Thursday, February 19, 2015

தோஹா டு தோஹா Part 5

Part 1 2 3 4 படிக்க


 

தெருல எல்லாரும் ரொம்ப சந்தோஷமா பெரிசு பெரிசா கோலம் போட்டு, குழந்தேளுக்கு புதுசு புதுசா டிரெஸ் போட்டு விட்டு பத்து நாள் சதுர்த்தி உத்ஸவத்தை கொண்டாடிண்டு இருந்தா. போன வருஷம் பத்தாயிரம் மோதகம் பண்ணி கணபதி ஹோமம் பண்ணினா. மத்த இடத்துல இருக்கர மாதிரி சமையல் ஆட்களை வச்சு சம்பளம் குடுத்து பண்ணர ஜோலி இங்க கிடையாது. பெரிய இன்டஸ்ட்ரி மாதிரி தெருல இருக்கும் எல்லா மாமிகளும் அவாத்து சமையலை முடிச்சுட்டு வந்து மோதகம் தயார் பண்ணனும். சில குரூப்பு மாமிகள் அபிராமி அந்தாதி, விஷ்ணு ஸஹஸ்ரனாமம்னு சொல்லிண்டே வேலை பாப்பா. சில குரூப்பு அடுத்தாத்து ஆவலாதி,பக்கத்து தெரு வம்பு எல்லாத்தையும் பேசிண்டே வேலை பாப்பா. ‘வம்பளந்துண்டே பண்ணாதீங்கோ!’னு வயசான மாமிகள் சத்தம் போட்டா அதுக்கு வம்பி மாமிகள் ‘நம்ப பிள்ளையாருக்கு எல்லாமே வேண்டிதான் இருக்கு! ஸ்லோகமும் கேட்டுப்பார் நாங்க பேசர வம்பையும் கேட்டுப்பார்!’னு சொல்லி அவாளோட வம்பிகள் கூட்டத்துல பிள்ளையாரையும் பார்ட்னர் ஆக்கிடுவா. மோதகத்தை பொறிச்சு எடுத்துண்டு இருந்த ஒரு மாமி என்னை பாத்ததும் ‘பாரின்ல இருக்கரவா எல்லாருக்கும் இப்ப புதுசா ஒரு வியாதி கபாலத்துல வருதாமே?’னு கேட்டா. ‘மாமி! அது கபாலா இல்லை எபோலா! அரையும்குறையுமா சன் டிவிகாரன் போடர சிறப்புபார்வையை வைச்சுண்டு கேக்காதீங்கோ’னு சொன்னேன்.

 

அஞ்சு வருஷத்துக்கு அப்புறம் பாத்த ஒரு மாமி அப்பிடியே இருக்கா மாமாதான் நிரைச்ச தலையும் தானுமா இருக்கார். டை அடிக்கறேன்னு சொன்னா இப்பெல்லாம் கெளரவ குறைச்சலா இருக்கு அதனால ஹென்னா போட்டுக்கறேன்னு சொல்றா. ஹென்னாவை இவா மட்டும் நன்னா போட்டுண்டு மாமாவை அண்ணா மாதிரி வைச்சா மாமியை திடீர்னு பாக்கும் போது இது இணைவியா இல்லைனா துணைவியானு சந்தேகம் வருது. இது ஒரு தினுசுனா இன்னொரு பக்கம் தெருல ரொம்ப வருஷமா இருக்கும் சில வயசான மாமாக்களோட தொல்லை தாங்க முடியாது. ரொம்ப வருஷத்துக்கு அப்புறம் கோவில் உத்ஸவத்துக்கு வரனும்னு ஆசைபட்டு வந்த சில பழைய மனுஷாளை பக்கத்துல வரசொல்லி சி பி ஐ மாதிரி விசாரணை பண்ணிண்டு இருப்பா. இதுல நடுல நடுல ‘அந்த காலத்துல உங்க அப்பாவும் நானும் எப்பிடி இருந்தோம் தெரியுமா’னு ஒரு பிட்டை நுழைப்பார். இப்படி போகும் பேச்சு சில சமயம் ரொம்ப ஜாலியா போகும், சில சமயம் ‘நீ காலேஜ் படிக்கும் போது வீரவனல்லூர்லேந்து வந்த ஒரு பொண்ணு கூட சுத்திண்டு இருந்தையேடா’னு அந்த மாமாட்ட கேக்கர்துக்கும் அவாத்து மாமி வந்து நிக்கர்துக்கும் சரியா இருக்கும்.
 

இதெல்லாம் கூட சரினு விட்டுடலாம் சில கேள்விகள் ரொம்ப தர்மசங்கடமா போயிடர்து. 'உனக்கு எத்தனை குழந்தெள்? பிள்ளைக்கு ஏது இன்னும் கல்யாணம் பண்ணலை? பொண்ணுக்கு ஏது இன்னும் குழந்தை பொறக்கலை?'னு கேள்விகள் போகும் போது வந்தவாளுக்கு ரொம்ப கஷ்டமா போயிடர்து. பிள்ளைக்கு ஏது கல்யாணம் பண்ணலைனா அவரா கல்யாணம் பண்ணமாட்டேன்னு சொல்லிண்டு இருக்கார்! பொண்ணு கிடைசா கோவில் வாசல்லையே கூட கல்யாணம் பண்ண தயார்தான். பொண்ணுக்கு ஏது இன்னும் குழந்தை பொறக்கலைனு கேட்டா! எல்லாரும் உங்களை மாதிரியே 25 வயசுக்குள்ள 3 குழந்தை பெத்துக்க தயாரா இருக்க வேண்டாமா?  இதே மாதிரி யார்கிட்டையோ ‘உங்க சித்தப்பாவுக்கு நான் தான் லைஃப் குடுத்தேன் தெரியுமா?’னு பிரஸ்தாபிச்சுண்டு இருந்த போது. ‘லைஃப் குடுக்கர்தெல்லாம் இப்ப பெரிய விஷயமா மாமா? நித்தியம் பத்து பேருக்கு நான் லைஃப் குடுத்துண்டு இருக்கேன் & எனக்கு பத்து பேர் லைஃப் குடுத்துண்டு இருக்கா, இதுல பிரமாதமா சொல்லிக்க என்ன இருக்கு’னு சொல்லிண்டே நான் நகந்துட்டேன். அந்த மாமாவுக்கும் புரியலை என்னோட தங்கமணிக்கு நான் சொன்னது புரியலை. ‘கேண்டி கிரஷ்ல(Candy Crush) நித்தியம் எத்தனை பேருக்கு நாம லைஃப் குடுக்கரோம்!’னு கண்ணடிச்சுண்டே நான் சொல்லவும் தங்கமணிக்கு ஒரே சிரிப்பு.  

போன போஸ்ட்ல எங்க தெரு டாக்டர் மாதிரி இந்த போஸ்ட்ல என்னோட இன்னொரு நண்பர். வாஸ்தவமா அவர் எங்க அப்பாவுக்கு நண்பர் ஆனா அவரை விட எனக்கு தான் ரொம்ப சினேகம்னு சொல்லனும். ஏ மாப்ளே!னு என்னை பாத்த உடனே சத்தம் குடுப்பார். தோஹாலேந்து எதை மறந்தாலும் அவரோட அம்பாள் பூஜைல சந்தனத்தோட சேர்த்து அரைக்க குங்குமப்பூ வாங்காம போகமாட்டேன். ஒரு மணிக்கூர் சாதாரணமா என்கிட்ட பேசுவார். ஆள் உயரம் கிடையாது ஆனா நல்ல ஆஜானுபாஹூவா எலுமிச்சம்பழம் மாதிரி இருப்பார்.போன வருஷம் திடீர்னு வந்த மாரடைப்புல காலமாயிட்டார். இப்ப நினைச்சாலும் தாங்கமுடியாத ஒரு வயத்தெரிச்சல். அவரோட ஜாலியான குணத்துக்கு எனக்கு அடுத்த தலைமுறை வந்தாலும் அதுக்கும் அவர் நண்பனா இருந்திருப்பார். பூட்டி கிடந்த அவாத்தை பாக்கும் போதெல்லாம் வாசல்ல நின்னுண்டு ‘ஏ மாப்ளே!’னு சிரிச்ச முகமா கூப்பிடர மாதிரியே இருந்தது. என்ன பண்ணமுடியும் ஆண்டாண்டு காலம் அழுதுபுரண்டாலும் மாண்டவர் மீள்வாரோ!
 

சதுர்த்தி அன்னிக்கு திருச்சிலேந்து ஒரு ப்ளாக்கர் வந்துருந்தார். காதல்கோட்டை சினிமால வரமாதிரி அவரும் நானும் நேர்ல பாத்துக்காமையே  நட்போ நட்பு. எங்க தெரு பிள்ளையாருக்கு பட்டு,வெள்ளி ருத்ராக்ஷமாலை எல்லாம் வாங்கிண்டு வந்து சமர்பணம் பண்ணினார். கோவில்ல ஜோலியா இருந்ததால ரொம்ப பேசமுடியலை. அவரை சந்திச்சது ரொம்ப சந்தோஷமா இருந்தது. அதே மாதிரி சென்னைல வந்து தானைத்தலைவி அக்காவை குடும்பத்தோட சந்திச்சதும் ரொம்ப சந்தோஷமா இருந்தது. வாஸ்தவமா நம்ப ‘கிரேஸி மோகினி’ அனன்யாக்கா உட்பட பல பிரபலங்கள் சகிதமா மாநாடு மாதிரி நடக்க வேண்டிய சந்திப்பு கடைசில ஏதோ ரகசிய ஆலோசனை கூட்டம் மாதிரி முடிஞ்சுடுத்து. தானைத்தலைவி அக்கா ஆல் இன்டியா ரேடியோல வேலை பாக்கராளாம். "ஒரு எஃப் எம் ரேடியோவே ஆல் இன்டியா ரேடியோவில் வேலைபாக்கிரதே அடடா ஆச்சர்யகுறி!"னு கவிதை சொன்னவுடனே அவாளோட ரங்கமணி ரொம்ப ரசிச்சுண்டே ‘தக்குடுவுக்கு இன்னொரு டம்பளர் பாயஸம் குடும்மா!’னு சொல்லி உபசாரம் பண்ணினார்.
 

எல்லா கூத்தையும் முடிச்சுண்டு நல்லபடியா தோஹா வந்து சேர்ந்தோம். எல்லாத்தையும் எழுதி முடிக்கர்துக்குள்ள அடுத்த சதுர்த்தியே வந்துடுமோனு பயந்துண்டு இருந்தேன். நல்ல வேளை தப்பிச்சேன்!.......


Thursday, January 22, 2015

தோஹா டு தோஹா Part 4

Part 1  Part 2 & 3  படிக்க


ஆவணியாவட்டம் முடியர்துக்குள்ள வினாயகர் சதுர்த்தி 10 நாள் உத்ஸவம் ஆரம்பம் ஆயிடுத்து. எங்க தெரு பிள்ளையாருக்கு 10 நாள் உத்ஸவம் உண்டு. பத்து நாளும் அவர் பேரை சொல்லிண்டு சக்கரைபொங்கல், பஞ்சாமிர்தம், சுண்டல்னு வகை வகையா உள்ள தள்ளிட்டு திண்ணைல உக்காந்துண்டு வம்படிக்கர்து ஒரு தனி சுகம் தான். பொதுவா இந்த பத்து நாளும் நான் வேற எங்கையும் நகரமாட்டேன். ஆனா இந்த தடவை வேற வழியே இல்லாம ரெண்டு நாள் நகரும் படியா ஆயிடுத்து. இதுல நான் மட்டும் போனா போறாதுனு அம்மா அப்பாவையும் கூட்டிண்டு போகும் படியா ஆயிடுத்து. போகும் போது ரயில்ல போயிட்டு வரும் போது ப்ளைட்டுல வந்தோம். ப்ளைட்டுல வரர்து ஒன்னும் இப்ப எல்லாம் அதிசயம் இல்லைனாலும் 60 வருஷத்துக்கு மேல ப்ளைட் ஏறாத எங்க அப்பாவையும் அம்மாவையும் முதல் தடவையா அதுல ஏத்திவிட்டு அவாளோட மனநிலை எப்பிடி இருக்கும்னு பாக்கர்துல ஒரு தனி சந்தோஷம்.  

காத்தால 9 மணிக்கு ப்ளைட் அதனால 6 மணிக்கே ஏர்போர்ட் கிளம்பனும்னு முடிவு பண்ணி அப்பா அம்மா கிட்ட காலைல ஒரு ஸ்பெஷல் ரயில் விட்டுருக்கான் அதுல போகபோறோம்னு புளுகி வச்சுருந்தேன். இதுக்கு முன்னாடி இன்னொரு விஷயத்தையும் சொல்லணும். எங்க அப்பாவுக்கு கிளாக்கோமானு சொல்லக்கூடிய கண் உபாதை. எனக்கு விபரம் தெரிஞ்ச நாள்லேந்து எனக்கு தெரிஞ்சதெல்லாம் ஒன்னாம் நம்பராத்து கோமா, டாக்டராத்து கோமா & நானி கோமா மட்டும் தான். இந்த க்ளாக்கோமாவை கேள்விபட்ட போது ரொம்பவே கஷ்டமா இருந்தது. எல்லாம் சரியா போயிண்டு இருக்கும் போது திடீர்னு ஒரு நாள் நமக்கு பார்வை இல்லாம போயிடுத்துனா அதுக்கு கிளாக்கோமானு நாமகரணம் பண்ணிடலாம். எதிரிக்கு கூட இந்த நிலைமை வரகூடாதுனு பலதடவை நினைச்சு பாத்து வருத்தப்பட்டதுண்டு. இதுனாலயே நான் அவர் கிட்ட போன்ல எதை பத்தி பேசினாலும் வார்த்தையால மனசுல பாக்கர மாதிரி விலாவரியாதான் பேசுவேன். என்னோட நிலைமையை சொல்லி உங்களையும் சோகமாக்கிடேன் பாருங்கோ! நாம விட்ட இடத்துலேந்து தொடரலாம்.

 

 ஏர்போர்ட் உள்ள நுழைஞ்சதுக்கு அப்புறம் தான் அப்பாகிட்ட விஷயத்தை சொன்னேன். ஒன்னேகால் மணி நேரத்துல நாம திருவனந்தபுரம் போய் அங்கேந்து கார்ல கல்லிடை போயிடலாம்னு சொன்னேன். ‘எங்களுக்கு எதுக்குடா ப்ளைட்’னு ரெண்டு பேருமே சொல்லிண்டா. போர்டிங் பாஸ் போடும்போதே வீல்சேர் வேணும்னு சொல்லி வாங்கி அவரை கூட்டிண்டு போயாச்சு. இன்டிகோ ப்ளைட் சர்வீஸ் உண்மையிலேயே ரொம்ப பிரமாதமா இருந்தது. படிக்கட்டு இல்லாம சாய்வு பாதைல கொண்டு போய் நேரா சீட்டுல கொண்டு போய் அப்பாவை உக்காத்திட்டா. படி ஏறாம எப்பிடி நான் நேரா சீட்டுக்கு வந்தேன்னு அப்பா திரும்ப திரும்ப கேட்டுண்டு இருந்தார். ப்ளைட்டுல இருக்கும் பைலட் & ஏர்ஹோஸ்டஸ் பத்தின விஷயம் எல்லாம் விலாவரியா சொன்னா. ஜாதகம் & நக்ஷத்ரம் மட்டும் தான் பாக்கி!எதுக்கு அவாளோட ஸ்டேட், பாஷை எல்லாம் சொல்லறானு மெதுவா என் கிட்ட கேட்டார். ஏற்கனவே ஆச்சரியம் கலந்த திகிலோட உக்காந்துண்டு இருந்த எங்க அம்மாகிட்ட ‘கீழ எவ்ளோ ஆழத்துல பூமி இருக்கு பாத்தியா’னு கேட்கவும் அவசரமா தண்ணியை எடுத்து குடிச்சுட்டு என்னோட முதுகுல ஒரு அடி போட்டா. திருவனந்தபுரத்துல லேண்டிங் ஆகி லக்கேஜ் எடுத்ததுக்கு அப்புறம் தான் அம்மா முகத்துல ஒரு தெளிவு வந்தது. 

கல்லிடை வந்து பழையபடி சதுர்த்தி உற்சவத்துல கலந்தாச்சு. எங்க தெரு டாக்டர் மாமாவோட ரெண்டு பொண்களும் வந்துருந்தா. டாக்டர் எங்க தெருவோட மறுக்கமுடியாத ஒரு அடையாளம். வரலாறுல கி.மு கி.பி இருக்கரமாதிரி எங்க தெருல யாரா இருந்தாலும் பழைய மனுஷா கேக்கர ஒரே கேள்வி 'உங்க ஆம் மணி டாக்டராத்து வரிசைல இருக்கா இல்லைனா எதிர் வரிசைல இருக்கா?'னு தான் இருக்கும். சதாபிஷேகம் கழிஞ்சு சிவலோகப் ப்ராப்தி அடைஞ்சவர் அப்பிடினாலும் எனக்கு ரொம்ப தோஸ்த். அவர் சிவலோகப்பிராப்தி ஆன தினம் பால்ய ஸ்னேகிதனை பறிகுடுத்த மாதிரி அவாத்துக்கு போய் அழுதுட்டு வந்தேன். எந்த விஷயம் பத்தி பேசினாலும் அதுல நமக்கு தெரியாத ஒரு புது விஷயத்தை சொல்லுவார். கல்யாண சாப்பாட்ல உப்பு உறைப்பு எப்பிடி இருக்குங்கர்தை அவரை மாதிரி யாராலும் ரத்தினசுருக்கமாவும் குசும்பாவும் சொல்லமுடியாது.  டாக்டரோட மூத்தபொண்ணோட பொண்ணுக்கு(ம்) அடியேன் தோஸ்த். இந்தியன் டீமுக்கு ப்ஃளட்சர் இருக்கரமாதிரி அந்த அக்காவுக்கு பம்பரம் விடர்துக்கு கோச்சுக்காம சொல்லிகுடுத்த கோச் நாம தான். இந்த விஷயத்தை மறக்காம அவாளோட ஆத்துக்காரர்கிட்ட வேற சொல்லி அறிமுகம் பண்ணி வச்சதுதான் அதுல காமெடி.   

டாக்டரோட மூத்தபொண் அவாளோட சம்பந்தி சகிதமா வந்துருந்தா.அவாளுக்கும் என்னை அறிமுகம் பண்ணி வச்சா. அதோட நிப்பாட்டி இருக்க கூடாதோ! ‘இவன் ஜோரா ப்ளாக் எழுதுவானாக்கும் உங்களுக்கும் ஜடி தரேன்’னு சொல்லவும் எனக்கு தூக்கிவாரிபோட்டது. ‘ப்ளாக்கை படிச்சதுக்கு அப்புறம் அவாளோட சம்பந்தி இனிமே நம்ப பக்கமே வரமாட்டா’னு நினைச்சுண்டேன். பெண்களூர்ல இருக்கும் ரெண்டாவது பொண் பஞ்சாயத்து தலைவர் தேர்தல்ல நிக்கர அளவுக்கு பிரபல்யம். அவாளுக்கு தெரியாதவா & அவாளை தெரியாதவா ரொம்ப குறைவுனு சொல்லிடலாம். எனக்கு தெரிஞ்சு அந்த மாமி செளக்கியமா இருக்கேளா?னு ஜாரிக்காத ஆள் அந்த வட்டாரத்துலேயே கிடையாதுனு சொல்லலாம்.
 
மதுரை மெட்ராஸ் அனுபவங்களோட அடுத்த வாரம் இந்த தொடரோட சமாப்தி. (உடனே பானகம் பாயஸம் வடை மாலை நைவேத்யம் உண்டானு கமண்ட்ல வந்து வம்புக்கு இழுக்காதீங்கோ!)

Saturday, November 22, 2014

தோஹா டு தோஹா (Part 3)

Part 1   &  Part 2
 
 
ஒரு வழியா பெண்களூர் போய் அக்காவோட வீட்டை அடைந்தோம். எங்களை பாத்த அதிர்ச்சில “அதுக்குள்ள ரெண்டு நாள் ஆயிடுத்தா! நாளும் பொழுதும் ஓடர்தே தெரியலை”னு அக்காவோட ஆத்துக்காரர் ரொம்ப அளுத்துண்டார். மொத்தமா போகவர எவ்ளோ ஆச்சுனு அக்கா சொன்னதை கேட்டு அவருக்கு ரெண்டு நிமிஷம் பேச்சு மூச்சே இல்லை. “ஹே தக்குடு! சகாயவிலைல ரெண்டு நாள் டூரையும் முடிச்சுட்டு வந்துட்டேளேபா! மூனாவது தெரு தாண்டர்துக்குள்ள ரெண்டாயிரம் ரூபாய் செலவளிக்கும் இந்த ஓட்டகை அக்காவை கூட வச்சுண்டு எப்பிடி இதல்லாம்”னு அவர் கேட்டு முடிக்கர்த்துக்குள்ள, ‘பாய்ஸ் படத்துல வரும் பண்டாரம் செந்தில் மாதிரி போன இடத்துல எல்லாம் எந்த கோவில்ல எத்தனை மணிக்கு உண்டகட்டி போடுவானு ஒரு பெரிய டேட்டாபேஸ் வச்சுருக்கான்! அந்தந்த இடத்துல டாண் டாண்னு கூட்டிண்டு போய் சாப்பாட்டுக்கு உக்காத்திட்டான்!’னு அக்கா பதில் சொல்லிண்டு இருந்தா. ‘மாமா சொல்ப்ப சாம்பார் ஹாக்கி!னு ரெண்டாம் தடவை கேட்டு வாங்கி வெட்டு வெட்டுனு வெட்டிட்டிடு இங்க வந்து என் காலை வாரிவிடறேளே’னு நானும் கேட்டேன். ‘எது எப்பிடியோ டைரக்டர் ஷங்கர் பட்ஜெட்ல செலவு செய்யும் உங்க அக்காவை விசு பட்ஜெட்ல கொண்டுவந்து என்னோட பர்ஸை காப்பாத்தினாய்’னு அத்திம்பேர் முடிச்சு வச்சார். 

பெண்களூர்லேந்து கிளம்பி நேரா சென்னை வந்து அத்வைதா & தங்கமணியை கூட்டிண்டு கல்லிடை நோக்கி புறப்பட்டேன். ரயில்ல போகும் போது சும்மா இருக்காம தங்கமணி கிட்ட, " நானும் பாக்கறேன் ஒரு தடவை கூட சினிமால வரமாதிரி சின்னதா ஜீன்ஸ் டிராயர் & வெள்ளை கலர் முண்டா பனியன் போட்டுண்டு மறக்காம கைல கிஃட்டார் வச்சுண்டு ஓ பேபி ஹோ பேபி!னு பாடிண்டு ஒரு பொம்ணாட்டியும் வரமாட்டேங்கறாளே! வந்தா நானும் விழுப்புரம் ஜங்ஷன்ல இறங்கி அவா கூட ஒரு டான்ஸ் ஆடுவேன் இல்லையா"னு கேட்டேன். ஓ அதுக்கென்ன தாராளமா ராத்திரி விழுப்புரம் ஜங்ஷன்ல இறக்கிவிடறேன், தனியா ஆடிமுடிச்சுட்டு அடுத்த ரயிலை பிடிச்சு ஊர் வந்து சேருங்கோ!னு தங்கமணி பதில் குடுத்தா. ஒரு வழியா கல்லிடை வந்து சேர்ந்தோம். கொஞ்ச நேரத்துக்குள்ள அத்வைதா அளி,ரேளி, நடை, தாள்வாரம், பட்டாசாலைனு எல்லா பக்கமும் ஓட்டம்(தவழ) பிடிக்க ஆரம்பிச்சா.
 

தக்குடு செளக்கியமா இருக்கியா? ஷேக்கு செளக்கியமா? ஒட்டகம் செளக்கியமா?னு தெருல இருக்கும் மாமா மாமிகள் ஜாரிக்க ஆரம்பிச்சா. இந்த மாமா/மாமிகள் கிட்ட பதில் சொல்லும்போது ரொம்ப ஜாக்கிரதையா இருக்கணும். இன்வெஸ்டிகேஷன் சைன்ஸ்ல எல்லாரும் பி ஹெச் டி பண்ணினவா. நாம என்னிக்கு ஊருக்கு வந்தோம்னு நமக்கே ஞாபகம் இருக்காது ஆனா ரெக்கவரி software அப்டேடட் வெர்ஷன் மாதிரி இவாளோட மனசுல எல்லாம் தேதி வாரியா ஞாபகம் இருக்கும்.  அதே மாதிரி உத்தியோகம் பத்தி யார்கிட்டையும் மூச்சு விட கூடாது. எப்பிடி இருக்கைனு யாராவது கேட்டா சமத்துகுடம் மாதிரி ஓ! எனக்கென்ன ராஜாவா இருக்கேன்னு  உளறி வைக்காம எல்லா கேள்விக்கும் 'என்னத்த' கண்ணையா மாதிரியே பதில் சொன்னா நாம பொழச்சோம்.  

தக்குடு என்ன லீவா? உத்தியோகம் எல்லாம் எப்பிடி போயிண்டு இருக்கு?னு ஒரு மாமா மெதுவா ஆரம்பிச்சார்.
 

என்ன்னத்த லீவு மாமா! ஒன்னும் விஷேஷமா சொல்லும்படியா இல்லை, பகவான் புண்ணியத்துல வண்டி ஓடிண்டு இருக்கு!
 

உன்னோட உத்தியோகம் என்னனு கொஞ்சம் சொல்லேன் கேப்போம்!
 

பிரமாதமா ஒன்னும் இல்லை, அங்க இருக்கும் எண்ணை கிணத்துல நித்தியம் எத்தனை பீப்பாய் எண்ணெய் எறைச்சானு கணக்கு எழுதர்து தான் நம்ப ஜோலி
 

ஓஹோ! அப்ப நீ லீவுல வந்துட்டைனா பீப்பாய் கணக்க யாரு எழுதுவா? பதில் ஆள் இருக்குமா இல்லைனா ஷேக்குக்கு ஒரு மாச சம்பாத்யம் நஷ்டம் ஆகாதோ?
 

(மனுஷாளுக்கு லோகத்துல என்னெல்லாம் கவலைடாப்பா!னு மனசுக்குள்ள நினைச்சுண்டே) பதில் ஆள் எழுதுவா மாமா
 

அதெல்லாம் இருக்கட்டும் பீப்பாய் பீப்பாய்னு சொல்லறாளே! உத்தேசமா ஒரு பீப்பாய்னா எவ்ளோ கொள்ளும்?
 

(அட ராமா)உத்தேசமானா ம் ம்... உங்காத்து கக்கூஸ் வாளியால மூனு வாளி பிடிக்கும் மாமா! ஒரு நிமிஷம் இருங்கோ என் பொண்ணு அழற மாதிரி இருக்கு வந்துடறேன்னு சொல்லி தப்பிச்சு வந்தேன். 

ரெண்டு நாள் கழிச்சு சாஸ்தா ப்ரீதி ஆரம்பம் ஆச்சு. போன வருஷமே அங்க கூட்டிண்டு போகலைனு தங்கமணிக்கு ரொம்ப குறை. அதனால இந்த தடவை முந்தின நாள் சாயங்காலமே கூட்டம் இல்லாத சமயமா ஒரு தடவை கூட்டிண்டு போனேன். உள்ள சன்னதில மாமிகள் எல்லாம் மாக்கோலம் போட்டுண்டு இருந்தா. மாமாக்கள் எல்லாம் கறிகாய் நறுக்கிண்டு இருந்தா. எல்லாரையும் பாத்துண்டே உள்ள போயிட்டு நாங்க வெளில வரும் போது 'ஸ்கை ப்ளூ' கலர்ல அம்பர்லா சுடிதார் போட ஒரு பொண் சிரிச்ச முகமா வந்து ‘உங்களை எங்கையோ பாத்த ஞாபகமா இருக்கே!னு பேச ஆரம்பிச்சா. எர்ணாகுளம் சாஸ்தா ப்ரீதிக்கு நீங்க வந்தேளோ?’னு அடுத்தடுத்து கேட்டு யோசிச்சுண்டு இருந்தா. ‘இதுக்கு மேல இந்த படத்தை ஓடவிடக்கூடாது’னு முடிவு பண்ணின தங்கமணி ‘இந்தாங்கோ உங்க பொண்ணு உங்க கிட்ட வரணுமாம்’னு சொல்லிண்டே என்னோட கைல அத்வைதாவை குடுத்துட்டா. ‘ஓஓ உங்க பொண்ணா அண்ணா! ஸோ க்யூட்!’னு சொல்லிண்டே அந்த ஸ்கை ப்ளூ கலர் சுடிதார் நகர்ந்து போயிடுத்து. இந்த தங்கமணிகளே இப்படிதான் ஆத்துக்காரர் 2 நிமிஷம் சந்தோஷமா இருக்கர மாதிரி லைட்டா சந்தேகம் வந்தாகூட உடனே ஒரு லெக்ஷ்மி வெடியை அதுல கொளுத்தி போடர்தே வழக்கமா போச்சு, இத்தனைக்கும் ‘மக்களின் முதல்வர் அவர்களின் வழிகாட்டுதலின் படி’னு நாம பயபக்தியா இருந்தாலும் நம்ப மேல நம்பிக்கையே வரமாட்டேங்கர்து. ம்ம்ம்ம்! என்னத்த சொல்ல நாம வாங்கின வரம் அப்பிடி. அந்த பொண்ணு வாய் நிறைய அண்ணானு என்னை கூப்பிட்டதுல தங்கமணிக்கு பரமசந்தோஷம்.
 
 

கோலம் போட்டுண்டு இருந்த ஒரு மாமி என்னை பாத்துட்டு ‘ஏ தக்குடு! எப்பிடிடா இருக்கை! இதுதான் உன்னோட ஆத்துக்காரியா? பொண்ணுக்கு ஆயுஷ்ய ஹோமம் ஆயாச்சா? எத்தனை நாள் லீவு? நீ துபாய்ல இருக்கையா? அமெரிக்கால இருக்கையா?’னு வரிசையா அர்னாப் கோஸ்வாமியோட ஒன்னு விட்ட மாமி மாதிரி கேள்வியா கேட்டு தள்ளினா. நானும் ஜாக்கிரதையா ரெண்டு வரில பதில் சொல்லிட்டு நழுவ பார்த்தேன். ‘ஏதுடா தக்குடு! வாயை திறந்தா மூடாம பேசுவையே இப்ப என்னவோ மணிரத்னம் படத்துல வரவா வசனம் பேசர மாதிரி வார்த்தை வார்த்தையே பேசரையே’னு மாமி மறுபடியும் ஆரம்பிச்சா. மாமி ! ‘கல்யாணம் ஆகர்துக்கு முன்னாடி எல்லார்மே நரேந்திர மோடி தான், வாய்க்கு வந்தபடி என்ன வேணும்னாலும் பேசலாம் ஆனா கல்யாணம் ஆச்சுனா ஒழுங்கா மரியாதையா மன்மோஹன் சிங்கா மாறிகணும் இல்லைனா சேதாரத்துக்கு கம்பேனி நிர்வாகம் பொறுப்பாகாது’னு நான் சொல்லவும் ‘கரெக்டா சொன்னைடா’னு அவாத்து மாமா வந்து சப்போர்ட் பண்ணினார்.  
 
 

அடுத்த ரெண்டு நாள்ல ஆவணி அவிட்டம் வந்தது. தெருல வச்சு ஆவணி அவிட்டம்னா அது ஒரு தனி குஷி தான். ‘சங்கு மார்க்’ லுங்கிகளுக்கு பேமண்ட் இல்லாத பிராண்ட் அம்பாசிடரா இருந்த மாமாக்கள் எல்லாம் திடீர்னு பஞ்சகச்சத்தோட நிக்கர்தா பாத்தா பயங்கர காமெடியா இருக்கும். அதுலையும் ஒரு மாமா சின்னகவுண்டர் படத்துல வர வசனம் மாதிரி லுங்கியை இடுப்புல கட்டியிருந்தா லெவல்ல இருக்கார்னு அர்த்தம், தொடை தெரியர அளவுக்கு மடிச்சு கட்டியிருந்தார்னா தீர்த்தம்(சரக்கு) உள்ள போயிருக்குனு அர்த்தம். இடுப்புல இருக்கும் லுங்கியை அவுத்து நெஞ்சுக்கு மேல ஓமணகுட்டி மாதிரி கட்டியிருந்தார்னா முல்லைபெரியாறுல 142 அடியை ‘தண்ணி’ தாண்டியாச்சு! யாரும் பேச்சு குடுக்காம அவாத்து மாமியை கூட்டிண்டு வரணும்னு அர்த்தம். அந்த மாமா ஆவணி அவிட்டம் அன்னிக்கு மட்டும் விபூதி’பட்டை’ போட்டுண்டு நிக்கர்து கண்கொள்ளா காட்சி. 

எத்தனை வருஷம் ஆவணியாவிட்டம் பண்ணினாலும் சில மாமாக்களுக்கு பஞ்ச கச்சம் கட்டும் போது உலகத்துல இருக்கர எல்லா சந்தேகமும் வரும். வலது பக்கம் முதல்லையா இல்லைனா இடது பக்கமானு சந்தேகத்துல கட்டி கடைசில அது எதோ பான்சி ட்ரெஸ் காம்படீசன் மாதிரி ஆயிடும். இந்த வருஷம் அப்பிடி தான் ஆச்சு. மத்தியானம் மஹாசங்கல்பம் முடிஞ்சு குளிச்சுட்டு ரெண்டு மாமா பக்கத்துல பக்கத்துல நின்னுண்டு வேஷ்டி மாத்திக்க ஆரம்பிச்சா. ரெண்டு பேரோட வேஷ்டியும் ஒரே மாதிரி இருக்கும் ஒன்பதுக்கு அஞ்சு வேஷ்டி. பிரிச்சு எடுக்கும் போது எப்பிடியோ கொஞ்சம் குழப்பம் ஆகியிருக்கு. ஒரு மாமாவோட பஞ்சகச்சம் முட்டுக்கு மேல கேப்ஃரே டான்சர் மாதிரி வருது, இன்னொருத்தருக்கு சர்ச்ல கல்யாணம் பண்ணின கல்யாணப்பொண்ணோட பின்பக்க வஸ்த்ரம் மாதிரி இவரோட அங்கவஸ்த்ரம் நீளமா இருக்கு. அப்புறம் பாத்தா ஒருத்தர் கைல ரெண்டு 9 முழமும் இன்னொருத்தர் கைல 2 அஞ்சு முழமும் இருக்கு.

Wednesday, October 1, 2014

தோஹா டு தோஹா Part 2


Part 1 படிக்க இங்கே கிளிக் பண்ணுங்கோ!
 
ப்ளைட்லேந்து இறங்கி வந்து இமிக்ரேஷன்ல ஒரு ரேஷன் வரிசை நிக்கும் பாருங்கோ அதை மாதிரி ஒரு கொடுமை எதுவும் கிடையாது. என்னோட இமிக்ரேஷன் ஃபாரத்தை ப்ளைட்ல வச்சே நான் எழுதி முடிச்சு ரெடியா வச்சுருப்பேன் ஆனா நமக்கு முன்னாடி இருக்கும் சில அசமஞ்சங்கள் அப்ப தான் நிதானமா எழுதிண்டே போவா (இதுல சில சமத்துகள் என்னோட ஃபாரத்தை பாத்து காப்பி வேற அடிப்பா). இந்த  சமத்து போய் நின்ன உடனே அங்க கவுண்டர்ல இருக்கும் கட்டம் போட்ட சட்டை ‘கையெழுத்து ஏன் சரிஞ்சு இருக்கு?’னு கேள்வி கேட்க ஆரம்பிச்சு அதுக்கு இவர் அசடு வழிஞ்சு நமக்கு பொறுமையே போயிடும். போன தடவை மெட்ராஸ்லேந்து கிளம்பும் போது ஒரு இமிக்ரேஷன் ஆபிசர் உங்களுக்கு பக்கத்து ஏர்போர்ட் திருவனந்தபுரம் தானே எதுக்கு மெட்ராஸ்லேந்து போறீங்க?னு பெரிய புத்திசாலி மாதிரி கேட்டார். திருவனந்தபுரத்து திரிபுரசுந்தரிகளை சைட் அடிச்சா என்னோட தங்கமணி பின்னி பிரியை கழட்டிடுவானா காரணம் சொல்லமுடியும், ‘உங்க மாமியார் வீடு மெட்ராஸ்ல இருந்தா அங்க வரமாட்டீங்களா சார்? ஏது நாங்க மெட்ராஸ் ஏர்போர்ட்டுக்கு வரகூடாதா’?னு நானும் சிரிச்சுண்டே பதில் சொன்னேன்.
 
டிபார்ட்மெண்ட் ஆட்கள் கிட்ட நாம கோபமாவும் பேசமுடியாது. நாமளே முன்னடி முகூர்த்தம் மூனு நாழிகை கணக்குல ஏர்போர்ட்டுக்கு ரெண்டு மணிக்கூருக்கு முன்னாடி வந்து நின்னுருப்போம், ஆபீசர் பாட்டுக்கு ‘இந்த பையனோட முழியே சரியில்லை, கொஞ்சம் விவரமா ஜாரிக்கனும்’னு நிப்பாட்டி வச்சுட்டார்னா டிக்கெட் பைசா கோவிந்தா ஆயிடும். நாம எந்த இடத்துல விட்டோம்? ம்ம்ம்.. நியாபகம் வந்துடுத்து! இமிக்ரேசன் முடிச்சு கஸ்டம்ஸ் ஸ்கேனின் மிஷின்ல சின்ன பெட்டியை அனுப்பினா அங்க ஒரு கஸ்டம்ஸ் மாமா மெதுவா பக்கத்துல கூப்பிட்டு ‘மஸ்கெட்லேந்து வந்த ப்ளைட்லதானே வந்தீங்க? உள்ள பிஸ்கட் எதாவது இருக்கா?’னு ஆரம்பிச்சார். ‘தங்கமணியோட 4 கிராம் மோதிரம் மட்டும் தான் இருக்கு வேணும்னா வெளில எடுத்துகாட்டரேன்’னு சொல்லவும் ‘போயிட்டு வாங்கோ!’னு அனுப்பிட்டார். கஸ்டம்ஸோட ஒரே கஷ்டமா போச்சு! ரெண்டு நாள் மாமனாராத்துல ரெஸ்ட் எடுத்துட்டு வழக்கம் போல பெண்களூர் கிளம்பினேன். ஜூலை - ஆகஸ்ட் அங்க மழைகாலம இருக்கர்தால தனியாதான் கிளம்பினேன். பெண்களூர்ல சிலபல நண்பர்களை பாத்துட்டு அடுத்த நாள் சிருங்கேரிக்கு ஒரு சொந்தக்கார அக்கா சகிதமா கிளம்பினேன். நாங்க கிளம்பர வரைக்கும் முகத்தை பாவமா வச்சுண்டு இருந்த அக்காவோட ஆத்துக்காரர் நாங்க கிளம்பினவுடனே சந்தோஷத்டோட உச்சத்துக்கே போயிட்டார். அவரும் அவரோட பையனும் ‘ஹைய்யா ஜாலி!னு கத்திண்டு ஒரே கும்மாளம். ‘ரெண்டு நாளுக்கு கூட ரெண்டு நாள் ஆனாலும் பரவாயில்லை தக்குடு! அக்காவை பாதில மட்டும் கூட்டிண்டு பெண்களூர் வந்துடாதே!’னு கையை பிடிச்சுண்டு கெஞ்சினார்.

 

மழைக்கால சிருங்கேரி
 
‘நான் இல்லாம அவரும் குழந்தையும் தவிச்சு போயிடுவா தெரியுமோ!’னு அக்கா பொலம்பிண்டு வந்தா. எதிர்பாத்த மாதிரியே போகும் வழி முழுக்க மழை. சிருங்கேரி மலையும் மலை சார்த்த இடம்னு நினைசுண்டு வந்தவா எல்லாருக்கும் மழையும் மழை சார்ந்த இடமா காட்சி கொடுத்தது. காத்தால தோரண கணபதில ஆரம்பிச்சு ராத்திரி சந்தரமெளீஸ்வர பூஜை வரைக்கும் எல்லாத்தையும் நிதானமா எந்தவித அவசரமும் இல்லாம தரிசனம் பண்ணினோம். காத்தால பூஜை பண்ணர்துக்கு கூப்பிடும் போது கல்லிடைகுறிச்சினு சேர்த்து சொல்லி நம்மை கூப்பிட்டதுதான் தாமசம், ஒரு மாமா எங்கேந்தோ ஓடியே வந்து ‘நீங்க கல்லிடைல எந்த தெரு? பெருமாள் கோவிலுக்கு முன்னாடியா பின்னாடியா? ராமசந்திரபுரம் தெருல காமேஷ்வர மாமாவை தெரியுமா? அவர் என்னோட ஆத்துக்காரியோட ஒன்னு விட்ட மாமா பிள்ளையோட ஷட்டகர்’னு வரிசையா பேசிண்டு இருந்தார்.
 
 

உடுப்பி தெப்பக்குளம்
 
ஒரு நாள் தங்கி இருந்துட்டு நேரா உடுப்பி கிருஷ்ணரை போய் தரிசனம் பண்ணிட்டு ரெண்டு மூனு டப்பா ஊதுவத்தி வாங்கினேன். நம்ப அக்கா கார்ல மட்டும் வந்து இருந்தா சுமாரா  நாலு சாக்குபை நிறைய ஷாப்பிங் பண்ணுவா, ‘பஸ்ல போகனும்கா! அடக்கி வாசிங்கோ!’னு நான் பொலம்பிண்டே இருந்ததால அரை சாக்குபையோட நிப்பாட்டிண்டா.  நேரா சாப்பாடு போடர இடத்துக்கு போயாச்சு. கர்னாடகால எந்த கோவில்ல இறங்கினாலும் மத்தியானம் & ராத்திரி சாப்பாடு கிடைக்கும். சாப்பாடும் சுடசுட இருக்கும்.  ஓசி சாப்பாட்டை திவ்யமா சாப்பிட்டு முடிச்சுட்டு மங்களூர் பக்கத்துல இருக்கும் கட்டில் துர்கா கோவிலுக்கு கிளம்பினோம். ‘கடீ’ அப்பிடின்னா நடுவில்னு அர்த்தமாம். ரெண்டு மலைகளுக்கு நடுல இருக்கர்தால இந்த பேர்னு கேள்விப்பட்டோம். உடுப்பிலேந்து மேப்ல பார்க்கும் போது பக்கத்துல இருக்கரமாதிரிதான் இருக்கு ஆனா பிரயாணம் பண்ண ஆரம்பிச்சா போயிண்டே இருக்கு. திருனெல்வேலி பஸ்ஸ்டாண்ட்ல இறங்கி பாபனாசம் பஸ்ஸை பிடிச்சா கல்லிடை வரமாதிரி சுலபமா ஒரு இடத்துக்கு போக முடியர்தா! என்னமோ அந்த ஊர்லையே பொறந்து வளர்ந்த மாதிரி ரெண்டு இடத்துல இறங்கி வண்டி வேற மாறி ஏறவேண்டி இருந்தது. தெரியாத ஊர் தெரிஞ்ச ஊர்னு வித்தியாசம் இல்லாம எந்த ஊர் பஸ்ல ஏறினாலும் ஏறி பத்து நிமிஷத்துல லோக வியவஹாரங்களை மறந்து அந்தர்முக தியானத்துக்கு போயிடுவேன் (தூங்க ஆரம்பிக்கர்தை கொஞ்சம் பாலிஷா சொல்லியிருக்கேன் கண்டுக்காதீங்கோ!) தங்கமணி பக்கத்துல இருந்தா தட்டி எழுப்பி தரதரனு இழுத்துண்டு இறங்கிடுவா, தனியா போனா இறங்க வேண்டிய இடத்துல இறங்கர்து கொஞ்சம் சந்தேகம் தான்.



கட்டில் கோவில் வாசல் 
 
கூட வந்த அக்கா பாவம் பேந்த பேந்த முழிச்சுண்டு இருந்தா. நான் அப்பப்போ கண்ணை லைட்டா முழிச்சு பாத்து அவர் இருக்காளா இறங்கிட்டாளானு செக் பண்ணிண்டு தூங்கிண்டு இருந்தேன். திடீர்னு பாத்தா ஆளை காணும், ஆத்தாடி நான் தான் ஆவுட்டா?னு எனக்கு நானே கேட்டுண்டு தேடிபாத்தா நம்ப அக்கா கீழ இறங்கியாச்சு! நானும் அடிச்சுபொறண்டு பையை தூக்கிண்டு இறங்கி ஓடினேன். நந்தினி நதியோட கரைல துர்கா தேவி கோவில் இருக்கு. நல்ல மழைகாலமா இருந்ததால நதில ஜலபிரவாகம். ஜலத்துக்கு நடுல கோவில்ல உக்காச்சுண்டு இருக்கர்தால ஜலதுர்க்கானும் பேர் இருக்கு. மத்தியான நேரமா இருந்ததால ஜாஸ்தி கூட்டம் இல்லை. கேரள பாணி கூரை அமைப்போட கோவில் இருந்தது. கோவிலுக்கு உள்ளையே நதியோட படித்துறை இருக்கு. அம்பாளை தரிசனம் பண்ணிட்டு சுத்தி வந்து சன்னதில உக்காசுண்டு லலிதா ஸகஸ்ரனாமம் பாராயணம் பண்ணினேன். இந்த கோவில் அம்பாளுக்கு இளநீர் காய்களை காணிக்கயா எல்லாரும் குடுக்கரா. கோவிலோட மடைபள்ளிலேந்து சூடான பூந்தியை ஏலக்கா கிராம்பு நெய் சகிதமா பாகுல போட்டு லட்டு பிடிக்கர வாசனை மூக்கை துளைச்சது. ரெண்டு பிரசாத லட்டுவை வாங்கி நொசிக்கிட்டு நேரா மங்களூர் வந்து பெண்களூர் கிளம்பினோம். ஊர்ல போய் இறங்கினா அங்க நம்ம அக்காவோட ஆத்துக்காரர்..........
                                                              (தொடரும்)