Thursday, August 25, 2022

பயணமும் ஊர் வம்பும்

 

போன வருஷம் மச்சினன் கல்யாண கதையை வச்சு போஸ்ட் எழுதினது அதுக்கு அப்புறம் ‘கப்சிப்’ காராவடை ஆயிடுத்து. ஆபிஸ்லையும் ஜோலி ஜாஸ்தி ஆயிடுத்து. பத்து ஒட்டகம் மேய்ச்சுண்டு இருந்தவனை முப்பது ஒட்டகம் மேய்க்க சொன்னா போஸ்ட் எங்கேந்து எழுத முடியும். சமுத்ரத்துல அலை ஓஞ்சதுக்கு அப்புறம் ஸ்னானம் பண்ண முடியுமா அதனால குலதெய்வம் பெருவேம்புடையார் மேல பாரத்தை போட்டு இந்த வருஷ ஊருக்கு போன வம்பை கொஞ்சம் அளக்கலாம். ஜூலை முழுசும் லீவு கிடைச்சது. கடைசி ரெண்டு வருஷமா கொராணா புண்ணியத்துல ஒரு பயலும் ஊருக்கு போகாததால இந்த வருஷம் ஜூன் கடைசி வாரத்துல இருந்தே எல்லாரும் புள்ளைகுட்டிகளை கூட்டிண்டு ஊருக்கு கிளம்ப ஆரம்பிச்சுட்டா. ஏர்லைன்ஸ்காரனும் அவனோட பங்குக்கு கடைசி ரெண்டு வருஷத்துல நாங்க வாங்காத டிக்கெட் பணத்தையும் சேர்த்து இந்தவருஷம் உருவர்துக்கு ப்ளான் போட்டுட்டான். பல்லாவரத்துலேந்து  குரோம்பேட்டை போகும் M52 பஸ் மாதிரி இருக்கும் இன்டிகோ ஏரோப்ளேன்லையே டிக்கெட் போடனும்னா காரை அடகு வச்சாதான் முடியும் அப்பிடிங்கர அளவுக்கு கிராக்கி. சரி ஸ்ரீலங்கா ஏர்லைன்ஸ்ல சகாய விலைக்கு போகலாம்னா நடுவானத்துல பெட்ரொல் இல்லாம நின்னுருமோனு பயம். ஏர் அரேபியால டிக்கெட் போட்டு ஷார்ஜா வழியா போகலாம்னு தோஹா ஏர்போர்ட் போனா GRT வளையல்மேளா மாதிரி ஒருவண்டி கூட்டம்.

 

அனேகமா எல்லாருமே இந்த வருஷம் கனெக்டிங் ப்ளைட் கோஷ்டி தான் நினைக்கறேன். தனியா போனா பிரச்சனையில்லை பிள்ளைகுட்டிகளை கூட்டிண்டு கனெக்டிங் ப்ளைட் ரூட் கொஞ்சம் ரிஸ்க். எதாவது ப்ளைட் லேட் ஆனாலோ நடுவழில கேன்சல் ஆனாலோ தங்கமணிகிட்ட திட்டு வாங்கும் தைரியம் இருந்தால் துணிந்து இறங்கலாம்.செக்கிங்-கிக்கிங் எல்லாம் முடிஞ்சு உள்ள போனா போர்டிங் ஆரம்பிக்கவே இல்லை. நாளைக்கு கல்யாணத்துக்கு இன்னிக்கே மண்டபத்துக்கு போய் நின்னவா மாதிரி நாங்க திருதிருனு முழிச்சுண்டு இருந்தோம். கேட்ல நிக்கர தடித்தாண்டவராயன்  நிச்சலனமா முகத்தை வச்சுண்டு மொளுக்கா நிக்கரான். ஆஜானுபாகுவா ஒரு மாமா முதுகுபையை போட்டுண்டு மெதுவா என்பக்கத்துல வந்து ‘என்ன ஆச்சாம்?’னு ஜாரிச்சார். நானும் "பாவம் காத்தால வரைக்கும் நன்னா தான் இருந்தாராம் அவாத்து மாமி கையால காபி குடிச்சதுக்கு அப்புறம் பேச்சுமூச்சு இல்லையாம்”னு சொல்லர தொணில “கேட் திறக்கர சாவியை காணுமாம்! கதவை உடைக்கலாமானு அவாளுக்குள்ள பேசிண்டு இருக்கா. உங்களை மாதிரி ஸ்ட்ராங்கானவாளா நாலு பேர் வேணுமாம்”னு நான் சிரிக்காம சொல்லிண்டு இருந்ததை அவரும் ரொம்ப சீரியஸா கேட்டுண்டு இருந்தார். ‘கனெக்டிங் ப்ளைட் வெயிட் பண்ணுமா? வெயிட் பண்ணுமா?’னு ஒரு தங்கமணி அவாளோட ரங்கமணியை பிடிச்சு உலுப்பிண்டு இருந்தா. ‘நானும் கேட் வரைக்கும் உன்னோட தானே வந்தேன் எனக்கு மட்டும் எப்பிடி தெரியும்’னு ரங்கமணி மொனகிண்டு இருந்தார். ‘கேள்விகேக்கர்துக்குதானே உங்க மாமனார் பெத்து அனுப்பியிருக்கார்’னு வாய் வரைக்கும் வந்துருத்து அப்புறம் என்னோட மாமானார் பெத்து அனுப்பின ஆள் பக்கத்துல இருக்கர ஞாபகம் வந்ததும் உசாராயிட்டேன்.
ஒருவழியா ப்ளைட் வந்து எல்லாரும் உள்ள ஏறி உக்காந்தாச்சு. பைலட் மாமா வழக்கம் போல "வரவழில கொஞ்சம் நாழியாயிருத்து! கவலையேபடாதீங்கோ! அரபிக்கடல் தாண்டியாச்சுன்னா அப்புறம் பைபாஸ் ரோடுதான்! சல்லுனு போய் கனெக்டிங் வண்டியை பிடிச்சுடலாம்”னு பொருவிலங்கா உருண்டையை வாய்ல போட்டுண்டு பேசும் இங்கிலீஸ்ல சொல்லிண்டு இருந்தார். ஏர் அரேபியால ஏறி உக்காந்தாச்சு. இந்த வண்டில முன்னாடியே புக் பண்ணி வச்சவாளுக்கு மட்டும் தான் சாப்பாடு தருவா மத்தவா கூப்பாடு போட்டுண்டு இருக்க வேண்டியது தான். தலையை எண்ணி இட்லி வார்த்த மாதிரி கணக்கா இருக்கா. பைசா குடுத்து கேட்டாலும் ஒன்னும் கிட்டாது.மசாலா தோசையும் சுலைமானி டீயும் குடிச்சு முடிக்கர்துக்குள்ள ஷார்ஜா வந்துடுத்து. ஏர்போர்டுக்குள்ள போனா திருனெல்வேலி ஆர் எம் கே வி கடைல நவராத்ரி சமயம் புடவை செக்ஷன்ல நுழைஞ்ச மாதிரி ஒரே கூட்டம். “எதை எடுத்தாலும் பத்து ரூபா! எதை எடுத்தாலும் பத்து ரூபா!” ராகத்துல மாடிப்படி பக்கத்துல ஒரு ஏர்போர்ட் ஆசாமி “சென்னை கொச்சி கல்கத்தா!”னு கூவின்டுண்டு இருந்தார். மறுபடியும் அந்த ஊர் ஏர்போர்ட் செக்யூரிட்டி செக்ல வேட்டியை உதறி காமிச்சுட்டு கனெக்டிங் ப்ளைட்டை பிடிக்க ஓட்டமும் நடையுமா போனோம். இருக்கர அவசரத்துல அந்த ஏர்போர்ட் ஆசாமி கல்கத்தா ப்ளைட்ல ஏத்திவிடாம இருக்கனுமேனு கவலையா இருந்தது. காத்தால கல்கத்தா வந்தா அப்புறம் “திண்டுக்கல் ராஸ்தா குஷ் குஷ்!”னு ஜப்பான் துணைமுதல்வர் போனவருஷம் பேசின மாதிரி பெங்காலிதான் பேசனும். என்னமோ எல்லாம் என்கிட்ட கேட்டு தான் பண்ணர மாதிரி தங்கமணி “பாத்ரூம் போயிட்டு வரட்டுமா"னு இழுத்தா. வேண்டாம்னு சொன்னாலும் கேக்கபோகர்து இல்லை இருந்தாலும் எல்லா தங்கமணிகளும் சம்ப்ரதாயத்துக்கு  ஒரு தடவை கேட்பார்கள். நல்லவேளை ஒரு ஏர்போர்ட் ஆசாமி ஆபத்பாந்தவனா வந்து “சென்னை வண்டி கிளம்பபோகர்து! பாத்ரூம் போனேள்னா வண்டியை விட்டுட்டு உக்காந்துண்டு இருக்கவேண்டியது தான்”னு பயம்குடுத்தினதால நேர வண்டில போய் உக்காந்துட்டோம். அடுத்த நிமிஷமே பைலட் மாமா “எல்லாரும் வந்தாச்சு கதவை சாத்து ராசாத்தி!”னு ஏர்ஹோஸ்டஸ் பொண்ணு கிட்ட மைக்ல சொல்லிட்டார்.

 

நல்ல மிருதுவான பரோட்டாவும் கொண்டைகடலை குருமாவும் முழுங்கிட்டு ஆழ் நிலை தியானத்துல  இருந்தபோது “எழுந்திரிங்கோ! எழுந்திரிங்கோ! ஊர் வந்தாச்சு!”னு தங்கமணி பின்சீட்லேந்து தட்டினா..... (பயணம் தொடரும்)

9 comments:

Anonymous said...

பேஷ், களை கட்டறது

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

உனக்கு மட்டும் மசால் தோசை, மிருதுவான பரோட்டா எப்படி ஏர்லைன்ஸ் காரன் தரான், நான் எந்த flight ல ஏறினாலும் நான் ஆர்டர் போட்டதை தவிர எல்லாம் தருவான் (இதுல மாமா சதி எதும் இருக்கானு விசாரணை நடந்தது தான் இருக்கு, JJ case கூட முடியலாம், இது முடியாது போல) . By the by, enjoyed your write up after so long, write more often brother 😍

Anonymous said...

எங்கேடா மாமாவைம் மீமுநும் தோஹா வந்து நம்ப வீட்லே டேரா போட்ரபோடான்னு புத்திசாலித்தனமா கிளம்பிட்டே

Anonymous said...

மாமியும்

Srinivasan J said...

எப்ப அண்ணா Next episode?

Vasumathy said...

It is great that you have been blogging continuously for very many years. And keeping up the same writings as your premarital years. Boys never grow up:)

Anonymous said...

Super Ambi! Besh ! Best! Tirunelveli alwa super!!!!!

Anonymous said...

செம்ம நம்மூருக்கு வந்து இறங்கியாச்சு,அடுத்தடுத்த பகுதிகள் சுவாரசியத்தை படிக்க ஆவலடன்,உங்கள் ....

Anonymous said...

NICE TO SEE YOU BACK. YOUR TRADEMARK HILARIOUS WRITING IS SUPERB.

Post a Comment

யெச்சுஸ்மி, comment பொட்டி இங்க இருக்கு.....:)