
நான் சொன்னது இவரைதான்...:)
சின்ன வயசுலேந்தே ஏரோப்ளேன்ல போகனும்னு ரொம்ப ஆசை உண்டு, ஆனா திருனெல்வேலி பஸ் ஸ்டாண்டுக்கும் கல்லிடை மெட்ரோவுக்கும் நடுல ஏரோப்ளேன் சர்வீஸ் கிடையாதுங்கர்துனால போகலை. தோஹாவுக்கு வரும் போதுதான் முதல்முதலா ‘மூக்கும் முழியுமா’ இருக்கும் ஏரோப்ளேல உக்காசுண்டு வந்தேன். தூரதேசத்துக்கு போறேன்னு எங்க அம்மா அப்பா எந்த அளவுக்கு கவலை பட்டாளோ அதே அளவுக்கு எங்க மன்னியும் கவலைபட்டா. ‘மத்தவா மாதிரி பிரமாதமான சாமர்த்தியமும் நம்ப மச்சினருக்கு கிடையாதே!!’னு அவாளுக்கு கவலை(இருக்காதா பின்ன!!). எங்க அண்ணா நல்ல நாள்லையே என்னை பயம் காட்டுவான். போதாகொறைக்கு அவன் ஆபிஸ்லேந்து வேற லண்டன் வரைக்கும் போய்ட்டு வந்துட்டான், இப்ப கேக்கவே வேண்டாம்.அந்த லண்டன் ஏர்போர்ட் பேர் கூட எனக்கு சரியா சொல்ல வராம கொஞ்சம் மாத்தி சொல்லி, எங்க மன்னி "கருமம்! கருமம்!"னு தலைல அடுச்சுண்டா. ‘ஹீத்ரூ ஏர்போர்ட்’னு சொல்லர்துக்கு பதிலா நான் ‘seethrough ஏர்போர்ட்’னு சொல்லிட்டேன்..:)
எதோ தங்கமலைக்கு போகும் விக்ரமபாண்டியனுக்கு ராஜகுரு வழிமுறை சொல்லி குடுக்கர மாதிரி எங்க மன்னி விளாவரியா சொல்லிகுடுத்தா. நடுல எங்க அண்ணா, "மாப்ப்ளே! எல்லாம் தாண்டிடலாம், இந்த இமிக்ரேஷந்தான் ரொம்ப கஷ்டம்! நிறையா கேள்வி எல்லாம் கேப்பா! பன் கொண்டை போட்ட எதாவது ஒரு காமாட்சி மேடம் வந்தா நீ பொழச்சை, ஒருவேளை கட்டம் போட்ட சட்டை & கண்ணாடி போட்ட சுப்பிரமணி ஆபிசரா இருந்தா நீ தொலஞ்சை!னு நல்ல பயம் காட்டினான். நான் போகவேண்டிய ப்ளைட் அர்த்தராத்ரி 1.30 பேயோட்டர சமயம்(நம்ப இட்லி மாமி போஸ்ட் போடும் நேரம்! என்றும் சொல்லலாம்).ஏர்போர்ட்டுக்கும் போயாச்சு, “வெற்றி நமதே விக்ரமபாண்டியா!”னு எங்க மன்னி வாழ்த்தி அனுப்பினா, நான் எங்கையாவது மாட்டிண்டு 'பக்க்ர! பக்க்ர!'னு முழிச்சா பாத்து ரசிக்கலாம்னு எங்க அண்ணா ஆவலா இருந்தான்.
என்னோட பாக்கேஜ் பொட்டில இருந்த புளிகாய்ச்சல்/பருப்புபொடி/சாம்பார்பொடி/ரசப்பொடி/கோலப்பொடி/புண்ணாக்குபொடி எல்லாம் நல்ல படியா தப்பிச்சாலும் எதிர்பாத்த மாதிரியே பிரச்சனை ஆரம்பம் ஆனது. என்னோட விசா நம்பரை கம்யூட்டர்ல அடிச்ச அந்த ஏரோப்ளேன் கம்பெனி பிகரோட முகம் அமைதியான ஜலபாத்ரத்துல விழும் முதல் மழைதுளியோட காட்சியை குடுத்து நெற்றியும் புருவமும் சுருக்கியது. ‘கல்யாணி!’னு பேர் போட்ட பேட்ச் குத்தின அந்த மாது இரண்டு மூனு தடவையா என்னோட விசா நம்பரை டைப்பிட்டு மண்டையை ஆட்டிண்டே அங்க இருந்த ஒரு ஆபிசரை கூப்பிட்டு எதோ சொல்லி என்னோட பாஸ்போர்ட்டை குடுத்தது. அதை எடுத்துண்டு காணாம போன ஆபிசர் சிலம்போட போன கோவலன் மாதிரி திருப்பி வரவே இல்லை.

சின்ன கவுண்டர்..:)
ஒரு மணி நேரம் ஆயாச்சு, போன மச்சான் போயே போனான்டி!னு ஆனதால நம்ப கல்யாணிகிட்ட மெதுவா 'எச்சுஸ்மீ'னு ஆரம்பிச்சு விஷயத்தை கேட்டேன். “உங்க விசா நம்பர் செல்லாது!னு வரர்தே சார்!”னு பதில் சொன்னா. "பெயரோ கல்யாணி! மங்களகரமான பெயர்! ஆனால் அமங்களமாய் பேசுகிறாயே கண்ணே!னு சொல்லனும் போல இருந்தது. இருந்த ஒரே ‘அல்லக்கை’ அனலிஸ்ட் வேலையையும் பெங்களூர்ல ராஜினாமா பண்ணிட்டு வந்தாச்சு, விசா செல்லாதுன்னு சொன்னா அப்புறம் கல்லிடைல இருக்கும் ராஜியோட மாமா பக்கத்துல திண்ணைலதான் உக்காச்சுக்கனும்னு ஒரே டென்ஷன். "பிரச்சனை மட்டும் சரிஆகட்டும் முருகா! திருச்செந்தூர்ல எங்க அண்ணாவுக்கு மொட்டை அடிக்கறேன்!"னு வேண்டுதல் எல்லாம் பண்ணிண்டு இருந்தேன்.

குலவிளக்கு with குத்துவிளக்கு...:)
அந்த சமயம் என்னோட பாஸ்போர்ட்டை கைல வெச்சுண்டு, திருக்கார்த்திகைக்கு முதல் விளக்கை வாசல்ல வைக்கர்த்துக்கு வர மாதிரி புல் மேக்கப்போட புடவை கட்டின ஒரு புண்ணியவதி பூமி அதிர வந்து “கங்கிராடுலேஷன்ஸ்! உங்க விசா நம்பர் செல்லும்! கல்யாணி அரபி டிரான்ஸ்லேட் பண்ணும் போது ஒரு நம்பரை விட்டுட்டாங்க!”னு இங்கிலிபீஸ்ல சொன்னா. சிரிச்சுண்டே அந்த புண்ணியவதி வந்து சொன்ன விதத்தை தள்ளி இருந்து பாக்கறவா "கங்கிராடுலேஷன்ஸ்! நீங்க அப்பா ஆயிட்டீங்க" மாதிரி புரிஞ்சுக்க வாய்ப்புகள் அதிகம்.
குலதெய்வத்தை வேண்டிண்டே இமிக்ரேஷன் பகுதியை நோக்கி நடையை கட்டினேன். எங்க ஊர் அண்ணாச்சி கடை மளிகை சாமான் லிஸ்ட் மாதிரி முதல்ல ஒன்னை பூர்த்தி பண்ணி தரசொன்னா . அதுக்கு அடுத்து என்னோட முறைக்கு காத்துண்டு இருந்தேன். இதுக்கு முன்னாடியே ஒரு வாரமா இமிக்ரேஷன் ஆளை சமாளிக்க ஸ்பெஷல் கமாண்டோ டெரியினிங் எல்லாம் எடுத்தேன். ‘அபியும் நானும்’ பிரகாஷ்ராஜ் மாதிரி “ஜப்பான்ல இருக்கர்து டோக்கியோ, போன்ல சிறந்தது நோக்கியா"னு நிறையா ஹோம்வொர்க் பண்ணினேன். என்னோட பாஸ்போர்ட் எந்த ஸ்டாம்பிங்கும் இல்லாம ‘அய்யா’ படத்துல வரும் நயந்தாரா மாதிரி புத்தம் புதுசா ‘பளிச்’னு இருந்ததால தான் இவ்ளோ தலைவலி. என்னை ஒரு ஆபிசர் அழைக்கவும் பக்கத்துல போய் பாஸ்போர்ட்டை குடுத்துட்டு தொண்டையை சரிபண்ணிண்டு பதில் சொல்ல தயாரானேன்.
அவர் உடனே என்ன கேட்டார் தெரியுமோ??..:) (அடுத்த வாரம் தொடரும்)
(Note - பிரஞ்சு மொழில எல்லாத்துக்குமே ஆண்பால் பெண்பால் உண்டு. அதனாலதான் ‘ஏரோப்ளேன்’ அவள் ஆனாள்...;)