Monday, August 2, 2021

ஊர்ல கல்யாணம்.....

சைனா வைரஸ் இரண்டாம் அலைல எட்டிப் பார்த்துட்டு மூன்றாம் அலைல வந்துருக்கேன். எல்லாரும் செளக்கியமா இருக்கேளா? ஜுலை மாசம் ரெண்டாவது வாரத்துல என்னோட மச்சினனுக்கு பொள்ளாச்சில கல்யாணம். ஏப்ரல் மாசத்துல இருந்து எப்பிடி போகர்துனு தெரியாம ஒரே குழப்பமா இருந்தது. ஜுன் மாச ஆரம்பத்துல ஆன்லைன்ல பாத்துக்கலாம்னு என்னோட தங்கமணியே சொல்லிண்டு இருந்தா. அதுக்கு அப்புறம் கொஞ்சம் கொஞ்சமா நிலைமை சரியாகர மாதிரி வந்த உடனே, “நீ மட்டுமாவது போய்ட்டு வந்துடு! வாயும் கையுமா ஒரு நாத்தனார் மண்டபத்துல குறுக்கையும் நெடுக்கையும் லாந்தினாதான் கல்யாணம் களைகட்டும்!”னு சொன்னேன். அவளுக்கும் ஆசைதான் ஆனா போயிட்டு திரும்பி வந்தா 10 நாளைக்கு ஹோட்டல்ல ரூம் எடுத்து தங்கி யார் முகத்துலையும் முழிக்காம அக்ஞாதவாசம்(அதான் கோரன்டைன்)இருக்கனும், மூனு நாளைக்கு ஒரு தடவை மூக்குலையும் நாக்குலையும் குச்சியை விட்டு சுத்துவா அதுதான் தங்கமணிக்கு பிரச்சனை. ஆத்தோட 'ஹவுஸ் ஹஸ்பென்ட்' மாதிரி 15 நாள் லீவு போட்டு அத்வைதாவையும் விஸ்வஜித்தையும் நானே பாத்துக்கறேன்னு சொல்லியும் அவள் மசியலை. ஜூன் மாச கடைசி ஆகும் போது மாத்தி மாத்தி மெட்ராஸுக்கும் தோஹவுக்கும் ஒரே போன் கால் சம்பாஷனைகள். ரிஷப்ஷனுக்கு கொண்டை போடனுமா, சவுரி வேணுமா வேண்டாமா, பிஸ்தா க்ரீன் வேணுமா இல்லைனா காபிகொட்டை க்ரீன் வேணுமானு அல்லோகலப்பட்டது. பந்தில உக்காந்தவனுக்கு பாயாச கவலை பாரின்ல இருக்கரவனுக்கு எதுக்கு கவலைனு நான் எதையும் காதுல வாங்கலை.


 “நான் மட்டும் போனா நன்னா இருக்குமா? எல்லாரும் மாப்பிள்ளை வரலையா? வரலையா?னு கேப்பா, என்னோட ஹேன்ட் பாக்கை யாரு பத்ரமா பாத்துப்பா?”னு வரிசையா வில்லுப்பாட்டு பாட ஆரம்பிச்சா. நானும் யோசிச்சேன். பத்து வருஷத்துக்கு முன்னாடி நடந்த அந்த சம்பவத்துக்கு அப்புறம் (அதான் என்னோட கல்யாணம்) இதுவரைக்கும் கல்யாணமே போகலை. இதே கதில போனா காசியாத்திரை கல்யாணத்துக்கு முதல் நாளா இல்லைனா மறு நாளானு சந்தேகம் வர்ர அளவுக்கு ஞாபகமில்லாம போயிடும்னு முடிவு பண்ணி. “கல்யாணத்துக்கு எல்லாருமே போயிட்டு வரலாம்”னு சொன்னவுடனே தங்கமணிக்கு பல்லெல்லாம் வாய். இந்தியால ஒரு பிரச்சனையும் இல்லை ஆனா கத்தார்ல இந்தியா போயிட்டு வந்தவாள 10 நாள் சீதகம் ஒரு வார சீதகம்னு ரகம் வாரியா பிரிச்சி ஹோட்டல்ல தங்கிட்டு டெஸ்ட் பண்ணிதான் வெளில விடுவா. 10 நாளைக்கு நாலு பேருக்கு இங்க ரூம் போடர ரூபாய்க்கு நான் ஒரு கல்யாணமே பண்ணிடலாம் (அதாவது கல்யாணத்துக்கு செலவு பண்ணலாம்னு சொன்னேன்). இருந்தாலும் இந்த கல்யாணத்துல நான் செலவை பாத்தேன்னா ஜென்மத்துக்கும் எல்லா விஷயத்திலையும் “என்னோட ஒரே தம்பி கல்யாணத்துக்கே நீங்க வரலை, பெரிசா பேச வந்துட்டார்”னு தங்கமணி எகிறி அடிக்கும் வாய்ப்பு வந்துடும் (இப்ப மட்டும் என்ன வாழர்துனு கேக்காதீங்கோ!). “எனக்கு இருக்கர்து ஓரே தம்பி”னு தங்கமணி திரும்பி ஆரம்பிச்சா. “அதுக்கு நான் என்னமா பண்ணமுடியும் உங்க அப்பா தான் யோசிச்சு எதாவது பண்ணி இருக்கனும். இப்ப வந்து கவலைபட்டு என்ன பண்ண?”னு நான் நக்கல் அடிச்ச போது தங்கமணி சரியா கவனிக்கலை.
'எல்லாரும் போலாம்'னு சொன்னதுதான் தெரியும் தங்கமணி அழுகாச்சி 'மோட்'லேந்து மாறி ஷாப்பிங் மோடுக்கு போயிட்டா. அடுத்த மூனு நாள்ல தோஹால இருக்கும் ஷாப்பிங் சென்டர்கள் சூரையாடப்பட்டது, கிரிடிட் கார்டு தேய்க்கும் மிஷினில் இருந்து தீப்பொறி பறந்தது,நேபாளி டெய்லர் மூனு நாள்ல எத்தனை உருப்படி தைக்கர்து / பிடிக்கர்துனு தெரியாம பேந்த பேந்த முழிச்சார். “எங்க அப்பாவுக்கு வறுத்த முந்திரியும் பாதாமும் வாங்கனும் சாயங்காலம் கடைக்கு போலாம்”னு தங்கமணிடேந்து ஆபிஸுக்கு போன். “கல்யாணம் உங்க அப்பாவுக்கா இல்லைனா தம்பிக்காமா?”னு நான் கேட்டதை எல்லாம் அவள் காதுலையே வாங்கலை. என்னிக்கி வாங்கியிருக்கா இன்னிக்கி வாங்கர்துக்கு. எது வாங்கினாலும் ஒரு கேள்வியும் கிடையாது. கேட்டா “எனக்கு இருக்கர்து ஒரு தம்பி, அவனோட கல்யாணத்துல நான் நன்னா இருக்க வேண்டாமா சொல்லுங்கோ”னு ஆரம்பிச்சுடுவா. நான் மனசுக்குள்ள “பகவானே நல்லவேளை எங்க மாமனார் பெரிய மனசு பண்ணி ஒரு தம்பியோட நிப்பாடினார்”னு சொல்லி மனசை தேத்திப்பேன்.” நீங்க புது சட்டை, குர்தா எதுவும் வாங்கலையா”னு கேட்டு இன்ப அதிர்ச்சி குடுத்தா. ‘பரவாயில்லையே ஆத்துக்காரரை பத்தியும் கவலைபட ஆரம்பிச்சுட்டாளே’னு நான் சந்தோஷப்படர்துக்குள்ள “எப்போதும் போடர பழசுபொட்டெல்லாம் போட்டுண்டு வந்து என்னோட போட்டோ எல்லாத்தையும் வம்பாக்கிடாதீங்கோ! என்னோட மெடிரியல் கலருக்கு மெட்சிங்கா நல்லதா நாலு வாங்கிக்கோங்கோ!”னு சொன்னா. “உன்னோட ஷாப்பிங் எல்லாம் முடிஞ்சு அக்கவுண்ட்ல என்ன மிச்சம் மிஞ்ஜாடி இருக்குனு பாக்கனும். அனேகமா 4 முழம் வேஷ்டிதான் வாங்கமுடியும் போலருக்கு”னு சொன்னேன்.

 வழக்கம் போல எல்லா சாமான் செட்டுகளையும் அள்ளி போட்டுண்டு ஏர்போர்ட்டுல போய் இறங்கியாச்சு. அங்க இருக்கும் கொராணா கெடுபிடிகள் பாக்கவே பயமா இருந்தது. எல்லாரும் தலையோட காலோட போத்திண்டு முகமூடி திருடன் மாதிரி இருந்தா. அழகான ஏர்ஹோஸ்டஸ் எல்லாம் ஏர்'கோஸ்டஸ்' மாதிரி வெள்ளை அங்கில இருந்தா பாவம். கத்தார் ஏர்வேஸ்ல குடிக்க ஜலம் தருவாளா இல்லைனா இன்டர்னேஷனல் மெடிக்கல் ப்ரோட்டோகால்னு சொல்லி அரை டம்பளர் டெட்டால் தந்துடுவாளோனு ஒரே பயம். சில என் ஆர் ஐ ஆண்டிகள் புண்ணியாஜனம் பண்ணவந்த ஆத்து வாத்தியார் மாதிரி ஏரோப்ப்லேன் உள்ள போற வழி நெடுக ஸ்ப்ரே அடிச்சுண்டே போனா. கல்லிடைல “எங்காத்து வாசல்லையும் சேர்த்து தெளிங்கோனு” பக்கத்தாத்து மாமி சொல்லர மாதிரி ‘எங்க சீட்லையும் கொஞ்சம் மருந்து அடிங்கோ’னு சொல்ல வந்தேன்…… (கல்யாண கலாட்டா தொடரும்)

7 comments:

வெங்கட் நாகராஜ் said...

கல்யாண கலாட்டா - மீண்டும் கலக்கல் பதிவுகளின் தொடக்கம். வாழ்த்துகள் தக்குடு. Back with a bang! Enjoyed reading.

Ananya Mahadevan said...

என்ன வாய்டா உனக்கு. சிரிச்சு மாளலை. கல்யாண ஷாப்பிங்கின்னா கொஞ்சம் முன்னப்பின்னேதான் இருக்கும். அதுக்குன்னு இப்பிடியா கலாய்ப்பா. அதும் மாமனாரை. முடிஞ்சமட்டும் உன் ஃப்ரெண்ட்ஸை தோஹால ஆத்துக்கு கூப்பிட்ராதே. ரணகளம் ஆய்டும். பின்னே எவனாவது உன் தங்ஸ்கிட்டே இந்த போஸ்டைப்பத்தி சிலாகிச்சு சொன்னான்னு வைய்யேன்... உன்னை நாங்க காப்பத்தமிடியாது தம்ப்ரீ....🤣🤣🤣🤣

Ananya Mahadevan said...

வெரி வெரி ரசனையான போஷ்டு

ஸ்ரீராம். said...

ரசனை. நல்ல இடத்தில் தொடரும் கார்டு.
தொடர்கிறேன்.

எல் கே said...

எப்படியும் உன் தங்ஸ் இதை படிக்காமலா இருக்கப்போறாங்க :)

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

எத? ஊர்ல கல்யாணமா? நம்ம வீட்ல கல்யாணம் இல்ல சொல்லணும், note the point Jaisri

அடுத்து, மச்சினன் கல்யாணம் சொன்னதும் நீயே முதல் ஆளா கிளம்பி வந்து ஜோலி எல்லாம் பாக்காம, ஒரு ஆள் நெம்புகோல் போடணுமா? - note this point too Jaisri

By the by, Airhostess பாதாதி கேசமா covered அப்படினு நீ வருத்தபட்டதை ஒருவேளை ஊருக்கு போற சந்தோசத்தில் ஜெயஸ்ரீ கவனிக்காம இருந்திருக்க வாய்ப்பிருக்கு, but பின்னாடி ஆப்பு உண்டு - note this too Jai

மொத்தத்தில் ஊர்ல விட்டுட்டு வந்து ஜாலியா ஜனகராஜ் டயலாக் சொல்லிட்டு இருக்கத்தான் கல்யாண சாக்கில் ஊருக்கு போனது அப்படிங்கற உண்மையை சொல்லிட்டியா இல்லையா இன்னும் - note this as well Jaisri

அவ்ளோ தாங்க, வந்த வேலை முடிஞ்சு. நாராயண நாராயண 🏃‍♀️🏃‍♀️🏃‍♀️😀🤣

தக்குடு said...

டெல்லி அண்ணாச்சி - நன்றி அண்ணாச்சி!

அனன்யாக்கா - எப்பிடி இருந்தாலும் அவள் ஊருக்கு வந்ததுக்கு அப்புறம் எனக்கு வசமா இருக்கு….

sriram அண்ணா - செளக்கியமா?

எல் கே - போஸ்ட் எப்பிடி இருக்கு அதை சொல்லும் ஓய்!

அடப்பாவி தங்கமணி - ஊர்ல கல்யாணம் மார்ல சந்தனம்னு இருக்கும் வம்சத்துல மாமியார்வீட்டு கல்யாணம்னா விடுவோமா. அடுத்த போஸ்ட் போட்டாச்சு அங்க வாங்கோ!

Post a Comment

யெச்சுஸ்மி, comment பொட்டி இங்க இருக்கு.....:)