Thursday, October 27, 2022

பயணமும் ஊர் வம்பும் (Part 3)

 

நாம எதுல நிப்பாட்டினோம்? மஞ்சகலர் சுடிதார்.. இல்ல இல்ல இமிக்ரேஷன்ல நிப்பாட்டினோம். இமிக்ரேஷன்ல ரொம்ப நாழியா நின்னுட்டு லக்கேஞ் எடுக்க போனா அங்க அது பத்தாவது தடவையா கன்வேயர் பெல்டுல பிரதக்ஷினம் பண்ணின்டு இருக்கும். ஒருவேளை நமக்கு யோகம் நன்னா இருந்து இமிக்ரேஷன்ல சீக்கரம் முடிச்சு லக்கேஞ்சுக்கு வந்தா நம்ப பெட்டி மட்டும் வரவே வராது . அப்பிடியே வந்தாலும் நாலு பெட்டில கடைசி பெட்டி மட்டும் வராம நம்ப பொறுமையை சோதிக்கும். ஒரு வழியா கடைசி பெட்டியும் வந்து வெளில வந்து மச்சினன் கார்ல ஏறி மாமனாராத்துக்கு ஒரு வழியா போய் சேர்ந்தோம். என்னோட பழைய போஸ்ட்ல சொன்ன மாதிரி எங்க மாமியாராத்து மாடிப்படி பக்கத்துல நின்னு பாத்தாலே எல்லா ஏரோப்ளேனும் எந்த பக்கம் போகர்துன்னு நன்னா தெரியும். இன்னிக்கு கன்னியாகுமரியும் நெல்லையும் கொஞ்சம் லேட்டு போலருக்கேனு கல்லிடைல ரயில் விஷயமா மாமக்கள் சம்பஷனை பண்ணிக்கர மாதிரி இன்னிக்கி துபாய் வண்டி ஏது இன்னும் வரலை? கத்தார் ஏர்வேஸ் காலைலயே போயிட்டானே!னு எங்க மாமியார் சில சமயம் லெவல் காட்டுவா. அதே மாதிரியே ஏர் அரேபியா இறங்கி ரெண்டு மணி நேரத்துக்கு மேல ஆகர்தே? ஏது லேட்டு? பெட்டி வரலையா?னு ஜாரிச்சா. இறங்கர இடத்துல எங்க ஊர் மாமா ஒருத்தரை பாத்தேன் அதான் லேட்டுனு சொன்னேன். உங்க ஊர் மாமாவா? அப்ப நேரம் ஆகத்தான் செய்யும்னு சொல்லிட்டு போயிட்டா.

 

நலம் நலமறிய ஆவல்! மாதிரியான பரஸ்பர சம்பாஷனைகள் எல்லாம் முடிஞ்சது. அன்னிக்கு சாயங்காலமே கல்லிடைக்கு கிளம்பியாச்சு. வழக்கம் போல செல்வம் ஆம்னி பஸ்ல டிக்கெட் போட்டு இருந்தேன். தங்கமணிக்கு பஸ் அவ்ளோதூரம் பிடித்தமில்லை. காத்துவராது தண்ணிவரும்னு கொஞ்ச நேரம் முனகிட்டு அப்புறம் செளக்கியமா செட்டில் ஆயிட்டா. காலையில் கல்லிடை வந்தாச்சு. நாங்கள் ஊருக்கு போன நேரம் சில புண்ணியாத்மாக்கள் ஊர்ல இல்லை. அதனால கொஞ்சம் நிம்மதியா இருந்தது. முக்கியமா தெருக்காத்தான் மாமா & எக்ஸ்ரே மாமி. மச்சினன் பிள்ளைக்கு பாம்பேல பூணல்னு சொல்லிட்டு பாம்பே போயிருந்தாலாம். தெருக்காத்தான் மாமாவுக்கு தெரியாம தெருல யாரும் ..சு கூட போடமுடியாது. காத்தால ஆத்தங்கரைல குளிச்சுட்டு கிழக்க பாத்து திண்னைல உக்காந்தார்னா அவரோட பார்வைலேந்து யாரும் தப்ப முடியாது. யார் யாராத்துக்குள்ள போறா,எங்கேந்து வந்தா,யாரு யாரு கூட பேசறா போன்ற உலக அமைதிக்கு தேவையான அனைத்து சமாசாரங்களுக்கும் மாமா  தான் அத்தாரிட்டி. அவாத்து மாமி புதுசா யாராவது வந்தா அவாளை மேலேந்து கீழ பார்வையாலையே ஒரு எக்ஸ்ரே எடுப்பா. அதோட சோலி முடிஞ்சது. வடிவேல் ஒரு படத்துல சொல்லுவாரே நான் பாத்தாலே பத்திண்டு எரியும்னு அதுக்கு கொஞ்சமும் சளைச்சது இல்லை நம்ப மாமியோட பார்வை. இதுல வேடிக்கை என்னான்னா மாமியோட பார்வைக்கு எல்லாரும் பயந்து நடுங்கிண்டு இருக்கும் போது அந்த மாமி என்னடான்னா காத்தால ரேஷன் கடைக்கு போகும் போது “எதிர்தாப்ல அவதான் வந்தா! ரேஷன் கடைல ஜீனி இல்லைனு சொல்லிட்டான்! போனதே வேஸ்ட்!”னு இன்னோரு மாமியை பாத்து ஆவலாதி சொல்லிண்டு இருப்பா.  ‘செளக்கியமா இருக்கியா’னு போன தடவை கேட்டா. ‘இதுவரைக்கும் செளக்கியம் தான் இதுக்கப்பரம் ஸ்வாமிதான் காப்பாத்தனும்’னு சொல்லிட்டு வந்தேன். நல்லவேளை மாமா & மாமி ரெண்டு பேரும் இல்லாததால கொஞ்சம் நிம்மதியா நடமாடமுடிஞ்சது.




 எங்கையுமே கூட்டிண்டு போகலைனு தங்கமணி எப்போதும் ஆவலாதி வாசிப்பா. அதனால இந்த தடவை ரெஸ்டே இல்லாம திருச்செந்தூர், மதுரை, குலதெய்வம் கோவில், நெல்லையப்பர் கோவில்னு நித்தியம் ஒரு இடம் போயிட்டு வந்தோம். அத்வைதாவும் விஷ்வஜித்தும் பேசி சிரிச்சு விளையாடி பாட்டியை சந்தோஷப்படுத்தினா. ஒரு வாரம் போனதே தெரியலை. போகும் போது சென்னைக்கு தூத்துக்குடில ப்ளைட் ஏறினோம். விஷ்வாவுக்கு ப்ளைட் பிடிக்கலை. அம்மாவை ப்ளைட்ல வரச்சொல்லு நாம செல்வம் பஸ்ல வரலாம்னு கொஞ்சம் மொரண்டு பிடிச்சான். அடுத்த முறை குழந்தேளை காரணம் காட்டி இனிமே தங்கமணி ப்ளைட் புக் பண்ணமுடியாதுனு நினைச்ச போது கொஞ்சம் சந்தோஷமா இருந்தது. அவா எல்லாரையும் சென்னைல கொண்டு போய் விட்டுட்டு இரன்டு நாள் கழிச்சு நான் மட்டும் கல்லிடைக்கு திரும்பி வந்தேன். அம்மாவுக்கு ரொம்ப நாளா கால்முட்டில வலி இருக்கு. அதுக்கு இங்கிலிஷ் வைத்தியம் பாத்தா கொஞ்ச நாள் ஒழுங்கா இருக்கர மாதிரி பாவலா காட்டிட்டு மறுபடியும் பழைய குருடி கதவை திறடினு வந்து நிக்கர்து. இந்த தடவை அதுக்கு எதாவது பண்ணலாம்னு தான் முக்கியமான உத்தேசம். கேரளால போய் ஆயுர்வேத வைத்தியம் பாக்கலாம்னு பாத்தா அம்மாவுக்கு வெளில உள்ள சாப்பாடு எதுவும் வயத்துக்கு ஒத்துக்காது. திருனெல்வெலிக்குள்ள எதுவும் சொல்லிக்கர மாதிரி இல்லை. என்னடா பண்ணர்துன்னு இருந்தப்ப தான் ஆழ்வார்குறிச்சில ஒரு வைத்திய சாலை இருக்குனு கேள்விப்பட்டேன்.

 

அங்க போய் பாத்தேன். நல்ல ரம்மியமான சூழ்னிலை மற்றும் சமையல் இல்லாத சாப்பாடு முறைகள் இருக்கு. அங்க இருந்தவா பாதிக்கு மேல மூட்டுவலி கேஸ் இல்லைனா உடல் எடை பிரச்சனை உள்ளவா. வயசானவானு இல்லை நாற்பது வயசுக்கு குறைவா உள்ளவா கூட சிகிச்சைக்கு வரா. யாரும் இப்ப நடக்கர்தே இல்லை எல்லாத்துக்கும் பைக் பைக்னு வாகனத்துல ஏறினா கடைசில ஆழ்வார்குறிச்சில வந்து அவல் பொறிகடலை சுண்டல்னு சாப்பிட வேண்டிய நிலை வந்துடர்து. அங்க ஒரு சேலத்துகாரர் ‘பத்து பரோட்டா சாதாரணமா சாப்பிடுவேன் இப்ப பத்து நாளா கொத்தமல்லி சாறு தான் காத்தால ஆகாரமா தரா’னு ரொம்ப பாவமா சொல்லிண்டு இருந்தார். ‘இன்னும் பத்து நாள் கொத்தமல்லியோட சேர்த்து இஞ்சி சாறும் சாப்பிட்டாதான் இத்தனை நாளா சாப்பிட்ட பரோட்டாவை சரிகட்டமுடியும்’னு சொல்லிட்டு வந்தேன். ஒரு பெண்களூர்காரருக்கு உடம்பு முழுக்க தேங்காயை அறைச்சு பூசி விட்டுருந்தா இன்னொருத்தருக்கு கொத்தமல்லி பேக் போட்டு விட்டுருந்தா. தக்காளி சட்னியும் வெங்காயசட்னியும் மட்டும் தான் பாக்கி அதுவும் அனேகமா மரத்துக்கு அந்த பக்கமா இருப்பாளோனு கொஞ்சம் சம்சியமா இருந்தது. இட்லி பேக் உண்டானு யாரும் கேக்காதீங்கோ அதுக்கு பதிலா ஆட்களையே இட்லி மாதிரி ஆவில வேகவச்சு பளபளனு ஆக்கரா.

 

நல்லபடியா எல்லாம் முடிச்சு போன சமத்து போல தோஹாவுக்கு திரும்பி வந்தாச்சு.

3 comments:

Anonymous said...

Besh besh

Anonymous said...

அம்மாவுக்கு வைத்தியம் நடந்ததான்னு சொல்லல்லியே தக்குடு.:) பிரமாத எழுத்து.

Vasumathy said...

I have also heard about that iyarkai vydya saalai. They are doing a great service. Please share the experience here.

Post a Comment

யெச்சுஸ்மி, comment பொட்டி இங்க இருக்கு.....:)