Tuesday, August 17, 2021

ஊர்ல கல்யாணம்..... (Part 3)

 Part 2  படிச்சாச்சா


தங்கமணி மேக்கப் போட்டு முடிச்சு அவளோட சேர்ந்து நாம போய் டிபன் சாப்பிடலாம்னு இருந்தா அதுக்குள்ள மச்சினனுக்கு புள்ளையே பொறந்துடும் அதனால கொழந்தகுட்டியோட சேர்ந்து நேரா டைனிங் ஹால் போயிட்டு காபி வித் பஜ்ஜி, போண்டா, காசி அல்வா மற்றும் சிலபல அயிட்டங்களை உள்ள தள்ளிட்டு கமுக்கமா ரூமுக்கு போயிட்டேன். “கீழ போய் மாப்பிள்ளை ரூம்லேந்து ஊக்குபின் வாங்கிண்டு வாங்கோ”னு அனுப்பிவிட்டுட்டா. ‘ஒரு அதிகாரியை ஊக்கு வாங்கிண்டு வா! பாக்கு வாங்கிண்டு வா!னு அனுப்பரையே நியாயமா’னு கேட்டா அவள் காதுலையே வாங்காம ‘நீங்க இன்னும் போலையா?’னு கேட்டா. தொலையர்து போ! வாங்கிண்டு வருவோம்னு அங்க போனா, எங்க மாமானார் ஒரு பக்கம் ஜிப்பாவுக்குள்ள மண்டையை விட்டுண்டு வெளில வராமா தவிச்சுண்டு இருக்கார், இன்னொரு பக்கம் மாமியாருக்கும் அவாளோட தோழிகளுக்கும் நிக்க வச்சு ‘ஏஷியன் பெயிண்ட்ஸ்’ வால்பட்டி வச்சு “சுவத்துக்கே லாமினேஷன் பண்ணி பாத்துருக்கேளா”னு கேக்காம ஒரு பியூட்டிஷியன் அக்கா எல்லாரோட முகத்துக்கும் வெள்ளை அடிச்சுண்டு இருந்தா. மேக்கப்புக்கு அப்புறம் ஒருத்தரையும் அடையாளமே தெரியலை. மாப்பிள்ளை அவன் பங்குக்கு அவனோட அக்காகாரி வாங்கி குடுத்த பெர்பியூமை சாம்பிரானி புகை மாதிரி உடம்பு பூரா அடிச்சிண்டு இருந்தான். அந்த ரூம்ல அதுக்கப்புறம் யாரும் பெர்பியூமே போடவேண்டாம் அவ்ளோ புகை. இதுக்கு நடுல அந்த பியூட்டிஷியன் என்னோட மோவாக்கட்டையை பிடிச்சுண்டு எனக்கும் வெள்ளையடிக்க பிரெஷ்ஷோட வந்துட்டா. ‘என்னோட சொந்த கல்யாணத்துக்கே ஸ்பின்ஸ் பவுடரும் ஒரு சீப்பும் தான் கொண்டு வந்தேன் நாங்க எல்லாம் born beauty’நு சொல்லிட்டு அவாள்டேந்து தப்பி பொழச்சு ஓடி வரர்துக்குள்ள போதும் போதும்னு ஆயிடுத்து. கல்யாணப்பொண்ணு ரெடியாகி வெளில வந்துடுத்து ஆனா என்னோட தங்கமணியும் மாமியாரும் மெக்கப் முடிஞ்சு வெளில வந்தபாடா இல்லை. “மாமா! நீங்களாவது சொல்லகூடாதா”னு என்னோட மாமனார்கிட்ட சொன்னா அவர் மாமியோட மேக்கப்புல அடையாளம் தெரியாம வேற எதோ மாமிகிட்ட போய் ‘இன்னும் எவ்ளோ நேரம்மா ஆகும்’னு கேட்டுண்டு இருந்தார். ஒரு வழியா எல்லாரும் மேடைக்கு வந்து ஆடி, பாடி, ஓடி எல்லாம் பண்ணினா. திடீர்னு எங்க மாமனார் அவரோட ஆத்துக்காரி கையை புடிச்சுண்டு ஆட ஆரம்பிச்சுட்டார். அந்த மனுஷன் கவனிக்காம வேற யாரோட கையையாவது மறுபடியும் புடிச்சுண்டு ஆடாம இருக்கனுமேனு எனக்கு கவலையா இருந்தது. ‘கல்யாணம் யாருக்கு’னு தெரியாம என்னோட மச்சினன் திருதிருனு முழிச்சுண்டு இருந்தான்.

 

ராத்திரி சாப்பாடும் ரொம்ப நன்னா இருந்தது. ‘கல்யாணத்துக்கு வந்ததுக்கு உங்கப்பா எட்டுமுழம் வேட்டியை குடுத்துட்டு ஆச்சுனு ஆக்கிட்டார், வந்த செலவை சாப்பிட்டுதான் சரிகட்டணும்’னு சொல்லிண்டே ‘பேபிக்கார்ன்’ காரக்கறி, பொன்னிறமா மெல்லிசான நெய்தோசையை சாப்பிட்டேன். காய்ஞ்சமாடு கம்புல பாய்ஞ்சமாதிரி ரவுண்ட் கட்டி அடிச்சாச்சு. அடுத்த நாள் காத்தால சீக்கரமே முகூர்த்தம், ‘வழக்கம் போல விடியவிடிய புடவை கட்டிண்டு இருக்காதே! பொண்ணு பொறுமையா இருந்தாலும் உன் தம்பி காத்துண்டு இருக்கமாட்டான். படக்குனு எடுத்து தாலியை கட்டிட்டு நாலு முடிச்சு போட்டாலும் போடுவான் அதனால மரியாதையை காப்பாத்திக்கோ’னு தங்கமணிட்ட சொல்லிண்டு இருந்தேன். மறு நாளும் கதவைதட்டி நாலு மணிக்கே அந்த மாமா காப்பியை குடுத்தார். ‘நீ என்னிக்காவது இப்படி தந்திருக்கையாடி?’னு கேட்டதுக்கு “திரும்பி தோஹா போகும் போது அந்த மாமாவையே கையோட கூட்டிண்டு போங்கோ! நித்யம் காப்பி போட்டுதருவார்”னு சொல்லிட்டா. வழக்கம்போல பொண்ணு ரெடி, “அத்திம்பேர்! அக்கா ரெடியா?”னு அந்த பொண்ணு பாவமா கேட்டுது. “ரெடி ஆயிண்டே இருக்கா! ‘எங்க திரும்பினாலும் ஷஷ்டயப்த பூர்த்தி சதாபிஷேகம் டிக்கெட்டா இருக்காளே, கல்யாணத்துக்கு உன்னோட ஒன்னுவிட்ட மாமா பொண்ணு ஒன்னு விட்ட அத்தை பொண்னெல்லாம் வரலையா? வந்துருந்தா மண்டபம் கொஞ்சம் கலர்புல்லா இருந்துருக்கும்’னு தயாள சிந்தனையோட சொல்லிண்டு இருக்கும் போதே, “இவனுக்கு ஆய் வருதாம்! போய் அலம்பி விடுங்கோ! நீங்கதான் அலம்பனுமாம்’னு தங்கமணி சொல்லிட்டு போயிட்டா. ‘யார் அலம்பினா என்ன? “நான் மட்டும் என்ன இங்கு நல்ல முறையில் ஆய் அலம்பித்தரப்படும்னு போர்டுமாட்டிண்டா உக்காந்துண்டு இருக்கேன்”னு சொல்லிண்டே போய் விஷ்வஜித்துக்கு அலம்பிட்டு வெளில வந்தா அத்வைதாவும் ‘அப்பா ஆய்!’னு நிக்கரா. “மண்டபத்துல இன்னும் யாரோட புள்ளகுட்டிக்காவது ஆய் அலம்பனுமா? இப்பவே வந்து லைண்ல நில்லுங்கோனு!”னு புலம்பிண்டே வெளில வந்தேன், ‘இந்த மொகரகட்டைக்கு ஒன்னுவிட்ட மாமா பொண்ணு கேக்கர்து”னு தங்கமணி வஞ்சுண்டு இருக்கா.  ‘இப்படி குறுகின மனசு இருந்தா கொராணா மூனாவது அலை ஏன் வராது’னு மனசுல நினைசுண்டேன். நானும் ஒரு சந்தனகலர் ஜிப்பா & மறுபடியும் ஆய் அலம்பர்துக்கு அழைப்பு வந்தாலும் வரலாம் அப்பிடிங்கர்தால மடிச்சு கட்டிண்டு போகர்துக்கு தோதா ஒரு ஜரிகை வேஷ்டியை கட்டிண்டு மண்டபத்து ஜோதில ஐக்கியம் ஆகிட்டேன். தாலி கட்டும் போது பொண்ணோட அம்மாவும் அப்பாவும் அழவே இல்லை திடீர்னு பாத்தா தங்கமணியோட பெரியப்பா ரெண்டுபேரும் அழுதுண்டு இருக்கா. ‘இந்த சீன்ல சம்பந்தமே இல்லாம இவா ஏன் அழுதுண்டு இருக்கா’னு வீடியோகாரனுக்கு ஒரே குழப்பம். அப்புறம் மாப்பிள்ளையும் பொண்ணும் அக்கா அத்திம்பேர்கிட்ட ஆசிர்வாதம் வாங்கும் போது அக்காகாரி “நிம்மதியா சந்தோஷமா நன்னா செளக்கியமா இருக்கனும்”னு ஆசிர்வாதம் பண்ணினா. ‘கல்யாணம் ஆனதுக்கு அப்புறம் நிம்மதியா இரு!சந்தோஷமா இரு!னு ஆசிர்வாதம் பண்ராளே! கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசை கதைதான்’னு நினைச்சுண்டேன். ‘நன்னா பொறுமையா இரு! எது சொன்னாலும் சரிம்மானு சொல்லு! அவளே தப்புபண்ணினாலும் சாரிம்மானு சொல்லு ஓஹோனு இருக்கலாம்!’னு மச்சினனுக்கு ஸ்பெஷலா ஆசிர்வாதம் பண்ணினேன். ‘பொண்ணு பாக்கர்துக்கு பேசர்துக்கு நல்ல சாதுவா இருக்கால்லியா’னு எங்க மாமியார் என்கிட்ட தனியா வந்து மெதுவா கேட்டா. ‘உள்ள வரும்போது எல்லாரும் பாக்க சாதுவாதான் இருப்பா போகபோக தான் லெக்ஷ்மியா துர்காவானு தெரியும்’னு அவாளுக்கு தைரியம் சொன்னேன். “நீங்க சொன்னா சரியாத்தான் இருக்கும் மாப்ளே”னு சொல்லிட்டு போயிட்டா. கல்யாணம் கழிஞ்சு கட்டுச்சாதக்கூடையை வாங்கிண்டு நேரா மெட்ராஸ் வந்துட்டு அடுத்த நாளே ‘சிங்கம் சூர்யா’ மாதிரி பத்து மணி தூத்துக்குடி ப்ளைட்டை பிடிச்சு குடும்பம்குட்டியோட கல்லிடை வந்துட்டேன். கல்லிடைல போய் ஆத்தங்கரைல கால் நினைச்சுட்டு தெரு வம்பை பேசிட்டு வந்தாதான் பிரயாண பலன் நமக்கு கிட்டும். கல்லிடை மாமாமாமிகள் எப்போதும் போல “ஏது திடீர்னு வந்துட்டை, சும்மாதானா? ஆத்துக்காரி வந்துருக்காளா?னு குடைய ஆரம்பிச்சுட்டா. வந்தா ஏது வந்துட்டைனு கேப்பா வரலைனா வரவேஇல்லையேடானு மறிப்பா, ஏது ஆத்துக்காரியை கூட்டிண்டு வரலைனு பேசுவா, வந்தா எல்லாரும் வந்துருக்காளேனு பேசிப்பா. எத்தனை வருஷம் ஆனாலும் இவாளை திருத்தவே முடியாது. அம்மாவும் விஷ்வஜித்தும் நன்னா பேசிண்டா. பத்து நாள் போனதே தெரியலை. போன சமத்து போல திரும்பி ஊரை பார்த்து போகர்துக்கு ப்ளைட்டை பிடிக்க மூக்கு குடையர்துக்கு போனா கல்யாணம் ஆகி பத்து வருஷம் ஆன ஒரு ஆம்பளைகிட்ட போய் வாழ்க்கைனா சிலபல அடிகள் விழத்தான் செய்யும்னு சொன்னா அது எவ்ளோ வேடிக்கையோ அதை மாதிரி அங்க டெஸ்ட் எடுக்கர  பையன் “பயப்படாதீங்க சார் ஒரு செகண்டுல முடிஞ்சுடும்”னு எனக்கு ஆறுதல் சொன்னான். “வலது பக்கம் வேண்டாம் இடது பக்கம் கொஞ்சம் லேசா அடச்சாப்பல இருக்கு கொஞ்சம் குத்திவிட்டைனா சரியாகிடும்”னு சொன்னேன். ஹோட்டல் குவாரண்டைன் இல்லாததால நேரா ஆத்துக்கு வந்தாச்சு. இந்த கல்யாணத்தை வச்சு ரொம்ப நாளைக்கு அப்புறம் மூனு போஸ்டும் போட்டாச்சு.   (சுபம்)

Wednesday, August 11, 2021

ஊர்ல கல்யாணம்..... (Part 2)

 Part 1  படிச்சாச்சா


அந்த என் ஆர் ஐ ஆண்டி புண்ணியாஜன ப்ரோக்ஷணம் முடிச்சு இப்ப தீர்த்தம் குடுக்க ஆரம்பிச்சா (அதான் கைல சானிடைசர் போட்டுக்கர்துக்கு). ‘அடுத்து சடாரி சாதிச்சு துளசி பிரசாதம் மட்டும்தான் பாக்கி’னு நான் சொல்லும்போது’ தங்கமணி என்னோட கையை கிள்ள ஆரம்பிச்சுட்டா. இதுக்கு முன்னாடி லக்கேஜ் போடர இடத்துல கத்தார் ஏர்வேஸ்காரி ‘லக்கேஜ்ல என்ன இருக்கு’னு ஜாரிச்சா. ‘மாமியாருக்கு லிப்ஸ்டிக், மாமனாருக்கு ஸ்ப்ரே, பொண்ணுக்கு விளையாடல் சாமான், மச்சானுக்கு பெர்ப்யூம், கரூர் அத்தைக்கு பவுடர், பாசி ஊசி பீபொறுக்கு புண்ணாக்குகட்டினு உள்ள ஒரு கல்யாணமண்டபமே இருக்கு,  உனக்கு என்ன வேணுமோ எடுத்துக்கோ கோந்தை’னு நான் பதில் சொல்லும்போது தங்கமணி ‘வாயைமுடிண்டு இருங்கோ’னு செல்லமா மிரட்டினா. ஏர்போர்ட்டுல நிம்மதியா ஒரு சேர்ல உக்காந்து கண்ணைமூடி தூங்க முடியலை யாராவது திடீர்னு வந்து மூக்கை குடஞ்சு கொராணா டெஸ்ட் எடுத்துடுவாளோனு ஒரே பயம். ‘மொத்த குடும்பத்துக்கும்  மூக்கு குடைஞ்ச பைசாவை மிச்சம் பிடிச்சுருந்தா ரெண்டு பவுண் வாங்கியிருக்கலாம். எல்லாம் இந்த நாசமாபோற சைனாகடங்காரனால வந்தது’னு ஆற்றாமைல ஏர்போர்ட்டுல பொலம்பிண்டு இருந்தேன். கத்தார் ஏர்வேஸ்ல சாப்பாடு நன்னா இருந்தது. புதுசமையக்காரர் போலருக்கு காரம் கம்மியா போட்டு நன்னா பண்ணியிருந்தார். எங்க ஊர் ஏற்கனவே டெஸர்ட்(Desert) அப்பிடிங்கர்தால சாப்பாட்டுல எப்போதுமே டெஸ்ஸர்ட்(Dessert) நன்னா இருக்கும். சாப்பிட்டு முடிஞ்சு கொஞ்சம் கண் அசந்து இருந்தேன் படக்குனு மெட்ராஸ் வந்துடுத்து. கழிஞ்ச ரெண்டு வருஷமா ஏர்போர்ட்ல ஈ காக்கா இல்லை. இப்ப தான் ஆட்கள் வர ஆரம்பிச்சு இருக்கா. கஸ்டம்ஸ் அதிகாரிகளின் கெடுபிடி ரொம்ப ஜாஸ்தியா இருக்கு. கிலோகணக்குல தங்கம் கடத்தின கேரளத்து சொப்பனசுந்தரிகளை விட்டுட்டு நாம கொண்டு போகும் அருனாகொடியை எடை போட்டுண்டு இருக்கா.


ஒரு வழியா மெட்ராஸ் ஏர்போர்டுலையே மறுபடியும் ஒருதடவை மூக்கு வாய் குடைஞ்சுட்டு ஆத்துக்கு வந்து சேர்ந்தோம். அங்க போய் இறங்கினதுக்கு அப்புறம்தான் தெரியர்து தங்கமணி அங்கவேற ஒரு மினி ஆன்லைன் ஷாப்பிங் பண்ணி ஒரு பெட்டி சாமான் தேத்தி வச்சுருந்தா. கல்யாணம் பொள்ளாச்சில வச்சுங்கர்தால இருபது டிக்கெட்டுக்கள் சகிதமா ஒரு மினிபஸ்ல அடுத்த நாளே கிளம்பிட்டோம். பகல் முழுக்க பஸ்ல பிரயாணம். திருமலை தென்குமரினு ஒரு பழைய படம் உண்டு அதுல வரும் பாலகன் மாதிரி இப்ப நாம எங்க வந்துருக்கோம்!னு ரெண்டு மணி நேரத்துக்கு ஒரு தடவை கேட்டுண்டு இருந்தேன். மத்யானம் ஆச்சு, சாயங்காலம் ஆச்சு, ராத்ரியும் ஆச்சு பொள்ளாச்சிமட்டும் வரவே இல்லை. இதுக்கு நடுல தங்கமணியோட பாட்டிக்கு வாந்தி அப்புறம் கொஞ்ச நேரத்துல மச்சானுக்கு வாந்தி. ‘பாட்டில ஆரம்பிச்சு பேரன் வரைக்கும் வாந்தி எடுத்தாச்சு இன்னும் ஊர் வரலையேடி’னு தங்கமணிகிட்ட சொல்லிண்டு இருக்கும்போதே ஒருவழியா மண்டபம் வந்துடுத்து. பஸ்ஸுல இறங்கின உடனே என்னோட மச்சான் அவனோட வருங்கால மாமியார்கிட்ட போய் ‘மாமி! எப்பிடி இருக்கேள்? சாப்பிட்டேளா?’னு ஜாரிச்சுண்டு இருந்தான். ‘காலேலேந்து குத்துக்கல் மாதிரி கூடவே இருந்த என்னை பாத்து அக்கா சாப்டியானு ஒரு வார்த்தை கேட்டானா? மாமியாரை பாத்த உடனே குசலம் விசாரிக்கரான் பாத்தேளா’னு தங்கமணி குசுகுசுத்தாள். ‘நீ சொன்னதுல குத்துக்கல்லெல்லாம் சரிதான் ஆனா அவன் பொழைக்கத் தெரிஞ்ச புள்ளடி! அத்திம்பேரை பாலோ பண்ணறான்! உங்காத்துல இருந்தும் இவ்ளோ கெட்டிக்காரனா இருக்கானேனு தான் எனக்கு ஆச்சரியம்’னு நான் சொன்னதும் முகத்தை வெட்டிண்டு போயிட்டா. ராத்திரி ஆஹாரம் பண்ணினதுக்கு அப்புறம் ரூம் பிடிக்கர படலம் ஆரம்பம் ஆனது. ‘மாப்பிள்ளை ரூம்ல மட்டும் தான் ஏசி இருக்கு & ரூம் பெரிசாவும் இருக்கு நாம எல்லாரும் இங்கையே தங்கலாம்’னு தங்கமணி தொணதொணத்தாள். கல்யாண மண்டபத்துல மாப்பிள்ளை ரூம்ல சேர்ந்து தங்கினா சில அவஸ்தைகள் உண்டு. யாராவது வந்துபோயிண்டே இருப்பா, நாம கொஞ்சம் கண் அசரலாம்னு நினைக்கும் போதுதான் முருக்கு வைக்கவந்தேன், மொனோகரம் வைக்கவந்தேனு எதாவது ஒரு மாமி வருவா, வந்துட்டு சும்மா போகாம நீங்க தான் அந்த கத்தார்ல ஒட்டகம் மேய்க்கர அத்திம்பேரானு ஆரம்பிப்பா, ஒன்னும் இல்லைனா பொண்ணாத்துலேந்து யாராவது ஒரு தாய்மாமா வந்து’ காபி சாப்டேளானா? டிபன் சாப்டேளானா?’னு வந்து மொக்கைபோடுவா. ‘எள்ளுதான் எண்ணைக்கு காயணும் எலிப்புலுக்கை எதுக்கு காயணும்’னு சொல்லி மாடில ஒரு சிங்கிள் ரூமை நானே கைபற்றி பெட்டியை இறக்கிட்டேன்.
அதிகாலைல ரயில்ல போகர மாதிரி ஒரு கனவு, காபி! காபி!னு சத்தம் வேற வந்தது. கண் முழிச்சு பாத்தா ரூம் வாசல்ல சமையல் மாமா கதவை தட்டிண்டு இருக்கார். 'இன்னும் பல்லே தேய்க்கலைஓய்!'னு சொன்னாலும் விடாம ‘முதல்ல காப்பியை குடிங்கோ அப்புறம் பல் தேய்ங்கோ’னு ஒரே உபசாரம். தங்கமணிக்கு பெருமை பிடிபடலை ‘எப்பிடி கவனிக்கரா பாத்தேளா?’னு கேட்டா. ‘என்னவோ உங்காத்துல ஏற்பாடு பண்ணின மாதிரி பீத்திக்கரை, கேட்டரிங் மாமாவாத்து மாமிக்கு திருனெல்வேலி பக்கமாம் அதான் இப்படி உபசாரம் பண்ரார்’னு ஒரு பிட்டை எடுத்து விட்டேன். ‘காலங்காத்தால உங்க திருனெல்வேலி ஊர் புராணத்தை ஆரம்பிக்காதீங்கோ’னு சொல்லிட்டு போயிட்டா. காத்தால டிபன் சாப்பிட போனோம். ஊத்தப்பம், இட்லி, பொங்கல், வடை, பைனாப்பிள் கேசரினு ஒரு பெரிய லிஸ்டே போச்சு. ஊத்தப்பம் ஏற்கனவே வார்த்து வைச்சதை போடாம நாங்க ஒக்காந்ததுக்கு அப்புறம்தான் “மாமா இருங்கோ கல்லை போடறேன்”னு சொல்லி எத்தம் கூட்டினார்.  ‘நல்ல சாப்பாடு சாப்பிட்டு எவ்ளோ நாள் ஆச்சு’னு சொல்லிண்டே சாப்பிட ஆரம்பிச்சேன். ‘மாமா! அந்த கல் காய்ஞ்ச உடனே சொல்லுங்கோ!’னு தங்கமணி பல்லை கடிச்சுண்டு சொல்லிண்டு இருந்தா. 20-20 கிரிக்கெட் மாட்ச் மாதிரி 25-25 பேர் மட்டும் தான் மண்டபத்துல இருந்தோம். சாயங்காலம் ஜானுவாசத்துக்கு ரெடியாகர்துக்கு தங்கமணி மத்தியானத்துலேந்தே தயார் ஆக ஆரம்பிச்சுட்டா. நான் என்னோட கல்யாணத்துக்கு போட்ட 'ஸ்டோனொர்க்' ஷெர்வானியை பத்திரமா எடுத்து வச்சுட்டு கொஞ்சம் கண் அசரலாம்னு பாத்தேன் அதுக்குள்ள தங்கமணி “நான் இங்க இவ்ளோ கஷ்டப்பட்டு ரெடியாகும் போது உங்களுக்கு எப்பிடிதான் தூக்கம் வருதோ அதுவும் இந்த கல்லிடைகுறிச்சிகாராளுக்கு மத்தியானம் சாப்பிட்ட உடனே தூக்கம் எங்கேந்துதான் வருமோ”னு ஆரம்பிச்சா. “குழந்தை மனசுடி எங்களுக்கு அதான் சாப்பிட்ட உடனே தூக்கம் வருது!”னு நானும் சொல்லிட்டு ‘இப்ப என்ன பண்ணனும் சொல்லு?’னு கேட்ட உடனே ‘சாயங்காலம் சின்னவனுக்கு நீங்கதான் டெரெஸ் போட்டுவிடனும்’ அது இதுனு எல்லாத்தையும் என்னோட தலைல கட்டியாச்சு. 

சாயங்காலம் ரெண்டு கோஷ்டிகளும் ரெடி ஆக ஆரம்பிச்சது….. (கல்யாண கலாட்டா தொடரும்)


Monday, August 2, 2021

ஊர்ல கல்யாணம்.....

சைனா வைரஸ் இரண்டாம் அலைல எட்டிப் பார்த்துட்டு மூன்றாம் அலைல வந்துருக்கேன். எல்லாரும் செளக்கியமா இருக்கேளா? ஜுலை மாசம் ரெண்டாவது வாரத்துல என்னோட மச்சினனுக்கு பொள்ளாச்சில கல்யாணம். ஏப்ரல் மாசத்துல இருந்து எப்பிடி போகர்துனு தெரியாம ஒரே குழப்பமா இருந்தது. ஜுன் மாச ஆரம்பத்துல ஆன்லைன்ல பாத்துக்கலாம்னு என்னோட தங்கமணியே சொல்லிண்டு இருந்தா. அதுக்கு அப்புறம் கொஞ்சம் கொஞ்சமா நிலைமை சரியாகர மாதிரி வந்த உடனே, “நீ மட்டுமாவது போய்ட்டு வந்துடு! வாயும் கையுமா ஒரு நாத்தனார் மண்டபத்துல குறுக்கையும் நெடுக்கையும் லாந்தினாதான் கல்யாணம் களைகட்டும்!”னு சொன்னேன். அவளுக்கும் ஆசைதான் ஆனா போயிட்டு திரும்பி வந்தா 10 நாளைக்கு ஹோட்டல்ல ரூம் எடுத்து தங்கி யார் முகத்துலையும் முழிக்காம அக்ஞாதவாசம்(அதான் கோரன்டைன்)இருக்கனும், மூனு நாளைக்கு ஒரு தடவை மூக்குலையும் நாக்குலையும் குச்சியை விட்டு சுத்துவா அதுதான் தங்கமணிக்கு பிரச்சனை. ஆத்தோட 'ஹவுஸ் ஹஸ்பென்ட்' மாதிரி 15 நாள் லீவு போட்டு அத்வைதாவையும் விஸ்வஜித்தையும் நானே பாத்துக்கறேன்னு சொல்லியும் அவள் மசியலை. ஜூன் மாச கடைசி ஆகும் போது மாத்தி மாத்தி மெட்ராஸுக்கும் தோஹவுக்கும் ஒரே போன் கால் சம்பாஷனைகள். ரிஷப்ஷனுக்கு கொண்டை போடனுமா, சவுரி வேணுமா வேண்டாமா, பிஸ்தா க்ரீன் வேணுமா இல்லைனா காபிகொட்டை க்ரீன் வேணுமானு அல்லோகலப்பட்டது. பந்தில உக்காந்தவனுக்கு பாயாச கவலை பாரின்ல இருக்கரவனுக்கு எதுக்கு கவலைனு நான் எதையும் காதுல வாங்கலை.


 “நான் மட்டும் போனா நன்னா இருக்குமா? எல்லாரும் மாப்பிள்ளை வரலையா? வரலையா?னு கேப்பா, என்னோட ஹேன்ட் பாக்கை யாரு பத்ரமா பாத்துப்பா?”னு வரிசையா வில்லுப்பாட்டு பாட ஆரம்பிச்சா. நானும் யோசிச்சேன். பத்து வருஷத்துக்கு முன்னாடி நடந்த அந்த சம்பவத்துக்கு அப்புறம் (அதான் என்னோட கல்யாணம்) இதுவரைக்கும் கல்யாணமே போகலை. இதே கதில போனா காசியாத்திரை கல்யாணத்துக்கு முதல் நாளா இல்லைனா மறு நாளானு சந்தேகம் வர்ர அளவுக்கு ஞாபகமில்லாம போயிடும்னு முடிவு பண்ணி. “கல்யாணத்துக்கு எல்லாருமே போயிட்டு வரலாம்”னு சொன்னவுடனே தங்கமணிக்கு பல்லெல்லாம் வாய். இந்தியால ஒரு பிரச்சனையும் இல்லை ஆனா கத்தார்ல இந்தியா போயிட்டு வந்தவாள 10 நாள் சீதகம் ஒரு வார சீதகம்னு ரகம் வாரியா பிரிச்சி ஹோட்டல்ல தங்கிட்டு டெஸ்ட் பண்ணிதான் வெளில விடுவா. 10 நாளைக்கு நாலு பேருக்கு இங்க ரூம் போடர ரூபாய்க்கு நான் ஒரு கல்யாணமே பண்ணிடலாம் (அதாவது கல்யாணத்துக்கு செலவு பண்ணலாம்னு சொன்னேன்). இருந்தாலும் இந்த கல்யாணத்துல நான் செலவை பாத்தேன்னா ஜென்மத்துக்கும் எல்லா விஷயத்திலையும் “என்னோட ஒரே தம்பி கல்யாணத்துக்கே நீங்க வரலை, பெரிசா பேச வந்துட்டார்”னு தங்கமணி எகிறி அடிக்கும் வாய்ப்பு வந்துடும் (இப்ப மட்டும் என்ன வாழர்துனு கேக்காதீங்கோ!). “எனக்கு இருக்கர்து ஓரே தம்பி”னு தங்கமணி திரும்பி ஆரம்பிச்சா. “அதுக்கு நான் என்னமா பண்ணமுடியும் உங்க அப்பா தான் யோசிச்சு எதாவது பண்ணி இருக்கனும். இப்ப வந்து கவலைபட்டு என்ன பண்ண?”னு நான் நக்கல் அடிச்ச போது தங்கமணி சரியா கவனிக்கலை.
'எல்லாரும் போலாம்'னு சொன்னதுதான் தெரியும் தங்கமணி அழுகாச்சி 'மோட்'லேந்து மாறி ஷாப்பிங் மோடுக்கு போயிட்டா. அடுத்த மூனு நாள்ல தோஹால இருக்கும் ஷாப்பிங் சென்டர்கள் சூரையாடப்பட்டது, கிரிடிட் கார்டு தேய்க்கும் மிஷினில் இருந்து தீப்பொறி பறந்தது,நேபாளி டெய்லர் மூனு நாள்ல எத்தனை உருப்படி தைக்கர்து / பிடிக்கர்துனு தெரியாம பேந்த பேந்த முழிச்சார். “எங்க அப்பாவுக்கு வறுத்த முந்திரியும் பாதாமும் வாங்கனும் சாயங்காலம் கடைக்கு போலாம்”னு தங்கமணிடேந்து ஆபிஸுக்கு போன். “கல்யாணம் உங்க அப்பாவுக்கா இல்லைனா தம்பிக்காமா?”னு நான் கேட்டதை எல்லாம் அவள் காதுலையே வாங்கலை. என்னிக்கி வாங்கியிருக்கா இன்னிக்கி வாங்கர்துக்கு. எது வாங்கினாலும் ஒரு கேள்வியும் கிடையாது. கேட்டா “எனக்கு இருக்கர்து ஒரு தம்பி, அவனோட கல்யாணத்துல நான் நன்னா இருக்க வேண்டாமா சொல்லுங்கோ”னு ஆரம்பிச்சுடுவா. நான் மனசுக்குள்ள “பகவானே நல்லவேளை எங்க மாமனார் பெரிய மனசு பண்ணி ஒரு தம்பியோட நிப்பாடினார்”னு சொல்லி மனசை தேத்திப்பேன்.” நீங்க புது சட்டை, குர்தா எதுவும் வாங்கலையா”னு கேட்டு இன்ப அதிர்ச்சி குடுத்தா. ‘பரவாயில்லையே ஆத்துக்காரரை பத்தியும் கவலைபட ஆரம்பிச்சுட்டாளே’னு நான் சந்தோஷப்படர்துக்குள்ள “எப்போதும் போடர பழசுபொட்டெல்லாம் போட்டுண்டு வந்து என்னோட போட்டோ எல்லாத்தையும் வம்பாக்கிடாதீங்கோ! என்னோட மெடிரியல் கலருக்கு மெட்சிங்கா நல்லதா நாலு வாங்கிக்கோங்கோ!”னு சொன்னா. “உன்னோட ஷாப்பிங் எல்லாம் முடிஞ்சு அக்கவுண்ட்ல என்ன மிச்சம் மிஞ்ஜாடி இருக்குனு பாக்கனும். அனேகமா 4 முழம் வேஷ்டிதான் வாங்கமுடியும் போலருக்கு”னு சொன்னேன்.

 வழக்கம் போல எல்லா சாமான் செட்டுகளையும் அள்ளி போட்டுண்டு ஏர்போர்ட்டுல போய் இறங்கியாச்சு. அங்க இருக்கும் கொராணா கெடுபிடிகள் பாக்கவே பயமா இருந்தது. எல்லாரும் தலையோட காலோட போத்திண்டு முகமூடி திருடன் மாதிரி இருந்தா. அழகான ஏர்ஹோஸ்டஸ் எல்லாம் ஏர்'கோஸ்டஸ்' மாதிரி வெள்ளை அங்கில இருந்தா பாவம். கத்தார் ஏர்வேஸ்ல குடிக்க ஜலம் தருவாளா இல்லைனா இன்டர்னேஷனல் மெடிக்கல் ப்ரோட்டோகால்னு சொல்லி அரை டம்பளர் டெட்டால் தந்துடுவாளோனு ஒரே பயம். சில என் ஆர் ஐ ஆண்டிகள் புண்ணியாஜனம் பண்ணவந்த ஆத்து வாத்தியார் மாதிரி ஏரோப்ப்லேன் உள்ள போற வழி நெடுக ஸ்ப்ரே அடிச்சுண்டே போனா. கல்லிடைல “எங்காத்து வாசல்லையும் சேர்த்து தெளிங்கோனு” பக்கத்தாத்து மாமி சொல்லர மாதிரி ‘எங்க சீட்லையும் கொஞ்சம் மருந்து அடிங்கோ’னு சொல்ல வந்தேன்…… (கல்யாண கலாட்டா தொடரும்)

Thursday, January 21, 2021

அப்பா

 

கழிஞ்ச 2020 வருஷம் எல்லாருக்குமே ஒரு மறக்க முடியாத வருஷமா ஆயிடுத்து. 2020 மார்ச் மாசம் மெதுவா ஆரம்பிச்சு டிசம்பருக்குள்ள எல்லாரையும் சோழியை சொலட்டி போடரமாதிரி போட்டுட்டு பாகம் இரண்டு வேணுமானு கண் சிமிட்டி பயம் காட்டிண்டு இருக்கு. எல்லாருக்கும் எதாவது ஒரு வழில பாதிப்பு. ஒரு சிலருக்கு ஜோலி போச்சு, ஒருசிலரோட சோலியே முடிஞ்சு போச்சு, ஒருசிலரோ “சாவுபயத்தை கண்ணுல காட்டிட்டான் பரமா!”னு சொல்லும்படியா சாவின் விளிம்புக்கே போய் திரும்பி வந்துருக்கா. இப்படி ஒரு நிலைமையை நாம யாருமே எதிர்பாக்கலை. போதும்டா சாமி!னு சொல்லும்படியா ஆயாச்சு. முழு வருஷமும் மாஸ்க் போடர்துலையும், கையை அலம்பர்துலையும், சானிடைசர் போடர்துலையும் கழிச்சாச்சு. இந்த வருஷத்தின் ஆரம்பத்துலேந்து அப்பாவை பத்தின கவலையும் பயமும் ரொம்ப ஜாஸ்தியா இருந்தது. அவருக்கு ஏற்கனவே கிளக்கோமாவால 2012லேந்து கண் பார்வை கிடையாது. அவர்பாட்டுக்கு ஆத்துக்குள்ள நடமாடிண்டு இருந்தார். கடைசி ரெண்டு வருஷமாதான் சோடியம் & யூரியா கிரியேட்டின் அவரை படுத்த ஆரம்பிச்சது. அம்மாவோட பலத்துல தான் இத்தனை நாள் சமாளிக்க முடிஞ்சது. கண்ணுக்கு கண்ணாக இருந்து பாத்துண்டா. போன மாசம் 9ம் தேதி இரவு அப்பாவுக்கு சிவலோகப் பிராப்தி கிடைத்தது.

 

ராத்திரியே விஷயம் தெரிந்தாலும் எப்பிடி போகர்துனு தெரியாம எல்லாரையும் மாதிரி நானும் கொஞ்சம் திண்டாடினேன். லீவு கிடைச்சாலும் ப்ளைட் டிக்கெட் கிடைக்கனும். எல்லாத்துக்கும் நடுல கொரொனா டெஸ்ட் எடுத்தா தான் ஏர்போர்ட் உள்ளையே போக முடியும். ஆண்டவன் அனுக்கிரஹத்தில் எல்லா தடைகளையும் தாண்டி ஒரு நாளில் கல்லிடை போயிட்டேன். அண்ணா அமெரிக்காவில் இருந்து வந்து சேர ஐந்து நாள் ஆச்சு. அவன் வந்ததுக்கு அப்புறம் தாமிரபரணி நதிக்கரையில் வைத்து எல்லா காரியங்களும் செய்ய ஆரம்பிச்சோம். எங்க அப்பாவுக்கு கண் பார்வை நன்னா இருந்த வரைக்கும் ஒரு நாள் கூட ஆத்தங்கரை போகாம இருந்தது கிடையாது. நெல்லை மாவட்ட மக்களுக்கு இந்த ஆத்தங்கரை கிறுக்கு கொஞ்சம் ஜாஸ்தி. "என்ன ஆனாலும் நம்ப ஆத்துல வச்சு ஆகனும், நம்ப ஆத்தங்கரைல வச்சு கிடைக்கனும்"னு சொல்லும் பழக்கம் இங்கு சாதாரணம். அவர் நினைச்ச மாதிரியே அவருக்கு அந்த நதியில் கிடைத்தது.
 

அவருக்கு மிகவும் பிடித்தமான இரண்டு விஷயம் சமையல் & சங்கீதம். ராகமா சுவரத்தோட அழகா பாடுவார். அம்மா சமையல் பண்ணும் போது ரேழில உக்கார்ந்தமேனிக்கே, “அதை போட்டுக்கோ! இதை போட்டுக்கோ!”னு செஃப் தாமு மாதிரி குறிப்பு குடுப்பார். கடைசி இரண்டு வருஷத்துல அவரை கட்டிலில் இருந்த எழுப்பனும்னா ரெண்டு விஷயத்தால தான் முடியும் ஒன்னு காமாட்சி ஸ்வீட்ஸ் அல்வா அல்லது மகாராஜபுரம் சந்தானத்தின் ஏதாவது ஒரு பாட்டு(கிட்டத்தட்ட அதுவும் அல்வா மாதிரி தான்). காவிரிக்கரைல இருக்கரவாளுக்கும் தாமிரபரணி கரைல இருக்கரவாளுக்கும் வக்கனை ஜாஸ்தி. ‘எதை போட்டாலும் திங்கர்துக்கு நான் என்ன போக்கத்து போயா இருக்கேன்’ என்று இருவருக்கும் கோவம் வந்துவிடும். அப்பாவும் அதுக்கு விதிவிலக்கல்ல. போன வருடம் சென்னை ராமச்சந்திராவில் ஐசியூவில் இருந்து வெளியில் வந்த போது “பொங்கலும் வடையும் வாங்கிண்டு வாடா!”னு அவர் சொன்ன போது சிரிப்பும் அழுகையும் சேர்ந்தே வந்தது. சின்ன வயதிலிருத்தே அப்பாவிடம் இருந்த முக்கியமான குணங்கள் நேர்மை & வாக்குத் தவறாமை. குடும்பத்தில் ஒரு சமயத்தில் அவருடைய ஒரே சகோதரியின் உரிமைக்காக எல்லா அண்ணன்களையும் பகைத்துக் கொண்ட நேர்மை எங்களுக்கு அம்மாவால் சொல்லிக்குடுக்கப்பட்ட பாடம். “நமக்கு சொந்தமில்லாத பொருள் மீது ஆசை கூடாது, அடுத்தவாளோட பைசா தெருவில் கிடந்தால் அது பேப்பருக்கு சமானம், அடுத்தவன் பைசா நமக்கு வேண்டாம்” இதெல்லாம் அவர் அடிக்கடி உபயோகித்த வார்த்தைகள். வெரும் பேச்சாக இல்லமல் வாழ்ந்தும் காட்டினார். மாவீரன் சிவாஜியின் அம்மா ஜீஜாபாய் பத்தி பாடத்துல தான் படிச்சிருக்கேன் ஆனா அம்மாவோட தைரியம் அதுக்கு நிகரானது. எந்த நிலையிலும் தைரியத்தை கைவிடாத ஒரு ஆளுமை. அப்பாவின் ஆயுளை இத்தனை வருஷம் நீட்டித்து தந்தது அம்மாவின் தைரியமும் தியாகமும் தான்.

 

அவர் மறைந்தாலும் அவரின் நினைவுகள் எங்கள் மனதில் எப்போதும் நீங்காத செல்வமாக நிறைந்து இருக்கும்!!!

Sunday, March 29, 2020

சைனா வைரஸ்

அமெரிக்கால டிரம்ப் ‘சைனா வைரஸ்’னு சரியாதான் சொல்லியிருக்கார். இதை கேடுட்டு சப்பைமூக்கனுக்கு ஒரே கோபம் ‘அதெப்படி சைனா வைரஸ்னு சொல்லலாம், அதான் அழகா லக்ஷணமா “கொரோனா”னு சாஸ்த்ரோக்தமா நாமகரணம் பண்ணியிருக்கே!’னு சப்பைகட்டு கட்டரான். கடங்கார சப்பைமூக்கன் எல்லா ஊர்லையும் பரப்பி விட்டுட்டு “எங்க ஊர்ல இப்ப சரியாயிடுத்து நீங்களும் எங்களை மாதிரி செத்து செத்து விளையாடுங்கோ!”னு உபதேசம் பண்ணிண்டு இருக்கான். நம்ப ஊர்ல இருக்கும் ‘ரெட்லைட் ஏரியா ஏஜண்ட்ஸ்’ அதான் மீடியாகாரா சீனாவிடமிருந்து உலகம் கற்கவேண்டிய பாடம் என்ன?னு ஆர் எஸ் பாரதி சொன்ன மாதிரியே ‘தொழில்’ பண்ணிண்டு இருக்கா. இது போதாதுனு கேரளாவில் பினராயி விஜயனுக்கு வேற கால் அமுக்கி விடவேண்டி இருக்கு. உலகத்துல எங்க இழவு விழுந்தாலும் முதல்ல சீதகம் கேரளாகாரனுக்கு தான். ஏன்னா அவன் டீகடை வைக்காத இடமே கிடையாது. வைரஸ்/பாக்டீரியா/காச்சல்/கபம்/லூஸ்மோஷன் எல்லாத்துக்கும் அவன் எப்போதும் தயாரா இருப்பான். நயவஞ்சகமா அவன் ஊர்ல இருக்கர தமிழ் நாட்டு தொழிலாளிகளை அவசரம் அவசரமா ஊருக்கு அடிச்சு விரட்டிண்டு இருக்கான். நம்பாத்து குப்பையை மொத்தமா எடுத்து பக்கத்தாத்துல போட்டாசுன்னா நம்ப வீடு சுத்தமாதானே இருக்கும், இந்த ஜோலியைதான் சேட்டன் பாத்துண்டு இருக்கான். மருத்துவமனை கழிவு எல்லாத்தையும் வண்டில ஏத்தி தமிழகத்துல கொண்டு வந்து கொட்டர்து & ஆம்புலன்ஸ்ல ஆட்களை ஏத்தி தமிழகத்துல கொண்டு வந்து இறக்கிவிடர்து, காசர்கோட்ல இருக்கும் கொரொனா கேஸ்களை ‘மங்களூர்ல போய் சிகிச்சை பாருங்கோ!’னு அனுப்பி வைக்கர்துனு 24 மணி நேரமும் நயவஞ்சக வேலைதான். இந்த மானம் கெட்ட பொழப்புக்கு பீத்தல் ஒரு கேடு. இத்தாலி இத்தாலினு இத்தனை நாளா பீத்தீண்டு இருந்தா, இப்ப தான் புரியுது அங்க ஒரு தாலியும் இல்லைனு. பாஸ்தாவும் பிசாவும் திண்னதுதான் மிச்சம் வரிசையா 50 பேர் ஆஸ்பத்திரிக்கு போனா அங்க கையும் ஓடலை காலும் ஓடலை. ஏதோ இருக்கர மிச்சம்மிஞ்ஜாடி மருந்தை வெச்சு வைத்தியம் பாத்துண்டு இருந்தா இப்ப அதுக்கும் வழி இல்லாம போயாச்சு. ஆஸ்பத்திரி ரொம்பி வழிஞ்சு உள்ள போகவே இடம் இல்லாம பாதிபேர் ஆஸ்பத்திரி வாசல்ல இருக்கும் மரத்தடில இருக்கா இது போதாதுனு பாதிபேருக்கு சலூன்ல முடிவெட்டிக்க வந்தவா மாதிரி ஒரு போர்வையை மட்டும் போர்த்தி நாற்காலில உக்காத்தி வச்சுருக்கா. இந்த லட்சணத்துல இத்தாலியை போல இந்தியாவும் நிலைமையை சிறப்பா கையாளனும்னு தெருமுருகன் காந்தி (எ) டேனியல் ஒப்பரி வெச்சுண்டு இருக்கான். உலக அளவுல இந்தியா நல்லமுறையில் தான் கையாண்டுவருகிறது. இந்திய அளவில் தமிழக அரசு சிறப்பாகவே செயல்படுகிறது. முக்கியமாக நம்ப சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர். முதல்ல இந்த உலக சுகாதார நிறுவனத்தை வெளுக்கனும். நவம்பர்லையே தைவான்காரன் ஐ.நா-ல போய் ‘பக்கத்தாத்துல(சீனா) ஏதோ பிரச்சனை மாதிரி இருக்கு! எல்லாரும் கட்டிபிடிச்சு அழுதுண்டு இருக்கா! என்னனு கேளுங்கோ!’னு புகார் சொன்னா அதை சரியா ஜாரிக்காம சப்பைமூக்கன் சொன்னதை அப்படியே திருப்பி வாங்கி ‘ஒன்னும் பிரச்சனை இல்லையாம்! பேசிண்டு தான் இருக்காளாம்!’னு முழு பூசணிக்காயை மறைச்சதோட விளைவு உலகத்துக்கே ‘ஹேப்பி நியூ இயர்’ ஆயிடுத்து. எதையோ அடுத்து வேட்டிக்குள்ள விட்டுண்ட கதையா பாரிஸ் மேயர் பிப்ரவரில “சப்பைமூக்கனை கட்டிபிடிப்போம்!”னு ஒரு டிரெண்டிங்கை டிவிட்டர்ல ஆரம்பிச்சு வெச்சு, “நீங்களும் ஆளுக்கு ஒரு சப்பைமூக்கனை கட்டிபிடிச்சு முத்தா குடுத்து போட்டோ போடுங்கோ!”னு கிளப்பிவிட்டான். அங்க இருக்கும் பைத்தியங்களும் கட்டிபிடிச்சு போட்டோ போட்டு முடிக்கும் போது ஊரோட கொரொனா உற்சவம் ஆரம்பிச்சு கட்டிப்பிடிச்சவன் எல்லாருக்கும் மறுபத்து கழிஞ்சு அடுத்த மாசத்துலேந்து மாசியம் வரபோகர்து. நம்ப ஊர்ல பிரதமர் முன்னாடியே சுதாரிச்சுண்டு, ‘அமையசமைய ஆத்துக்குள்ள இருங்கோ! இல்லைனா எல்லாருக்கும் ஒரே சமயத்துல வைகுண்டப்ப்ராப்தி கிடைச்சிடும்!’னு சொல்லி எச்சரிச்சாலும் ஒருத்தனும் அடங்கர்தா இல்லை. பால் வாங்க போறேன்! பழம் வாங்க போறேன்!னு பைக்கை எடுத்துண்டு சுத்தர்துகள். இந்த மாதிரி வெளில சுத்தரவா எல்லாரையும் ஒரு ஸ்பெஷல் ப்ளைட்ல ஏத்தி இத்தாலிக்கு அனுப்பிட வேண்டியது தான். நிறைய வீடுகள்ல ‘work from home’ என்பது ‘work for home’-ஆ ஆயிண்டு இருக்கு. ‘சும்மா மவுசை தெய்க்கர்துக்கு பதிலா எனக்கு ரெண்டு பத்துபாத்ரம் தேச்சு தந்தா என்ன?’ ‘இப்ப பிரேக் சமயம் தானே வாஷிங்மெஷின்ல துணியை போடுங்கோ!’ ‘அஞ்சாவது விசில்ல குக்கரை ஆப் பண்ணுங்கோ!’ மாதிரியான ஒர்க் அலகேஷன் ஆயிண்டு இருக்கு. ஆத்துக்குள்ள சும்மா இருக்கும் போது பொழுதுபோகர்துக்கு நிறையா வழிகள் இருக்கு. தங்கமணிக்கு சமையல்கட்டுல கொஞ்சம் ஒத்தாசையா(சமையல்ல மட்டும்) இருங்கோ! ஏப்ரல் 15 வரைக்கும் வீட்டுக்குள்ள உயிரோட நடமாடனும்னு ஆசையிருந்தா தேவையில்லாத விவாதம் எதையும் தங்கமணிகிட்ட ஆரம்பிக்காதீங்கோ! அவாளுக்கு தான் கத்தி எங்க இருக்கு கரண்டி எங்க இருக்குனு நன்னா தெரியும். முக்கியமா அவா அப்பாவையோ அண்ணா/தம்பியையோ திட்டாதீங்கோ. கோரோனா பயம் ஜாஸ்தி ஆச்சுனா உங்களோட கல்யாண கேசட்டை/சிடியை எடுத்து ஒரு தடவை போட்டு பாருங்கோ! ‘இவ்ளோ பெரிய ஆபத்தையே பாத்துட்டோம் இதையும் தாண்டி வந்துடலாம்’னு மனசுல ஒரு தைரியும் வரும். அனேகமா இந்த சைனீஸ் வைரஸோட அட்டகாசம் முடிஞ்சு கைஜோசியக்காரா எல்லாரும் வேற ஜோலி தான் பாக்கணும். அவனவனுக்கு கை அலம்பி அலம்பியே ரேகை காணாம போயிடுத்து. நான் அலம்பிண்டு இருக்கர அலம்புக்கு இனிமே ஆர்தோ டாக்டர் எக்ஸ்ரே இல்லாம என்னோட கைல எலும்பு சரியா இருக்கானு பாக்கலாம் அந்த நிலைமைல இருக்கு. இதுக்கு நடுல என்னோட தங்கமணி “சும்மா வந்து வந்து கை அலம்பர்துக்கு பதிலா இட்லி குக்கர், பால்பாத்ரம் நு ஒவ்வொன்னா தேச்சு வைக்கலாம் இல்லையா”னு சவுண்ட் குடுப்பதால் அடுத்த பதிவுல பாக்கலாம்.

Wednesday, March 11, 2020

கொரோனாவும் மாமியாரும்

எல்லாம் இந்த சைனாகாரனால வந்தது! தண்டவாளத்துல போகும் ரயிலையும்பறக்கர்துல ப்ளைட்டையும் தவிர எல்லா கருமத்தையும் திண்ணா கரோனா/கரீனா/ மரீனா எல்லா மண்ணாங்கட்டியும் வரத் தான் செய்யும்.  டிராபிக் சிக்னல்ல முன்னாடி இருக்கும் டொயோட்டா கரோலா காரோட பின்பக்கம் அதோட பேரை எழுத்து கூட்டி வாசிக்க பாத்தா கொரோனானு வாசிக்கர அளவுக்கு கொரோனா பீதி எல்லா இடத்துலையும் பரவி இருக்கு. யாரைபாத்தாலும் கொரோனாவே பேச்சு. நாங்க இருக்கும் ஊர்ல ஏற்கனவே 13 நாடுகள்லேந்து வரும் விமானத்தை நிறுத்தியாச்சு இப்ப போதாகுறைக்கு பள்ளிக்கூடத்தையும் காலவரையின்றி மூடியாச்சு. இந்தியால விழிப்புணர்ச்சியை கொண்டு வரேன் பேர்வழினு எல்லா பயலுகளும் பீதியை கிளப்பிவிடறானுங்க. முந்தா நேத்திக்கி ஸ்கூல் மூடியாச்சுனு சொன்னவுடனே எல்லாபயலுகளும் சாயங்காலமே கடைகன்னிகள்ல புகுந்து வண்டிவண்டியா சாமான் வாங்க ஆரம்பிச்சுட்டா. நானும் தங்கமணியும் வழக்கமா போகும் கடைல எப்போதும் அத்வைதாவும் விஷ்வஜித்தும் கண்ணாம்பூச்சி விளையாடர அளவுக்கு விஷ்ராந்தியா இருக்கும்பில் போடும் பிலிபைன்ஸ் பொண்ணு கிட்ட ‘ஒன்னோட தோடு நன்னா இருக்கே’னு செளஜன்யமா பேசிண்டே வேலைபாக்கர அளவுக்கு காத்தாடிண்டு இருக்கும். திடீர் பீதிலஎதோ கல்யாணமண்டபம் மாதிரி ஜேஜே!னு கூட்டம். என்னவோ ஒரு வருஷத்துக்கு மகாபாரதத்துல வரும் அஞ்யாத வாசம் பண்ண போகரவா மாதிரி வண்டிவண்டியா சாமான்அனேகமா நூடுல்ஸ் பாக்கேட் இனிமே சைனாலேந்து ஸ்டாக் வந்தாதான் உண்டுனு சொல்லும் படியா 4 டஜன் நூடுல்ஸ்25 சேஷே சூப்பால்பவுடர் 10 கிலோனு லிஸ்ட் போயிண்டு இருந்தது. அரிசி பருப்பு ஜாஸ்தியா வாங்கினா பரவாயில்லைகாணாதுகண்ட மாதிரி டிஷூ பேப்பர் ரோலை எல்லாரும் ஒரு டஜன் வாங்கி வண்டில அடுக்கி வச்சுருந்தா.  ‘அடுத்த ஒரு வாரத்துக்கு பஞ்சாயத்துபோர்ட்ல ஜலம் வராதுனு எதாவது சொல்லியிக்காலா என்ன?  ‘சுந்தரபாண்டியபுரத்து தேங்கா எண்ணெய் பக்ஷணத்தை மொத்தமா வாங்கிண்டு போகர மாதிரி ஒரு டஜன் டிஷூ பேப்பர் டப்பாவை வச்சு ஆத்துல என்ன பண்ணுவா!’னு தங்கமணி கிட்ட கேட்டதுக்கு வழக்கம் போல ‘வாயைமூடிண்டு வாங்கோ!’னு சொல்லிட்டா.

இங்க இருக்கர கூட்டம் பத்தாதுனு நிறையா பேர் அவாளோட தோழர்/தோழிக்கு எல்லாம் போன் போட்டு ‘கடைக்கு போய் சாமான் வாங்குங்கோ!’னு சமூகபணி ஆத்திண்டு இருந்தா. நம ஊர்ல இருக்கர மாதிரி, “மாசி மாசம் ரெண்டாம் செவ்வாய் கிழமை ஆத்துக்காரியோட தங்கைக்கு ப்ளூ கலர் சுடிதார் வாங்கி குடுங்கோ! உங்களுக்கு மச்சினியே இல்லாட்டியும் ஒன்னுவிட்ட மச்சினிக்காவது எடுத்து குடுத்தே ஆகனும்! குடுக்காட்டி அடுத்த ஜென்மத்துலையும் உங்களுக்கு இதே ஆத்துக்காரிதான் வருவா! னு தலைல பாறாங்கல்லை போடற மாதிரி ஒரு மெசேஜை அனுப்பிட்டு மேற்கொண்டும் “உண்மையான தமிழனா இருந்தா இதை 50 பேருக்கு ஷேர் பண்ணு!”னு வாட்ஸப்ல புரளியை கிளப்பி விட்டா அடுத்த நாளே மாமியாரத்துலேந்து தேடிண்டு வந்துடுவா. வக்கில்’வண்டு’ முருகனையே கூட்டிண்டு வந்தாலும் ஜாமின்ல வரமுடியாது. இத்தாலில எல்லாரோட தாலியையும் அறுத்துண்டு இருக்கு. இந்த ரணகளத்துக்கு நடுல கேரளாவுல ஒரு சேட்டன் குடும்பம் இத்தாலிக்கு போய் ஊர் சுத்திட்டு வந்துருக்காகொச்சின் ஏர்போர்ட்லையும் மொட்டையா ‘ஞான் ஐரோப்பா டூர் போய் வந்து!’னு சொல்லிட்டு ஊரை பாத்து போயிட்டா. இப்ப பார்த்தா 12 டிக்கெட்டுக்கு கொரோனாவாம் என்னத்தை சொல்ல. இந்தியாவுக்கு எல்லா வைரஸும் இத்தாலிலேந்து தான் இறக்குமதி ஆகர்து.
இதுக்கு நடுல எங்க மாமியார் நேத்திக்கி சாயங்காலம் வீடியோ கால் பண்ணி தங்கமணிகிட்ட பேசிண்டு இருக்கும் போது நடுல என்னை பாத்துட்டு “மாப்ளே! ஆபீஸ்ல இனிமே யாரையும் கட்டிபிடிச்சு முத்தம் குடுக்காதீங்கோ! எல்லா இடத்துலையும் ஒரே இன்பெக்ஸனா இருக்காம்!”னு சொல்லி அவாளோட பங்குக்கு கிளப்பி விட்டுட்டா. ‘ எனக்கு தெரியாம ஆபீஸ்ல யாரை கட்டிபிடிச்சுண்டு இருக்கேள்?னு தங்கமணி முறைக்க, ‘அய்யையோ நான் யாரையும் கட்டிபிடிக்கலை!’னு தங்கமணியை சமாதானம் பண்ணர்துக்குள்ள போதும்டா சாமி!னு ஆயிடுத்து. போன தடவை ஊருக்கு போகும் போது எங்க மாமியார் சொன்ன துபாய் புடவையை மறந்துட்டேன் வாஸ்தவம் தான் அதுக்காக இப்படியா கோர்த்துவிடுவாகொரோனாவால உலகப் பொருளாதாரமே அடி வாங்கும் போது இந்த அப்பாவி தக்குடு எம்மாத்திரம்!  ஐ நா சபைல பேசி சீக்கரம் இந்த பிரச்சனைக்கு ஒரு நல்ல முடிவு எடுங்கோ!

Thursday, July 13, 2017

ஏ ஆச்சா! அவ்ளோதானா?

எல்லாரும் செளக்கியம் தானே! ரொம்ப நாளைக்கு அப்புறம் நமிதாவை பிக்பாஸ்ல பாக்கர மாதிரி மறுபடியும் ப்ளாக் பக்கம் வந்தாச்சு. இந்த முறை ஜெட் ஏர்வேஸை பிடிச்சு மும்பை போயிட்டு அங்கேந்து சென்னை போகர்தா பிளான். என்னோட குரூப்ல இருக்கும் ஒரு  அன்பர்,ஜெட்ல எதுக்கு புக் பண்ணினை! அவன் லேட்டா போவானே! லக்கேஜ் ரெண்டு நாள் கழிச்சு தான் வரும்!’னு சூப்பரா குழப்பி விட்டுட்டார். இதுக்கு பயந்தே கைல கொண்டு போகர பைல துணி-Money எல்லாத்தையும் வச்சுட்டு லக்கேஜ் பெட்டில வழக்கம் போல தட்டுமுட்டு சாமானை போட்டு கட்டிவச்சேன். ப்ளைட்டுக்குள்ள ஏர்ஹோஸ்டஸுக்கு பதிலா காலகேயனுக்கு ரோஸ்பவுடர் போட்டுவிட்ட மாதிரி வாட்டசாட்டமா ஒரு மாக்கான் வந்தார். ‘ஆரம்பமே அமக்களமா இருக்குபோ!’னு நினைச்சுண்டு சாப்பாட்டை சாப்டுட்டு தூங்கி எழுந்தா விசாலமான மும்பை விமான நிலையம். இமிக்ரேசன் முடிக்கவே 2 மணி நேரம் ஆச்சு! இமிக்ரேஷன்ல ரொம்ப நேரம் ஆனதால பக்கத்து வரிசைல நின்னுண்டு இருந்த கலர் முண்டா பனியன்,ஜமுக்கால துணில டாப்ஸ்,ஸ்விம் சூட்டுக்கு எக்ஸ்ர்டாதுணி குடுத்து தைச்ச மினிடிராயர்னு எதையுமே சரியா கவனிக்காம லோக்கல் ப்ளைட்டை பிடிச்சு மாமியார்(சென்னை) விட்டுக்கு வந்து சேர்ந்தேன்.

இந்த தடவை நம்ப மூஞ்சிபுஸ்தக பிரபல பதிவர் அனன்யாக்காவை நேர்ல பாக்கனும் நினைச்சு முயற்சி பண்ணினேன் ஆனா நடக்கலை. அந்த வருத்தம் தீரர்துக்காக திருவல்லிக்கேணி ரத்னா கபேல ரெண்டு லிட்டர் சாம்பாரும் அதுக்கு தொட்டுக்க மூனு இட்லி ஒரு வடை சாப்டுட்டு பார்த்த சாரதி பெருமாளையும் சேவிச்சுட்டு வந்தேன். கல்லிடைக்கு நான் போய் சேர்ந்த நேரம் இங்க கத்தார்ல பக்கத்தாத்துகாரா (சவுதி,துபாய்,பஹரேன்) கதவை இழுத்து மூடி தாள்பாளை போட்டுட்டா. எங்க ஊர்காராளை பத்தி சொல்லவா வேணும். அம்மணி மாமியாத்து வாசல்ல உக்காந்துண்டே அமெரிக்காவோட விசா ரூல்ஸை பத்தி வம்பு பேசற கோஷ்டிகள். வெறும் வாயை மென்னுண்டுருந்தவாளுக்கு அவல் மாதிரி நான் போய் சேர்ந்தேன். ஏ தக்குடு! நீ கத்தார்ல தான் இருக்கைல்யோ! அங்க ஒரே கலவரமாமே? எல்லாம் ஆச்சுனு சொல்றாளே? அதான் நீ கிளம்பி வந்துட்டையா?னு அச்சுபிச்சு மாமா மூச்சுவிடாம கேட்டார்.


‘ஓய் மாமா! தந்தி பேப்பர்காரன் வண்ணாரப்பேட்டை ஆரெம்கேவி கடை வாசல்ல இருக்கும் டீ கடைல வடையும் டீயும் சாப்டுண்டே எழுதின இன்டர்னேஷனல் நியூஸை படிச்சுட்டு ஒளரிக்கொட்டாதியும் ஓய்! உமக்கு திண்ணைல கூட உக்காரர்துக்கு ஆள் இல்லைனா அதுக்கு நானா கிடைச்சேன்! உங்காத்து மாமிக்கும் பக்கத்தாத்து மாமிக்கும் சிலசமயம் மனஸ்தாபம் வரர்து இல்லையா? உங்காத்து மாமிக்கு எல்லார்கூடையும் தகராறுதான் அது வேற விஷயம் இருந்தாலும் நம்மாத்துல குடியா மூழ்கி போயிடர்து? அவாத்துலேந்து எப்போதும் வரும் மாங்கா ஊறுகாய் கொஞ்ச நாளைக்கு கிடைக்காது, அதே மாதிரி தான் கத்தார்லையும் ரெண்டு நாளைக்கு பால் & மோர் கொஞ்சம் தட்டுப்பாடா இருந்தது. இப்ப எல்லாம் சரி ஆயிடுத்து.  அந்த ஊர்காரா எல்லாரும் ராஜா பக்கம் நாங்க இருக்கோம்னு முழு சப்போர்ட் பண்ணறா. ஊருக்கு கிளம்பி வரவா எல்லாரும் ஸ்கூல் லீவுக்காக வந்துண்டு இருக்கா ஓய்!’னு சொல்லி அவரோட வாயை அடைச்சேன்.

'ஊர்ல கல்யாணம் மார்ல சந்தனம்' அப்பிடிங்கர கதையா தெருல ரெண்டு விஷேஷத்துல கலந்துக்க முடிஞ்சது. பந்தல்ல ஒரு சுவாரசியமான சம்பாஷனை நடந்தது,
வம்பு மாமி - டாக்டராத்து கோமா ஷஷ்ட்யப்த பூர்த்திக்கி ஏன் வரலை?
K காது மாமி - மூர்த்தி மாமா தான் காத்தாலையே வந்தாச்சே!
வ.மாமி - மூர்த்தி இல்லைடீ! கோமா கோமா!
K.காது மாமி - மாமாவா? பந்தல்ல உக்காந்துண்டு இருக்கார்
வ.மாமி - இதுக்கு மேல உன்கிட்ட முண்டினா புதுசா பாக்கரவா என்னை செவிடுனு நினைச்சுப்பா! கோமா வந்தா எனக்கென்ன? வரலைனா எனக்கென்ன! காதுல திருகாணியை நன்னா முறுக்கிவிட்டுக்கோ! அதாவது ஒழுங்கா இருக்கட்டும்!
தோஹால இருக்கும் ஒரு சங்கரன்கோவில்காரா அவா பிள்ளைக்கு திருனெல்வேலில வச்சு பூணல் போட்டா. ஒரு நாள் முன்னாடியே போய் டிபன் காபி சாப்பாடு எல்லாத்தையும் ஒரு கை பாத்து விழாவை சிறப்பிச்சுட்டு வந்தேன். போன இடத்துல அவா சொந்தக்காரா எல்லாருக்கும் சங்கரன்கோவில் மாமா என்னை பத்தி இன்ட்ரோ குடுக்கரேன் பேர்வழினு ஒரேடியா தூக்கிட்டார். பூணல் அன்னிக்கு மேடைக்கு பக்கத்துல நன்னா பளிச்னு மல்டி கலர் காட்டன் சில்க் புடவை கட்டிண்டு இருந்த ஒரு பொண்ணை பாத்துட்டு ப்ரண்டுக்கு பாக்கலாமேனு(சத்தியமா ப்ரண்டுக்கு தான்) ஐடியா பண்ணி அவளோட ஒன்னு விட்ட சித்தி கிட்ட இதர சமாசாரங்களை ஜாரிக்கலாம்னு ஆரம்பிச்சா, ‘உங்களோட ஜாதகத்தை எடுத்தாச்சா?’னு இன்ப அதிர்ச்சி குடுத்துட்டா! வெக்கத்தோட ரவுண்ட் நெக் டீசர்ட்டை சரிபண்ணின்டு ‘என்னோட ஜாதகத்தை 2011 டிசம்பர்லையே ஒரு ஆள் கைல எடுத்து குடுத்து file-ஐ மொத்தமா 'க்ளோஸ்' பண்ணியாச்சு! தங்கமணியை சென்னைல விட்டுட்டு வந்துருக்கேன் மாமி’னு சொல்லிட்டு மனசை தேத்திண்டு சாப்பிட போனேன். ராத்ரியே தங்கமணிக்கு போன் பண்ணி விஷயத்தை சொன்னா, ‘இனிமே நாங்க இல்லாம எந்த விஷேஷத்துக்கும் போய் கிழிக்க வேண்டாம்’னு ஆசையா சொல்லிட்டா. ஊருக்கு கிளம்பரதுக்கு முன்னாடி நம்ப TRC மாமாவையும் மாமியையும் ஆத்துக்கு போய் பாத்து நமஸ்காரம் பண்ணிட்டு போன மாதிரியே மறுபடியும் தோஹாவுக்கு வந்து சேர்ந்தாச்சு.