Monday, September 30, 2024

கல்யாணம் – காதுகுத்து (Part 2)

ராத்ரி தூங்க போகும் போது கல்யாண ஆத்துக்கு வந்த ஒரு மாமா ‘காத்தால சீக்கரமே முகூர்த்தம் அதனால நீ சீக்கரம் வந்துடு கோந்தை’னு சொன்னார். நான் வாஸ்தவமா காத்தால சீக்கரம் ஸ்ரீரங்கம் கோவிலுக்கு போயிட்டு வரனும்னு நினைச்சுண்டு இருந்தேன். அதுக்காக தான் கோவிலுக்கு பக்கத்துல இருக்கும் ஹோட்டல் ரூம்ல தங்கிண்டு இருந்தேன். இப்ப இவர் சொன்னதுக்கு அப்புறம் ப்ளனை மாத்தி மண்டபம் பக்கத்துல ஏற்கனவே புக் பண்ணி வச்சுருக்கும் ஒரு லாட்ஜ்ல போயி  பையை வச்சு தூங்க ஆரம்பிச்சேன். காத்தால குளிச்சுட்டு சந்தனகலர் ஜிப்பாவும் ஜரிகை வேஷ்டியும் கட்டிண்டு மண்டபத்துக்கு போயாச்சு. மண்டப வாசல்ல காசி யாத்ரை முடிஞ்சு ஊஞ்சல்ல மாப்பிள்ளை பொண்ணை உக்கார வச்சு இஸ்ரேல் லெபனான் மேல குண்டு போடர மாதிரி பச்சபுடி சுத்தி  கலர்கலரா உருண்டையை வீசிண்டு இருந்தா. யாரோ ஒரு கோல்ட் ப்ரேம் கண்ணாடி போட்ட மாமி பச்சபுடி உருண்டையை காப்பர் சல்பேட் கலர் புடவை கட்டின மாமியை பாத்து யதேச்சயா வீசர மாதிரி ஆனா குறிபாத்து வீசினா.. அனேகமா அவாளோட நாத்தனாரா இருக்கும்னு நினைச்சேன். இன்னொரு மாமி போட்டோ கிராபர் மூஞ்சிக்கு ஒரு சிவப்பு உருண்டையை வீசினா. நேத்திக்கி அந்த மாமி பாலிகை தெளிக்கும் போது போட்டோ எடுக்காத கோவம் இப்ப பச்சபுடியை வச்சு புடிபுடினு புடுச்சுண்டு இருந்தா. ‘இன்னும் அரைமணி நேரம் எமகண்டம் இருக்கர்தால பாலும் பழமும் காலியாகர வரைக்கும் குடுத்துண்டே இருங்கோ’னு ஒரு திருனெல்வேலி மாமா சொல்லிட்டதால என்ன பண்ணர்துன்னு தெரியாம வாத்யார் மாமா குட்டிபோட்ட பூனை மாதிரி சுத்து சுத்தி வந்தார். லெப்ட்ல எடு! ரைட்ல எடு!னு போட்டோகிராபரை வந்தவா போனவா எல்லாம் ஏவ ஆரம்பிச்சுட்டா. இதுக்கு நடுல கமலாம்பாள் காட்டெரிங் சர்விஸ்ல காத்தால ஸ்பெஷல் என்னனு போய் பாத்துட்டு வந்த வேலையை பாப்போம்னு கொஞ்சமா ஒரு கரண்டி காசி அல்வா, ஒரு ஊத்தப்பம், ஒரு இட்லி, ஒரு ரவா தோசை, ஒரு வடை, பக்கத்து இலை மாமாவுக்காக கொஞ்சம் பொங்கல், அரைடம்பளர் காப்பியோட சமாப்தி பண்ணினேன். நான் முடிச்சு டைனிங் ஹால்லெந்து வெளில போகும் போது மாப்பிள்ளை பொண்ணு மண்டபத்துக்குள்ள கையை புடுச்சுண்டு வரர்துக்கு சரியா இருந்தது.

 


கல்யாணப்பொண்ணை விடவும் கீழ இருக்கரவா தான் மேக்கப்ல அசத்தரா. பவுன்டேஷன் பவுடரே நாலு கோட்டிங் அடிப்பா போலருக்கு. முன்னாடி இருக்கர முடியை பின்னாடி போட்டுக்கர்தும் பின்னாடி இருக்கர புடவை தலைப்பை முன்னாடி கொண்டு வரர்தும்னு கவுண்டமணி சொன்ன மாதிரி ‘இவளுக படுத்தரபாடு இருக்கே!’ லாக்கர்ல இருந்த காசுமாலைகல்வச்ச அட்டியல்டெம்பிள் ஜுவல்லரினு மினுக்கிண்டு இருந்தா. புடவை ஆயிரம் ரூபாய் தான் இருக்கும் போலருக்கு ஆனா ரவிக்கை மூவாயிரம் வந்துடும் . ரவிக்கைக்கு பின்னாடி மயில் பறக்கர்துகிளி ஆடர்துமீன் ஓடர்துனு ஆரி ஒர்க் அமக்களப்படர்து. எவ்ளோ தையக்கூலி குடுத்தர்னு அவாத்து மாமா கிட்ட கேட்டா தெரியும்.  கல்யாண மண்டபத்துல போயி ஆரி ஒர்க் ஆராய்ச்சி நடந்துருக்கு போல!னு நாக்கு மேல பல்லை போட்டு யாரும் கேள்வி கேட்காதீங்கோ. வளையல் போட்டுவிடரவர்மெகந்தி போடரவர் எல்லாம் ஒரு பொன்ணு கையை பிடிச்சா கையை பிடிச்சு இழுத்தான்னு யாரும் கத்த மாட்டா. அதே மாதிரி எனக்கு பிடிக்காட்டாலும் யுவான் சுவாங் மாதிரி ஞாபகம் வச்சுண்டு உங்களுக்கு சொல்லிண்டு இருக்கேன்.. மேடைல வாத்யார் மாமா ‘பொளத்ரி நப்த்ரி’னு ஆரம்பிச்சார். சரி இப்ப போனா சரியா இருக்கும்னு மேல போனேன். பிரவரம் சொல்லி கோத்ரம் மாத்திண்டு இருந்தா. பொண்ணோட அப்பாட்ட போயி “கண்கலங்காம இருங்கோ! உங்க பொண்ணுதான் அவாத்துக்கு போறா! நீங்க என்ன அழுதாலும் உங்காத்து மாமி உங்க கூடதான் இருக்க போரா அதனால ஹெப்பியா இருக்கர மாதிரி முகத்தை வச்சுக்கோங்கோ”னு சொன்னேன். கரெக்டா மாங்கல்ய தாரணம் ஆகர சமயம் ஹோமகுண்டம் புகைய ஆரம்பிச்சுடுத்து. எல்லா இடத்துலையும் வாத்யார் இந்த ஜோலிதான் பாக்கரார். அதை கொஞ்சம் நன்னா தான் ஜுவாலை பண்ணினா என்ன. போட்டோகாரர் வந்து ‘சாமி கொஞ்சம் நெய் விடுங்கோ! புகையை போட்டா தாலிகட்டர கட்டம் ஆல்பத்துல டல்லா இருக்கும்’னு கெஞ்சிண்டு இருந்தார். ‘தூரத்துல இருக்கரவா எல்லாம் பக்கத்துல வந்து அக்ஷதையை தம்பதிகளுக்கு போட்டு ஆசிர்வாதம் பண்ணுங்கோ. எனக்கு ஆசிர்வாதம் பண்ணாதீங்கோ!  என்னோட தலைல போடாதீங்கோ! காத்தால பச்சபுடி சுத்தின மாமி எல்லாம் பக்கத்துல வந்துடுங்கோ’னு வாத்யார் ரொம்ப உஷாரா எச்சரிக்கை பண்ண ஆரம்பிச்சார். ஒருவழியா அக்னி வந்துருத்து மாங்கல்ய தாரணமும் நல்லபடியா ஆச்சு. பொண்ணோட அப்பாவுக்கு ‘அப்பாடா’னு இருந்தது மாப்பிள்ளைக்கு கை நடுங்க ஆரம்பிச்சுடுத்துபையனோட அம்மாவுக்கு வேர்கவே ஆரம்பிச்சாச்சு. எல்லாருக்கும் தர்பூசணி ஜூஸ்சாத்துக்குடி ஜூஸ்னு பிரஷ்ஷா மிக்ஸில அடிச்சு குடுத்தா.

 


ஹோமம் எல்லாம் பூர்த்தியானதுக்கு அப்புறம் கோவில் பிரசாதம் கிப்ட் கவர் வாத்யார்கிட்ட சொல்லி ஓதியிட்டோம். இதுக்கு நடுல ஒரு மாமா மேடைல என்கிட்ட வந்து ‘மத்யானம் ஸ்ரீரங்கம் கோவிலுக்கு போலாம்னு இருக்கேன் நீங்களும் என்னோட வரேளா’னு கேட்டார். ‘சத்திரத்து சாப்பாட்டுக்கு அப்பனையங்கார் உத்தரவு’ அப்பிடிங்கர கதையா இருக்கேனு மனசுல நினைச்சுண்டு ‘ஓ பேஷா போலாமே மாமா!’னு சொன்னேன். அப்பிடியும் இப்படியுமா எல்லார்கிட்டையும் ஒக்காந்து பேசிண்டு இருந்ததுல காத்தால சாப்பிட்ட டிபன் ஜீரணம் ஆயிடுத்து. மத்யான சாப்பாடுக்கு எல்லாரும் மெதுவா நகர ஆரம்பிச்சா. சாப்பாடும் பிரமாதமா இருந்தது. எல்லாத்தையும் சாப்பிட வயித்துல இடம் தான் இல்லை. சாப்பாடு முடிஞ்சு அந்த மாமா கூட கோவிலுக்கு கிளம்பியாச்சு. மாமாவும் நானும் ஒரு ஆட்டோவை புடிச்சு ரங்கா ரங்கா கோபுரம் பக்கத்துல போய் இறங்கிட்டு உள்ள போக ஆரம்பிச்சோம். உள்ள நுழையர்துக்கு முன்னாடி அங்க வாசல்ல இருந்த 'வசூல் ராஜா'(அதான் அறமில்லாத துறை) ஆபிஸ்குள்ள அந்த மாமா போனார். நானும் ரெண்டு நிமிஷம் நின்னேன் அப்புறம் என்ன ஆச்சுன்னு உள்ள போய் பார்த்தா ரெண்டு கிரவுண்ட் இடத்துல பெரிய ஆபிஸ்மொத்த ஆபிஸுக்கும் குளுகுளுனு ஏசி (எல்லாம் நாம உண்டியல்ல போடும் காசுல வந்ததுதான்). அங்க இருந்த ஒரு அதிகாரிக்கு சென்னைலெந்து ஒரு போன் கால் வந்தது உடனே அவர் எங்க கூட வந்துட்டு கொடிமரம் பக்கத்துல ஒருந்த ஒரு ஊழியரிடம் ‘இவங்களை தரிசனத்து அனுப்பி வைங்க’னு ஒரு வார்த்தை தான் சொன்னார். அதுக்கு அப்புறம் எல்லா கிரில் கேட்டும் வரிசையா திறந்தது. மூனாவது நிமிஷம் அரங்கனோட சன்னதி முன்னாடி நிக்கரோம். அரங்கனை நன்னா தரிசனம் பண்ணிண்டே புருஷ ஸூக்தம்நாராயண ஸூக்தம் எல்லாம் பாராயணம் பண்ணினேன்.வெளில வந்தா ஆச்சரியமா இருந்தது. இவ்ளோ சுலபமா தரிசனம் பண்ணக்கூடிய பெருமாளை இந்த அறம் கெட்ட துறை எவ்ளோ தூரத்துல நிப்பாட்டி வச்சுருக்கானு வருத்தமா இருந்தது. தாயார் சன்னதியிலும் அற்புதமான தரிசனம். பிரகாரத்துக்கு வந்ததுக்கு அப்புறம் அந்த மாமாட்ட “அப்பிடி என்ன தான் ஆபிஸ்லனு சொன்னேள்?”னு கேட்டா பாட்ஷா ரஜினி மாதிரி ‘உண்மையை சொன்னேன்’னு சொல்லி சிரிச்சார். எது எப்பிடியோ ரங்கனோட அனுக்கிரஹத்தால நல்லபடியா தரிசனம் பண்ண முடிஞ்சதுனு மனசுல நினைச்சுண்டேன். வெளில வந்துட்டு கீதா மாமிக்கு போன் பண்ணி பேசினேன். கல் தோன்றி மண் தோன்றா காலத்துலேந்து ப்ளாக் எழுதும் அசாத்தியமான நபர். மாமாவுக்கு கொஞ்சம் உடம்பு சரியில்லைனு கேள்விப்பட்ட போது ரொம்ப வருத்தமா இருந்தது.  கோபுரத்தோட ஒரு போட்டோ எடுத்துட்டு மறுபடியும் மண்டபத்துக்கு போனா……….                  

 

 

Show quoted text

3 comments:

Anonymous said...

ரொம்ப நாளாச்சு இன்னிக்கு வந்துட்டேன்; முந்தின பதிவையும் படிச்சுடறேன்

Anonymous said...

ரொம்ப யதார்த்தம். சூப்பர்

வெங்கட் நாகராஜ் said...

சிறப்பு… நல்ல தரிசனம் கிடைத்தது என்பதில் மகிழ்ச்சி. “கொடிமரத்துக்கு கிடட வந்துடுங்கோ, அப்பறம் எல்லாம் சுலபம்” இப்படியும் தரிசனம் - :) சில சமயம் வாய்க்கும். அங்கேயே 100 ரூபாய் ஸ்பெஷல் தரிசனம் Q இருக்கு.. அது வழியாகவும் குறைந்த நேரமே எடுக்கும் - கூட்டத்தை பொறுத்து!

Post a Comment

யெச்சுஸ்மி, comment பொட்டி இங்க இருக்கு.....:)