Saturday, August 30, 2025

ஊருக்கு போலாமா? (PART 2)

டிரைவர் அண்ணாச்சிகிட்ட பேசிண்டே போய் சீட்ல உக்காந்தாச்சு. தூங்கி எழுந்தா காத்தால சேரன்மாதேவி ரெயில்வே கேட் தாண்டியாச்சு. கல்லிடைல போய் இறங்கும் போதே தெருல பாதி தூரம் பந்தல். பந்தல் தோரணம் இதை எல்லாம் பார்க்கும் போதே நமக்கு பாதி உத்சாகம் வந்துடும். உண்மையில் நம்முடைய மனம் சந்தோஷ அலைக்கு வரர்துக்கு பல விஷயங்கள் தேவையா இருக்கு. வழக்கம் போல தெருவில் சிலபல அன்பான விசாரிப்புகள். தெரு பிள்ளையாருக்கு இருபத்தஞ்சு வருஷத்துக்கு பிறகு கும்பாபிஷேகம். தெருவே ஜே ஜேனு இருந்தது. போன கும்பாபிஷேகத்தின் போதும் அடியேன் கலந்து கொண்ட நினைவுகள் இன்னும் அப்பிடியே மனசுல இருக்கு. நல்ல நினைவுகள் மனசுல மறையாம இருந்தா தப்பு கிடையாது. அந்த சமயம் எனக்கு வெறும் பன்னிரண்டு வயசு தான். அஞ்சு நாளும் தெருவுக்கே சாப்பாடு. ஒரு நாள் மெனுல இருந்த சாமான் அடுத்த தடவை திரும்பி வராதமாதிரி விதவிதமா சாப்பாடு போட்டா. சாதாரணமாவே ஸ்வீட்டெல்லாம் திதுச்சுகட்டியா இருக்கும் கும்பாபிஷேகத்துல இன்னும் ஜாஸ்தியா இருந்தது. ‘பாயாசத்துல மைசூர்பாவை கலந்து ஒரு மாமா சுகமா அடிக்கரார்! சுகர் வராதவாளுக்கும் வந்துடும் உங்க ஊர் சாப்பாடு சாப்பிட்டா’னு தங்கமணி அடிகடி கிண்டல் பண்ணுவா. கல்லிடை காஸ்மோபொலிடன்ல எல்லாமே கொஞ்சம் ஜாஸ்திதான்னு சொல்லிண்டு இருக்கும் போது ‘கொழுப்பும் நக்கலும் கூட சேர்த்துங்கோங்கோ’னு காலை வாருவா. ‘நீ என்ன வேணும்னாலும் சொல்லிக்கோ! எங்க ஊர் நானா மாமா வெக்கரமாதிரி பால் பாயாசம் மெட்ராஸ்காரா கனவுல கூட சாப்டு இருக்க மாட்டா. இன்னும் சொல்லணும்னா கண்ணால பாத்து கூட இருக்கமாட்டா. மெட்ராஸ்ல வெக்கரதுக்கு பெயர் பாலும் பாயாசமும் எங்க தெருல வைக்கரதுக்கு பேர்தான் பால்பாயாசம்’னு நான் சொல்லும் போது அவளுக்கும் கல்லிடை பாயசம் தான் பிடிக்கும் அப்பிடிங்கர்தால தங்கமணி பதில் சொல்லாம ஜகா வாங்கிடுவா. சூடான பால் பாயாசத்தை இலைல விட்டு சாப்பிடும் ருசியே தனிதான். அதுவும் பாயாச வாளியை தூக்கிண்டு சுப்பாமணி மாமா வந்தார்னா அன்னிக்கு அவ்ளோதான்! ஜோலி முடிஞ்சது! சாதாரணமா பெரிய கரண்டில ரெண்டு கரண்டி விடுவார். கர்பவதியா இருந்தா கூடுதல் அரை கரண்டி விட்டுட்டு ‘உள்ள இருக்கர கோந்தைக்கு வேண்டாமாடி! பேசாம சாப்பிடு!’னு சொல்லிட்டு போயிடுவார். மூனு ரவுண்ட் பாயாசம் விட்டதுக்கு அப்புறம் தான் மோர் சாதத்துக்கு சாதம் போட ஆள் வரும். நூறுபேர் ஒரு வரிசைல இருந்தாலும் யாருக்கு என்ன வரலைனு பாத்து கவனமா பரிமாறனும். சாப்பாடு விஷயம் சரியா இல்லைனா கூப்பாடு போட ஆரம்பிச்சுடுவா. வேத பாராயணக்காராளுக்கு தனியா பந்தி நடக்கும். அவாளுக்கு விஷயம் தெரிஞ்ச நாலு பேர் தான் பரிமாறுவா. எல்லாரும் வாளியை தூக்கிண்டு வந்துட முடியாது.
ஊர்லேந்து இருபது வருஷம் முன்னாடி வெளில போனவா கூட அடிச்சுபிடிச்சு எப்பிடியாவது எல்லாரையும் பாக்கலாம்னு ஆசைல வந்துடுவா. ‘நீ மாட்டுங்கால எங்க இருக்கை?’ ‘முன்னாடி அந்தேரில இருந்தை இல்லையோ?’ ‘சாமிலி இப்ப டோம்லிலையா இருக்கா?’ ‘அச்சா! நீ மூனாவது ஓர்படி இல்லையா?’ ‘முல்லண்டுல ஒரு கூனியூர் மாமா அப்பளாம் வியாபாரம் பண்ணின்டு இருந்தார் இல்லையா அதே தெருல தான் என்னோட ரெண்டாவது புள்ளை வீடு வாங்கியிருக்கான்!’ அப்பிடினு பாம்பே மாமிகள் கூட்டம் ஒரு ஓரமா ரீயூனியன் நடத்திண்டு இருப்பா. ‘கரோல் பாக் கிட்ட கான் மார்கெட் இருக்கில்லையா? அதுலேந்து நம்பாம் ரொம்ப கிட்ட’ ‘படேல் சவுக் மெட்ரோ ஸ்டேஷன் வந்துட்டு கால் பண்ணினா போதும் நான் வந்துடுவேன்’ ‘மயூர் விஹார்ல நான் இல்லை என்னோட மச்சினர் தான் இருக்கார்’னு ஒரு பக்கம் டெல்லி மாமா மாமிகள் விலாசம் மாறினதை விலாவரியா பாத் கர்ணாஹை. ‘கொச்சின் சாஸ்தா பிரீதில ஏது ஒன்னை காணர்தில்லை?’ ‘நூரணி தேருக்கு நாங்களும் போயிருந்தோம் கேட்டேளா!’ ‘நம்ப பெருமாள் கோவில் தேருக்கு வந்துட்டு ஆராட்டுக்கு ஆராக்கும் வந்தது?’னு சம்சாரிச்சுண்டு இருந்தா அதெல்லாம் வாயால சண்ட மேளம் வாசிக்கும் எண்ட கேரளம் கோஷ்டி. ‘இப்ப நங்கனல்லூர்லையே வராஹா அப்பளாம் வந்தாச்சே! குருவாயூரப்பன் கோவில் போர வழில இருக்கு பாருங்கோ!’ ‘நம்பாத்துக்கு நம்ப மஹாதேவன் தான் இப்ப வாத்யார். போன வருஷம் அப்பாவோட ஆடச்ராத்தத்துலேந்து அவன் தான் வரான்’ ‘பெங்களத்தூர் சங்கீதா ஹோட்டலுக்கு பக்கத்துல என்னோட பொண் இடம் வாங்கி தனியா வீடு கட்டி கிரஹபிரவேசம் பண்ணியாச்சே!’ ‘சங்கீதால பொங்கல் பண்ணினா இவாத்துல நெய் மணக்கும்’ னு சென்னை வாழ் கிராமத்துக்காரா பேசிண்டு இருந்தா. ‘இந்த டிரம்ப் *யோளி சும்மாவே இருக்க மாட்டேங்கரானே? டெய்லி காத்தால எந்திரிக்கும் போதே எவன் தாலிய அறுக்கலாம்னு வரானே! சதாபிஷேகம் பண்ணர வயசுல எதுக்கு யாரோ ஒருத்தியை பாத்து கண்ண காட்டிண்டு இருக்கான்? உங்களுக்கு இவனை தவிர வேற ஆளே கிடைக்கலையாடே? ஹெச் ஒன் பி! கிச் ஒன் பி! எல்லாம் சோலி முடிஞ்சதுனு சொல்லிக்கராளே? இவன் சங்காசமே வேண்டாம் பெங்களூரோட வந்துடு கோந்தைனு எங்காத்து பொண்ட போன வருஷன் தான் சொன்னேன்’னு தெரு மாமா அமெரிக்காலேந்து வந்த கோஷ்டிகள் கிட்ட பொலம்பிண்டு இருந்தார்.
இந்த முறை கோவில் தர்மகர்த்தா தெருவில் இல்லை என்பது மனசுக்கு ரொம்ப குறையா இருந்தது. அவாத்து மாமிக்கு திடீர்னு உடம்பு சரியில்லாம ஆனதால வைத்யம் பாக்கர்துக்கு மெட்ராஸ் போயிட்டார். ஒவ்வொரு விஷயத்தையும் நுணுக்கமா பாத்து பாத்து செய்யர்துல அவரை மாதிரி யாராலும் முடியாது. ‘ஆனா என்ன பண்ணர்து இந்த மாதிரி இருக்கரவாளைதான் ஸ்வாமியும் சோதிக்கரார். அநியாயமும் அக்கிரமமும் பண்ணக் கூடியவா தெம்பா நெஞ்சை நிமித்திண்டு வளையவரா’னு மெஸ் மாமி ரொம்ப வருத்தப்பட்டா பாவம். தெருல இந்த தடவை கொஞ்சம் நிலவரம் கலவரமா தான் இருந்தது. வேலையில்லாத ஒரு வெட்டிப்பயலும் கூட ரெண்டு பேருமா சேர்ந்துண்டு திருஷ்டி பரிகாரம் மாதிரி ஆக்கிட்டா. சில பேருக்கு தெருல யாராவது சிரிச்சு சந்தோஷமா இருந்தா அவாளுக்கு பிடிக்காது. இல்லாத பிரச்சனையை உருவாக்கி அதை வச்சு பொழுதுபோக்கிண்டு இருப்பா. எல்லாருடைய விக்னங்களையும் அழிக்கரவர் அவரோட உத்ஸவத்தை எப்பிடி நடத்தாம விடுவார்னு சில முட்டாள்களுக்கு தெரிவதில்லை. அவா உண்டாக்கின எல்லாவிதமான குழப்பத்தையும் தாண்டி சுவாமியோட கும்பாபிஷேகம் நல்லபடியா நடந்து முடிஞ்சது. சாயங்காலமே புஷ்பாஞ்சலி ஏற்பாடு பண்ணி இருந்தா. தோவாளையில் இருந்து வந்த பூ ரொம்ப நன்னா இருந்தது. தெருலேந்து கல்யாணம் ஆகி வெளில போன பொண்கொழந்தேள் எல்லாம் நன்னா ஜம்ஜம்னு வந்து பூ தாம்பாளம் எல்லாத்தையும் எடுத்துண்டு தெருவை சுத்தி வந்து ஸ்வாமிக்கு புஷ்பாஞ்சலியாச்சு. ‘ஒழுங்கா வந்து போட்டோ எடுங்கோ’னு அங்க இருந்தவா உரிமையா என்னை அதட்டினா. முன்னாடி எட்டு தெருவுக்கும் வாத்யம் முழங்க யானை சகிதமா ஊர்வலம் போயிட்டு வந்து புஷ்பாஞ்சலி நடந்த பழைய புஷ்பாஞ்சலி ஞாபகம் எல்லாம் மனசுல வந்து போனது. கும்பாபிஷேகம் முடிஞ்சு மண்டலாபிஷேக சமயம் தான் என்னோட மச்சினன் சகிதமா தங்கமணி வந்தா. மச்சினன் குடும்பத்தை கூட்டிண்டு சின்ன சங்கரன்கோவில் & அகஸ்தியர் அருவி எல்லா இடத்துக்கும் போயிட்டு வந்தோம். இந்த தடவை நிறைய இடங்களுக்கு போக முடியலை. கோவில்ல மண்டலாபிஷேகம் நடந்துண்டு இருந்ததால ஒரு இடத்துக்கும் போகர்துக்கே மனசு வரலை. லீவும் கையில் இருக்கும் பணமும் ஒன்னு தான். எப்பிடி காணாம போச்சுனே தெரியாது. பழையபடி பெட்டியை தூக்கிண்டு பிளைட்டை பிடிக்க கிளம்பியாச்சு. கோட்டைதெரு சிவன் கோவிலை தாண்டி வண்டி போனாலும் மனசு ஊரை நோக்கி பின்னாடி போகர்து. மீண்டும் வருவேன் கல்லிடையே!!!

Thursday, August 14, 2025

ஊருக்கு போலாமா?

எல்லாரும் செளக்கியமா இருக்கேளா? ‘என்னடா இது தக்குடுவை ஆளையே காணுமே’னு தேடினவா தேடாதவா எல்லாருக்கும் நன்றிகள். போன மாசம் ஜூலைல கல்லிடை காஸ்மோபொலிடன் கோவில் கும்பாபிஷேகம். அதனால குடும்பம்/குட்டியோட பொட்டியை தூக்கிண்டு கிளம்பி வந்தாச்சு. சாயங்காலம் வில்லுப்பாட்டு ராத்ரி திண்டுக்கல் ரீட்டா ஆடல்/பாடல் கச்சேரினு ஊர்ல நிகழ்ச்சி நிரல் இருக்கர மாதிரி வழக்கம் போல ஏர் அரேபியால டிக்கெட்டை போட்டாச்சு. கத்தார் ஏர்வேஸ் ப்ளைட்ல சாப்பாடு நன்னா இருக்கும் தான்சென்னைலேந்து வரும் போது காத்தால சுடசுட பொங்கலும் ஓட்டை வடையும் தருவா தான் ஆனா டிக்கெட் ரூபாய் பட்ஜெட்ல ஓட்டை போடர்தால சார்ஜாவுக்கு போய் கனெக்டிங் வண்டியை பிடிக்கலாம்னு தங்கமணியை தாஜா செய்வது கொஞ்சம் கடினமா இருந்தது. இருந்தாலும் சப்புசவரு சாமான் விக்கும் அமேசான்/ மீஷோ / ஜுடியோனு எல்லாத்துலையும் அஞ்சு எக்ஸ்ட்ரா ஆர்டர் என்ற நிபந்தனையின் அடிப்படையில் இறுதி முடிவு எட்டப்பட்டது. ஷார்ஜால எங்களுக்கு ஒரு ஆஸ்தான பாத்ரூம் உண்டு. எல்லாரும் அந்த பக்கம் வரமாட்டா. ‘போன தடவை கதவு கைபிடி ஆடிண்டு இருந்ததே?’ ‘உன்னோட தங்கச்சிக்கு கல்யாணம் நல்லபடியா ஆச்சா?’னு செளஜன்யமா அங்க இருக்கும் சிங்கள ஊழியரிடம் குசலம் விசாரிக்கும் அளவுக்கு அந்த பாத்ரூம் எங்களுக்கு நெருக்கம். பாத்ரூமுக்கு இவ்ளோ பில்டப்பானு நினைக்க கூடாது. சில ஏர்போர்ட் பாத்ரூம்லாம் உள்ள போனா நீச்சல் குளம் மாதிரி தரையெல்லாம் ஜலப்ரவாஹமா இருக்கும். உச்சா போனாளா இல்லை ஸ்னானம் பண்ணினாளானே கண்டுபிடிக்க முடியாது. இதுக்குள்ள நாம போயிட்டு வெளில வரும்போது டயப்பர் ஒழுங்கா கட்டாத குழந்தையோட டவுசர் மாதிரி நம்ம டிரெஸ் தொப்பலா நனைஞ்சு இருக்கும். அதெல்லாம் இல்லாம இந்த பாத்ரூம் அனாதரட்சகனாக இந்த முறையும் காப்பாத்திவிட்டது. மெட்ராஸ் ஏர்போர்ட்ல வேற மாதிரி தலைவலி அங்க ஒரு பயலும் தண்ணியே விடமாட்டான். விக்கரவாண்டி பஸ்ஸ்டாண்ட் மாதிரி கமகமா குமுகுமுனு நாத்தம் பிடிச்சு நாறும். இப்ப கொஞ்சம் சுத்தமா இருக்கு.

 




சென்னையில் மாமனார் வீட்டில் எப்போதும் என் மீது ஒரு ஆவலாதி உண்டு. ரெண்டு நாளைக்கு மேல இங்க தங்கவே மாட்டார். தங்கினாதான் என்ன?னு தங்கமணியிடம் சொல்லுவா. நானும் காதுல விழாத மாதிரியே இருந்துட்டு கல்லிடை ஓடி போயிடுவேன். மாமியார் வீட்டில் சாம்பாரின் ஸ்வரூபம் ரசமாக மாறுவதர்க்கு முன்னாடி இடத்தை காலி பண்ணுவது நம்முடைய பாலிசி. இந்த முறை அவாளோட மனசையும் சந்தோஷப் படுத்தரமாதிரி கூட ஒரு நாள் தங்கிட்டு அப்பிடியே தங்கமனி குடும்பத்துடன் போய் காளஹஸ்தி தரிசனம் பண்ணலாம்னு கிளம்பியாச்சு. கூகிள் மேப்ல சென்னைக்கு மிகமிக அருகில்னு தான் காட்டர்து ஆனா கார்ல போகும் போது போயிண்டே இருக்கு. போகும் வழி எங்கும் மாமரங்கள் காய்ச்சு குலுங்கிண்டு இருந்தது. மத்யானம் சாப்பாடு முடிஞ்சு ஒரு மணிக்கு சென்னைலேந்து கிளம்பினதால தூங்கிண்டே போய் சாயங்காலம் கோவில் வந்துருத்து. கார்ல போகும் போதே ‘என்ன திடீர்னு காளஹஸ்திஅதான் உங்களுக்கு கல்யாணம் நல்லபடியா ஆயாச்சே’னு மாமனார் என்னோட வாயை பிடுங்கினார். ‘ராகு கேதுவுக்கு பயந்து அங்க போகலை! ஏற்கனவே ரெண்டுக்கும் நடுல தான் சிக்கி இருக்கேன்’னு நான் சொல்லும்போது என்னோட வலது பக்கம் தங்கமணியும் இடது பக்கம் மச்சானும் உக்காந்து இருந்தது எதேச்சையான ஒரு நிகழ்வுனு நான் சொன்னா நீங்க நம்பவா போறேள். காளஹஸ்தி பஞ்சபூத ஸ்தலங்களில் வாயு ஸ்தலம். போன லீவுல ஜம்புகேஸ்வரமும்(திருவானைகோவில்) அருணாசலமும் தரிசனம் ஆயிடுத்து அதனால இந்த முறை காளஹஸ்தி தரிசனம் பண்ணனும்னு மனசுல ஒரு ஆசை. குடும்பத்தோட போய் கும்புடு போட்டதுல ரொம்ப சந்தோஷம். கோவிலுக்கு வெளில வந்து ஒரு கடைல எல்லாரும் ஏலக்காய் மணக்க டீ குடுச்சோம். சிந்தூர கலர்ல பக்கத்துலயே பஜ்ஜி பொரிச்சுண்டு இருக்கர்தை பாத்த உடனே என்னோட மாமியாருக்கும் மச்சானுக்கும் நாக்குல ஜலம். ‘ஆந்திரால சமையலுக்கு மிளகாய் போடமாட்டாமிளகாய்லதான் சமையலே பண்ணுவா அப்புறம் போகர வழில பத்துகிலோமீட்டருக்கு ஒரு தடவை நிப்பாட்டி மாந்தோப்புல பப்புசெட்டு இருக்காஅதுல தண்ணி வருமா?னு தேடவேண்டிய நிலைவந்துடும்’னு தங்கமணி பயம்காட்டினதால பேசாம இருந்தா.




 

கார்ல வரும்போதே செல்வம் டிராவல்ஸ் ஏஜென்ட் அண்ணாச்சிக்கு ஒரு போனை போட்டு ‘டிக்கெட்டை போடுங்க அண்ணாச்சி! பெருங்குளத்தூர்ல ஏறிக்கிடுதேன்!’னு நான் சொல்லும்போதே ‘நீங்க ஆவணிலலா வருவேள்! ஆனி மாசமே காத்தடிக்கி! கும்பாபிஷேகத்துக்கு வாரேளோவீட்டம்மா குழந்தேள்லாம் கூட்டு வரலையா?’னு ஜாரிச்சார் அண்ணாச்சி. ‘அவாள் விஷேஷத்தை ஒட்டி வரா நான் கொஞ்சம் முந்தி வாரேன்’னு சொல்லிட்டு கால் கட்பண்ணும் போது என்னோட தெய்வத்தின் தெய்வம் (அதான் மாமனார்) ஆச்சரியமாக என்னை பாத்துண்டே 'அது எப்பிடி மாப்ளே! உங்க ஊர் ஆட்கள் யாருமே ஆன்லைன்ல டிக்கெட் போடாம போன்லையே வேலையை  முடிக்க பாக்கரேளே’னு கேட்டார். ஆன்லைன்ல போட்டர்தவிட ஆள்மூலமா போட்டா நமக்குதான் நல்லது. ஏஜெண்ட் அண்ணாச்சி டிரைவருக்கே போனை போட்டு ‘நம்ம கல்லிடைகுறிச்சி சாமி கத்தார்லேந்து கோவிலுக்கு வாராரு! பெருங்குளத்தூர்ல அவரை ஏத்தாம வண்டி நவழக்கூடாது பாத்துக்கோ!’னு சொல்லிடுவார். டிக்கெட் ரூபாயும் ஊர்ல போய் இறங்கிட்டு கடைல போய் குடுத்தா போதும். ‘நீங்க எங்க போவப்போரீக நான் எங்க போவப்போறேன்’னு ஏஜெண்ட் அண்ணாச்சி சொல்லுவாரு. திருனெல்வேலி பக்கம் வாக்கு சுத்தம் அதிகம். சொன்னா சொன்ன சொல் மாறாது’னு சொன்னேன். அடுத்த நாள் சாயங்காலம் சொன்ன மாதிரியே பெருங்குளத்தூர்ல வண்டிய புடிச்சு ஏறியாச்சு. அழகென்ற சொல்லுக்கு முருகா!னு டி எம் எஸ் கூட சேர்ந்து கிடாமீசை வச்ச டிரைவரும் சேர்ந்து உருகிண்டு இருந்தார். ‘நல்லா இருக்கேளாசுவம் தானாவீரபாகுத்தேவரே வந்து வட்டை பிடிச்சு வண்டியோட்ர மாதிரிலா இருக்கு?னு விசாரிக்கும் போது அவர் முகத்துல புன்னகை. என்னதான் சொல்லுங்கோ நம்ம ஊரு வண்டி நம்ப ஊர் வண்டி தான்......  (பயணம் தொடரும்)