வினாத்தாளை ஒரு HR பிகர்தான் வந்து எல்லோருக்கும் வினியோகம் செய்தது. எனக்கு மட்டும் All the best! எல்லாம் சொல்லி தந்தது. HR பிகரின் ID card ‘ல எழுத்து சைஸ் குட்டியூண்டா இருந்ததால், ஷ்வேதா நாராயணன்!னு போட்டிருந்த அதோட பெயர் எல்லாம் நான் பார்க்க முயற்சி செய்யவே இல்லை(ப்ளட் குரூப் கூட எதோ B+னு பார்த்த ஞாபகம்). பக்கத்து டேபிள்காரன் வினாத்தாளை கையில் வாங்கி அதை திறக்காமல் ஒரு கையால் தொட்டுக்கொண்டு, எதோ ‘நாகாஸ்திரம்’ விடப்போற கர்ணன் மாதிரி கண்ணை மூடிக்கொண்டு ஸ்லோகம் எல்லாம் சொல்ல ஆரம்பித்துவிட்டாண். நானே பெரிய பழம், இவன் நம்பளவிட பெரிய ‘ஞானப்பழமா’ இருப்பான் போலருக்கே?? நு எனக்கு ஆச்சர்யமா இருந்தது.
அவனை நினைத்து கவலைப்பட்டுக் கொண்டே நானும் என்னுடைய வினாத்தாளை திறந்து வாசிக்கத் தொடங்கினேன். ஒரு 125 கேள்விகள் அதில் இருந்தது.ஆங்கிலஇலக்கணம்,மொழித்திறன்,வார்த்தைபயன்பாடு,கணிதம்,அறிவுக்கூர்மை சோதனை என்று பல தலைப்புகளின் கீழ் கேள்விகளை சரமாரியாக கேட்டு வைத்திருந்தார்கள். நான் முதலில் எனக்குத் தெரிந்த 55 கேள்விகளுக்கான பதில்களை ‘டிக்’ செய்ய ஆரம்பித்தேன். என்னுடைய டேபிளில் இருந்தவன் வேக வேகமாக டிக் செய்து கொண்டிருந்தான். சில சமயங்களில், கணிதம் எல்லாம் ஒரு தாளில் போட்டுப் பார்த்து பின்பு டிக் செய்தான்(ம்ம்ம், முடி இருக்கிற சீமாட்டி வலக்கொண்டையும் போட்டுக்கலாம், இடக்கொண்டையும் போட்டுக்கலாம்). அந்தப் பையனுக்கு கொஞ்சம் கூட டேபிள் மேனர்ஸே தெரியவில்லையே?? என்று நான் ஆச்சர்யப்பட்டேன். பரிட்சையெல்லாம் ஒரு Team Effort-டோட செய்யவேண்டிய ஒரு வேலை. ஆனால் அந்தப் பையன் நான் இருப்பதையே கவனிக்கவில்லை.
இருந்தாலும் நான் விடாமல், நீ எழுதி முடிச்சோனே பேப்பரை எங்கிட்ட தா! நீ எல்லாம் கரெக்டா எழுதிருக்கையா?னு நான் செக் பண்ணி தரேன்! என்றேன். அதுக்கும் அந்த ‘இடிச்சபுளி’ பதிலே சொல்லலை,. அந்த சமயத்தில்தான் நான் ஒரு விஷயத்தை கவனித்தேன். நான் உக்காசுண்டு இருந்த டேபிளுக்கு குறுக்கு வாக்கில் ஆறாவது டேபிளில் ஒரு தேவதை, ஆம்! அது என்னோட முகத்தை பார்த்துக்கொண்டிருந்தது. சே!சே! இதெல்லாம் வெறும் மனப்பிராந்திடா தக்குடு!னு மனசுக்குள்ள சொல்லிக்கொண்டு மீண்டும் எனது வினாத்தாளுக்குள் மூழ்கினேன். என்னோட டேபிள்காரன் எழுதற வேகத்தை பார்த்தா, நேத்திக்கு மாலைமுரசு-ல மாதிரி வினாத்தாள்ல வந்த கேள்விகளே வந்து, பரிட்சை எழுதும் +2 மாணவன் போல இருந்தது. மீண்டும் என்னை யாரோ நோட்டம் விடுவது போல மனதிற்குத் தோன்றியது.
இந்த முறையும் அதே பிகர்தான், இந்த முறை என்னைப் பார்த்து சிரிக்க வேறு செய்தது. என்ன்ன்ன்ன்ன்னடா இது!னு எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. பச்சைக்கிளிக்கே பச்சைகலர் டிரஸ் போட்ட மாதிரி பச்சைக்கலர் சல்வார், நாலு நாளைக்கு முன்னாடி வைத்த மருதாணியால் சிவந்த உள்ளங்கை,காதில் ஒரு சிறிய தங்கவளையம், வலது கையில் ஒரே ஒரு தங்க வளையல்,இடது கையில் இரண்டு சென்டிமீட்டர் விட்டமுடைய ஒரு குட்டி கைகடிகாரம் அதற்கு உள்ளே சாதாரண முள் இல்லாமல் ஒரு சிறிய குக்கூ பறவையே முள்ளாக இருந்தது. 4.5 ஆரோக்யா பாலை இரண்டு லிட்டர் வாங்கி, அதை குக்கரில் விட்டு, கட்டிதட்டாமல் கிண்டி, 1:2(பால்:ஜீனி) விகிதத்தில் ஜீனி சேர்த்து வந்த திரட்டிப்பாலை,புதிதாக வாங்கிய ஒரு வெள்ளித்தட்டில் போட்டு, அதை அவள் உக்காசுண்டு இருந்த டேபிளில் அவளுக்கு அருகில் வைத்தால்,வெள்ளித்தட்டு&திரட்டிப்பால் இரண்டுமே கொஞ்சம் கறுப்பாகத் தெரியும். சுண்ட வேண்டும் என்று நம்ப மனசுக்குள் நினைத்தாலே ரத்தம் வந்து விடுமோ? என்று எண்ணும் வண்ணம் இருந்தாள். ஆறு டேபிளுக்கு அப்பால் இருந்ததால் தெளிவாக என்னால் அவளை பார்க்கமுடியவில்லை. பரிட்சை அறையில் ரோஜாப்பூ! கைக்கு எட்டும் தொலைவில் நிலவு! கண்ணுக்கு எட்டாத தொலைவில் அவள் அப்பா! என்று பல கவிதை புத்தக டைட்டில் எல்லாம் கன்னா! பின்னா!னு மூளையில் உதயமானது.

நம்ப VGr-ருக்கு பிடிச்ச தாம்பரம் பொண்கள்தான் இந்த டெஸ்டை எல்லாம் கிளியர் பண்ணமுடியும்!எவ்ளோ யோசிச்சும், ஆறு தலைமுறைக்கு முன்னாடி இருந்த தாத்தா,பாட்டி பேரெல்லாம் நினைவுக்கு வந்ததே தவிர சரியான விடைகள் அகப்படவில்லை அதனால், மிச்சம் இருந்த கேள்விகள் அனைத்தும் இங்கி! பிங்கி! பாங்கி! என்னும் நவீன விஞ்ஞான அறிவியல் முறைப்படி குலதெய்வம் பெருவேம்புடையாரின் உதவியுடன் டிக் செய்யப்பட்டது. நம்ப கர்ணமகாராஜா பேப்பரை குடுப்பதற்கு முன்பும் ‘ப்ரம்மாஸ்திரம்’ விடப்போவது போல் ஸ்லோகம் எல்லாம் சொல்லிவிட்டுத்தான் கொடுத்தான். ஒரு மணி நேரத்திற்குப் பிறகு யாரெல்லாம் அடுத்த சுற்றுக்கு செல்லப்போகிறார்கள் என்ற லிஸ்டை வாசித்தார்கள். நான் எதிர்பார்த்ததை போலவே என்னுடைய பெயர் அதில் இல்லை. இன்டர்வ்யூவுக்கு வந்த 'இன்போசிஸ்' நாராயணமூர்த்தியையே உங்களுக்கு போதிய தகுதி இல்லை!னு சொல்லி ஓவரா thoughtsஐ apply பண்ணினவாளோட ஞாபகம்தான் வந்தது. மனதிற்கு கொஞ்சம் வருத்தமாக இருந்தாலும், பச்சைக்கிளியை பார்த்த சந்தோஷத்தில் மனதை தேற்றிக் கொண்டேன். அறையை விட்டு பல்பு வாங்கிய அனைவரும் வெளியே வந்தோம். சோர்வாக இருந்தவனுக்கு சூப் குடுத்தது போல, ஹாய்! என்று யாரோ புல்லாங்குழலில் வாசித்தார்கள். திரும்பிப் பார்த்தால் விரும்பிப் பார்க்க முயன்ற பச்சைக்கிளி.....! I am வைஷ்ணவி! (உண்மைப்பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்று அறிமுகம் செய்துகொண்டாள். பக்கத்தில் அவளுடைய அப்பா/அண்ணன்(அதாவது நம்ப மச்சான்)இல்லை என்பதை உறுதி செய்துகொண்டு நானும் ஒரு ஹாய்! சொல்லிவிட்டு, I am தக்குடு! என்று continue செய்தேன். தூரத்தில் பார்க்கும் போது மயில் போல் இருந்தாலும், அவளுடைய குரல் குயில் போலத்தான் இருந்தது, இதனால் என் மனம் ரயில் போல அவளைத் தொடர்ந்தது.
நீங்களாவது செலக்ட் ஆவேள்னு நினைச்சேன்! இது உரிமையோடு அன்பான குரலில் பச்சக்கிளி, நானும் அப்படித்தான் நினைச்சேன், ஆனா என்னோட டேபிள்காரன் ரொம்பமோசம்!இது நான்தான். நான் டிருப்ளிகேன்ல இருக்கேன்! என்றாள்( நினச்சேன்! மூக்கு கருடன் மாதிரி இவ்ளோ தீர்க்கமா இருக்கும் போதே ------ வீட்டு அழகாதான் இருக்கனும்!னு மனசு பேசியது). அப்பா பேரு பார்த்தசாரதியா??னு 'இந்தியன்' கவுண்டமணி மாதிரி கேட்கவேண்டும் என்று வாய்வரைக்கும் வந்துவிட்டது, கச்சேரிக்கு பங்கம் விளையுமோ? என்ற பயத்தில் அமுக்கிவிட்டேன். பொண்களுக்கு அவாளோட நைனாவை மட்டும் நக்கல் அடிச்சா தாங்கிக்கவே முடியாது, இது முக்கியமான பாலபாடம். அவள் பேசும் போது, 3 ராஜேஷ் வைத்யா வீணை, 4 ரமணி ப்ளூட் மோஹன ராகத்தில் ஒன்றாக வாசிப்பது போல இருந்தது. கச்சேரி நல்லபடியாக சென்றுகொண்டிருக்கும் போது, மேலே தூக்கிப்போட்டு பிடிக்கத்தவறிய விக்கு வினாயகராமின் கடம் டமார்!னு கீழே போட்டு உடைத்தது போல எங்கண்ணன் வந்து சேர்ந்தான்.
சபாலக்க்ஷணமே இல்லாமல், என்னடா டெஸ்டு ஒவுட்டா? என்று கத்தினான். அது அவளுக்கும் பொருந்தும் என்பதால் பச்சக்கிளியோட வதனம் அவமானத்தால் இருண்டுவிட்டது. நான் வரேன்!னு சொல்லிட்டு வைஷ்ணவி நகர்ந்தாள். நாங்களும் கம்பேனியின் வாசல் கதவு வரை வந்துவிட்டோம். நான் இந்த பக்கமா போகணும்! என்று சோகமாக சொன்னாள் அவள். எங்கண்ணன் விடாமல், நாங்க அந்த பக்கமா போகனும் என்றான். நான் அவனிடம், நாமளும் டிரிப்ளிகேன் வழியா போய் வெஸ்டு மாம்பலம் போக எதுவும் வழி இல்லையா?னு கேட்டேன். ஒரு முப்பதுகிலோமீட்டர் சுத்திப்போனாலும் பரவாயில்லை!னு சொன்னென்.
அதுக்குள்ள கிளி பறந்து போய்டுத்து. “நீ டெஸ்டு பெயில் ஆனது கூட எனக்கு வருத்தம் இல்லைடா! ஆனா வெளிய வரும்போது ஒரு பிகரோட வந்த பாத்தியா! அதுதான்டா எனக்கு கோவம்!”னு கத்தினான் உடன்பிறப்பு. வடபழனியிலிருந்து வெஸ்டு மாம்பலம் வரைக்கும் மெட்ராஸ் வெயிலில் ‘தண்டி யாத்திரை’ மாதிரி என்னை நடத்தியே கூட்டிக்கொண்டு போய், காலையில் கொடுத்த ஆட்டோ காசை சமன்செய்தான். இதன் பிறகு, “வேலையே கிடைக்காமல் கல்லிடைக்குறிச்சி திண்ணையை தண்டிண்டு இருந்தாலும் இருப்பேனே தவிர, தண்ணி இல்லாத இந்த பொட்டக்காடான மெட்ராஸ் ஊர்ல மட்டும் வேலை பார்க்கமாட்டேன்!”னு ஒரு சபதம் செஞ்சுட்டு ஊருக்கு வந்துட்டேன். இந்த வேலை கிடைக்கலைனாலும் பிற்காலத்தில் வேற ஒரு நல்ல வேலைக்கு பரிக்க்ஷை எழுத இந்த அனுபவம்(அதாவது பரிக்க்ஷை அனுபவம்) உபகாரமா இருந்தது.
பச்சக்கிளியோட அப்பா, எதாவது 'பன்'திண்கற ஒரு அமெரிக்கா மாப்ளைக்கோ(பூனைக்கோ), அல்லது காலங்கார்த்தால ஏழு மணிக்கே 'ஓட்ஸ்' கஞ்சியும் ஒரு வாழைப்பழமும் சாப்டுட்டு, தங்கமணிக்கு டாட்டா! கூட சொல்லாமல், லாப்டாப்பையும் தொங்கவிட்டுண்டு, காலில் கஞ்சியை கொட்டிக்கொண்டது போல 'டுயூப்' ரயிலை பிடிப்பதற்கு ஓடும் ஒரு லண்டன் மாப்ளைக்கோதான் நிச்சயமா பச்சக்கிளியை கல்யாணம் பண்ணி கொடுத்திருப்பார்....:(
அம்மாடி வைஷூ குட்டி, நீ எங்க இருந்தாலும் சந்தோஷமா இருக்கனும்!னு இந்த அண்ணா(வரலாறு முக்கியம் அமைச்சரே!!!) ஆசிர்வாதம் பண்ணரேன்மா!....(அவ்வ்வ்வ்வ்வ்......)
இப்படிக்கு,
அண்ணனின் சதியால் கிளியை கோட்டைவிட்ட ‘அப்பாவி’ தக்குடு
குறிப்பு - எழுத்துத்தேர்வுக்குச் செல்லும் வாலிபர்கள் தயவுசெய்து தனியாகவே செல்லவும், அண்ணன் & அக்கா போன்ற அனுகூல சத்ருக்களை கூட்டிக்கொண்டு செல்ல வேண்டாம்.