Sunday, November 11, 2012

தீவாளி

தீவாளி! ஆமாம், எங்க ஊர்ல நாங்க இப்படிதான் சொல்லுவோம். தீவாளி!னு சொன்னாலே படபடக்கும் மத்தாப்பூ,சங்குஜக்கா,புஸ்வானம்,அம்பாசமுத்திரம் அத்திம்பேர் கையால பண்ணும் அல்வா,இஞ்சி லேகியம்,புது பேன்ட்&சட்டைனு ஒரு பெரிய லிஸ்டே மனசுல வந்து மறையர்து. பள்ளிக்கூடத்துலையும் வாய்க்கால் மண்டபதுலையும் தீவாளி கவுண்டவுண் ஒரு மாசம் முன்னாடியே ஆரம்பம் ஆயிடும். 'எல! இந்த வருஷமாவது உங்கப்பா உனக்கு பாண்ட் வாங்கிதருவாரா இல்லைனா வழக்கம் போல ஜேம்ஸ்’பாண்ட்’ தானா?'னு ஒருத்தரை ஒருத்தர் கேலியும் கிண்டலும் பண்ணிண்டு இருப்போம். எல்லாருமே துணியெடுக்க திருனவேலி ஆரெம்கேவி-க்கு தான் போவா. ரெடிமேட்ல எடுக்கரவா போத்தீஸ் போவா. திருனவேலிக்காரா இந்த ரெண்டு கடையை தவிர மத்த கடையை மதிக்கவே மாட்டா. கல்யாணத்துக்கு ஜவுளி எடுத்து குடுக்கர்தா இருந்தா கூட ஆரெம்கேவியோட லேபில் கிழிக்காம அதே கவர்ல போட்டு குடுத்தாதான் அதை திறந்தே பாப்பா. தீவாளிக்கு ஆரெம்கேவி-லையும் போத்தீஸ்-லையும் ஜவுளி எடுத்தவா சாயங்காலம் திண்னைல உக்காச்சுண்டு பண்ணும் அக்கப்போரு தாங்க முடியாது. “போத்திஸ்ல டிசைனா ஓய் வச்சுருக்கான்! எப்பிடிதான் அங்க போய் எடுத்துண்டு வரேரோ! உமக்குதான் மண்டைல மசாலா இல்லைனா உம்மாத்து மாமியாவது சொல்லவேண்டாமா ஓய்! ஆரெம்கேவி புடவையை அப்பிடி மடிச்சு இடுப்புல கட்டினா அது ஒரு தனி அழகு ஓய்ய்!”னு KTC மாமா பஞ்சாயத்தை ஆரம்பிப்பார்.

போத்தீஸ்ல ஜவுளி எடுத்த முடுக்கு மூச்சா மாமா “எங்களுக்கு அங்க தான் ஓய் சரியா வரும் நீர் ஒம்ம ஜோலி @#ரை பாத்துண்டு போம் ஓய்!”னு வன்முறைல இறங்கிடுவார். ரெண்டு கோஷ்டியும் திருனவேலியும் தஞ்சாவூரும் மாதிரி உறுமிண்டே தான் இருப்பா. பொதுவா பட்டுப்புடவை & டிசைனர் புடவைக்கு ஆரெம்கேவியும் ரெடிமேட் டிரெஸ் & குழந்தேள் வகையறாவுக்கு போத்திஸும் நன்னா இருக்கும்! இதுல சண்டை போட என்ன இருக்கு?னு ஒரு மாமி விஜய் டிவி ‘நீயா நானா’ கோபினாத் மாதிரி மத்யமாவதில தீர்ப்பு சொல்லி சமாதானத்தை உண்டுபண்ணுவா. எல்லா ஆத்துலையும் துணி எடுத்துண்டு வந்து டைலர்கிட்ட தைக்க குடுப்பா. எந்த டைலர்கிட்ட தைக்க குடுக்கர்துனு அடுத்த பஞ்சாயத்து ஆரம்பம் ஆகும். எங்க ஊர்ல பொதுவா இந்த விவகாரங்கள் எல்லாம் பொம்ணாட்டிகளோட துறைக்கு கீழ வரர்தால பசங்க எல்லாம் ரொம்பவே கஷ்டப்படுவோம். தீவாளி சமயம் எல்லா டைலருமே ரொம்ப பிசியா இருப்பா. உள்பாவாடைக்கு உள்பக்கமா ‘டக்’கு அடிச்சு குடுக்கர டைலர், தலையாணி உறைக்கு ரெட்டை தையல் போடர டைலர்னு யார்கிட்ட போனாலும் டீ-ல விழிந்த ஈ தெரியாம குடிச்சுட்டு தீயா வேலை பாத்துண்டு இருப்பா.

ஊர்ல இருக்கும் மூனு டைலர்ல யாராவது ஒருத்தர் எதோ ஒரு வகைல ஆஸ்தான வித்வானா இருப்பார். அவர் கைல நம்பளோட பான்ட் துணியும் சட்டை துணியும் போய் மாட்டும். திருச்செந்தூர் முருகன் படம் இல்லைனா வடக்குவாச்செல்வி அம்மன் படம், அரளி பூ கதம்பமாலை, அதோட சர்வோதயா ஊதுபத்தி மணக்க நெத்தி நிறைய சந்தனம் & குங்குமம் இட்டுண்டு பக்தி பழமா ஜொலிக்கக்கூடிய டைலர் நம்மோட கஷ்கத்துலையும் இடுப்புலையும் கிச்சு கிச்சு மூட்டர மாதிரி இன்ச்டேப்பை வச்சு அளவு எடுக்கர்துக்குள்ள ‘சலங்கைஒலி’ கமலஹாசன் கிணத்து குழாய்ல ஆடின மாதிரி ஆட விட்டுருவார். எங்க கோஷ்டி ஆட்கள் பாக்கர்துக்கு ‘முந்தானை முடிச்சு’ தவக்களை மாதிரி இருந்தாலும் ‘காதலன் படத்துல வரும் பிரபுதேவா மாதிரி பேக்கீஸ் பான்ட் தைச்சுகுடுங்க அண்ணே!’னு டைலர் கிட்ட லஜ்ஜையே இல்லாம கேப்பாங்க. “வளர்ர பையன் அதனால நல்ல தொளதொளனே தைச்சுடுங்கோ டைலர்!”னு நிலைமை புரியாம அம்மா சொல்லிண்டு இருப்பா. ‘நீங்க ஒன்னும் கவலையே படாதீங்கம்மா! உள்பக்கமா ஒரு வரிபிடிச்சு விட்டுருதேன் ஆறுமாசம் கழிச்சு புடிக்கர மாதிரி இருந்தா அந்த தையலை பிரிச்சுவிட்டா லூசாயிடும்!னு அவர் ஜாக்கெட் தைச்சதுல கத்துண்ட தொழில் நுணுக்கத்தை எல்லாம் நம்ப பான்ட் சட்டைல பிரயோகபடுத்தபோகர்தை சொல்லி நமக்கு பீதியை கிளப்புவார்.

தீவாளிக்கு ரெண்டு நாள் முன்னாடி ஒரு சுபயோக சுபதினத்தில் ஒவ்வொரு வானரமா போய் குலேபகாலி எம்ஜிஆர் ஸ்டைல இருக்கும் டிராயர் / பான்ட்டை வாங்கிண்டு மூஞ்சியை தொங்க போட்டுண்டு வருவா. ஒரு தடவை போஸ்டாபிஸ் ஹரிக்கு ரொம்ப கோவம் வந்து “பெல்ட்போடர பட்டிக்கு பதிலா ஒரு பாவாடை நாடாவையே கோர்த்து தந்தா செளகர்யமா இருக்கும்!”னு டைலர் கிட்ட கத்திட்டு வந்துட்டான். எனக்கு தைச்ச ஒரு பாண்ட் ரொம்ப பிரமாதமா தைச்சு இருந்தார் ஆனா திருஷ்டி விழுந்த மாதிரி ஒரு காரியம் பண்ணி வச்சுருந்தார். பான்ட் பிட்ல அந்த துணியோட கம்பெனிபேரு, ஊரு இத்யாதிகள் சகிதமா ஒரு விபரம் பிரிண்ட் ஆகி இருக்கும். அந்த பாகத்தை வேஸ்ட் பண்ணாம ஜிப் போடர இடத்துக்கு நேர வரமாதிரி தைச்சுவச்சுட்டார். ‘ஸ்பெஷல் குவாலிட்டி’னு பெரிய எழுத்துல எக்ஸ்ட்ரா பிட்டுவேர இதுல. அந்த பாண்டை ஒரு தடவை கூட இன்செட் பண்ணி போடாம சட்டையை இழுத்துவிட்டு அட்ஜெஸ்ட் பண்ணும்படியா ஆயிடுத்து.



இங்க இருக்கும் மாரிமுத்து,முத்துப்பாண்டி டைலர்களோட சித்தப்பா பெரிப்பாதான் அங்க ஸ்டூடன்ட், ஸ்டைல், ஃபிரண்ட்ஸ்னு பேர் மாத்தி கடை வச்சுருக்கானு தெரியாம எங்க அண்ணன் நான் சொல்ல சொல்ல கேக்காம பக்கத்து ஊரான அம்பைல எதோ ஒரு டைலர் ப்ரமாதமா தைக்கரார்னு அங்க இருக்கும் ஒரு உடன்பிறப்பு சொன்னதை நம்பி ஏமாந்து அங்க போனான். அங்க இருக்கும் கடைல முருகன் படத்துக்கு சீரியல் லைட்டும் சைக்கிள் பிராண்டு அகர்பத்தியும் கொளுத்தி வச்சுருந்ததால குலேபகவாலிக்கு கூட இருபது ரூபாய் தண்டமழுதது தான் மிச்சம்.. தீவாளி அன்னிக்கு காத்தால புதுதுணியை போட்டுண்டு பெரிய கும்பலா திண்ணைல உக்காசுண்டு வேடிக்கை பாத்துண்டு நின்ன சுகம் கிடைக்கவே கிடைக்காது. ஹேப்பி தீவாளி! ஹேப்பி தீவாளி!னு பால்காரர்கிட்ட ஆரம்பிச்சு காய்கறிகாரர் வரைக்கும் எல்லார் கிட்டையும் சொல்லுவோம். எட்டு மணி தருவாய்ல பிள்ளையார் கோவிலுக்கு வரமாதிரி வந்துட்டு மாமிகள் எல்லாம் ஒருதரோட புடவை தலைப்பை இன்னொருத்தர் பிடிச்சு பாத்துண்டு(பீத்திண்டு)இருப்பா. ‘இந்த தடவை சிம்பிளா போதும்னு எங்காத்து மாமாட்ட எவ்வளவோ சொல்லியும் கேக்காம 8000 ரூபாய்க்கு இந்தபுடவையை எடுத்துண்டு வந்துட்டார்!’னு ‘பாங்க்’ கோமா மாமி நீட்டிமுழக்கிண்டு இருப்பா.

டோங்கா கிண்ணத்துல ஸ்வீட், மிக்சர், ஒக்காரை மாதிரியான வஸ்துக்கள் பக்கத்தாத்துக்கு அனுப்பிவிடும் படலம் ஒரு பக்கம் மும்முரமா நடந்துண்டு இருக்கும். பக்கத்தாத்துல குடுத்த இஞ்சி லேகியத்தை அல்வானு நினைச்சு மொத்தமா வாய்ல போட்டுண்டு கார்க் புடிங்கிண்டு போன மாமா “அந்தமாமி பண்ணினதை மட்டும் ஈ!னு பல்லை இளிச்சுண்டு வாய்ல போட்டுண்டுருவேளே!”னு அவாத்து மாமியிடம் பரேட் வாங்கிண்டு இருப்பார். போனவாரம் யாரோ ஒரு மாமா போன் பண்ணி ‘தக்குடு உனக்கு இந்த வருஷம் தலதீபாவளி இல்லையோ?’னு கேட்டார். ‘அதையேன் கேக்கறெள் மாமா! போன டிசம்பர்ல ஆரம்பிச்சு இந்த டிசம்பர் ஒன்னு வரைக்கும் தல அமாவாசை, தல பெளர்ணமி, தல வெள்ளிக்கிழமைனு எல்லாமே தல தான்!னு சொல்லியிருக்கேன்’. அனேகமா இந்த தலதீபாவளி தோஹா வாழ் மஹாஜனங்கள் கூடதான். எல்லாருக்கும் தக்குடுவோட மனம் நிறைந்த தீவாளி நல்வாழ்த்துக்கள்! எல்லாரும் இந்த நல்ல நாள்ல சிரிச்சுண்டு சந்தோஷமா செளக்கியமா இருக்கனும்னு உம்மாச்சி கிட்ட பிரார்த்தனை பண்ணிக்கறேன்.

குறிப்பு - 'அவுத்து விட்ட கழுதை' Part 3 வெகுவிரைவில் வெளிவரும்.

பட உதவி - கூகிளாண்டவர்