Friday, October 18, 2024

கல்யாணம் – காதுகுத்து (Part 3)

 கல்யாண மண்டபத்துல எல்லாரும் சாயங்காலம் நலங்குக்கு ரெடி ஆகிண்டு இருந்தா. மாப்பிள்ளையாத்து மாமிகள் " நாளைக்கு காத்தால கட்டுச்சாதக்கூடை வரைக்கும் இவன் நகரமாட்டான் போலருக்கே?"னு மனசுக்குள்ள நினைச்சுண்டு மேலும் கீழுமா பாத்தா. . என்னை மாதிரியே நாலு பேர் ‘ஊர்ல கல்யாணம் மார்ல சந்தனம்’னு மண்டபத்துக்குள்ள லாந்திண்டு இருந்தா. நாங்க ஒருத்தரை ஒருத்தர் பாத்துக்கும்போது ‘அப்பாடா இன்னும் இந்த மாமாவே போலை’னு நானும், ‘கல்லிடைகுறிச்சி அம்பி இன்னும் போகலை’னு அந்த மாமாவும் ஆசுவாசம் ஆகிப்போம். பொண்ணோட அப்பாட்ட பேசிண்டு இருக்கும் போது “உங்காத்துகாராள்டையும் சம்பந்தியாத்துலையும் சொல்லிடுங்கோ எனக்கு சாயங்காலம் ஆறு மணிக்குதான் ரயில் அதுவரைக்கும் காபி டிபன் எல்லாம் முடிஞ்சுதான் போவேனாக்கும்” சிரிச்சுண்டே சொன்னேன். சூடா பஜ்ஜியும், காப்பியும் வாய்ல போட்டுண்டு எல்லார்கிட்டையும் சொல்லிண்டு கிளம்பிட்டேன். முன்னாடி தோஹால இருந்த ஒரு பாலக்காடு மாமியும் அவாளோட பொண்ணும் என்னை பாக்கவந்துட்டு அவாளே ஸ்டேஷன்ல கொண்டு போய்விட்டா. திருச்சிலேந்து வண்டியை பிடிச்சு காத்தால ஆலுவா ஸ்டேஷன்ல போய் இறங்கிட்டேன். மெட்றாஸ்லேந்து என்னோட தங்கமணி, குழந்தைகள், மாமனார் மாமியார் எல்லாரும் அதே ஸ்டேஷனுக்கு வேற வண்டில வந்துட்டா. அடுத்த மூனு நாள் ‘என்ட பாஷை மலையாளம், என்ட சிஎம் பினராயி, என்ட ஹீரோயின் ஹனிரோஸ்’னு சொல்லிண்டு சுத்தி வந்தோம். நேரா வாமனமூர்த்தி கோவிலுக்கு போயிட்டு அடுத்து சோட்டானிக்கரா பகவதி கோவிலுக்கு போனோம். அடாடாடா! கேரளா கேரளா தான்! அம்பாள் என்னமா இருக்கா( நான் உள்ள இருந்த அம்பாளை சொன்னேன்). ஒரு முருகன் கோவிலுக்கும் போயிட்டு, டிபனை முடிச்சுட்டு நேரா பெரும்பாவூர் ரிசார்டுக்கு போயிட்டோம். பெரியாறு நதியோட தொட்டடுத்த கரைல ரிசார்ட் இருக்கு. நாங்க தங்கின ரிசார்ட் ஒரு ஆயுர்வேதா ரிசார்ட். வல்லாரை கீரை, பொன்னாங்கன்னி சட்னி, கொப்பு / கொழை இந்த மாதிரிதான் அவாளோட மெனு. முக்கியமா எதுலையும் தாளிப்பும் கிடையாது காரமும் கிடையாது. இதை மொதல்லயே சொல்லியிருந்தா மகராசியை பெத்த ரெண்டு பேரும் வந்தே இருக்கமாட்டா. மொளகாயையும் உப்பையும் சேர்ந்து அரைச்சு குடுத்தா 'கொஞ்சம் காரமும் உப்பும் கம்மியா இருக்கு’ சொல்லுவார் எங்க மாமனார். மாமியாருக்கு உடம்புலதான் சுகர் மனசு குழந்தை மாதிரி, அதனால ஸ்வீட்னு பேப்பர்ல எழுதிக்குடுத்தா கூட சந்தோஷமா சாப்பிடுவா. ‘மத்யான சாப்பாட்டுக்கு என்ன சொல்லியிருக்கேள்’னு எங்க மாமானார் ஆரம்பிச்சார். ‘கப்பகிளங்கும் கஞ்சியும் தருவா!’னு சொன்னேன். அவர்கிட்டேந்து ஒரு பதிலும் வரலை. நல்லவேளை மத்தியான சாப்பாட்டுக்கு காய்கறிகூட்டுசாம்பார் எல்லாம் பண்ணி வச்சுருந்தா. சாயங்காலம் டீயை குடுச்சுட்டு நாலு மணிக்கு ரூம்லேந்து கீழ வந்துடுக்கோனு எங்க மாமானார்கிட்ட சொன்னேன். என்ன சமாசாரம் என்ன சமாசாரம்னு கேட்டார். சாயங்காலம் உங்களுக்கு ஆயில் மசாஜ் பண்ணர்துக்கு ரெண்டு ஓமனகுட்டி வரபோரானு சொன்னேன். சாயங்காலம் மூனு மணிக்கே கீழ வந்து காத்துண்டு இருந்தார். மசாஜ் ரூமுக்கு போய் ஒரு மணிநேரத்துக்கு அப்புறமும் ஆளை காணும். பத்து நிமிஷம் கழிச்சு வேஷ்டியை கஷ்கத்துல வச்சுண்டு மெதுவா வெளில வந்தார். ‘மலையாளத்து மசாஜ்ல உங்கப்பாவே கொஞ்சம் வெளுத்தமாதிரி இருக்காரேடீ’னு தங்கமணிகிட்ட சொன்னதை அவள் காதுல வாங்கலை. அம்மாவும் பொண்ணும் ‘என்ன பண்ணினாஎன்ன பண்ணினா?’னு ஆர்வமா கேட்டா. ‘ஒருமணி நேரம் பின்னிபெடலெடுத்துட்டா!’னு ஆரம்பிச்சார். ‘பின்னிபெடல் எடுக்கர்துக்கு எங்க மாமியாரே போதுமே இவா என்ன பண்ணினா?’னு நான் கேட்டேன்.

 



கொஞ்சம் ஏமாற்றமா முகத்தை வச்சுண்டு ‘ஓமணகுட்டி வருவானு சொன்னேளே! கலாபவன் மணி மாதிரி ஒரு மலையாளத்தான் தான் வந்தான்’னு மாமா ரொம்ப வருத்தப்பட்டார். ‘ஷஷ்டியப்த பூர்த்தி ஆனவாளுக்கு ஓமனக்குட்டன் தான் அனுப்புவாளாம். இப்பதான் ரிசார்ட் மேனேஜர் சொன்னார். நான் மசாஜ் பண்ணிக்கர்தா இருந்தா ஓமனக்குட்டிதான் வருவானு சொல்லிமுடிக்கர்துக்குள்ள ‘ஓமணக்குட்டியும் வேண்டாம் ஆனைகுட்டியும் வேண்டாம் பேசாம இருங்கோ’னு தங்கமணி பாய்ஞ்சுண்டு வந்துட்டா. கண்ணுக்கு எட்டின தூரம் வரைக்கும் கரைபுரண்டு ஓடும் நதியும் அந்த பக்கம் காடு மாதிரியான நதியோட இன்னொரு கரை. ரொம்ப ஏகாந்தமான சுற்றுப்புறம். காத்தால சீக்கரமே கிளம்பி காலடிக்கு போனோம் அங்கேந்து வண்டி நேரா திரிச்சூருக்கு போச்சு. திரிச்சூர்ல பூரம் உத்ஸவம் நடக்கும் வடக்கு நாதர் கோவிலுக்கு போய் தரிசனம் பண்ணினோம் அதுக்கு அப்புறமா வரவழில ராவணன் படத்துல ஐஸ்குட்டி ஒரு அருவிலேந்து கீழ விழற மாதிரி மணி சூட்டிங் பண்ணின அதிரப்பள்ளி வாட்டர்பால்ஸுக்கு போனோம். ஜலபிரவாகம் அற்புதமா இருந்தது. அதை முடிச்சுட்டு திரும்பி ரிசார்ட்டுக்கு வந்துட்டோம். அடுத்த நாள் ஊருக்கு கிளம்பர வரைக்கும் வேற எங்கையும் போகலை. காத்தால கிளம்பி அங்கமாலி ஸ்டேஷன்லேந்து எர்ணாகுளம் போயி திருவனந்தபுரத்துக்கு போகும் வந்தே பாரத் ரயிலை புடிச்சேன். தங்கமணி குரூப் கொச்சிலெந்து ப்ளைட்டை புடிச்சு மெட்ராஸ் போயிட்டா. வந்தே பாரத்துல பக்கத்து சீட்ல திருச்சூர் குத்துவிளக்கு மாதிரி ஒரு பொண்ணு. நல்லவேளை தங்கமணி இருந்தா என்னை அடுத்த கம்பார்ட்மண்டுக்கே இடம்மாத்தியிருப்பா. மூனு மணினேரத்துல அனந்தனோட ஊர் வந்துருத்து. திருவனந்தபுரத்துல எங்க தெருக்காரா ஒருத்தர் இருக்கா. ரொம்ப வருஷமா அவாத்துக்கு வரேன் வரேன்னு சொல்லிண்டு இருந்தேன். அவாத்துக்கு போயிட்டு ஒரு மணி நேரம் தெருக் கதை சம்சாரிச்சுட்டு சாயங்காலம் கோவிலுக்கு கிளம்பியாச்சு. நாங்க போன நேரம் சாயரக்ஷை தீபாராதனை நடந்தது. அனந்தசயனத்தை ஆனந்தமா தரிசனம் பண்ணிட்டு நேரா ஆட்டுங்கால் பகவதியம்மன் கோவிலுக்கும் போயிட்டு வந்தோம். அடுத்த நாள் காத்தால ஆஹாரம் பண்ணிட்டு நாகர்கோவில் வண்டியை பிடிச்சி கல்லிடை வந்து சேர்ந்தாச்சு. அடுத்த நாளில் இருந்து சதுர்த்தி உத்ஸவம் தொடங்கியாச்சு.

 



கிட்டத்தட்ட அஞ்சு வருஷமா சதுர்த்தி உத்ஸவத்துக்கு வரர்தே இல்லை. அத்வைதாவோட ஸ்கூல்ஆபிஸ் லீவுனு தட்டிப்போயிண்டே இருந்தது. இந்த வருஷம் திரும்ப கிடைச்சது. சின்னக்குழந்தையிலிருந்தே எனக்கு காது குத்தலை. அதனாலையோ என்னவோ தங்கமணி அடிக்கடி என்னக்கு காது குத்திடரா. அதனால இந்த தடவை அம்பாசமுத்ரத்துல இருக்கும் பாலு ஜுவல்லர்ஸ் கடைக்கு போய் ஆசாரி கையால நாரத்தை முள்ளு வச்சு காது குத்தி கடுக்கண் போட்டுண்டேன் (கல்யாணத்துல தொடங்கி காதுகுத்துக்கு வந்தாச்சா) . ரெண்டு மூனு மாசம் முன்னாடி ஊர்ல முக்கியமான ரெண்டு மாமி திடுதிப்புனு வைகுண்ட லோகம் போயிட்டா. ரெண்டு பேரும் எனக்கு ரொம்ப ஸ்னேகமானவா. ஒருத்தருக்கு எழுபது வயசுக்கு பக்கம்.. பேசினா ரெண்டு கிலோமீட்டருக்கு கேக்கும். அடுத்த வாரம் வரவேண்டிய சண்டையை இந்தவாரமே இழுத்துண்டு வந்துடுவா! தன்னுடைய கடைசி மூச்சு வரைக்கும் பாடுபட்டு சமையலில் உழைச்ச அசாத்தியமான ஒருத்தி. ‘எவனை நம்பியும் நான் கிடையாது’னு அடிக்கடி சொல்லுவா. ஊருக்கு நான் எப்ப போனாலும் ராத்ரி எங்காத்து திண்னைல வந்து உக்காந்துண்டு ‘நீயே பாவம் காத்தாட உக்கந்துண்டு இருக்கை! நான் வேற சிரமபடுத்தறேன்’னு சொல்லிண்டே எங்கிட்ட அரைமணி நேரம் பொலம்பித் தள்ளுவா பாவம்! நானும் கண்னை மூடிண்டே ‘ம்’ கொட்டுவேன்.இந்த வருஷம் அவா இல்லாம அந்த வட்டாரமே அமைதியாவெறிச்சோடி இருந்தது. இன்னொரு மாமி என்னோட ஸ்னேகிதனோட அம்மா. சின்னக் குழந்தைலேந்து தெரியும். பேசர்தே வெளில கேக்காது.கடைசி ஐஞ்சு வருஷமா காதும் கொஞ்சம் கேக்கலை ஆனா ஒன்னும் ஆகாத மாதிரியே முகத்தை வச்சுண்டு சமாளிப்பா. அரிசி அப்பளாம் வாங்க அவாத்துக்கு போனா ‘சமாசாரம் தெரியுமா?சமாசாரம் தெரியுமா?’னு குழந்தை மாதிரி கேட்டுண்டு அரைமணி நேரம் எங்கிட்ட எல்லா கதையும் பேசிட்டு ‘எதுக்கு வந்தைடாஅதுவே மறந்து போச்சு பாரு’னு சொல்லுவா. அவா சொல்லர்து எல்லாத்தையும் கேட்டுட்டு நானும் சில சமாசாரத்தை சொல்லிட்டு அரிசி அப்பளாத்தை வாங்கிண்டு வருவேன். இந்த வருஷம் அப்பளாம் வாங்கவே மனசு இல்லை. கழுத்துகை நிறையா நகை போட்டுண்டு சக்கப்பழமா உக்காந்துண்டு குழந்தை மாதிரி சிரிப்பா. இப்ப அவாத்து திண்னைல மண்ணும் புழுதியுமா பாக்கவே மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருந்தது. ஒரு ஊர் அப்பிடிங்கர்து வெறும் தெருவும்வீதியும் மட்டும் கிடையாது. திண்னைஅரசமரம்கோவில்நதி,வயல்,ஊர் மாந்தர்கள்திருவிழாசுகம்துக்கம்னு எல்லாம் சேர்ந்த கலவை. நகரத்துல உள்ளவாளுக்கு இது சுலபமா புரியாது. சரி விடுங்கோ நானும் புலம்ப ஆரம்பிச்சுட்டேன். பத்து நாள் உத்ஸவமும் நன்னா கழிஞ்சது. அடுத்த நாளே வந்தேபாரத்துல மெட்ராஸ் வந்துட்டு குடும்பம் குட்டியோட தோஹா வந்தாச்சு.