Thursday, February 2, 2012

இச்சு! இச்சு!.....

அது ஒரு காத்தால சமயம். என்னோட அதிகாரி மொட்டையா “10 முக்கியமான ஆணியை பிடுங்கு தக்குடு!”னு சொல்லிட்டு போயிட்டார். அவர் போனதுக்கு அப்புறம் தான் எந்த முக்கியமான ஆணி? அப்பிடினு ஒரே குழப்பம். ஒரு வார்தை கேட்டுட்டு வந்து பிடுங்கலாம்னு அவரோட யதாஸ்தானத்துக்கு போனேன். ஷேக்குகள் புடை சூழ நடுல நம்ப அதிகாரி உக்காச்சுண்டு இருந்தார். என்னை மாதிரி அவர் ஒரு வெட்டி ஆபிசர் கிடையாது, ஒரே சமயத்துல பத்து வேலையை சரியா பண்ணிமுடிக்கும் அசகாய சூரன். அதனால போன உடனே பக்கத்தாத்து ‘சூப்பர்’ மாமா கிட்ட "ஆத்துல இன்னிக்கி என்ன சமையல் மாமா?"னு பேச ஆரம்பிக்கரமாதிரி இல்லாம பத்து நிமிஷம் காத்துண்டு இருந்தாதான் பேச முடியும். பத்து நிமிஷத்துல நம்மோட பாழாபோற காதும் கண்ணும் எவ்வளவு விஷயத்தை க்ரஹிக்கர்து? ‘சிந்தையை அடக்கி சும்மா இருக்கும் திறன் அரிது!’னு சித்தர்கள் எல்லாம் சும்மாவா சொல்லியிருக்கா.

பக்கத்துல ரெண்டு ஷேக்குகள் குசலம் ஜாரிச்சுண்டு இருந்தா. குசலம் விசாரிக்கர்துல ஷேக்குகள் நம்ப ஊர் மாமிகளை எல்லாம் மிஞ்சிடுவா. “ஷேக்கு! உங்க ஆம் பத்திண்டு எரியர்து ஓய்ய்ய்!”னு அவா கிட்ட நாம சொல்லபோனாலும் “தக்குடு செளக்கியமா? குடும்பம் செளக்கியமா? ஆத்துல கன்னுகுட்டி செளக்கியமா?னு வரிசையா ஒரு பத்து விஷயம் குசலம் விசாரிப்பா. இதுக்கு எல்லாம் பதில் சொன்னதுக்கு அப்புறம் தான் நாம போன ஜோலியை பாக்கமுடியும். நிறையா பேர் குசலம் ஜாரிச்சு முடிஞ்சதுக்கு அப்புறம் என்ன காரியத்துக்கு வந்தோம்னு மறந்து போயி திருப்பி வந்த கதை எல்லாம் நான் பாத்துருக்கேன். “யெஸ்ஸ்ஸ் ஐ காட் இட்!”னு சொல்லிட்டு கைவீச்சும் கால்வீச்சுமா நாம திரும்ப போனா, ஈவு இரக்கமே இல்லாம மறுபடியும் முதல்லேந்து குசலம் விசாரிப்பா. “முதல் ப்ளோர்லேந்து இரண்டாம் ப்ளோர் போயிட்டு 2 நிமிஷத்துல திரும்பி வரர்துக்குள்ள எனக்கு என்ன பேதியா புடுங்க போகர்து”!னு மனசுக்குள்ள ஆத்திரமா வந்தாலும் ஆத்து மாமி நாலாவது தடவையா தோசைபுளி வாங்கர்துக்கு அனுப்பினாலும் அன்றலர்ந்த செந்தாமரையாட்டமா மூஞ்சியை வச்சுண்டு போகும் மாமாக்கள் மாதிரி தான் நம்ப முகத்தை வச்சுக்கனும்.

பாருங்கோ! இவா கூட இருந்து இருந்து நானும் சொல்லவந்த விஷயத்தை விட்டுட்டு நம்ப இட்லி மாமி மாதிரி என்னென்னவோ பேசிண்டு இருக்கேன். அவா குசலம் ஜாரிச்சுண்டு இருக்கும் போது நான் என்னோட அதிகாரியை பாத்துண்டு இருந்தேன். திடீர்னு ‘இச் இச்!’னு ஒரு சத்தம். “எவன்டா அது ஆபிசுக்கு உள்ள வச்சு ‘இச்’ குடுக்கர்து?”னு பாத்தா பழைய ஜோடிகள் தான். அட ராமசந்த்ரா!!! எல்லாருக்கும் இப்படிதான் ‘இச்’ குடுப்பாளா?னு மனசுக்குள்ள ஆச்சர்யபட்டுண்டு இருக்கும் போதே எங்க அதிகாரி “எல்லாருக்கும் தரமாட்டா, அவாளுக்குள்ள மட்டும் தான் குடுத்துப்பா!”னு சொன்னார். நன்னா கவனிச்சு பாத்ததுல எல்லாருமே கன்னத்தோட கன்னம் தான் இடிச்சுக்கராளே தவிர நேரடி இச் குடுக்கர்து இல்லை. அந்த சமயத்துல வெறும் இச் சத்தம் மட்டும் குடுக்கரா!னு தெரிஞ்சது. தெனாலி படத்துல கமல் சொல்லற மாதிரி அவாளே டப்பிங் குடுத்துக்கரா.

இந்த காட்சியெல்லாம் பாத்த உடனே எனக்கு பெங்களூர் ஆபிஸ்ல நடந்த விஷயங்கள் தான் ஞாபகத்துக்கு வந்தது. நம்ப ஊர்ல மனுஷாளுக்கு மனுஷா சினேகபாவத்தோட பழகர வழக்கமே போயிடுமோ!னு பயப்படர அளவுக்கு மனுஷாளோட மன நிலை இருக்கு. ஒருத்தர் கிட்ட ஒரு வேலையை செய்யசொல்லி கேக்கறோம்னா நேரா போயி வேலையை மட்டும் சொல்லி, இதை பண்ணுங்கோ! அதை பண்ணுங்கோ!னு மெஷின் கிட்ட சொல்லறமாதிரி சொல்லக்கூடிய மனோபாவம் ஜாஸ்தி ஆகிண்டு இருக்கு. மெஷினுக்கே ஆயில்,கிரீஸ் இத்யாதிகள் எல்லாம் போட்டாதான் வேலை பாக்கர்து, அப்போ மனுஷாளோட நிலைமையை என்ன சொல்லர்து.தோஸ்த்......

அதுக்காக வெட்டி வம்பளப்பு அடிக்கனும்னு அர்த்தம் பண்ணிக்கவேண்டாம். ஒரு இஷ்டமான சூழ்னிலை இருந்தாதானே வேலை பண்ணனும்னு தோனும். அடியேன் முதல்ல இருந்த டீம் 'வானத்தை போல' மாதிரி ‘எங்கள் டீமில் எல்லா நாளும் கார்த்திகை’னு எங்க டீம் லீட் பாடினா நாங்க எல்லாரும் 'லா ல லா'னு கோரஸ் குடுக்கர அளவுக்கு ரொம்ப இணக்கமா இருந்தது. யாரோட கண்ணு பட்டுதோ தெரியலை என்னை மட்டும் தூக்கி எதோ ஒரு உப்புமா ப்ராஜக்ட்ல போட்டுட்டா. நம்ப ஜாதகத்துல கிரகனாதன் சப்பளம் போட்டு ஸ்திரமா உக்காச்சுக்காம ஆடிண்டே உக்காந்தார்னா ஆள் இல்லாத ஊருக்கு டீ ஆத்தற மாதிரி ஒரு ப்ராஜெக்ட்ல நம்மை தூக்கி அடிக்கும். ‘போலாந்துல இருக்கும் எருமை மாடு ஏன் சாணி போடமாட்டேங்கர்து?’னு அனாலிஸிஸ் பண்ணி ஒரு ரிப்போர்ஃட் குடுக்கர மாதிரி ஒரு சூப்பர் ப்ராஜெக்ட்ல போட்டா. தலையெழுத்தை நொந்துண்டே அங்க போனா ப்ராஜெக்ட் சமாசாரம் எல்லாம் போலிஷ் மொழில இருக்கு. ‘கிழிஞ்சது கிருஷ்ணகிரி! மலையாளமா இருந்தா கூட ‘அதே அதே!’னு கோபிகாகுட்டி மாதிரி மண்டையை ஆட்டி சமாளிக்கலாம் போலிஷ் எல்லாம் வாய்ப்பே இல்லை!’னு தலைல கைய வச்சப்பதான் ‘கவலைபடாதேடா கோந்தை! ஒரு போலாந்து அம்மணி உனக்கு எல்லாத்தையும் மொழிபெயர்த்து தருவா!’னு சொல்லி மேனஜர் சமாதானபடுத்தினார்.

அந்த அம்மணி எனக்கு மட்டும் தான் மொழிபெயர்பா போலருக்கு!னு நம்பிண்டு அங்க போனா, இதே டயலாக்கை பத்து ப்ராஜெட் ஆட்கள் கிட்ட சொல்லி அனுப்பி இருக்கார் அந்த மேனஜர் பிருகஸ்பதி. ரேஷன் கடைல மாசக்கடைசில மண்னெண்ணெய் வாங்கர்துக்கு எங்க ஊர் மாமாக்கள் போட்டி போடர மாதிரி ஒரு பெரிய வரிசை அந்த பொம்ணாட்டி பக்கத்துல. அந்தம்மா குடுக்கர மொழிபெயர்ப்பு ‘பத்துக்கு அஞ்சு பழுதில்லை’னு சொல்லும்படியா இருந்தது. எனக்கு வந்து வாச்ச கிளைண்ட் பிரகாஷ்ராஜ் மாதிரி ‘அதுக்கு முன்னாடி என்னவோ சொன்னியே! ரெண்டுக்கும் நடுல ஒன்னு சொன்னியே!’னு பொசுக்கி எடுக்கர ஆளாயிருந்தான். அவன் கேட்ட டவுட்டை எடுத்துண்டு இந்தம்மா கிட்ட போனா இவங்க ‘பெட்ரமாக்ஃஸ் லைட்டே தான் வேணுமா?’னு கேப்பாங்க.

இது கதைக்கு ஆகாது!னு முடிவு பண்ணி அடுத்த தடவை அந்த போலாந்து பொம்ணாட்டி கிட்ட பேசும்போது வேலை சம்பந்தமா எதுவுமே பேசலை. உங்களுக்கு எந்த ஊர். அப்பாம்மா எல்லாம் எங்க இருக்கா? குழந்தேள் எல்லாம் எந்த தாத்தாவாத்துல இருக்கா?னு எல்லாம் கேட்ட உடனே அவா கண்ணுல ஜலமே வந்துருத்து. ‘இது வரைக்கும் சாப்பிட்டையா?னு கூட யாரும் என்னை ஜாரிச்சது கிடையாது, நீ ஒருத்தனாவது என்னை மனுஷியா நினைச்சயே!’னு சொல்லி ஒரே 'பீலிங்க்ஸ் ஆஃப் போலாந்து' ஆயிடுத்து. அதுக்கு அப்புறம் சும்மா ஆயில் மாத்தின 100CC மோட்டர்பைக் மாதிரி மொழிபெயர்ப்பு பிரமாதமா வர ஆரம்பிச்சது. போதாகுறைக்கு எனக்கும் போலாந்து பாஷையை எப்பிடி மொழிபெயர்க்கனும்னு கொஞ்சம் கொஞ்சம் சொல்லி தந்தா. அடுத்த மாசம் வந்த என்னோட பிறந்த நாள் அன்னிக்கு, ஒரே ஒரு எக்ளர்ஸ் சாக்லேட் தான் அவாளுக்கு குடுத்தேன். எல் கே ஜி குழந்தேள் மாதிரி கையை பிடுச்சுண்டு ஒரு ‘ஹேப்பி பர்த்டே டூ யூ!’ பாட்டு பாடினா பாருங்கோ! பி சுசீலா இங்கிலீஷ்ல பாட்டு பாடின மாதிரி இருந்தது. என்னோட லைஃப்ல அப்பிடி ஒரு பாட்டு எனக்கு யாரும் பாடினது இல்லை. மனுஷாளோட மனசை வாசிக்க தெரிஞ்சதுன்னா வாயால பேசும் மொழி ஒரு தடையே கிடையாது.

அதே மாதிரி இங்கையும் சூடான் சிங்கத்துகிட்ட சொல்லி இவாளோட குசலம் ஜாரிக்கும் வார்த்தை எல்லாத்தையும் அரபில பேசர்துக்கு கத்துண்டேன். ஒரு நாள் காத்தால சமயம் கத்துண்ட வார்த்தையை ஷேக்கு கிட்ட சொல்லி டெஸ்ட் பண்ணி பார்த்தேன். அவருக்கு பயங்கர சந்தோஷம். கமல் மாதிரி கட்டிபுடி வைத்தியம் பண்ண வந்துட்டார். என்னோட அதிகாரிக்கு பயங்கர ஆச்சர்யம். ‘ஷேக்கு எதுக்கு உன்னை கட்டிண்டு இருக்கார்?’னு சிரிச்சுண்டார். ஒரு வாரத்துக்கு நான் செண்டே போடவேண்டிய அவசியம் இல்லாத அளவுக்கு ஷேக்கு மேல ஒரு வண்டி செண்ட் வாடை. ‘இச் இச்’ டப்பிங் குடுக்கர்துக்கு முன்னாடி எஸ்கேப் ஆகி ஓடி வந்துட்டேன்.....:)