Thursday, December 15, 2022

கால்பந்து பைத்தியம் - Qatar FIFA 2022

 

போன மாசம் நவம்பர் 20ம் தேதிலேந்து இங்க தோஹால உலககோப்பை கால்பந்தாட்டம் நடக்கர்து. எனக்கும் கால்பந்துக்கும் ஒரு ஸ்னானப்ராப்தியும் கிடையாது. இங்க இருக்கரவாளுக்கு தெரிஞ்சது Football  எனக்கு தெரிஞ்சது எல்லாம் வெறும் Food balls (குலாப்ஜாமூன், மாலாடு,ரசகுல்லா,பருப்புருண்டை குழம்பு & Etc)  இருந்தாலும் ‘ஊர்ல கல்யாணம் மார்ல சந்தனம்’னு இருக்கும் எனக்கு எங்காத்துலையே விஷேஷம்னா சும்மா இருக்க முடியுமா.  இங்க இருக்கரவாளுக்கு கால்பந்துன்னா ஒரே பைத்தியம். இந்த ஊர் பைத்தியங்களையே சமாளிக்கமுடியாதுன்னா உலகத்துல இருக்கர எல்லா ஊர் பைத்தியமும் கடந்த ஒரு மாசமா இங்க தான் கூடி கும்மியடிச்சுண்டு இருக்கா. என்னை தூக்கி ஒரு ரயில்வே ஸ்லேஷன்ல ஒருமாசத்துக்கு ஸ்பெஷல் டூட்டி போட்டுட்டா. 'ரயிவே ஸ்டேஷன்ல என்னடா ஜோலி?'னு எங்க அம்மா போன்ல கேட்டா. ப்ளாட்பாரத்துல நிக்கரவா எல்லாரையும் ரயிலுக்குள்ள ஏத்தி விடனும் ரயிலுக்குள்ள இருக்கரவாளை இது அவா இறங்க வேண்டிய ஸ்டேஷனே இல்லைனு சொன்னாலும் விடாம கீழ இறக்கிவிடனும், எல்லாத்தையும் விட முக்கியமா புதுசா வந்தவாளுக்கு வழி சொல்லனும்னு சொன்னேன். பொதுவா கல்லிடைகுறிச்சிகாராளுக்கு இந்த வழி சொல்லர்து & விலாசம் சொல்லர்து எல்லாம் ரொம்ப பிடிச்ச விஷயம். சுகமா காத்தால தாமிரபரணில ஸ்னானம் பண்ணிட்டு வாசல் திண்ணைல உக்காசுண்டு எங்கேந்து வந்துருக்கேள்? யாராத்துக்கு போரேள்? என்ன ஜோலியா வந்துருக்கேள்?’னு வரிசையா கேள்வி கேக்கர்துன்னா ரொம்ப பிடிக்கும். அதுல இருக்கர சுவாரசியம் வேற எதுல இருக்கு சொல்லுங்கோ!




 விலாசம் சொல்லர்து சாதாரண விஷயம் கிடையாது. வந்து இருக்கும் பாதிபேருக்கு இங்கிலிஷ் தெரியாது பிரன்ஞ் ஜெர்மன் ஜாப்பனிஸ் ஸ்பானிஷ்னு நமக்கு தெரியாத எல்லா பாஷைலையும் பேசுவா. ஒரு பிரஞ்சுக்காரன் போஞ்சூர் போஞ்சூர்னு சொல்லரனே தவிர மேல விஷயம் என்னனே சொல்லமாட்டேன்கரான். நானும் பெண்களூர்ல வெச்சு கத்துண்ட ஓட்டை பிரஞ்சை வச்சு என்னவெல்லாமோ கேட்டாச்சு ஒரு பயனும் இல்லை. மறுபடியும் 'போஞ்சூர்/மூஞ்சூர்'னு வந்து நிக்கரான். கடைசில பாத்தா அவரோட ஆத்துக்காரி அடுத்த ரயில்ல வராளாம் ‘அவாளுக்கு காத்துண்டு நிக்கரேன்’னு சொன்னார். “தங்கமணிக்கு காத்துண்டு இருக்கரவனை தடிபோட்டு கிளப்பினாளும் ஒரு அடி நகரமாட்டான். சொன்ன இடத்துல நிக்கலைனா அப்புறம் என்ன ஆகும்னு அவனுக்கு தெரியும்!”னு சொல்லிட்டு மத்தவாளை போக சொன்னேன். ‘என் இனமடா நீ!’னு அவரை பாத்து சொல்லனும் போல இருந்தது. ஜப்பான்காரனுக்கு பேச ஆரம்பிக்கர்துக்கு முன்னாடி மூனு நமஸ்காரம், பேசும் போது நடுல ரெண்டு நமஸ்காரம் அப்புறம் முடிச்சதுக்கு அப்புறம் மூனு நமஸ்காரம் பண்ணனும். ரொம்ப மரியாதையான மனுஷா. நமக்குதான் பெண்டு கழண்டுரும்.

 

இந்த கூத்து போதாதுனு எனக்கு பேச்சாட்டு துணைக்கு ஒரு இங்கிலிஷ்காரனையும் இதே ஸ்டேஷன்ல போட்டுருக்கா. அப்பிடியே போடர்தா இருந்தாலும் ஒரு லெபனான் லேடியோ இல்லைனா ஸ்பெயின்காரியையோ போட்டா கொஞ்சம் கலகலப்பா இருக்கும் வேலையும்(அதாவது ஸ்டேஷன் வேலை) கொஞ்சம் சுவாரசியமா இருக்கும். ஆம்பிளையும் ஆம்பிளையும் காம்பினேஷன் நன்னா இருக்காதுடா கடன்காரானு எச் ஆர் கிட்ட சொன்னா கேட்டாதானே. அந்த வெள்ளைகாரனுக்கு பதில்சொல்லும்போதெல்லாம் வாய்ல ஒரு பொருவிலங்கா உருண்டையை போட்டுண்டு பேசவேண்டியிருக்கு. இல்லைனா 'பர்டன் பர்டன்'னு சொல்லி கழுத்தை அறுக்கரான்.  நீதான்டாப்பா எனக்கு பெரிய Burdenநு மனசுக்குள்ள சொல்லிப்பேன். ‘ராணி எலிசபத் இப்படி திடீர்னு அல்ப ஆயுசுல போயிட்டாளே உனக்கு எத்தனை நாள் சீதகம்? கோத்ர தாயாதியா?’னு துக்கம் விசாரிச்சேன். அவனும் ‘இப்படி திடீர்னு போவானு யாரும் எதிர்பாக்கலை! என்ன பண்ணமுடியும் எல்லாரும் ஒரு நாள் பகவான்கிட்ட போய்தானே ஆகனும்’னு இங்கிலிஷ்ல சொன்னான். கத்தார்காராளை விட மலையாளத்துகாராளைதான் கைலையே பிடிக்க முடியலை. என்னவோ அவா ஊர்ல எல்லாம் நடக்கரமாதிரி அவர்கள் போடும் சீன் தாங்கமுடியலை. “ஞான் நேற்று ராவுல மெஸ்ஸியை கண்டு! நாளை ரொனால்டொவை காணும்”னு இங்க இருந்து கேரளாவுக்கு போன் போட்டு அவா பண்ணும் அலப்பரைக்கு அளவே இல்லை கேட்டேளா? அதுவும் மலையாள சேச்சிகள் படுத்தரபாடு இருக்கே . ஊர்ல இல்லாத கம்பூனிஷ்டை கட்டிண்டு அழற மாதிரி இந்த சேட்டன்களுக்கு கிரிக்கட்டை விட கால்பந்து பிராந்து (பைத்தியம்) ரொம்ப அதிகம். ஸ்டேஷன்ல உக்காந்துண்டு ஒரு சேட்டன் வாய்ஸ் கால்ல கேரளால இருக்கும் அவரோட ஆத்துக்காரியோட பயங்கர சண்டை “ஞான் இவ்விடே ஒருபாடு பிசி கேட்டோ! ஞனக்கு சம்சாரிக்க இஷ்டமில்லடி! கால் கட்செய்யடி!”னு ஆரம்பிச்சு கத்த ஆரம்பிச்சுட்டார். சிவசிவா ராமராமா! அவரை சமாதானம் பண்ணர்துக்குல்ல போதும் போதும்னு ஆயிடுத்து. ஆத்துக்காரி கிட்ட எதுக்கு தேவையில்லாம சண்டைனு வெள்ளைக்காரன் என்னோட காதுல மெதுவா சொன்னான். சண்டை ஆரம்பிக்கும்போதே சேட்டன் கால் கட்பண்ணிட்டார் அதுக்கு அப்புறம் மனசு சமாதானம் ஆகரவரைக்கும் இங்க கத்தி இருக்கார். சேச்சி மட்டும் நேர்ல நின்னா இவ்ளோ பேச்சு சேட்டனால பேச முடியுமானு கேட்ட உடனே. சூப்பர் ஐடியானு வெள்ளைகாரன் வியந்தான். “வெள்ளைக்கார தம்பதிகளுக்குள்ள சண்டை வந்தா ரெடிகுளஸ்/குடிகுளஸ் என்னத்தையாவது அகராதியில் இல்லாத ரெண்டு கெட்ட வார்த்தையை சசிதரூர் மாதிரி திட்டிட்டு ரூம்ல போய் தனித்தனியா கதவை சாத்திண்டு சரக்கை அடிச்சுட்டு மல்லாக்க படுப்பேள் சண்டையும் சப்புனு முடிஞ்சுடும். ஆனா இந்தியாவுல இருக்கும் ரங்கமணிகள் அப்பிடி கிடையாதுனு சொன்னேன்.




 ஆரம்பத்துல ஒரு போட்டில அர்ஜன்டினாவை ஜெயிச்சுட்டு சவுதிஅரேபியாகாரனுக்கு தலைகால் புடிபடலை. ஒரே கத்தும் கூப்பாடுமா படுத்தி எடுத்துட்டான். தனுர் மாசத்து பஜனை கோஷ்டி மாதிரி எல்லாபயலும் வரும் போதே தாள வாத்தியம் கொட்டு பீப்பி சகிதமா வரான். ரயில்வே ஸ்டேஷன் உள்ள நுழையும் போதே ‘சரணு வேங்கட நாயகா!’னு வாசிக்க ஆரம்ப்பிச்சுருவா. சிலர் வேஷம் போட்டுண்டு வருவா. கிளி மாஞ்சாரோ பாட்டுக்கு ஆடின செட்டு அதே வேஷத்தோட அஹா அஹா!னு வந்துட்டா. இதெல்லாம் பரவாயில்லை ஒரு பிரெஞ்ச்காரன் கஷ்கத்துக்கு நடுல ஒரு சேவலை தூக்கிண்டு வந்துட்டான். கேட்டா போன மேட்ச்ல இந்த சேவல் சகிதமா வந்ததாலதான் எங்க ஊர் போட்டில ஜெயிச்சதுனு சொல்றான். ஒரு பிரெஞ்ச்காரி அப்பிடியே ரெட் வெல்வட் கேக் மாதிரி வந்தா. அடா அடா அடா! மொத்த ஸ்டெஷனும் ஆ!னு வாயை பொளந்துண்டு பாத்தா. ஸ்டேஷன் மாஸ்டர் வராத ரயிலுக்கு கொடி ஆட்ட ஆரம்பிச்சுட்டார். குரேஷியாகாரி மைதாமாவுல பண்ணின பொம்மையாட்டமா வந்தா. நான் டியூட்டில இருந்ததால எதையும் பாக்கலைனு தங்கமணிகிட்ட சொல்லிட்டேன். கல்யாணத்துக்கு முன்னாடி எல்லாத்துக்கும் சரி சரினு மாப்பிள்ளையாத்துல சொல்லிட்டு ஜானுவாசம் அன்னிக்கு மைசூர் போண்டாவுக்கு பதிலா வாழக்காய் பஜ்ஜி போட்டு ஏமாத்தர மாதிரி முதல்ல சரக்கு இத்யாதிகள் எல்லாம் உண்டுனு சொல்லிட்டு கடைசி சமயத்துல ‘எங்க அத்திம்பேருக்கு ஹார்ட் ஆப்பிரேஷன் ஆயிருக்கு அதனால தீர்த்தவாரி கிடையாது, மைதானத்துல சுத்தபத்தமா இருங்கோ’னு இந்த ஊர் ராஜா சொல்லிட்டார். அது வேற எல்லா பயல்களுக்கும் செம கடுப்பு. என்ன ஆகுமோ ஏது ஆகுமோ!னு கொஞ்சம் பயமா இருந்தது. ஆனா இதுவரைக்கும் ஆண்டவன் புண்ணியத்தில் யாவரும் நலம்.

பலவிதமான அழுத்தங்களுக்கு நடுல கத்தார் இந்த போட்டியை  'வளர்ப்புமகன்' கல்யாணம் மாதிரி ஜாம்ஜாம்னு நடத்தரா. எல்லாம் நல்லபடியா செளக்கியமா முடியனும்.