Friday, June 25, 2010

Take diversion

அன்பான வாசகர்களே! இந்த வாரம் தக்குடுவோட பதிவு உம்மாச்சி காப்பாத்து! ப்ளாக்ல இருக்கு, ஸ்ரமம் பாக்காம அங்க வந்து எல்லாரும் படிங்கோ சரியா!!! கமண்ட் போடாம கமுக்கமா படிக்கும் நல்ல உள்ளங்களும் அங்க வந்துருங்கோ!!...:)

உங்கள்,
தக்குடு

Friday, June 18, 2010

புளியோதரையும் தச்சு மம்முவும் 5

எல்லாம் நல்ல படியாக சந்தோஷமாக கதை கேட்டு முடிக்கும் வேளையில் ஸ்ரீவத்சன் அதிர்ச்சியான ஒரு விஷயத்தை சொல்ல ஆரம்பித்தான்

அப்பா! உங்கள்ட ரொம்ப நாளாவே ஒரு விஷயம் சொல்லனுன்னு இருந்தேன். இப்ப சொல்லிட்டா தேவலைனு நேக்கு தோனர்து!னு பீடிகை போட்டான்.

என்னடா சொல்லப்போறாய்?னு கேக்கர மாதிரி அவனை நிமிர்ந்து பாத்தார் வரதாச்சாரி.

நான் ஒரு பொண்ணை விரும்பறேன்பா!னு ஸ்ரீவத்ஸன் ஆரம்பிச்சான்.

என்னடா சொல்றை!னு விஜி மாமி குரலை உசத்தர்துக்கு முயற்சி பண்ணும்போதே, இருடி! என்ன சொல்லறான்னுதான் பாப்போமே! என்பது போல் மாமியை சைகையால் நிறுத்தினார் மாமா.

கோயம்புத்தூர் PSG காலேஜ்ல நான் அப்ப B.E(EEE)3rd year படிக்கும் போது அவள் பர்ஸ்ட் இயர் படிச்சுண்டு இருந்தா!னு சொல்ல ஆரம்பிச்சான் ஸ்ரீவத்ஸன்.

அப்ப நீ 4th இயர் படிக்கும் போது அவள் 2nd இயர் இல்லையா?னு அந்த சமயத்திலும் நக்கல் அடிச்சது நம்ப வைஷு குட்டி.

வைஷூ நீ பேசாம இரு!னு மாமா மெதுவா சொன்னார்.

அவள் கெமிக்கல் இன்ஜினியரிங் ப்ராஞ்ச், ரொம்ப நல்ல பொண்ணுப்பா! பரமசாது! நம்பாத்துகாரா எல்லார் மேலையும் ரொம்ப மரியாதை உள்ள பொண்ணு அவள்!னு ஸ்ரீவத்ஸன் சொல்ல சொல்ல விஜி மாமிக்கு கோவம் வந்தது. என்னடா நினச்சுண்டு இருக்கை மனசுல? ஒரேடியா தலைல தூக்கி வச்சுண்டு குழந்தேளை கொண்டாடினா இப்படித்தான் ஆகும்!னு மாமாவை பாத்து சொன்னாள்.

கெமிக்கல் இன்ஜினியரிங்கா? அதான் உங்களுக்குள்ள நல்ல கெமிஸ்டிரியோ?னு மறுபடியும் வைஷு மெதுவா ஆரம்பிச்சுட்டு அப்பரம் அடி விழுமோங்கர பயத்தில் நிறுத்திட்டாள்.

மாமா எதுவும் பேசாம ஸ்ரீவத்ஸன் மேல்கொண்டு பேசர்துக்கு காத்துண்டு இருந்தார்.

அவளோட பேர் செளஜன்யா, பூர்வீகம் திருக்கோவிலூர் பக்கம். அவளோட அப்பா & அம்மா ரெண்டு பேருமே நல்ல மனுஷாதான். அப்பா சென்ட்ரல் கவர்மெண்ட்ல உத்யோகத்துல இருக்கார். அவாளுக்கும் விஷயம் தெரியாது, இப்போதான் அவளுக்கு சன்மார்ல உத்யோகம் கிடைச்சுருக்கு, ஆனா ஒரே ஒரு விஷயம்...!!னு நிப்பாட்டிட்டு மீண்டும் தொடர்ந்தான், அவள் புளியோதரை கிடையாது அவள் தச்சு மம்மு பார்ட்டி, ஆனா அவாளுக்கு குலதெய்வம் எல்லாம் திருப்பதி ஸ்ரீநிவாச பெருமாள்தான்!னு அவசரமாய் சொன்னான்.

என்னடா நடக்கர்து இங்க? எவ்ளோ பெரிய விஷயத்தை இவ்ளோ சாதாரணமா சொல்றையேடா!! பெருமாளே!னு வருத்தம் கலந்த குரலில் கொஞ்சம் கண்ணீரோடு விஜி மாமி தன் மனதில் இருப்பதை வெளியில் கொட்டினாள்.

ஷேக்ஸ்பியர் சொன்னதுதான் ஞாபகத்துக்கு வருது!னு மாமா ஒரு பெருமூச்சோடு ஆரம்பித்தார். ‘Love is beautiful, amazing, wonderful,...it is the best thing in the world untill it happens to "UR CHILDREN" நு அந்த மனுஷன் சொன்னது சரியாதான் இருக்கு! இப்ப என்னடி ஆயிடுத்து? நமக்கும் அவாளுக்கும் கொஞ்சம்தான் வித்யாசம். களத்துல நாம சக்கரை வாழப்பழ கலவைலேந்து பரிமாற ஆரம்பிப்போம், அவா திருக்கண்ணமுதுலேந்து தொடங்குவா, நாம விஸ்வக்சேன பூஜைலேந்து ஆரம்பிப்போம், அவா கணபதி பூஜைலேந்து ஆரம்பிப்பா. புளியோதரையையே கடைசி வரைக்கும் சாப்டாமா கடோசில நெஞ்சை கறிக்காம இருக்கர்துக்கு நாமளும் கொஞ்சம் தச்சு மம்மு சாப்டர்து இல்லையா? இவனுக்கு தச்சுமம்முதான் இஷ்டம்னா நாம என்னடி பண்ண முடியும். கொஞ்ச கொஞ்சமா நம்பாத்து பழக்கவழக்கம் எல்லாம் சொல்லிகுடுத்துடலாம்!னு மாமா சொல்லி முடிக்கும் போது மாமியும் வைஷூவும் பேச்சு வராமல் அப்படியே ஆச்சர்யமா மாமாவை பாத்துண்டு இருந்தா.

அவாத்துகாராளை வந்து பேச சொல்லுடா ஸ்ரீவத்ஸா!னு சொல்லிண்டே மாமா பெட்ரூமுக்குள்ள போய் ட்ரெஸ் மாத்திண்டு வந்தார்.

அப்பா என்னை மன்னிச்சுக்கோங்கோ!னு சொல்லிண்டே வரது மாமா காலில் விழுந்தான் வத்ஸன். என்னடா கோந்தை! எழுந்துருடா!னு அவனை எழுப்பினார்.

அப்பா நான் சொன்னது எல்லாம் உண்மை கிடையாதுப்பா, உண்மைலையே அப்படி எல்லாம் ஒன்னும் கிடையாது, உங்க கொழந்தேள் காதலிக்கரா!னு சொன்னா உங்க ரியாக்ஷன் எப்படி இருக்கும்!னு சும்மா டெஸ்ட் பண்ணினேன்!னு சொல்லி முடிக்கவும் விஜி மாமி வந்து ஸ்ரீவத்ஸன் காதை பிடிச்சு திருகினாள்.

அதானே பாத்தேன், நம்ப அண்ணாவுக்கு எங்கேந்து இவ்ளோ தைரியம் வந்தது?னு எனக்கே ஆச்சர்யமா இருந்தது, காதலிக்கர அளவுக்கு நம்ப அண்ணா பெரிய ஆளோ!னு ஒரு நிமிஷம் பயந்துட்டேன்!னு வைஷு நையாண்டி பண்ணினது.

கோந்தை! நான் ஒன்னும் பழைய பஞ்சாங்கம் கிடையாது, கரி இன்ஜின் ரயில்ல போனவா அதுலையே போகனும்னு அவசியம் இல்லை, காலத்துக்கும் அவசரத்துக்கும் ஏத்த மாதிரி எலக்ட்ரிக் ட்ரெயின், மெட்ரோ ட்ரெயின் & புல்லட் ட்ரெயின்ல கூட போகலாம். ஆனா ரயில் தண்டவாளத்துல தான் போகனும்,ரோட்ல ஓட்ட முடியுமா? பாரம்பர்யம் பண்பாடு மீறின கார்யமா இருக்க கூடாது. அதாவது நம்பளோட பாரம்பர்யத்துக்கு பங்கம் வராமா நம்ப கார்யம் இருக்கனும். ரெங்கனாதன் மாமா சம்மதத்தோடதான் உங்க அம்மா கையை நான் பிடிச்சேன். அப்பா அம்மாவை வயத்தெரிய விட்டுட்டு ஒரு வாழ்க்கையை கொழந்தேள் நினைச்சு பாக்ககூடாது!னு மாமா முடிக்கும் போது அப்பாவை பெருமையோடு அவர் குழந்தைகளும், ஆத்துக்காரரை வெட்கம் கலந்த பெருமையோடு விஜி மாமியும் பார்த்தாள்.

விஷமக்கார கண்ணன்! பொல்லாத விஷமக்கார கண்ணன்!னு அருணா சாய்ராம் வரது மாமாவின் நோக்கியா போனிலிருந்து பாடினார்கள். ஹலோ வரதாச்சாரி ஹியர்!னு மாமா போனை எடுத்து பேசினார்.

டேய் வரதா எப்டிடா இருக்கை? நாந்தான்டா உன்னோட பால்ய ஸ்னேகிதன் சீமாச்சு பேசறேன். எப்படியோ கஷ்ட பட்டு உன்னோட நம்பரை புடிச்சுட்டேன்டா!னு இடைவெளி விடாமல் பேசினார் சீமாச்சு என்ற ஸ்ரீநிவாசன்.

டேய் சீமாச்சு! எப்டிடா இருக்கை? எவ்ளோ நாள் ஆச்சுடா உங்கிட்ட பேசி!னு மாமாவும் சந்தோஷமா பேசினார்.

டேய் உன்னோட புள்ளையான்டான் ஜாதகம் ஜெய்ஸ்ரீ மாமி மூலமா எனக்கு கிடைச்சதுடா, என்னோட பொண்ணுக்கு ப்ரமாதமா பொருந்தர்து, நோக்கு சம்மதம்னா என்னோட பொண்ணை பாக்கர்துக்கு எல்லாரும் திருச்சிக்கு வாங்கோ! பொண்ணோட பேர் செளஜன்யா!னு ஸ்பீக்கர் போனில் சீமாச்சு சொல்லவும் மொத்த குடும்பமும் ஆச்சர்யமாக ஸ்ரீவத்ஸனை பார்த்தது.............:)

இந்த சமயத்தில் இந்த கதைக்கு(??!!) ஆதரவு & நேர்மையான பின்னூட்டம் அளித்த எல்லா நல்ல உள்ளங்களுக்கும் தக்குடுவோட பணிவான நமஸ்காரங்கள். இன்னோரு முக்கியமான விஷயம், இந்த கதைக்கு தன்னுடைய குடும்பத்தில் உள்ள எல்லாருடைய பெயரையும் (except our vaishu kutty and seemaachu) உபயோகபடுத்திக் கொள்ள அனுமதி அளித்த சிரஞ்சீவி. வரதாச்சாரி & செளபாக்யவதி.விஜயலெக்ஷ்மி வரதாச்சாரி தம்பதிகளுக்கு இந்த கதையை அன்பளிப்பாக தக்குடு சந்தோஷமா குடுக்கர்து. இந்த கதையில் வருவது போல் வைஷூ மாதிரி படுசுட்டியா ஒரு பொண்கொழந்தையும், தக்குடு மாதிரி சூதுவாது இல்லாத ஒரு பிள்ளக் கொழந்தையும் அவாளுக்கு அனுக்கிரஹம் ஆகனும்னு அப்ரமேயஸ்வாமியை ப்ரார்த்தனை பண்ணிக்கறேன்.

மேலும் ஐயங்கார் பாஷை சம்பந்தமா நிறையா ஆலோசனை சொன்ன என்னோட ‘தோஸ்த்’ VGr-ருக்கும், வல்லி அம்மாவுக்கும், ‘தோஹா’ ஸ்ரீவத்சனுக்கும் தாசன் கடமைபட்ருக்கேன்.

(Note - அடுத்த வாரம் தக்குடுவோட இன்னோரு ப்ளாக்கான உம்மாச்சி காப்பாத்து!ல போஸ்ட் போடப்படும். எல்லாரும் மறக்காம வாங்கோ! சரியா!!)

Friday, June 11, 2010

புளியோதரையும் தச்சு மம்முவும் 4

ஸ்ரீரங்கம் போகர்துக்கு திருச்சி ஸ்டேஷன்ல இறங்கிட்டு அங்கேந்து பஸ்ஸு புடிச்சு பிரயாணம் பண்ணினேன். அந்த பொண்ணையே மனசுல நினைச்சுண்டு போனதால எனக்கென்னவோ ப்ராணாயாமம் பண்ணின்டு போகர மாதிரி இருந்தது!னு மாமா உற்சாகமா ஆரம்பித்தார்.

எங்க நரசு மாமா சொன்ன மாதிரியே அவரோட அசிஸ்டெண்ட்டோட ஆத்தை கண்டுபிடிச்சு அவாத்து கதவை தட்டினேன். நான் போயிறங்கின சமயம் காத்தால சமயம் அதனால சுப்புலெக்ஷ்மி அம்மாவோட விஷ்ணு ஸகஸ்ர நாமம்(B side) திருக்கண்ணமுதுல தேனும் கொஞ்சம் சாதிச்ச மாதிரி திவ்யமா கேட்டுண்டு இருந்தது. ஆராமுதன் அண்ணா நரசு மாமா பேரை கேட்டோனே சம்பந்தி உபசாரம் பண்ண ஆரம்பிச்சுட்டார். காலை மட்டும் கொஞ்சம் மடக்கிண்டு இரண்டு கையையும் ஏந்தர மாதிரி வச்சுண்டார்னா ஆராமுதன் அண்ணா பாக்கர்துக்கு சும்மா 'கருங்குளம்' கல் கருடர்தான். அவாத்து மாமி ஐயங்கார் கட்டு கட்டிண்டு தாயார் மாதிரி இருந்தா. வசந்த பரிமளா!னு அழகான நாமதேயம் அவாளுக்கு. நான், வசந்தா மண்ணி!னு கூப்ட ஆரம்பிச்சுட்டேன்.

நோக்கு பூர்விகமே ஸ்ரீவில்லிபுத்தூர்தானா!னு மண்ணிதான் ஜாரிக்க ஆரம்பிச்சா. இல்லை மண்ணி! கரக்டா சொல்லனும்னா மன்னார்குடிதான் என்னோட பூர்வீகம்!னு நான் சொன்னவொடனே ஆத்துக்காரர்ட கேக்காமையே அட்டியல் மாலை கிடைச்ச ஒரு பொம்ணாட்டியோட முகம் மாதிரி அப்படி ஒரு மலர்ச்சி மண்ணி முகத்துல. கேட்டேளா? நம்பாத்து அம்பிக்கு பூர்விகம் மன்னார்குடியாம்!னு பெருமை பொங்க சொன்னா.
(நேக்கு அப்பவே மண்ணியோட பூர்வீகம் என்னனு புடிபட்டுருத்து)

நல்லவேளைடா அம்பி, மன்னார்குடி!னு சொல்லி என்னை காப்பாத்திட்டை, நீ இங்கதான் தங்கப்போரைனு அவள்ட நான் இன்னும் சொல்லலை(அதாவது அப்ரூவல் வாங்கலை) இனிமே கவலை இல்லை!னு ஆராமுதன் அண்ணா மெதுவா என்ட சொல்லிண்டு இருக்கும்போதே, ‘சொர்ர்ர்னு!’னு ஒரு ஆத்து ஆத்தி மணக்க மணக்க ஒரு பில்டர் காப்பியை எடுத்துண்டு வந்துட்டா வசந்தா மண்ணி.

நீ எதோ முக்கியமான கேஸ் பத்தி விசாரிக்க வந்துக்கை!னு மாமா லெட்டர்ல எழுதி இருக்காரே?னு நான் கொண்டு வந்த லெட்டரை படிச்சுண்டே கேட்டார் ஆராமுதன் அண்ணா. நானும் ஆமாம் முக்கியமான ஒரு கேஸ்தான்!ங்கர மாதிரி மண்டையை ஆட்டினேன். காபி டம்பளரை கீழ கூட வைக்கவிடலை அந்த மண்ணி. ஸ்னானம் பண்ணிட்டு வாங்கோ! ஆகாரம் தயார் பண்ணரேன்!னு சொல்லிட்டு அவாளோட ஆபிஸுக்குள்ள(கிச்சனுக்குள்ல)போய்ட்டா மண்ணி. இந்த மாமா ஆரு?னு கேட்டுண்டே உத்ஸவ மூர்த்தியாட்டம் ஒரு குட்டி குழந்தை வந்தது, கோந்தையோட மாமாடா தேசிகா!னு ஆராமுதன் அண்ணா அந்த பெரியவருக்கு(??!) என்னை அறிமுகம் பண்ணி வச்சார்.

மாமாவோட கதைல இருந்த சுவாரசியத்தால விஜி மாமி, வைஷூ குட்டி, ஸ்ரீவத்ஸன் யாருமே குறுக்க கேள்வி எதுவும் கேக்காம கர்மஸ்ரத்தையா கேட்டுண்டு இருந்தா.

சாயங்காலம்தான் ரங்கனை சேவிக்கர்துக்காக என்னை அழைச்சுண்டு போனார் அண்ணா, ஸ்ரீரங்கம் ஊரோட அழகே அழகுதான். சில பொண்களை போகும் வழில பாத்ததுக்கு அப்பரம், அவசரப்பட்டு அந்த பொண்னை கமிட் பண்ணின்டோமோ?னு சந்தேகம் வர அளவுக்கு எல்லாரும் என்னப்பாரு! உன்னப்பாரு!னு இருந்தா!னு வரது மாமா சொன்னவுடன் விஜி மாமியால் சிரிப்பை அடக்கவே முடியலை. போரும்!போரும்! கதையை மட்டும் சொல்லுங்கோ!னு ஒரு அதட்டல் போட்டா.

தாளராசன் படித்துறைல போய் கை கால் எல்லாம் அலம்பிண்டு அதுக்கப்பரமா நாங்க ரெங்கன் சன்னதிக்கு போனோம், அழகா தாச்சுண்டு அம்சமா இருந்தார் ரெங்கனாதர்.'வகுள பூஷண பாஸ்கரர்' ஏன் இவனோட அழகுல சொக்கிபோனார்னு இப்போதான் புரியர்து!னு ஒரு பிட்டை ஆராமுதன் அண்ணாட்ட போட்டவுடனே அவர் ஆடி போய்ட்டார்.வரதா! நீ கிரிமினல் லாயர்னுதானே சொன்னை, ஆனா நீ பேசர்தை பாத்தா எதோ பெரிய வித்வான் மாதிரினா இருக்கு!னு அண்ணா முடிக்க,மன்னார்குடிகாராளுக்கு ஸ்வாதீனமாவே பெருமாளோட தாஸபாவம் ஜாஸ்தினு!வசந்தா மண்ணியும் சொல்லிட்டு காலரை நிமிர்த்திக்கரமாதிரி புடவையை ஒரு தடவை சரிபண்ணின்டா!னு மாமா விவரித்தார்.

ஒரே பந்துல 2 விக்கெட்டை அவுட்டாக்கின ஒரே பவுலர் எங்க அப்பா மட்டும்தான்!னு வைஷூ கூச்சல்போட்டாள்(வைஷூவுக்கு கொஞ்சம் கிரிக்கெட் பைத்யம் உண்டு).

ஸ்வாமியை சேவிச்சுட்டு வெளில ப்ராகாரத்துக்கு வந்ததுக்கு அப்பரம் அங்க ஒரு மாமாவை பாத்தோம். என்னடா ஆராமுதா! செளக்கியமா இருக்கியா? வசந்தா எப்பிடிமா இருக்கை?னு ரொம்ப கம்பீரமா அந்த மாமா இவாளை விசாரிச்சார்.பக்கத்துல இருந்த அவாத்து மாமிகைல இருந்த தாம்பாளத்துலேந்து ஒரு பழத்தை எடுத்து தேசிகனுக்கு குடுத்துண்டே, இந்த அம்பி யாரு?னு கேட்டார்.எங்க சீனியர் நரசிம்மாச்சாரி மாமாவோட ஜூனியர், ஒரு கேஸ் சம்பந்தமா இங்க வந்துருக்கான்!னு அண்ணா சொன்னார்.

நாங்க பேசிண்டு இருக்கும்போதே ரங்ங்ங்ங்ங்க புரவிஹாரா!னு அழகான முத்துஸ்வாமி தீக்ஷிதர் க்ருதி ப்ருந்தாவன சாரங்காவில் ரீங்காரமிட்டது. ரூபக தாளம் தப்பாம இருந்தது. பக்கத்துல எதோ ப்ராகாரத்துல யாரோ பாடரா போலருக்குனு வியூகம் பண்ணின்டேன். என்னடி மைதிலி! ஒன்னோட பொண்ணரசி பாட ஆரம்பிச்சாச்சு போலருக்கு?னு அந்த மாமா மாமிட்ட கேட்டதை வச்சு அவாளோட பொண்ணுதான் பாடரானு நேக்கு புரிஞ்சது.

இதுக்கு நடுல சங்கீதம் முடிஞ்சு அந்த பொண்ணு அங்க வந்தது. சரியா நான் அந்த பொண்ணை பாக்கும்போது அரங்கனோட கோவில் மணி டைண்! டைண்!னு அடிச்சது, ப்ருந்தாவன சாரங்கால பாடினது என்னோட வசந்த ராகம்னு அப்பதான் எனக்கு புரிஞ்சது, என்னை பாத்தவொடனே அவளுக்கும் ஆச்சர்யம் கலந்த வெட்கம். இங்க எப்பிடி வந்தார் இந்த மனுஷர்?னு யோசிக்கர மாதிரி இருந்தது அவளோட கண்.

அம்பி எதுல கெட்டிக்காரன்?னு அந்த மாமா என்னை பாத்து கேக்கும் போது கரக்டா அந்த பக்கமா ஒரு பட்டாச்சார்யார் கைல ஒரு பெரிய வெண்சாமரத்தை கொண்டு போனார். இவர் இதுலதான் கெட்டிக்காரர்!னு சொல்லற மாதிரி அந்த சாமரத்தையும் என்னையும் பாத்துட்டு அந்த பொண்ணு ஒரு நக்கல் சிரிப்பு சிரிச்சது!னு மாமா சொல்லிமுடிக்கவும்.

டாப் கியர்ல போட்டு கதையை தூக்கிட்டேளே அப்பா!னு ஸ்ரீவத்சன் பெருமையோடு சொன்னான்.

நம்ப மாமா மாமி யாரு?னு சொல்லவே இல்லையே மண்ணி?னு வசந்தா மண்ணிட்ட கேட்டேன். மாமா பேரு ரெங்கனாதன்,திருச்சி மாஜிஸ்ட்ரேடா இருக்கார், அது அவாத்து மைதிலி மாமி, பக்கத்துல இருக்கர்து அவாளோட மூனாவது பொண்ணு விஜி!னு மண்ணி சொன்னதுக்கு அப்பரம்தான் அந்த மாமாவுக்கு 'மஹாராஜா' மிக்ஸி மாதிரி மூனு பொண்ணு இருக்குங்கர விவரமே புடிபட்டது. விஜி கட்ட கடோசி மினி மிக்ஸ் ஜார்!னு மனசுக்குள்ள சொல்லிண்டேன்.

நம்பாத்து பாட்டிக்கு இப்போ உடம்பு பரவால்லியா?னு ஆராமுதன் அண்ணா மாமிட்ட விசாரித்தார். அம்பிக்கு பூர்வீகம் எதுவோ?னு மைதிலி மாமி கேக்கும்போதே, வரதுவுக்கு மன்னார்குடி!னு மண்ணி பதில் சொன்னா. மன்னார்குடி பூர்வீகம், ஆனா ஸ்ரீவில்லிப்புத்தூர்தான் எல்லாம்!னு நான் சொல்லவும். நம்ப ஊர் கொழந்தையா நீ!னு மைதிலி மாமி என்னோட பக்கதுக்கு வந்துட்டா. ஸ்ரீவில்லிபுத்தூர் சம்பந்தமா நிறையா விசாரிச்சா மைதிலி மாமி. ஆத்துக்கு வாடா கோந்தை! நீ நம்ப ஊர்காராளாயிட்டை!னு அவா சொல்லும்போது, பய எங்க போனாலும் பொழச்சுப்பான்!ங்கர மாதிரி ஆராமுதன் அண்ணாவும் மண்ணியும் என்னை பாத்துண்டு இருந்தா! னு சொல்லிண்டே மாமா சிரிச்சார்.

அதுக்கு அப்பரம் பல கார்யங்கள் பண்ணி கடைசில ஆராமுதன் அண்ணா & எங்க நரசு மாமா எல்லாருமா அந்த ரெங்கனாதன் மாமாட்ட பேசிபார்த்தா, அந்த மாமா கொஞ்சம் கூட மசியவே இல்லை. கடைசில நான் எதிர்பார்க்காத மாதிரி கல்யானத்துக்கு சம்மதம்!னு சொன்னதால எனக்கு சப்புனு ஆயிடுத்து!னு மாமா சொல்லவும். ஏன்ப்பா?னு வைஷூ கேட்டாள்.

பழைய படங்கள்ல வர எம்.ஆர். ராதா மாதிரி அவர் கல்யாணத்துக்கு சம்மதிக்காம வேற மாப்பிள்ளைக்கு கல்யாணம் பண்ணி குடுப்பார்னு பாத்தா அவர் சம்மதம்!னு சொல்லி என்னோட ஆசைல மண்ணவாரி போட்டுட்டார். அவர் மட்டும் சம்மதிக்கலைனா ஸ்ரீரங்கத்துலையே குத்துவிளக்கு மாதிரி வேற நல்ல பொண்ணா பாக்கலாம்னு சப்பு கொட்டிண்டு இருந்தேன்!னு மாமா நக்கல் அடித்தார்.

எல்லாம் நல்ல படியாக சந்தோஷமாக கதை கேட்டு முடிக்கும் வேளையில் ஸ்ரீவத்சன் அதிர்ச்சியான ஒரு விஷயத்தை சொல்ல ஆரம்பித்தான்.... (தொடரும்)

(Note - Next week will be the last part)

Friday, June 4, 2010

புளியோதரையும் தச்சு மம்முவும் 3

ஏழாவது நாள் உத்ஸவத்து அன்னிக்கு சாயங்காலம்தான் அந்த எதிர்பாராத சம்பவம் நடந்தது. பெருமாளை எழப்பண்ணின்டு எல்லாரும் சுத்தி வந்துண்டு இருந்த போது கூட வந்துண்டு இருந்த ஒரு மாமி கூட்ட நெரிசல்ல அந்த பொண்ணை பிடிச்சு திடீர்னு தள்ள, அவள் அங்க இருந்த கல் தூண்ல முட்டப் பார்த்தா!னு மாமா விளக்கவும்.

ஓஓஓ! அவாளுக்கு ஒன்னும் ஆகலையே? நீங்க இதை பாத்துண்டு சும்மாவா இருந்தேள் அப்பா?னு வைஷு பரபரத்தாள்.(வைஷுவுக்கு பாவம் இளகின மனசு).

டக்கு!னு நான் அவளோட கையை பிடிச்சு அவளை நிறுத்தினான்,அழகாக சுதாரிச்சுண்டு அவள் மெதுவா Thank you!நு சொன்னா. நல்ல வேளை யாரும் பாக்கலை, பாத்துருந்தா அவ்ளோதான், கோவில் மண்டபத்துக்கு நடுல நிக்க வச்சு, 'கையை பிடிச்சு இழுத்தியா?'னு ஊர் பெரியவா விசாரிக்க ஆரம்பிச்சுருப்பா!

ஆனா இந்த விஷயத்துலேந்து அவள் நல்ல படிச்ச குழந்தைனு நேக்கு புரிஞ்சது. அவள் சொன்ன thank you!வே அதுக்கு ஆதாரம்னு மாமா தொடர்ந்தார்.
Thank you!வை வச்சு நாம எப்பிடி ஒரு முடிவுக்கு வர முடியும் அப்பா!னு கேள்வி கேட்டு அவன் இருப்பதை நிரூபித்தான் ஸ்ரீவத்ஸன்.

ஏன் கண்டுபிடிக்கமுடியாது? அழகா கண்டுபிடிக்கலாம், தொடர்ந்து உபயோகபடுத்தரவாளுக்குத்தான் thank you ல அந்த Q sound வரும், இல்லைனா இரண்டும் தனி தனி வார்த்தையா இருக்கும்!னு மாமா முடித்தார்.

மொத்த குடும்பமும் மாமாவை பிரமிப்போடு பாத்தது. ஒரு சாதாரண விஷயத்தை கூட கூர்மையா கவனிச்சு நீங்க ஒரு கிரிமினல் லாயர்!னு நிரூபிச்சுட்டேள் அப்பா!னு சொல்லின்டே மாமாவின் கழுத்தை வைஷூ கட்டிக் கொண்டாள்.

அதுக்கு அப்பரம் அவளும் அடிக்கடி நான் இருக்கேனா? இருக்கேனா?னு சரிபாத்துக்க ஆரம்பிச்சா.பெருமாளை இப்போ ஊஞ்சல்ல வச்சு அழகா ஆட்ட ஆரம்பிச்சா, அப்ப பாத்து ஒரு பல்லுசெட்டு மாமி அவாளோட கர்ண கொடூரமான குரல்ல பாட ஆரம்பிச்சுட்டா, நடுல சா! பா! சா! பா!னு ஆலாபனை வேற பண்ண ஆரம்பிச்சுட்டா, பெருமாளே வந்து நிறுத்தினாலும் நிறுத்த முடியாத படி கண்ணை மூடிண்டு கட்டத்தொண்டையும், நெட்ட தொண்டையுமா கந்தர்வ கானம்தான் போ!னு மாமா சிலாகித்தார். நானும் கண்ணை மூடிண்டு கிருஷ்ணா! ராமா!னு சொல்ல ஆரம்பிச்சுட்டேன். நடுல திடீர்னு அந்த மாமியோட குரல் ரொம்ப அழகா ஆன மாதிரி இருந்தது, என்னடா இது?னு ஆச்சர்யத்தோட கண்ணை திறந்த போது, அந்த பொண்ணு பாடிண்டு இருந்தா, (அந்த மாமிக்கு பாதில வரி மறந்து போய்டுத்து போலருக்கு) வசந்தா ராகத்துல அந்த பொண்ணு அழகா பாடினா, மாமி நன்னா கேட்டுக்கோங்கோ! இதுதான் வசந்தா!னு அந்த மாமியை கூப்டு சொல்லனும் போல இருந்தது நேக்கு. வசந்தா, சுருட்டி, குந்தளவராளி & யதுகுலகாம்போதி எல்லாமே என்னோட பிரியமான ராகங்கள், அதனால எனக்கு ரொம்ப சந்தோஷமா இருந்தது!னு மாமா தொடர்ந்தார்.

அப்பரம் என்ன ஆச்சு?னு வைஷூ அவசரப்படுத்தினாள்.

அப்பரம் என்ன ஆயிருக்கும் பெருமாளுக்கு தீபாராதனை பண்ணி,துளசி தேர்த்தம் சாதிச்சு, சுண்டல் வினியோகம் பண்ணியிருப்பா, இவரும் ‘குணா’ல வர கமல் மாதிரி லெப்டும் ரைட்டுமா ஆடிண்டே சுண்டல் வாங்கர்துக்கு போய் வரிசைல நின்னு இருப்பார்!னு விஜி மாமி பழிப்பு காட்டினாள்.

பெளர்ணமிக்கு அடுத்த நாளே அமாவாசை வரும்னு நான் எதிர்பார்க்கவே இல்லை!னு மாமா புதிர் போட்டார்.

அச்சச்சோ! என்ன ஆச்சுப்பா?னு வைஷூ விக்கித்துப்போனாள்.

அடுத்த நாளும் கோவிலுக்கு போனேன், பிரகாரம் முழுசா தேடினேன் அவளை காணும், சரி வசந்த மண்டபத்துல தீபாராதனை சேவிக்க போயிருப்பாளோனு நினைச்சுண்டு அங்க போனா அங்க அந்த பல்லுசெட்டு மாமிதான் பாடிண்டு(??!!) இருந்தா, என்னோட கருட பார்வைக்கு அவள் தட்டுப்படவே இல்லை. இருந்தாலும் நான் விடாம அவளை தேடினேன்.
கோந்தை வரது!னு எனக்கு பின்னாடிலேந்து ஒரு குரல், யாருன்னு திரும்பிப் பார்த்தா எங்க நரசு மாமாவாத்து மாமி, என்னடா கோந்தை! பெருமாளையும் தாயாரையும் தவிர வேற யாரையோ கோவில்ல தேடர மாதிரி இருக்கே?னு கரக்டா என்னை மடக்கிட்டா எங்க மாமி, நரசு மாமவுக்கே யோஜனை சொல்ற அளவுக்கு எங்க மாமிக்கு சாமர்த்தியம் உண்டு!னு வரது மாமா மேலும் தொடர்ந்தார்.

இதுக்குமேல எதுவும் மறைக்க முடியாதுனு எனக்கு தெரிஞ்சதால, எங்க மாமிட்ட எல்லாத்தையும் சொன்னேன். மாமி மூலமா விஷயம் எங்க நரசு மாமா காதுக்கு போச்சு.

அவாத்து ரேளில(hall) வச்சு என்னை கூப்டு மாமாவும் மாமியும் பேசினா. என்னடா வரது! மாமி எதோ சொல்ராளே! அதெல்லாம் உண்மையா?னு எங்க மாமாதான் பேச்சை ஆரம்பிச்சார். ஆமா மாமா! மாமி சொன்னது எல்லாம் உண்மைதான்!னு நான் சொன்னேன்.
அந்த பொண்னோட நாமதேயம் கூட நோக்கு தெரியாதுன்னு மாமி சொல்றாளேபா! பேரு கூட தெரியாமையா ஒரு வாரமா வட்டம் அடிச்சுண்டு இருக்கை நீ! யாரு என்ன ஏது?னு விவரம் தெரிஞ்சாதானேபா மேல் கொண்டு கேஸ்ல காய் நகர்த்த முடியும்!னு எங்க மாமா வக்கில் பாஷைல சொன்னார்.

சரி விடு! இன்னிக்கு போய் பெருமாளை சேவிச்சுட்டு, அந்த குழந்தை வந்தானா அவள்ட பேசு! அவளுக்கும் பூர்ண இஷ்டம் இருந்ததுன்னா அவாத்துகாராள்ட நானும் மாமியும் பேசரோம்!னு மாமா முடித்தார்.

சாயங்காலம் பெருமாள் கோவில் முழுசும் தேடினேன், அவளை தவிர எனக்கு தேவை இல்லாத எல்லாரும் கோவிலுக்கு வந்திருந்தா. எனக்கு நம்பிக்கையே போய்டுத்து!னு சுருதி இறங்கின குரலில் மாமா சொல்லவும்.

ச் ச் ச்!னு வைஷூ பரிதாபப்பட்டாள்.

இருந்தாலும் என்னோட வக்கில் புத்தி பல விதத்திலும் யோசிக்க ஆரம்பித்தது. தாயார் சன்னதி முன்னாடி வந்தபோதுதான் எனக்கு ஒரு விஷயம் ஞாபகத்துக்கு வந்தது. தாயார் சன்னதில இருந்த பட்டாசார்யார்ட அந்த பொண்ணு ரொம்ப பவ்யமா பேசினது ஞாபகத்துக்கு வந்தது. இருந்தாலும் திருனெல்வேலிக்காரா வாய்லேந்து ஒரு விஷயம் வாங்கர்து எவ்ளோ கஷ்டம்னு அன்னிக்குதான் எனக்கு தெரிஞ்சது.
மெதுவா அந்த மாமாட்ட பேச்சு குடுத்ததுல அந்த பொண்ணு ஸ்ரீரங்கத்துலேந்துதான் வந்துருக்குனு உறுதி ஆச்சு. ஜங்ஷன்ல இருக்கும் சன்னியாசி கிராமம் 'கனரா பாங்க்'சேஷாத்ரி மாமாவோட மருமாள்தான் அந்த பொண்ணுனு தெரிஞ்சதுக்கு அப்பரம்தான் நிம்மதியே வந்தது!னு மாமா சொன்னார்.

இதுல நிம்மதியாகர்துக்கு என்ன இருக்கு?னு விஜி மாமியும் தன்னை அறியாமல் சந்தேகம் கேட்டாள்.

ஏன்னா, சேஷாத்ரி மாமாவாத்து மாமியும் எங்க நரசு மாமாவாத்து மாமியும் திருப்பாவை கிளாஸ்ல பிரண்ட்ஸ்னு சொல்லி விட்டு வெற்றி பெருமிதத்தோடு வரது மாமா புன்னகை பூத்தார்.

பெருமாள் உங்களை கைவிடலைபா!னு வைஷு தன் சந்தோஷத்தை காட்டினாள்.

எங்க மாமி மூலமா விசாரிச்சதுல அந்த பொண்ணு காலேஜ் கடோசி வருஷம் படிக்கர்து, அவளோட பாட்டிக்கு திடீர்னு உடம்பு சரியில்லாம போனதாலதான் (என்கிட்ட கூட) சொல்லிக்காம கொள்ளிக்காம ஸ்ரீரங்கம் போக வேண்டியதா போய்டுத்துங்கர விவரம் எல்லாம் தெரிஞ்சது. அவளுக்கு ஒரு வரன் அமையர மாதிரி இருக்குங்கர இடி மாதிரியான தகவலும் தெரிஞ்சது.

மறுபடியும் நரசு மாமாவாத்து ரேளில வச்சு மந்த்ராலோசனை நடந்தது. எங்க நரசு மாமாதான் முதலில் பேச்சை ஆரம்பித்தார், டேய் வரது! அந்த பொண்ணுக்கு நிச்சயமா இஷ்டம் இருக்கானு மட்டும் உறுதி பண்ணுடா கோந்தை, மிச்சத்தை நாங்க பாத்துக்கறோம்!னு தைரியம் சொன்னார். ஸ்ரீரங்கம் போகர்தை பத்தியெல்லாம் கவலை படாதே! அங்க என்னோட ஜூனியர் ' நாங்குனேரி' ஆராவமுதன் இருக்கான், என்னோட பேரை சொன்னா அவன் உனக்கு எல்லா சஹாயமும் பண்ணுவான். கேஸ் நம்ப பக்கம் ஸ்ட்ராங்கா இருந்தா எந்த கோர்ட்டுக்கு அந்த கேஸ் மாறினாலும் ஆஜர் ஆகர்துக்கு நாம தயங்க கூடாதுடா கோந்தை!னு எனக்கு புரியற பாஷைல சொன்னார்.

அந்த பொண்ணுக்கு அங்க வரன் ஏற்கனவே அவா பாத்து முடிவு பண்ணியிருந்தானா, நேத்திக்கு கிளம்பிப் போன ரயிலுக்கு நாம இன்னிக்கு டிக்கெட் எடுத்த மாதிரினா ஆயிரும்!னு அதுல உள்ள பாதகமான விஷயத்தை மாமி எடுத்து சொன்னா.

ரயில் கிளம்பிப்போனா என்னடி இப்போ? அடுத்த ஸ்டேஷன்ல விரட்டிப் போய் நம்ப இடத்தை நாம பிடிக்கர்து இல்லையா? முயற்சி செய்யாமையே கேஸ் தோத்ததா நாம எப்படி முடிவு பண்ண முடியும்னு மாமா பாய்ண்டை பிடித்தார்.

அந்த காலத்துலேயே உங்க நரசு மாமா ‘மின்னலே’ படத்துல வர மாதவன் மாதிரி யோசிச்சுருக்கார்!னு அந்த சமயத்துலையும் நம்ப வைஷூ ஜோக் அடித்தது.

மாமா மாமியின் பூர்ண ஆசிர்வாதங்களோட ஸ்ரீரங்கத்துக்கு பொட்டியை தூக்கிண்டு கிளம்பினேன்.அங்க போய் பார்த்த போதுதான் எனக்கு உண்மை விவரமே புரிந்தது!னு மாமா புள்ளி வைத்தார்.
தொடரும்....