒரு அஞ்சு நிமிஷம்’னு எங்களோட வானரபடையும் வயல்வெலில உரம் போட்ட காலங்கள் அதிகம். எங்க தெருல இருந்த மூச்சா மாமா ஆத்துல அவருக்கும் மாமிக்கும் எப்போதும் சண்டை வரும். என்ன?னு போய் பாத்தா “ஒன்னுக்கு போனதுக்கு போய் முக்கா வாளி ஜலம் விட்டுண்டு இருக்கா ஓய்! இப்பிடியே விட்டுண்டு இருந்தா ஒரு மாசத்துல தொட்டி ரொம்பிடும்!”னு ஆவலாதி சொல்லுவார். மாமி விட்ட முக்கா வாளி ஜலத்துக்கு சேர்த்து வச்சு மாமா முடுக்குல போய் தான் மூச்சா போவார், கடைசில அதுவே அவருக்கு முடுக்கு மூச்சா மாமானு பட்டம் வாங்கி குடுத்துடுத்து.
எங்க குரூப்ல சனி ஞாயிறு ஆச்சுனா சில வானரங்களுக்கு ‘டாடி எனக்கு ஒரு டவுட்டு’ ப்ரோகிராம் மாதிரி விபரித சந்தேகங்கள் வர ஆரம்பிக்கும். எதாவது ஒரு மாமா எங்க எல்லாரையும் விளையாடவிடாம பிடிச்சுவச்சு அட்வைஸ் பண்ணி கழுத்தை அறுத்துண்டு இருக்கும் போது 'பழிக்கு பழி புளிக்கு புளி’னு புத்திசாலி வானரத்தை உசுப்பிவிட்டாக்க அது போய் தன்னோட சந்தேகத்தை கேக்கும். ஒரு தடவை “முடுக்கு முடுக்கு!னு எல்லாரும் சொல்றாளே அதுக்கு ஏன் மாமா முடுக்குனு பேர் வந்தது?” அப்பிடினு கேக்கவும் அந்த மாமா அவாத்து மாமி கூப்பிடாமையே ‘இதோ வந்துட்டேன் என்னைதான் தேடரையா?’னு கேட்டுண்டே அவாத்துக்குள்ள போயிட்டார். பல வருஷங்களுக்கு அப்புறம், முடுக்கிண்டு ஓடர்தால அந்த இடத்துக்கு முடுக்குனு பேர் வந்துருக்கும் அப்பிடினு நாங்களே தீர்மானம் பண்ணிண்டோம்.
2006-ல பெண்களூர்ல ஒரு கம்பேனில வேலைக்கு சேர்ந்ததுக்கு அப்புறம் இன்னொரு விஷயம் தெரிஞ்சது. கக்கா ரூமுக்கு இந்த ஊர்ல ‘ரெஸ்ட் ரூம்’னு பேர். முதல்ல புரியவே இல்லை. அங்க போய் யாராவது ரெஸ்ட் எடுப்பாளா? அமெரிக்காகாரன் அறிவில்லாம பேர் வச்சான்னா நாமளும் அதையேவா சொல்லனும்னு நினைச்சுப்பேன். எங்க டீம்ல இருந்த ஒரு பிரகஸ்பதிக்கு புதுசா எதாவது டாஸ்க் குடுத்தா உடனே ரெஸ்ட் ரூமுக்கு ஓடிருவான். ஒரு தடவை டீம் லீடர் மீட்டிங்க் போட்டு இவனை தவிர எல்லாரும் ஆஜர் ஆயாச்சு. கடைசில எட்டு போன் போட்டதுக்கு அப்புறம் ஆடி அசைஞ்சு வந்தான். ‘என்ன சார்! ரெஸ்ட் ரூம்ல ரெஸ்ட் எடுத்துட்டு வரீங்களா?’னு ஒரு சீனியர் கேட்டு மானம் கப்பல் எறினது.
தோஹால வந்து ஒட்டகம் மேய்க்க ஆரம்பிச்ச புதுசுல ஒரு பெரிய ஸ்டார் ஹோட்டல்ல வச்சு ஒரு மீட்டிங். உள்ள நுழைஞ்சா ஒரு வெள்ளக்காரர் பூந்தொட்டில பூ அடுக்கிண்டு இருந்தார். ‘அடேங்கப்பா! பூ அடுக்கர்துக்கே வெள்ளக்காரன வேலைக்கு வச்சுருக்காங்கனா அப்ப இது பெரிய்ய ஹோட்டல்தான் போலருக்கு’னு நினைச்சுண்டேன். ஹோட்டல்ல இருந்த கதவு எல்லாம் கிண்டான் கிண்டானா இருந்தது. நாலு பேர் சேர்ந்து தள்ளினாதான் கதவை சாத்த முடியும். கடைசில ஒரு கான்பரன்ஸ் ரூம்ல எல்லாரையும் உள்ள தள்ளி கதவை சாத்திட்டா. நாங்க இருந்த ரூம்ல மொத்தம் 15 பேர் தான் இருந்தோம். காபி/டிபன் உபசாரங்கள் எல்லாம் முடிஞ்சதுக்கு அப்புறம் வயத்தை கலக்க ஆரம்பிச்சது. பெரிய்ய ஸ்டார் ஹோட்டல்களோட ஸ்பெஷாலிடியே அங்க தரும் டீ/காபி தான். குடிச்சு முடிச்சு பத்து நிமிஷத்துல பர்கோலக்ஸ் மாத்திரை சாப்பிட்ட மாதிரி கலக்க ஆரம்பிக்கும். கல்யாணத்துக்கு மறுநாள் கட்டுச்சாதகூடை அன்னிக்கு காத்தால மாப்பிள்ளையாத்துக்காராளுக்கு குடுக்குர காபி/டீ மாதிரி இருக்கும்.
வராத போனை எடுத்து காதுல வச்சுண்டு ‘ஹலோ ஜார்ஜ் புஷ்ஷா? உங்களை பத்தி தான் பேசிண்டு இருந்தோம்!’னு சொல்லிண்டே மெதுவா வெளில வந்துட்டேன். அவசரம் அவசரமா ஓடிப்போய் ஒரு பிலிபைன்ஸ் பொம்ணாட்டி கிட்ட, ‘வெரி அர்ஜண்ட்! வெரி அர்ஜண்ட்!’னு சொல்லவும் அவள் வேகமா ஒரு மூனு இலக்க போன் நம்பரை தந்தா. ‘ஸ்டார் ஹோட்டல்ல கக்கூஸ் போகர்துக்கு கூட கால் பண்ணி கன்பார்ம் பண்ணிக்கனும் போலருக்கு’னு நினைச்சு நம்பரை வாங்கினா அது ஆம்புலன்ஸ் நம்பராம். ‘அடிப் பாதகத்தி!’னு மனசுக்குள்ள புலம்பிண்டே 'அம்மாடி புண்ணியவதி! நன்னா இருப்பை! ரெச்ட் ரூம் எங்க இருக்கு?னு சொல்லு தாயி!’னு கெஞ்சவும் அவள் நிதானமா ‘ஓஓ! ரெஸ்ட் ரூமா?’னு ராகம் போட்டா. ‘நேரா போய் ரைட்ல திரும்புங்கோ!’னு கையால வழி காட்டினா. ஓட்டமும் நடையுமா அவள் காமிச்ச வழில ஓடிப்போய் பாத்தா அங்க ஒரு மண்ணாங்கட்டியும் இல்லை. மறுபடியும் யூ டேர்ன் போட்டு இன்னொரு ஆள் கிட்ட கேட்டா அவரும் இதே திக்கை பாத்து கையை காமிச்சார். ‘அடப்பாவிகளா! உங்களோட மங்கி கேமுக்கு நான் தான் கிடைச்சேனா?’னு மனசுக்குள்ள நொந்துண்டு மறுபடியும் அங்க போனா அங்க ஒரு கான்பரன்ஸ் ஹாலோட வாசல் தான் இருந்தது.
எவ்ளோ தூரம்!!!!!!!!
தனது முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்கிரமாதித்தன் மாதிரி மறுபடியும் அந்த பிலிபினோ பொம்ணாட்டிகிட்ட போய் பரிதாபமா நின்னேன். இந்த தடவை கையை காட்டாம என் கூடவே வந்து அந்த கான்பரன்ஸ் ஹால் வாசல்ல வந்து ‘இதுதான்டா அசடே!’னு காமிச்சுட்டு போனா.
அந்த ஹோட்டல்காரனை வாய்க்கு வந்தபடி திட்டினேன். ‘கடங்காரன்! என்னதான் உள்ள போய் எல்லாரும் முக்கியமான விஷயம் யோசிக்கரானாலும் கான்பரன்ஸ் ஹாலுக்கும் கக்கூஸுக்கும் ஒரே மாதிரியா கதவை போடுவான்’.அந்த இடம் வேற தொடச்சு வச்ச மாதிரி பளிச்சுனு இருந்தது. வாசல்ல பூரா ஜலமா கொட்டி வச்சு ‘கமகம மணம் கார்டன் பிரஷ்’ஷா இருந்தாதானே நாமளும் கரெக்டா கக்கூஸ்னு கண்டுபிடிக்கமுடியும்! லூசுப்பயலுக!னு சொல்லிண்டே உள்ள போனா அங்க மனசுக்கு இதமான சவுண்ட்ல நம்ப ஊர் கல்யாண வரவேற்பு மாதிரி எதோ ஒரு பாரின் வித்துவான் ஸ்பீக்கர்ல வயலின் வாசிச்சுண்டு இருந்தார். ‘யூரின் போகர இடத்துல பாரின் வித்துவான் இசை ரொம்ப அவசியமா’னு மறுபடியும் திட்ட ஆரம்பிக்காம, ‘போன வேலையை முதல்ல பாப்போம்’னு கதவை திறந்து ஒரு கக்கா ரூமுக்குள்ள போனா அங்க ‘கம கம’னு ஒரே சந்தன செண்ட் வாசனை. மங்கலான வெளிச்சத்துல நாலு மெழுகுவர்த்தி வேற ஏத்தி வச்சுருந்தா. அட லூசுகளா! இது என்ன கக்கூஸா இல்லைனா பர்ஸ்ட் நைட் நடக்கர ரூமா!னு கோபமா வந்தது. ஒரே வேண்டாத வாசனையா இருந்ததால அவசரமா வந்த கக்காவும் கப்சிப்னு ஆயிடுத்து. ‘வெரி பேட் மெயிண்டனஸ் இன் ரெஸ்ட் ரூம் ஏரியா! இன்சைட் டாய்லட் நோ கக்கா மூட் கம்மிங்!’னு சஜஷன் நோட்ல ஆவலாதி எழுதி வச்சுட்டு வந்தேன்.
Labels:
கல்லிடை தோஹா கக்கா
Subscribe to:
Posts (Atom)