Thursday, January 24, 2013

லைப் ஆஃப் பை

சினிமாவை தியேட்டர்ல போய் பாத்த காலம் எல்லாம் பிரெஞ்சு தாடியோட பழைய சைக்கிளை ஓட்டிண்டே ‘அந்த வருஷம்’னு ஆரம்பிக்கும் சேரன் மாதிரி பழைய நினைவுகள்ல தான் தேட வேண்டியிருக்கு. ‘பூவே உனக்காக’ படத்துக்கு அம்பாசமுத்திரம் அபிராமி தியேட்டர்ல எங்க தெரு மாமிகள் கூட ‘ஜான் பிள்ளை’ கோட்டால துணைக்கு போயிட்டு விக்ரமனோட க்ளைமாக்ஸ் வசனத்துக்கு மாமிகள் எல்லாம் புழிய புழிய அழுததை பாத்த போது அவாத்து மாமா ஏன் இவாளை சினிமாவுக்கு தனியா அனுப்பி வச்சானு புரிஞ்சது. சினிமா பாத்தே தீரனும்னு கொசமுட்டிண்டு அலையர அளவுக்கு பைத்தியம் இருந்தது இல்லை. எப்பையாவது முட்டினா தப்பினா சினிமா போகர்து வழக்கம். பெண்களூர் போனதுக்கு அப்புறம் கூட விவேக் நகர்ல இருக்கும் பாலாஜி தியேட்டர்ல தான் படம் பாக்க நானும் எங்கண்ணனும் போவோமே தவிர பி வி ஆர்/ஐனாக்ஸ் பக்கம் தலை வச்சு கூட படுக்க மாட்டோம். வாசல்ல இருக்கும் செக்யூரிட்டி கைல தீவட்டி மட்டும் தான் இருக்காதே தவிர கொள்ளையடிக்கர்துல அவாளை மிஞ்சமுடியாது. எங்க ஊர் தியேட்டர்ல சாப்பிடர மாதிரியே அச்சு முருக்கும் கடலை மிட்டாயும் ஒரு தடவை கொண்டு போனேன். இதெல்லாம் உள்ள கொண்டு போககூடாதுனு சொல்லி வாசல்லையே வாங்கி வச்சுட்டா. பாப்கார்னை 60 ரூபாய் குடுத்து வாங்கர்துக்கு மனசு வராததால, ஏகாதசி விரதம் இருக்கும் யெச்சுமி பாட்டி மாதிரி ஜலம் கூட குடிக்காம படம் பாத்துட்டு நாங்க வெளில வந்தது ஞாபகம் இருக்கு.

தோஹா வந்ததுக்கு அப்புறம் சுத்தமா டேமை இழுத்து மூடின கர்னாடகா மாதிரி தியேட்டர் பக்கமே போகாம, பக்த பிரகலாதால ஆரம்பிச்சு ஆரண்யகாண்டம் வரைக்கும் ஆன்லைன்ல பாத்து பொழுதை போக்கிண்டு இருந்தேன். கல்யாணத்துக்கு அப்புறம் நீ காலிடா மாப்ளே!னு எங்க அண்ணா பயம்குடுத்தின மாதிரி எதுவும் ஆகாம தங்கமணிக்கும் சினிமால பற்று/வரவு எதுவுமே இல்லை. இருந்தாலும் விடாம எதாவது பழைய படத்தை எடுத்து ஆன்லைன்ல போட்டு பாப்போம். இப்படியே ஒரு வருஷத்தை ஓட்டியாச்சு. இந்த நிலைமைல இருந்த போது தான் கல்யாணம் கழிஞ்சு ஒரு வருஷத்துல ஒரு சினிமாவுக்கு கூட தியேட்டர் கூட்டிண்டு போனது இல்லையா?னு மனசாட்சியே மைண்ட்வாஸ்ல பேச ஆரம்பிச்சுடுத்து. அதுக்காக அலெக்ஸ்பாண்டியன் வகையறா படங்களுக்கு கூட்டிண்டு போய் நேரத்தையும் மனசையும் பழாக்க மனசு இல்லை. இந்த சமயத்துல தான் என்னோட தங்மணியோட தோழி ‘லைப் ஆஃப் பை’ படம் பாத்துட்டு வந்து ‘எப்பிடி இருந்தது தெரியுமோ!’னு கண்ணை உருட்டி உருட்டி முழிச்சுண்டு மினி பயாஸ்கோப் எங்காத்து ரேளில வந்து ஓடினா. எல்லாம் முடிஞ்சதுக்கு அப்புறம் என்னோட ரியாக்ஸன் பாக்கர்துக்கு மேடம் அமைதியா இருந்தாங்க. எப்பிடியாவது இந்த ஆப்புலேந்து எஸ்கேப் ஆகர்துக்காக 'இவாளோட கண் & முகபாவத்தை வச்சு பாக்கும் போது இவாளுக்கு கதகளி தெரியுமோனு தோணர்து! உனக்கு என்ன தோணர்து?னு கேட்டேன். ‘வெஸ்ட் மாம்பலத்துலேயே நல்ல மாப்பிள்ளைக்கு எங்க அப்பா என்னை கல்யாணம் பண்ணி வச்சுருக்கலாம்னு தோனர்து’னு சொல்லிட்டு முகத்தை அந்த பக்கமா வெட்டிண்டா.

வேற வழியே இல்லாம அடுத்த நாள் சாயங்காலம் 7 மணி காட்சிக்கு படத்துக்கு போகலாம்னு சொல்லி கூட்டணி கட்சியை சமாதானம் பண்ணும்படியா ஆயிடுத்து. அடுத்த நாள் தியேட்டர்ல டிக்கெட் கவுண்டர்ல போய் டிக்கெட் விலையை பாத்தா ஷாக் ஆயிடுத்து. உள்ள இருந்த பிலிபினோ பொம்ணாட்டி கிட்ட ‘இங்க போட்டு இருக்கர்து ரெண்டு பேருக்கா?’னு வெக்கமே இல்லாம சந்தேகம் கேட்டேன். 'ஒரு ஆளுக்கு தான் ஆனா உங்களுக்கு போட்டுண்டு பாக்கர்துக்கு 3டி கண்ணாடி தருவோம்'னு சொன்னா. 'எங்களுக்கு கண்ணாடியும் வேண்டாம் காதுமெஷினும் வேண்டாம்னு சொன்னா கொஞ்சம் குறைச்சுப்பேளா?'னு திருப்பி கேட்டதுக்கு அற்ப பதரே!னு சொல்ற மாதிரி மொறச்சா. ஒரு வழியா தியேட்டர் உள்ள போயாச்சு. எங்காத்து ரேளி மாதிரியே நானும் தங்கமணியும் மட்டும் தான் இருந்தோம். ரெண்டே ரெண்டு பேருக்கு படம் போடுவானானு தெரியலையே! படம் போடலைனா பைசாவை திருப்பி தருவா இல்லையோ!னு சந்தேகம் கேட்டுண்டு இருந்தேன். அந்த சமயம் 3 பையன்கள் சகிதமா ஒரு தம்பதிகள் தியேட்டர்குள்ள வந்தா. எங்க ஊர்ல ஆடி பதினெட்டுக்கு தாமிரபரணிக்கு தூக்குசட்டில புளியோதரை கட்டி கொண்டு போகும் கோமா மாமி மாதிரி ஒரு பெரிய பாலிதீன் பை நிறையா பாப்கார்ன்,சிப்ஸ்,பப்ஸ்,பெப்ஸி & இன்ன பிற ஐயிட்டங்கள் சகிதமா வந்து இருந்தா. அதுக்கு அப்புறம் ரெண்டு நண்டு சிண்டுகள் சகிதமா ஒரு குடும்பம் & ஒரு வெள்ளக்கார தம்பதிகள்னு நாலு மனுஷா வந்தா.




கரெக்டா சொன்ன நேரத்துல படத்தை ஆரம்பிச்சுட்டான். படத்தை சுருக்கமா சொல்லனும்னா, பாண்டிச்சேரில ரெண்டு பையன்கள் இருக்கா அவாளோட அம்மா அப்பா ஒரு ஜூ-வை வச்சு நடத்திண்டு இருக்கா. இளைய பையன் உம்மாச்சி யாரு? உம்மாச்சினா என்ன?னு ஞானப்பழம் மாதிரி கேள்வி கேட்டுண்டு கிருஷ்ணால ஆரம்பிச்சு அல்லா வரைக்கும் எல்லா உம்மாச்சியையும் கும்பிடரான். காதல் தேசம் படத்துல அப்பாஸுக்கும் வினித்துக்கும் அக்கா மாதிரி இருந்த தபு இந்த படத்துல அம்மாவா வரா. உள்ளூர் ஜிம்ல கர்லாகட்டை சுத்தரவர் மாதிரி இருக்கும் பையனோட தாய்மாமா நீச்சல் சொல்லிகுடுக்கரார். நம்ப ஊர்ல யாருமே துணையா இல்லைனு சொல்லிட்டு பையனோட அப்பா ஜூ-வை வித்துட்டு அங்க இருக்கும் குரங்கு சிங்கம் புலி சகிதமா கனடாவுக்கு போகர்துனு முடிவு பண்ணரார். போகர வழில புயல் வந்து கப்பல் கவுந்து எல்லாம் பரலோகம் போகும்படியா ஆகர்து. படகுல தப்பிக்க பார்க்கும் நம்ப கதானாயகன் யாரோ ஒருத்தர் தத்தளிக்கர மாதிரி இருக்கர்தை பாத்துட்டு டியூப் டையர் போட்டு படகுக்கு இழுத்தா அது பெங்கால் புலி. சனியனை தூக்கி பனியனுக்குள்ள போட்டுண்ட கதையா ஆயிடுத்தேனு ரொம்ப பீல் பண்ணி அதை விரட்டி விடர்துக்கு முயற்சி பண்ணினாலும் மனசு கேக்க மாட்டேங்கர்து. அந்த புலியை கூட வச்சுண்டு ரொம்ப நாளைக்கு கடல்ல பிரயாணம் பண்ணி பிள்ளையாண்டான் எப்பிடி கரை சேரரான் அப்பிடிங்கர்துதான் கதை.

நானும் தங்கமணியும் பார்த்த முதல் 3டி படம் இதுதான் அப்பிடிங்கர்தால ரெண்டு பேருமே பட்டிக்காட்டான் யானையை பாத்த மாதிரி ஆச்சரியமா பாத்தோம். எங்க ஆபிஸ்ல உள்ளவா எல்லாம் ஜெயா டிவில வரும் ஆன்மீக வர்ணனையாளர் ஸ்ரீகவி ‘திருமலையான் வேஏஏஏஏஏங்கடவன்!னு இழுத்து இழுத்து பேசர மாதிரி நிதானமா தான் இங்க்லிபீஷ் பேசுவா, ஆனா இந்த படத்துல இங்கிலீஷ் வசனங்கள் ரொம்ப வேகமா இருக்கர்தால பக்கத்து சீட்ல இருந்த வெள்ளைக்காரி சிரிக்கும் போதெல்லாம் நானும் சிரிச்சு ஒப்பேத்திண்டு இருந்தேன். சில சமயம் வெள்ளக்காரி சிரிக்காத எடுத்துல கூட கொஞ்சம் சிரிச்சு ‘வாட் இஸ் தாட்? வாட் இஸ் தட்?’னு அவாத்துகாரர்கிட்ட கேட்கும்படியா பண்ணியாச்சு. நடுல நம்ப பையன் மிருதங்கம் வாசிச்சுண்டே பரதம் ஆடர ஒரு பொண்ணை சைட் அடிக்கர சீன் வந்த போது எனக்கு சிரிப்பை கட்டுப்படுத்தவே முடியலை. கெக்கெபிக்கேனு தனியா சிரிச்சுண்டு இருந்தேன். இதுல சிரிக்கர்துக்கு என்ன இருக்கு?னு கேட்கரமாதிரி தங்கமணி என்னை பாத்தா. கல்லிடை அம்பை சம்பந்தமான ஒரு காதல் காவியத்துல இது ஒரு முக்கியமான சீன் அப்பிடிங்கர்து எனக்கு மட்டும் தானே தெரியும். அது ஏன் இந்த மிருதங்கம் வாசிக்கர பசங்க எல்லாம் டான்ஸ் ஆடர பிகர்களுக்கு நூல் விடரா?னு டவுட் கேட்டதுக்கு ‘புளுபுளுனு பேசாம படத்தை பாருங்கோ!’னு சொல்லிட்டா.

படம் ரொம்ப ரொம்ப நன்னா இருக்கு, முக்கியமா கடல்ல வச்சு படமாக்கின பயணக்காட்சிகள்,தனித் தீவு,திமிங்கலம் மேல வரும் காட்சி,தேவாங்கு மாதிரியான பிராணி உள்ள தீவு எல்லாமே டாப் டக்கர். 3டில பாக்கர்தால பறவை நம்ப பக்கத்துல பறந்து போகர்து,குரங்கு நம்ப பக்கத்துல வந்து போகர்து,புலி நம்ப மேல பாயரமாதிரி வரர்துனு எல்லாமே அதிசயமா இருக்கு. புலி பாய்ஞ்சு பாய்ஞ்சு வரும் போது எல்லாம் மேடம் என்னோட சீட்டை பிடிச்சு உலுக்கிண்டு இருந்தாங்க. படம் பாத்துட்டு திரும்பி கார்ல வந்துண்டு இருக்கும் போது, ‘புலி நம்ப மேல பாயவரமாதிரி இருக்கும் போது உங்களுக்கு பயமாவே இல்லையா? நம்ப பக்கத்துல இருந்த வெள்ளக்கார தம்பதிலையும் வெள்ளக்காரிதான் கத்தினா வெள்ளக்காரர் கத்தவே இல்லையே’னு அடுக்கிண்டே போனாங்க. ‘கல்யாணம் கழிஞ்ச ஆம்பளேலுக்கு சிங்கம் புலி பாயர்து கோபமா உலுக்கர்து எல்லாம் ஏற்கனவே பழகின விஷம்கர்தால பயப்படமாட்டா’னு நான் பதில் சொன்னதுக்கு அப்புறம் புயலுக்கு முந்தைய அமைதி கார்ல நிலவியது.

14 comments:

lata raja said...

Arumaiyaana padaththai, un Baaniyila kusumbu vechchu keduththutaiyOnnu ninaichchundae padikka aarambichchean. Puli thappichchadhu, thakkudu maattindaan appdinny mudiyara kadhai romba santhoshamaa irukku

வெங்கட் நாகராஜ் said...

கடைசில சொன்ன விஷயம் 100% ட்ரூ! :)

சிரிச்சு மாளல தக்குடு :)

RAMA RAVI (RAMVI) said...

பி வி ஆர்/ஐனாக்ஸ் பத்தி நீ சொன்னதெல்லாம் உண்மை. 60 ரூ பாப்கார்ன் இப்ப 200 ஆயாச்சு..

உன் எழுத்துல விமர்சனம்..நன்றாக இருக்கு. வரிக்கு வரி வழக்கம் போல சிரிப்புதான் போ!!

இராஜராஜேஸ்வரி said...

அது ஏன் இந்த மிருதங்கம் வாசிக்கர பசங்க எல்லாம் டான்ஸ் ஆடர பிகர்களுக்கு நூல் விடரா?னு டவுட் கேட்டதுக்கு ‘புளுபுளுனு பேசாம படத்தை பாருங்கோ!’னு சொல்லிட்டா.

நல்ல சந்தேகம் ...

Dubukku said...

//கல்லிடை அம்பை சம்பந்தமான ஒரு காதல் காவியத்துல இது ஒரு முக்கியமான சீன் அப்பிடிங்கர்து எனக்கு மட்டும் தானே தெரியும். அது ஏன் இந்த மிருதங்கம் வாசிக்கர பசங்க எல்லாம் டான்ஸ் ஆடர பிகர்களுக்கு நூல் விடரா?//

ங்கொய்யால..பத்த வைச்சிட்டியே பரட்டை. எல்லாத்தையும் எடுத்து விட்டாச்சா தங்கமணிக்கு? :)) சரி அவா சொன்ன மாதிரி என்ன கெக்கப்பிக்கேன்னு சிரிப்பு வேண்டிக் கிடக்கு? :)

ADHI VENKAT said...

சிரிச்சு மாளலை....:))

R. Jagannathan said...

அப்பாடி, படம் பற்றி எழுதுவதற்குள் 4 ட்ரைலர் பார்த்தா மாதிரி எத்தனை நீள முன்னுரை! ஹாஸ்யம் உம்ம கிட்ட கை கட்டி சேவகம் பண்ணுறதுங்காணும். ஊமக்குசும்பும் தான்! என்ன இருந்தாலும் கடைசியில ‘புயல்’ படம் முழுக்க நீங்க காமிக்காததில கொஞ்ஜம் வருத்தம் தான்!

//சில சமயம் வெள்ளக்காரி சிரிக்காத எடுத்துல கூட கொஞ்சம் சிரிச்சு ‘வாட் இஸ் தாட்? வாட் இஸ் தட்?’னு அவாத்துகாரர்கிட்ட கேட்கும்படியா பண்ணியாச்சு. // நீர் மட்டும் 100 வருஷம் முன்னாடியே பிறந்திருந்தா, வெள்ளைக்காரன் அப்பவே ஓடிப்போயிருப்பான்!

அடிக்கடி எழுதவும்!

-ஜெ.

Unknown said...

அருமை நண்பரே, நீங்கள் தோஹாவிலா உள்ளீர்கள், ஒரே ஒரு முறை அங்கு வந்திருந்தேன் !! நிறைய எழுதுங்கள்......வாழ்த்துக்கள்.

அமுதா கிருஷ்ணா said...

super.....

Anonymous said...

enga poitinga?

Ananya Mahadevan said...

//Dubukku said...

//கல்லிடை அம்பை சம்பந்தமான ஒரு காதல் காவியத்துல இது ஒரு முக்கியமான சீன் அப்பிடிங்கர்து எனக்கு மட்டும் தானே தெரியும். அது ஏன் இந்த மிருதங்கம் வாசிக்கர பசங்க எல்லாம் டான்ஸ் ஆடர பிகர்களுக்கு நூல் விடரா?//

ங்கொய்யால..பத்த வைச்சிட்டியே பரட்டை. எல்லாத்தையும் எடுத்து விட்டாச்சா தங்கமணிக்கு? :)) சரி அவா சொன்ன மாதிரி என்ன கெக்கப்பிக்கேன்னு சிரிப்பு வேண்டிக் கிடக்கு? :)// நான் நின்ச்சேன். நீங்க சொல்லிட்டீங்க தலை! :) எல்லாம் கெஸ் வொர்க் தான்.. மிருதங்கம்ன்னு பையன் தெளிவா ஒரு க்ளூ குடுத்திருக்கானே?
தக்குடு.. இப்போத்தான் இந்தப்பதிவை படிச்சேன்.. சிரிப்போ சிரிப்பு.. ரொம்ப ரசிச்சேன்.நிறைய எழுது.

மோகன்ஜி said...

நகைச்சுவை மிளிரும் நல்ல பதிவு தக்குடு.. ரொம்ப நாள் கழிச்சு இப்பொத்தான் வரேன் பிளாகுக்கு.. என் காத்து உங்களுக்கும் அடிச்சிருச்சோ? ஆளையே காணோமே? வாழ்த்துக்கள்.

திண்டுக்கல் தனபாலன் said...

உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/05/last-but-not-least.html) சென்று பார்க்கவும்... நன்றி...

திண்டுக்கல் தனபாலன் said...

Once Again...

Visit : http://blogintamil.blogspot.in/2013/06/blog-post.html

Post a Comment

யெச்சுஸ்மி, comment பொட்டி இங்க இருக்கு.....:)