Showing posts with label பயணம் கல்லிடை. Show all posts
Showing posts with label பயணம் கல்லிடை. Show all posts

Thursday, October 27, 2022

பயணமும் ஊர் வம்பும் (Part 3)

 

நாம எதுல நிப்பாட்டினோம்? மஞ்சகலர் சுடிதார்.. இல்ல இல்ல இமிக்ரேஷன்ல நிப்பாட்டினோம். இமிக்ரேஷன்ல ரொம்ப நாழியா நின்னுட்டு லக்கேஞ் எடுக்க போனா அங்க அது பத்தாவது தடவையா கன்வேயர் பெல்டுல பிரதக்ஷினம் பண்ணின்டு இருக்கும். ஒருவேளை நமக்கு யோகம் நன்னா இருந்து இமிக்ரேஷன்ல சீக்கரம் முடிச்சு லக்கேஞ்சுக்கு வந்தா நம்ப பெட்டி மட்டும் வரவே வராது . அப்பிடியே வந்தாலும் நாலு பெட்டில கடைசி பெட்டி மட்டும் வராம நம்ப பொறுமையை சோதிக்கும். ஒரு வழியா கடைசி பெட்டியும் வந்து வெளில வந்து மச்சினன் கார்ல ஏறி மாமனாராத்துக்கு ஒரு வழியா போய் சேர்ந்தோம். என்னோட பழைய போஸ்ட்ல சொன்ன மாதிரி எங்க மாமியாராத்து மாடிப்படி பக்கத்துல நின்னு பாத்தாலே எல்லா ஏரோப்ளேனும் எந்த பக்கம் போகர்துன்னு நன்னா தெரியும். இன்னிக்கு கன்னியாகுமரியும் நெல்லையும் கொஞ்சம் லேட்டு போலருக்கேனு கல்லிடைல ரயில் விஷயமா மாமக்கள் சம்பஷனை பண்ணிக்கர மாதிரி இன்னிக்கி துபாய் வண்டி ஏது இன்னும் வரலை? கத்தார் ஏர்வேஸ் காலைலயே போயிட்டானே!னு எங்க மாமியார் சில சமயம் லெவல் காட்டுவா. அதே மாதிரியே ஏர் அரேபியா இறங்கி ரெண்டு மணி நேரத்துக்கு மேல ஆகர்தே? ஏது லேட்டு? பெட்டி வரலையா?னு ஜாரிச்சா. இறங்கர இடத்துல எங்க ஊர் மாமா ஒருத்தரை பாத்தேன் அதான் லேட்டுனு சொன்னேன். உங்க ஊர் மாமாவா? அப்ப நேரம் ஆகத்தான் செய்யும்னு சொல்லிட்டு போயிட்டா.

 

நலம் நலமறிய ஆவல்! மாதிரியான பரஸ்பர சம்பாஷனைகள் எல்லாம் முடிஞ்சது. அன்னிக்கு சாயங்காலமே கல்லிடைக்கு கிளம்பியாச்சு. வழக்கம் போல செல்வம் ஆம்னி பஸ்ல டிக்கெட் போட்டு இருந்தேன். தங்கமணிக்கு பஸ் அவ்ளோதூரம் பிடித்தமில்லை. காத்துவராது தண்ணிவரும்னு கொஞ்ச நேரம் முனகிட்டு அப்புறம் செளக்கியமா செட்டில் ஆயிட்டா. காலையில் கல்லிடை வந்தாச்சு. நாங்கள் ஊருக்கு போன நேரம் சில புண்ணியாத்மாக்கள் ஊர்ல இல்லை. அதனால கொஞ்சம் நிம்மதியா இருந்தது. முக்கியமா தெருக்காத்தான் மாமா & எக்ஸ்ரே மாமி. மச்சினன் பிள்ளைக்கு பாம்பேல பூணல்னு சொல்லிட்டு பாம்பே போயிருந்தாலாம். தெருக்காத்தான் மாமாவுக்கு தெரியாம தெருல யாரும் ..சு கூட போடமுடியாது. காத்தால ஆத்தங்கரைல குளிச்சுட்டு கிழக்க பாத்து திண்னைல உக்காந்தார்னா அவரோட பார்வைலேந்து யாரும் தப்ப முடியாது. யார் யாராத்துக்குள்ள போறா,எங்கேந்து வந்தா,யாரு யாரு கூட பேசறா போன்ற உலக அமைதிக்கு தேவையான அனைத்து சமாசாரங்களுக்கும் மாமா  தான் அத்தாரிட்டி. அவாத்து மாமி புதுசா யாராவது வந்தா அவாளை மேலேந்து கீழ பார்வையாலையே ஒரு எக்ஸ்ரே எடுப்பா. அதோட சோலி முடிஞ்சது. வடிவேல் ஒரு படத்துல சொல்லுவாரே நான் பாத்தாலே பத்திண்டு எரியும்னு அதுக்கு கொஞ்சமும் சளைச்சது இல்லை நம்ப மாமியோட பார்வை. இதுல வேடிக்கை என்னான்னா மாமியோட பார்வைக்கு எல்லாரும் பயந்து நடுங்கிண்டு இருக்கும் போது அந்த மாமி என்னடான்னா காத்தால ரேஷன் கடைக்கு போகும் போது “எதிர்தாப்ல அவதான் வந்தா! ரேஷன் கடைல ஜீனி இல்லைனு சொல்லிட்டான்! போனதே வேஸ்ட்!”னு இன்னோரு மாமியை பாத்து ஆவலாதி சொல்லிண்டு இருப்பா.  ‘செளக்கியமா இருக்கியா’னு போன தடவை கேட்டா. ‘இதுவரைக்கும் செளக்கியம் தான் இதுக்கப்பரம் ஸ்வாமிதான் காப்பாத்தனும்’னு சொல்லிட்டு வந்தேன். நல்லவேளை மாமா & மாமி ரெண்டு பேரும் இல்லாததால கொஞ்சம் நிம்மதியா நடமாடமுடிஞ்சது.




 எங்கையுமே கூட்டிண்டு போகலைனு தங்கமணி எப்போதும் ஆவலாதி வாசிப்பா. அதனால இந்த தடவை ரெஸ்டே இல்லாம திருச்செந்தூர், மதுரை, குலதெய்வம் கோவில், நெல்லையப்பர் கோவில்னு நித்தியம் ஒரு இடம் போயிட்டு வந்தோம். அத்வைதாவும் விஷ்வஜித்தும் பேசி சிரிச்சு விளையாடி பாட்டியை சந்தோஷப்படுத்தினா. ஒரு வாரம் போனதே தெரியலை. போகும் போது சென்னைக்கு தூத்துக்குடில ப்ளைட் ஏறினோம். விஷ்வாவுக்கு ப்ளைட் பிடிக்கலை. அம்மாவை ப்ளைட்ல வரச்சொல்லு நாம செல்வம் பஸ்ல வரலாம்னு கொஞ்சம் மொரண்டு பிடிச்சான். அடுத்த முறை குழந்தேளை காரணம் காட்டி இனிமே தங்கமணி ப்ளைட் புக் பண்ணமுடியாதுனு நினைச்ச போது கொஞ்சம் சந்தோஷமா இருந்தது. அவா எல்லாரையும் சென்னைல கொண்டு போய் விட்டுட்டு இரன்டு நாள் கழிச்சு நான் மட்டும் கல்லிடைக்கு திரும்பி வந்தேன். அம்மாவுக்கு ரொம்ப நாளா கால்முட்டில வலி இருக்கு. அதுக்கு இங்கிலிஷ் வைத்தியம் பாத்தா கொஞ்ச நாள் ஒழுங்கா இருக்கர மாதிரி பாவலா காட்டிட்டு மறுபடியும் பழைய குருடி கதவை திறடினு வந்து நிக்கர்து. இந்த தடவை அதுக்கு எதாவது பண்ணலாம்னு தான் முக்கியமான உத்தேசம். கேரளால போய் ஆயுர்வேத வைத்தியம் பாக்கலாம்னு பாத்தா அம்மாவுக்கு வெளில உள்ள சாப்பாடு எதுவும் வயத்துக்கு ஒத்துக்காது. திருனெல்வெலிக்குள்ள எதுவும் சொல்லிக்கர மாதிரி இல்லை. என்னடா பண்ணர்துன்னு இருந்தப்ப தான் ஆழ்வார்குறிச்சில ஒரு வைத்திய சாலை இருக்குனு கேள்விப்பட்டேன்.

 

அங்க போய் பாத்தேன். நல்ல ரம்மியமான சூழ்னிலை மற்றும் சமையல் இல்லாத சாப்பாடு முறைகள் இருக்கு. அங்க இருந்தவா பாதிக்கு மேல மூட்டுவலி கேஸ் இல்லைனா உடல் எடை பிரச்சனை உள்ளவா. வயசானவானு இல்லை நாற்பது வயசுக்கு குறைவா உள்ளவா கூட சிகிச்சைக்கு வரா. யாரும் இப்ப நடக்கர்தே இல்லை எல்லாத்துக்கும் பைக் பைக்னு வாகனத்துல ஏறினா கடைசில ஆழ்வார்குறிச்சில வந்து அவல் பொறிகடலை சுண்டல்னு சாப்பிட வேண்டிய நிலை வந்துடர்து. அங்க ஒரு சேலத்துகாரர் ‘பத்து பரோட்டா சாதாரணமா சாப்பிடுவேன் இப்ப பத்து நாளா கொத்தமல்லி சாறு தான் காத்தால ஆகாரமா தரா’னு ரொம்ப பாவமா சொல்லிண்டு இருந்தார். ‘இன்னும் பத்து நாள் கொத்தமல்லியோட சேர்த்து இஞ்சி சாறும் சாப்பிட்டாதான் இத்தனை நாளா சாப்பிட்ட பரோட்டாவை சரிகட்டமுடியும்’னு சொல்லிட்டு வந்தேன். ஒரு பெண்களூர்காரருக்கு உடம்பு முழுக்க தேங்காயை அறைச்சு பூசி விட்டுருந்தா இன்னொருத்தருக்கு கொத்தமல்லி பேக் போட்டு விட்டுருந்தா. தக்காளி சட்னியும் வெங்காயசட்னியும் மட்டும் தான் பாக்கி அதுவும் அனேகமா மரத்துக்கு அந்த பக்கமா இருப்பாளோனு கொஞ்சம் சம்சியமா இருந்தது. இட்லி பேக் உண்டானு யாரும் கேக்காதீங்கோ அதுக்கு பதிலா ஆட்களையே இட்லி மாதிரி ஆவில வேகவச்சு பளபளனு ஆக்கரா.

 

நல்லபடியா எல்லாம் முடிச்சு போன சமத்து போல தோஹாவுக்கு திரும்பி வந்தாச்சு.

Tuesday, October 27, 2015

கோவைக்கு இனிமே போவை?

ஜெய் பாகுபலி! ஜெய் மகிழ்மதி!னு நம்ப ரம்யாகிருஷ்ணன் மாதிரி உத்வேகத்தோட சொல்லிண்டு எழுதனும்னு தான் மனசுல தோனர்து ஆனா அது விஜயோட ‘புலி’ மாதிரி இருந்து ‘படிக்க வந்தவன் பலி’னு ஆயிட்டா என்ன பண்ணர்து. சரி விடுங்கோ! நான் விஷயத்துக்கு வரேன். போன மாசம் இந்தியாவுக்கு லீவுல வந்தேன். எல்லாருக்கும் போன் பண்ணனும்! ரெண்டு மூனு பேரோட ஆத்துக்கே போய் கழுத்தறுக்கனும்!னு என்னென்னவோ ப்ளான் போட்டுண்டு வந்தேன். ‘அத்தனையும் பொய்யாச்சு ராசா! ஒத்தையில நிக்குதிந்த ரோசா!’னு ஆயிடுத்து. மெட்ராஸ்ல போய் இறங்கின அடுத்த நாளே கல்லிடைல இருக்கும் அப்பாவுக்கு உடம்பு சரியில்லாம ஆகி 15 ஆள் ஆஸ்பத்திரில போய் உக்காரும்படியா ஆயிடுத்து. அப்பாவுக்கு சுகர் பிரச்சனையால இடது கை பெருவிரல்ல இருக்கும் எலும்பு முழுசா போய் சர்ஜரி பண்ணும்படியா ஆயிடுத்து. மனசே சரியில்லாம தான் லீவு கழிஞ்சுண்டு இருந்தது. சரி விடுங்கோ என்னோட ப்ராரப்த கர்மா என்னோட போகட்டும்.

ஆஸ்பத்திரி ஆர்பாட்டங்கள் எல்லாம் கழிஞ்சு ஆத்துக்கு போன 3 நாள்ல கல்லிடைல சதுர்த்தி உத்ஸவம் ஆரம்பம் ஆயிடுத்து. திடீர்னு எல்லாம் மாறினதால தங்கமணியையும் அத்வைதாவையும் மெட்ராஸ்ல விட்டுட்டு வந்துட்டேன். தெருல இருந்த மாமா மாமிகளுக்கு பதில் சொல்லி முடியலை! ஆத்துக்காரி வரலையா? குழந்தையாவது கூட்டிண்டு வந்துருக்கலாம்! எப்ப கூட்டிண்டு வருவை! வருவைல்யோ!னு எல்லா பக்கத்துலேந்தும் கேள்விகள்/உத்தரவுகள். என்ன பண்ணர்து! ஆத்துக்காரியை விட்டுட்டு வரணும்னு எனக்கு மட்டும் வேண்டுதலா என்ன? போன தடவை நான் கோவில்ல ஜோலியா இருந்தபோது தங்கமணியை சுத்தி வளைச்ச மாமிகள் “எங்காத்து ஓர்படியோட நாட்டுப்பொண் மாதிரியே இருக்கை,மதுரைல இருக்கர மருமாள் மாதிரியே இருக்கைனு சிலபல பிட்டுகளை போட்டுட்டு ‘தோஹால தங்கம் என்ன விலை? இங்கைக்கும் அங்கைக்கும் என்ன வித்தியாசம்? உங்காத்துகாரன் இதுவரைக்கும் என்னல்லாம் வாங்கிதந்துருக்கான்?”னு வரிசையா கேள்விகேட்டுருக்கா. தங்கமணிக்கும் கேள்வி கேட்டுதான் பழக்கம் பதில் சொல்லர்து எப்போதும் அடியேன் நெட்டுவாங்கம் தான். அதனால வழக்கம் போல’ 5 பவுண் வாங்கினா நிஜமாவே ஒரு கிராம் தங்கம் சும்மா தருவா மாமி. நம்ப ஊர்ல 10 ரூபா பனியன் ஜட்டி மாதிரி அந்த ஊர்ல பிளாட்பாரத்துலையே கடை போட்டு தங்கம் வியாபாரம் பண்ணுவா!’னு அள்ளிவிட்டேன். அந்த மாமி வாயைபொழந்துண்டு இருக்கும் போதே தங்கமணியை மெதுவா அந்த கும்பல்கிட்டேந்து காப்பாத்தி கொண்டுவந்தேன். அந்த மாதிரி வம்புக்கு இப்ப வழியில்லையேனு அவாளுக்கெல்லாம் குறை.

‘எங்க நாத்தனாரோட சம்பந்தியோட சித்தப்பாவோட ஆத்துக்காரியும், உங்க அம்மாவோட தாய்மாமாவோட ஆத்துக்காரியோட அம்மாவும் அக்கா தங்கை அப்படினா உங்களுக்கு பேரன் பொறந்ததுக்கு எனக்கு சீதகம் உண்டா? உண்டுனா மூனு நாளா இல்லைனா பத்து நாளா?’னு ஹோமத்துக்கு வந்த ஒரு வாத்தியாரோட ப்ராணனை ஒரு மாமி  எடுத்துண்டு இருந்தா. ‘எனக்கு பேரனே பொறந்து தொலச்சுருக்க வேண்டான்’னு சொல்லறமாதிரி அந்த வாத்தியார் முழிச்சுண்டு இருந்தார். பன் கொண்டை! பாலா கொண்டை போட்ட மாமிகள், 'கேஸ் சிலிண்டர் மாட்டினா எத்தனை நாள் நோக்கு வருது?'னு கேள்வி கேட்டுண்டு இருந்த காலம் போய் 'இன்டர்னெட் ரொம்ப ஸ்லோவா இருக்கு! சாம்சங் போன்ல சார்ஜ் நிக்கவே மாட்டேங்கர்து!' மாதிரியான சம்பாஷனைகள்ல மூழ்கி இருக்கர்தை பாத்தா நிஜமாவே ‘அச்சே தின்!’வந்த மாதிரிதான் இருக்கு. சதுர்த்தி உத்ஸவம் நல்லபடியா முடிஞ்சதுக்கு அப்புறம் கோவைல இருக்கும் சித்தப்பாவாத்துக்கு போயிட்டு அப்பிடியே நம்ப இட்லி மாமியாத்துக்கும் ஒரு எட்டு போயிட்டு வந்தேன். ‘தெற்கால வந்து வடக்கால திரும்பி ஒரு மேட்டுல ஏறி பள்ளத்துல இறங்கி கடைசில வந்தா ஒரு பியூட்டிபார்லர் வரும்! அங்க வந்துட்டு திருப்பி கால் பண்ணுங்க மாமாவை அனுப்பி வைக்கறேன்’னு போன்ல வழி சொன்னாங்க.

நானும் மண்டையை ஆட்டிட்டு சித்தப்பாவோட கிளம்பி போனா மேடும் பள்ளமும் மாத்தி மாத்தி வருது நம்ப அக்கா சொன்ன பியூட்டி பார்லரை மட்டும் காணும். எங்கையாவது வண்டியை நிப்பாட்டி ‘ஏனுங்க இந்த பக்கம் பியூட்டி பார்லர் எதாவது இருக்கா?’னு விசாரிச்சா ‘ஏன்கண்ணு நீ ஏற்கனவே அழகாதானே இருக்க அப்புறம் எதுக்கு பியூட்டி பார்லர்?’னு ஒருத்தன் நக்கல் அடிக்கறான் இன்னொருந்தர் ‘பொம்பளபுள்ளைங்க மூஞ்சி பூரா பவுடர் அப்பிகிட்டு வந்து பயம்குடுத்துமே அந்த இடமா? தெரியாதே!னு பதில் சொல்லறார். குசும்பு பிடிச்ச கோவைனு சும்மாவா சொல்லியிருக்கா. அனேகமா அந்த பியூட்டி பார்லரை குத்துவிளக்கேத்தி திறந்து வச்சதே நம்ப இட்லிமாமியா தான் இருக்கும்னு தோனர்து.



அப்புறம் ஒரு வழியா சிவப்பு கலர் ஹோண்டா ஆக்டிவால பரமசாதுவா ஒரு மனுஷர் தேடும் விழிகளோட எதிர்தாப்புல வந்தார். அந்த வரலாற்று சிறப்பு வாய்ந்த பியூட்டி பார்லருக்கு பக்கத்துல வச்சு எங்களை அடையாளம் கண்டு வீட்டுக்கு கூட்டிட்டு போனார். வீட்டுக்குள்ள நுழைஞ்சு பத்து நிமிஷம் வரைக்கும் சஹானா என்னையும் என்னோட சித்தப்பாவையும் பாஸ்போர்ட் வெரிபிகேஷனுக்கு வந்த ஏட்டைய்யா சந்தேகமா பாக்கரமாதிரியே தான் பாத்துண்டு இருந்தா. அதுக்கு அப்புறம் ரொம்ப இஷ்டமா என்கிட்ட வந்தாங்க மேடம். அவரோட சேர்ந்து நானும் விஷப்பரிட்சைல(சாப்பாடு) இறங்கபோறேன்னு இட்லி மாமியோட ஆத்துக்காரருக்கு பயங்கர சந்தோஷம். ‘குலதெய்வத்தை வேண்டிகிட்டு தைரியமா சாப்பிடுங்க! ஆறிலும் சாவு நூறிலும் சாவு!’னு பீதியை கிளப்பினார். அவர் ரொம்ப வேகமா சாப்பிட்டு முடிச்சுட்டார். அவரோட தங்கமணி அந்தபக்கம் போன சமயம் ‘கஷ்டமான விஷயத்துல ரொம்ப காலம் கடத்தக்கூடாது அதுக்குள்ள பாய்ஞ்சு வெளில வந்துடனும்’னு சொல்லிண்டே கையலம்ப போயிட்டார். சாப்பிட்டு முடிஞ்சு ரொம்ப நேரம் சஹானா கூட விளையாடிண்டு இருந்தேன். அடிக்கடி மணியை பாத்துண்டே இருந்த மாமா ‘தக்குடு இனிமே நீங்க பயப்பட வேண்டாம்! சாப்பிட்டு அரைமணி நேரம் ஆச்சு அபாயகட்டத்தை தாண்டியாச்சு! இனிமே உசுருக்கு சேதாரம் இல்லை!’னு சொல்லிட்டு சிரிச்சார். மனுசன் பாவம் வசமா சிக்கியிருக்கார் நம்ப இட்லி மாமிகிட்ட. 'கள்ளம் கபடம் இல்லாத ஒரு இனிமையான குடும்பம்'னு சொன்னா அது மிகைஇல்லை(இட்லி மாமி! நீங்க சொன்ன மாதிரியே சொல்லிட்டேன்).


ஒரு மாசம் ஒரு நிமிஷமா கழிஞ்சு போய் மறுபடியும் தோஹால வந்து ஒட்டகம் மேய்க்க ஆரம்பிச்சாச்சு! ஆத்துல இருக்கரவா எல்லாரையும் தக்குடு விசாரிச்சான்னு சொல்லுங்கோ!

Sunday, December 30, 2012

அவுத்து விட்ட கழுதை 3

Part 1 & Part 2

ஊருக்கு போன கதையை எழுதி முடிக்கர்த்துக்குள்ள அடுத்த லீவு ஆரம்பம் ஆயிடும் போலருக்கு. ‘நடுல கொஞ்சம் தக்குடுவை காணும்’னு சொல்லும்படியா ஆயிடுத்து ம்ம்ம்! என்ன பண்ணர்து சொல்லுங்கோ? 4 பரிட்சைக்கு பணம் கட்டி வச்சுருந்தேன். இந்த மாசத்துக்குள்ள எழுதி முடிக்கலைனா நீ கட்டின டாலர் எல்லாம் கோவிந்தா! கோஓவிந்தா!னு நியூஜர்சிலேந்து ஒரு வெள்ளக்கார மாமி ஓலையை வாசிச்சுட்டா. வேற வழி இல்லாம ‘கொட்டடா கொடையடா’னு அடுக்களை பரண் மேல இருந்த புஸ்தகத்தை எல்லாம் எடுத்து படிச்சு பரிட்சை எழுதி பெருவேம்புடையார் புண்ணியத்துல பாஸ் பண்ணியாச்சு! இந்த கலவரத்துக்கு நடுல போஸ்ட் எழுதினா நான் பிள்ளை பொறந்த மாதிரி இருக்கும்னு பயத்துல ப்ளாக் பக்கமே வரலை.

மெட்ராஸுக்கு வந்துட்டு கல்லிடை கிளம்பர்துக்கு முன்னாடி எங்களோட சொந்தக்காரா ஒருத்தராத்துக்கு சென்னைல போனோம். அவாத்துக்கு பக்கத்துலதான் நம்ப மன்னார்குடி மைனர்வாள் இருக்கார். ஆனது ஆச்சு இன்னும் ஒரு அஞ்சு நிமிஷம்னு தங்கமணி கிட்ட கெஞ்சி கூத்தாடி மைனர்வாளை தரிசனம் பண்ணர்துக்கு அவாத்துக்கு போனோம். மைனர்வாள் வழக்கம் போல ஆபிஸ்ல இருந்தார். அவாத்து மனுஷா எல்லார்கிட்டயும் ஷேமம்/உபயகுசலோபரி விசாரிச்சு முடிச்சு முக்கால் மணி நேரம் ஆனதுக்கு அப்புறமும் மைனர்வாளை மட்டும் காணலை. 2 நிமிஷத்துக்கு ஒரு தடவை போன் பண்ணி மூனாவது முக்கு தாண்டியாச்சு, நாலாவது லெப்ட் திரும்பியாச்சுனு கிரிக்கெட் கமெண்ட்ரி குடுத்துண்டு இருந்தார். இதுக்கு நடுல மைனரோட ரெண்டாவது தவப்புதல்வி அப்பா இப்படித்தான் அம்மாட்டையும் புளுகுவார் ஆனா ஆபிஸ்லேந்து கிளம்பி கூட இருக்கமாட்டார்னு ஒரு குண்டை தூக்கி போட்டா.

தமிழ் சினிமா போலிஸ் இன்ஸ்பெக்டர் மாதிரி கடைசில ஒரு வழியா வந்து சேர்ந்தார். ரெண்டு பேரும் ஒரு கால்மணி நேரம் சந்தோஷமா பேசிண்டு இருந்தோம். மைனரோட பேச்சு அப்பிடியே காவேரி(முன்னாடி இருந்த) பிரவாகம். ஒரு மனுஷன் ஆத்துல உள்ள கவலை எல்லாம் இல்லாம இலக்கியம்,எழுத்துனு சந்தோஷமா மனசை செலுத்தரானா அதுக்கு அந்த ஆத்துல உள்ள தங்கமணி தான் காரணமா இருக்கமுடியும் அப்பிடிங்கர கருத்துல எனக்கு அசஞ்சலமான நம்பிக்கை உண்டு, அதனால அவாத்து மாமியை பாத்து ஸ்பெஷலா ஒரு நமஸ்காரம் சொன்னேன். மைனர்வாள் கூட ரொம்ப நேரம் பேசி முடிச்சதுக்கு அப்புறம் பிரிஞ்சு போக மனசே இல்லாத காதலர்கள் மாதிரி கிளம்பி வந்தோம். அடுத்த நாள் மாமியார் கையால செளக்கியமா சாப்பிட்டு விட்டு சாயங்காலம் அம்மணி சகிதமா ஆம்னி பஸ் ஏறினேன். அந்த பஸ்ல போனா நேர எங்க ஊர் பஸ் ஸ்டாண்ட்ல போய் இறங்கிக்கலாம். தென் தமிழகத்துலேந்து குறிப்பா திருனவேலி பக்கத்துலேந்து வரக்கூடிய ஆம்னி பஸ்ஸுக்கு சில குணாதிசயங்கள் உண்டு. உள்ள ஏறும் போதே கமகமனு ஊதுவத்தி வாசனையும் புது பூமாலை போட்ட பிள்ளையார்/முருகன் படத்தை டிரைவர் பக்கத்துல பாக்கலாம். டிரைவர் சந்தனம்/விபூதி நிச்சயமா இட்டுண்டு இருப்பார். முக்கியமா நீ வா போ!னு ஏகவசனத்துல பேசாம மரியாதையா பேசுவாங்க. வண்டியை கிளப்பர்துக்கு முன்னாடி சீர்காழியோட கனீர் குரல்ல ‘உன்னை முழுமுதலே’ இல்லைனா ‘வினாயகனே வினை தீர்ப்பவனே’ நிச்சயமா ஒலிக்கும்.




நாங்க ஏறின வண்டில ‘வினாயகனே வினை தீர்ப்பவனே’ ஒலிச்சது. ‘உன்னுடைய வேல் ஒன்றே உறுதுணையாய் வருகிறது’னு முருகனுக்கும் ஒரு பாட்டை போட்டுட்டு அடுத்து என்னை மாதிரி உள்ள ஆசாமிகளுக்காக பாட்டு போட்டாங்க. ‘ஜிங்கு ஜிங்குனு ஜிமிக்கி போட்டு’ பாட்டு ஒலிச்ச போது ;உங்க ஊர்ல எல்லாம் ஒன்னுபோல இருப்பா போலருக்கு!;னு சொல்லி தங்கமணி தலைல அடிச்சுண்டா. அப்புறம் வழக்கம் போல எதோ ஒரு படம் போட்டா. படத்துல ஹீரோயினை வில்லன் கடத்திண்டு போகும் போது டிரைவருக்கு பசி வந்ததால வண்டியை ஒரு மோட்டல் பக்கமா நிறுத்தினார். பொதுவா ஊருக்கு வெளில ரோட்டோரமா இருக்கும் இந்த மோட்டல் எல்லாம் ‘கமகம மனம் கார்டன் பிரஷ்ஷா’ இருக்கர்தால நான் ஆத்துலேந்து கட்டுசாதக்கூடை கொண்டு போயிடுவேன். பொதுவா ஆம்னி பஸ் எல்லாம் இப்ப நல்ல மோட்டல் பக்கமா தான் நிறுத்தரா அப்பிடிங்கர்து ஒரு நல்ல விஷயம் தான்.

‘காலையிளங்கதிரில் உந்தன் காட்சி தெரியுது!’னு சீர்காழி இதமான குரல்ல மறுபடியும் காத்தால எல்லாரையும் எழுப்பிவிட்டார். சம்பூர்ண ராமாயணத்துல வரும் மண்டோதரி ‘காலையில் பாடும் ராகம்?’னு கேள்வி கேட்டா டிரைவர் அண்ணாச்சிக்கு ‘பூபாளம்’னு சொல்லதெரியுமோ தெரியாதோ ஆனா காத்தால காதுக்கு கேட்கும் படியான பாட்டு மட்டும் தான் அவர் போட்டார். சங்கர் நகர் சிமெண்ட் பாக்ட்ரியை பாத்த உடனே திருனவேலில இறங்க வேண்டியவா எல்லாம் இறங்கர்துக்கு தயார் ஆனா. கல்லிடை காஸ்மோபொலிடன்ல இறங்க கூடியவா எல்லாம் வீரவனல்லூர் கோமதி மில்ஸ் வந்தாச்சுன்னா ரெடி ஆக ஆரம்பிச்சுடுவா. கல்லிடை தேர்வு நிலை பேரூராட்சி உங்களை அன்புடன் வரவேற்கிறதுனு ஊர் எல்லைல கோட்டை தெருவுக்கு பக்கத்துல போர்ட்ல எழுதி வச்சுருந்தாலும் அது என்னவோ நெஜமாவே வாங்கோ! வாங்கோ!னு அழைக்கர மாதிரி தான் இருந்தது. கல்லிடை காஸ்மோபொலிடன்ல வழக்கம் போல ‘ஏ மாப்ளே எப்படா வந்தே?’ ‘சதுர்த்தி வரைக்கும் இருப்பையா?’ ‘ஆத்துக்காரிக்கு ஊர் பிடிச்சுருக்கா?’ வகையான விசாரிப்புகளுக்கு நடுல பயணம் பண்ணினோம். திருனவேலி இருட்டு கடை அல்வா வாங்கி தருவேளா?னு தங்கமணி ரொம்ப ஆசையா கேட்டாங்க. அதுக்கு என்ன வாங்கி தந்துட்டா போச்சு! புரட்சித்தலைவி புண்ணியத்துல அனேகமா எல்லா கடையுமே இருட்டு கடையாதான் இருக்கு அதனால எந்த கடைல வேணும்னாலும் நாம வாங்கிக்கலாம்னு சொல்லிவச்சேன்.

கல்லிடைல பாதிக்கு பாதி எல்லாம் வயசான தாத்தா பாட்டியா இருக்கா. இளவட்டங்கள் எல்லாம் பெண்களூர்,மெட்ராஸ்,அமெரிக்கா,கனடானு போய் உக்காந்துட்டதால ஊர் கொஞ்சம் வெறிச்சோடிதான் இருக்கு. நாராயணீயம்கிளாஸ்,ஸஹஸ்ரனாமம்/செளந்தர்யலஹரினு எல்லா மாமிகளும் பயங்கர பிசியா இருக்கா. கொஞ்சம் கொஞ்சமா மெட்ராஸ்ல இருக்கர மாதிரி இங்க இருக்கரவாளும் சதாசர்வ காலமும் நைட்டியோட வளைய வந்துண்டு இருக்கா. அனேகமா கூடிய சீக்கரம் நவராத்ரிக்கு தாம்பூலம் குடுக்கும் போது பொம்மீஸ் நைட்டி குடுத்தா எல்லாருக்கும் ரொம்ப உபகாரமா இருக்கும் போலருக்கு.

ரெஸ்ட் எடுக்க ஊருக்கு போனோம்னு தான் பேர் ஆனா ஒரு நாள் கூட ரெஸ்ட் எடுக்காம சுத்து சுத்துனு சுத்தினோம். குருவாயூர்,பாலக்காடு,மதுரை,திருச்சினு ரயிலை பிடிக்கர்து பஸ்ஸை பிடிக்கர்து ஆட்டோவை தொறத்தர்துனு ஒரே ஜாலியா போச்சு. நேரம் கிடைக்கும் போது மிச்சத்தை எழுத முயற்சி பண்ணறேன்.

எல்லாருக்கும் 2013 ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்! :)