பல மாசமாவே "சமைத்துப் பார்", "சாப்பிட்டும் பார்", So & So அடுக்களை,Mrs. மடப்பள்ளி இந்த மாதிரி எந்த ப்ளாக் பக்கமும் தலை வெச்சே படுக்கர்து கிடையாது. So & So எதுக்கு போட்டு இருக்கை?னு யாரும் கேக்காதீங்கோ! நாம அஹஸ்மார்த்தா எதாவது பேர் போட்டா கூட அந்த பேர்ல ஒரு சமையல் ப்ளாக் இருக்க வாய்ப்புகள் அதிகம். இந்த ‘பாங்க்’ மாமி, ‘நைஜீரியா’ மாமி எல்லாரோட வாய்க்கும் நாம தான் அவல்.
சமையல் ப்ளாக் எழுதரவாளோட முக்கியமான பிரச்சனையே அவாளோட பதிவுக்கு போடும் போட்டோ தான். எல்லாரோட ஆத்துக்காரரும் பானோசானிக் / சோனி எல்லாம் வாங்கி தரமாட்டா, அதனால அங்க இங்கேர்ந்துதான் போட்டோவை ஆட்டையை போட்டு போஸ்ட் போட வேண்டி இருக்கு. இதுல சிலபல பஞ்சாயத்து எல்லாம் வந்துடர்து. பஞ்சாயத்துகளை தவிர்க்க சில யோசனைகளை பார்கலாம்.
‘தேங்காய் சாதம்’னு போஸ்ட் போடும் போது தேங்காயோட படம் எல்லாரும் போடத்தான் செய்வா, அதுக்காக “இந்த தேங்காயோட படம் என்னோட ப்ளாக்ல நான் போட்டது!”னு குழந்தையாட்டமா குத்தம் சொல்லகூடாது. போஸ்ட் போடறவாளும் கூகுளாண்டவர் கிட்ட ‘தேங்காய்’னு சர்ச்ச் குடுத்தாக்க பொள்ளாச்சில விளைஞ்ச தேங்காய்ல தொடங்கி பிலிபைன்ஸ்ல மூக்கு சப்பையா இருக்கும் ஒரு மாமா கைல வச்சுண்டு இருக்கும் தேங்காய் வரைக்கும் குடுக்கர்து. சமயத்துல பிள்ளையார் கோவில் வாசல்ல உடைச்ச சிதறு தேங்காய் படம் கூட வருது! அதுல எதாவது ஒன்னை எடுத்து போட்டுக்கோங்கோ!
இந்த டம்பளர் வசந்தபவனில் ஆட்டய போட்டது'னு பேர் எழுதி வெச்ச மாதிரி இருக்கும் போட்டோலையும் கை வைக்காம இருங்கோ. இதுல என்ன காமெடின்னா ஆத்து மனுஷாளை போட்டோ எடுத்து மூஞ்சி புஸ்தகத்துல போட்டாலும் சிலபேரோட போட்டோல "J@#i’s கிச்சன்" வாட்டர்மார்க் இல்லாம இருக்காது. “இந்த அக்கா எதுக்கு எல்லா போட்டோவையும் அடுக்களைல வெச்சே எடுத்துண்டு இருக்கா?”னு ரொம்ப நாளைக்கு புரியாம முழிச்சுண்டு இருந்தேன்.
பதார்தத்துக்கு பேர் குடுக்கும் போதும் எதாவது வித்தியாச குடுத்தாக்க பிரச்சனை வராது. பிள்ளையார் கோவில் விஷேஷத்துல ராத்ரி நோட்டீஸ் போர்டுல அதிகாலை "கஜ கிண்டி ஹோமம்"னு எழுதி வெச்சுட்டோம். காத்தால 5 மணிக்கு கோவில் வாசல்ல வழக்கம் போல ஒரே மடிசார் & பஞ்சகச்ச கூட்டம். கணபதி ஹோமம்தான் நடந்துண்டு இருந்தது. கணபதி ஹோமத்துக்கு யானை எல்லாம் வந்து இருந்தது. கூட்டத்துல இருந்த ஒரு மாமி மெதுவா “கஜகிண்டி ஹோமம்னு போட்ருக்கேளே?”னு இழுக்கவும், “ஆந்திரால எல்லாம் கணபதி ஹோமத்தை இப்படி தான் சொல்லுவா!”னு முகத்தை பாவமா வெச்சுண்டு சொன்ன போது கொஞ்சமா நம்பினாலும் அதுக்கு அப்புறம் கொஞ்சூண்டு ஒரு நமட்டு சிரிப்பு சிரிச்சு ‘போஸ்டாபிஸ்’ ஹரிகுட்டி காரியத்தையே கெடுத்துட்டான்.
பிலிப்ஸ் ரேடியோல திருனெல்வேலி ஸ்டேஷன்லேந்து அவசரமா இலங்கை ஸ்டேஷன் திருப்பின மாதிரி செல்லமா மன்னி நம்ப காதை முறுக்கிட்டா. ரெண்டு நாளைக்கு காது மடல்ல செம வலி. நிற்க! நீங்களும். இந்த மாதிரி ‘பிசிபேளாபாத்’ பத்தின போஸ்ட் போட்டாலும் ‘பகாளாபாத்'னு தலைப்பு குடுத்தாக்க கொஞ்சம் வித்தியாசமா இருக்குமோ இல்லையோ? அதுக்கு அப்புறம் கூகுள்ல ‘பகாளாபாத்’னு யாராவது தேடினா கூட நம்பளோடுது தான் முதல்ல வந்து நிக்கும். எதிகாலத்துல ‘பகாளாபாத்’னு போஸ்ட் போடும்போது பெயர் உபயம் தக்குடு!னு போடவேண்டிய அவசியம் ஏதும் இல்லை..:)

Mr. கஜராஜன்
எனக்கு தெரிஞ்ச ஒரு அக்கா இந்த மாதிரி எந்த பொல்லாப்புலையும் மாட்டிக்கவே மாட்டா. “கார்திகை பொரிக்கு பாகு செலுத்துவது எப்பிடி”, “பிள்ளையார் கொழுக்கட்டைக்கும் பிடிச்ச கொழுக்கட்டைக்கும் என்ன வித்தியாசம்?” இந்த மாதிரி பதிவா போட்டு எல்லாருக்கும் ப்ரண்ட் ஆயிட்டாங்க. நோம்பு அடையை பத்தி சொல்லவே இல்லையே?னு யாரும் கேக்காதீங்கோ!..:)) சிங்கபூர்ல இருக்கும் இந்த ‘நோம்பு அடை’ அக்காவோட வீடு ‘சரவணபவன்’ ஹோட்டல் மாதிரி எப்ப பாத்தாலும் விருந்தாளிகளால ரொம்பி வழியர்தா அங்க உள்ள லோக்கல் நியூஸ் பேப்பர்ல வந்து இருக்கு. இப்ப எல்லாம் சிங்கபூருக்கு போறவா அந்த ஊர்ல இருக்கும் சிங்கத்துக்கு பக்கத்துல நின்னுண்டு போட்டோ எடுக்கராளோ இல்லையோ நேரா இவாத்து காலிங் பெல்லை அடிச்சு ஒரு வேளை சாப்பாடாவது இவாத்துல சாப்பிடாம வரர்து கிடையாது. யாராவது கெஸ்ட் வரர்தை பாத்தாலே இவாளோட ரங்கமணி(அதான் நம்ப அத்திம்பேர்) "மேடத்துக்கு ஒரு ரவாஆஆஆ தோசை"னு ராகமா சொல்லி நக்கல் சிரிப்பு சிரிச்சுட்டு போறாராம்.
இன்னொரு அக்காவோட பானகம் போஸ்டை பத்தி ஒன்னுமே சொல்லலையே தக்குடு?னு ‘பாங்க்’ மாமி வம்புக்கு இழுத்தாலும் நான் எதுவும் வாயை திறக்க மாட்டேன்பா! பானகம் போஸ்டை எல்லாம் நக்கல் அடிச்சாக்க ராமர் உம்மாச்சி ராத்ரி ஸ்வப்னதுல வந்து கண்ணை குத்துவார்! அவாளோட ப்ளாக்ல அனேகமா கோகுலாஷ்டமிக்கு 'சுக்கும் சக்கரை' போஸ்ட் வந்தாலும் வரலாம், வந்தாக்க ஒரு வார்தை எனக்கும் சொல்லுங்கோ!..:)
குறிப்பு - இந்த போஸ்ட் சும்மா 'லூலூவாயிக்கு'தான். அதனால பத்தினி தெய்வங்கள் யாரும் தக்குடுவை திட்டி தீர்க்காதீங்கோ! அப்பிடியே திட்டினாலும் சம்பந்தப்பட்டவா மட்டும் திட்டுங்கோ,”ஒரு பிள்ளைபூச்சி சிக்கியிருக்கான் சும்மா இருந்தா வாடி!”னு அடிக்கர்துக்கு உங்க ப்ரண்டையும் போன் போட்டு கூட்டிண்டு வராதீங்கோ!...:) எல்லாரோட அர்சனையையும் நைஜீரியா மாமிக்கு அனுப்பி வைங்கோ!...:)