'பெங்களூர்ல எங்க தங்கினாய்?'னு யாரோ போன போஸ்ட்ல கேட்டு இருந்தா. ஒரு அக்காவாத்துல தான் தங்கி இருந்தேன். என்னோட சொந்தக்காராளாத்துல கூட அவ்ளோ அழகா உபசாரம் பண்ணுவானு சொல்லமுடியாது. இந்த அக்கா & அத்திம்பேர் ரெண்டுபேருமே ஓசி பேப்பர் வாசிக்கரவா. “போஸ்ட் & கமண்ட் எல்லாம் படிச்சுட்டு சிரிப்போம், ஆனா கமண்ட் போடமட்டும் மறந்துபோயிடர்து தக்குடு!”னு சொல்லுவா. மத்தியானத்துக்கு அழகா பொரிச்சகுழம்பும் தேங்காயிட்ட கீரையும் பண்ணியிருந்தா. “கமண்ட் எல்லாம் வேண்டாம் அக்கா, அதுக்கு பதிலா அடுத்த தடவையும் இந்த பொரிச்சகுழம்பு & தயிர் கிச்சடியை மறக்காம பண்ணிடுங்கோ!”னு சொல்லிட்டேன். சிருங்கேரினு சொன்னாலே என்னோட உடம்பும் மனசும் புத்துணர்ச்சி ஆயிடும். பெங்களூர்ல இருந்த வரைக்கும் வருஷத்துக்கு 2 தடவையாவது போயிட்டு வந்துண்டு இருந்த ஒரு ஸ்தலம். சில சந்தோஷங்களை வார்த்தையால வர்ணிக்கமுடியாது, அதை அனுபவிச்சாதான் புரியும். சிருங்கேரி அந்த வகையை சேர்ந்தது. சிருங்கேரியின் சிறப்பை தனி பதிவா உம்மாச்சி ப்ளாக்ல போடலாம்னு இருக்கேன்.
சிருங்கேரிலேந்து மறுபடியும் பெண்களூர் வந்தேன். பெங்களூர்ல இருந்தது 2 நாள் ஆனா 4 நாளைக்கு பண்ண வேண்டிய வேலையை ப்ளான் பண்ணிண்டு போயிருந்தேன். கடைசில எங்க தாத்தா அடிக்கடி சொல்லும் மலையாள வசனமான "பட்டி சந்தைக்கு போன கதை" ஆயிடுத்து. சந்தைக்குள்ள நாய் இடுப்பை இடுப்பை ஆட்டிண்டு அவசர அவசரமா போகுமாம், ஆனா அது வாங்கவும் செய்யாது, விற்கவும் செய்யாது. அது மாதிரி சிலபேர் கைவீச்சும் கால்வீச்சுமா போவா ஆனா ஒரு காரியமும் பாக்காம திரும்பவருவா. என்னோட கதையும் அப்பிடி ஆயிடுத்து. பெங்களூர்ல இருக்கும் ஆழ்வார்குறிச்சி மாமா & வி. கடவுள் ஆத்துக்கு ஆசை ஆசையா கூப்பிட்டு இருந்தா. இந்த களோபரத்துல ரெண்டு பேராத்துக்கும் போகமுடியலை. ஆழ்வார்குறிச்சி மாமா “எங்காத்து பிளாட்டுலேந்து பாத்தா ஸ்விம்மிங் பூல் தெரியும் தக்குடு!”னு ஸ்பெஷல் ‘ஹிண்ட்’ எல்லாம் குடுத்து இருந்தார். ஹும்ம்ம்ம்ம்! அவாத்து மனுஷாளை பாக்கர்த்துக்காக இல்லாட்டியும் அந்த ஸ்விம்மிங் பூலுக்காகவாவது ஒரு எட்டு போயிட்டு வந்து இருக்கலாம். என்ன பண்ணர்து.... எங்க ஊர் கோமா மாமி சொல்ற மாதிரி "ஆசை இருக்கு தாசில் பண்ண, அதிர்ஷ்டம் இருக்கு மாடு மேய்க்க". அடுத்த தடவை பெங்களூர் போகும் போது என்ன ஆனாலும் அந்த ஸ்விம்மிங் ஃபூலுக்கு... oopss!! மன்னிக்கவும், அந்த மாமாவாத்துக்கு போயிட்டுதான் வரணும்.
கிஷ்கிந்தா காண்டம் முடிஞ்சு சுந்தர காண்டம் வந்த கதையா நானும் பத்து நாள் சதுர்த்தி உத்ஸவத்துக்கு நடுல கல்லிடையை பார்க்கும் ஆர்வத்தோட கல்லிடை காஸ்மோபொலிடனை நோக்கி பிரயாணத்தை தொடர்ந்தேன். அடியேன் போய் சேரும்போதே இரண்டாவது நாள் சதுர்த்தி உத்ஸவம் நடந்துண்டு இருந்ததால தெரு முழுசும் பெரிசு பெரிசா கன்யா கோலம் & பாதி தெருவுக்கு பந்தல்னு ஒரே அமர்களமா இருந்தது. “துபாய்க்கும் கல்லிடைக்கும் சீஸன் டிக்கெட் எடுத்துருக்கையாடா தக்குடு!”னு ஒரு மாமி வயத்தெரிச்சல் பட்டா. நானும் லக்ஷத்தி எட்டாவது தடவையா “நான் இருக்கர்து துபாய் இல்லை தோஹா!”னு அந்த மாமிட்ட சொல்லிண்டு இருக்கும் போதே “துபாய்லேந்து எப்ப வந்தைடா?”னு ‘சூப்பர்’ மாமா கேட்டார். அவாத்து மாமி யூஸ் பண்ணர பினாயிலை கூட “சூப்பர் பினாயிலாக்கும்”னு பீத்தர்தால அந்த மாமாவுக்கு ‘சூப்பர் மாமா’னு பத்து வருஷம் முன்னாடி எங்க தெருல பேர் வச்சா.
கன்யா கோலம்!!
தெருல ஒரு கோட்டை வம்பு இருந்தது. உள்ளதுலையே டாப் மோஸ்ட் ‘சந்தனகும்பா’ மாமியாத்து சண்டை தான். நம்ப ‘சந்தனகும்பா’ மாமிக்கும் அவாளோட நாட்டுப்பொண்னுக்கும் சண்டை மண்டை உடையர்து. மே மாசம் கூட ரெண்டு பேரும் ஜெயலலிதாவும் சசிகலாவும் மாதிரி கழுத்தை கட்டிண்டு இருந்தா, இப்ப என்னவோ ஜெவும் விஜயகாந்தும் மாதிரி இருக்கா. “நான் அடிச்சா தாங்கமாட்ட நாலு நாளு தூங்கமாட்ட!”னு வீரவசனம் எல்லாம் இரண்டு பேரும் பரஸ்பரம் பரிமாறிக்கரா. இவா ரெண்டு பேரோட சத்தம் ஜாஸ்தியா இருந்ததாலையோ என்னமோ இந்த தடவை கூம்பு ஸ்பீக்கர் & மைக் செட்டு எதுவுமே பந்தல்ல கட்டலை. காத்தால சமயம் எல்லாம் ‘காவிய புதன்’ மாதிரிதான் ரெண்டு பேரும் நடமாடரா, சாயங்காலம் ஆயாச்சுன்னா ‘அதிரடி’ வியாழனா மாறிடரா. பகவான் தான் காப்பாத்தனும் அவாத்து ஆம்பிளேளை. தெருல இருக்கும் மாமா மாமிகள் எல்லாம் திருமதி. செல்வம்,அத்திப்பூக்கள், நாதஸ்வரம் சீரியல்ல வரும் கதையை பேசிக்கர மாதிரியே இவா கதைல இன்னிக்கி என்ன திருப்பம்?னு பேசிக்கரா.
தெருக்குள்ள மெட்ராஸ் ஐ மாதிரி ஒரு வியாதி எல்லா மாமிகள்கிட்டயும் பரவி இருக்கர்தால நம்ப ‘குண்டல’ கோமா மாமி பயங்கர மூடவுட்ல இருந்தா. எல்லா மாமிகளும் ஆளுக்கு ஒரு ஜிமிக்கியை போட்டுண்டு லாந்தர்து தான் கோமா மாமியோட மூடவுட்டுக்கு காரணம். ‘ஜிமிக்கி போட்டா 10 வயசு குறைச்சு காட்டும்’னு ம@#$ர் மலர்ல யாரோ கிளப்பிவிட்டதை நம்பி எல்லா மாமிகளும் ‘உஜாலாவுக்கு மாறிட்டோம்’ மாதிரி மாறியிருக்கா. ‘கட்டுகுட்டு’னு இருக்கரவா எல்லாரும் எப்பிடி நமிதா ஆகமுடியாதோ, அதேமாதிரி குண்டலம் போட்டவா எல்லாரும் கோமா மாமி ஆகமுடியாது!”னு சொன்னதுக்கு சன்மானமா எனக்கு மாமி கையால கோகுலாஷ்டமி பக்ஷணமும், முதுகுல இரண்டு அடியும் கிட்டினது. அவாத்து மாமா அப்பிடியேதான் இருக்கார். அப்புறமா வாய்கால்ல வெச்சு ‘குசுகுசு’ குரல்ல “நமிதாவை பத்தி மாமிட்ட என்னவோ சொல்லிண்டு இருந்தியே?”னு ரொம்ப ஆர்வமா கேட்டார். “துபாய்ல தான் எங்க அக்காபொண் ஹரிணி இருக்கா, நீ அவாத்துக்கு போயிட்டு வாயேன்!”னு ஒரு மாமி நீட்டிமுழக்கினா. ‘துபாய்க்கு போகர்துக்கு விசா/பிசா எல்லாம் வாங்கனும் மாமி’னு சொன்னாலும் அவாளுக்கு புரியமாட்டேங்கர்து. “உங்க ஊருக்கு பக்கத்துலதான் துபாய்!னு சொன்னியே தக்குடு!”னு அவாத்து மாமா விடாம கேட்டார். “ஆமாம் மாமா அப்பிடிதான் சொன்னேன், ஆனா ரெண்டும் வேறவேற தேசம்!”னு சொல்லியும் சமாதானம் ஆகலை. ‘அவாத்துக்கு போ! இவாத்துக்கு போ!’னு வாய்கிழிய சொல்லுவாளே தவிர ஒருத்தராவது விலாசமோ போன் நம்பரோ தந்துடமாட்டா. ‘அக்காபொண்ணு ஹரிணி’னு கூகிள்ல அடிச்சுபாத்தா இவாளோட ஆத்து அட்ரஸை கண்டுபிடிக்கமுடியும்.
அடியேன் கல்லிடை போன சமயம் இங்க தோஹால இருக்கும் கருங்குளம் மாமா & குடும்பம் இந்தியா வந்திருந்தா. மாமி ஊர்ல இல்லாத சமயத்துல மாமா பில்டர் அடிச்சு ஒரு காப்பி போடுவார் பாருங்கோ!! அதை அங்கவஸ்தரத்துல அலுங்காம வாங்கி உறியர்துக்குனு இங்க தோஹால ஒரு வெட்டிகூட்டமே இருக்கு. அவாத்து மாமிக்கு கல்லிடைங்கர்தால அவாளையும் “ஒரு நாளைக்கு கருங்குளத்துலேந்து கல்லிடை வாங்கோளேன்!”னு அழைச்சுருந்தேன். கோவில்/பூஜைனு எது சொன்னாலும் “ஓ வரோமே!”னு ஒன்னுபோல சொல்லும் லட்சிய தம்பதிகள். அவாத்து மாமா நடக்கர்தே ஓடரமாதிரி தான் இருக்கும், காந்தியடிகளோட தண்டியாத்திரைக்கு பின்னாடி ஓடினவா மாதிரி மாமி ஓட்டமும் நடையுமா மாமா பின்னாடி வந்தா. கல்லிடைல முக்குக்கு முக்கு மாமியை நிப்பாட்டி எல்லாரும் பழைய கதையெல்லாம் பேச ஆரம்பிச்சதுல சாயங்காலம் 5 மணிக்கு வந்த மாமாவோட கார் கல்லிடைலேந்து திரும்பி போகும் போது ராத்ரி மணி 10.
போன தடவை அடியேன் யானைல கும்பம் கொண்டு வந்தபோதே ஒரு அம்பிக்கு அவன் ஏறமுடியலையே!!னு ரொம்ப குறை. அதனால இந்தவாட்டி அவனை யானை மேல ஏத்திவிட்டு வேடிக்கை பாக்கர்து!னு முடிவு பண்ணி கழுத்துல மாலையை போட்டு ஏற சொல்லிட்டோம். யானையோட பக்கத்துல போய் பாத்தா, போன தடவை காலால ‘ஓம்’ போட்ட அதே யானை. அவனுக்கு யானை கிட்ட போனதும் பயத்துல கையும் காலும் நடுங்க ஆரம்பிச்சுடுத்து. யானையோட காலை கட்டிண்டே நிக்கரானே தவிர ஏறமாட்டேங்கரான். அப்புறம் முக்கிமுனகி மேல ஏறி பின்பக்கத்தை பார்த்து உக்காச்சுண்டுட்டான். “திரும்பி நேரா உக்காருடா அம்பி!”னு சொன்னா “இனிமே எல்லாம் என்னால திரும்ப முடியாது வேணும்னா யானையை திருப்புங்கோ!”னு சொல்றான். பயங்கர காமெடியா இருந்தது அந்த அம்பியோட. இனிமே ஜென்மத்துக்கும் யானை பக்கமே வரமாட்டான்.
பெரிய பெரிய ஹோமங்கள், பதினாலு விதமான புஷ்பங்கள், கரையை தொட்டுண்டு ஓடின தாமிரபரணி, தரையை மூடின பச்சை வயல்கள், பெரிய பெரிய கோலங்கள்,அம்மா கையால் சமைத்த பருப்புருண்டை குழம்பும் கொல்லைபுரத்து கீரை, கணக்குவழக்கில்லாமா நொசுக்கின எல்லா மாமியாத்து கொழுக்கட்டை & கோகுலாஷ்டமி பக்ஷணம், பழைய தோஸ்துகளோட திண்ணைல அரட்டை & ‘டோங்கா’ கிண்ணத்துல சாப்பிட்ட கோவில் பிரசாதம் எல்லாம் எண்ணத்துல நிறைஞ்சு வண்ணத்துபூச்சியாய் திரும்பி வந்தேன்.......... (சுபம்)