Friday, June 25, 2010

Take diversion

அன்பான வாசகர்களே! இந்த வாரம் தக்குடுவோட பதிவு உம்மாச்சி காப்பாத்து! ப்ளாக்ல இருக்கு, ஸ்ரமம் பாக்காம அங்க வந்து எல்லாரும் படிங்கோ சரியா!!! கமண்ட் போடாம கமுக்கமா படிக்கும் நல்ல உள்ளங்களும் அங்க வந்துருங்கோ!!...:)

உங்கள்,
தக்குடு

Friday, June 18, 2010

புளியோதரையும் தச்சு மம்முவும் 5

எல்லாம் நல்ல படியாக சந்தோஷமாக கதை கேட்டு முடிக்கும் வேளையில் ஸ்ரீவத்சன் அதிர்ச்சியான ஒரு விஷயத்தை சொல்ல ஆரம்பித்தான்

அப்பா! உங்கள்ட ரொம்ப நாளாவே ஒரு விஷயம் சொல்லனுன்னு இருந்தேன். இப்ப சொல்லிட்டா தேவலைனு நேக்கு தோனர்து!னு பீடிகை போட்டான்.

என்னடா சொல்லப்போறாய்?னு கேக்கர மாதிரி அவனை நிமிர்ந்து பாத்தார் வரதாச்சாரி.

நான் ஒரு பொண்ணை விரும்பறேன்பா!னு ஸ்ரீவத்ஸன் ஆரம்பிச்சான்.

என்னடா சொல்றை!னு விஜி மாமி குரலை உசத்தர்துக்கு முயற்சி பண்ணும்போதே, இருடி! என்ன சொல்லறான்னுதான் பாப்போமே! என்பது போல் மாமியை சைகையால் நிறுத்தினார் மாமா.

கோயம்புத்தூர் PSG காலேஜ்ல நான் அப்ப B.E(EEE)3rd year படிக்கும் போது அவள் பர்ஸ்ட் இயர் படிச்சுண்டு இருந்தா!னு சொல்ல ஆரம்பிச்சான் ஸ்ரீவத்ஸன்.

அப்ப நீ 4th இயர் படிக்கும் போது அவள் 2nd இயர் இல்லையா?னு அந்த சமயத்திலும் நக்கல் அடிச்சது நம்ப வைஷு குட்டி.

வைஷூ நீ பேசாம இரு!னு மாமா மெதுவா சொன்னார்.

அவள் கெமிக்கல் இன்ஜினியரிங் ப்ராஞ்ச், ரொம்ப நல்ல பொண்ணுப்பா! பரமசாது! நம்பாத்துகாரா எல்லார் மேலையும் ரொம்ப மரியாதை உள்ள பொண்ணு அவள்!னு ஸ்ரீவத்ஸன் சொல்ல சொல்ல விஜி மாமிக்கு கோவம் வந்தது. என்னடா நினச்சுண்டு இருக்கை மனசுல? ஒரேடியா தலைல தூக்கி வச்சுண்டு குழந்தேளை கொண்டாடினா இப்படித்தான் ஆகும்!னு மாமாவை பாத்து சொன்னாள்.

கெமிக்கல் இன்ஜினியரிங்கா? அதான் உங்களுக்குள்ள நல்ல கெமிஸ்டிரியோ?னு மறுபடியும் வைஷு மெதுவா ஆரம்பிச்சுட்டு அப்பரம் அடி விழுமோங்கர பயத்தில் நிறுத்திட்டாள்.

மாமா எதுவும் பேசாம ஸ்ரீவத்ஸன் மேல்கொண்டு பேசர்துக்கு காத்துண்டு இருந்தார்.

அவளோட பேர் செளஜன்யா, பூர்வீகம் திருக்கோவிலூர் பக்கம். அவளோட அப்பா & அம்மா ரெண்டு பேருமே நல்ல மனுஷாதான். அப்பா சென்ட்ரல் கவர்மெண்ட்ல உத்யோகத்துல இருக்கார். அவாளுக்கும் விஷயம் தெரியாது, இப்போதான் அவளுக்கு சன்மார்ல உத்யோகம் கிடைச்சுருக்கு, ஆனா ஒரே ஒரு விஷயம்...!!னு நிப்பாட்டிட்டு மீண்டும் தொடர்ந்தான், அவள் புளியோதரை கிடையாது அவள் தச்சு மம்மு பார்ட்டி, ஆனா அவாளுக்கு குலதெய்வம் எல்லாம் திருப்பதி ஸ்ரீநிவாச பெருமாள்தான்!னு அவசரமாய் சொன்னான்.

என்னடா நடக்கர்து இங்க? எவ்ளோ பெரிய விஷயத்தை இவ்ளோ சாதாரணமா சொல்றையேடா!! பெருமாளே!னு வருத்தம் கலந்த குரலில் கொஞ்சம் கண்ணீரோடு விஜி மாமி தன் மனதில் இருப்பதை வெளியில் கொட்டினாள்.

ஷேக்ஸ்பியர் சொன்னதுதான் ஞாபகத்துக்கு வருது!னு மாமா ஒரு பெருமூச்சோடு ஆரம்பித்தார். ‘Love is beautiful, amazing, wonderful,...it is the best thing in the world untill it happens to "UR CHILDREN" நு அந்த மனுஷன் சொன்னது சரியாதான் இருக்கு! இப்ப என்னடி ஆயிடுத்து? நமக்கும் அவாளுக்கும் கொஞ்சம்தான் வித்யாசம். களத்துல நாம சக்கரை வாழப்பழ கலவைலேந்து பரிமாற ஆரம்பிப்போம், அவா திருக்கண்ணமுதுலேந்து தொடங்குவா, நாம விஸ்வக்சேன பூஜைலேந்து ஆரம்பிப்போம், அவா கணபதி பூஜைலேந்து ஆரம்பிப்பா. புளியோதரையையே கடைசி வரைக்கும் சாப்டாமா கடோசில நெஞ்சை கறிக்காம இருக்கர்துக்கு நாமளும் கொஞ்சம் தச்சு மம்மு சாப்டர்து இல்லையா? இவனுக்கு தச்சுமம்முதான் இஷ்டம்னா நாம என்னடி பண்ண முடியும். கொஞ்ச கொஞ்சமா நம்பாத்து பழக்கவழக்கம் எல்லாம் சொல்லிகுடுத்துடலாம்!னு மாமா சொல்லி முடிக்கும் போது மாமியும் வைஷூவும் பேச்சு வராமல் அப்படியே ஆச்சர்யமா மாமாவை பாத்துண்டு இருந்தா.

அவாத்துகாராளை வந்து பேச சொல்லுடா ஸ்ரீவத்ஸா!னு சொல்லிண்டே மாமா பெட்ரூமுக்குள்ள போய் ட்ரெஸ் மாத்திண்டு வந்தார்.

அப்பா என்னை மன்னிச்சுக்கோங்கோ!னு சொல்லிண்டே வரது மாமா காலில் விழுந்தான் வத்ஸன். என்னடா கோந்தை! எழுந்துருடா!னு அவனை எழுப்பினார்.

அப்பா நான் சொன்னது எல்லாம் உண்மை கிடையாதுப்பா, உண்மைலையே அப்படி எல்லாம் ஒன்னும் கிடையாது, உங்க கொழந்தேள் காதலிக்கரா!னு சொன்னா உங்க ரியாக்ஷன் எப்படி இருக்கும்!னு சும்மா டெஸ்ட் பண்ணினேன்!னு சொல்லி முடிக்கவும் விஜி மாமி வந்து ஸ்ரீவத்ஸன் காதை பிடிச்சு திருகினாள்.

அதானே பாத்தேன், நம்ப அண்ணாவுக்கு எங்கேந்து இவ்ளோ தைரியம் வந்தது?னு எனக்கே ஆச்சர்யமா இருந்தது, காதலிக்கர அளவுக்கு நம்ப அண்ணா பெரிய ஆளோ!னு ஒரு நிமிஷம் பயந்துட்டேன்!னு வைஷு நையாண்டி பண்ணினது.

கோந்தை! நான் ஒன்னும் பழைய பஞ்சாங்கம் கிடையாது, கரி இன்ஜின் ரயில்ல போனவா அதுலையே போகனும்னு அவசியம் இல்லை, காலத்துக்கும் அவசரத்துக்கும் ஏத்த மாதிரி எலக்ட்ரிக் ட்ரெயின், மெட்ரோ ட்ரெயின் & புல்லட் ட்ரெயின்ல கூட போகலாம். ஆனா ரயில் தண்டவாளத்துல தான் போகனும்,ரோட்ல ஓட்ட முடியுமா? பாரம்பர்யம் பண்பாடு மீறின கார்யமா இருக்க கூடாது. அதாவது நம்பளோட பாரம்பர்யத்துக்கு பங்கம் வராமா நம்ப கார்யம் இருக்கனும். ரெங்கனாதன் மாமா சம்மதத்தோடதான் உங்க அம்மா கையை நான் பிடிச்சேன். அப்பா அம்மாவை வயத்தெரிய விட்டுட்டு ஒரு வாழ்க்கையை கொழந்தேள் நினைச்சு பாக்ககூடாது!னு மாமா முடிக்கும் போது அப்பாவை பெருமையோடு அவர் குழந்தைகளும், ஆத்துக்காரரை வெட்கம் கலந்த பெருமையோடு விஜி மாமியும் பார்த்தாள்.

விஷமக்கார கண்ணன்! பொல்லாத விஷமக்கார கண்ணன்!னு அருணா சாய்ராம் வரது மாமாவின் நோக்கியா போனிலிருந்து பாடினார்கள். ஹலோ வரதாச்சாரி ஹியர்!னு மாமா போனை எடுத்து பேசினார்.

டேய் வரதா எப்டிடா இருக்கை? நாந்தான்டா உன்னோட பால்ய ஸ்னேகிதன் சீமாச்சு பேசறேன். எப்படியோ கஷ்ட பட்டு உன்னோட நம்பரை புடிச்சுட்டேன்டா!னு இடைவெளி விடாமல் பேசினார் சீமாச்சு என்ற ஸ்ரீநிவாசன்.

டேய் சீமாச்சு! எப்டிடா இருக்கை? எவ்ளோ நாள் ஆச்சுடா உங்கிட்ட பேசி!னு மாமாவும் சந்தோஷமா பேசினார்.

டேய் உன்னோட புள்ளையான்டான் ஜாதகம் ஜெய்ஸ்ரீ மாமி மூலமா எனக்கு கிடைச்சதுடா, என்னோட பொண்ணுக்கு ப்ரமாதமா பொருந்தர்து, நோக்கு சம்மதம்னா என்னோட பொண்ணை பாக்கர்துக்கு எல்லாரும் திருச்சிக்கு வாங்கோ! பொண்ணோட பேர் செளஜன்யா!னு ஸ்பீக்கர் போனில் சீமாச்சு சொல்லவும் மொத்த குடும்பமும் ஆச்சர்யமாக ஸ்ரீவத்ஸனை பார்த்தது.............:)

இந்த சமயத்தில் இந்த கதைக்கு(??!!) ஆதரவு & நேர்மையான பின்னூட்டம் அளித்த எல்லா நல்ல உள்ளங்களுக்கும் தக்குடுவோட பணிவான நமஸ்காரங்கள். இன்னோரு முக்கியமான விஷயம், இந்த கதைக்கு தன்னுடைய குடும்பத்தில் உள்ள எல்லாருடைய பெயரையும் (except our vaishu kutty and seemaachu) உபயோகபடுத்திக் கொள்ள அனுமதி அளித்த சிரஞ்சீவி. வரதாச்சாரி & செளபாக்யவதி.விஜயலெக்ஷ்மி வரதாச்சாரி தம்பதிகளுக்கு இந்த கதையை அன்பளிப்பாக தக்குடு சந்தோஷமா குடுக்கர்து. இந்த கதையில் வருவது போல் வைஷூ மாதிரி படுசுட்டியா ஒரு பொண்கொழந்தையும், தக்குடு மாதிரி சூதுவாது இல்லாத ஒரு பிள்ளக் கொழந்தையும் அவாளுக்கு அனுக்கிரஹம் ஆகனும்னு அப்ரமேயஸ்வாமியை ப்ரார்த்தனை பண்ணிக்கறேன்.

மேலும் ஐயங்கார் பாஷை சம்பந்தமா நிறையா ஆலோசனை சொன்ன என்னோட ‘தோஸ்த்’ VGr-ருக்கும், வல்லி அம்மாவுக்கும், ‘தோஹா’ ஸ்ரீவத்சனுக்கும் தாசன் கடமைபட்ருக்கேன்.

(Note - அடுத்த வாரம் தக்குடுவோட இன்னோரு ப்ளாக்கான உம்மாச்சி காப்பாத்து!ல போஸ்ட் போடப்படும். எல்லாரும் மறக்காம வாங்கோ! சரியா!!)

Friday, June 11, 2010

புளியோதரையும் தச்சு மம்முவும் 4

ஸ்ரீரங்கம் போகர்துக்கு திருச்சி ஸ்டேஷன்ல இறங்கிட்டு அங்கேந்து பஸ்ஸு புடிச்சு பிரயாணம் பண்ணினேன். அந்த பொண்ணையே மனசுல நினைச்சுண்டு போனதால எனக்கென்னவோ ப்ராணாயாமம் பண்ணின்டு போகர மாதிரி இருந்தது!னு மாமா உற்சாகமா ஆரம்பித்தார்.

எங்க நரசு மாமா சொன்ன மாதிரியே அவரோட அசிஸ்டெண்ட்டோட ஆத்தை கண்டுபிடிச்சு அவாத்து கதவை தட்டினேன். நான் போயிறங்கின சமயம் காத்தால சமயம் அதனால சுப்புலெக்ஷ்மி அம்மாவோட விஷ்ணு ஸகஸ்ர நாமம்(B side) திருக்கண்ணமுதுல தேனும் கொஞ்சம் சாதிச்ச மாதிரி திவ்யமா கேட்டுண்டு இருந்தது. ஆராமுதன் அண்ணா நரசு மாமா பேரை கேட்டோனே சம்பந்தி உபசாரம் பண்ண ஆரம்பிச்சுட்டார். காலை மட்டும் கொஞ்சம் மடக்கிண்டு இரண்டு கையையும் ஏந்தர மாதிரி வச்சுண்டார்னா ஆராமுதன் அண்ணா பாக்கர்துக்கு சும்மா 'கருங்குளம்' கல் கருடர்தான். அவாத்து மாமி ஐயங்கார் கட்டு கட்டிண்டு தாயார் மாதிரி இருந்தா. வசந்த பரிமளா!னு அழகான நாமதேயம் அவாளுக்கு. நான், வசந்தா மண்ணி!னு கூப்ட ஆரம்பிச்சுட்டேன்.

நோக்கு பூர்விகமே ஸ்ரீவில்லிபுத்தூர்தானா!னு மண்ணிதான் ஜாரிக்க ஆரம்பிச்சா. இல்லை மண்ணி! கரக்டா சொல்லனும்னா மன்னார்குடிதான் என்னோட பூர்வீகம்!னு நான் சொன்னவொடனே ஆத்துக்காரர்ட கேக்காமையே அட்டியல் மாலை கிடைச்ச ஒரு பொம்ணாட்டியோட முகம் மாதிரி அப்படி ஒரு மலர்ச்சி மண்ணி முகத்துல. கேட்டேளா? நம்பாத்து அம்பிக்கு பூர்விகம் மன்னார்குடியாம்!னு பெருமை பொங்க சொன்னா.
(நேக்கு அப்பவே மண்ணியோட பூர்வீகம் என்னனு புடிபட்டுருத்து)

நல்லவேளைடா அம்பி, மன்னார்குடி!னு சொல்லி என்னை காப்பாத்திட்டை, நீ இங்கதான் தங்கப்போரைனு அவள்ட நான் இன்னும் சொல்லலை(அதாவது அப்ரூவல் வாங்கலை) இனிமே கவலை இல்லை!னு ஆராமுதன் அண்ணா மெதுவா என்ட சொல்லிண்டு இருக்கும்போதே, ‘சொர்ர்ர்னு!’னு ஒரு ஆத்து ஆத்தி மணக்க மணக்க ஒரு பில்டர் காப்பியை எடுத்துண்டு வந்துட்டா வசந்தா மண்ணி.

நீ எதோ முக்கியமான கேஸ் பத்தி விசாரிக்க வந்துக்கை!னு மாமா லெட்டர்ல எழுதி இருக்காரே?னு நான் கொண்டு வந்த லெட்டரை படிச்சுண்டே கேட்டார் ஆராமுதன் அண்ணா. நானும் ஆமாம் முக்கியமான ஒரு கேஸ்தான்!ங்கர மாதிரி மண்டையை ஆட்டினேன். காபி டம்பளரை கீழ கூட வைக்கவிடலை அந்த மண்ணி. ஸ்னானம் பண்ணிட்டு வாங்கோ! ஆகாரம் தயார் பண்ணரேன்!னு சொல்லிட்டு அவாளோட ஆபிஸுக்குள்ள(கிச்சனுக்குள்ல)போய்ட்டா மண்ணி. இந்த மாமா ஆரு?னு கேட்டுண்டே உத்ஸவ மூர்த்தியாட்டம் ஒரு குட்டி குழந்தை வந்தது, கோந்தையோட மாமாடா தேசிகா!னு ஆராமுதன் அண்ணா அந்த பெரியவருக்கு(??!) என்னை அறிமுகம் பண்ணி வச்சார்.

மாமாவோட கதைல இருந்த சுவாரசியத்தால விஜி மாமி, வைஷூ குட்டி, ஸ்ரீவத்ஸன் யாருமே குறுக்க கேள்வி எதுவும் கேக்காம கர்மஸ்ரத்தையா கேட்டுண்டு இருந்தா.

சாயங்காலம்தான் ரங்கனை சேவிக்கர்துக்காக என்னை அழைச்சுண்டு போனார் அண்ணா, ஸ்ரீரங்கம் ஊரோட அழகே அழகுதான். சில பொண்களை போகும் வழில பாத்ததுக்கு அப்பரம், அவசரப்பட்டு அந்த பொண்னை கமிட் பண்ணின்டோமோ?னு சந்தேகம் வர அளவுக்கு எல்லாரும் என்னப்பாரு! உன்னப்பாரு!னு இருந்தா!னு வரது மாமா சொன்னவுடன் விஜி மாமியால் சிரிப்பை அடக்கவே முடியலை. போரும்!போரும்! கதையை மட்டும் சொல்லுங்கோ!னு ஒரு அதட்டல் போட்டா.

தாளராசன் படித்துறைல போய் கை கால் எல்லாம் அலம்பிண்டு அதுக்கப்பரமா நாங்க ரெங்கன் சன்னதிக்கு போனோம், அழகா தாச்சுண்டு அம்சமா இருந்தார் ரெங்கனாதர்.'வகுள பூஷண பாஸ்கரர்' ஏன் இவனோட அழகுல சொக்கிபோனார்னு இப்போதான் புரியர்து!னு ஒரு பிட்டை ஆராமுதன் அண்ணாட்ட போட்டவுடனே அவர் ஆடி போய்ட்டார்.வரதா! நீ கிரிமினல் லாயர்னுதானே சொன்னை, ஆனா நீ பேசர்தை பாத்தா எதோ பெரிய வித்வான் மாதிரினா இருக்கு!னு அண்ணா முடிக்க,மன்னார்குடிகாராளுக்கு ஸ்வாதீனமாவே பெருமாளோட தாஸபாவம் ஜாஸ்தினு!வசந்தா மண்ணியும் சொல்லிட்டு காலரை நிமிர்த்திக்கரமாதிரி புடவையை ஒரு தடவை சரிபண்ணின்டா!னு மாமா விவரித்தார்.

ஒரே பந்துல 2 விக்கெட்டை அவுட்டாக்கின ஒரே பவுலர் எங்க அப்பா மட்டும்தான்!னு வைஷூ கூச்சல்போட்டாள்(வைஷூவுக்கு கொஞ்சம் கிரிக்கெட் பைத்யம் உண்டு).

ஸ்வாமியை சேவிச்சுட்டு வெளில ப்ராகாரத்துக்கு வந்ததுக்கு அப்பரம் அங்க ஒரு மாமாவை பாத்தோம். என்னடா ஆராமுதா! செளக்கியமா இருக்கியா? வசந்தா எப்பிடிமா இருக்கை?னு ரொம்ப கம்பீரமா அந்த மாமா இவாளை விசாரிச்சார்.பக்கத்துல இருந்த அவாத்து மாமிகைல இருந்த தாம்பாளத்துலேந்து ஒரு பழத்தை எடுத்து தேசிகனுக்கு குடுத்துண்டே, இந்த அம்பி யாரு?னு கேட்டார்.எங்க சீனியர் நரசிம்மாச்சாரி மாமாவோட ஜூனியர், ஒரு கேஸ் சம்பந்தமா இங்க வந்துருக்கான்!னு அண்ணா சொன்னார்.

நாங்க பேசிண்டு இருக்கும்போதே ரங்ங்ங்ங்ங்க புரவிஹாரா!னு அழகான முத்துஸ்வாமி தீக்ஷிதர் க்ருதி ப்ருந்தாவன சாரங்காவில் ரீங்காரமிட்டது. ரூபக தாளம் தப்பாம இருந்தது. பக்கத்துல எதோ ப்ராகாரத்துல யாரோ பாடரா போலருக்குனு வியூகம் பண்ணின்டேன். என்னடி மைதிலி! ஒன்னோட பொண்ணரசி பாட ஆரம்பிச்சாச்சு போலருக்கு?னு அந்த மாமா மாமிட்ட கேட்டதை வச்சு அவாளோட பொண்ணுதான் பாடரானு நேக்கு புரிஞ்சது.

இதுக்கு நடுல சங்கீதம் முடிஞ்சு அந்த பொண்ணு அங்க வந்தது. சரியா நான் அந்த பொண்ணை பாக்கும்போது அரங்கனோட கோவில் மணி டைண்! டைண்!னு அடிச்சது, ப்ருந்தாவன சாரங்கால பாடினது என்னோட வசந்த ராகம்னு அப்பதான் எனக்கு புரிஞ்சது, என்னை பாத்தவொடனே அவளுக்கும் ஆச்சர்யம் கலந்த வெட்கம். இங்க எப்பிடி வந்தார் இந்த மனுஷர்?னு யோசிக்கர மாதிரி இருந்தது அவளோட கண்.

அம்பி எதுல கெட்டிக்காரன்?னு அந்த மாமா என்னை பாத்து கேக்கும் போது கரக்டா அந்த பக்கமா ஒரு பட்டாச்சார்யார் கைல ஒரு பெரிய வெண்சாமரத்தை கொண்டு போனார். இவர் இதுலதான் கெட்டிக்காரர்!னு சொல்லற மாதிரி அந்த சாமரத்தையும் என்னையும் பாத்துட்டு அந்த பொண்ணு ஒரு நக்கல் சிரிப்பு சிரிச்சது!னு மாமா சொல்லிமுடிக்கவும்.

டாப் கியர்ல போட்டு கதையை தூக்கிட்டேளே அப்பா!னு ஸ்ரீவத்சன் பெருமையோடு சொன்னான்.

நம்ப மாமா மாமி யாரு?னு சொல்லவே இல்லையே மண்ணி?னு வசந்தா மண்ணிட்ட கேட்டேன். மாமா பேரு ரெங்கனாதன்,திருச்சி மாஜிஸ்ட்ரேடா இருக்கார், அது அவாத்து மைதிலி மாமி, பக்கத்துல இருக்கர்து அவாளோட மூனாவது பொண்ணு விஜி!னு மண்ணி சொன்னதுக்கு அப்பரம்தான் அந்த மாமாவுக்கு 'மஹாராஜா' மிக்ஸி மாதிரி மூனு பொண்ணு இருக்குங்கர விவரமே புடிபட்டது. விஜி கட்ட கடோசி மினி மிக்ஸ் ஜார்!னு மனசுக்குள்ள சொல்லிண்டேன்.

நம்பாத்து பாட்டிக்கு இப்போ உடம்பு பரவால்லியா?னு ஆராமுதன் அண்ணா மாமிட்ட விசாரித்தார். அம்பிக்கு பூர்வீகம் எதுவோ?னு மைதிலி மாமி கேக்கும்போதே, வரதுவுக்கு மன்னார்குடி!னு மண்ணி பதில் சொன்னா. மன்னார்குடி பூர்வீகம், ஆனா ஸ்ரீவில்லிப்புத்தூர்தான் எல்லாம்!னு நான் சொல்லவும். நம்ப ஊர் கொழந்தையா நீ!னு மைதிலி மாமி என்னோட பக்கதுக்கு வந்துட்டா. ஸ்ரீவில்லிபுத்தூர் சம்பந்தமா நிறையா விசாரிச்சா மைதிலி மாமி. ஆத்துக்கு வாடா கோந்தை! நீ நம்ப ஊர்காராளாயிட்டை!னு அவா சொல்லும்போது, பய எங்க போனாலும் பொழச்சுப்பான்!ங்கர மாதிரி ஆராமுதன் அண்ணாவும் மண்ணியும் என்னை பாத்துண்டு இருந்தா! னு சொல்லிண்டே மாமா சிரிச்சார்.

அதுக்கு அப்பரம் பல கார்யங்கள் பண்ணி கடைசில ஆராமுதன் அண்ணா & எங்க நரசு மாமா எல்லாருமா அந்த ரெங்கனாதன் மாமாட்ட பேசிபார்த்தா, அந்த மாமா கொஞ்சம் கூட மசியவே இல்லை. கடைசில நான் எதிர்பார்க்காத மாதிரி கல்யானத்துக்கு சம்மதம்!னு சொன்னதால எனக்கு சப்புனு ஆயிடுத்து!னு மாமா சொல்லவும். ஏன்ப்பா?னு வைஷூ கேட்டாள்.

பழைய படங்கள்ல வர எம்.ஆர். ராதா மாதிரி அவர் கல்யாணத்துக்கு சம்மதிக்காம வேற மாப்பிள்ளைக்கு கல்யாணம் பண்ணி குடுப்பார்னு பாத்தா அவர் சம்மதம்!னு சொல்லி என்னோட ஆசைல மண்ணவாரி போட்டுட்டார். அவர் மட்டும் சம்மதிக்கலைனா ஸ்ரீரங்கத்துலையே குத்துவிளக்கு மாதிரி வேற நல்ல பொண்ணா பாக்கலாம்னு சப்பு கொட்டிண்டு இருந்தேன்!னு மாமா நக்கல் அடித்தார்.

எல்லாம் நல்ல படியாக சந்தோஷமாக கதை கேட்டு முடிக்கும் வேளையில் ஸ்ரீவத்சன் அதிர்ச்சியான ஒரு விஷயத்தை சொல்ல ஆரம்பித்தான்.... (தொடரும்)

(Note - Next week will be the last part)

Friday, June 4, 2010

புளியோதரையும் தச்சு மம்முவும் 3

ஏழாவது நாள் உத்ஸவத்து அன்னிக்கு சாயங்காலம்தான் அந்த எதிர்பாராத சம்பவம் நடந்தது. பெருமாளை எழப்பண்ணின்டு எல்லாரும் சுத்தி வந்துண்டு இருந்த போது கூட வந்துண்டு இருந்த ஒரு மாமி கூட்ட நெரிசல்ல அந்த பொண்ணை பிடிச்சு திடீர்னு தள்ள, அவள் அங்க இருந்த கல் தூண்ல முட்டப் பார்த்தா!னு மாமா விளக்கவும்.

ஓஓஓ! அவாளுக்கு ஒன்னும் ஆகலையே? நீங்க இதை பாத்துண்டு சும்மாவா இருந்தேள் அப்பா?னு வைஷு பரபரத்தாள்.(வைஷுவுக்கு பாவம் இளகின மனசு).

டக்கு!னு நான் அவளோட கையை பிடிச்சு அவளை நிறுத்தினான்,அழகாக சுதாரிச்சுண்டு அவள் மெதுவா Thank you!நு சொன்னா. நல்ல வேளை யாரும் பாக்கலை, பாத்துருந்தா அவ்ளோதான், கோவில் மண்டபத்துக்கு நடுல நிக்க வச்சு, 'கையை பிடிச்சு இழுத்தியா?'னு ஊர் பெரியவா விசாரிக்க ஆரம்பிச்சுருப்பா!

ஆனா இந்த விஷயத்துலேந்து அவள் நல்ல படிச்ச குழந்தைனு நேக்கு புரிஞ்சது. அவள் சொன்ன thank you!வே அதுக்கு ஆதாரம்னு மாமா தொடர்ந்தார்.
Thank you!வை வச்சு நாம எப்பிடி ஒரு முடிவுக்கு வர முடியும் அப்பா!னு கேள்வி கேட்டு அவன் இருப்பதை நிரூபித்தான் ஸ்ரீவத்ஸன்.

ஏன் கண்டுபிடிக்கமுடியாது? அழகா கண்டுபிடிக்கலாம், தொடர்ந்து உபயோகபடுத்தரவாளுக்குத்தான் thank you ல அந்த Q sound வரும், இல்லைனா இரண்டும் தனி தனி வார்த்தையா இருக்கும்!னு மாமா முடித்தார்.

மொத்த குடும்பமும் மாமாவை பிரமிப்போடு பாத்தது. ஒரு சாதாரண விஷயத்தை கூட கூர்மையா கவனிச்சு நீங்க ஒரு கிரிமினல் லாயர்!னு நிரூபிச்சுட்டேள் அப்பா!னு சொல்லின்டே மாமாவின் கழுத்தை வைஷூ கட்டிக் கொண்டாள்.

அதுக்கு அப்பரம் அவளும் அடிக்கடி நான் இருக்கேனா? இருக்கேனா?னு சரிபாத்துக்க ஆரம்பிச்சா.பெருமாளை இப்போ ஊஞ்சல்ல வச்சு அழகா ஆட்ட ஆரம்பிச்சா, அப்ப பாத்து ஒரு பல்லுசெட்டு மாமி அவாளோட கர்ண கொடூரமான குரல்ல பாட ஆரம்பிச்சுட்டா, நடுல சா! பா! சா! பா!னு ஆலாபனை வேற பண்ண ஆரம்பிச்சுட்டா, பெருமாளே வந்து நிறுத்தினாலும் நிறுத்த முடியாத படி கண்ணை மூடிண்டு கட்டத்தொண்டையும், நெட்ட தொண்டையுமா கந்தர்வ கானம்தான் போ!னு மாமா சிலாகித்தார். நானும் கண்ணை மூடிண்டு கிருஷ்ணா! ராமா!னு சொல்ல ஆரம்பிச்சுட்டேன். நடுல திடீர்னு அந்த மாமியோட குரல் ரொம்ப அழகா ஆன மாதிரி இருந்தது, என்னடா இது?னு ஆச்சர்யத்தோட கண்ணை திறந்த போது, அந்த பொண்ணு பாடிண்டு இருந்தா, (அந்த மாமிக்கு பாதில வரி மறந்து போய்டுத்து போலருக்கு) வசந்தா ராகத்துல அந்த பொண்ணு அழகா பாடினா, மாமி நன்னா கேட்டுக்கோங்கோ! இதுதான் வசந்தா!னு அந்த மாமியை கூப்டு சொல்லனும் போல இருந்தது நேக்கு. வசந்தா, சுருட்டி, குந்தளவராளி & யதுகுலகாம்போதி எல்லாமே என்னோட பிரியமான ராகங்கள், அதனால எனக்கு ரொம்ப சந்தோஷமா இருந்தது!னு மாமா தொடர்ந்தார்.

அப்பரம் என்ன ஆச்சு?னு வைஷூ அவசரப்படுத்தினாள்.

அப்பரம் என்ன ஆயிருக்கும் பெருமாளுக்கு தீபாராதனை பண்ணி,துளசி தேர்த்தம் சாதிச்சு, சுண்டல் வினியோகம் பண்ணியிருப்பா, இவரும் ‘குணா’ல வர கமல் மாதிரி லெப்டும் ரைட்டுமா ஆடிண்டே சுண்டல் வாங்கர்துக்கு போய் வரிசைல நின்னு இருப்பார்!னு விஜி மாமி பழிப்பு காட்டினாள்.

பெளர்ணமிக்கு அடுத்த நாளே அமாவாசை வரும்னு நான் எதிர்பார்க்கவே இல்லை!னு மாமா புதிர் போட்டார்.

அச்சச்சோ! என்ன ஆச்சுப்பா?னு வைஷூ விக்கித்துப்போனாள்.

அடுத்த நாளும் கோவிலுக்கு போனேன், பிரகாரம் முழுசா தேடினேன் அவளை காணும், சரி வசந்த மண்டபத்துல தீபாராதனை சேவிக்க போயிருப்பாளோனு நினைச்சுண்டு அங்க போனா அங்க அந்த பல்லுசெட்டு மாமிதான் பாடிண்டு(??!!) இருந்தா, என்னோட கருட பார்வைக்கு அவள் தட்டுப்படவே இல்லை. இருந்தாலும் நான் விடாம அவளை தேடினேன்.
கோந்தை வரது!னு எனக்கு பின்னாடிலேந்து ஒரு குரல், யாருன்னு திரும்பிப் பார்த்தா எங்க நரசு மாமாவாத்து மாமி, என்னடா கோந்தை! பெருமாளையும் தாயாரையும் தவிர வேற யாரையோ கோவில்ல தேடர மாதிரி இருக்கே?னு கரக்டா என்னை மடக்கிட்டா எங்க மாமி, நரசு மாமவுக்கே யோஜனை சொல்ற அளவுக்கு எங்க மாமிக்கு சாமர்த்தியம் உண்டு!னு வரது மாமா மேலும் தொடர்ந்தார்.

இதுக்குமேல எதுவும் மறைக்க முடியாதுனு எனக்கு தெரிஞ்சதால, எங்க மாமிட்ட எல்லாத்தையும் சொன்னேன். மாமி மூலமா விஷயம் எங்க நரசு மாமா காதுக்கு போச்சு.

அவாத்து ரேளில(hall) வச்சு என்னை கூப்டு மாமாவும் மாமியும் பேசினா. என்னடா வரது! மாமி எதோ சொல்ராளே! அதெல்லாம் உண்மையா?னு எங்க மாமாதான் பேச்சை ஆரம்பிச்சார். ஆமா மாமா! மாமி சொன்னது எல்லாம் உண்மைதான்!னு நான் சொன்னேன்.
அந்த பொண்னோட நாமதேயம் கூட நோக்கு தெரியாதுன்னு மாமி சொல்றாளேபா! பேரு கூட தெரியாமையா ஒரு வாரமா வட்டம் அடிச்சுண்டு இருக்கை நீ! யாரு என்ன ஏது?னு விவரம் தெரிஞ்சாதானேபா மேல் கொண்டு கேஸ்ல காய் நகர்த்த முடியும்!னு எங்க மாமா வக்கில் பாஷைல சொன்னார்.

சரி விடு! இன்னிக்கு போய் பெருமாளை சேவிச்சுட்டு, அந்த குழந்தை வந்தானா அவள்ட பேசு! அவளுக்கும் பூர்ண இஷ்டம் இருந்ததுன்னா அவாத்துகாராள்ட நானும் மாமியும் பேசரோம்!னு மாமா முடித்தார்.

சாயங்காலம் பெருமாள் கோவில் முழுசும் தேடினேன், அவளை தவிர எனக்கு தேவை இல்லாத எல்லாரும் கோவிலுக்கு வந்திருந்தா. எனக்கு நம்பிக்கையே போய்டுத்து!னு சுருதி இறங்கின குரலில் மாமா சொல்லவும்.

ச் ச் ச்!னு வைஷூ பரிதாபப்பட்டாள்.

இருந்தாலும் என்னோட வக்கில் புத்தி பல விதத்திலும் யோசிக்க ஆரம்பித்தது. தாயார் சன்னதி முன்னாடி வந்தபோதுதான் எனக்கு ஒரு விஷயம் ஞாபகத்துக்கு வந்தது. தாயார் சன்னதில இருந்த பட்டாசார்யார்ட அந்த பொண்ணு ரொம்ப பவ்யமா பேசினது ஞாபகத்துக்கு வந்தது. இருந்தாலும் திருனெல்வேலிக்காரா வாய்லேந்து ஒரு விஷயம் வாங்கர்து எவ்ளோ கஷ்டம்னு அன்னிக்குதான் எனக்கு தெரிஞ்சது.
மெதுவா அந்த மாமாட்ட பேச்சு குடுத்ததுல அந்த பொண்ணு ஸ்ரீரங்கத்துலேந்துதான் வந்துருக்குனு உறுதி ஆச்சு. ஜங்ஷன்ல இருக்கும் சன்னியாசி கிராமம் 'கனரா பாங்க்'சேஷாத்ரி மாமாவோட மருமாள்தான் அந்த பொண்ணுனு தெரிஞ்சதுக்கு அப்பரம்தான் நிம்மதியே வந்தது!னு மாமா சொன்னார்.

இதுல நிம்மதியாகர்துக்கு என்ன இருக்கு?னு விஜி மாமியும் தன்னை அறியாமல் சந்தேகம் கேட்டாள்.

ஏன்னா, சேஷாத்ரி மாமாவாத்து மாமியும் எங்க நரசு மாமாவாத்து மாமியும் திருப்பாவை கிளாஸ்ல பிரண்ட்ஸ்னு சொல்லி விட்டு வெற்றி பெருமிதத்தோடு வரது மாமா புன்னகை பூத்தார்.

பெருமாள் உங்களை கைவிடலைபா!னு வைஷு தன் சந்தோஷத்தை காட்டினாள்.

எங்க மாமி மூலமா விசாரிச்சதுல அந்த பொண்ணு காலேஜ் கடோசி வருஷம் படிக்கர்து, அவளோட பாட்டிக்கு திடீர்னு உடம்பு சரியில்லாம போனதாலதான் (என்கிட்ட கூட) சொல்லிக்காம கொள்ளிக்காம ஸ்ரீரங்கம் போக வேண்டியதா போய்டுத்துங்கர விவரம் எல்லாம் தெரிஞ்சது. அவளுக்கு ஒரு வரன் அமையர மாதிரி இருக்குங்கர இடி மாதிரியான தகவலும் தெரிஞ்சது.

மறுபடியும் நரசு மாமாவாத்து ரேளில வச்சு மந்த்ராலோசனை நடந்தது. எங்க நரசு மாமாதான் முதலில் பேச்சை ஆரம்பித்தார், டேய் வரது! அந்த பொண்ணுக்கு நிச்சயமா இஷ்டம் இருக்கானு மட்டும் உறுதி பண்ணுடா கோந்தை, மிச்சத்தை நாங்க பாத்துக்கறோம்!னு தைரியம் சொன்னார். ஸ்ரீரங்கம் போகர்தை பத்தியெல்லாம் கவலை படாதே! அங்க என்னோட ஜூனியர் ' நாங்குனேரி' ஆராவமுதன் இருக்கான், என்னோட பேரை சொன்னா அவன் உனக்கு எல்லா சஹாயமும் பண்ணுவான். கேஸ் நம்ப பக்கம் ஸ்ட்ராங்கா இருந்தா எந்த கோர்ட்டுக்கு அந்த கேஸ் மாறினாலும் ஆஜர் ஆகர்துக்கு நாம தயங்க கூடாதுடா கோந்தை!னு எனக்கு புரியற பாஷைல சொன்னார்.

அந்த பொண்ணுக்கு அங்க வரன் ஏற்கனவே அவா பாத்து முடிவு பண்ணியிருந்தானா, நேத்திக்கு கிளம்பிப் போன ரயிலுக்கு நாம இன்னிக்கு டிக்கெட் எடுத்த மாதிரினா ஆயிரும்!னு அதுல உள்ள பாதகமான விஷயத்தை மாமி எடுத்து சொன்னா.

ரயில் கிளம்பிப்போனா என்னடி இப்போ? அடுத்த ஸ்டேஷன்ல விரட்டிப் போய் நம்ப இடத்தை நாம பிடிக்கர்து இல்லையா? முயற்சி செய்யாமையே கேஸ் தோத்ததா நாம எப்படி முடிவு பண்ண முடியும்னு மாமா பாய்ண்டை பிடித்தார்.

அந்த காலத்துலேயே உங்க நரசு மாமா ‘மின்னலே’ படத்துல வர மாதவன் மாதிரி யோசிச்சுருக்கார்!னு அந்த சமயத்துலையும் நம்ப வைஷூ ஜோக் அடித்தது.

மாமா மாமியின் பூர்ண ஆசிர்வாதங்களோட ஸ்ரீரங்கத்துக்கு பொட்டியை தூக்கிண்டு கிளம்பினேன்.அங்க போய் பார்த்த போதுதான் எனக்கு உண்மை விவரமே புரிந்தது!னு மாமா புள்ளி வைத்தார்.
தொடரும்....

Friday, May 28, 2010

விருது பாண்டியர்கள்

தக்குடுவுக்கு 2 விருது கிடைச்சிருக்கு! விருதை தந்தவர்கள் LK & பிரசன்னா Award 1 Award 2 . இங்க வந்துட்டு மனசு விட்டு ஒரு தடவையாவது சிரிச்சுருக்கமாட்டேளா? அதுதான் உண்மையான விருது தக்குடுவுக்கு. கிடைத்த இரண்டு விருதுகளையும் இங்கு வந்து சிரித்து விட்டுச் செல்லும் நண்பர்களுக்கும், தங்களின் நேர்மையான கருத்துகள் மூலம் என்னை திருத்திக்கொள்ள உதவும் பாஸ்டன் அண்ணா & Life is beautiful அக்கா போன்ற நல்லவர்களுக்கும் சமர்ப்பணம் செய்கிறேன்.




வந்த விருதை ஒரு 6 பேருக்கு குடுக்கனும்னு ஆசைபடுகிறேன். விருது எல்லாம் தரும் போது வாங்குபவருடைய சிறப்புகள் எல்லாம் கொஞ்சம் சொல்லிட்டு அப்புறம் குடுக்கர்துதான் அழகு. சும்மா கதவை தட்டி சார் போஸ்டு! மாதிரி குடுக்க கூடாது. திருனெல்வேலி பக்கமெல்லாம் நாம எவ்ளோ பெரிய கோடீஸ்வரனாக இருந்தாலும் பெரிய வித்வான்களுக்கு நாமே நேரடியா மாலையோ/சால்வையோ எல்லாம் போட முடியாது, அந்த வித்வானுக்கு சமமான/உயர்வான வித்வத் உள்ள ஒருத்தர்தான் மரியாதை செய்யமுடியும். அதேபோல் இந்த விருதையும் வயது&அறிவு முதிர்ச்சி உடைய மரியாதைக்கு உரிய திவா அண்ணா தனது பொற்கரங்களால் வழங்கி கெளரவம் செய்வார். விருது வாங்கின வித்வான்களோட விருது,சால்வை மற்றும் பொற்கிழி எல்லாத்தையும் மேடைலேந்து அவா உக்காசுண்டு இருக்கர இடத்துக்கு கொண்டுவந்து சேர்ப்பது மட்டுமே தக்குடுவோட வேலை..:) விருது பெறும் அனைவருக்கும் தக்குடு செலவில் அரைகிலோ தோஹா தங்கம் பொற்கிழியாக வழங்கப்படுகிறது...;)




திருமதி.வல்லிசிம்ஹன்

வல்லியம்மா! என்று பதிவுலகில் அனைவராலும் அன்போடு அழைக்கப்படும் இந்த அம்மையாரை விரும்பாதவரே இல்லை!னு சொல்லலாம். எனக்கு மிகவும் பிடித்த திரட்டிப்பால் கூட சில சமயம் திகட்டிப் போகலாம், ஆனால் இந்த அம்மாவோட தித்திப்பான அன்பும், பரிவும் மிக்க பதிவுகள் திகட்டாத தெள்ளமுதேளோரெம்பாவாய்! எல்லாரும் நல்லா இருக்கனும்!னு இவாளோட பதிவுகள்ல வார்த்தைகளா மட்டும் இல்லாமல் மனதாலும் வாழ்த்தக்கூடிய அற்புதமான ஒரு பெண்மணி & பெண்களில் மணி! குறை என்பதே கண்ணுக்கு தெரியாமல் எல்லாவற்றையும் நிறைவாகவே பார்க்கும் நம்ப வல்லியம்மா எப்போதும் நிறைவான வாழ்வே வாழனும்னு கல்லிடை ஆதிவராகப் பெருமாளை நான் சேவிச்சுக்கறேன். ‘யதார்த்தம் கூடிய பாசம்’ என்ற பிரிவின் கீழ் இவருக்கு இந்த விருது வழங்கப்படுகிறது.

திரு.மதுரையம்பதி அவர்கள்

அம்பிகையை பற்றி அணு அணுவாக அலசி ஆராயக்கூடிய அற்புதமான ஒரு சாக்தர். பெங்களூர்வாசியான இந்த மதுரைக்காரர் பதிவுக்குள்ள நாம போனோம்னா நம்மையும் அறியாம அம்பாள் சம்பந்தமா நிறைய விஷயங்களை அறியலாம். இவருடைய செளந்தர்யலஹரி பதிவுகள் ஒவ்வொன்னும் அற்புதமான ஒரு அனுபவத்தை நமக்கு தரும். கொஞ்சம் கூட விளம்பர மோஹமே இல்லாமல் ஆத்மார்த்தமா எழுதக்கூடிய மிகச்சிலரில் இவரும் ஒருவர். இவருக்கு எல்லா ஸ்ரேயஸும் வாரி வழங்கவேண்டும் என்று பச்சைகிளியை கையில் பிடிக்கும் செல்லக்கிளியாம் மீனாட்சியையும் அவளின் ஆத்துக்காரரையும் பணிந்து துதிக்கிறேன். ‘அருள் மணக்கும் ஆன்மீகம்’ என்ற பிரிவின் கீழ் இவருக்கு இந்த விருது வழங்கப்படுகிறது.

திருமதி. ஷைலஜா அவர்கள்

'குழல் இனிது யாழ் இனிது என்பர் ஷைலஜாவின்
குரலை கேளாதோர்'
Shy + Lajjaa இங்கிலீஷ் & சமஸ்க்ருதம் என இரண்டு மொழியில் அர்த்தம் பார்த்தாலும் நாணம் எனும் அர்த்தம் வரும்படியான ஒரு பெயரை உடைய இந்த பெண்மணி ஒரு பன்முக படைப்பாளி. சிறுகதை, நாவல் என்று எல்லா பிரிவிலும் முத்திரை பதித்துக்கொண்டிருப்பவர். பக்கத்தாத்து மாமாவோட பையன் கல்யாணத்து ஜானுவாச போட்டோல நாம இருக்கர மாதிரி இந்த அக்கா ஜெயகாந்தன், இந்திரா செளந்தர்ராஜன் மாதிரியான பெரிய படைபாளிகளோடு ஒரே மேடையில் அமரும் வல்லமை உடையவர். இவருடைய வீட்டுக்கு நாம போனோம்னா அவருடைய தங்கக்கரங்களால் செய்த சூடான தூள் பக்கோடாவும், காசி ஹல்வாவும் நமக்கு கிட்டும். உங்களுக்கு யோகம் இருந்தா மதுரமான குரலில் ஒரு பாட்டும் கிட்டும். ‘பன்முக படைப்புகள்’ என்ற பிரிவின் கீழ் இவருக்கு இந்த விருது வழங்கப்படுகிறது.

திருவாளர் VGR அவர்கள்

என்னடா இது எதோ பெரிய MGR மாதிரி பேரு இருக்கே?னு போய் எட்டிப்பார்த்து நான் தேடிப்பிடித்த ஒரு நல்ல பதிவர். யாருக்கும் அவ்வளவாக பரிச்சயம் இருக்க வாய்ப்பு இல்லை. இவர் இங்கிலிபீஸில் மட்டுமே எழுதுவார் அதுவும் துரைமார்கள் பாணியில் இருக்கும். முழுவதும் இங்கிலிபீஸ்ல இருக்கும் அந்த வலைபூவில் முத்து முத்தா தமிழ்ல கமண்ட் போட்டு தக்குடு வேடிக்கை பார்க்கும்....:)இருந்தாலும் எனக்கு ‘தாம்பரம் பொண்கள்’ பதிவு மூலம் பரிச்சயமாகி, இவருடைய ‘A question’ பதிவு ஆத்ம விசாரம் போல ஆழமாக சிந்திக்க வைத்த ஒன்று. இவரோட The Lonesome house கதையை படிச்சுடனும்னு நானும் முயற்சி பண்ணித்தான் பாக்கறேன், ஆனால் வேலை பளுவின் காரணமாய் இயலவில்லை..;( 'வித்தியாசமான சிந்தனையாளர்' என்ற பிரிவின் கீழ் இவருக்கு இந்த விருது வழங்கப்படுகிறது

திரு. அண்ணாமலையான் அவர்கள்

'மலை வாத்தியார்'னு பிரியத்தோடு இவரை தக்குடு அழைப்பதுண்டு. விவேகானந்தர் மாதிரி கையை கட்டிக்கொண்டு போஸ் குடுக்கும் இவருடைய பதிவுகள் எதாவது ஒரு முக்கியமான சமுதாய பிரச்சனை தொடர்பாக ஆராயும் நோக்கில் இருக்கும். இவர் ஒரு பதிவுல போடர விஷயம் மட்டும் தக்குடு மாதிரி கத்துக்குட்டிகள் கைல இருந்ததுன்னா 6 பதிவு போட்டுடலாம். நித்தியமும் எதாவது ஒரு மொக்கை போடுபவர்களுக்கு நடுவில் வருஷத்துக்கு மொத்தத்துல 6 பதிவு இவர் போட்டார்னா அதிசயம்தான். ஆனால் இவர் பதிவு போட்டு 4 மாதங்களுக்கு தொடர்ந்து கமண்ட் விழுந்து கொண்டே இருக்கும். சமீபகாலங்களாக ஆளையே காணும், அனேகமா உண்ணாமலையம்மன் சமேதராக வந்து காட்சியளிக்கப் போறாரோ என்னவோ?..:) 'சிறந்த சமுதாய சிந்தனையாளர்' என்ற பிரிவின் கீழ் இவருக்கு இந்த விருது வழங்கப்படுகிறது.

திருமதி.மதுரம் அவர்கள்

பெயருக்கு ஏற்ற மாதிரியே நல்ல நகைச்சுவை உணர்வு இவருக்கு உண்டு. 'உடம்பை வளர்த்தேனே உயிரை வளர்த்தேனே' என்னும் திருமூலர் வாக்குப்படி உடம்பை நல்ல முறையில் வைத்துக் கொள்ளும் அருமையான சைவ உணவு பதார்த்தங்களை செய்து அதை போட்டோவுடன் போட்டு என்னை போன்ற சிறுகுழந்தைகளின் நாவில் எச்சில் ஊறச்செய்பவர். சைவ உணவுவைகைகள் மட்டுமே செய்து வருவது பாராட்டுதலுக்கு உரிய ஒரு விஷயம். 'சமையல் கலை திறன்' என்ற பிரிவின் கீழ் இவருக்கு இந்த விருது வழங்கப்படுகிறது.

முக்கியக் குறிப்பு - இன்னோரு விஷயத்தையும் இந்த சமயம் தெளிவுபடுத்த விரும்புகிறேன். தக்குடு ஒரு கற்பனை கதாபாத்திரம், உண்மையான ஆசிரியரின் குணாதிசியங்களில் இருந்து முற்றிலும் மாறுபட்ட ஒரு வடிவம்தான் தக்குடு! எல்லா மனுஷாளையும் சந்தோஷப்படுத்தி பாக்கர்துக்காக ஸ்ருஷ்டிக்கப்பட்ட ஒரு கானல் நீர். இங்கு பதியப்படும் செய்திகள் ஹாஸ்யத்தின் பொருட்டுமட்டுமே, எனவே படித்து/சிரித்துவிட்டு( நன்றாக இருந்தால் மட்டும்)அதை மறந்துவிடவும். இதை அடிப்படையாக கொண்டு ஆசிரியரின் உண்மையான உடன்பிறப்பிடம் கேள்விகள் எல்லாம் கேட்டு அவனுக்கு தர்மசங்கடத்தை உருவாக்கவேண்டாம். உண்மையான ஆசிரியருக்கு தெரிந்தது மட்டுமே எழுத வேண்டும் என்றால் Breakeven point in investment, Portfolio management, Institutional investors, Revised international accounting standard, Project inspection போன்றவை மட்டுமே எழுத முடியும்...:) மறுபடியும் சொல்கிறேன் தக்குடு ஒரு கற்பனை கதாபாத்திரம் & முற்றிலும் நிஜ ஆசிரியருக்கு சம்பந்தம் இல்லாத ஒரு ஸ்ருஷ்டிப்பு.

Friday, May 21, 2010

புளியோதரையும் தச்சு மம்முவும் 2

புதுசா வந்திருக்கேளா? நோ ப்ராப்ளம் இதோ Part 1 உங்களுக்காக..;)

அங்க இருந்த பெரிய மணியை டைண்! டைண்!னு யாரோ அடிச்சா, இசை வந்த திசை பார்த்து திரும்பினேன். அங்க பார்த்தா அழகான கேடயத்துல ஸ்வாமியையும் தாயாரையும் வச்சு எழப்பண்ணி கொண்டுவந்துண்டு இருந்தா!னு வரதாச்சாரி சொன்னார்.
அப்பா! கேடயம்னா என்னது? என்ன விஷேஷம் அன்னிக்கு?னு வரதாச்சாரி முடிக்கர்துக்குள்ள நம்ப வைஷூ சந்தேகம் கேட்டுது.
லவ்ஸ்டோரிக்கு நடுல இதெல்லாம் உங்களாலதான் சொல்லமுடியும்!னு விஜி மாமி பெருமைபட்டுக்கொண்டாள்.
இருடி கோந்தை! அவசரபடாம கேக்கனும், எனக்கும் ஸ்வாமியை எதுக்கு எழபண்ணறானு தெரியாததால வேற வழி இல்லாம ஒரு மாமிட்ட கேட்டேன்!னு வரதாச்சாரி தொடர்ந்தார்.
அன்னிக்குதான் வசந்தோத்ஸவம்!னு அந்த மாமி சொன்னா. உன்னோட கேடயம் கேள்விக்கு பதில் சொல்லறேன் மொதல்ல. கேடயம்ங்கர்து ஸ்வாமியை எழப்பண்ணர்துக்கு உபயோகபடுத்தர ஒரு குட்டி சப்பரம் மாதிரி, விஸ்தாரமா எல்லாம் எடம் இருக்காது. ஸ்வாமியும் தாயாரும் மட்டும்தான் அதுல அமர்த்த முடியும்.
அப்போ! திருப்பதி பெருமாள் வாகனம் மாதிரி 4 ஐயங்கார் மாமா எல்லாம் சைடுல உக்காரமுடியாது இல்லையா?னு வைஷு தொடர்ந்தாள்.
ஆமாம், அப்புறம் அந்த கேடயத்தை நன்னா ‘ஜிங்கு’னு இருக்கும் 6 பேர்தான் தூக்கிண்டு வருவா. வஸந்தோத்ஸவம் 10 நாள் நடக்கும். பத்து நாளும் ஸ்வாமிக்கு ஹாலிடே மாதிரிதான். உற்சவர் தாயார் ஸஹிதமா வசந்த மண்டபத்துலதான் சேவைசாதிப்பார். ஸ்வர்ணகவசம்,வெள்ளிகவசம் எல்லாம் போட்டுக்க மாட்டார். இப்போ இருக்கும் கம்பெனிகளோட வெள்ளிக்கிழமை காஷுவல் ட்ரெஸ் மாதிரி ரொம்ப சிம்பிளா இருப்பார். இதை பத்தி திருப்பாவைல கூட ஆண்டாள் சொல்லிரிருக்காளே தெரியுமா நோக்கு?னு வைஷுவை கேட்டார் வரதாச்சாரி.

எந்த பாசுரத்துல வருதுப்பா?னு அவசரமா கேட்டாள் வைஷ்ணவி.

'ஓங்கி உலகளந்த உத்தமன் bare body!'நு வருது பாத்தியா!னு சொல்லிட்டு விஜி மாமியை பார்த்து கண்ணை சிமிட்டினார் மாமா.
இந்த வக்கில்களே இப்படித்தான்! எதாவது சாதுர்யமா சொல்லி நம்மை சொக்கவச்சுருவா!னு தன்னை அறியாமல் மாமாவை பற்றி விஜிமாமி உருகினாள்.
அப்பா! இப்போ தெரியர்து! நம்ப கோமளா மாமியை எப்பிடி கைபிடிச்சேள்னு! என்று வைஷு கொக்கரித்தாள்.
அதுமட்டும் இல்லாம நித்யம் திருமஞ்சன கைங்கர்யம் ஸ்வாமிக்கு ஆனதுக்கு அப்பரம் ஒரு உருண்டை சைஸ் உள்ள நன்னா அறைச்ச சந்தனத்தை குளுர்ச்சிக்காக ஸ்வாமியோட திருமார்புள சாத்திடுவா!னு வரதாச்சாரி தொடர்ந்தார்.
பெருமாளோட ஹ்ருதயகமலத்துலதான் குளுர்ச்சியே உருவான மஹாலெக்ஷ்மி தாயார் இருக்காளேப்பா! அதை விடவா அந்த சந்தனம் குளுர்ச்சியை தரபோர்து பெருமாளுக்கு!னு ஸ்ரீவத்சன் கேள்வி கேட்டு தான் வரதாச்சாரி பரம்பரை என்பதை நிரூபித்தான்.
சரிதான்டா கோந்தை! அந்த சந்தனம் அடுத்த நாள் காத்தால மண்டகப்படிகாராளுக்கு பிரசாதமா குடுப்பா,பெருமாள் & தாயாரோட பிரஸாதமா அதை அவாளும் ஆசையோட ஸ்வீகரிச்சுப்பா!னு வரதாச்சாரி சொன்னார்.
சாயங்காலம்தான் ரொம்ப நன்னா இருக்கும். வஸந்த மண்டபத்துக்கு எதிர்ல இருக்கும் ஒரு தோட்டம் மாதிரியான ப்ருந்தாவனத்தை ஸ்வாமி தாயார் சகிதமா 10 தடவை சுத்தி வருவார். முதல் இரண்டு தடவை ஸ்வாமி பிரதக்ஷிணம் பண்ணிட்டு வந்ததுக்கு அப்புறம் பிரபந்த கோஷ்டிகாரா ஸ்வாமிக்கு பிரபந்தம் சாதிச்சு சந்தோஷபடுவா. திருனெல்வேலி வேதமும் சங்கீதமும் நன்னா தழச்சு இருக்கும் ஊர் அதனால அடுத்த 2 பிரதக்ஷிணம் கழிஞ்சு வேதபாராயணமும்,பஜனையும்,ஒரு பாட்டும்,சங்கனாதமும் அதை தொடர்ந்து கடோசில நாதஸ்வரத்துல ஒரு ராகத்தோட முடியும்.
னு சொல்லிட்டு வரதாச்சாரி மேலும் தொடர்ந்தார்.
இந்த உத்ஸவத்துக்கு நடுவுல சம்பந்தமே இல்லாத ஒரு முகத்தை நான் பார்த்தேன். அந்த பொண்ணோட மூக்கை பாத்தோனையே அது ஸ்ரீரங்கத்து தேவதைனு எனக்கு புரிஞ்சுடுத்து!னு பொடி வச்சார் மாமா.
மூக்கை பார்த்து எப்பிடி நாம முடிவு பண்ணமுடியும்!னு வைஷு கேட்டாள்.
ஈஸியா பண்ணளாம்டி கோந்தை! ஸாமுத்ரிகா லக்ஷணவிஷேஷப்படி மூக்கையும் முழியையும் வச்சே அவா எப்பிடிபட்டவானு சொல்லிடலாம், அதுலையும் நம்ப ஐயங்கார்கள்ல மூக்கை வச்சே அவா எந்த ஊர் ஐயங்கார்னு சொல்லிடலாம்!னு பெரிய ஆராச்சியாளர் மாதிரி மாமா அள்ளிவிட்டார்.
ஸ்ரீரங்கத்துகாராளுக்கு மூக்கு எப்பிடி இருக்கும்?னு விஜி மாமி எதோ சம்பூர்ணராமாயணம் மண்டோதரி மாதிரி மாமாட்ட கேட்டாள்.

ஸ்ரீரங்கத்து பொண்களுக்கு மூக்கு நன்னா தீர்க்கமா இருக்கும், நான்குனேரி பக்கமா இருந்தா கொஞ்சம் மூக்கு சின்னதா இருக்கும், திருக்கணங்குடி பொண்களா இருந்தா அவாளோட மூக்கு பளபளப்பா இருக்கும், திருக்கோஷ்டியூர் பொண்களுக்கு மூக்கு நார்மலா இருக்கும்!னு மாமா டேட்டாபேஸ்லேந்து எடுத்து விட்டார்.
அப்பா, நீங்க அட்வகேட்டா இல்லைனா ENT specialistஆ!னு ஸ்ரீவத்சன் நக்கல் அடித்தான்.
இதெல்லாம் ஜென்ரல்னாலேட்ஜ்ரா கண்ணா! இவ்ளோ தெரிஞ்சுருந்தாலும் மனசுல விகல்பம் கிடையாதுடா கோந்தை!னு சொன்னார் வரதாச்சாரி.
சரி சரி! அதுக்கு அப்புறம் என்ன ஆச்சு?னு வைஷூ கரெக்டா பாய்ன்டை பிடிச்சா.
இந்தகாலத்து பொண்கள் மாதிரி கண்ணுக்கு தெரியாத இல்லைனா பாம்பு/பல்லி பொட்டு எல்லாம் வச்சுக்காம அழகா எல்லாரும் ஸ்ரீசூர்ணம் இட்டுண்டு இருப்பா, அந்த பொண்ணும் அழகா மஹாலக்ஷ்மியாட்டம் ஸ்ரீசூர்ணத்தோட பளிச்னு இருந்தா. கல்யாணம் ஆகலைங்கர்துக்கு அடையாளமா ஸ்ரீசூர்ணம் சின்னதா இருந்தது.
பெருமாளுக்கு அந்த பக்கம் வந்துண்டு இருந்தா அந்த பொண்ணு, எனக்கு திருப்பி பாக்கனும்னு ஆவல் எல்லாம் ஒன்னும் இல்லாட்டாலும், எங்கையோ பாத்த மாதிரி இருந்ததால 2 -3 தடவை பாத்தேன்! மாமா சமாளிச்சார்.
அப்போ 20-30 தடவை பாத்துருக்கேள்னு அர்த்தம் இல்லையாப்பா?னு ஸ்ரீவத்சன் சிரிச்சுண்டே தொடர்ந்தான்.
இதுக்கு நடுல பெருமாள் குறுக்க குறுக்க வந்து அந்த பொண்ணை மறைச்சுண்டே இருந்தார். வேற யாராவதா இருந்தா, செத்தே தள்ளிக்கோங்கோ!னு விலக்கி விடலாம், பெருமாளை என்ன பண்ணமுடியும்?னு நான் யோசிசுண்டு இருக்கும்போது ஒரு மாமா என்னோட கைல ஒரு வெண்சாமரத்தை குடுத்து, ‘ஸ்வாமிக்கு வீசிண்டே வாடா அம்பி!’னு சொல்லி அந்த பொண்ணுக்கு பக்கத்துல ஒரு இடத்தையும் காட்டினார். அந்த மாமா என்னோட கண்ணுக்கு பெருமாளாவே தெரிஞ்சார். ‘பெருமாள்!! யூ ஆர் ரியலி கிரேட்!’னு பெருமாளை சிலாகிச்சுண்டு (அந்த பொண்ணை பாத்துண்டே)சாமரமும் வீசிண்டு வந்தேன்!னு மாமா விவரித்தார்.
சாமரம் பெருமாளுக்கு போட்டேளா? இல்லைனா பெருமாளுக்கும் போட்டேளா?னு வைஷுகுட்டி மாமாவின் வாயை பிடிங்கினாள்.
இப்படியே ஒரு வாரமா நித்யம் சாமர கைங்கர்யம் பண்ணின்டே நாச்சியாரையும் பாத்துண்டே இருந்தேன். ஆனால் அந்த பொண்ணு என்னை பாத்ததாவே தெரியலை!னு மாமா குறைபட்டுக்கொண்டார்.
அச்சச்சோ! அப்ப அந்த பொம்ணாட்டி ஒரு தடவை கூட உங்களை திரும்பி பாக்கலையாப்பா?னு வைஷு வருத்தப்பட்டாள்.
அவளுக்கு அன்பே வா! எம்ஜியார் பிடிக்காதோ என்னவோ?னு விஜி மாமி சமயம் பாத்து காலைவாரினாள்.
போடி அசடு! இந்த பொம்ணாட்டிகள் நம்பளை எதேசையா கூட பாக்காத மாதிரி காட்டிண்டானா நம்மை மட்டும்தான் கவனிச்சுண்டு வரானு அர்த்தம்!னு வரதாச்சாரி உற்சாகமா தொடர்ந்தார். இந்த வரதாச்சாரியோட யூகம் சோடை போகலை, ஒரு நாள் மெதுவா என்னை பாத்து ரேஷன் basis-ல சிரிச்சா!னு தனது வெற்றியின் முதல் அறிகுறியை விவரித்தார் மாமா.

7-வது நாள் உத்ஸவத்து அன்னிக்கு சாயங்காலம்தான் அந்த எதிர்பாராத சம்பவம் நடந்தது...........(தொடரும்)

(குறிப்பு - வார்த்தைகள் எதுவும் புரியலைனா கமண்ட்ல வந்து கேளுங்கோ தக்குடு அல்லது தெரிஞ்ச யாராவது உங்களுக்கு பதில் சொல்லுவா சரியா!!..;) )

Friday, May 14, 2010

புளியோதரையும் தச்சு மம்முவும்

திருவல்லிக்கேணியின் அழகான ஒரு தெருவில் இருக்கும் அந்த வீட்டின் கதவில் ஸ்ரீவில்லிப்புத்தூர் ரெங்கமன்னார் ஸ்வாமி கோதை நாச்சியார் சகிதமாக சிரித்த முகத்துடன் வருபவர்களை வரவேற்றுக்கொண்டிருந்தார். அதை தாண்டி உள்ளே வருபவர்களுக்கு ஸ்ரீரங்கத்து ரெங்கனாதரும் தாயார் சகிதமாக ஹாலில் காட்சியளித்துக்கொண்டிருந்தார். இன்று அந்த வீட்டின் நிலைவாசலில் மாவிலை தோரணங்கள் பொலிவோடு காட்சி அளித்தது. வீட்டின் மூத்த வரதாச்சாரி மாமா பூஜை ரூமில் சாலிக்கிராம பூஜையை பூர்த்தி பண்ணிட்டு சக்கரத்தாழ்வார் பக்கம் தன்னுடைய கவனத்தை திருப்பி இருந்தார். இனிமே உள்ள விஷயம் முழுவதும் நாம அவாத்துக்கே போய் பாக்கலாம்.

சரக்! சரக்!னு சத்தம் போடும் புது பட்டுப்புடவையை(ரெங்காசாரியில் வாங்கினது) அழகான ஐயங்கார்கட்டு கட்டிண்டு வந்த கோமளவல்லி மாமியை அவாத்து கடை குட்டி வைஷ்ணவி வழிமறித்தாள்.
யே கோமளா!கல்யாணப்பொண்ணு மாதிரி இருக்கைபோ! நோக்கு கல்யாணம் ஆகி 25 வருஷம் ஆச்சு!னு சொன்னா ஒருத்தரும் நம்ப மாட்டா! ஆனா கோமளா, பட்டுப்புடவையை விட உனக்கு கோராகாட்டந்தான் நன்னா இருக்கும்.
(வெட்கம் கலந்த குரலில்) போறுமே! அம்மாவை பேர் சொல்லி கூப்டதோடு இல்லாம ஜாதகப் பேரை சொல்லி கூப்பட்ரையா!!னு கோமளா மாமி பொய் கோவம் கொண்டாள். மாமிக்கு விஜி!னு கூப்டாதான் பிடிக்கும் கோமளா!னு அவாத்து மாமா மட்டும் தான் கூப்பட்லாம்.
டே வத்ஸூ! இங்க வந்து பாருடா நம்பாத்து கல்யாணப்பொண்ணை!னு வைஷூ ஹால்லேந்து கத்தினாள்.
அழகா ஸ்ரீவத்ஸன்னு இருக்கர உங்க அண்ணா பேரை எதோ கல்யாண பந்தில வெண்பொங்கலை களத்துல போட்டுண்டு 'மாமா கொஞ்சம் கொத்ஸு!'னு கூப்பட்ரமாதிரி கூப்பட்ரீயேடி கழுத!!னு விஜி மாமி செல்லமா கோவப்பட்டாள். இதுக்கு நடுவில் பூஜையை முடிக்கப்போறார்ங்கர்துக்கு அடையாளமா குஞ்சு ஆஞ்சனேயரை கைபிடியாக கொண்ட கைமணியை அடித்தார் அவாத்து மாமா. மொத்த குடும்பமும் கர்பூரஹாரத்தி பாக்கர்துக்கு பூஜை ரூம் முன்னாடி ஆஜர் ஆனது. விஜி மாமி 10 நிமிஷம் முன்னாடியே நன்னா மணக்க பச்சக்கர்பூரம் எல்லாம் போட்டு திருக்கண்ணமுது நிவைத்யத்தை ஒரு வெள்ளி பாத்ரத்தில் விட்டு இலை கிழிசலால் மூடி ரெங்கனாதர் படம் பக்கத்துல வச்சுட்டா. 'ராஜாதி ராஜாய' நீராஜன மந்த்ரம் முழங்க கர்ப்பூர ஹாரத்தியும் அதை தொடர்ந்து பல்லாண்டும் சாதிச்சார் மாமா.

ஹாரத்தியை எல்லாரும் ஒத்திண்டதுக்கு அப்பரம் ஸ்வாமி சேவிச்சுட்டு, அப்பரம் விஜி மாமி மாமாவை சேவிச்சா, யே பட்டூ!(சந்தோஷமான சில தருணங்களில் இப்படியும் கூப்டுவார்)வருஷத்துல இந்த ஒரு நாள்தாண்டி நீ பெரிய 'பதிவ்ரதா சிரோண்மணி' மாதிரி நேக்கு நமஸ்காரம் எல்லாம் பண்ணரை!னு மாமியோட வாயை கிண்டினார்.
போறும்! போறும்! கல்யாணம் ஆன பொண்ணையும், ஆகப்போற புள்ளையாண்டானையும் வச்சுண்டு பேசர பேச்சா இது?னு நமஸ்காரம் பண்ணி எழுந்திருச்சுண்டே பதில் சொன்னாள். வரதாச்சாரியோட குடும்பத்துல ஒளிவு மறைவே கிடையாது, எல்லாருமே ஆத்துக்குள்ள பிரண்ட்ஸ் மாதிரிதான் பேசிப்பா, வைஷ்ணவியோட ஆத்துக்காரர் ரெங்கபாஷ்யம் அமெரிக்கால பாஸ்டன் சிட்டியில் சாப்ட்வேர்ல வேலை பார்க்கும் சாப்டான ஒரு பையன். குட்டி ரெங்கபாஷ்யம் இன்னும் 3 மாசத்துல வெளில வந்துடுவார்ங்கர்துனால வைஷூ அம்மாவாத்துக்கு வந்துருக்கா.
அப்பா! அப்பா! உங்களோட ஓல்ட் லவ்ஸ்டோரியை ஒரு தடவை சொல்லுங்கோளேன்!னு வைஷூ ஆரம்பிக்க, ஸ்ரீவத்சனும் ஜோதியில் ஐக்யமானான். உங்களுக்கு வேற வேலையா இல்லையா?னு சிணுங்கிக்கொண்டே சுவாரசியமாகவும் ஹாஸ்யமாகவும் இட்டுக்கட்டி அழகாக கதை சொல்லும் அவாளோட ஆம்படையானோட லவ் ஸ்டோரியை கேக்கர்துக்கு விஜி மாமியும் தயாரானாள்.

ரவிசந்திரன்,பாலையா, நாகேஷ் நடிச்ச ‘காதலிக்க நேரமில்லை’ படத்துக்கு அப்பரமா அவாத்து மாமா சொல்லும் அந்த ஓல்ட் லவ்ஸ்டோரிதான் ரொம்ப பிடிக்கும்.
ஹஹம்ம்!னு தொண்டையை சரி பண்ணிண்டு மாமா தன்னோட ஓல்ட் லவ்ஸ்டோரியை சொல்ல ஆரம்பிச்சார்.
அப்போ நான் அன்பே வா! எம்ஜியார் மாதிரி இருப்பேன் பாக்கர்துக்கு, ஸ்ரீவில்லிப்புத்தூர்ல பி.ஏ, பி.ல் பண்ணிட்டு நெல்லை ஜங்கஷன்ல இருந்த சீனியர் கிரிமினல் லாயரான என்னோட தாயதிக்காரர் ஸ்ரீ முஷ்னம் நரசிம்மமூர்த்தி மாமாட்ட அஸிஸ்டென்ட்டா ஒர்க் பண்ணின்டு இருந்தேன். அவரோட பேருதான் எதோ மிருதங்கவித்வான் மாதிரி இருக்கே தவிர மஹாகெட்டிக்காரர்.சனிக்கிழமை தோறும் அங்க இருக்கும் ஜங்ஷன் வரதராஜபெருமாள் கோவிலுக்கு போவேன், பக்தியெல்லாம் ஒன்னும் கிடையாது, சனிக்கிழமை காத்தால அந்த ஸ்வாமிக்கு இலுப்பசட்டி தோசை வார்த்து நிவைத்யேம் பண்ணுவா, அங்க மட்டும்தான் அது உண்டு. திருனெல்வேலில இருக்கர்துனாலையோ என்னவோ அங்க இருக்கர ஸ்வாமிக்கு கூட நாக்கு 4 முழம். இப்படியே எல்லா சனிக்கிழமையும் தவறாம போய் அங்க இருக்கர ஸ்வாமீட்ட நல்ல பேரு வந்ததோ இல்லையோ, நிறையா மாமிகளுக்கு என்னை பிடிச்சு போச்சு! (விஜி மாமி முகத்தை வெட்டிக்கொண்டாள்).
ம்ம்ம்! அப்பரம் என்ன ஆச்சு?னு வைஷூ ஆர்வமா அவசரபடுத்தினா .
கதை சொல்றவாளுக்கு பெரிய பூஸ்டே அதை கேக்கரவா ஊமையாட்டம் இருக்காம கரக்டா இடைவெளி விட்டு ம்ம்ம்!சொல்லனும்(ப்ளாகா இருந்தா, ஒழுங்கா கமண்ட் போடனும்..:)), அதை வைஷூ கணகச்சிதமா செய்வாள்.

பட்டூ! கொஞ்சம் தேர்த்தம் கொண்டுவாமா!னு வரதாச்சாரி சொல்லிமுடிக்கர்துக்குள்ள குதிரை உசரத்துக்கு இருக்கும் ஒரு டம்ப்ளர் நிறைய தேர்த்தம் அவருடைய கையில் இருந்தது.க்ஹா!னு அதை குடிச்சுட்டு பாகவதர் மாதிரி கதையை தொடர்ந்தார்.
இப்படியே போய்ண்டிருந்த போது , ஒரு சனி கிழமை நரசு மாமாவாத்து மாமி கோவிலுக்கு வந்துட்டா! மாமிகள் பட்டாளத்துக்கு நடுல அங்க நான் பேசிண்டு இருந்ததையும் சிரிச்சுண்டே பாத்துட்டு போய்ட்டா, எனக்கு கொஞ்சம் பயம், மாமி ஒரு வேளை நம்மை பத்தி தப்பா எடுத்துண்டுருவாளோ?னு. ஆனா அந்த மாமிக்கு தங்கமான மனசு, அவாளே இரண்டு நாள்ல(மாமா இல்லாதபோது) அதை பத்தி பேச்சை ஆரம்பிச்சா.
கோந்தை வரதா! கோவில்ல நோக்கு பெரிய ரசிகைகள் பட்டாளமே இருக்கு போலருக்கு?(குசும்புக்கார வைஷு இப்போ அம்மாவோட முகத்தை பாத்தது). வரதா! சும்மா கல்யாணம் ஆன வயசான மாமிகள்ட பேசிண்டு இருந்தா ஒரு பிரயோஜனமும் கிடையாதுடா கோந்தை!னு ரொம்ப சாதாரணமா ஒரு பெரிய உண்மையை எனக்கு எங்க மாமி சொன்னா. அப்போதான் எனக்கு புரிஞ்சது, அட மூளை கெட்ட வரதா! எவ்ளோ நாளை பாழாக்கி இருக்கைடா!னு எனக்கு நானே சொல்லிண்டேன். அடுத்த சனிக்கிழமை வரதராஜர் கோவிலுக்கு போன போது மாமிகள் யார்டையும் ரொம்ப நேரம் எல்லாம் பேசலை, திடீர்னு தீபாராதனைக்காக அங்க இருந்த பெரிய மணியை டைண்! டைண்!னு யாரோ அடிச்சா, இசை வந்த திசை பார்த்து திரும்பினேன். அங்க பார்த்தா.............
(தொடரும்)

குறிப்பு - முதல் தடவை கதை முயற்சி பண்ணியிருக்கேன். அதனால குத்தம் எல்லாம் சொல்லக்கூடாது. கதை எழுதர்து எவ்ளோ கஷ்டமா இருக்கு! (த்ரில்லர் கதை எழுதின நம்ப கழக போர்வாள் 'சியாட்டில் சிங்காரி'க்கு சிலைதான் வைக்கனும். அடப்பாவி தங்ஸ்சையும் சேர்த்துதான். நம்ப ஹரிணி மேடம் கதையும் சூப்பரா இருந்தது.). கதை கேட்டவா எல்லாரும் ஒழுங்கு மரியாதையா வந்து கமண்ட் பொட்டில ம்ம்ம்!கொட்டிட்டு போங்கோ! இல்லைனா ராத்ரி ஸ்வப்னத்துல பெருமாள் வந்து சத்தம் போடுவார்...:)