Thursday, October 4, 2012

அவுத்து விட்ட கழுதை (Part 2)

Part 1


மெட்ராஸ்ல போய் இறங்கி இரண்டாவது நாளே பெண்களூருக்கு கிளம்ப தயாரானேன். பெரியமனசோட ‘தனியாவே போயிட்டு வாங்கோ!’னு தங்கமணி சொல்லிட்டாலும் சந்தோஷத்தை முகத்துல காட்டாம யதார்த்தமாவே இருந்தேன். சின்னக்கொழந்தேளை தெருமுனை வரைக்கும் வந்து ஸ்கூல் பஸ் ஏத்திவிடும் அம்மா மாதிரி சென்ட்ரல் ஸ்டேஷன் வந்து வழியனுப்ப மேடமும் வந்தாங்க. அங்க போய் பாத்தா தேச்சு வச்ச வெண்கல விளக்கு மாதிரி ஒரு ரயில் வந்தது. முந்தானாள் பீஹார்லேந்து கிளம்பி பெங்களூர் போயிண்டு இருந்த அந்த ரயில் அழுக்கு பிண்டமா இருந்தது. கண்ணுக்கு எட்டின தூரம் வரைக்கும் ‘ஆத்தாஹை பாத்தாஹை!’னு வாய்ல பான்பராக்கை குதப்பிண்டு ஹிந்தி பேசும் பிஹார் மாக்கான்கள் மட்டுமே கண்ல பட்டதால தங்கமணிக்கு மனசு குளிர்ந்து போச்சு. நீங்கதான் ஒரு டப்பா ஹிந்தி பேசுவேளே! அந்த ஹிந்திலையே அல்லசல்ல உள்ள மனுஷா கிட்ட பேசிண்டே ஊர்போய் சேருங்கோ!னு நக்கல் அடுச்சுண்டே நான் ஏறவேண்டிய பெட்டிக்கு வந்தவுடனே அம்மணிக்கு பேச்சு நின்னுடுத்து. ‘என்னடா இது ஆல் இண்டியா ரேடியோல ஹம்சத்வனியை அடக்கி வாசிக்கறாளே!’னு பெட்டிக்குள்ள பாத்தா அங்க ‘அழகான குடும்பம் அன்பான வாழ்க்கை டிங் டாங்க்’னு தூர்தர்ஷன்ல வரும் விளம்பரம் மாதிரி ஒரு குடும்பம் உக்காசுண்டு இருந்தா. அப்பர் பர்த்ல குறட்டை விட்டு தூங்கிண்டு இருந்த ஒரு அப்பா,ஆத்துலேந்து கொண்டு வந்த எதோ ஒரு பக்ஷனத்தை நொசுக்கிண்டு இருந்த ஒரு அம்மா அப்புறம் இந்த ஜோடிக்கு சம்பந்தமே இல்லாத அழகான ஒரு பொண்ணு.


‘பக்கத்துல நான் தான் இல்லையேனு நல்ல வம்பளந்துண்டு போகாதீங்கோ! உங்க ஜோலி என்ன உண்டோ அதை மட்டும் பாத்தாபோதும் கேட்டேளா!’னு ‘அன்பா’ சொல்லி வழியனுப்பி வச்சா. ரயில் புறப்பட்டு கொஞ்ச நேரத்துலையே அந்த குடும்பம் மலபார் குடும்பம்னு அவா சம்சாரிச்சுண்டதுல தெரிஞ்சது. அந்த குடும்பத்துக்கு பூர்வீகம் திரிச்சூர். அப்பர் பர்த் அப்பாவுக்கு 20 வருஷம் முன்னாடி நாக்பூர்ல ஜோலி கிட்டினதால மொத்த குடும்பமும் அங்க போயி செட்டில் ஆயிடுத்து. இவாளோட மூத்த பொண்ணை பெங்களூர்ல கல்யாணம் பண்ணி குடுத்து இருக்கா. மடிவாலால இருக்கும் அந்த பையன் ‘சோப்ட்வேர்’ல இருக்கான் போலருக்கு. கல்யாணம் பண்ணிகுடுத்து இந்த வருஷம் தான் அவாளுக்கு முதல் ஓணமாம். அக்காளோட ஓணத்துக்கு அங்கச்சி போயிண்டு இருக்கா போலருக்கு. என்னாட தங்கமணி சொன்னதால நான் அவா கூட எதுவும் பேசிக்கலை. ஆனா அந்த பொண்ணு கர்சிப்ல அழகா ரெண்டு சிட்டுகுருவி மாதிரி எம்ப்ராய்ட்ரியெல்லாம் போட்டுண்டு வந்தது. ‘நீங்க ஏன் 'என்ட எம்ப்ராய்டரி'னு ஒரு ப்ளாக் ஆரம்பிக்ககூடாது? ஆரம்பிச்சேள்லா எல்லாரும் வந்து பாத்துட்டு 'அடிபோலி எம்ப்ராய்ட்ரி கேட்டோ!'னு கமண்ட்டெல்லாம் போடுவா!’னு ஐடியா குடுத்தேன். ஒருவழியா ராத்ரி ஏழரை மணிக்கு கிருஷ்ணராஜபுரம் ஸ்டேஷன்ல இறங்கி நான் வழக்கமா போய் கழுத்தறுக்கும் ஆத்துக்கு போகாம வேற ஒரு ஆத்துல போய் பொட்டியை இறக்கினேன்.

பெண்களூருக்குன்னு சிலபல குணாதிசயங்கள் உண்டு. ஆலங்குளம் அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவில்ல ஆடிமாச கொடைக்கு நையாண்டி மேளம் வாசிக்க வந்த வாகைகுளம் கணேசக்கம்பர் மாதிரி எல்லார் தோள்பட்டைலயும் ஒரு லாப்-டாப் பை தொங்கிண்டு இருக்கும். கல்யாணம் ஆனவரா இருந்தா இன்னொரு கைல ஒரு மிருதங்க பைல அவாத்து மாமி டப்பர்வேர் டப்பால கட்டிக் குடுத்துவிட்ட அயிட்டங்கள் இருக்கும். பொம்ணாட்டிகள் எல்லார் கிட்டயும் ஒரு ஹேண்ட் பேக் இருக்கும். அதுல பைசா இருக்கோ இல்லையோ ஒரு குட்டி கண்ணாடி சகிதமா ஒரு மினி மேக்கப் செட்டு கட்டாயமா இருக்கும். கல்யாணம் ஆகாத மாக்கான்கள் எல்லாம் அசப்புல பாத்தா எமதர்மராஜாவோட வாகனம் மாதிரி இருக்கும் ஒரு பைக்ல சாணியை மிதிச்சவன் கால் அலம்பர்துக்கு அவசரமா ஓடர மாதிரி வேகமா போவா.


மிருதங்க பை :)


எவ்ளோ மல்லி இருந்தாலும் எப்பிடி மதுரை மல்லி பேமஸ்ஸோ அதை மாதிரி இந்த ஊர் டிராபிக் ஜாம் ரொம்ப பேமஸ். முன்னாடி எல்லாம் பிளாட்பார்ம் வரைக்கும் கார் நிக்கும் பிளாட்பார்ம் மேல பைக் ஆட்டோ எல்லாம் போகும். இந்த தடவை மாரத்தஹல்லி பாலம் கீழ காரே பிளாட்பாரம் மேல நிக்கர்து. மஹாபாரதம் சீரியல்ல வரும் யுத்தகளம் மாதிரி இருந்தது பாக்கர்த்துக்கு. ஹனுமார் கோவில் & சனீஸ்வரன் கோவில் எண்ணிக்கை ஜாஸ்தி ஆகியிருக்கு. மெட்ரோ ரயில் பேரை சொல்லி ரியல் எஸ்டேட் ரெட்டிகள் எல்லாம் நன்னா கல்லா கட்டிண்டு இருக்கா.

மெட்ரோ ரயில்ல ஆசையா ரெண்டு தடவை எம் ஜீ ரோடு வரைக்கும் போயிட்டு வந்தேன். மூனு வருஷம் முன்னாடி மூத்திரசந்தா இருந்த இடத்துல எல்லாம் கோவிந்தன் மால்/கோபாலன் மால்னு புதுசு புதுசா வந்துருக்கு. பழைய ஆபிஸ் ஜோலி எல்லாம் முடிச்சுண்டு நேரா ஜே பி நகர் மாமியாத்துக்கு போனேன். அவாத்து மாமா ஆத்தை பழைய எலக்ட்ரானிக்ஸ் ரிப்பேர் கடை மாதிரி ஆக்கி வச்சுருக்கார். டீவிலேந்து பிரிட்ஜ் வரைக்கும் எல்லாம் ரெண்டு ரெண்டா இருக்கு(மாமியை தவிர). வாய்க்கு ருசியா நல்ல திவ்யமா மம்மு போட்டா, நன்னா சாப்டுட்டு ‘உங்காத்து மாமாக்கு நல்ல புத்தி வரட்டும் மாமி!’னு வாழ்த்தினேன். ‘அதை சத்தமா சொல்லுடா கோந்தை!’னு சொன்னா. அதுக்கு மேல அங்க இருந்தா அடிவிழும்ங்கர்தால மெதுவா அங்கேந்து நகர்ந்தாச்சு.

பாழாபோர மழை மைக்கோ லேயவுட்ல இருக்கும் ஒரு பிரபல எழுத்தாளரை பாக்கமுடியாம பண்ணிடுத்து. திங்கட்கிழமை காத்தால ஸ்கூலுக்கு போகும் ரெண்டாங்கிளாஸ் பையன் மாதிரி கிளம்பர்துக்கே மனசில்லாம ரயிலேரி மறுபடியும் மெட்ராஸுக்கு வந்து கல்லிடை கிளம்பலானேன்.

கல்லிடையில்.....................(தொடரும்)