Thursday, October 6, 2011
மாமி..... சுண்டல்!!!
அப்ப்ப்ப்ப்ப்ப்பாடி! இருங்கோ கொஞ்சம் மூச்சு விட்டுக்கறேன். 9 நாளா மூச்சு விடக்கூட நேரமில்லை கேட்டேளா? எல்லாராத்துலையும் நவராத்ரி நன்னா கழிஞ்சுதா? நம்பாத்துலையும் சூப்பரா கழிஞ்சது. தக்குடு உங்காத்துல கொலு வெச்சேளா?னு உடனே கேக்காதீங்கோ. என்னோட ரூம்ல தினமுமே கொலுதான். வச்சது வச்சபடிக்கு ஆடாம அசையாதைக்கி இருந்தா கொலு தானே? :) 'இந்த தீபாவளியை போத்திஸில் கொண்டாடுவோம்'னு மூக்கும் முழியுமா இருக்கர எதாவது ஒரு குஜராத்தி பிகர் டிவி விளம்பரத்துல சொல்லற மாதிரி நாங்க எல்லாம் 'இந்த நவராத்ரியை கருங்குளம் மாமாவாத்துல கொண்டாடுவோம்'னு சொல்லாமையே கொண்டாடிட்டோம். ஒன்பது நாளும் அவாம் அமர்களப்பட்டது. அவாத்து வாசல்ல ‘கருங்குளம் அன்னசத்திரம்’னு ஒரு போர்டு மட்டும் தான் மாட்டலையே தவிர முழூ நேர சத்திரமாவே மாத்திட்டோம்.
பூமாதேவியை நேர்ல பார்கனும்னா அவாத்து மாமியை பாத்தாபோதும். ‘ஜாடிக்கேத்த மூடி’னு சொல்லுவாளே அதை மாதிரி ஜோடி. மாமா ஒரு காரியத்தை மனசுல நினைச்சாலே போதும் சொல்லாமையே அந்த மாமி பண்ண ஆரம்பிச்சுடரா. எல்லாராத்து மாமிகளும் பண்ணற மாதிரி மாமாவோட நைஸ் வேஷ்டியை நைஸா விரிச்சு அழகா கொலு வச்சுருந்தா. ‘ஊர்ல கல்யாணம் மார்ல சந்தனம்’ங்கர கதையா இவாத்துல கொலு வெச்சதுக்கு தக்குடுவுக்கு ஒன்பது நாளும் ராத்திரி சுண்டல் & ஆஹாரம். இவாத்து ஜோசியரும் எதாவது 'அப்பிராணி' பண்டாரத்துக்கு ஆஹாரம் போடச் சொல்லியிருப்பாரோ?னு கொஞ்சம் சம்சியம் தான். நடுல ஒரு வெள்ளிக்கிழமை 10 - 15 பேரை கூப்பிட்டு அவாளுக்கும் மம்மு போட்டதுக்கு அப்புறம் தான் சந்தேகம் தெளிஞ்சது. வந்த மாமிகள்ல இரண்டு மூனு பேர் கல்யாண ஆத்து கட்டுசாதகூடை மாதிரி டப்பால வேற கட்டி எடுத்துண்டு போயிட்டா. ஒரு கரண்டி மம்மு போட்டாலே அவா தாயாருக்கு சமானம்!னு சாஸ்திரத்துல இருக்கு. மாமி கையால ஒன்பது நாள் மம்மு சாப்பிட்டதால வாய் நிறைய அம்மா!னே கூப்பிடலாம். “நவமி அன்னிக்கி பூர்த்தி ஆகர்தே என்ன ஸ்வீட் பண்னனும் தக்குடு?”னு என்கிட்ட மாமி கேட்டதால “மட்டா கொஞ்சமா திரட்டிப்பால் வேணும்னா பண்ணிக்கோங்களேன்!”னு சொல்லிட்டேன். சுலபமா பண்ணலாமேனுதான் சொன்னேனேதவிர, நீங்க எல்லாரும் நினைக்கர மாதிரி எனக்கு பிடிச்ச வஸ்து!னு சிபாரிசு பண்ணலை.
குட்டி அம்பாள் ..:))
பூஜை மாதிரியான புண்ணிய காரியங்கள் பண்னும் போது ‘நான் பண்ணறேன்’ அப்பிடிங்கர எண்ணமே வரகூடாது. அதே மாதிரி பூஜைக்கு நடுல நாம மத்தவாளுக்கு செளபாக்கிய வஸ்துக்கள் தரும் போது ‘நான் குடுக்கறேன்!’ ‘அவா வாங்கிக்கறா!’ அப்பிடிங்கர பா(bha)வம் மனசுல வந்ததுன்னா அந்த ஷணமே நம்மோட பூஜாபலன் பூஜ்ஜியம் ஆயிடும். மேல இருக்கர படத்தை பாத்த உடனே மனசுக்கு ரொம்ப சந்தோஷமா இருந்தது. தரக்கூடியவாளோட கை கீழ இருக்கு & வாங்கிக்கக் கூடிய அந்த குட்டி அம்பாளோட குஞ்சுக்கைகள் மேல இருக்கு. அதுலையும் இன்னும் விஷேஷமா வாங்கிண்டு ஆசிர்வாதம் பண்ணர மாதிரி நம்மோட கண்ணுக்கு தெரியர்து. இந்த பா(bha)வம் & சிரத்தை தான் பூஜைல ரொம்ப முக்கியம்.
சின்னப்பையனா இருந்த போது எங்க தெருல சுண்டல் வாங்கர்து அவ்ளோ ஜாலியா இருக்கும். சில மாமிகள் கை நிறையா தருவா! சில மாமிகள் கரண்டியை கரண்டியை காட்டுவா!! கரண்டியை காட்டர மாமி ஆத்துக்கு எல்லாம் மாமி இல்லாத நேரமா போய் மாமாட்ட வசூல் பண்ணிடுவோம். மாமூல் வசூல் பண்ண போகும் தாதா மாதிரி கோஷ்டி கோஷ்டியா தான் போவோம். வாங்கின சுண்டலை அங்க வெச்சே சாப்பிடமுடியாது. எல்லாராத்து சுண்டலையும் ஒன்னு சேர்த்து நிறையா இருக்கர மாதிரி ஆக்கிட்டு சாப்பிடர்துல ஒரு அல்ப சந்தோஷம். ஒன்னு ரெண்டு மாமிகள் ஆத்துல ரெண்டாம் தடவை போனா பலன் இருக்கும், ஆனா அப்போ கூட்டம் சேர்க்காம போகனும். ப்ளவுஸ் சங்கரனும் நானும் தான் எப்போதுமே செட்டு. கடலைபருப்பு பொட்டலம் பண்ணி வந்த காலி ப்ளாஸ்டிக் பையை கைல வச்சுப்போம். அவன் ஒரு அனுமார் பைத்தியம்ங்கர்தால அனுமார் படம் போட்ட எதாவது ஒரு கடலைமாவு காலி கவரை தூக்கிண்டு வருவான். அதனால அவனோட கவர்ல போட்ட எல்லா சுண்டலுமெ எப்போதும் ஒரு கடலைமாவு வாடையோடையே இருக்கும். சில சமயம் அம்பானி பிஸினஸ் மாதிரி கலெக்ஷன் ஓஹோ!னு ஆகி கவர் எல்லாம் ரொம்பி வழிய ஆரம்பிச்சுடும். அந்த மாதிரி சமயத்துல என்ன பண்ணர்துன்னு தெரியாம ப்ளவுஸ் சங்கரன் திருதிருனு முழிப்பான். நான் எப்போதுமே முன் ஜாக்ரதையா ரெண்டு பக்கமும் கால்படி சுண்டல் கொள்ர மாதிரி பாக்கெட் உள்ள டவுசர் தான் போட்டுண்டு போவேன். “ராத்திரி எலி வந்து கடிக்கபோகர்துடா!”னு அம்மா சத்தம் போடர்தை காதுல வாங்கிக்காம ஜாஸ்தியா வர சுண்டலை எல்லாம் டவுசர் பாக்கெட்ல போட்டுப்பேன்.
எல்லா மாமியும் போன உடனே சுண்டலை எடுத்து தந்துடமாட்டா. நெத்தி வேர்வை நிலத்துல சிந்த பாடுபட்டாதான் பட்டானி சுண்டலை ருசிபாக்கமுடியும். இந்த மாமிகள் “முதல்ல அகிலா மாமியாத்துல வாங்கிண்டு வா!” ‘அகரம்’ கோமு மாமியாத்துல வாங்கியாச்சா?னு ஆயிரத்தெட்டு பிசுக்காரம் பண்ணிப்பா. உடனே ரோஷம் வந்து அவாத்துல வாங்காம போயிடகூடாது! வியாபாரத்துல பொறுமை அவசியம். எங்க அண்ணாவுக்கு வேற நான் பங்கு குடுக்கனும். ‘கிடைக்ககூடிய எல்லா சுண்டலையும் அண்ணாவுக்கு பங்கு குடுத்தா படிப்பு நன்னா வரும்!’னு சொல்லி என்னை ரொம்ப நாளைக்கு ஏமாத்தி வச்சுருந்தான். நானும் லூசு மாதிரி ரொம்ப வருஷம் குடுத்துண்டு இருந்தேன். இந்த பொண்கொழந்தேளை பாத்தா எங்களோட வானரபடைக்கு பொறாமையா இருக்கும். அவாளை மட்டும் பலகாய்ல உக்காசுக்க சொல்லி தாம்பூலம் குடுத்து சுண்டலை கவர்ல போட்டே குடுப்பா. கொசு அடிக்கர மாதிரி தொடைல ‘டப் டப்’னு அடிச்சுண்டு கட்டத்தொண்டையும் நெட்டத்தொண்டையுமா ‘லம்போதர லகுமிகரா’னு பாடவேற ஆரம்பிச்சிடுவா. ஒரு தடவை ரொம்ப எரிச்சலா போஸ்டாபிஸ் ஹரி ‘போரும்டீ! சீக்கரம் முடிங்கோ!’னு கத்திட்டான்.
அந்த மாமி கோபம் வந்து “நீங்களும் ஒரு பாட்டு பாடினா தான் உங்க எல்லாருக்கும் புட்டு!னு சொல்லிட்டா. அந்த மாமியாத்துல உருப்படியா இருக்கர ஒரே வஸ்து அந்த புட்டு தான், சுண்டல் எதுவும் வாய்ல வெக்கர்துக்கு விளங்காது. எங்களோட புட்டு ஆசைல அநியாயமா இப்படி ஒரு லோடு மண்ணை அள்ளிகொட்டின ஹரிகுட்டியை அடிச்சி துவம்சம் பண்ணலாம்னு எங்களுக்கு தோனித்து. ஆனா திடீர்னு ஹரிகுட்டியே ‘அஹஹம்!’னு தொண்டையை சரி பண்ணிண்டான். எங்க எல்லாருக்கும் பயங்கர ஆச்சர்யம் வால் இல்லாத வானரங்கள் ஒன்னுகூடி அமைச்ச ‘வால்லில்லா வானரப்படை’யான நம்ப ‘வால்’குடிக்கு நடுல ஒரு ‘லால்குடியா’னு ஷாக் ஆயிட்டோம். நின்னுண்டு பாடலாமா? உக்காசுண்டு பாடலாமா?னு மேல மேல ஹரிக்குட்டி பாம் போட்டான். நாட்டைல பாடட்டுமா இல்லைனா நாட்டைகுறிஞ்சில பாடட்டுமா?னு அடுத்த சந்தேகம் அவன்டேந்து. “முதல்ல மூக்கைஉறிஞ்சாம பாடுலே!” னு பொண்கொழந்தேள் நக்கல் அடிச்சது. மாமியாத்து டோங்கா கிண்ணத்துல இருந்த புட்டு கிடைச்சுடும்னு முழூ நம்பிக்கையோட ஹரிக்குட்டியை பாத்தோம்.
அ..அ..அ...!னு சுருதிப் பெட்டி எபக்ஃடை முதல்ல குடுத்துட்டு "வாடி என் கப்பக்கிழங்கே!"...னு கீர்த்தனையை ஆரம்பிச்ச உடனே எல்லாரும் 'க்ளுக்'னு சிரிச்சோம். பெரிய ஜேசுதாஸ் மாதிரி அந்தப் பய கண்ணை மூடிண்டு ‘வாடி! ஆ ஆ வாடி! வா வா வாடி!’னு ப்ருக்கா எல்லாம் போட்டான். என்ன தோணித்தோ தெரியலை அந்த மாமிக்கும் சிரிப்பு வந்துடுத்து. “வள்ளி மாமிக்கு....னு வந்து பொறந்துருக்கு பாரு!”னு சொல்லிண்டே எங்க எல்லாருக்கும் சின்னக்குழந்தை பாரக்ஃஸ் சாப்பிடர ஸ்பூனால இக்கினி இக்கினி!யா 2 ஸ்பூன் புட்டு போட்டா. “இந்த ஸ்பூன்ல குடுத்தா அடுத்த நவராத்ரிக்கும் இதே புட்டை வச்சு ஓட்டிடலாம் மாமி!”னு ‘சக்கப்பழம்’ ஹரிஷ் கமண்ட் அடிச்சுட்டு வந்துட்டான். அடுத்த நாள்லேந்து யாரும் ஹரிக்குட்டி கூட சுண்டல் வாங்க போகர்துக்கே தயங்கினா. ஏடாகூடமா ஆம்பூர் கோமு மாமியாத்துல வச்சு “நேத்து ராத்திரி யம்ம்ம்மா!”னு பாடி தொலைச்சான்னா அந்த மாமி அருமாமனைல வச்சு எங்க எல்லாரையும் நறுக்கிடுவா!ங்கர பயம் தான் காரணம்.............:)
நவராத்ரிக்கு மாமிகள் ஜாக்கெட், பாவாடை, புடவை குடுக்கர மாதிரி சிவராத்ரிக்கு ஏன் மாமாக்கள் யாரும் ‘வைக்கிங்’ முண்டா பனியன், வார்வச்ச டிராயர், வேஷ்டி எல்லாம் குடுக்கமாட்டேங்கரா??னு சமுதாய அக்கறையோட பலதடவை நானும் எங்க அண்ணாவும் பேசிண்டதுண்டு..........:)
Subscribe to:
Posts (Atom)