சங்கீத கோஷ்டிக்கும் ஆபிஸ் கோஷ்டிக்கும் பல ஒற்றுமைகள் உண்டு. அதுவும் இந்த கான்பரன்ஸ் கால் நடக்கும் போது பல காமெடியும் சேர்ந்து நடக்கும். அமேரிக்கா/லண்டன் துரைமார்கள் கூட நம்ப ப்ராஜக்ட் மேனேஜர் பேசும்போதுதான் இவ்ளோ கூத்தும். PM நடுல கொஞ்சம் மூச்சு விட்டு, அக்கம் குடிக்கும் போதெல்லாம் யா! யா! யெஸ் நு சொல்லி சமாளிக்கர்துக்கு ஒரு டீம் லீட் எப்போதும் ரெடியா இருப்பார். PM- க்கும் அந்த டீம் லீடுக்கும் ஒரு நல்ல புரிந்துணர்வு இருக்கும்.
கச்சேரிகள்ல வயலின் வித்வான் ரொம்ப முக்கியமானவர். பாட்டு வித்வான் பாடும் ராகம் முழுவதையும் வாங்கி வாசிக்கும் திறமை உள்ளவர். வயலின் வித்வான் வாசிக்கும் இந்த நேரத்தில் தான் பாட்டு வித்வான் கூஜாலேந்து ஏலம் பச்சக்கர்பூரம் போட்ட பாலை ரெண்டு டம்ப்ளர் உள்ள தள்ளிட்டு தெம்பாயிப்பார். ராகத்துக்கு அதிகம் முக்கியத்துவம் தரும் வித்வான்கள் வயலினுக்கு அதிக நேரம் தங்கள் கச்சேரியில் நேரம் ஒதுக்குவார்கள். பஞ்சரத்ன க்ருதியில் கூட 'ஜகதானந்த காரகா'வில் முதலில் வயலின் வித்வான் வர்ணம் வாசிக்க பின்பு அதை சந்தானம் பாடி அதன் பின்பு பாடல் வரியை பாடுவார். ராகத்தோட கட்டில் நல்ல புலமை இருக்கும் வித்வான் மட்டுமே வர்ணம் பாடமுடியும். சந்தானத்துக்கு இதெல்லாம் இடது கையால் டீ குடிக்கர மாதிரி.
சில சமயங்கள்ல நம்ப PM, பாட்டி வடை சுட்ட கதை லெவலுக்கு இறங்கி ஒரு விஷயத்தை சொல்லி புரியவைக்க முயற்சி பண்ணினாலும், அந்த பக்கம் இருக்கும் துரைமார்கள் 'சந்தைக்கு போனும்! ஆத்தா திட்டும்! காசு குடு!'னு சொன்னதையே சொல்லிண்டு இருப்பா. அந்த மாதிரி சமயத்துல அதிரடியாக அதே சமயம் அன்பாகவும் சொல்லி துரையை ஒத்துக்க வைக்கர்துக்கு டீம்ல ஒரு ஆளு இருப்பார். அந்த மாதிரி ஆள் கூடயும் PM-க்கு ஒரு நல்ல புரிந்துணர்வு இருக்கும்.
கச்சேரியில் ம்ருதங்க வித்வான் முக்கியமான ஒரு அங்கம். கச்சேரி கேக்கரவாளை தூங்காம பாத்துக்கர பொறுப்பு இவரை சேர்ந்தது. தாளத்துக்கு அதிகம் முக்கியத்துவம் தரும் பாட்டு வித்வானும் ம்ருதங்க வித்வானும் கண்களால் பேசிக் கொள்வதை மேடையில் நாம் பார்க்கலாம். 'சிந்துபைரவி'-ல டில்லி கணேஷோட கண் ஜாடைகள் எல்லாம் நீங்க பாத்துருக்கேளா?. சில பேர் ம்ருதங்கம் நல்ல அடிக்கரார்!னு சொல்லுவா, அது ரொம்ப தப்பான வார்த்தை ப்ரயோகம். சாப்ட வரேளா!ங்கர்துக்கும் கொட்டிக்க வரேளா!ங்கர்துக்கும் எவ்ளோ வித்யாசம் உண்டோ அதை மாதிரி..:) ம்ருதங்கத்துல ராகம் வாசிக்க முடியாது, தாளம் தான் வாசிக்க முடியும். வயலின்ல தான் ராகம் வாசிக்க முடியும்.
சில பேர் டீம்ல இருக்கர்தே தெரியாது. என்னமோ ஆள் எண்ணிக்கைக்கு அவனும் இருக்கான்னு எல்லாரும் நினைச்சுண்டு இருப்பா. முக்கியமான ஒரு கால் அன்னிக்கு அவர் உடம்பு சரியில்லாம லீவு போடும் போதுதான் அவரோட அருமை தெரியும். அவர் எவ்ளோ முக்கியமானவர்ங்கர்து அப்போதான் எல்லாருக்கும் தெரிய வரும்.

கச்சேரில பாட்டு வித்வான் பின்னாடி பரப்பிரம்மம் மாதிரி முகத்துல எந்த ரியாக்ஷனும் காட்டாம ஒக்காசுண்டு ஒருத்தர் தம்புரா போட்டுண்டு இருப்பா. சில கச்சேரிகள்ல தம்புரா போடும் ஆள் டாப் டக்கரா இருப்பா என்பது உப தகவல்...:). அதுக்கு பேர் ஸ்ருதி( நம்ப பாஸ்டன் நாட்டாமைக்கு அவர் ஸ்கூல் படிக்கர சமயத்துல சைட் அடிச்ச மூனாவது பெஞ்சுல நாலாவது பொண்ணோட பேர் ஞாபகத்துக்கு வந்தா அதுக்கு தக்குடு பொறுப்பல்ல..:P). எவ்ளோ பெரிய சங்கீத கலா நிதியா இருந்தாலும் ஸ்ருதிப்பெட்டி இல்லாம பாடமாட்டா. கிழக்கு கடற்கரை சாலை மாதிரி நன்னா விசாலமா இருக்கர ரோட்ல நடுல கோடு இல்லைனா எப்படி வண்டி ஓட்ட முடியாதோ அது போல ஸ்ருதி இல்லாம பாட முடியாது. இப்பெல்லாம் எல்லாருமே ஸ்ருதி பெட்டிதான் வச்சுக்கரா. சில பேர் மட்டும்தான் 'பப்'கையெல்லாம் வச்ச ஒரு குத்து விளக்கை தம்புராவுக்கு உக்காத்தரா.
எல்லாருமா கஷ்டப்பட்டு ஒரு ப்ராஜக்டை பண்ணி முடிச்சாலும். ‘நாங்க உங்க வேலையை செஞ்சுமுடிச்சுட்டோம்!’னு துரை கிட்ட நம்ப PM தான் சொல்லுவார். வாட் இஸ் த ஸ்டேடஸ்?னு நித்யம் பத்து தடவை கேட்டதை தவிர அவர் அந்த ப்ராஜக்ட்ல எந்த ஆணியுமே புடுங்கலைங்கர்து எல்லாருக்குமே தெரியும் தான். மனசாட்சியே இல்லாம இந்தாளு நாங்க செஞ்சோம்!னு சொல்றார் பாருடா!னு புதுசா வேலைக்கு சேர்ந்த அப்ரன்டிஸ்கள் புலம்புவதையும் நாம கேட்டுருக்கோம். ம்ம்ம்ம்ம்.....என்ன பண்ண முடியும்?? நமக்கு கோடிங் தட்டர்து மட்டும்தான் வேலை, அவருக்கு எவ்ளோ போப்பு(தக்குடு பாஷையில் பொறுப்பு)இருக்கு?னு சொல்லி சீனியர்கள் விளக்குவார்கள்.
கச்சேரியிலும் எல்லாருமே உயிரை குடுத்து உழைச்சாலும் பாடும் அந்த நபரைதான் சங்கீத வித்வான்!னு எல்லாரும் சொல்லுவா. மத்தவா எல்லாருக்கும் ம்ருதங்க வித்வான்! கடம் வித்வான்! வயலின் வித்வான்!னு தான் பேர். எதனாலன்னா பாட்டு வித்வானுக்கு எல்லாத்துலையுமே ஒரு புலமை இருக்கும். எப்போ தனியாவர்தனத்துக்கு நேரம் குடுக்கனும், எந்த வரிசைல பாட்டு பாடி கச்சேரியை கொண்டு போகனும், சபைல இருக்கரவாளோட ரசனை & புலமை என்ன போன்ற எல்லா விஷயமும் தெரிவதால் தான் அவர் சங்கீத வித்வான்.