1) ‘ஜம்போ’ ஜானகி மாமி
எனக்கு தெரிஞ்ச ஒரு வீரப் பெண்மணி, ஆள் சும்மா 6 அடி ஒசரத்துக்கு இருப்பா,50 வயசுன்னு சொல்லமுடியாத அளவுக்கு சுறுசுறுப்பு. மாமி! சாமி!னு நக்கல் நையாண்டி பண்ணும் விடலை பயலுகலுக்கு எல்லாம் இலவசமா கடவாபல்லை எடுத்து கைல குடுக்கும் சிம்ம சொப்பனம். ஒரு தடவை மாமி ஆத்தங்கரைல குளிச்சுட்டு வந்துண்டு இருக்கும் போது ஒரு திருடன் சைக்கிள்ல வேகமா வந்து மாமியோட கழுத்து செயினை இழுக்க முயற்சி பண்ணினான். இழுக்க வந்த கையை புடிச்சி ஒரு இழு இழுத்து தூக்கி எறிஞ்சுட்டா. அவனுக்கு வலது கைல ப்ராக்சர் ஆகி அதுக்கு அப்புறம் பஜார்ல மாமியை பாத்தா லுங்கியை இறக்கி விட்டு பவ்யமா வணக்கம் சொல்லிண்டு இருக்கான். சித்ரா பெளர்ணமி தேர்ல ஸ்வாமி 2 நாள் ஆகியும் நிலைக்கு போகாம இருந்த போது கோவத்தோட தெருல வந்து “பெருமாள் அங்க நடுத்தெரு நாராயணனா நின்னுண்டு இருக்கார், இங்க எல்லாருக்கும் ‘கோலங்கள்’ கேக்கர்தாடீ”னு சொல்லி அவாத்து வழியா போன கேபிள் ஒயரை அறுத்து எறிஞ்சுட்டா.. மாமி தலைமைல 30 மாமி போய் தேரை இழுக்கவும் பெருமாள் நிலைக்கு வந்துட்டார். “ஓஓ! ஒயரை குரங்கு அறுத்துடுத்து போலருக்கே!! அபிக்கு அப்புறம் என்னடி ஆச்சு?!”னு அடுத்த நாள் கதையவே மாத்திட்டா.
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgKDk8Dzbac-VZv-ixPbJeVZ45cAuhIO0yl39yeNbp_b1rAlCY3f6AYm7ksyw6vc8S9WmHZxHHIdLmifJ2vi4-Q23JaPfK2eeztHqHeAxJoZkbBdUcw9MJGrpVf30uO79bg96qe90dHlHu2/s320/madisaar3.jpg)
2) கோவில் மாமி
மாமிக்கு ஒரே புள்ளைதான், அவனும் சிங்கப்பூர்ல இருக்கான். அவாத்து கல்யாணத்துக்கு எம்.எஸ் அம்மா தம்பதி சமேதரா வந்த போட்டோவை அவாத்துல பாக்கலாம். மாமி எப்போ எந்த கோவில்ல இருப்பானே சொல்லமுடியாது. ஒரு கோவில்ல கூட தீபாராதனையை மிஸ் பண்ணமாட்டா. மாமி எல்லா கோவிலும் போய்ட்டு வரவரைக்கும் அவாத்து மாமா திண்னைல உக்காந்துண்டு போரவரவாளை வம்புக்கு இழுத்துண்டு இருப்பார்( நம்ப RVS அண்ணா மாதிரி). மாமி மூச்சு விட்டாலே எதாவது ஒரு ஸஹஸ்ரனாமமாதான் இருக்கும். “உங்களுக்கு எல்லாம் டேரக்ட் வைகுண்டம் தான் மாமி, ட்ரான்சிட் போய் துபாய்ல கனெக்டிங் ப்ளைட் எல்லாம் பிடிக்க வேண்டாம். ஸ்பெஷல் புஷ்பக விமானம் (புஷ்பேக் சீட்டோட) வந்து கூட்டிண்டு போகும்!”னு நக்கல் அடிச்சா அந்த மாமி வெக்கத்தோட சிரிப்பா. மாமிட்ட உள்ள ஒரே கெட்ட பழக்கம் எல்லாருக்கும் தெரியாத ஒரு ஸஹஸ்ரனாமத்தை சொல்லி மத்த மாமிகளை வாய் பாக்க வெச்சுடுவா. (லேட்டஸ்டா நந்திகேஸ்வர ஸஹஸ்ரனாமம் ஆரம்பிச்சு இருக்கா)
பெங்களூர்லேந்து ஒரு தடவை நான் ஊருக்கு போன போது பெருமாள் கோவில்ல இதே கூத்து நடந்துண்டு இருந்தது. கருட பஞ்சகம் சொல்லிண்டு இருந்த நம்ப மாமியை மத்த மாமிகள் எல்லாம் பரிதாபமா வாயை பாத்துண்டு இருந்தா. நான் மாமிகளுக்கு நடுல போய் உக்காசுண்டு மெதுவா ஒரு 4 ஸ்லோகம் சொன்னேன். மாமிக்கு ஷாக் ஆயிடுத்து, தக்குடு! இது என்ன ஸ்லோகம்? தெரிஞ்ச மாதிரியும் இருக்கு, ஆனா தெரியலையே நேக்கு?னு கேட்டா (பெங்களூர்ல இருக்கும் போதே விஷ்ணு & லலிதா ஸஹஸ்ரனாமத்துல அர்த்தம் மாட்ச் ஆகர மாதிரி ஒரு 20 ஸ்லோகத்தை எடுத்து 50 - 50 ரேஷியோல மிக்ஸ் பண்ணிட்டேன்).
இது வைஷூ ஸஹஸ்ரனாமம் மாமி! உங்களுக்கு தெரியாதா? கர்னாடகால ஒரு பெரிய மஹான் சொல்லிகுடுத்தார். இமயமலைல கொஞ்ச வருஷம் தபஸ் பண்ணினதால வைஷ்ணவியை ‘வைஷூ’னு தான் கூப்டுவார். அம்பாளை அவர் பார்த்த பரவசமான அனுபவத்தை சொல்லி இருக்கார். அம்பாள் பச்சக் கிளி மாதிரி இருந்தாளாம்!னு சொல்லிட்டு மாமியை பாத்தா, மாமி பக்தி பரவசத்தோட, “எனக்கு சொல்லி தரகூடாதா?”னு பிராண்ட ஆரம்பிச்சுட்டா. எல்லாரோடையும் சேர்ந்து ஸ்லோகம் எல்லாம் சொல்லுங்கோ, ஒரு சுபவேளைல சொல்லிதரேன்!னு சொல்லிட்டு எஸ்கேப் ஆயிட்டேன். இப்பவும் ஊருக்கு போன போது, “தக்குடு! அந்த வைஷூ ஸஹஸ்ரனாமம்!”னு மாமி என்னை பிடிச்சுண்டுட்டா. என்னோட ப்ளாக்கை அவா படிக்காத வரைக்கும் ஷேமம்.
3) ‘ஹைப்பர்லிங்க்’ மாமி
இந்த மாமிகிட்ட சர்வ ஜாக்ரதையா இருக்கனும், எதோ ஞாபகத்துல யாரை பத்தியாவது உளறி வெச்சோம்னா, இன்னொரு சமயத்துல கரெக்டா அந்த பார்ட்டிகிட்ட பேசிண்டு இருக்கும் போது பத்தவெச்சுட்டு போயிடுவா. எவ்ளோ கட்டுப்பாட்டோட இருந்தாலும், தன்னையும் அறியாம எதையாவது இந்த மாமிகிட்ட மத்த மாமிகள் உளறி வெச்சுட்டுவா.அதோட பலனை நன்னா அனுபவிக்கவும் செய்வா. சில சமயம் நல்ல விஷயத்துக்கும் ஹைப்பர்லிங்க் குடுக்கர்துனால இந்த மாமியை யாரும் அதிகம் வைய்யமாட்டா. (இந்த மாமியை பத்தி எழுதும் போது எனக்கு TRC மாமா ஞாபகம் வரவே இல்லை..:)
4) சினிமா மாமி
பாலும் பழமும்-ல ஆரம்பிச்சி எந்திரன் வரைக்கும் இந்த மாமி பாக்காத சினிமாவே கிடையாது. படத்தை பாத்துட்டு வந்து குடும்பத்தோட பாக்க போலாமா? பொம்ணாட்டிகள் மட்டும் போலாமா? மாமாக்கள் மட்டும் போலாமா?னு அழகா ரேட்டிங் போட்டு சொல்லிடுவா. தெருல யாராவது சினிமா போகர்தா இருந்தா இந்த மாமிகிட்ட ஒரு வார்த்தை கேட்டுக்காம போகமாட்டா. இந்த மாமி தலைமைல எங்க தெரு வானரப் படை சினிமா பாக்க போனப்பதான் தமிழ் உம்மாச்சி படம் மலையாள உம்மாச்சி படமா மாறி காமெடி ஆயிடுத்து.
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiAuDVk0BYHsnVfBo_8SHx7C3E4rI3iRkKEGmj0pImi185pWwjigPs5T_PswA9XhGw7FRjmx6KKVuoiQPZ1-aJkRFz-61uuRpH10TksOJt-LkOcPtLDK8GaIXjuLYcWAcJS0YboIVoJTgFv/s320/madisaar2.jpg)
5) ‘டேட்டாபேஸ்’ மாமி
ஆரக்கிள் டேட்டாபேஸ் எல்லாம் இந்த மாமி முன்னாடி 50 அடி தள்ளி தான் நிக்கமுடியும். அபாரமான ஞாபகசக்தி, நல்லது ஞாபகம் இருக்கோ இல்லையோ வேண்டாதது எல்லாம் கரெக்டா ஞாபகம் இருக்கும். முப்பது வருஷமா தெருல நடந்த எல்லா விஷயமும் தேதி வாரியா எப்ப கேட்டாலும் 'டாண்' 'டாண்'னு சொல்லுவா. நான் வைக்கோல்போருக்கு பக்கத்துல கொளுத்திட்டு அம்மா கையால வெளக்கமாத்து அடி வாங்கினது, எங்க அண்ணா கடைசியா எழுதின ஹிந்தி பரிட்சை, KTC மாமா! மாமிக்கு தெரியாம ராத்ரி கரகாட்டம் பாத்துட்டு வந்து ஆத்துக்குள்ள போகமுடியாம ராத்ரி முழுசும் வாசல்ல நின்னது, தெரு மாமாக்கள் கல்யாணத்துக்கு முன்னாடி சைட் அடிச்ச பொம்ணாட்டிகளோட விபரம், தெருல யாரு எந்த வருஷம் பாஸ்/பெயில் ஆனா, கல்யாணி மாமியோட நாத்தனாரோட,மச்சினரோட,ஷட்டகரோட பொண்ணுக்கு முதல் குழந்தை பையனா/பொண்ணா? போன தீபாவளிக்கு 'குண்டல' கோமா மாமி எடுத்துண்ட பட்டுப் புடவையோட பார்டர்ல மயில் தலைல கொண்டை இருந்துதா இல்லையா? இந்த மாதிரி எந்த விஷயமும் அந்த மாமிக்கு மறக்காது. தப்பித் தவறி “ஞாபகம் இல்லையே?”னு அந்த மாமி வாய்ல வந்துடுத்துன்னா தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்விடுத்துனு அர்த்தம்.