Part 2 படிச்சாச்சா
தங்கமணி மேக்கப் போட்டு முடிச்சு அவளோட சேர்ந்து நாம போய் டிபன் சாப்பிடலாம்னு இருந்தா அதுக்குள்ள மச்சினனுக்கு புள்ளையே பொறந்துடும் அதனால கொழந்தகுட்டியோட சேர்ந்து நேரா டைனிங் ஹால் போயிட்டு காபி வித் பஜ்ஜி, போண்டா, காசி அல்வா மற்றும் சிலபல அயிட்டங்களை உள்ள தள்ளிட்டு கமுக்கமா ரூமுக்கு போயிட்டேன். “கீழ போய் மாப்பிள்ளை ரூம்லேந்து ஊக்குபின் வாங்கிண்டு வாங்கோ”னு அனுப்பிவிட்டுட்டா. ‘ஒரு அதிகாரியை ஊக்கு வாங்கிண்டு வா! பாக்கு வாங்கிண்டு வா!னு அனுப்பரையே நியாயமா’னு கேட்டா அவள் காதுலையே வாங்காம ‘நீங்க இன்னும் போலையா?’னு கேட்டா. தொலையர்து போ! வாங்கிண்டு வருவோம்னு அங்க போனா, எங்க மாமானார் ஒரு பக்கம் ஜிப்பாவுக்குள்ள மண்டையை விட்டுண்டு வெளில வராமா தவிச்சுண்டு இருக்கார், இன்னொரு பக்கம் மாமியாருக்கும் அவாளோட தோழிகளுக்கும் நிக்க வச்சு ‘ஏஷியன் பெயிண்ட்ஸ்’ வால்பட்டி வச்சு “சுவத்துக்கே லாமினேஷன் பண்ணி பாத்துருக்கேளா”னு கேக்காம ஒரு பியூட்டிஷியன் அக்கா எல்லாரோட முகத்துக்கும் வெள்ளை அடிச்சுண்டு இருந்தா. மேக்கப்புக்கு அப்புறம் ஒருத்தரையும் அடையாளமே தெரியலை. மாப்பிள்ளை அவன் பங்குக்கு அவனோட அக்காகாரி வாங்கி குடுத்த பெர்பியூமை சாம்பிரானி புகை மாதிரி உடம்பு பூரா அடிச்சிண்டு இருந்தான். அந்த ரூம்ல அதுக்கப்புறம் யாரும் பெர்பியூமே போடவேண்டாம் அவ்ளோ புகை. இதுக்கு நடுல அந்த பியூட்டிஷியன் என்னோட மோவாக்கட்டையை பிடிச்சுண்டு எனக்கும் வெள்ளையடிக்க பிரெஷ்ஷோட வந்துட்டா. ‘என்னோட சொந்த கல்யாணத்துக்கே ஸ்பின்ஸ் பவுடரும் ஒரு சீப்பும் தான் கொண்டு வந்தேன் நாங்க எல்லாம் born beauty’நு சொல்லிட்டு அவாள்டேந்து தப்பி பொழச்சு ஓடி வரர்துக்குள்ள போதும் போதும்னு ஆயிடுத்து. கல்யாணப்பொண்ணு ரெடியாகி வெளில வந்துடுத்து ஆனா என்னோட தங்கமணியும் மாமியாரும் மெக்கப் முடிஞ்சு வெளில வந்தபாடா இல்லை. “மாமா! நீங்களாவது சொல்லகூடாதா”னு என்னோட மாமனார்கிட்ட சொன்னா அவர் மாமியோட மேக்கப்புல அடையாளம் தெரியாம வேற எதோ மாமிகிட்ட போய் ‘இன்னும் எவ்ளோ நேரம்மா ஆகும்’னு கேட்டுண்டு இருந்தார். ஒரு வழியா எல்லாரும் மேடைக்கு வந்து ஆடி, பாடி, ஓடி எல்லாம் பண்ணினா. திடீர்னு எங்க மாமனார் அவரோட ஆத்துக்காரி கையை புடிச்சுண்டு ஆட ஆரம்பிச்சுட்டார். அந்த மனுஷன் கவனிக்காம வேற யாரோட கையையாவது மறுபடியும் புடிச்சுண்டு ஆடாம இருக்கனுமேனு எனக்கு கவலையா இருந்தது. ‘கல்யாணம் யாருக்கு’னு தெரியாம என்னோட மச்சினன் திருதிருனு முழிச்சுண்டு இருந்தான்.
ராத்திரி சாப்பாடும் ரொம்ப நன்னா இருந்தது. ‘கல்யாணத்துக்கு வந்ததுக்கு உங்கப்பா எட்டுமுழம் வேட்டியை குடுத்துட்டு ஆச்சுனு ஆக்கிட்டார், வந்த செலவை சாப்பிட்டுதான் சரிகட்டணும்’னு சொல்லிண்டே ‘பேபிக்கார்ன்’ காரக்கறி, பொன்னிறமா மெல்லிசான நெய்தோசையை சாப்பிட்டேன். காய்ஞ்சமாடு கம்புல பாய்ஞ்சமாதிரி ரவுண்ட் கட்டி அடிச்சாச்சு. அடுத்த நாள் காத்தால சீக்கரமே முகூர்த்தம், ‘வழக்கம் போல விடியவிடிய புடவை கட்டிண்டு இருக்காதே! பொண்ணு பொறுமையா இருந்தாலும் உன் தம்பி காத்துண்டு இருக்கமாட்டான். படக்குனு எடுத்து தாலியை கட்டிட்டு நாலு முடிச்சு போட்டாலும் போடுவான் அதனால மரியாதையை காப்பாத்திக்கோ’னு தங்கமணிட்ட சொல்லிண்டு இருந்தேன். மறு நாளும் கதவைதட்டி நாலு மணிக்கே அந்த மாமா காப்பியை குடுத்தார். ‘நீ என்னிக்காவது இப்படி தந்திருக்கையாடி?’னு கேட்டதுக்கு “திரும்பி தோஹா போகும் போது அந்த மாமாவையே கையோட கூட்டிண்டு போங்கோ! நித்யம் காப்பி போட்டுதருவார்”னு சொல்லிட்டா. வழக்கம்போல பொண்ணு ரெடி, “அத்திம்பேர்! அக்கா ரெடியா?”னு அந்த பொண்ணு பாவமா கேட்டுது. “ரெடி ஆயிண்டே இருக்கா! ‘எங்க திரும்பினாலும் ஷஷ்டயப்த பூர்த்தி சதாபிஷேகம் டிக்கெட்டா இருக்காளே, கல்யாணத்துக்கு உன்னோட ஒன்னுவிட்ட மாமா பொண்ணு ஒன்னு விட்ட அத்தை பொண்னெல்லாம் வரலையா? வந்துருந்தா மண்டபம் கொஞ்சம் கலர்புல்லா இருந்துருக்கும்’னு தயாள சிந்தனையோட சொல்லிண்டு இருக்கும் போதே, “இவனுக்கு ஆய் வருதாம்! போய் அலம்பி விடுங்கோ! நீங்கதான் அலம்பனுமாம்’னு தங்கமணி சொல்லிட்டு போயிட்டா. ‘யார் அலம்பினா என்ன? “நான் மட்டும் என்ன இங்கு நல்ல முறையில் ஆய் அலம்பித்தரப்படும்னு போர்டுமாட்டிண்டா உக்காந்துண்டு இருக்கேன்”னு சொல்லிண்டே போய் விஷ்வஜித்துக்கு அலம்பிட்டு வெளில வந்தா அத்வைதாவும் ‘அப்பா ஆய்!’னு நிக்கரா. “மண்டபத்துல இன்னும் யாரோட புள்ளகுட்டிக்காவது ஆய் அலம்பனுமா? இப்பவே வந்து லைண்ல நில்லுங்கோனு!”னு புலம்பிண்டே வெளில வந்தேன், ‘இந்த மொகரகட்டைக்கு ஒன்னுவிட்ட மாமா பொண்ணு கேக்கர்து”னு தங்கமணி வஞ்சுண்டு இருக்கா. ‘இப்படி குறுகின மனசு இருந்தா கொராணா மூனாவது அலை ஏன் வராது’னு மனசுல நினைசுண்டேன். நானும் ஒரு சந்தனகலர் ஜிப்பா & மறுபடியும் ஆய் அலம்பர்துக்கு அழைப்பு வந்தாலும் வரலாம் அப்பிடிங்கர்தால மடிச்சு கட்டிண்டு போகர்துக்கு தோதா ஒரு ஜரிகை வேஷ்டியை கட்டிண்டு மண்டபத்து ஜோதில ஐக்கியம் ஆகிட்டேன். தாலி கட்டும் போது பொண்ணோட அம்மாவும் அப்பாவும் அழவே இல்லை திடீர்னு பாத்தா தங்கமணியோட பெரியப்பா ரெண்டுபேரும் அழுதுண்டு இருக்கா. ‘இந்த சீன்ல சம்பந்தமே இல்லாம இவா ஏன் அழுதுண்டு இருக்கா’னு வீடியோகாரனுக்கு ஒரே குழப்பம். அப்புறம் மாப்பிள்ளையும் பொண்ணும் அக்கா அத்திம்பேர்கிட்ட ஆசிர்வாதம் வாங்கும் போது அக்காகாரி “நிம்மதியா சந்தோஷமா நன்னா செளக்கியமா இருக்கனும்”னு ஆசிர்வாதம் பண்ணினா. ‘கல்யாணம் ஆனதுக்கு அப்புறம் நிம்மதியா இரு!சந்தோஷமா இரு!னு ஆசிர்வாதம் பண்ராளே! கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசை கதைதான்’னு நினைச்சுண்டேன். ‘நன்னா பொறுமையா இரு! எது சொன்னாலும் சரிம்மானு சொல்லு! அவளே தப்புபண்ணினாலும் சாரிம்மானு சொல்லு ஓஹோனு இருக்கலாம்!’னு மச்சினனுக்கு ஸ்பெஷலா ஆசிர்வாதம் பண்ணினேன். ‘பொண்ணு பாக்கர்துக்கு பேசர்துக்கு நல்ல சாதுவா இருக்கால்லியா’னு எங்க மாமியார் என்கிட்ட தனியா வந்து மெதுவா கேட்டா. ‘உள்ள வரும்போது எல்லாரும் பாக்க சாதுவாதான் இருப்பா போகபோக தான் லெக்ஷ்மியா துர்காவானு தெரியும்’னு அவாளுக்கு தைரியம் சொன்னேன். “நீங்க சொன்னா சரியாத்தான் இருக்கும் மாப்ளே”னு சொல்லிட்டு போயிட்டா.