Saturday, February 27, 2010

ஆடு பார்கலாம் ஆடு - 3

புதுசா வந்திருந்தா அவங்களுக்கு Part1 Part2இந்த போட்டிக்கு நாம பாட்டெல்லாம் select பண்ணமுடியாது, அவா என்ன போடறாளோ அதுக்கு நாம ஆடனும்! என்றார்கள். ( இதுக்கு நீ ஒரு பெரிய பாறாங்கல்லை என்னோட தலைல போட்டுருக்கலாம்!னு சொல்லனும் போல இருந்தது) இந்தப் பக்கம் திரும்பினால் அரை லிட்டர் விளக்கெண்ணையை ஒரே கல்ப்புல குடித்து விட்டு வந்தது போன்ற ஒரு முகத்துடன் நம்ப பசங்க நின்று கொண்டு இருந்தார்கள். அது வந்து! என்று நான் ஆரம்பிப்பதற்கு முன்பே, எல்லாம் நாங்களும் கேட்டுண்டுதான் இருந்தோம்! என்று ஒரு ‘குலே பகவாலி’ சுரத்தே இல்லாமல் வழிமறித்து சொன்னான். ஆனா நம்ப டான்ஸ் இரண்டாவதுதான்! அப்படினு நான் Project Maneger மாதிரி சொல்லும்போதே, என்னது நம்ப டான்ஸா? எங்க டான்ஸ் அண்ணே! என்று இன்னொரு ‘குலேபகவாலி’ பயங்கர கடுப்போடு சொன்னான்.

நாங்க பேசிக்கிட்டு இருக்கும் போதே முதல் Team ஆடத்துவங்கியது, நாங்களும் கூர்ந்து கவனிக்க தொடங்கினோம்.

சைடுல நின்று கொண்டிருந்த நம்பியார்(ஏன்????னு பின்னாடி உங்களுக்கே புரியும்)கேசட்டை டேப்புக்குள் போட்டு பொத்தானை அழுத்தினான். அழகு மலர் ஆட!னு நம்ப ரேவதி வெள்ளை புடவை,சலங்கை எல்லாம் கட்டிண்டு ராமேஷ்வரம் கோவில் பிரகாரத்துல வளச்சு வளச்சு ஆடுவாங்களே! அதே பாட்டுதான். பரத நாட்டியம்ல! என்று சிங்கம்பட்டிகாரன்(ஆமாம், எங்களோட ‘கரகாட்டக்காரன்’ டீம் மெம்பர்ஸ் எல்லாரும் களத்தில் இருந்தார்கள்) சவுண்டு விட்டாண். டான்ஸ் டீம்ல இருந்த ஒரு கண்மணி, எனக்கு பரதம் எல்லாம் தெரியாது அண்ணே!னு மெதுவாக ஆரம்பித்தான். அடுத்த இரண்டாவது நிமிஷம், பா! பா! பக்கம் வா!னு ஒரு டிஸ்கோ பாடல் மேடையில் ஒலித்துக் கொண்டிருந்தது. எங்களுக்கு ஒரே குழப்பம். என்ன சொல்ல வராய்ங்கனே புரிய வில்லை.

இந்தப்பக்கம் திரும்பி பார்த்தா எங்க டான்ஸ் குரூப்ல இரண்டு டிக்கட்டை காணும். மொத்தமே மூனுபேர்தானேடா இருக்கீங்க! அப்படினு புலம்பிக்கொண்டே நாங்கள் அவர்களை தேடத் துவங்கினோம். நேரா ஓசி சமோசாவை நொசிக்கிக்கொண்டிருந்த அறிவிப்பாளர்ட போய், நல்லா இருப்பீங்க! எங்க டீமை கடைசி டீமா போடுங்க! அப்படினு கெஞ்சிக் கேட்டு கொண்டேன். அதெல்லாம் நடக்காத காரியம்! என்று மூத்தபதிவர்கள் போல பயங்கரமா பிஸ்து காட்டினார் அவர். அபிவாதயே! சொல்லி அவருக்கு நமஸ்காரம் மட்டும்தான் பண்ணலை, மற்ற அணிகள் இதற்கு ஒத்துக்கொண்டதால் வேறு வழி இல்லாமல் எங்க டீமை கடைசீல போட்டார் அந்த புண்ணியாத்மா.

காணாமப் போன நாதாரிகளை தேடுவதற்கு சிங்கம்பட்டிகாரன் தலைமைல ஒரு தனிப்படை போர்கால அடிப்படையில் அமைக்கப்பட்டு முடுக்கி விடப்பட்டது. இதற்கு நடுவில் மேலும் இரண்டு அணிகள் போட்டிலேந்து விலகி விட்டதாக Bombay sisters’ la ஒரு கொழந்தை வந்து தூது சொன்னது. டபக்குனு, எந்த டென்ஷனுமே இல்லாமல் POLO தின்றுகொண்டிருந்த கண்மணிட்ட போய் Solo-வா ஆட முடியுமா?னு கேட்டேன். அவன் பழையபடி பார்ட்னர் இல்லாம ஆடர்து ரொம்ப கஷ்டம்னே! என்று பழைய பல்லவியையே பாடினான். அறிவிப்பாளர் வேறு ரெண்டுபேர் குறைந்த பட்சம்!னு ரூல்ஸ் ராமானுஜம் போல பேசினார்.

சிங்கம்பெட்டிக்காரன் கிங்கு! காணாமல் போன நாதாரிகள் ஒரு வகுப்பரைக்குள் கதவை உள் பக்கமாக தள்ளிட்டுக்கொண்டு இருப்பதை கண்டுபிடித்து என்கிட்ட வந்து சொல்லிட்டான். நானும் போய், இறைவா தாள் திறவாய்! என் தலைவா தாள் திறவாய்! அப்படினு திருநாவுக்கரசர் மாதிரி என்னல்லாமோ சொல்லி பார்த்தேன். ம்ம்ம்ம்.... ஒன்னும் நடக்கலை. டஷ்ஷ்ஷ்ஷ்ஷ்னு! பக்கத்து ரூம்லேந்து அவர்கள் அணிக்கு மேக்கப் போட்டுக் கொண்டிருந்த ஒரு காயத்ரி (KRS அண்ணா, ஒரு பேச்சுக்குதான் இந்த பெயர், பின்னூட்டத்துல வந்து, அப்புறம் நம்ப காயத்ரி செளக்கியமா!னு எல்லாம் நோண்டக்கூடாது) தான் வெளியே வந்ததே தவிர, நாதாரிகள் வரவில்லை. நான் மிகவும் பதட்டமான சூழ்நிலையில் இருந்ததால், அந்த பிகர் அணிந்திருந்த தும்பை பூ நிறத்திலான பெரிய வெள்ளை நிற கவுன்,விரலில் போட்டிருந்த ரோஸ் கலர் நையில் பாலிஷ் என்று எதையுமே சரியாக கவனிக்க வில்லை.கதவை திறந்து வெளியே வந்தா நான் எதாவது சொல்லி அவங்களை மேடைக்கு அனுப்பிவிடுவேன் என்ற பயத்தில் நாதாரிகள் வெளில வரவே இல்லை.

வம்பா ஒரு பரிசு போகுமே!னு எனக்கு கவலை துளைத்து எடுத்தது. ஏதோ யோசனை வந்தவன் போல நம்ப Bombey sister’s பக்கம் திரும்பும் போதே, இல்லை!!! நீங்க தப்பா புரிஞ்சுண்டேள்!னு ‘சேது’ அபியோட டயலாக் எல்லாம் கொழந்தேள் பேசினார்கள்(எங்க ஊர் பொண்ணுங்க பயங்கரமான முன்ஜாக்கிரதை முனியம்மாக்கள்). இதற்கு நடுவில் பல அணிகள் நம்பியாரின் அதீதமான ‘மிக்ஸிங்’ முன்னால் தாக்குபிடிக்க முடியாமல் துண்டை காணும், துணியை காணும்! என்று மேடையை விட்டு பாதியிலேயே வெளியேறிக் கொண்டிருந்தனர். ஒன்று மட்டும் எனக்குத் தெளிவாக புரிந்தது. அவர்கள் போடும் எல்லா பாட்டுக்கும் தாக்குப் பிடித்து நம்ம அணி மேடையில் நின்று விட்டாலே நமக்கு எப்படியும் ஒரு பரிசு நிச்சயம்!(இதற்குப் பெயர்தான் வியூகம் அமைப்பது).

‘தோல்வி’ என்பது உறுதியாகத் தெரிந்த பின்னும் போர்க்களத்தில் இறுதி வரை போராடுபவனே உண்மையான வீரன்! என்று சாணக்கிய நீதி சொல்கிறது. பாதியில் விட்டுவிட்டு ஓடிய நபர்களுக்கு நரகம் கூட கிடைக்காது! மொக்கை என்று தெரிந்த பின்னும் பதிவு போடுபவரே உண்மையான பதிவர்!என்று பல ‘கோட்ஸ்’ மனதில் அநியாயத்துக்கு ப்ளாஷ் ஆனது.

அந்த சமயத்தில்தான் எனக்கு அந்த விபரீத யோசனை தோன்றியது.

இனிமேதான் ஆட்டமே!..................:)

Saturday, February 20, 2010

ஆடு பார்கலாம் ஆடு........... Part 2

புதுசா வந்திருந்தா அவங்களுக்கு PART 1


மேல சொல்லர்துக்கு முன்னாடி இந்த டான்ஸ் ஆடரவங்களை பத்தி கொஞ்சம் சொல்லனும். போட்டிக்கு பத்து நாள் முன்னாடியிலிருந்தே, ஒத்திகை! ஒத்திகை!னு ஒரு ரூமுக்குள்ள தையா! தக்கா!னு குதிப்பார்கள். அதுவும் நம்பள மாதிரி டான்ஸ் தெரியாதவர்கள் தெரியாதனமா உள்ள நுழஞ்சுட்டா அவ்ளோதான் கதை! introduction stepu அப்படிம்பாங்க, intro steppu- கும் second steppu-கும் நடுல ஒரு motion step வச்சுக்கலாமா அப்படினு அவர்களுக்குள் கலந்தாலோசிப்பார்கள், ஒன்னாங்கிளாஸ் படிக்கும் பிள்ளைகள் மாதிரி 1008 தடவை 1 2 3 சொல்லிவிட்டுத்தான் ஆடுவார்கள்,நெத்தில வராத வேர்வையை கட்டை விரலால் வழித்து நம்ப பக்கமாக தெளிப்பார்கள். போட்டிகள் நடக்கற இடத்திலும் இந்த டான்ஸ் கோஷ்டிக்குதான் கூட்டம் ஜாஸ்தியா இருக்கும்.

இதே பெண் கொழந்தேளா இருந்தா அவாளோட கூத்து வேற மாதிரியா இருக்கும். கர்ணன் கவச குண்டலத்தோட பொறந்த மாதிரி எங்க ஊர் பொண்ணுங்க எல்லாம் துப்பட்டாவோடு பிறந்தவர்கள். எட்டு பின் போட்டு குத்தி சரியா இருக்கர துப்பட்டாவை பத்துமுறை(நிமிடத்திற்கு) சரிசெய்துகொண்டேதான் ஒத்திகை செய்வார்கள்.

நம்பளோட பேச்சுப்போட்டி Preparation place ரொம்ப சிம்பிளாதான் இருக்கும். அச்சுகுண்டா எழுதர்துக்கு ஒரு ரூபாய் பேனா,போன வருஷத்து பழைய கட்டுரை நோட்டு(Paper waste பண்ணக்கூடாது!!), இரண்டு ஆரஞ்சு மிட்டாய், நடுவில் காது குடைந்து கொள்ள ஒரு சிறிய கோழி இறகு(அது கிடைக்கவில்லை என்றால் atleast ஒரு காக்கா இறகு), ஒக்காச்சுக்கர்துக்கு ஒரு பெரிய வேப்பமரத்தடி, என் மேல கக்கா போகாத இடைவெளியில் உக்காந்துண்டு தாளம் தப்பாம கத்தற ஒரு காக்கா, நான் பார்கும் தொலைவில், ஆனால் அவர்கள் என்னை பார்காத தொலைவில் வட்டசட்டமா ஒக்காசுண்டு கலகலவென்று சிரித்து பேசிக்கொண்டிருக்கும் நாலு குத்துவிளக்கு(உங்களுக்கும் வித்யாபாலன் பிடிக்கும்னா, வெட்கப்படாமல் ‘வித்யாபாலன்’ என்றே சத்தமாக வாசிக்கலாம்) போன்ற பொண்கொழந்தேள்(இடது உச்சந்தலையில்(அவாளோட தலைலதான்) ஒரு ஒத்தை ரோஜாவும் வச்சுண்டு இருந்தா கல்லும் சொல்லாதோ கவி???) இது எல்லாம் இருந்தா, நம்ப கற்பனை குதிரை 'குருசிஷ்யன்' படத்துல வர VK.ராமசாமி குதிரை மாதிரி சும்மா பிச்சுண்டு போகும்.

ஒரு வழியா போட்டி நாளும் வந்தாச்சு! நம்ப பயபுள்ளைங்க எல்லா போட்டி யிலும் பட்டையை கிளப்பி கொண்டிருந்தார்கள். முடிவுகள் எல்லாம் சாயங்காலம் மேடைல வச்சுதான் அறிவிப்போம்!அப்படின்டாங்க.(இல்லைனா ‘கிழக்குச்சீமையிலே’ நெப்போலியன் குரூப் மாதிரி ஜெயிக்காத Team எல்லாம் வண்டியை கட்டிக் கொண்டு கிளம்பிவிடும். அப்புறம் பரிசளிப்பு விழால மொத்தம் பத்து பேர்தான் இருப்பார்கள்). என்னோட போட்டியெல்லாம் மத்தியான சாப்பாட்டுக்குள்ளையே முடிந்து விட்டது. ஓரளவு திருப்தியா பண்ணியிருந்தேன். எங்களோட டான்ஸ் கோஷ்டிதான் முதல் முதலாக எழுதிய லவ் லெட்டர், பிகரோட அப்பா கையில் சிக்கிக்கொண்டது மாதிரி ரொம்ப டென்ஷனாக இருந்தார்கள்.

விசாரித்து பார்த்ததில் நம்ப fashion டான்ஸ்தான் பரிசளிப்பு விழாவுக்கு முந்தின போட்டி என்று தெரிந்தது. பாக்ஸின் மாஸ்டர் போல் அவர்களை, கவலைபடாதே! நாமதான் ஜெயிப்போம்! அப்படி, இப்படினு நான் வேறு கூட கொஞ்சம் டென்ஷனை ஏத்தி விட்டுட்டேன். எனக்கும் ரொம்ப ஆசை, எப்படிதான் அந்த fashion டான்ஸ் ஆட்றாங்கனு பாக்கனும்டா தக்குடு! அப்படினு எனக்கு நானே சொல்லிக் கொண்டேன்.

காபி,டீ எல்லாம் தெம்பா குடிச்சுட்டு எல்லாரும் டான்ஸ் போட்டிக்கு ரெடி ஆனார்கள். நம்ப பசங்க ‘முக்காபுலா!’ பாட்டுக்கு ஆடுவதாக முடிவு செய்து பயிற்சியும் செய்து வந்திருந்தார்கள். அதற்கு வசதியாக ‘குலே பகவாலி’ எம்ஜியார் மாதிரி தொழ தொழ பாண்டு எல்லாம் போட்டுக்கொண்டிருந்தனர். நான் வழக்கம் போல போட்டி ஆரம்பிக்கர்துக்கு முன்னாடி ஆடு களம் எப்படி இருக்குனு பாக்கர்துக்கு போனேன். சுமாரா ஒரு நூத்தி இருபது பார்வையாளர்கள் உக்காச்சுக்கர மாதிரியான ஒரு வகுப்பரை, எட்டு ஜன்னல் இருந்தது, இரண்டு நுழைவாயில் இருந்தது, சைடுல நடுவர்கள் உக்காச்சுக்கர்துக்கு நாலு chair எல்லாம் போட்டு வச்சுருந்தா.

எல்லாம் பாத்துட்டு பின்னாடி திரும்பி பார்தால், போர்டுல Fusion டான்ஸ் அப்படினு கொட்டை எழுத்துல எழுதி வச்சுருந்தா. இங்கையுமா தப்பா எழுதி வச்சுருப்பா??!!!!! அப்படினு யோசிச்சுண்டு இருக்கும் போதே எல்லாரும் வர ஆரப்பிச்சாச்சு. லிஸ்டு படி நம்ப கோஷ்டியோட நிகழ்ச்சி இரண்டாவது. எப்படியும் மொதல்ல ஒரு குரூப் ஆடப்போர்து, பசங்க அத பாத்தா ஒரு idea கடைச்சுரும்னு மொன்னை தைரியத்தோடு இருந்து விட்டேன். அவரே வருக! இவரே வருக!னு எல்லா சம்பிருதாய வரவேற்பும் முடிந்த பிறகு, போட்டியும் ஆரம்பமானது. முதல் அணி மேடையை நோக்கி சென்று கொண்டு இருந்தது. கல்யாணமண்டபத்தில் எதிர்படும் சக மாமிகளிடம், ‘கல்யாணத்துக்கு வந்தேளா??’ என்று அசட்டுக் கேள்வி கேட்கும் சராசரி அம்புஜா மாமி போல, நானும் அவர்களிடம், ஆடப்போரேளா?னு கேட்டு விட்டு, (இன்முகத்தோட) நீங்க என்ன பாட்டுக்கு ஆடப்போறேள்!?அப்படினு மெதுவா அடுத்த பிட்டை போட்டேன். அதுக்கு அவர்கள் சொன்ன பதில் என்னோட தலைல இடி மாதிரி இறங்கியது.

குறிப்பு - நம்ப வலையுலக 'சொர்னாக்கா'(அனன்யா அக்கா) கொசுவத்தி சுத்த அழைச்சுருக்காங்க. அக்கா! நம்ப பதிவுல மெஜாரிட்டி அந்த வகைதான்....:)

ஆட்டம் தொடரும்..........:)

Saturday, February 13, 2010

வெக்கமே இல்லையாடா உங்களுக்கு?????

ஒரு ஊர்ல ஒரு ஏழை விவசாயி இருந்தாராம், அவருக்கு சொந்தமா ஒரு இரண்டு ஏக்கர் விவசாய நிலம் இருந்ததாம். இருபது வருஷமாக அவர் அந்த நிலத்துக்கு வரி எல்லாம் கட்டிக்கொண்டு இருந்தாராம், திடீர்னு ஒரு நாள் எதேச்சையாக அவருடைய நிலம் பற்றிய பட்டாவை அரசு அலுவலகத்தில் பார்க்க நேர்ந்தபோது, வரப்பு தவிர முழுவதுமாக அந்த நிலம் வேறு ஒரு நல்லவர் பெயரில் மாற்றப்பட்டு இருந்ததாம். போன மே மாதம் நிலவரி கட்டும் போது கூட என்னோட பேர்லதான்யா இருந்தது!னு சொல்லி அவரும் புகார் கொடுத்தாராம். விசாரணை அதிகாரி நல்லவரா இருந்ததால், விவசாயியோடுதுதான் அந்த நிலம்! அரசு பத்திரம் தவறாக திரித்து மாற்றப்பட்டுள்ளது!னு சொல்லி, நிலத்தை விவசாயி பேருக்கே திருப்பி மாற்றி எழுதவும் உத்தரவிட்டாராம்.

நண்பர்களே! இது எதோ கதையோ அல்லது சாதாரண பெட்டி செய்தியோ அல்ல! மேலே கண்ட விஷயம் நடந்த இடம் மகாராஷ்ரா மாநிலம் விதர்பா மாவட்டம் அமராவதி, பாதிக்கப்பட்ட ஏழை விவசாயியோட பெயர் கிஷோர், நிலத்தை ஆட்டை போடப்பார்த்த அந்த உத்தமரோட பெயர் என்ன தெரியுமா?????? தேவிசிங்ஷெகாவத், இவர் வேறு யாரும் அல்ல தற்போதைய இந்திய ஜனாதிபதியின் கணவர். இதுதான் இன்றைய இந்தியாவோட தலையெழுத்து..... (அந்தம்மா மீது ஒரு கொலைமுயற்சி வழக்கு நிலுவையில் உள்ளது என்பது உபரி தகவல்). சமுதாயப்பற்று மிக்க நம்ப மலை வாத்தியாரோட பதிவுகளை அடிக்கடி படிப்பதாலோ என்னமோ? விஷயம் கேள்விப்பட்டதும் என்னால் கோபத்தை அடக்க முடியவில்லை. அதன் காரணம்தான் இந்த திடீர் பதிவு.

முன்னாடியெல்லாம் திருடுபவன், கொள்ளையடிப்பவன் அப்படின்னா, ஒரு கடா மீசையும்,கன்னத்தில் ஒரு பெரிய மருவும் இருப்பது போல் பழைய படங்களில் பார்த்த ஞாபகம் ஆனால், இப்போது ஜென்டிலாக ஒரு ஷெர்வானியோ, ஒரு பைஜாமா குர்தாவோ அல்லது வெள்ளையும் சொள்ளையுமா ஒரு உடையிலோ வருகிறார்கள்.

எங்க ஊர் பக்கம் ஒரு வசனம் உண்டு, //சேலையிலை! சேலையில்லை!னு ஒருத்தி சித்தி வீட்டுக்கு போனாளாம், அங்க அவ சித்தி ஓலைபாயை கட்டிண்டு நின்னாளாம்// அதுபோல் உள்ளது இன்றைய நாட்டு நிலைமை. நாட்டின் மிக உயர்ந்த பதவிகளான ஜனாதிபதி, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி, தலைமை தேர்தல் ஆணையர் போன்றவைகளுக்கு வருபவர்கள் கருத்துக்களுக்கு அப்பார்பட்டவர்களாக இருக்க வேண்டும். அந்த நோக்கத்தில்தான் தலைமை தேர்தல் ஆணையர் அலுவலகத்திற்கு ' நிர்வசன் ஸதன்'(மாற்றுக் கருத்தில்லா நிலையம்) என்று பெயரிடப்பட்டது. ஆனால் இன்று ‘இலவச’ போதைக்கு அடிமையான ஒரு மாக்கள் சமுதாயத்தால் நாடு மொத்தமாக தனது மதிப்பை இழந்து கொண்டு வருகிறது. பொண்டாட்டி மட்டும்தான் இலவசமாக கொடுக்கவில்லை. அதுவும் சொல்ல முடியாது, பொன்னகரம் இடைதேர்தல்ல அரசு அறிவித்தாலும் ஆச்சர்யப்படுவதற்கு இல்லை! இலவச பொண்டாட்டி கொடுத்த பாரி வள்ளலே!னு இங்கு இருக்கும் அடிவருடிகள் அதற்கு ஒரு விழாவும்(அரசு செலவில்) எடுப்பார்கள்.

//பேயாளும் ஊரில் பிணம் கொத்தி உண்ணும் கழுகுகள்// அடுத்தவன் சொத்துக்கு பேயாய் பறக்கும் அல்பங்களின் கையில் நாடு சிக்கிக்கொண்டு தவிக்கிறது. முதல்வராக இருந்து விட்டு தான் இறந்த பிற்பாடு 4 பழைய கதர் வேஷ்டியும், சில நூறு ரூபாய்க்கும் குறைவான பாங்க் பேலன்ஸ் மட்டுமே விட்டுச்சென்ற 'கர்மவீரர்' வாழ்ந்த இந்த பூமியில் இது போன்ற கேவலமான கழிசடைகளும் நாட்டை ஆளுவது மிகவும் வேதனையான விஷயம். எனது நெருங்கிய முஸ்லீம் நண்பர் நபிகள் கூறியதாக ஒன்று சொல்லுவார், //உலகம் பிரளயத்தை நோக்கி செல்வதை சில அறிகுறிகள் மூலம் அறியலாம். சிறைச்சாலையில் கூட எல்லோரோடும் சேர்த்து அடைத்து வைப்பதற்கு தகுதியற்ற கொடிய கள்வர்கள் கூட்டம் கையில் நாட்டை ஆளும் பொறுப்பு இருக்கும்//. அது மிகவும் சரியாக இருக்கிறது.

அப்துல் கலாம் அய்யா, உங்களுடைய 'வல்லரசு'கனவு வெறும் கனவாகவே முடிந்து விடுமோ!!!! என்று பயமாக இருக்கிறது.

இன்றைய இந்தியா

தூர்ந்து போன கிணறு
அறுந்து போன கயிறு
ஓட்டை விழுந்த வாளி
பாவம்! தாகத்தில் இந்தியா!

ஜனாதிபதி போன்ற உயர் கெளரவமான பதவிகளுக்கு வருபவர்கள் நிஜ வாழ்விலும் கெளரவமானவர்களாக இருக்க வேண்டியது மிகவும் அவசியம் ஆகும். இவ்வளவு நடந்த பின்னும் அந்த பதவியில் அட்டை போல் ஒட்டிக்கொண்டிருக்கும் இது போன்ற பெரிய மனிதர்களை பார்க்கும் போது, 'இதுக்கு முன்னாடி இருந்த சர்கிள் இன்ஸ்பெக்டர் என்னை ஏட்டையா பதவிலேந்து தூக்கர்துக்காக கக்கூஸ் களுவ சொன்னான்! நான் அசரலையே!!! என்று நடிகர் அர்ஜுனிடம் பெருமையாக நம்ப வடிவேலு பேசிய காமெடி வசனம்தான் நினைவுக்கு வருகிறது. ஜனாதிபதி போன்றவர்கள் ஜன நாயகத்தின் அதிபதியாக இல்லாமல் நாட்டை திவாலாக்கும் முடிவோடு வந்துள்ள 'இத்தாலிய' உளவாளிகளின் அடிப்பொடியாக இருந்தால் நம் நாட்டை சாமிதான் காப்பாத்த வேண்டும்.

ஆகவே நண்பர்களே! முப்பது வருடமாக நீங்கள் குடியிருக்கும் வீடோ, அல்லது உங்கள் விளை நிலமோ, அரசு ஆவணங்களிலும் உங்கள் பெயரில்தான் இருக்கிறதா? என்பதை அவ்வப்போது சரி பார்த்துக்கொள்ளுங்கள். ஏனென்றால், அண்டடாயருக்குள்ள நாம வச்ச கேவலம் அஞ்சு ரூபாய கூட அலேக்கா ஆதாரமில்லாம ஆட்டயப் போடற கூட்டத்துக்கு நடுவுல நாம வாழ்ந்து கொண்டு இருக்கோம். நம்ப நாட்டுல நேர்மையான அரசு அதிகாரிகளுக்கும் ரொம்ப பஞ்சம், எனவே உஷாரா இருங்க!!!!!!!


குறிப்பு - ஆடு பார்கலாம் ஆடு பகுதி-2 சில தினங்களில் பிரசுரமாகும்.

Saturday, February 6, 2010

ஆடு பார்கலாம் ஆடு...........

இது ஒரு பழைய தமிழ் படத்துல வர ஒரு பாட்டோட முதல் வரி. ரவிசந்திரனும் புரட்சி தலைவியும் இந்த பாட்டுல ஆடுவாங்க, பதிவு இந்த பாட்டை பத்தி இல்லை. நான் ஸ்கூல்ல இருந்த நாட்களைவிட வெளியில் சுத்தின நாட்கள்தான் அதிகம்.

போட்டி! போட்டி!னு தோட்டிக்காத ஈரத்தலையோடு அலைஞ்ச கோஷ்டிக்கு நான் தான் மொட்டை பாஸ். ஆரம்பத்துல ஸ்கூல் அனுமதியோட கிளாஸ் கட்டு அடிக்கலாம், பயணப்படியெல்லாம் கிடைக்கும் என்ற நப்பாசையில் தொடங்கி பின்பு கழக போர்வாள்(அதாம்பா ஸ்கூல் Rep),வட்ட செயலாளர்(college Rep),மாவட்ட செயலாளர்(college secrty) வரை போய் நின்றது. இதையெல்லாம் விட பெரிய கூட்டத்துக்கு நடுல பரிசு எல்லாம் தருவார்கள், யோகம் நன்னா இருந்தா, ஓவியப்போட்டில firstu prize வாங்கின(யாருன்னே தெரியாத) ஒரு காவியா வந்து, congratssss!!! அப்படினு கைகுலுக்கி வாழ்த்துவா, Vijay TV மறுஒளிபரப்பு போல அடுத்த நாள் Prayer-ல வச்சு அதே பரிசை, உன்னை நனைச்சா பெருமையா இருக்கு! காய வச்சா அருமையா இருக்கு! i am proud of you! அப்படினு மேஜர் டயலாக்கெல்லாம் சொல்லி ஆயிரத்து எழுநூறு மாணவ, மாணவிகளுக்கு நடுவில் வைத்து HM தருவார்.

ரைட்டு மேட்டருக்கு வரேன், நான் படிச்ச பள்ளிகூடம் கல்லிடைகுறிச்சி என்ற பெரிரிரிரிரிய சிட்டில இருக்கு,பக்கதுல இருக்கற குக்கிராமமான அம்பாசமுத்திரத்தில் பெண் சிங்கங்கள் கூட்டமைபோட(அதாம்பா! lionees club) 25'வது ஆண்டு விழாவை முன்னிட்டு பல போட்டிகள் அறிவிச்சு இருந்தாங்க. இந்த விஷயம் circularla வந்தது. அப்ப எல்லாம் circularai base பண்ணிதான் நான் பாடமே படிப்பேன். circularai வாசிக்கும் போதே அந்த வாத்தியார் என்னை ஒரு பார்வை பார்தார். போச்சு! இந்தப் பய ஒரு வெட்டி கூட்டத்தை கூட்டிக்கிட்டு கிளம்பிடுவான்! என்று அவர் மனதில் ஓடுவது எனக்கு நன்றாக தெரிந்தும் தெரியாத மாதிரியே முகத்தை பாவமாக வைத்துக் கொண்டேன்(பின்றையேடா! என்று மனசாட்சி வேறு கால நேரம் தெரியாமல் நக்கல் அடித்தது).

என்னோட தமிழ் வாத்தியாரா(இவரை பத்தி தனியா சொல்லறேன்) இருந்தா, டேய் கண்ணா! நீ எந்தெந்த போட்டில எல்லாம் கலந்துக்க போற! அப்படினு வாஞ்சையோட கேப்பாரு, அறிவியல் வாத்தியாரா இருந்தா circularai வாசிக்கருத்துக்கே அனுமதிக்க மாட்டார். இந்த போட்டி சூப்பரா வெள்ளிக்கிழமைல இருந்தது, ஒரு நாள் மட்டம் போடலாம் என்று ஒரே சந்தோஷம். அடுத்த period ஆரம்பிக்கர்துக்குல்ல நான் எதிர்பார்த்த மாதிரியே என்னோட கழகத்தை சேர்ந்த ஒரு கழக கண்மணி என்னை HM கூப்பிடுவதாக சொல்லி அழைத்து செல்ல வந்தது. நான் அப்போ +1 படிச்சுண்டு இருந்தேன்.

மூன்று வருஷமாக அதே பொழப்பா வச்சுண்டு இருந்ததால என்னொட கரகாட்டக்காரன் டீம்ல யாரு யாரு எத்தனை யோஜனை தூரம் தாண்டுவாங்கனு(specialised) எனக்கு அத்துப்பிடி, அதை அடிப்படையா வச்சுண்டு ஒரு Portfolio தயார் பண்ணியாச்சு.
English medium-ல படிக்கற (ஆமாம்பா! பத்தாம் வகுப்பு வரைக்கும் தமிழ் நன்னா படிச்சாதான் பதிவு நல்லா எழுத முடியும்னு நான் தமிழ் medium-ல தான் படிச்சேன்) இரண்டு கொழந்தேள் (காதுல குண்டலம் எல்லாம் போட்டுண்டு வருவா ) சா பா! சா பா!னு சூப்பரா பாடுவா!(நான் கூட Bombey sisters மாதிரியே இருக்கு!னு எல்லாம் ice வச்சுருக்கேன்), சிங்கம்பட்டிலேந்து வர ஒரு கண்மணி கம்பு நல்லா சுத்துவான் பெரிய லெவல் போட்டியா இருந்தா வாய்ல மண்ணென்னெய் எல்லாம் விட்டுண்டு ஊதி டிராகன் மாதிரி தீ எல்லாம் வரவப்பான். ஊதர்துக்கு பதிலா இவன் என்னிக்காவது உரிஞ்சுட்டாண்னா என்னடி ஆகும்??னு Bombey sister’s நக்கல் அடிப்பார்கள். எங்க ஊர் பையன் மூனு பேரு டான்ஸ்ல பின்னி பெடல் எடுப்பாங்க, மற்றொரு கண்மணி அஞ்சு நிமிஷம் அசங்காம நின்னா நம்பலையே ஓவியமா வரஞ்சு தந்துருவான். அவனுக்கு மிக்கி மவுஸ் ரொம்ப புடிக்கும் அதனால் எந்த ரூபம் வரஞ்சாலும் அதோட முகத்துல அதன் தாக்கம் கொஞ்சம் இருக்கும். இது மாதிரி பிரிச்சு குடுத்தாச்சு.

நீ என்ன பண்ணின! அப்படினு நீங்க கேக்கர்து எனக்கு புரியுது, நம்ப ஏரியா பேச்சுப்போட்டி,மாறுவேடம்,வினாடி வினா(குவிஜு) & அணியின் போட்டி பத்தின வியூகம் அமைப்பது(சகுனி வேலை என்றும் வாசிக்கலாம்). சகுனி வேலை ஒன்னும் அவ்லோ சுலபம் கிடையாது(இல்லையா கொடி?). சக போட்டியாளர்கள் எந்த பாட்டுக்கு ஆடப்போறா, எதன் அடிப்படையில் mark போடுகிறரர்கள், ஜட்ஜுக்கு காபி கொண்டு போவது போல் போய் விட்டு யார் யாருக்கு எவ்வளவு மார்க் வந்துருக்குனு நோட்டம் விடுவது போன்ற எல்லா தில்லாலங்கடி (அஞ்சாநெஞ்சன்) பயிற்சிகளும் உங்களுக்கு தெரிந்தால்தான் ஒரு வெற்றியை நோக்கி வியூகம் அமைக்க முடியும். எங்க அண்ணன், வீட்டில் எனக்கு எதிராக அடிக்கடி பின்னும் சதிவலைகளிலிருந்து என்னை காப்பாதிக்க போராடியதில் இந்த பயிற்சி எல்லாமே எனக்கு கைவந்தகலையாக இருந்தது.

நமக்கு இந்த டான்ஸ் எல்லாம் ரொம்ப பயம். பாதி ஆடிண்டு இருக்கும் போது பாண்டு கிழிஞ்சு போச்சுனா என்னலே பண்ணுவாங்க!னு அறிவுபூர்வமான கேள்வியெல்லாம் எனக்கு தோணும். யாராவது ஆடினா, நல்லா பண்ணியிருக்கலாம்!எதிர்பார்த்த energy இல்லை! chemistry/histry நல்லா இருக்கு! அப்படின்னு கட்டின வீட்டுக்கு எட்டு வக்கனை சொல்லுவதுதான் நம்பலால முடியும்பா!

எங்க குரூப்ல இருந்த எல்லாருக்குமே(except Bombey sisters) English கொஞ்சம் தடவல், Tsunami என்பதை டீசுனாமி!னு வாசிச்சா கூட பரவாயில்லை, டீசு- மாமி!னு starting கையும் ending-கையும் மட்டுமே வச்சு உத்தேசம் பண்ணி வாசிச்ச கூட்டம் நாங்க. இந்த லட்சணத்துல போட்டி லிஸ்டுல fusion டான்ஸ் அப்படினு ஒன்னு இருந்தது. என்ன்ன்னடா இது! (வடிவேல் குரலில்) புது ஏரியாவா இருக்கே??னு யோசிச்சிட்டு, இங்கிலீஷ் டீச்சர்ட போய் கேட்டா, அவங்க இதுல spelling mistake இருக்கு இது fashion டான்ஸ் அப்படின்னாங்க. நானும் சளைக்காம ஓஓ! fashion டான்ஸா! அப்படினு கேட்டுட்டு வந்துட்டேன்(யாருக்கு தெரியும்!). அப்படியே தெரிஞ்ச மாதிரியே டீமில் வந்து, நீ எப்போதும் ஆட்ற டான்ஸையே கொஞ்சம் fashion’a ஆடு! அதுதான் fashion டான்ஸ்! அப்படினு சொல்லி சமாளிச்சாசு(கழுத!!! அவந்தானே ஆட போறான்).

டான்ஸ் கண்மணிகள் இருந்தும் விடாமல், அண்ணே! நல்லா தெரியுமா? அது அப்படிதான் ஆடனுமா? நீங்க இதுக்கு முன்னாடி எங்கயாச்சும் அந்த டான்ஸை பாத்துருக்கீங்களா? அப்படினு CBI அதிகாரிகள் போல் வரிசையாக கேள்வியா கேட்டு தள்ளினார்கள். நானும் விடாம சமாளிச்சு(வரப்போர வில்லங்கம் தெரியாம) எப்படியோ அவங்களை நம்ப வச்சுட்டேன்.

ஆட்டம் தொடரும்..........:)

Tuesday, February 2, 2010

நாகராஜசோழன் பரம்பரையில்..... மற்றுமோர் MLA

பல வருடங்களாக ஒரு Blog ஆரம்பிக்க வேண்டும் என்று ஒரு ஆசை. எப்படியோ ஒரு Blog ஆரம்பிசாச்சு...:) இனிமேல் அடுத்த கவலை எப்படி எழுதுவது??? டுபுக்கு,அபி அப்பா, பொற்கேடி, கைபுள்ளை,இலவச கொத்தனார், அம்பி(போனா போகுது)இவர்களை போல நகைசுவை எழுதலாமா?? அல்லது பதிவுலக சூராவலி கீதா மேடம்,திராச ஐயா,மதுரையம்பதி அண்ணா,KRS அண்ணா, திவா அண்ணா போல ஆன்மீகம் எழுதலாமா?? அல்லது பாஸ்டன் ஸ்ரீராம்,ஆயில்யன்,மு.கார்த்திகேயன் போல பொதுவாக எழுதலாமா?? என்று பல யோசனைகள். அப்பால நமக்கு என்ன வருமோ அத மட்டும் எழுதுவோம்னு பொதுக்குழுல முடிவு பண்ணியாச்சு. உங்க இஷ்டம் போல வந்து துப்பிடு போகலாம்.

பதிவுலகில் ஏற்கனவே பதிவுகள் எழுதியிருப்பதால் கொஞ்சம் பயம் இல்லாமல் எழுதலாம். எனது முந்தைய பதிவுகள்.... கவிதை, பக்தி I, பக்தி II, இது தவிர பல பதிவுகள்(narayana! narayana!)

Note - இதுவரை போலிசாமியார்,தம்பி,அம்பியின் தம்பி போன்ற புனைபெயர்களில் பின்னூட்டம் இட்டு வந்ததும் யாந்தான்