
வந்த விருதை ஒரு 6 பேருக்கு குடுக்கனும்னு ஆசைபடுகிறேன். விருது எல்லாம் தரும் போது வாங்குபவருடைய சிறப்புகள் எல்லாம் கொஞ்சம் சொல்லிட்டு அப்புறம் குடுக்கர்துதான் அழகு. சும்மா கதவை தட்டி சார் போஸ்டு! மாதிரி குடுக்க கூடாது. திருனெல்வேலி பக்கமெல்லாம் நாம எவ்ளோ பெரிய கோடீஸ்வரனாக இருந்தாலும் பெரிய வித்வான்களுக்கு நாமே நேரடியா மாலையோ/சால்வையோ எல்லாம் போட முடியாது, அந்த வித்வானுக்கு சமமான/உயர்வான வித்வத் உள்ள ஒருத்தர்தான் மரியாதை செய்யமுடியும். அதேபோல் இந்த விருதையும் வயது&அறிவு முதிர்ச்சி உடைய மரியாதைக்கு உரிய திவா அண்ணா தனது பொற்கரங்களால் வழங்கி கெளரவம் செய்வார். விருது வாங்கின வித்வான்களோட விருது,சால்வை மற்றும் பொற்கிழி எல்லாத்தையும் மேடைலேந்து அவா உக்காசுண்டு இருக்கர இடத்துக்கு கொண்டுவந்து சேர்ப்பது மட்டுமே தக்குடுவோட வேலை..:) விருது பெறும் அனைவருக்கும் தக்குடு செலவில் அரைகிலோ தோஹா தங்கம் பொற்கிழியாக வழங்கப்படுகிறது...;)

திருமதி.வல்லிசிம்ஹன்
வல்லியம்மா! என்று பதிவுலகில் அனைவராலும் அன்போடு அழைக்கப்படும் இந்த அம்மையாரை விரும்பாதவரே இல்லை!னு சொல்லலாம். எனக்கு மிகவும் பிடித்த திரட்டிப்பால் கூட சில சமயம் திகட்டிப் போகலாம், ஆனால் இந்த அம்மாவோட தித்திப்பான அன்பும், பரிவும் மிக்க பதிவுகள் திகட்டாத தெள்ளமுதேளோரெம்பாவாய்! எல்லாரும் நல்லா இருக்கனும்!னு இவாளோட பதிவுகள்ல வார்த்தைகளா மட்டும் இல்லாமல் மனதாலும் வாழ்த்தக்கூடிய அற்புதமான ஒரு பெண்மணி & பெண்களில் மணி! குறை என்பதே கண்ணுக்கு தெரியாமல் எல்லாவற்றையும் நிறைவாகவே பார்க்கும் நம்ப வல்லியம்மா எப்போதும் நிறைவான வாழ்வே வாழனும்னு கல்லிடை ஆதிவராகப் பெருமாளை நான் சேவிச்சுக்கறேன். ‘யதார்த்தம் கூடிய பாசம்’ என்ற பிரிவின் கீழ் இவருக்கு இந்த விருது வழங்கப்படுகிறது.
திரு.மதுரையம்பதி அவர்கள்
அம்பிகையை பற்றி அணு அணுவாக அலசி ஆராயக்கூடிய அற்புதமான ஒரு சாக்தர். பெங்களூர்வாசியான இந்த மதுரைக்காரர் பதிவுக்குள்ள நாம போனோம்னா நம்மையும் அறியாம அம்பாள் சம்பந்தமா நிறைய விஷயங்களை அறியலாம். இவருடைய செளந்தர்யலஹரி பதிவுகள் ஒவ்வொன்னும் அற்புதமான ஒரு அனுபவத்தை நமக்கு தரும். கொஞ்சம் கூட விளம்பர மோஹமே இல்லாமல் ஆத்மார்த்தமா எழுதக்கூடிய மிகச்சிலரில் இவரும் ஒருவர். இவருக்கு எல்லா ஸ்ரேயஸும் வாரி வழங்கவேண்டும் என்று பச்சைகிளியை கையில் பிடிக்கும் செல்லக்கிளியாம் மீனாட்சியையும் அவளின் ஆத்துக்காரரையும் பணிந்து துதிக்கிறேன். ‘அருள் மணக்கும் ஆன்மீகம்’ என்ற பிரிவின் கீழ் இவருக்கு இந்த விருது வழங்கப்படுகிறது.
திருமதி. ஷைலஜா அவர்கள்
'குழல் இனிது யாழ் இனிது என்பர் ஷைலஜாவின்
குரலை கேளாதோர்'
Shy + Lajjaa இங்கிலீஷ் & சமஸ்க்ருதம் என இரண்டு மொழியில் அர்த்தம் பார்த்தாலும் நாணம் எனும் அர்த்தம் வரும்படியான ஒரு பெயரை உடைய இந்த பெண்மணி ஒரு பன்முக படைப்பாளி. சிறுகதை, நாவல் என்று எல்லா பிரிவிலும் முத்திரை பதித்துக்கொண்டிருப்பவர். பக்கத்தாத்து மாமாவோட பையன் கல்யாணத்து ஜானுவாச போட்டோல நாம இருக்கர மாதிரி இந்த அக்கா ஜெயகாந்தன், இந்திரா செளந்தர்ராஜன் மாதிரியான பெரிய படைபாளிகளோடு ஒரே மேடையில் அமரும் வல்லமை உடையவர். இவருடைய வீட்டுக்கு நாம போனோம்னா அவருடைய தங்கக்கரங்களால் செய்த சூடான தூள் பக்கோடாவும், காசி ஹல்வாவும் நமக்கு கிட்டும். உங்களுக்கு யோகம் இருந்தா மதுரமான குரலில் ஒரு பாட்டும் கிட்டும். ‘பன்முக படைப்புகள்’ என்ற பிரிவின் கீழ் இவருக்கு இந்த விருது வழங்கப்படுகிறது.
திருவாளர் VGR அவர்கள்
என்னடா இது எதோ பெரிய MGR மாதிரி பேரு இருக்கே?னு போய் எட்டிப்பார்த்து நான் தேடிப்பிடித்த ஒரு நல்ல பதிவர். யாருக்கும் அவ்வளவாக பரிச்சயம் இருக்க வாய்ப்பு இல்லை. இவர் இங்கிலிபீஸில் மட்டுமே எழுதுவார் அதுவும் துரைமார்கள் பாணியில் இருக்கும். முழுவதும் இங்கிலிபீஸ்ல இருக்கும் அந்த வலைபூவில் முத்து முத்தா தமிழ்ல கமண்ட் போட்டு தக்குடு வேடிக்கை பார்க்கும்....:)இருந்தாலும் எனக்கு ‘தாம்பரம் பொண்கள்’ பதிவு மூலம் பரிச்சயமாகி, இவருடைய ‘A question’ பதிவு ஆத்ம விசாரம் போல ஆழமாக சிந்திக்க வைத்த ஒன்று. இவரோட The Lonesome house கதையை படிச்சுடனும்னு நானும் முயற்சி பண்ணித்தான் பாக்கறேன், ஆனால் வேலை பளுவின் காரணமாய் இயலவில்லை..;( 'வித்தியாசமான சிந்தனையாளர்' என்ற பிரிவின் கீழ் இவருக்கு இந்த விருது வழங்கப்படுகிறது
திரு. அண்ணாமலையான் அவர்கள்
'மலை வாத்தியார்'னு பிரியத்தோடு இவரை தக்குடு அழைப்பதுண்டு. விவேகானந்தர் மாதிரி கையை கட்டிக்கொண்டு போஸ் குடுக்கும் இவருடைய பதிவுகள் எதாவது ஒரு முக்கியமான சமுதாய பிரச்சனை தொடர்பாக ஆராயும் நோக்கில் இருக்கும். இவர் ஒரு பதிவுல போடர விஷயம் மட்டும் தக்குடு மாதிரி கத்துக்குட்டிகள் கைல இருந்ததுன்னா 6 பதிவு போட்டுடலாம். நித்தியமும் எதாவது ஒரு மொக்கை போடுபவர்களுக்கு நடுவில் வருஷத்துக்கு மொத்தத்துல 6 பதிவு இவர் போட்டார்னா அதிசயம்தான். ஆனால் இவர் பதிவு போட்டு 4 மாதங்களுக்கு தொடர்ந்து கமண்ட் விழுந்து கொண்டே இருக்கும். சமீபகாலங்களாக ஆளையே காணும், அனேகமா உண்ணாமலையம்மன் சமேதராக வந்து காட்சியளிக்கப் போறாரோ என்னவோ?..:) 'சிறந்த சமுதாய சிந்தனையாளர்' என்ற பிரிவின் கீழ் இவருக்கு இந்த விருது வழங்கப்படுகிறது.
திருமதி.மதுரம் அவர்கள்
பெயருக்கு ஏற்ற மாதிரியே நல்ல நகைச்சுவை உணர்வு இவருக்கு உண்டு. 'உடம்பை வளர்த்தேனே உயிரை வளர்த்தேனே' என்னும் திருமூலர் வாக்குப்படி உடம்பை நல்ல முறையில் வைத்துக் கொள்ளும் அருமையான சைவ உணவு பதார்த்தங்களை செய்து அதை போட்டோவுடன் போட்டு என்னை போன்ற சிறுகுழந்தைகளின் நாவில் எச்சில் ஊறச்செய்பவர். சைவ உணவுவைகைகள் மட்டுமே செய்து வருவது பாராட்டுதலுக்கு உரிய ஒரு விஷயம். 'சமையல் கலை திறன்' என்ற பிரிவின் கீழ் இவருக்கு இந்த விருது வழங்கப்படுகிறது.
முக்கியக் குறிப்பு - இன்னோரு விஷயத்தையும் இந்த சமயம் தெளிவுபடுத்த விரும்புகிறேன். தக்குடு ஒரு கற்பனை கதாபாத்திரம், உண்மையான ஆசிரியரின் குணாதிசியங்களில் இருந்து முற்றிலும் மாறுபட்ட ஒரு வடிவம்தான் தக்குடு! எல்லா மனுஷாளையும் சந்தோஷப்படுத்தி பாக்கர்துக்காக ஸ்ருஷ்டிக்கப்பட்ட ஒரு கானல் நீர். இங்கு பதியப்படும் செய்திகள் ஹாஸ்யத்தின் பொருட்டுமட்டுமே, எனவே படித்து/சிரித்துவிட்டு( நன்றாக இருந்தால் மட்டும்)அதை மறந்துவிடவும். இதை அடிப்படையாக கொண்டு ஆசிரியரின் உண்மையான உடன்பிறப்பிடம் கேள்விகள் எல்லாம் கேட்டு அவனுக்கு தர்மசங்கடத்தை உருவாக்கவேண்டாம். உண்மையான ஆசிரியருக்கு தெரிந்தது மட்டுமே எழுத வேண்டும் என்றால் Breakeven point in investment, Portfolio management, Institutional investors, Revised international accounting standard, Project inspection போன்றவை மட்டுமே எழுத முடியும்...:) மறுபடியும் சொல்கிறேன் தக்குடு ஒரு கற்பனை கதாபாத்திரம் & முற்றிலும் நிஜ ஆசிரியருக்கு சம்பந்தம் இல்லாத ஒரு ஸ்ருஷ்டிப்பு.