Thursday, May 17, 2012

டிரைவிங்! டிரைவிங்!

சேறும் சகதியுமா இருக்கும் ஒரு வெள்ளை பனியனை ஆவக்கா மாங்காய் ஊறுகாய்ல இருக்கும் எண்ணைல முக்கி எடுத்து கைல வச்சுண்டு கன்னத்துல குழிவிழும்படியா சிரிக்கும் ஒரு ‘பாப்கட்’ பொம்ணாட்டி ‘கறை நல்லது’னு சொல்லும் ‘சர்ஃப் எக்சல்’ காலகட்டத்துக்கு முன்னாடி, பளிச்சிடும் வெண்மைக்கு ‘சூப்பர் பவர்’501-னு சொல்லிண்டு இருந்த சமயத்துல சைக்கிள் ஓட்ட கத்துக்கர்தே ஒரு பெரிய விஷயமா இருந்தது. எட்டாத பெடலை எக்கி எக்கி அழுத்தி ஓட்டிண்டு போகர்து ஒரு தனிசுகம் தான். சைக்கிள் கத்துக்கர்துக்கு சில சம்ப்ரதாயம் உண்டு. ஒரே பாட்டுல 'படையப்பா' ரஜினிகாந்த் பெரியமனுஷர் ஆகரமாதிரி ஓட்ட ஆரம்பிச்சுட முடியாது. மாஸ்லோவோட தேவைகளுக்கான பிரமீடு கொள்கை(Maslow Theory) மாதிரி படிப்படியா முன்னேறனும். முதல் பிரச்சனையா ஓட்டர்துக்கு ஒரு சைக்கிள் வேணும். எங்கப்பா என்னை நம்பி ஜானகிராம் காபிப்பொடி கடைல குடுத்த ஒருபக்கம் கைப்பிடி இல்லாத மஞ்சப்பையை கூட தரமாட்டார்.

சரி வாடகைக்கு வண்டி எடுக்கலாம்னா 2 ரூபாய்க்கு அம்மா கிட்ட 10 குட்டிகாரணம் போட்டுகாமிக்கனும். ப்ளவுஸ் சங்கரனாத்துல அவனோட அம்மா கடைக்கு போய் பொரிகடலை வாங்கிண்டு வந்தாலே அவனுக்கு பைசா குடுப்பா. அதை எடுத்துண்டு வந்து ‘டப்பு ஒச்சாயினு! ஒச்சாயினு!’னு என்னைதான் கடுப்பேத்துவான். ‘நேக்கு ஒச்சா லேதுரா!’னு சொன்னாலும் விடாப்படியா சைக்கிள் வாடகைக்கு எடுக்க கூட்டிண்டு போவான். எங்க தெருல சைக்கிள் ஓட்ட பழகரவா கொஞ்ச நாளைக்கு சைக்கிளை தள்ளிண்டே வருவா. பிடிச்சுக்கர்துக்கு ஒரு ‘இளிச்சவாயன்’ கிடைச்சதுக்கு அப்புறம் ஏறி உக்காண்டு ஓட்ட ஆரம்பிப்பா. நாலு தடவை சைக்கிளோட கீழ விழுந்து கை/கால் முட்டில ரத்தம் வந்து ஓட்ட ஆரம்பிச்சவாளும் ஜாஸ்தி. “ஒரு குரங்கே குரங்கு பெடல் போடுகிறதே அடடா ஆச்சர்யகுறி!”னு சொல்லும்படியா கொஞ்ச நாளைக்கு பெருமாள் கோவிலை சுத்தி ‘குரங்கு’பெடல் போட்டு ஓட்டுவா. கொஞ்சம் கொஞ்சம் ஓட்ட ஆரம்பிச்சதுக்கு அப்புறம் சாயங்காலம் பால்காரன்கிட்ட பால் வாங்கிட்டு கிழக்க பாத்து நின்னுண்டு வாசல்ல தலைவாரி பின்னிண்டு இருக்கும் எதாவது ஒரு ‘ஜம்போ’ மாமியை பின்பக்கமா போய் மோதி "கடங்காரா! நீ சைக்கிள் ஓட்டலைனு இங்க யாரு அழுதா"னு வாய் நிறைய ஆசிர்வாதம் வாங்கினதுக்கு அப்புறம் நமக்கு ஒழுங்கா ஓட்ட வரும். பொண்கொழந்தேளுக்கு எல்லாம் அவாளோட அப்பாமார்கள் மேல்துண்டை தலப்பா கட்டிண்டு " நேரா பாரு கோந்தை! இடுப்பை வளைக்காதே!"னு சொல்லிண்டு பின்னாடியே ஓடி வருவா.


நம்ப புல்லட்டு... :)


ப்ளவுஸ் சங்கரன் யார்மேலையாவது மோதினான்னா அவா கத்தர்துக்குள்ள இவன் ‘ஹான்ன்ன்!’னு கத்தி சமாளிச்சுடுவான். ஒரு தடவை ப்ளவுஸ் சங்கரன் பின்னாடி சைக்கிளை பிடிச்சுண்டு நல்ல வேகத்துல நான் போயிண்டு இருந்த போது பிள்ளையார்கோவில் முக்குல வாயும்கையுமா இருக்கும் ஒரு மாமியை பாத்து கை நடுங்கி ஹேண்டில்பாரை திருப்பிட்டான். அவ்வளவுதான் நான் படக்குனு ‘ரைஸ்மில்’ மாமா ஆத்துக்குள்ள ஓடிட்டேன். அமாவாசை தர்பணம் பண்ணிவைக்க வந்த வாத்தியார் மாதிரி அந்த மாமி சங்கரனோட மூனுதலைமுறை தாத்தா/பாட்டியையும் சேர்த்து வெஞ்சு தள்ளினதுக்கு அப்புறம் வெளில வந்து மெதுவா சங்கரன் கிட்ட ‘அதான் மாமி அடிப்ரதக்ஷிணம் பண்ணரானு தெரியர்து இல்லையா ஹேண்டில்பாரை ஒடிக்கர்துக்கு என்னடா?’னு கேட்டேன். ‘180 டிகிரி ஒடிச்சதுக்கு அப்புறமும் ‘விஸ்வரூபம்’ எடுத்த ஆஞ்சனேயர் மாதிரி பாதை முழுசும் மாமிதான் நிறைஞ்சு இருக்கா நான் என்ன பண்ணமுடியும்’னு பரிதாபமா சொன்னான். சங்கரன் எத்தனை தடவை விழுந்து வாரினான்னு எங்க தெரு மாமா/மாமிட்ட கேட்டா தெரியும். ஆனா எத்தனை தடவை கீழ விழுந்தாலும் அழுதுண்டே ‘ஜெய் ஆஞ்சனேயா!’னு சொல்லிண்டு மறுபடி எதாவது ஒரு மாமி மேல மோதர்துக்கு தயாராவான். ஒரு கட்டத்துல எனக்கு கடுப்பு வந்து “போடா நீயும் உன்னோட ஆஞ்சனேயரும்! ரோட்ல ஒருத்தர் பாக்கியில்லாம இடிச்சுண்டு இருக்க! அனுமாரையே வந்து பிடிச்சுக்க சொல்லு!”னு சொல்லிட்டு வந்துட்டேன்.

இவ்ளோ போராட்டம் இதுல இருக்கர்தால நானும் எங்க அண்ணாச்சியும் அடுத்த கட்டமான பைக்/ஸ்கூட்டர் ஓட்ட கத்துக்கர்து பத்தி யோசிக்கவே இல்லை. ‘பார்த்த முதல் நாளே!’னு பாடிண்டு கமல் பின்னாடி ஒருபக்கமா கால்போட்டு உக்காசுண்டு போகும் கதானாயகி மாதிரி யாராவது நன்னா ஓட்டக்கூடியவா பின்னாடி உக்காசுண்டு பைக்ல போகர்தோட சரி. எங்க அண்ணா ஒரு லெப்ட்ஹான்டர்ங்கர்தாலையோ என்னவோ “நேரா போய் ரைட்ல திரும்புங்கோ”னு இடது பக்கமா கையை காட்டி நன்னா தெளிவா குழப்புவான். பெண்களூருக்கு வேலைக்கு வந்ததுக்கு அப்புறம் 4- 5 கிலோமீட்டர் தூரத்துல உள்ள இடத்துக்கு எல்லாம் “பக்கத்துலதான்டா! இதோ இந்த பார்க் தாண்டினதும் வரும்!”னு சொல்லி எங்க அண்ணா நடத்தியே கூட்டிண்டு போயிடுவான். மத்த இடங்களுக்கு பஸ்ஸை புடிச்சிடுவோம். எந்த இடத்துக்கு போகர்துனாலும் எங்கண்ணா சிவாஜி நகர் பஸ் ஸ்டாண்ட் டைம் கீப்பர் மாதிரி என்கிட்ட பஸ் நம்பர் கேட்டுப்பான்.

இங்க தோஹாவுக்கு வந்ததுக்கு அப்புறமும் எங்காத்துக்கு பக்கத்துல இருந்த பஸ் ஸ்டாண்டை பாத்து வச்சுண்டு பஸ்ல ஏறினா பஸ்ல நானும் டிரைவர் மாமாவும் மட்டும் தான். அடுத்த நாள் போனா பஸ்ஸை இன்டிகேட்டர் போட்டு ஓரம் கட்டி நிப்பாட்டியிருந்தார். உள்ள ஏறினா ‘ஐ அம் வெயிட்டிங் பார் யூ'னு சொல்லி ஆச்சர்யப்படுத்தினார். ‘கத்தார்ல கார் ஓட்டலைனா கழுதை கூட மதிக்காதுடா கோந்தை!’னு என்னோட அதிகாரி சொன்னதுக்கு அப்புறம் கார் டிரைவிங்ல போய் சேர்ந்தேன். டிரைவிங் ஸ்கூல்ல என்னோட ஆசான் ஒரு மலையாளி. ‘நாட்டுல டூவீலர் ஒடிக்குமோ?’னு கேட்டார். ‘நாட்டுல டூவீலர் ஓட்டும் பக்க்ஷே நம்மொட வண்டியில் பெடல் சவட்டினா மதி!னு பதில் சொன்னேன். அதுசரி சைக்கிளோ!!னு சொல்லி பாடத்தை ஆரம்பிச்சார். மேனுவல் வண்டில ஏகப்பட்ட வஸ்து இருந்தது. கால்ல கிளட்சு,ப்ரேக்கு,ஆக்ஸிலேட்டர், கைல ஸ்டியரிங் & கியர். பயந்து பயந்து ஓட்ட ஆரம்பிச்ச என்கிட்ட ‘பதுக்க பதுக்க கியரிட்டு ஒடிக்கனும்!’னு ஆசான் சொல்லிகுடுத்தார். கிளட்சும் கியரும் தான் ரொம்ப குழப்பமா இருந்தது. கிளட்ச்சை மிதிச்சுட்டு கியரை மாத்தாம திருதிருனு முழிப்பேன். இல்லைனா கிளட்சை மிதிக்காம கியரை ‘டடக்க்க்’னு மாத்துவேன். ரம் குடிச்ச குதிரை குலுங்கர மாதிரி வண்டி ஒரு குலுங்கு குலுங்கும்.

. இந்த கியர் கிளட்சு குழப்பம் விட்டபாடா இல்லாததால மெதுவா ஒரு யோசனையை என்னோட ஆசான் கிட்ட சொன்னேன். “ஆசானே! கிளட்சை யான் சவட்டும், ஆசான் கியரை போடும் மனசுலாயோ?”னு கேட்டதுக்கு அப்புறம் அவருக்கு என்மேல இருந்த கொஞ்சனஞ்ச மரியாதையும் போயிடுத்து. 20 நாள் கழிச்சு டிரைவிங் டெஸ்டுக்கு காலங்காத்தால 5 மணிக்கு போய் நின்னாச்சு. இங்க டெஸ்டுல பார்கிங் & பாக்ஸ் பார்கிங் முடிச்சா தான் ரோட்ல ஓட்டி காட்ட முடியும். ஒரு மேட்டுல ஏத்தி ரிவர்ஸ்ல இறக்கி வந்து முன்னாடி போகனும். ‘ரோட்லதானே கார் ஓட்ட போறோம் எதுக்கு மேட்டுல ஏத்தி காமிக்கணும்’னு ஏட்டிக்கு போட்டி இங்க கேள்வி கேட்கமுடியாது. மேட்ல ஏறி இறங்கி டப்பாவுக்குள்ள பார்கிங்(Box parking) போட்டு காமிச்சுட்டேன். ரோட்ல ஓட்டர்துக்குள்ள ப்ராணன் போயிடுத்து. உசரமும் பொத்தையுமா ஒரு போலிஸ் மாமா பக்கத்து சீட்ல உக்காந்தார்னா என்னோட வண்டி ஜானுவாஸ கார் முந்திண்டு போகர அளவுக்கு பயத்துல மெதுவா போகும்.



நம்ப ஊர்ல இப்ப கல்யாணத்துக்கு நல்ல பொண்ணு கிடைக்கர்து எவ்ளோ கஷ்டமோ அதை மாதிரி கத்தார்ல டிரைவிங் லைசன்ஸ். இப்படியே 5 தடவை பெயிலாகி பெயிலாகி கடைசி சான்ஸ்ல ஒரு அளவுக்கு ஒழுங்கா ஓட்டி காட்டி லைசன்ஸ் கிடைச்சது. எங்கண்ணாவும் மூனு தடவை ட்ரைவிங் டெஸ்ட்ல பெயில்னு மன்னி சொன்னதுக்கு அப்புறம் கொஞ்சம் ஆசுவாசமா இருந்தது. ஆரம்ப காலங்கள்ல நான் ஓட்டும் போது பக்கத்துல ஆஜானுபாஹுவா லாரி எதாவது வந்தா கையும் காலும் உதறல் எடுக்கும். எனக்கு மட்டும்தான் இப்படினு நினைச்சுண்டு இருந்தேன், ஆனா இங்க உள்ள கருங்குளம் மாமியும் வண்டி ஓட்டும் போது ‘இந்த லாரிக் கடங்காரன் எப்போதும் இடிக்கர மாதிரி வருவானாக்கும்!’னு வழி முழுக்க அர்ச்சனை பண்ணிண்டு ஓட்டர்தை பாத்த போது மனசுக்கு கொஞ்சம் சமாதானமா இருக்கும். அதே மாதிரி க.மாமி பிரேக் போட்டா பின்னாடி வர வண்டியே நிக்கர அளவுக்கு பிரேக் மேலையே ஏறி நின்னுடுவா. லைசன்ஸ் வாங்கி ஒரே வாரத்துல பிள்ளையார் கோவில் முக்குல மாமி மேல மோதின சங்கரன் மாதிரி சிக்னல்ல சிவனேனு நின்னுண்டு இருந்த ஒரு பெரிய கார் பின்னாடி போய் டமார்னு மோதிட்டு ‘பே பே’னு முழிச்சேன்.

ஆனா இந்த சொதப்பல் எதுவும் இல்லாம ரெண்டு போலிஸை வண்டில ஏத்திண்டு "உள்ள ஒக்காரும் ஓய்ய்ய் ஏழரையே உமக்கு போட்டுகாட்டரேன்”னு சொல்லி ஓட்டிக்காட்டி லைசன்ஸ் வாங்கிண்டு வந்த என்னோட தங்கமணியை நினைச்சா கொஞ்சம் பொறாமையா தான் இருக்கு.

25 comments:

குறையொன்றுமில்லை. said...

ஆஹா இவளவு கஷ்ட்டப்பட்டூட்டேளே. ஆமா ஒழுங்கா ட்ரைவ் பண்ண வந்துடுத்தா?

பால கணேஷ் said...

‘விஸ்வரூபம்’ எடுத்த ஆஞ்சனேயர் மாதிரி பாதை முழுசும் மாமிதான் நிறைஞ்சு இருக்கா நான் என்ன பண்ணமுடியும்’னு பரிதாபமா சொன்னான். சங்கரன்
-ஹா... ஹா... ஹா... அருமை தக்குடு.

“ஆசானே! கிளட்சை யான் சவட்டும், ஆசான் கியரை போடும் மனசுலாயோ?”னு கேட்டதுக்கு அப்புறம் அவருக்கு என்மேல இருந்த கொஞ்சனஞ்ச மரியாதையும் போயிடுத்து.
-இப்டித்தான் என்னோட தங்கமணியும் டிரைவிங் கத்துக்கும போது என்னை பாடாப் படுததினா. மலரும் நினைவுகளை எழுப்பிட்டீரே...

இப்ப தோஹா ரோடுகள்ல பயமில்லாம ஓட்டறீங்க தானே...

அமுதா கிருஷ்ணா said...

உங்க புல்லட் சூப்பர்.நான் சைக்கிள் கத்து கொண்டது இரண்டே நாளில் என் தம்பியிடம்.ஆனால், சைக்கிள் கிளம்புனும்னா சைக்கிள் பக்கமாய் ஒரு பெரிய கல் இருக்கணும் அதில் இடது காலினை வைத்து கொண்டு தான் புறப்படுவேன்.

காருக்கு வீட்டில் மூன்று ட்ரைவர்கள் இருப்பதால் ஓட்டவே ஆசை வரலை. கணவரும்,இரண்டு மகன்களும் தான் அந்த ட்ரைவர்கள்.

மிக அருமையான பதிவு தக்குடு.

MARI The Great said...

படம்-1; எப்படியெல்லாம் டெவலப்பாகி போய்கிட்டு இருக்காய்ங்க ... :)

Chitra said...

///நம்ப ஊர்ல இப்ப கல்யாணத்துக்கு நல்ல பொண்ணு கிடைக்கர்து எவ்ளோ கஷ்டமோ அதை மாதிரி கத்தார்ல டிரைவிங் லைசன்ஸ்/////


.....//////ஆனா இந்த சொதப்பல் எதுவும் இல்லாம ரெண்டு போலிஸை வண்டில ஏத்திண்டு "உள்ள ஒக்காரும் ஓய்ய்ய் ஏழரையே உமக்கு போட்டுகாட்டரேன்”னு சொல்லி ஓட்டிக்காட்டி லைசன்ஸ் வாங்கிண்டு வந்த என்னோட தங்கமணியை நினைச்சா கொஞ்சம் பொறாமையா தான் இருக்கு/////......


.................... ஏதோ என்னால முடிஞ்ச சிண்டு!!!!

திவாண்ணா said...

தங்கமணியை நினைச்சா கொஞ்சம் பொறாமையா தான் இருக்கு//
haahaahaah!

Kavinaya said...

//ஆனா இந்த சொதப்பல் எதுவும் இல்லாம ரெண்டு போலிஸை வண்டில ஏத்திண்டு "உள்ள ஒக்காரும் ஓய்ய்ய் ஏழரையே உமக்கு போட்டுகாட்டரேன்”னு சொல்லி ஓட்டிக்காட்டி லைசன்ஸ் வாங்கிண்டு வந்த என்னோட தங்கமணியை நினைச்சா கொஞ்சம் பொறாமையா தான் இருக்கு.//

பெருமையாவும்தானே? வாழ்த்துகள் தங்கமணிக்கு :)

//லைசன்ஸ் வாங்கி ஒரே வாரத்துல பிள்ளையார் கோவில் முக்குல மாமி மேல மோதின சங்கரன் மாதிரி சிக்னல்ல சிவனேனு நின்னுண்டு இருந்த ஒரு பெரிய கார் பின்னாடி போய் டமார்னு மோதிட்டு ‘பே பே’னு முழிச்சேன்.//

அச்சச்சோ. ஜாக்கிரதையா ஓட்டு கோந்தே! இல்லன்னா பேசாம தங்கமணியை ஓட்டச் சொல்லி பக்கத்துல ஜம்னு உக்காந்து போக வேண்டியதுதானே :)

A and A said...

Congrats to Thangamani :)

Priya Suresh said...

Ada ada thangamaniku yennoda vazhuthukkal..

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

//என்னோட தங்கமணியை நினைச்சா கொஞ்சம் பொறாமையா தான் இருக்கு//

எனக்கு பெருமையா இருக்கு'னு காதுல விழுந்தது...சரி தானே...:)


எல்லார் வாழ்கையிலும் இந்த சைக்கிள் அத்தியாயம் உண்டுனு நினைக்கிறேன்... என்னோட டிராப்ட்ல ஒரு வருசமா இருக்கு... எப்ப போடலாம்னு (!) யோசிச்சுட்டு இருக்கேன்...:)) BTW not BMW சூப்பர் ஸ்டோரி...:)))

Shobha said...

சங்கரன் சைக்கிள் ஓட்டினது சரி, நீ சைக்கிள் கத்துண்டது பத்தி சொல்லவே இல்லையே !

// பேசாம தங்கமணியை ஓட்டச் சொல்லி பக்கத்துல ஜம்னு உக்காந்து போக வேண்டியதுதானே :)//

இதை நான் வழி மொழிகிறேன்

சுபத்ரா said...

Congrats to ur wife :-)

வல்லிசிம்ஹன் said...

வாழ்த்துகள் தங்கமணிக்கு.
காரோட ஒரு போஸ் கொடுத்திருக்கலாமே:)

ஸ்ரீராம். said...

உருண்டு புரண்டு சிரிஹ்ச்சதுல குரங்குப் பெடல் ஓட்டற போஸ்ல ஃபரீஸ் ஆயிட்டேன். சுளுக்கிக் கொண்டு விட்டது! உங்களுக்கு மட்டும் சித்ரா கமெண்ட் போட்டுடறாங்க தக்குடு!

Vetirmagal said...

சிரிச்சு, சிரிச்சு, .....வீட்டிலே எல்லாருக்கும் கவலை!;-) சூப்பருங்க!

RVS said...

சைக்கிளை 180 டிகிரி ஒடிச்சும் ”ஒடியற” மாதிரி நின்ன மாமியா?

கலக்கல் தக்குடு!! வழக்கம் போல் இடுப்பொடிய விழுந்து விழுந்து சிரிக்கவச்சாச்சு! குட்!!! :-)

சிவகுமாரன் said...

அப்பாடா . இப்ப தான் நிம்மதியாய் இருக்கு . என்னை எங்க அம்மாவோ, அப்பாவோ கணக்கு வாத்தியாரோ , அவ்வளவு ஏன் -- ஏன் ஆத்துக்காரி கூட அப்படி திட்டுனதில்லை. அந்த ட்ரைவிங் மாஸ்டர் ---- வாழ்க்கையில மறக்க முடியாத அளவுக்கு திட்டியிருக்கான்.
- மனம் கவர்ந்த(!) பதிவு.

சுசி said...

உன் பிரெண்ட் எவ்வளவோ தேவலை. நான் சைக்கிள் ஓட்ட கத்துக்கறச்சேயே என் தம்பியை தீர்த்து கட்ட முயற்சி பண்ணினேன் . பய தப்பிச்சுட்டான்.

Very good your thangamani learnt driving.:))))

Vetirmagal said...

Kinldy have a look at my blog page and offer your comments , if you have the time.
Thanks.

http://vetrimagal.blogspot.in/2012/05/blog-post.html

மோகன்ஜி said...

நல்ல நகைச்சுவை ! கலக்குறீங்க மாப்பிள்ளை!

Unknown said...



ஸலாம்

1. நீங்கள் இருக்கும் நாட்டில் license எடுக்க எவ்வளவு செலவு ஆகும் இந்திய ரூபாயில் ?? அங்கயும் எதுவும் இலஞ்சம் கொடுக்கணுமா ?

2.இந்தியாவில் RTO விடம் international driving permit வாங்கி அதாவது நீங்கள் வசிக்கும் நாட்டில் கார் ஓட்டலாம ? ஓட்டலாம் என்றால் எல்லா மாதிரியான VISA வுக்கும் இது பொருந்துமா ?

தெரியவில்லை என்றால் யாரிடமும் கேட்டுநாச்சலும் சொல்லுங்க ...

pls expedidate your answer .. i hope ... thanks a lot ...

சுசி said...

I have shared an award with you !, pls visit my site in your free time.

Congrats ! (me the first) :))

Regards.

Unknown said...

appo veetla madurai thaan nu sollum :)

Doha Talkies said...

பதிவு நன்று

Srinivasan J said...

//நாலு தடவை சைக்கிளோட கீழ விழுந்து கை/கால் முட்டில ரத்தம் வந்து ஓட்ட ஆரம்பிச்சவாளும் ஜாஸ்தி//
நான் ஓட்ட கத்துகிட்டு கீழ விழுந்து அடி பட்டு அம்மா ஓட்ட கத்துக்க கூடாது ன்னுசொல்லி. இது போரில் கிடைத்த விழு புண்கள் அல்லவே சொல்லி ஒரு வழிய அம்மா வை சமாளிச்சாச்சு

Post a Comment

யெச்சுஸ்மி, comment பொட்டி இங்க இருக்கு.....:)