Thursday, August 9, 2012

கிருஷ்ணா ஹை!!

‘ராதிகா மாமி உங்காத்துல இந்த வருஷம் அப்பமா அதிர்சமா? ‘

‘இந்த அவல்காரி முன்னபின்ன போகவிடாதைக்கி வாங்கினாதான் ஆச்சு!னு மல்லுக்கு நிப்பா ஆனா சமயத்துக்கு தேடும் போது எங்கையாவது ஒழிஞ்சுபோயிடுவா!’

‘இந்தாங்கோ!அம்பாசமுத்திரம் பூக்கடை பஜார்ல யாரோ ஒரு பிரம்மதேசம் தாத்தா நவாப்பழம் வச்சுண்டு இருக்காராம்! வரும் போது மறக்காம வாங்கிண்டு வாங்கோ!’


கல்லிடைல இந்த சம்பாஷனைகள் எல்லாம் கேட்க ஆரம்பிச்சாச்சுனா கிருஷ்ண ஜெயந்திக்கு இன்னும் ஒரு நாள் தான் இருக்குனு அர்த்தம். தெருவே ஜே ஜேனு இருக்கும். யாரோட ஆத்தை தாண்டினாலும் எண்ணைபுகை வாசனை கமகமக்கும். நல்ல நாள்லயே இந்தாத்து கன்யா கோலமும் எதிர்த்தாத்து கன்யா கோலமும் அகண்டு விரிஞ்சு கோலத்தோட இதழ் எங்க போடர்துன்னு தெரியாம ரெண்டாத்து மாமிகளும் சண்டை போட்டுப்பா கிருஷ்ண ஜெயந்தி அன்னிக்கு கேக்கவே வேண்டாம். எங்களோட வானரப்படைகள் கிருஷ்ண ஜெயந்தி வியாழக்கிழமையோ இல்லைனா திங்கட்கிழமையோ வந்தாக்க சந்தோஷமா பெருமாள் கோவில்ல எக்ஸ்ட்ராவா நாலு வெளி ப்ரதக்ஷிணம் பண்ணுவோம். தொடர்ந்து மூனு நாள் லீவு கிடைக்குமே! (எங்க கவலை எங்களுக்கு).

எல்லா தெருலையும் பிசியா தான் இருப்பா ஆனா இந்த சன்னதி தெரு மாமா/மாமிகளை கைலயே பிடிக்க முடியாது. என்னவோ நாலு ஜென்மாவுக்கு முன்னாடி அவாதான் கோகுலத்துல கோபிகாஸ்த்ரீகளா பொறந்து கண்ணன் கூடையே வளர்ந்த மாதிரி பயங்கரமா பிசுக்காரம் பண்ணிப்பா. நல்ல நாள்லையே அந்த தெருல இருக்கும் மாமாக்களுக்கெல்லாம் புண்டம் பெருங்காயம் தான் இதுல கிருஷ்ண ஜெயந்தி வைகுண்ட ஏகாதசில்லாம் வந்தாக்க ஒருவாய் காபி கூட கிடைக்காது. காத்தால ஆரம்பிச்சு ராத்ரி வரை குறைஞ்சது நாலு தடவையாவது வாசலை பெருக்கி பெருக்கி கோலம் போட்டுண்டு இருப்பா ‘பெருமாளுக்கு அவல்தான் பிரியம்! திரட்டிப்பால் இல்லதைக்கி என்னடி கிருஷ்ண ஜெயந்தி!’னு மாமிகள் பில்டப்பு பலமா இருக்கும்.



புவன சுந்தரன்!


நல்ல சுகமா தூங்கிண்டு இருக்கரவாளை அரக்கபறக்க எழுப்பிவிட்டு அவா வாயால திட்டு வாங்கர்து ஒரு தனிசுகம் தெரியுமோ! கிருஷ்ண ஜெயந்தி அன்னிக்கி மத்தியானம் & முந்தின நாள் மத்தியானம் 3 மணி வாக்குல தெருல கிழக்கையும் மேற்கையும் ரெண்டு வானரம் ஒரே சமயத்துல ‘நவாஆஆஆஆப் பழம்!’னு நன்னா சத்தமா பழக்காரர் குரல்ல கத்திட்டு எங்கையாவது மறைஞ்சு நின்னுண்டு பாப்போம். முக்கால்வாசி ஆத்து கதவு படார் படார்னு திறக்கும். வந்து வெளில ரெண்டுபக்கமும் பாத்துட்டு “கொழுப்பெடுத்த குரங்குகள்! நிம்மதியா ரெண்டு நிமிஷம் கண் அசரவிடர்துகளா! நவாப்பழம்! கொய்யாப்பழம்னு ஏமாத்திண்டு அழையர்துகள்! பகவான் நன்னா குடுப்பார்!”னு ஐயங்கார் மாமி ‘பல்லாண்டு’ பாடிட்டு போவா. ரெண்டு நிமிஷம் கழிச்சு நெஜமாவே பழக்காரன் வந்து கத்தும் போதும் திட்டி நொருக்கிண்டு மாமிகள் வாசால்ல வந்து அசடு வழிஞ்சுண்டு நிப்பா.

எல்லாரும் பால் ஆடை எடுத்து வெண்ணை குலுக்கர்தை பாத்துட்டு கோபால் பால் வாங்கர தெலுங்கு மாமியும் வெண்ணை குலுக்க முயற்சி பண்ணுவா. ‘கோபால் பால்ல மோர் வந்தாலே பெரிய காரியம் இதுல எங்கேந்து வெண்ணெய் வரப்போகர்து!’னு எல்லாரும் நமட்டு சிரிப்பு சிரிப்பா.


கிருஷ்ணர் வரார்!

சாயங்காலம் நாலு மணிலேந்தே மாக்கோலம் போடர படலம் ஆரம்பம் ஆகும். எல்லாருக்கும் இந்த கிருஷ்ணர் பாதம் போட வராது. ஒவ்வொரு ஆத்துலையும் கிருஷ்ணர் பாதம் படாதபாடு படும். சில மாமிகளுக்கு கிருஷ்ணர் பாதம் குட்டியா அழகா வரைய வரும் சில பேருக்கு பெரிசா வரும். ‘எங்காத்து மாமிக்கு கை கொஞ்சம் தாராளம்!’னு அவாத்து மாமாவும் சமாளிக்க பாப்பார். நாங்க விடாம அவாத்து திண்ணைல உக்காசுண்டு “இவாத்துக்கு மட்டும் கடோத்கஜன் வந்துட்டு போயிருக்கார் போலருக்கு டா!”னு நக்கல் அடிச்சு கூட கொஞ்சம் வெறுப்பேத்துவோம். சில அக்காக்களுக்கு ஆத்துக்குள்ள நேரா பாதம் வரையவராது கோணலும் மானலுமா போட்டு இருப்பா. அதை பாத்துட்டு எங்க தெரு தண்ணிவண்டி மாமா சிலபேர் சுவாமியும் கொஞ்சமா போட்டு வந்துருப்பர்னுதான் தோனர்து! நடையே சரியில்லையே ஓய்ய்!னு கமண்ட் அடிச்சுண்டு போவா.

பொண்கொழந்தேள் எல்லாரும் பட்டுப்பாவடை/ நெத்திச்சுட்டி சகிதமா கோவிலுக்கு எண்ணை பிரிச்சுண்டு வர வீடுவீடா பாடிண்டு வருவா. அகரம் கோமு மாமி சொப்புசாமான்ல இருக்கும் சின்ன ஸ்பூனால 4 ஸ்பூன் எண்ணை விடர்துக்கு முழு பாட்டையும் பாடுங்கோ டி!னு ப்ராணனை வாங்குவா.

“எண்ண பெத்தா எண்ணை! இல்லாட்டி தொன்னை!
ஆச்சி பெத்தா ஆச்சி! இல்லாட்டி பூச்சி!
அவலடிக்கர பொரி பொறிக்கர அத்தைய கண்ட டஷ்ஷ்! பாட்டிய கண்டா புஷ்ஷ்!
யானைக்காரன் பொண்டாட்டி ஆட்டுக்குட்டிய பெத்தாளாம் ஐயோ ஐயோனு சொன்னாளாம் அடுப்புல தூக்கி போட்டாளாம்!”னு அது ஒரு காமெடியான பாட்டு.

குட்டி குட்டி குழந்தைகள் எல்லாருக்கும் கிருஷ்ணர் மாதிரி ராதா மாதிரி எல்லாம் வேஷம் போட்டு, கைல பித்தளை ஓமக்குழலை குடுத்து எல்லா ஆத்துக்கும் வந்து பக்ஷணம் வாங்கிக்க அனுப்புவா. சிலபேர் வேஷம் போட தெரியாம போட்டு ஒரு வண்டி லிப்ஸ்டிக்/கண் மை எல்லாம் போட்டு விட்டு ராதைகள் சில சமயம் பாக்கர்துக்கு பூதனை மாதிரி ஆகக்கூடிய வாய்ப்புகளும் ஏராளம்.

பக்ஷணத்துல தேங்காய் சீடை ரொம்ப அபாயகரமானது. ஒழுங்கா மாவை சலிச்சு சரியான அளவு ஜலம் விட்டு உருட்டலைனா டமால் டுமீல்!னு எண்ணைசட்டில வெடிக்க ஆரம்பிச்சுடும். அதிர்சத்துக்கும் பாகு ஒழுங்கா செலுத்தலைனா கலைஞ்சு கலைஞ்சு போகும். அப்புறம் மிச்சம் இருக்கும் மாவை வச்சு சர்க்கரை தோசைதான் வார்க்கனும். எங்க தெருல ஒரு மாமாவாத்துல மாமாதான் மாமி. அவர்தான் எல்லா ஜோலியும் பாப்பார். மாமி ஸ்கூல் டீச்சர். ரெண்டு மூனு மாமிகள் கிட்ட ஆலோசனை கேட்டு அந்த மாமாவும் பக்ஷணம் பண்ணர்துக்கு முயற்சி பண்ணுவார். அவருக்கு தட்டை / தேங்குழலே டமால் டுமீல்னு வெடிக்கும். புலிகேசி மாதிரி ஒரு கைல இட்லி மூடியை வச்சுண்டு தெளிக்கர எண்ணையை தடுத்துப்பார். நிலைமை கட்டுப்பாட்டை மீறி போகும் போது அடுப்பை அணைச்சுட்டு மிச்சம் இருக்கும் மாவை எல்லாம் ப்ரிட்ஃஜுக்குள்ள வச்சுடுவார். "அவாத்துல இருக்கர்து ப்ரிட்ஃஜ்ஜா இல்லைனா பிரசவ ஆஸ்பத்திரி இங்குபேட்டர் மெஷினா? அரைபக்குவமா உள்ளதை ப்ரிட்ஃஜுக்குள்ள வச்சா சரியாயிடுமா!"னு சாயங்காலம் எல்லாரும் பேசிப்பா..


கிருஷ்ண ஜெயந்தினு சொன்ன உடனே இவ்வளவு சமாசாரம் ஞாபகத்துக்கு வருது. ஹும்ம்ம்ம்ம்! அது ஒரு அழகிய நிலா காலம்னு பாடி மனசை தேத்திக்க வேண்டியதுதான்.
..................................................................................

குறிப்பு - அடுத்த வாரம் இந்தியா வந்து ஒரு மாசம் சென்னை, பெண்களூர் & கல்லிடைல டேரா அடிக்கர திட்டம் இருக்கு. யாரெல்லாம் முடியர்தோ அவா கூட எல்லாம் பேசர்துக்கு/பாக்கர்துக்கு முயற்சி பண்ணறேன் நீங்களும் கொஞ்சம் பிரயத்தனம் பண்ணுங்கோ. ஓசில வாய்க்கு ருசியான அருமையான சாப்பாடு போடரவாளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.


கோலம் பட உதவி - http://craftandarts.blogspot.com