Thursday, October 20, 2016

நவகுண்டம்

இந்த தடவை கல்லிடை காஸ்மோபொலிடன் சிட்டில சதுர்த்தி உத்ஸவத்துல ஸ்பெஷலா என்ன பண்ணலாம்னு எல்லாரும் மண்டையை போட்டு கசக்கி எடுத்து கடைசில கண்டு பிடிச்சதுதான் ' நவகுண்ட நவக்கிரஹ மஹாயக்ஞம்'. ஒரே குழப்பம். பத்தாயிரம் மோதக ஹோமம் தொடங்கி லெக்ஷ்மி ஹோமம் துர்கா ஹோமம்னு எல்லாமே பண்ணிமுடிச்சதால புதுசா என்ன பண்ணலாம்னு யோசிச்சு கடைசில முடிவு பண்ணினதுதான் இந்த நவகுண்டம். தெரு மாமாக்களுக்கும் பரம சந்தோஷம். “எல்லா கிரகமும் நம்மை பிடிச்சு ஆட்டர்து ஓய்! அதனால எல்லா கிரகத்துக்கும் ஒரு ஓமத்தை பண்ணிட வேண்டியது தான்”னு ஒரு மாமா தீர்மானமா பேசிண்டு இருக்கும் போது பக்கத்துல இருந்த மாமா ‘உங்காத்து மாமி கூப்படரா ஓய்ய்!’னு சொல்லவும், ‘இந்த கிரகம் ஜென்மத்துக்கும் என்னை பிடிச்சு ஆட்டர்து, என்ன பரிகாரம் பண்ணர்துன்னே தெரியலை ஓய்!!’னு முனுமுனுத்துண்டே அந்த மாமா போனாராம். ஒன்பது கிரஹத்துக்கும் தனித் தனியா ஹோமகுண்டம்,தனித்தனியா மூனு வாத்தியார், தனித்தனியா பூர்ணாஹுதினு தடபுடல் ஏற்பாடு பண்ணி இருந்தா. தெருவே ஜேஜேனு இருந்தது. நானும் தங்கமணி & அத்வைதா சகிதமா ஊர்ல போய் இறங்கிட்டேன்.காஷ்மீர் பிரச்சனை எப்பிடி ஓயாம இருக்கோ அதே மாதிரி கும்பா மாமிக்கும் அவாத்து மாட்டுப்பொண்ணுக்கும் பிரச்சனை இன்னும் ஓயரபாடா இல்லை. இந்த தடவையும் சண்டை மண்டை உடஞ்சுண்டு இருந்தது. அவாத்து மாட்டுப்பொண் இல்லாத சமயமா அவாத்துக்கு போயிட்டு கும்பா மாமிக்கு சிலபல ராஜதந்திர ஆலோசனைகள் சொன்னேன். “மாமி! எப்ப பாத்தாலும் பைட் சீனே போட்டுண்டு இருந்தா படம் சுவாரசியப்படாது. சில செண்டிமண்ட் சீன் & லாலே லா சீன் அதோட சேர்த்து சில ரொமான்ஸ் எல்லாம் இருந்தா தான் நன்னா இருக்கும்”னு சொல்லிண்டு இருக்கும்போதே மாமிக்கு வெட்கம் வந்துருத்து. “ரொமான்ஸ் எல்லாம் முடிஞ்சு தான் மணியா பேரன் வந்தாசேடா!”னு மாமி முடிக்கர்துக்கு முன்னாடியே, “நான் அதை சொல்லலை மாமி! உங்களுக்கும் மாட்டுபொண்ணுக்கும் நடுல பாசமான லாலே லா!”வை சொன்னேன். மாமியும் எல்லாத்துக்கும் மண்டையை ஆட்டிட்டு சாயங்காலமே அவா கழுத்துல இருந்த ரெட்டைவடம் செயினை மா.பொண்ணுக்கு போட்டுவிட்டு அழகு பாத்து இருக்கா. அவாளோட மா.பொண்ணும், “செயின் என்னோட கழுத்துக்கு அளவெடுத்து பண்ணின மாதிரி இருக்குனு” சொல்லிட்டு கழுத்தோட போட்டுண்டு போயிட்டா. இப்ப செயினை எப்பிடி திரும்பி வாங்கர்துன்னு தெரியாம கும்பா மாமி முழிச்சுண்டு இருக்கா.

தெருல ஒரு ‘டோல்கேட்’ மாமா இருக்கார். போரவா வரவா ஒருத்தரை விடர்து இல்லை. கேள்வியா கேட்டு கழுத்தருக்கரார். படிச்சு முடிச்சவாளா இருந்தா எப்ப வேலைக்கு போகப்போரை?னு கேக்கரார்.வேலைக்கு போகரவாகிட்ட ‘எந்த கம்பெனில வேலை?’னு கேட்டா கூட பரவாயில்லை ‘எவ்ளோ சம்பளம்?’னு சத்தமா கேக்கறார். “சம்பளம் எங்க தராங்க சுண்டலும் சக்கரபொங்கலுமா குடுத்து ஏமாத்தராங்க!”னு வாய்விட்டு சொல்லமுடியுமா. இதாவது பரவாயில்லை ‘தொலைஞ்சுபோகர்து போ!’னு விடலாம் ஆனா ‘உங்காத்து பொண்ணுக்கு கல்யாணம் பாக்கர்தா உத்தேசமே இல்லையா?’ ‘கல்யாணம் கழிஞ்சு 3 வருஷம் ஆச்சே விஷேஷம் உண்டா?’னு கேட்டு தர்மசங்கடப் படுத்தறார். இவருக்கு பயந்தே பாதிபேர் தெரிச்சு ஓடறா. போன வருஷம் எங்க மாமியாரை பாத்துட்டு ‘இது யாருடே? இது  யாருடே?’னு கேட்டுண்டே இருந்தார். “எங்க மாமனாரோட அப்பாவோட மூத்த மாட்டுப்பொண்னோட ரெண்டாவது ஓர்படி!”னு சொல்லிட்டு நடையும் ஓட்டமுமா இடத்தை காலிபண்ணிட்டேன். இவ்ளோ குழப்பி இருக்கோமே மனுஷன் இம்சிக்கமாட்டார்னு பாத்தா சாயங்காலம் மறக்காம “உன்னோட மாமனாரோட கூடபொறந்தவா மொத்தம் எத்தனை பேர்?”னு மறுபடியும் ஆரப்பிக்கரார்.

ஒன்பது ஹோமகுண்டத்துக்கு பக்கத்துலையும் ஒரு தம்பதியை சங்கல்பம் பண்ணிக்க ஒக்காத்தினா! நானும் தங்கமணியும் ஒரு கிரகத்துக்கு சங்கல்பம் பண்ணிண்டோம். வாத்தியார் மாமா சங்கல்பம் சொல்லிண்டு இருக்கும் போது ஒரு மாமி "எங்க அப்பா அம்மா பேர் நக்ஷத்ரமும் சொல்லலாமா மாமா?"னு கேட்டார். உன்னோட பேரை சொன்னாலே எல்லா கிரகமும் ஓடிரும் உங்க அப்பாம்மா பேரை வேற சொல்லனுமா?னு அவாத்து மாமா ஏழரையை கூட்டிண்டு இருந்தார். ரெண்டு வாத்தியார் அவாளுக்குள்ள பேசிண்டு இருந்தா. “போனவாரம் போன ஜோலில எஜமானனுக்கு காதே கேக்கலை ஓய்! பிராஜாபத்தியம் பவித்ரம்!னு சொல்லசொன்னா, "பிராஜாபத்தியம் பைத்தியம்!”னு சொல்றான் என்னத்த சொல்லர்து !'னு பொலம்பிண்டு இருந்தார். எல்லா மாமியும் புல் மேக்கப்புல  வந்துருந்தா, அதுலையும் சிலமாமிகள் மாமாவை வச்சு அவாளோட வயசை ஜட்ஜ் பண்ணிடகூடாதுனு முன்னெச்சரிக்கையா அவாத்து மாமாவுக்கும் 'டை' அடிச்சுவிட்டு கூட்டிண்டு வந்திருந்தா. சுக்கிரனோட ஹோமகுண்டத்துல இருந்த வாத்தியார் மாமாவுக்கு எல்லா கிரகத்தோட புகையும் போயிண்டு இருந்தது. எல்லரும் சுக்கிரனோட குண்டத்துல விழுந்து விழுந்து நமஸ்காரம் பண்ணிட்டு சனி கிரகம் பக்கத்துல வரும்போது ஓ பன்னீர்செல்வம் மாதிரி பயபக்தியா பம்மிட்டு போனா. “சனியோட பார்வை குரு மேல இருக்கு போலருக்கே?”னு ஒரு மாமா இன்னொரு மாமாவை ஜாடைமாடையா பேசி சிரிச்சுண்டு இருந்தார்.

“நீ சொன்னதை நம்பித் தான் என்னோட ரெட்டைவட செயினை அவுத்து போட்டேன் ஒழுங்கு மரியாமரியாதையா திருப்பி தரர்துக்கு ஐடியா குடு!”னு கும்பா மாமி மிரட்டின மிரட்டுல, நேரா அவாத்து நாட்டுபொண்ணு கிட்ட போய் "இந்த செயின்ல உங்களை பாக்கர்துக்கு அப்பிடியே உங்க மாமியார் மாதிரியே இருக்கு!"னு ஒரு குண்டை போட்டேன், அவ்ளோதான்  சாயங்காலமே மாமி கழுத்துக்கு செயின் வாபஸ் வந்துருத்து. மாமிக்கு வாயெல்லாம் பல்லு, “என்ன சொன்னை? என்ன சொன்னை?”னு என்னை பிடுங்கி எடுத்தா.தலைவர் ஸ்டெயில்ல "உண்மையை சொன்னேன்"னு சொல்லிட்டு எஸ்கேப் ஆயிட்டேன்.

(அக்டோபர் 3ம் தேதி மறக்காம ஞாபகம் வச்சு மூஞ்சி புஸ்தகத்துலையும், உள்டப்பியிலும்(அதான் இன்பாக்ஸ்)வந்து பிறந்த நாள் வாழ்த்து சொன்ன எல்லாரோட அன்புக்கும் பாசத்துக்கும் தக்குடு என்றும் கடமை பட்டுருக்கேன்.)

Thursday, March 24, 2016

பெண்களூர் டாப்ஸ்

ஹும்ம்ம்ம்! அது ஒரு காலம்! எம் ஜீ ரோட்ல இருக்கும் ஒரு பெரிய கம்பெனில வேலைக்கு சேர்ந்து அப்ப தான் டிரெயினிங் முடிஞ்சு ஒரு டீம்ல போட்டு இருந்தா. இந்த மாதிரி கம்பெனிகள்ல எல்லாமே ஒரு விஷயம் பொதுவா இருக்கும். 20 மாடி கட்டிடத்துல ஒவ்வொரு தளத்துலையும் நடு ஹால்ல 8 கடிகாரம் மாட்டி வச்சுருப்பா ஒவ்வொரு கடிகாரத்துக்கு கீழயும் நியூயார்க்,சிங்கப்பூர்,ஜப்பான்,ஆஸ்திரேலியா,துபாய், லண்டன்னு எழுதி வச்சுருப்பா. என்னை மாதிரி புதுசா வேலைக்கு சேர்ந்த அப்ரண்டிசுகளும் அடேங்கப்பா! எல்லா ஊர்லையும் நம்ப கம்பெனிக்கு பிராஞ்ச் இருக்கு போல! பெரிய்ய்ய்ய கம்பெனிதான் போலருக்கு!னு பெருமைக்கு காலரை தூக்கி விட்டுப்போம். உண்மை என்னான்னா அமெரிக்கால ஒபாமா எழுந்தாச்சா,லண்டன்ல துரைமார்கள் இப்ப பல்லு விளக்கியாச்சாதுபாய்ல சேக்கு கக்கா போயாச்சா?னு தெரிஞ்சுக்கர்துக்காகதான் அந்த எட்டு கடிகாரம்னு ஆறு மாசம் கழிச்சுதான் புரிஞ்சது. இருந்தாலும் ஊருக்கு போகும் போது இப்ப லண்டன்ல சாயங்காலம் காபி குடிச்சுட்டு பக்ஷணம் திண்கர சமயம் தெரியுமா?னு பெருமை பீத்தர்துக்கு உபகாரமா இருக்கும். இத்தனை நாட்டு பகல் ராத்திரினு நாம மாடா உழைச்சாலும் வருஷ கடைசில அப்ரைசல்ல, ‘குளோபல் எக்கனாமிக் டிப்ரஷன்! ஆன்சைட் மேனேஜருக்கு உக்காரும் இடத்துல ஆப்ரேஷன்!’னு சொல்லி தேங்காமூடியும் ஒரு தொண்னைல கொண்டைகடலை சுண்டலும் கைல குடுத்து ‘சர்வத்ர கோவிந்த நாம சங்கீர்த்தனம்!’னு சொல்லி அனுப்பிடுவா. நாமலும் ‘போன தடவை வெறும் தேங்காமூடி தான் இந்த தடவை பரவாயில்லை சுண்டலும் தந்தாளே!’னு மனசை தேத்திண்டு மறுபடியும் லண்டன் துரைக்கு How can i help you? மெயில் அனுப்பி விசுவாசத்தை காட்ட ஆரம்பிச்சுடுவோம். ‘ஹோம்வொர்க் சீக்கரம் எழுதி முடிச்சா ஐஸ் வாங்கி குடுப்பேன்!’னு ஸ்கூல் குழந்தேளை ஏமாத்தர மாதிரி வருஷ கடைசில ஆபிஸ்ல இருக்கும் எல்லா சமத்துகளையும் ஒரு பஸ்ல ஏத்தி ஊருக்கு ஒதுக்கு புறமா ஓசூர் போற வழில இருக்கும் ஒரு ரிசார்டுல கொண்டு போய் இறக்குவா. அந்த ரிசார்ட்டுல மீனா வந்து “சரக்கு வச்சுருக்கேன்! இறக்கி வச்சுருக்கேன்!”னு பாடிண்டே ஆடாதது ஒன்னுதான் பாக்கினு சொல்லும்படியா எல்லா வசதியும் பண்ணி வச்சுருப்பா. ஒரு பெரிய்ய்ய்ய அண்டா நிறைய ஐஸ்கட்டியை போட்டு அது நிறையா பீர் பாட்டிலை ரொப்பி வச்சுருப்பா. எங்க ஆபிஸ் பார்ட்டில முக்கால் காலுக்கு ஜீன்ஸ் டவுசர் போட்ட ஒரு டில்லி பிகர் தான் முதல்ல பாட்டிலை எடுத்து ஒரே மடக்குல பானகம் குடிக்கர மாதிரி குடிச்சு ஆரம்பிச்சு வச்சது. மத்தவா எல்லாரும் உடனே ஜோதில ஐக்கியம் ஆக ஆரம்பிச்சா, என்னை மாதிரி கோஷ்டிகள் மேங்கோ ஜூஸும் லேஸ் சிப்ஸும் நொசுக்கிண்டே டில்லி பிகர் இதுவரைக்கும் எத்தனை பாட்டில் உள்ள தள்ளினானு உக்காந்து கணக்கு போட்டுண்டு இருந்தோம்.                                                                                                                                         
இந்த மாதிரி கலகலப்பா பொழுது கழிஞ்சுண்டு இருக்கும் போது ஒரு நாள் எங்க டீம்ல இருந்த ஒரு ஆந்திரா அக்காவுக்கு அன்னிக்கி பொறந்த நாள்னு சொல்லி டீம்ல இருந்த எல்லார்கிட்டையும் தலைக்கு 100 ரூவா வசூல் பண்ணிண்டு இருந்தா. தண்டல் மாதிரி கட்டாயமா குடுத்தே ஆகனும் சுருக்கமா சொல்லணும்னா வட்டியில்லாத கடன். நம்மோட பொறந்த நாள் அன்னிக்கு இதே மாதிரி ரூவா போட்டு சட்டையோ டீ சர்டோ எடுத்து தருவா. எங்க டீம்ல இருந்த ஒரு அக்காவும் பக்கத்து டீம்ல இருந்த ஒரு பாலக்காடு அக்காவும் சேர்ந்து கமர்ஷியல் தெருவுக்கு போய் ஒரு டாப்ஸ் எடுத்துண்டு வந்து குடுத்தா. ஆந்திரா அக்காவும் உடனே போய் புது டாப்ஸை போட்டுண்டு வந்து பெருமையா நின்னா. வழக்கம் போல வாயை வச்சுண்டு சும்மா இருக்காம “எங்க ஊர் ரைஸ்மில்லுல ஈரமாவு மிஷினுக்கு மேல கட்டிதொங்க விட்ட துணி மாதிரி இருக்கு இதுக்கு போய் 600 ரூவாயா!”னு கேட்டுட்டேன். அவ்வளவுதான் அந்த ஆந்திரா அக்கா திரும்ப போய் டாப்ஸை கவர்ல போட்டு கொண்டு வந்து பாலக்காடு கைல குடுத்து ‘எனக்கு இது வேண்டாம் வேற மாத்தி குடுங்கோ!’னு சொல்ல மொத்த அக்காக்களோட கோவமும் என் மேல திரும்பிடுத்து. ‘இந்த பட்ஜெட்டுக்குள்ள அப்பிடி என்னதான் இவன் எடுக்கறான்னு பாப்போமே!’னு சொல்லிண்டே என்னை இழுத்துண்டு போய் ஒரு ஆட்டோல ஏத்தி ரெண்டு பக்கமும் ரெண்டு பேர் தப்பிக்க முடியாம உக்காந்துண்டு துணி வாங்கின கடைக்கு கூட்டிண்டு போயிட்டா.Fab india அப்பிடிங்கர அந்த கடைல காட்டன் டாப்ஸ் செக்ஷன்ல போய் தோண்டி துளாவ ஆரம்பிச்சேன். ஒரு கட்டத்துக்கு மேல அந்த சேல்ஸ்மேனுக்கு பொறுமை போய் இந்த அஞ்சு அலமார் முழுசும் நீங்க சொன்னது தான்! எடுத்துண்டு தொலைங்கோ!னு சொல்லிட்டு போனார். எனக்கு ஒரு பக்கம் பகீர் பகீர்னு இருந்தது. எங்க ஊர்ல தெருவுக்கு 10 பேர் பெண்களூர்ல தான் வேலை பாக்கரா. இவாளை பாக்கர்துக்கு வரும் அவாளோட அப்பா அம்மா பக்கத்து தெருல இருக்கும் பஞ்சமுக ஆஞ்சனேயரை சேவிச்சுண்டு சும்மா இருக்காம ரோட்ல தான் எங்கையாவது லாந்திண்டு இருப்பா. அவா கண்ணுல டாப்ஸும் கையுமா நான் மாட்டினேன்னா அதோட ஜோலி முடிஞ்சது. ஊருக்கு STD போட்டு “ஓஓஓ! விஷயம் தெரியுமாடி ! நம்ப தக்குடு பெண்களூர்ல யாரோ ஒரு பொண்ணு கூட கையை பிடிச்சுண்டு சுத்திண்டு இருக்கான். அந்த பொண்ணும் சாணா சுருணை மாதிரி ஒரு டிரெஸ் போட்டுண்டு இவன் மேல ஈசிண்டே இருந்தா!”னு ஒன்னுக்கு பத்தா கொளுத்தி போட்டுருவா. இந்த விஷயம் ஒவ்வொரு மாமியோட வாய் வழியா எங்க அம்மாகிட்ட போகும் போது “அவனுக்கு கல்யாணமே ஆயிடுத்தாமே!!” அப்பிடிங்கர நிலைமைல வந்து நிக்கும். இந்த பதட்டத்துக்கு நடுல ஆந்திரா அக்காவுக்கு சூப்பர் டிசைன்ல ஒரு டாப்ஸ் எடுத்து முடிச்சுட்டு திரும்பினா அங்க ஒரு காஜல் அகர்வால் காட்டன் டாப்ஸை பத்தி ஒரு காட்டான் கிட்ட கேட்டுண்டு இருந்தா. அவன் எல்லாத்துக்கும் போனை பாத்துண்டே ‘டிக்கே! டிக்கே!’னு சொல்லிண்டு இருந்தான்.

அவளுக்கும் நான் தேடின குமியலுக்கு நடுல இருந்து ஒரு பிங்க் கலரை எடுத்து குடுத்து உபகாரம் பண்ணும்படியா ஆயிடுத்து. சேல்ஸ்மேன் கிட்ட  “நெக்ஸ்ட் நைட்டி தேக்னா சாயே!”னு காஜல் அகர்வால் சொல்லவும் ‘ஆத்தாடி’னு ஓடியே வந்துட்டேன். அதுக்கு அப்புறம் மூனு வருஷத்துக்கு டீம்ல/ பக்கத்து டீம்ல யாருக்கு பொறந்த நாள்னாலும் டாப்ஸ் எடுக்கர செலக்ஷன் கமிட்டில நிரந்தரமா போட்டு சாகடிச்சா. போன வாரம் தங்கமணிக்கு இங்க இருக்கும் ஒரு மால்ல டிரெஸ் எடுத்துண்டு இருக்கும் போது “உங்களுக்கு டாப்ஸை பத்தி என்ன தெரியும்?”னு ஒரு கேள்வி கேட்கவும் இவ்ளோ விஷயம் ஞாபகம் வந்துடுத்து. ஹும்ம்ம்ம்! அது ஒரு காலம்!............