Saturday, November 22, 2014

தோஹா டு தோஹா (Part 3)

Part 1   &  Part 2
 
 
ஒரு வழியா பெண்களூர் போய் அக்காவோட வீட்டை அடைந்தோம். எங்களை பாத்த அதிர்ச்சில “அதுக்குள்ள ரெண்டு நாள் ஆயிடுத்தா! நாளும் பொழுதும் ஓடர்தே தெரியலை”னு அக்காவோட ஆத்துக்காரர் ரொம்ப அளுத்துண்டார். மொத்தமா போகவர எவ்ளோ ஆச்சுனு அக்கா சொன்னதை கேட்டு அவருக்கு ரெண்டு நிமிஷம் பேச்சு மூச்சே இல்லை. “ஹே தக்குடு! சகாயவிலைல ரெண்டு நாள் டூரையும் முடிச்சுட்டு வந்துட்டேளேபா! மூனாவது தெரு தாண்டர்துக்குள்ள ரெண்டாயிரம் ரூபாய் செலவளிக்கும் இந்த ஓட்டகை அக்காவை கூட வச்சுண்டு எப்பிடி இதல்லாம்”னு அவர் கேட்டு முடிக்கர்த்துக்குள்ள, ‘பாய்ஸ் படத்துல வரும் பண்டாரம் செந்தில் மாதிரி போன இடத்துல எல்லாம் எந்த கோவில்ல எத்தனை மணிக்கு உண்டகட்டி போடுவானு ஒரு பெரிய டேட்டாபேஸ் வச்சுருக்கான்! அந்தந்த இடத்துல டாண் டாண்னு கூட்டிண்டு போய் சாப்பாட்டுக்கு உக்காத்திட்டான்!’னு அக்கா பதில் சொல்லிண்டு இருந்தா. ‘மாமா சொல்ப்ப சாம்பார் ஹாக்கி!னு ரெண்டாம் தடவை கேட்டு வாங்கி வெட்டு வெட்டுனு வெட்டிட்டிடு இங்க வந்து என் காலை வாரிவிடறேளே’னு நானும் கேட்டேன். ‘எது எப்பிடியோ டைரக்டர் ஷங்கர் பட்ஜெட்ல செலவு செய்யும் உங்க அக்காவை விசு பட்ஜெட்ல கொண்டுவந்து என்னோட பர்ஸை காப்பாத்தினாய்’னு அத்திம்பேர் முடிச்சு வச்சார். 

பெண்களூர்லேந்து கிளம்பி நேரா சென்னை வந்து அத்வைதா & தங்கமணியை கூட்டிண்டு கல்லிடை நோக்கி புறப்பட்டேன். ரயில்ல போகும் போது சும்மா இருக்காம தங்கமணி கிட்ட, " நானும் பாக்கறேன் ஒரு தடவை கூட சினிமால வரமாதிரி சின்னதா ஜீன்ஸ் டிராயர் & வெள்ளை கலர் முண்டா பனியன் போட்டுண்டு மறக்காம கைல கிஃட்டார் வச்சுண்டு ஓ பேபி ஹோ பேபி!னு பாடிண்டு ஒரு பொம்ணாட்டியும் வரமாட்டேங்கறாளே! வந்தா நானும் விழுப்புரம் ஜங்ஷன்ல இறங்கி அவா கூட ஒரு டான்ஸ் ஆடுவேன் இல்லையா"னு கேட்டேன். ஓ அதுக்கென்ன தாராளமா ராத்திரி விழுப்புரம் ஜங்ஷன்ல இறக்கிவிடறேன், தனியா ஆடிமுடிச்சுட்டு அடுத்த ரயிலை பிடிச்சு ஊர் வந்து சேருங்கோ!னு தங்கமணி பதில் குடுத்தா. ஒரு வழியா கல்லிடை வந்து சேர்ந்தோம். கொஞ்ச நேரத்துக்குள்ள அத்வைதா அளி,ரேளி, நடை, தாள்வாரம், பட்டாசாலைனு எல்லா பக்கமும் ஓட்டம்(தவழ) பிடிக்க ஆரம்பிச்சா.
 

தக்குடு செளக்கியமா இருக்கியா? ஷேக்கு செளக்கியமா? ஒட்டகம் செளக்கியமா?னு தெருல இருக்கும் மாமா மாமிகள் ஜாரிக்க ஆரம்பிச்சா. இந்த மாமா/மாமிகள் கிட்ட பதில் சொல்லும்போது ரொம்ப ஜாக்கிரதையா இருக்கணும். இன்வெஸ்டிகேஷன் சைன்ஸ்ல எல்லாரும் பி ஹெச் டி பண்ணினவா. நாம என்னிக்கு ஊருக்கு வந்தோம்னு நமக்கே ஞாபகம் இருக்காது ஆனா ரெக்கவரி software அப்டேடட் வெர்ஷன் மாதிரி இவாளோட மனசுல எல்லாம் தேதி வாரியா ஞாபகம் இருக்கும்.  அதே மாதிரி உத்தியோகம் பத்தி யார்கிட்டையும் மூச்சு விட கூடாது. எப்பிடி இருக்கைனு யாராவது கேட்டா சமத்துகுடம் மாதிரி ஓ! எனக்கென்ன ராஜாவா இருக்கேன்னு  உளறி வைக்காம எல்லா கேள்விக்கும் 'என்னத்த' கண்ணையா மாதிரியே பதில் சொன்னா நாம பொழச்சோம்.  

தக்குடு என்ன லீவா? உத்தியோகம் எல்லாம் எப்பிடி போயிண்டு இருக்கு?னு ஒரு மாமா மெதுவா ஆரம்பிச்சார்.
 

என்ன்னத்த லீவு மாமா! ஒன்னும் விஷேஷமா சொல்லும்படியா இல்லை, பகவான் புண்ணியத்துல வண்டி ஓடிண்டு இருக்கு!
 

உன்னோட உத்தியோகம் என்னனு கொஞ்சம் சொல்லேன் கேப்போம்!
 

பிரமாதமா ஒன்னும் இல்லை, அங்க இருக்கும் எண்ணை கிணத்துல நித்தியம் எத்தனை பீப்பாய் எண்ணெய் எறைச்சானு கணக்கு எழுதர்து தான் நம்ப ஜோலி
 

ஓஹோ! அப்ப நீ லீவுல வந்துட்டைனா பீப்பாய் கணக்க யாரு எழுதுவா? பதில் ஆள் இருக்குமா இல்லைனா ஷேக்குக்கு ஒரு மாச சம்பாத்யம் நஷ்டம் ஆகாதோ?
 

(மனுஷாளுக்கு லோகத்துல என்னெல்லாம் கவலைடாப்பா!னு மனசுக்குள்ள நினைச்சுண்டே) பதில் ஆள் எழுதுவா மாமா
 

அதெல்லாம் இருக்கட்டும் பீப்பாய் பீப்பாய்னு சொல்லறாளே! உத்தேசமா ஒரு பீப்பாய்னா எவ்ளோ கொள்ளும்?
 

(அட ராமா)உத்தேசமானா ம் ம்... உங்காத்து கக்கூஸ் வாளியால மூனு வாளி பிடிக்கும் மாமா! ஒரு நிமிஷம் இருங்கோ என் பொண்ணு அழற மாதிரி இருக்கு வந்துடறேன்னு சொல்லி தப்பிச்சு வந்தேன். 

ரெண்டு நாள் கழிச்சு சாஸ்தா ப்ரீதி ஆரம்பம் ஆச்சு. போன வருஷமே அங்க கூட்டிண்டு போகலைனு தங்கமணிக்கு ரொம்ப குறை. அதனால இந்த தடவை முந்தின நாள் சாயங்காலமே கூட்டம் இல்லாத சமயமா ஒரு தடவை கூட்டிண்டு போனேன். உள்ள சன்னதில மாமிகள் எல்லாம் மாக்கோலம் போட்டுண்டு இருந்தா. மாமாக்கள் எல்லாம் கறிகாய் நறுக்கிண்டு இருந்தா. எல்லாரையும் பாத்துண்டே உள்ள போயிட்டு நாங்க வெளில வரும் போது 'ஸ்கை ப்ளூ' கலர்ல அம்பர்லா சுடிதார் போட ஒரு பொண் சிரிச்ச முகமா வந்து ‘உங்களை எங்கையோ பாத்த ஞாபகமா இருக்கே!னு பேச ஆரம்பிச்சா. எர்ணாகுளம் சாஸ்தா ப்ரீதிக்கு நீங்க வந்தேளோ?’னு அடுத்தடுத்து கேட்டு யோசிச்சுண்டு இருந்தா. ‘இதுக்கு மேல இந்த படத்தை ஓடவிடக்கூடாது’னு முடிவு பண்ணின தங்கமணிஇந்தாங்கோ உங்க பொண்ணு உங்க கிட்ட வரணுமாம்’னு சொல்லிண்டே என்னோட கைல அத்வைதாவை குடுத்துட்டா. ‘ஓஓ உங்க பொண்ணா அண்ணா! ஸோ க்யூட்!’னு சொல்லிண்டே அந்த ஸ்கை ப்ளூ கலர் சுடிதார் நகர்ந்து போயிடுத்து. இந்த தங்கமணிகளே இப்படிதான் ஆத்துக்காரர் 2 நிமிஷம் சந்தோஷமா இருக்கர மாதிரி லைட்டா சந்தேகம் வந்தாகூட உடனே ஒரு லெக்ஷ்மி வெடியை அதுல கொளுத்தி போடர்தே வழக்கமா போச்சு, இத்தனைக்கும்மக்களின் முதல்வர் அவர்களின் வழிகாட்டுதலின் படி’னு நாம பயபக்தியா இருந்தாலும் நம்ப மேல நம்பிக்கையே வரமாட்டேங்கர்து. ம்ம்ம்ம்! என்னத்த சொல்ல நாம வாங்கின வரம் அப்பிடி. அந்த பொண்ணு வாய் நிறைய அண்ணானு என்னை கூப்பிட்டதுல தங்கமணிக்கு பரமசந்தோஷம்.
 
 

கோலம் போட்டுண்டு இருந்த ஒரு மாமி என்னை பாத்துட்டு ‘ஏ தக்குடு! எப்பிடிடா இருக்கை! இதுதான் உன்னோட ஆத்துக்காரியா? பொண்ணுக்கு ஆயுஷ்ய ஹோமம் ஆயாச்சா? எத்தனை நாள் லீவு? நீ துபாய்ல இருக்கையா? அமெரிக்கால இருக்கையா?’னு வரிசையா அர்னாப் கோஸ்வாமியோட ஒன்னு விட்ட மாமி மாதிரி கேள்வியா கேட்டு தள்ளினா. நானும் ஜாக்கிரதையா ரெண்டு வரில பதில் சொல்லிட்டு நழுவ பார்த்தேன். ‘ஏதுடா தக்குடு! வாயை திறந்தா மூடாம பேசுவையே இப்ப என்னவோ மணிரத்னம் படத்துல வரவா வசனம் பேசர மாதிரி வார்த்தை வார்த்தையே பேசரையே’னு மாமி மறுபடியும் ஆரம்பிச்சா. மாமி ! ‘கல்யாணம் ஆகர்துக்கு முன்னாடி எல்லார்மே நரேந்திர மோடி தான், வாய்க்கு வந்தபடி என்ன வேணும்னாலும் பேசலாம் ஆனா கல்யாணம் ஆச்சுனா ஒழுங்கா மரியாதையா மன்மோஹன் சிங்கா மாறிகணும் இல்லைனா சேதாரத்துக்கு கம்பேனி நிர்வாகம் பொறுப்பாகாது’னு நான் சொல்லவும் ‘கரெக்டா சொன்னைடா’னு அவாத்து மாமா வந்து சப்போர்ட் பண்ணினார்.  
 
 

அடுத்த ரெண்டு நாள்ல ஆவணி அவிட்டம் வந்தது. தெருல வச்சு ஆவணி அவிட்டம்னா அது ஒரு தனி குஷி தான். ‘சங்கு மார்க்’ லுங்கிகளுக்கு பேமண்ட் இல்லாத பிராண்ட் அம்பாசிடரா இருந்த மாமாக்கள் எல்லாம் திடீர்னு பஞ்சகச்சத்தோட நிக்கர்தா பாத்தா பயங்கர காமெடியா இருக்கும். அதுலையும் ஒரு மாமா சின்னகவுண்டர் படத்துல வர வசனம் மாதிரி லுங்கியை இடுப்புல கட்டியிருந்தா லெவல்ல இருக்கார்னு அர்த்தம், தொடை தெரியர அளவுக்கு மடிச்சு கட்டியிருந்தார்னா தீர்த்தம்(சரக்கு) உள்ள போயிருக்குனு அர்த்தம். இடுப்புல இருக்கும் லுங்கியை அவுத்து நெஞ்சுக்கு மேல ஓமணகுட்டி மாதிரி கட்டியிருந்தார்னா முல்லைபெரியாறுல 142 அடியை ‘தண்ணி’ தாண்டியாச்சு! யாரும் பேச்சு குடுக்காம அவாத்து மாமியை கூட்டிண்டு வரணும்னு அர்த்தம். அந்த மாமா ஆவணி அவிட்டம் அன்னிக்கு மட்டும் விபூதி’பட்டை’ போட்டுண்டு நிக்கர்து கண்கொள்ளா காட்சி. 

எத்தனை வருஷம் ஆவணியாவிட்டம் பண்ணினாலும் சில மாமாக்களுக்கு பஞ்ச கச்சம் கட்டும் போது உலகத்துல இருக்கர எல்லா சந்தேகமும் வரும். வலது பக்கம் முதல்லையா இல்லைனா இடது பக்கமானு சந்தேகத்துல கட்டி கடைசில அது எதோ பான்சி ட்ரெஸ் காம்படீசன் மாதிரி ஆயிடும். இந்த வருஷம் அப்பிடி தான் ஆச்சு. மத்தியானம் மஹாசங்கல்பம் முடிஞ்சு குளிச்சுட்டு ரெண்டு மாமா பக்கத்துல பக்கத்துல நின்னுண்டு வேஷ்டி மாத்திக்க ஆரம்பிச்சா. ரெண்டு பேரோட வேஷ்டியும் ஒரே மாதிரி இருக்கும் ஒன்பதுக்கு அஞ்சு வேஷ்டி. பிரிச்சு எடுக்கும் போது எப்பிடியோ கொஞ்சம் குழப்பம் ஆகியிருக்கு. ஒரு மாமாவோட பஞ்சகச்சம் முட்டுக்கு மேல கேப்ஃரே டான்சர் மாதிரி வருது, இன்னொருத்தருக்கு சர்ச்ல கல்யாணம் பண்ணின கல்யாணப்பொண்ணோட பின்பக்க வஸ்த்ரம் மாதிரி இவரோட அங்கவஸ்த்ரம் நீளமா இருக்கு. அப்புறம் பாத்தா ஒருத்தர் கைல ரெண்டு 9 முழமும் இன்னொருத்தர் கைல 2 அஞ்சு முழமும் இருக்கு.

Wednesday, October 1, 2014

தோஹா டு தோஹா Part 2


Part 1 படிக்க இங்கே கிளிக் பண்ணுங்கோ!
 
ப்ளைட்லேந்து இறங்கி வந்து இமிக்ரேஷன்ல ஒரு ரேஷன் வரிசை நிக்கும் பாருங்கோ அதை மாதிரி ஒரு கொடுமை எதுவும் கிடையாது. என்னோட இமிக்ரேஷன் ஃபாரத்தை ப்ளைட்ல வச்சே நான் எழுதி முடிச்சு ரெடியா வச்சுருப்பேன் ஆனா நமக்கு முன்னாடி இருக்கும் சில அசமஞ்சங்கள் அப்ப தான் நிதானமா எழுதிண்டே போவா (இதுல சில சமத்துகள் என்னோட ஃபாரத்தை பாத்து காப்பி வேற அடிப்பா). இந்த  சமத்து போய் நின்ன உடனே அங்க கவுண்டர்ல இருக்கும் கட்டம் போட்ட சட்டை ‘கையெழுத்து ஏன் சரிஞ்சு இருக்கு?’னு கேள்வி கேட்க ஆரம்பிச்சு அதுக்கு இவர் அசடு வழிஞ்சு நமக்கு பொறுமையே போயிடும். போன தடவை மெட்ராஸ்லேந்து கிளம்பும் போது ஒரு இமிக்ரேஷன் ஆபிசர் உங்களுக்கு பக்கத்து ஏர்போர்ட் திருவனந்தபுரம் தானே எதுக்கு மெட்ராஸ்லேந்து போறீங்க?னு பெரிய புத்திசாலி மாதிரி கேட்டார். திருவனந்தபுரத்து திரிபுரசுந்தரிகளை சைட் அடிச்சா என்னோட தங்கமணி பின்னி பிரியை கழட்டிடுவானா காரணம் சொல்லமுடியும், ‘உங்க மாமியார் வீடு மெட்ராஸ்ல இருந்தா அங்க வரமாட்டீங்களா சார்? ஏது நாங்க மெட்ராஸ் ஏர்போர்ட்டுக்கு வரகூடாதா’?னு நானும் சிரிச்சுண்டே பதில் சொன்னேன்.
 
டிபார்ட்மெண்ட் ஆட்கள் கிட்ட நாம கோபமாவும் பேசமுடியாது. நாமளே முன்னடி முகூர்த்தம் மூனு நாழிகை கணக்குல ஏர்போர்ட்டுக்கு ரெண்டு மணிக்கூருக்கு முன்னாடி வந்து நின்னுருப்போம், ஆபீசர் பாட்டுக்கு ‘இந்த பையனோட முழியே சரியில்லை, கொஞ்சம் விவரமா ஜாரிக்கனும்’னு நிப்பாட்டி வச்சுட்டார்னா டிக்கெட் பைசா கோவிந்தா ஆயிடும். நாம எந்த இடத்துல விட்டோம்? ம்ம்ம்.. நியாபகம் வந்துடுத்து! இமிக்ரேசன் முடிச்சு கஸ்டம்ஸ் ஸ்கேனின் மிஷின்ல சின்ன பெட்டியை அனுப்பினா அங்க ஒரு கஸ்டம்ஸ் மாமா மெதுவா பக்கத்துல கூப்பிட்டு ‘மஸ்கெட்லேந்து வந்த ப்ளைட்லதானே வந்தீங்க? உள்ள பிஸ்கட் எதாவது இருக்கா?’னு ஆரம்பிச்சார். ‘தங்கமணியோட 4 கிராம் மோதிரம் மட்டும் தான் இருக்கு வேணும்னா வெளில எடுத்துகாட்டரேன்’னு சொல்லவும் ‘போயிட்டு வாங்கோ!’னு அனுப்பிட்டார். கஸ்டம்ஸோட ஒரே கஷ்டமா போச்சு! ரெண்டு நாள் மாமனாராத்துல ரெஸ்ட் எடுத்துட்டு வழக்கம் போல பெண்களூர் கிளம்பினேன். ஜூலை - ஆகஸ்ட் அங்க மழைகாலம இருக்கர்தால தனியாதான் கிளம்பினேன். பெண்களூர்ல சிலபல நண்பர்களை பாத்துட்டு அடுத்த நாள் சிருங்கேரிக்கு ஒரு சொந்தக்கார அக்கா சகிதமா கிளம்பினேன். நாங்க கிளம்பர வரைக்கும் முகத்தை பாவமா வச்சுண்டு இருந்த அக்காவோட ஆத்துக்காரர் நாங்க கிளம்பினவுடனே சந்தோஷத்டோட உச்சத்துக்கே போயிட்டார். அவரும் அவரோட பையனும் ‘ஹைய்யா ஜாலி!னு கத்திண்டு ஒரே கும்மாளம். ‘ரெண்டு நாளுக்கு கூட ரெண்டு நாள் ஆனாலும் பரவாயில்லை தக்குடு! அக்காவை பாதில மட்டும் கூட்டிண்டு பெண்களூர் வந்துடாதே!’னு கையை பிடிச்சுண்டு கெஞ்சினார்.

 

மழைக்கால சிருங்கேரி
 
‘நான் இல்லாம அவரும் குழந்தையும் தவிச்சு போயிடுவா தெரியுமோ!’னு அக்கா பொலம்பிண்டு வந்தா. எதிர்பாத்த மாதிரியே போகும் வழி முழுக்க மழை. சிருங்கேரி மலையும் மலை சார்த்த இடம்னு நினைசுண்டு வந்தவா எல்லாருக்கும் மழையும் மழை சார்ந்த இடமா காட்சி கொடுத்தது. காத்தால தோரண கணபதில ஆரம்பிச்சு ராத்திரி சந்தரமெளீஸ்வர பூஜை வரைக்கும் எல்லாத்தையும் நிதானமா எந்தவித அவசரமும் இல்லாம தரிசனம் பண்ணினோம். காத்தால பூஜை பண்ணர்துக்கு கூப்பிடும் போது கல்லிடைகுறிச்சினு சேர்த்து சொல்லி நம்மை கூப்பிட்டதுதான் தாமசம், ஒரு மாமா எங்கேந்தோ ஓடியே வந்து ‘நீங்க கல்லிடைல எந்த தெரு? பெருமாள் கோவிலுக்கு முன்னாடியா பின்னாடியா? ராமசந்திரபுரம் தெருல காமேஷ்வர மாமாவை தெரியுமா? அவர் என்னோட ஆத்துக்காரியோட ஒன்னு விட்ட மாமா பிள்ளையோட ஷட்டகர்’னு வரிசையா பேசிண்டு இருந்தார்.
 
 

உடுப்பி தெப்பக்குளம்
 
ஒரு நாள் தங்கி இருந்துட்டு நேரா உடுப்பி கிருஷ்ணரை போய் தரிசனம் பண்ணிட்டு ரெண்டு மூனு டப்பா ஊதுவத்தி வாங்கினேன். நம்ப அக்கா கார்ல மட்டும் வந்து இருந்தா சுமாரா  நாலு சாக்குபை நிறைய ஷாப்பிங் பண்ணுவா, ‘பஸ்ல போகனும்கா! அடக்கி வாசிங்கோ!’னு நான் பொலம்பிண்டே இருந்ததால அரை சாக்குபையோட நிப்பாட்டிண்டா.  நேரா சாப்பாடு போடர இடத்துக்கு போயாச்சு. கர்னாடகால எந்த கோவில்ல இறங்கினாலும் மத்தியானம் & ராத்திரி சாப்பாடு கிடைக்கும். சாப்பாடும் சுடசுட இருக்கும்.  ஓசி சாப்பாட்டை திவ்யமா சாப்பிட்டு முடிச்சுட்டு மங்களூர் பக்கத்துல இருக்கும் கட்டில் துர்கா கோவிலுக்கு கிளம்பினோம். ‘கடீ’ அப்பிடின்னா நடுவில்னு அர்த்தமாம். ரெண்டு மலைகளுக்கு நடுல இருக்கர்தால இந்த பேர்னு கேள்விப்பட்டோம். உடுப்பிலேந்து மேப்ல பார்க்கும் போது பக்கத்துல இருக்கரமாதிரிதான் இருக்கு ஆனா பிரயாணம் பண்ண ஆரம்பிச்சா போயிண்டே இருக்கு. திருனெல்வேலி பஸ்ஸ்டாண்ட்ல இறங்கி பாபனாசம் பஸ்ஸை பிடிச்சா கல்லிடை வரமாதிரி சுலபமா ஒரு இடத்துக்கு போக முடியர்தா! என்னமோ அந்த ஊர்லையே பொறந்து வளர்ந்த மாதிரி ரெண்டு இடத்துல இறங்கி வண்டி வேற மாறி ஏறவேண்டி இருந்தது. தெரியாத ஊர் தெரிஞ்ச ஊர்னு வித்தியாசம் இல்லாம எந்த ஊர் பஸ்ல ஏறினாலும் ஏறி பத்து நிமிஷத்துல லோக வியவஹாரங்களை மறந்து அந்தர்முக தியானத்துக்கு போயிடுவேன் (தூங்க ஆரம்பிக்கர்தை கொஞ்சம் பாலிஷா சொல்லியிருக்கேன் கண்டுக்காதீங்கோ!) தங்கமணி பக்கத்துல இருந்தா தட்டி எழுப்பி தரதரனு இழுத்துண்டு இறங்கிடுவா, தனியா போனா இறங்க வேண்டிய இடத்துல இறங்கர்து கொஞ்சம் சந்தேகம் தான்.



கட்டில் கோவில் வாசல் 
 
கூட வந்த அக்கா பாவம் பேந்த பேந்த முழிச்சுண்டு இருந்தா. நான் அப்பப்போ கண்ணை லைட்டா முழிச்சு பாத்து அவர் இருக்காளா இறங்கிட்டாளானு செக் பண்ணிண்டு தூங்கிண்டு இருந்தேன். திடீர்னு பாத்தா ஆளை காணும், ஆத்தாடி நான் தான் ஆவுட்டா?னு எனக்கு நானே கேட்டுண்டு தேடிபாத்தா நம்ப அக்கா கீழ இறங்கியாச்சு! நானும் அடிச்சுபொறண்டு பையை தூக்கிண்டு இறங்கி ஓடினேன். நந்தினி நதியோட கரைல துர்கா தேவி கோவில் இருக்கு. நல்ல மழைகாலமா இருந்ததால நதில ஜலபிரவாகம். ஜலத்துக்கு நடுல கோவில்ல உக்காச்சுண்டு இருக்கர்தால ஜலதுர்க்கானும் பேர் இருக்கு. மத்தியான நேரமா இருந்ததால ஜாஸ்தி கூட்டம் இல்லை. கேரள பாணி கூரை அமைப்போட கோவில் இருந்தது. கோவிலுக்கு உள்ளையே நதியோட படித்துறை இருக்கு. அம்பாளை தரிசனம் பண்ணிட்டு சுத்தி வந்து சன்னதில உக்காசுண்டு லலிதா ஸகஸ்ரனாமம் பாராயணம் பண்ணினேன். இந்த கோவில் அம்பாளுக்கு இளநீர் காய்களை காணிக்கயா எல்லாரும் குடுக்கரா. கோவிலோட மடைபள்ளிலேந்து சூடான பூந்தியை ஏலக்கா கிராம்பு நெய் சகிதமா பாகுல போட்டு லட்டு பிடிக்கர வாசனை மூக்கை துளைச்சது. ரெண்டு பிரசாத லட்டுவை வாங்கி நொசிக்கிட்டு நேரா மங்களூர் வந்து பெண்களூர் கிளம்பினோம். ஊர்ல போய் இறங்கினா அங்க நம்ம அக்காவோட ஆத்துக்காரர்..........
                                                              (தொடரும்)

Saturday, September 20, 2014

தோஹா டு தோஹா


எல்லாரும் செளக்கியமா இருக்கேளா? யானைகள் புத்துணர்ச்சி முகாமுக்கு போயிட்டு வந்த கோவில் யானை மாதிரி ஒரு மாசம் ஊருக்கு போயிட்டு வந்தது மனசுக்கும் உடம்புக்கும் பாட்டரி சார்ஜ் பண்ணின மாதிரி இருக்கு. தோஹாலேந்து கிளம்பி திரும்பி தோஹா வந்தவரைக்கும் உள்ள வம்புகள் எல்லாத்தையும் சொல்லர்துக்கு உங்களைவிட்டா எனக்கு வேற யாரு இருக்கா சொல்லுங்கோ? இந்த தடவை தங்கமணியும் அத்வைதாவும் கன்னியாகுமரி எக்ஸ்ப்ரஸ் மாதிரி ஒரு மாசம் முன்னாடியே ஊருக்கு கிளம்பி வந்துட்டா. திருனெல்வேலிலேந்து மன்னார்குடி வழியா போகும் செந்தூர் எக்ஸ்ப்ரஸ் மாதிரி நான் ஆடி அசைஞ்சு ஒரு மாசம் கழிச்சுதான் ஊருக்கு வந்து சேர்ந்தேன்.  

ஒரு மாசம் தங்கமணி இல்லாம நன்னா ஆட்டம் போட்டியா தக்குடுனு? யாரும் ஆரம்பிக்காதீங்கோ! ரயில்வே தண்டவாளம் பக்கத்துல வீடு இருக்கரவாளுக்கு 'தடக் தடக்' சத்தம் இல்லைனா எப்பிடி தூக்கம் வராதோ அதை மாதிரிதான் நானும் தங்கமணியும். பழகின இம்சை பக்கத்துல இருக்கரவரைக்கும் அருமை தெரியாது ஆனா ரெண்டு நாள் ஆள் இல்லாம தெண்டவிட்டா தெரியும் சங்கதி. நான் ஊருக்கு கிளம்பர்தெல்லாம் தமிழ் நாடு காங்கிரஸோட காரிய கமிட்டி மீட்டிங் மாதிரிதான் எந்த ஆரவாரமும் இல்லாம முடிஞ்சுடும். தங்கமணி கிளம்பர்து அப்பிடிங்கர்து பெங்களூர் கோர்ட்ல அம்மா ஆஜர் ஆகரமாதிரி, கடைசி நிமிஷம் வரைக்கும் பரபரப்பா இருக்கும். ஒரு வாரம் முன்னாடிலேந்தே மேடம் ஷாப்பிங் ஆரம்பிச்சாலும் பிளைட்டுக்கு முந்தின நாள் நிச்சயமா ஒரு கொசுறு ஷாப்பிங் பண்ணிதான் சமாப்தி ஆகும்.  

சாமான் செட்டோட ஏர்போர்டுக்கு கிளம்பி வந்தாச்சு,எல்லாம் பத்திரமா வச்சுக்கோ! குழந்தையை ஜாக்கிரதையா பாத்துக்கோ! போனதடவை வந்த அந்த குஜராத் ஏர்ஹோஸ்டஸ் வந்தா நான் ரொம்ப ஜாரிச்சதா சொல்லு!னு முக்கியமான விஷயம் எல்லாம் சொல்லிமுடிக்கவும் அத்வைதா என்கிட்ட ‘டபக்’னு தாவிடுத்து. தாவினதோட நிக்காம அம்மாவுக்கு ஜோரா ஒரு டாடா காட்டிருத்து.’ரொம்ப சந்தோஷம்! அப்பாவும் பொண்ணும் செளக்கியமா இருங்கோ! நான் கிளம்பறேன்’னு தங்கமணி சொல்லவும் என்ன பண்ணர்துனே தெரியலை. அப்புறம் சமாதானபடுத்தி அனுப்பிவச்சுட்டு திரும்பி வரும்போது ஒரெ பீலிங்ஸா ஆயிடுத்து. ஜூன் மாச கடைசில அத்வைதாவுக்கு கல்லிடைல வச்சு ஆயுஷ்யஹோமம் ஆச்சு. அதுக்கு நாலு நாள் மட்டும் லீவு போட்டுட்டு ஊருக்கு போயிட்டு தனியா திரும்பி வந்துட்டேன், அதுக்கு அப்புறம் மறுபடியும் ஜீலை கடைசில சதுர்த்திக்காக ஊருக்கு போனேன். ஆயுஷ்ய ஹோமம் ரொம்ப நன்னா கழிஞ்சது.  

அத்வைதா

தெருல இருக்கும் மாமா மாமி எல்லாரும் வந்து ஆசிர்வாதம் பண்ணினா. வழக்கம் போல சில மாமா மாமிகள் நம்ம வாயையும் பிடுங்கினா. ‘ஒரு தடவை ஊருக்கு போயிட்டு வர சுமாரா எவ்ளோ ஆகும்?’ ‘ரெண்டு தடவையும் உங்க முதலாளி டிக்கெட் பைசா தருவாரா?’ ‘தனித்தனியா லீவு எப்பிடி தருவா?’ மாதிரியான எல்லா கேள்விக்கும் கோவப்படாம ‘ரொம்ப நல்ல கேள்வி வாழ்த்துக்கள்! அடுத்த கடிதம் யார் கிட்டேந்து வந்துருக்கு படிங்கம்மா!’னு சமாளிக்கும் தூர்தர்ஷன் ‘எதிரொலி’ நிகழ்ச்சிகாரர் மாதிரி சிரிச்சுண்டே சமாளிக்க பாப்பேன் அதுவும் ஒத்துவரலைனா ‘மாமிக்கு களையான முகம்!’னு சொல்லிண்டே எஸ்கேப் ஆயிடுவேன். ஆயுஷ்ய ஹோமத்துக்கு வந்த ஒரு மாமி சும்மா இருக்காம ‘எங்காத்து வாசல்ல ஜட்டியோட ஒன்னுக்கு போயிண்டுருந்தான் உங்காத்துக்காரன்! இன்னிக்கி அவனுக்கே ஒரு குழந்தை வந்தாச்சுனு நினைக்கரோது ஆச்சரியமா இருக்கு’னு தங்கமணிகிட்ட அளந்துவிட்டுண்டு இருந்தா. நானும் சும்மா இருக்காம ‘காலாகாலத்துக்கும் உங்காத்து வாசல்ல நானே ஒன்னுக்கு போயிண்டு இருக்க முடியுமா சொல்லுங்கோ!’னு சொல்லிண்டே அத்வைதாவை மாமி கைல டயப்பரை அவுத்துட்டு குடுக்கவும் அவாளோட பட்டுபுடவைல மூச்சா போகவும் டைமிங் சரியா இருந்தது. அப்பிடியே அப்பனை கொண்டுருக்குனு அசட்டு சிரிப்பு சிரிச்சுண்டே மாமி இடத்தை காலி பண்ணினா. 

ஆயுஷ்ய ஹோமத்துக்கு போயிட்டு நான் மட்டும் திரும்பி வந்து ஒரு மாசம் கழிச்சி திரும்பி ஊருக்கு கிளம்பினேன். இந்த தடவை ஊருக்கு போக ஓமன் ஏர்வேஸ்ல புக் பன்ணியாச்சு. நாலு மணி நேரத்துல ரீச் ஆகர தூரத்துல இருக்கும் ஒரு இடத்தை தலையை சுத்தி மூக்கை தொடர மாதிரி 8 மணி நேரம் உக்காந்து உங்களாலதான் வரமுடியும் சாமி!னு தங்கமணி எப்போதும் நக்கல் அடிக்கர ஒரு விஷயம் இந்த டிக்கெட் புக்கிங் தான். நம்ப கணக்கே வேற, ஐயாயிரம் ரூபாய் குறைச்சலா எந்த ஏர்லைன்ஸாவது டிக்கெட் குடுத்தான்னா யோசிக்காம 4 மணி நேரம் அவா ஊர் ஏர்போர்ட்ல உக்காந்துட்டு வருவேன். இப்ப நான் சீக்கரம் வந்து பெண்களூர் கோர்ட்ல தீர்ப்பா எழுதபோறேன். தங்கமணி ரொம்ப நாளா லண்டனுக்கு கூட்டிண்டு போங்கோ!னு மனு போட்டுண்டுருக்காங்க, எவனாவது தோஹாலேந்து மெட்ராஸுக்கு லண்டன் மார்க்கமா ப்ஃளைட் விட்டான்னா லபக்னு டிக்கெட்டை புக் பண்ணி தங்கமணியையும் அசத்தலாம்னு பாத்துண்டுருக்கேன் ஆனா ஒரு பயலும் சிக்க மாட்டேங்கரான்.  

ஓமன் ஏர்வேஸ்னால மஸ்கட்ல இறங்கி ஒரு மணி நேரம் பிஸ்கட் சாப்பிடனும்னு டிக்கெட்ல போட்டு இருந்தது. ராத்திரி பத்து மணிக்கு மேல ப்ஃளைட், அதனால டின்னர் அங்க குடுக்கர்தையே சாப்பிடலாம்னு முடிவு பண்ணி செகின் பண்ணும் போது ஏசியன் வெஜ் மீல்ஸ்(ஸ்பெஷல்)னு டிக் அடிச்சுட்டேன். வண்டி செளகர்யமாதான் இருந்தது, ஆனாலும் சீட்டுக்கு நேரா டிவி இல்லை. சகாய விலைல டிக்கெட் எடுத்தவாளுக்கு யாரும் சந்தனகுங்குமம் குடுத்து உபசாரம் பண்ணமாட்டானு தெரிஞ்சதால தூங்க ஆரம்பிச்சேன். ஒரு பத்து நிமிஷம் கண்ணசந்துருப்பேன் அதுக்குள்ள கனவுல யாரோ ‘மிஸ்டர் தக்குடு! மிஸ்டர் தக்குடு!’னு குரல் குடுத்துண்டே என் பக்கத்துல வரமாதிரி இருந்தது. கண் முழிச்சு பாத்தா என்னோட டின்னரை கைல வச்சுண்டு ஒரு ஏர்ஹோஸ்டர்ஸ் நின்னுண்டு இருந்தா.  
 
டின்னர் மீல்ஸ்
 
அதுல என்ன வேடிக்கைனா அந்த ஏரியாலையே யாருக்கும் இன்னும் சாப்பாடு குடுக்க ஆரம்பிக்கலை. நான் சாப்பிட ஆரம்பிச்சா பக்கத்துல இருந்த மாக்கான்  மூக்கால வாசனையை பிடிச்சுண்டே எங்களுக்கேல்லாம் எப்ப சாப்பாடு?’னு ஒப்பாரி வச்சுண்டு இருந்தான். நான் சாப்பிட்டு முடிச்சு அரைமணி நேரம் கழிச்சு ஒரு ஏப்பமும் விட்டதுக்கு அப்புறம் தான் பக்கத்துசீட்காரனுக்கு சாப்பாடே வந்தது. அவனோட தட்டுல ரத்தக்களரியா ஒரு சாப்பாடும், எனக்கு இருந்த மாதிரியே கத்தி/கபடா ஒரு கப் ஜலம், சிரார்த்த பிண்டம் மாதிரி ஒரு உருண்டை சாதம் எல்லாம் இருந்தது. எனக்கும் அவனுக்கும் ஒரு ஆரஞ்சு ஜூஸ் தான் வித்தியாசம்.பொதுவா நான் பக்கத்து இலைல என்ன சாப்பிடரானு எட்டிப் பாக்கர பழக்கம் கிடையாது, இருந்தாலும் ஒரு ஜெனல் நாலேட்ஜுக்கு தெரிஞ்சுக்கலாமேனு பாத்துண்டேன். இனிமே எதுவா இருந்தாலும் ஸ்பெஷல்! ஸ்பெஷல்!னே டிக்கு அடிச்சுட வேண்டியதுதான்னு நினைச்சுண்டேன். 

மெட்ராஸ்ல போய் இறங்கினா கஸ்டம்ஸ்ல அடுத்த கூத்து ஆரம்பம் ஆனது.......

Thursday, March 27, 2014

ஆஸ்பத்திரி

எலெக்ஷன் சமயம் மட்டும் தொகுதியை எட்டிப் பார்க்கும் எம் பி கதை ஆயிடுத்து நம்ப கதை. 'பிள்ளையை பெத்துப்பாரு பாம்பெர்ஸை போட்டுப்பாரு"னு சும்மாவா சொல்லிவச்சுருக்கா. ரொம்ப பிஸியோ பிஸி! நானும் கொஞ்சம் ஃப்ரீ ஆனதுக்கு அப்புறம் எழுதலாம் எழுதலாம்னு தள்ளிண்டே இருக்கேன். தமிழக பி ஜே பி-யோட தொகுதி உடன்பாடு மாதிரி முடிவுதெரியாம போயிண்டே இருக்கு. கடைசி நாள்ல வந்து வேட்புமனு தாக்கல் பண்ணற மாதிரி ஒரு வழியா வந்தாச்சு அதனால பெரிய மனசு பண்ணி எல்லாரும் மன்னிச்சுக்கோங்கோ.

கல்யாணம் கழிஞ்சதும் மராத்தான் ரேஸ் உண்டுனு நான் நினைச்சு கூட பாக்கலை. தமிழ் நாடு கேரளா கர்னாடகானு பெர்மிட் வாங்கின லாரியாட்டமா சுத்தி சுத்தி வந்துண்டு இருந்தோம். என்னோட டூர் ப்ளானை பாத்துட்டு தங்கமணிக்கு உள்ளூர கோபமும் எரிச்சலுமா இருந்தாலும் கூட்டணி தர்மத்துக்காக பொறுமையா வந்தா. எல்லா ஊர் தண்ணியையும் குடிச்சுட்டு நல்ல குளிர்ல தோஹாவுக்கு வந்தா இங்கையும் குளிர்காலம். வந்த இரண்டாவது நாள் நெஞ்செல்லாம் கபம் கட்டிண்டு மிமிக்கிரி ஆர்டிஸ்ட் மாதிரி குரல் மாறிண்டு இருந்தது. இந்தியால இருந்த தங்கமணி கிட்ட விஷயத்தை சொன்னா கவலைபடுவானு சொல்லாம போன்ல “ஓ! எனக்கென்ன குத்துக்கல்லாட்டமா செளக்கியமா இருக்கேன்!”னு புளுகிட்டேன்.

அடுத்த நாள் காத்தால கைகால் நடுங்க ஆரம்பிச்சதால காரோட்ட முடியலை. பக்கத்துல இருந்த ஒரு தெரிஞ்சவாளுக்கு போன் பண்ணி ஆஸ்பத்திரிக்கு கூட்டிண்டு போகமுடியுமா?னு ஜாரிச்சேன். அவாளும் வந்து பக்கத்துல இருக்கும் ஒரு ஆஸ்பத்திரிக்கு கூட்டிண்டுபோனா. அந்த ஆஸ்பத்திரி நம்ப ஊர்ல எல்லாருக்கும் ரொம்ப பரிச்சியமான ஒரு ஆஸ்பத்திரிதான். முன்னாள் அமைச்சர்களை சி பி ஐ விசாரிக்கவருதுன்னு கேள்விப்பட்டா உடனே போய் படுத்துக்கர இடம், நம்ப ஊர்ல எல்லா பக்கமும் இருக்கும் போட்டோ ஸ்டூடியோவுக்கும் இவாளோட பேர்தான், உள்ள நுழைஞ்சாலே தீவட்டிகொள்ளைதான்னு சொல்லாமசொல்ற மாதிரி ஒரு நர்ஸ் கைல தீவட்டி/ஜோதி ஏந்தின மாதிரி லோகோ இருக்கும். ரிஷப்ஷன்ல மலையாளிங்கிலிஷ் பேசும் ஒரு ஓமணக்குட்டி தான் உக்காசுண்டு இருந்தா. நான் புதுசா வந்துருக்கர்தால 'ஒரு ஓஃபர் உண்டு'னு பேச ஆரம்பிச்சது. நான் பாக்கர்துக்கு கொஞ்சம் மலையாளத்தான் மாதிரி இருக்கர்தை வெச்சுண்டு, ஏசியானெட்டை ஓன் பண்ணினமாதிரி வேகமா மலையாளத்துல “ஈ ஓஃபர் எடுத்தா மூனு திவசம் ஃப்ரீ கன்சல்டிங் கிட்டும்!”னு ஆரம்பிச்சா. கூட்டிண்டு வந்த என்னோட ப்ரெண்டுக்கு ஒரே குழப்பமா ஆயிடுத்து. “கடங்காரி! உள்ள நுழையும் போதே திவசம்/மாசியம்/செளண்டினு அபசகுனமா பேசராளே?னு யோசிக்கரமாதிரி இருந்தது. “இவா ஆஸ்பத்திரில வச்சு நாம போய்சேர்ந்தா மூனு வருஷத்துக்கு ப்ரீயா திவசம் போடுவாளாம்”னு மெதுவா நக்கல் அடிச்சேன். செல்போன் ரீசார்ஜ் கடைல வேலைபாக்கரவா மாதிரி மறுபடியும் விடாம அடுத்த ஓஃபர் பத்தி சொல்ல ஆரம்பிச்சா. “அம்மா மலையாளபகவதி! திவசமெல்லாம் தாமிரபரணி நதிகரைல நாங்க எங்காத்து வாத்தியாரை வச்சு போட்டுக்கறோம் நீ எனக்கு ஒரு அப்பாயிண்மெண்ட் மட்டும் போடு!”னு சொன்னதுக்கு அப்புறம் வேற வழியில்லாம டோக்கன் குடுத்தா.



தீவட்டி கொள்ளை


எண்ணெய் சட்டிலேந்து எம்பி குதிச்சு வெண்ணீர் பானைல விழுந்த கதையா அங்க ஒரு டாக்டர் இருந்தார். எனக்கு முன்னாடி வந்து பாத்துட்டு போனவரை பத்தி விலாவாரியா சொல்லிட்டு “பாவம் பொழைக்கர்தே கஷ்டம்”னு முடிச்சார். நாக்கை நீட்டு! மூக்கை காட்டு!னு சொல்லிட்டு ஒரு எக்ஸ்ரே எடுத்துண்டு வந்துடுங்கோ!னு அனுப்பினார். “பர்ஸ்ட் நைட் ரூம்ல மூனு பேர் எங்கையும் கேள்விபட்டதில்லை கேட்டையா?”னு புலம்பும் ‘மைக்கேல் மதன காமராஜன்’ கமலாட்டமா “காய்ச்சல்/ஜலதோஷத்துக்கு எக்ஸ்ரே இங்கதான் முதல் முதலா கேள்விபடறேன்”னு பொலம்பிண்டே போய் எடுத்தேன். எதிர்பாத்தமாதிரியே ரிப்போர்ட்ல ஒன்னும் வரலை ஆனா பலசரக்கு சாமான் லிஸ்ட் மாதிரி ஒரு 8 மருத்து எழுதினார். வெளில வந்துட்டு எனக்கு அடுத்து உள்ள வரர்துக்கு காத்துண்டு இருந்தவர் கிட்ட “எனக்கு ரெண்டு நாளா கொஞ்சம் காய்ச்சல்/ஜலதோஷம், அதனால எக்ஸ்ரே எடுத்து மருந்து வாங்கபோயிண்டு இருக்கேன்”னு சொல்லிட்டு வந்தேன். ‘எப்பிடியிருந்தாலும் உள்ள போனா டாக்டர் சொல்லபோறார் அதான் நானே சொல்லிட்டேன்.

சமீபத்துல ரெண்டு மாசம் முன்னாடி வேற ஒரு ஆஸ்பத்திரில தலைவலிக்கு செக்பண்ணினா ப்ளெட்ல சுகர்/பிரஷர் எல்லாத்தையும் செக் பண்ணனும்னு சொல்லி எழுதிட்டா. சாம்பிள் எடுக்கரதுக்கு உள்ள போன உடனே ஒரு தடியன் பெரிய்ய்ய்ய சிரிஞ்சை எடுத்துண்டு வந்தான். 'ஆள்காட்டி விரல்ல குண்டூசியை குத்தி ஈஷிண்டு போவாளே அது இல்லையா'னு கேட்டேன். 'அதெல்லாம் காணாது'னு சொல்லிண்டே நரம்பை தேட ஆரம்பிச்சுட்டான். 'ஒரு நிமிஷம் என்னோட தங்கமணியை உள்ள வரசொல்லுங்கோ அவளோட கையை பிடிச்சுக்கனும்'னு நான் சொல்லவும் வினோதமான பிராணியை பாக்கரமாதிரி பாத்துட்டு 'சாம்பிள்தான் எடுக்கபோறேன் ஆப்ரேஷன் எல்லாம் பண்ணலை'னு சொல்லிண்டே ‘நசக்’னு குத்தி கால் லிட்டர் ரத்தம் எடுத்துட்டான். எனக்கு தலையை சுத்திண்டு மயக்கம் வந்து டாக்டர் நர்ஸ்னு ஒரே களோபரம் ஆயிடுத்து. அடுத்த நாள் டாக்டர் ரிசல்டை பாத்துண்டே “கொஞ்சம் கொழுப்பு இருக்கே”னு கேட்டபோது “கொஞ்ச கொழுப்பா இருக்கு உடம்பெல்லாம் கொழுப்புதான்”னு சொல்லற மாதிரி தங்கமணிக்கு நக்கல் சிரிப்பு. ‘ஒரு மண்டலம் மாத்திரை போட்டுண்டு வந்து மறுபடியும் ப்ளெட்டெஸ்ட் எடுங்கோ’னு சொன்னார். இந்த தடவை டெஸ்ட் எடுக்கும் போது தங்கமணி பக்கத்துலேயே நின்னுண்டா & தாகசாந்திக்கு ஜூஸ் தயாரா இருந்தது. சொல்லமறந்துட்டேனே! இந்த தடவை வலிக்காம அழகா சாம்பிள் எடுத்தது ஒரு ஓமணக்குட்டி நர்ஸ். “ஆத்துக்காரி பக்கத்துல இருந்தா தெம்பா இருக்கேளே?”னு போனதடவை இரத்தம் எடுத்த தடியன் கேட்டதும் தங்கமணிக்கு கொஞ்சம் பெருமிதம்.

தங்கமணி கையை பிடிச்சுக்கர்து & மணிபர்ஸ்ல தங்கமணி போட்டோ வெச்சுக்கர்துல ஒரு சூட்சுமம் இருக்கு தெரியுமோ! வாழ்க்கைல ஒரு கட்டத்துல நாம நினைச்சு பாக்கமுடியாத அளவுக்கு பெரிய கஷ்டமோ இல்லைனா சோதனையோ வரும்போது மணிபர்ஸை திறந்து உங்க தங்கமணியை பாத்துண்டேள்னா மனசுல ஒரு புது தெம்பும் புத்துணர்ச்சியும் வரும். அந்த உத்வேகத்தோட எந்த பிரச்சனையையும் சமாளிச்சுடலாம். எனக்கு தெரிஞ்ச ஒரு மாமா இதை ஏடாகூடமா அவாத்து மாமிட்ட சொல்லி அடி வாங்கியிருக்கார். “போன வருஷம் ஒரு பெரிய பிரச்சனை வந்த போது பர்ஸை திறந்து உன்னோட போட்டோவை பாத்தேன்! கண்ணெல்லாம் ஜலம் கட்டிண்டு ‘இந்த பிரச்சனையையே வாழ்க்கைலை சமாளிச்சுண்டு இருக்கோமே இதை விடவா ஒரு பெரிய பிரச்சனை வந்துடபோகர்து’னு நினைக்கவும் மனசு அப்பிடியே லேசாயிடுத்து”னு உளறினா அந்த மாமி சும்மாவிடுவாளா!

அத்வைதா தோஹாவுக்கு வந்ததுலேந்து தடுப்பூசி போடர்துக்கு ஒரு தடவை கூட உள்ள போகர்தே இல்லை. எல்லாம் அம்மாதான் பாத்துக்கரா. நமக்கெல்லாம் உள்ள போனா மனசு தாங்காது. அதுலையும் இந்த ஊர்ல டாக்டர் ஊசி போடமாட்டார் ஊசி போடர்துக்கு தனி ரூம்ல ஒரு கம்பவுண்டர் இருப்பார். போன தடவை வேற ஒரு குழந்தைக்கு ஊசிபோடர்துக்கு அவர் ஊசியை கைல பிடிச்சுருந்த ஸ்டைலை பாத்தா திருனவேலி ஆண்டி நாடார் பாத்திரகடைல அண்டா/குண்டால பேர் எழுதர ஆசாரியாட்டமா இருந்தார். நமக்கு பிடிக்கர்தோ இல்லையோ நித்தியம் கரெக்டா சாப்பிடும் போது வரும் கக்கூஸ் க்ளீனிங் விளம்பரம் கண்ணுல படற மாதிரி சகிச்சுக்கதான் வேண்டியிருக்கு. இவாளோட கூத்தை பாக்கும் போது எங்க ஊர்ல முப்பது ரூபாய்க்கு வைத்தியம் பாக்கும் எங்க டாக்டர் உம்மாச்சியா கண்ணுக்கு தெரியரார்.