Thursday, April 28, 2011

சாஸ்தா ப்ரீதி (Part 2)

மூச்சா மாமாவாத்துல எல்லாம் காத்தால ஆஹாரம் கிடையாது, முக்கால்வாசி ஆத்துல கொலைபட்டினி இருந்துண்டு 10 மணி இல்லைனா 11 மணிக்கு நேரடியா சாப்பிடுவா. அவாளுக்கு எல்லாம் சாஸ்தா ப்ரீதில பூஜை முடிஞ்சு சாப்பாடு எப்படா போடப்போரா?னு ஆயிடும். நல்ல பசில இருந்த மூச்சா மாமா மெதுவா எங்க தெரு தக்கார் மாமா கிட்ட, " நம்ப தெரு கிழி வரும் போது 9 மணிக்கு கொஞ்சமா ஒரு ரவாபாத் சட்னி சகிதமா ஒரு ஆஹாரம் போட்டா என்ன?"னு ஒரு பிட்டை போட்டார். அதுக்கு தக்கார் மாமா "ஆமாம் ஓய்,ரவாபாத், கேசரி,போண்டா எல்லாம் போட்ருவோம். குடிக்கர்துக்கு காபி போதுமா இல்லைனா பாதாம்கீர் போடலாமா ஓய்?"னு நக்கல் அடிக்கவும் மூச்சா மாமா வாயையே திறக்கலை.

காத்தால ருத்ர ஜபம் முடிஞ்சு சாஸ்தா பீடத்துக்கு அபிஷேகம் ஆனதுக்கு அப்புறம் வெளி பிராகாரத்துல ஒரு மேடைல அலங்காரம் பண்ணி வச்சுருக்கும் 3 பெரிய விளக்குலதான் எல்லா பூஜையும் நடக்கும். குளத்து தீக்ஷதர் மாமா பெரிரிரிய கைமணியை 'டிங் டிங் டிங்'னு மெதுவா அடிச்சுண்டு பூஜை பண்ணும் அழகே அழகுதான். வழிவழியா வந்த பரம்பரையை சேர்ந்த வயசான மாமாக்கள் சாஸ்தாவோட பிரதி நிதியா பலகாய்ல கம்பீரமா உக்காசுண்டு இருப்பா. 12 மணிக்கு அப்புறம் பலகாய் ஸ்தானத்துகாரா எல்லாரையும் குடை/மேள தாளத்தோட பக்கத்துல இருக்கும் வாய்க்காலுக்கு நீராட்டர்துக்கு அழைச்சுண்டு போவா. ஆராட்டு நடக்கும் போது பசங்க வால்தனத்தை ஆரம்பிச்சுடுவா. பொதுவா பலகாய் ஸ்தானத்துகாரா மட்டும் ஸ்னானம் பண்ணிட்டு புது வஸ்த்ரம் கட்டிக்கர்து வழக்கம். அவா கூட போன சில அச்சுபிச்சு ஆட்களையும் சேர்த்து பசங்க குளுப்பாட்டி அனுப்பிடுவா. திடுதிப்புனு குளிச்ச அவாளுக்கு கட்டிக்க மாத்து வேஷ்டி கூட இல்லாம முழிச்சுண்டு இருப்பா. என்னவோ அந்த மாமாக்கள் ஆசைபட்டு ஸ்னானம் பண்ணின மாதிரி அவாத்து மாமிகள் " ஊர்ல கல்யாணம் மார்ல சந்தனம்ங்கர கதையா நீங்க எதுக்கு ஸ்னானம் பண்ணினேள்? கஷ்டகாலம்"னு கரிச்சுகொட்டுவா.



சாஸ்தா வரவு..:)

அது முடிஞ்சு சாஸ்தா வரவு பாட்டு எல்லாம் பாடிண்டே அவா எல்லாரையும் மறுபடி கோவிலுக்கு அழைச்சுண்டு வருவா. பலகாய் ஸ்தானத்துகாராளுக்கு குடுக்கர்துக்குனு தனியா இளனீர்,பானகம் எல்லாம் உண்டு. சில மாமாக்கள் இளனீருக்கு ஆசைபட்டுண்டு அவாளும் ‘திங் திங்’னு சாமி வந்த மாதிரி குதிச்சு எல்லாம் பார்ப்பா, அவாளுக்கு எல்லாம் குடுக்கர்த்துக்கு தனியா இளனீர் ஓட்டுல வாய்கால் ஜலம் ரொப்பி ஸ்பெஷல் இளனீர் தயார் பண்ணி வெச்சு இருப்போம். அதை குடிச்சவா அடுத்த 10 நிமிஷத்துல முடுக்கை பாத்து முடுக்கிண்டு ஓடுவா.

5000 பேர் சாப்பிடும் பந்தில நம்ப இஷ்டத்துக்கு எல்லாம் வாளியை எடுத்துண்டு பரிமாறமுடியாது. அதுக்கும் ஒரு முறை உண்டு. பாயாசம்/ஸ்வீட்/வடை பரிமாறும் பொறுப்பு எப்போதும் கிழி கிராமத்துக்கு மத்த அயிட்டம் எல்லாம் குலுக்கல் முறைல சீட்டு எழுதி போட்டு தீர்மானம் பண்ணுவா. சில கிராமத்துக்காரா எல்லாம் பெரிய அயிட்டம் எதுவும் வந்துடகூடாதே!னு உம்மாச்சியை பிரார்த்தனை பண்ணிண்டு இருப்பா. பரிமாறும் வேலை நடக்கும் போது கிராம தர்மாதிகாரி எல்லாம் சரியா நடக்கர்தா?னு கழுகு மாதிரி பாத்துண்டே இருப்பா. சரியான முறைல பரிமாறாட்டியோ அல்லது பரிமாறும் போது சிடுசிடுனு எரிஞ்சு விழுந்தாளோ அந்த கிராமத்து தக்கார் ராத்ரி நடக்கும் மீட்டீங்க்ல விளக்குக்கு நமஸ்காரம் பண்ணி மன்னிப்பு கேக்கனும். மெட்ராஸ்லேந்து வந்த யாரோ ஒரு மாமா ஒரு ஆர்வகோளாறுல வாளியை எடுத்துண்டு பரிமாற போயிட்டார். சர்வ நிதானமா அவர் பரிமாறின அழகை பாத்துட்டு எங்க தெரு கிச்சா மாமா " ஏ அம்பி! நீ இப்படி மோஹினி அவதாரம் அமிர்தம் பங்கு போடர மாதிரி டான்ஸ் ஆடிண்டு பரிமாறினாக்கா ராத்ரி நான் 500 நமஸ்காரம் பண்ணனும்டா!"னு சொல்லி வேற ஆளை பரிமாறசொன்னார்.

குட்டி குட்டி வானரங்கள் கைல ஜக்கை வெச்சுண்டு எல்லாருக்கும் ஜலம் கேட்டுண்டு வரும். சரிய்யா கங்கா மாமி பக்கத்துல போகும் போது ஏ கங்கை! ஏ கங்கை!னு ஜலம் கேக்க ஆரம்பிச்சிருவோம். வயசுல பெரியவாளை பேர் சொல்லி கூப்டா வாய்ல புண்தான்டா வரும் உங்களுக்கு!னு அந்த மாமியை கொஞ்சம் கத்த விட்டுட்டு அடுத்த வரிசைல காவேரி மாமியை பாத்த உடனே பொங்கி வரும் காவேரி! பொங்கி வரும் காவேரி!னு கூவ ஆரம்பிச்சுடுவோம்...:)



பச்சை பட்டுபுடவையில் கல்லிடை...:)

பந்தில இடம் பிடிக்கர்துக்கு மாமா மாமிகள் ஜாக்கிஜான் வேகத்துல ஓடுவா. இப்படிதான் ஒரு தடவை குண்டல கோமா மாமி பக்கத்துல ஒரு இடம் போட்டு வெச்சுருந்தா, அந்த பக்கமா வந்த இன்னோரு மாமா,

i) “யாருக்கு இடம் மாமி?”

"எங்க தெரு ‘வம்பு’ வைதேகி மாமிக்கு இடம் போட்டு் வச்சுருக்கேன் மாமா"

"ஓஓஓ! வைதேகி மாமி போன பந்திலையே சாப்டுட்டு கைஅலம்ப போயாச்சு, நான் உக்காந்துக்கறேன்.

ஓய்ய் மாமா! பொம்ணாட்டிகள் பக்கத்துல வந்து உக்கார வரேரே ஓய்! வேற எங்கையாவது போங்கோ மாமா!

உங்காத்து மாமாவும் நானும் கோத்ர தாயதிதான் மாமி அந்த வகைல பாத்தாக்கா நீங்க எனக்கு அங்கச்சி தான். பேசாம சாப்பிடுங்கோ மாமி!

.................................................................................

ii) “ஏ கோமா எப்பிடிடீ இருக்கை? உன்னோட ஆம்படையான் இப்ப நேரும்கூருமா இருக்கானாடீ? எங்கடீ உன்னோட ஆத்துக்காரன்?”

அதோ! பாயாச வாளியை தூக்கிண்டு ஓடிண்டு இருக்காரே?

இங்க எல்லாருமே பாயாச வாளியோடதான் ஓடிண்டு இருக்கா இதுல எந்த பாயாசவாளியை போய் பாக்கர்து!!

கட்டம் போட்ட அன்ட்ராயர் கூட வெளில தெரியர்தே! அவர்தான் மாமி!”

....................................................................................

iii) ஏ அம்பி! அவியல் போடுறா! கூப்ட கூப்ட காதுல வாங்காத மாதிரியே போறையேடா?

கொஞ்சம் தள்ளி போனதுக்கு அப்புறம் “இதோட 8 தடவை அவியல் போட்டாச்சு! என்னதான் வயிரோ! பாயாசத்துக்கு எல்லாம் அவியலை தொட்டுண்டு சாப்பிடரார் அந்த மாமா, கஷ்ஷ்ஷ்டம்!”

இந்த மாதிரியான சம்பாஷனைகள் எல்லாம் சர்வசாதாரணமா கேக்கலாம்.



சுபம்

Thursday, April 21, 2011

சாஸ்தா ப்ரீதி

ஐயப்பன் உம்மாச்சிக்கு நடக்கும் வெகு விமர்சையான ஒரு பூஜை இந்த சாஸ்தா ப்ரீதி. பூஜை சம்பந்தமான விஷயம் எல்லாம் உம்மாச்சி ப்ளாக்ல நாம தனியா பாக்கலாம். இந்த பதிவுல நாம பார்கப்போவது அந்த விழால நடக்கும் கலாட்டாக்கள்.

குத்துக்கல் தெருல ஒரு புள்ளையாண்டானுக்கு சாஸ்தா ப்ரீதினு சொல்ல வராது சாஸ்தா வரைக்கும் ஒழுங்கா சொல்லுவான் அதுக்கப்புறம் ப்ரீதியை ப்ரீத்தி ஆக்கிடுவான். “ப்ரித்தியும் இல்லை! சுவீட்டியும் இல்லை! நீ ஐயப்ப பூஜைனு சொன்னாபோரும்டாப்பா!”னு அந்த தெரு மாமா ‘சிடுசிடு’னு எரிஞ்சு விழுவார் (அந்த மாமாவோட சீமந்தபுத்திரியோட பேர் ப்ரீத்தி). கல்லிடை காஸ்மோபொலிடன் சிட்டில இருக்கும் எல்லா அக்ரஹாரங்களும் ஒத்துமையா கொண்டாடும் ஒரு விழான்னே இதை சொல்லலாம்.18 அக்ரஹாரம் சேர்ந்த தொகுப்புக்கு கரந்தையார்பாளையம் சமூகம்னு பேர். 18 அக்ரஹாரத்துக்கும் தனி தனியா தர்மாதிகாரியா அந்த தெருல இருக்கும் ஒரு மாமா இருப்பார்.சமூகத்தோட நிர்வாகம் சுழற்சி முறைல ஒவ்வொரு கிராமமா சுத்தி வரும்.சமூகத்துக்கு தனியா ஒரு பெரிய தொகை வங்கில உண்டு. அதுலேந்து வரும் வட்டியை வெச்சுண்டு ஒரு வருஷம் முழுசும் வரும் பொது விஷேஷங்களை கழிக்கனும்.அதுல முக்கியமான ஒரு விஷேஷம் இந்த சாஸ்தா ப்ரீதி. இந்த விஷேஷம் முடிஞ்சு தான் சமூகத்தோட பொறுப்பை அடுத்த கிராமத்துகாராளுக்கு மாத்தி குடுப்பா. பொதுவா வடக்கு தமிழ் நாடு முழுசும் ராம நவமி,கிருஷ்ணஜெயந்தி இந்த மாதிரி உத்ஸவம் தான் ஜாஸ்தி. தெற்கதான் அதுவும் நெல்லை மாவட்டத்தை சுத்தி உள்ள பிரதேசங்கள்ல தான் ஹரிஹரசுதனுக்கு வழிபாடுகள் ஜாஸ்தி (என்ன இருந்தாலும் மலையாளதேசம் பக்கமோ இல்லையோ!).

ஆடி மாச சனிக்கிழமைல இந்த விஷேஷமும் அதை தொடர்ந்து சுமாரா 5000 பேருக்கு போஜனமும் நடக்கும், அடுத்த நாள் ஞாயிற்றுக் கிழமை சூரிய நாராயண பூஜை & போஜனம். இந்த போஜன சாலைலதான் வேடிக்கை வினோதம் எல்லாம் அரங்கேரும். சமூகத்து பொறுப்பை சுருக்கமா கிழினு சொல்லுவா. 2 யானை பொம்மை, 2 கைவிளக்கு, பட்டுத்துணியில் சுத்தின பழைய ஏட்டிச்சுவடி - இதுதான் எங்களுக்கு தெரிஞ்ச கிழி. “கிழி இந்த கிராமத்துலேந்து அந்த கிராமத்துக்கு மாறர்து!”னு சொல்லிப்பா. சக்கப்பழம் ஹரீஷ், “கிளி நம்ம கிராமத்துக்கு எப்ப வரும்?”னு கேப்பான். ‘ஆகாஸத்தை பாத்துண்டே இருடா கோந்தை! கிளி காக்காய் எல்லாம் வரும்!”னு அகிலா மாமி நக்கல் அடிப்பா. சாஸ்தா ப்ரீதி முடிஞ்சு ஞாயிற்றுக்கிழமை சாயங்காலம் கிழி வாங்கின கிராமத்துக்காரா கிழி சாமான் எல்லாத்தையும் மேளதாளத்தோட அவா தெருவுக்கு கொண்டு போவா. எங்க தெருல இந்த யானை பொம்மையை கைல கொண்டு வரர்துக்குனு ஸ்பெஷலா ஒரு மாமா இருக்கார்...:)



கிழி சாமான்

ஐயப்பனுக்கு பாயாசம் தான் மஹா நைவேத்யம் மேலும் எல்லாருக்கும் பந்திலையும் தாராளமா பாயாசம் பரிமாறனும், இந்த சிட்டில எல்லாம் பந்தில ஒரு மொட்டை கிண்ணத்துல வைக்கர மாதிரி இருந்தா மொத்தமே 2 வாளி பாயாசம் இருந்தா போதும், இங்க கதையே வேற. ஒரு வரிசைக்கு 'கிள்ளு' பாயாசம் பரிமாறவே பெரிய வாளியால ஒரு வாளி பாயாசம் வேணும். எங்க தெரு பீப்பி மாமா,சந்தனகும்பா மாமி எல்லாம் கோதால குதிச்சாக்க 3/4 வாளி பாயாசம் அவாளுக்கே காலி ஆயிடும்..;) சாஸ்தா ப்ரீதிக்கு பாயாசம் பண்ணர்த்துக்கு ஒரு பெரிய்ய்ய்ய்ய்ய வெண்கல உருளி உண்டு, சும்மா குத்துமதிப்பா எல்லாம் சாமான் போட முடியாது இத்தனை வாளி ஜலம்,இத்தனை வட்டு வெல்லம்&தேங்காய்,இத்தனை பக்கா அரிசி,முந்திரினு கணக்கு எல்லாம் உண்டு. அந்த விஷயம் எல்லாம் உருளியோட உள்பக்கம் செதுக்கி வச்சுருக்கா.



உருளி இவ்ளோ பெரிசு இருக்கும்....:)

கிழிக்கார கிராமத்தை சேர்ந்தவா தான் பாயாசத்துக்கு யத்தனம் பண்ணி குடுக்கனும். 7 மணி நேரம் ஆகும் பாயாசம் பண்ணி முடிக்கவே. அதனால எங்க தெரு கிழியின் போது காலங்காத்தால 2.45 மணிக்கு எழுந்து குளிச்சுட்டு மேற்கு கோடில இருக்கும் எங்க தெருக்காரா எல்லாரும் Bare body-யோட ஐயப்பனோட பேர் பாடிண்டே தெருலேந்து கிளம்பி கிழக்கு கோடில இருக்கும் கோவிலுக்கு ‘பளபளக்கும் விபூதி, பளிச்சிடும் கோபி’னு ரகம் ரகமா வானர சேனை கைவீச்சும் கால்வீச்சுமா போவோம். எங்க தெருல ஜாம்பவான் மாதிரி வயசான தாத்தா மாமாவும் இருப்பார் 2 ஆம் கிளாஸ் படிக்கும் சிண்டுவும் இருக்கும். போகும் வழி முழுசும் சும்மா போகமாட்டோம். பெருமாள் கோவில் வாசல்,சன்னதி தெரு ஆரம்பம்,டாக்டராத்துக்கு பக்கத்துல எல்லாம் ‘சாமியேய்ய்ய்ய்ய்ய்! சரணமய்யப்பா!’னு சரணம் போட்டு ஆத்துல முன்னடிக்க அளில தூங்கிண்டு இருக்கும் சன்னதி தெரு மாமா மாமிகள் “வானரபட்டாளம் பாயாசம் வைக்கர்துக்கு கிளம்பிருத்துகள்!”னு அவா வாய்ல விழுந்துட்டுத்தான் போவோம்.

கோவிலுக்கு போனதுக்கு அப்புறம் பயபக்தியா சன்னதில நமஸ்காரம் எல்லாம் பண்ணிட்டு பவ்யமா நின்னாக்க எங்க தெரு தர்மகர்த்தா தலைமைல ஒரு டீம் மீட்டிங் நடக்கும். அவர் வானரத்தோட வயது & தேஹபராக்ரமத்தை பொறுத்து வேலையை பிரிச்சு குடுப்பார். ஒரு கோஷ்டி வாய்க்கால்லேந்து வாளி வாளியா ஜலம் எடுத்துண்டு வரும்,இன்னொரு கோஷ்டி 300 தேங்காயை குடுமி பிச்சு குடுக்கும்,ஒரு அணி அதை கண்ணுல கீறாம லாவமகா உடைச்சு குடுக்கும் ( நம்ப டிபார்ட்மண்ட்), இன்னொரு டீம் அதை அழகா துருவும் (வயசான சில மாமாக்கள் “கைல பட்டுக்காம துருவுங்கோடா கோந்தேளா!”னு வாஞ்சையோட வார்னிங் குடுத்துண்டே இருப்பா), துருவின தேங்காய் பூவை கோடித்துண்டுல போட்டு தீர்த்தம் சேர்த்து சேர்த்து 15 வாளி பால் எடுக்கனும். எல்லாம் ரெடி பண்ணி வெச்சுண்டு அடுப்புக்கு பூஜை எல்லாம் பண்ணி ‘நளமகாராஜா’ நானா மாமா அடுப்பை மூட்டி உருளில அரிசி கொதிக்க ஆரம்பிச்சதுக்கு அப்புறம் நல்ல ஆஜானுபாஹுவா இருக்கும் 4 பேர் 8 அடி நீளம் உள்ள ரெண்டு துடுப்பை வெச்சுண்டு எதிரெதிரா கிண்ட ஆரம்பிப்பா. (ரொட்டிசால்னா சேகர் அதுல கெட்டிக்காரன்)

கோவில் வெளிபிரகாரத்துலதான் தட்டி பந்தல் போட்டு பூஜை நடக்கும். இந்த பூஜைல மட்டும் பாத்தேள்னா எல்லா மாமா/மாமிமார்களும் எதோ சுதந்திரதின அணிவகுப்பு மாதிரி அழகா வரிசை வரிசையா உக்காச்சுண்டு இருப்பா. பூஜை முடிஞ்சு தீபாராதனை ஆன உடனே 'டபக்'னு Aboutturn போட்டு பந்திக்கு உக்காரனுமே அதுக்குத்தான் இந்த ஒழுங்கு..:). எதோ பிரச்சனைக்காக சண்டை போட்ட கோமா மாமிக்கு பக்கத்துல இடம் கிடைச்சாலும் "கோவில்னா எல்லாரும் வந்துபோகத்தான்டி செய்வா! அவாத்து திண்ணைல போயா என்னோட ப்ரு@#%தை வச்சு உக்காரப்போறேன்"னு தனக்குத் தானே சால்ஜாப்பு சொல்லிண்டே உக்காசுண்டு சாப்பிடும் சினிமா மாமியின் காமெடியை பாக்கர்து கண் கொள்ளா காட்சியா இருக்கும்.

முடுக்கு 'மூச்சா' மாமா இதுக்கு மேல ஒரு படி போய் என்ன சொல்லுவார் தெரியுமோ??

(கல்லிடை மாமா மாமிகள் கலாட்டா தொடரும்)................:)

Thursday, April 14, 2011

இரண்டாவது சுதந்திர போராட்டம்.

எங்கிருந்தோ வந்த வெள்ளைக்காரன் இந்தியாவோட வளங்களையும்,மக்களையும் அட்டைபூச்சி மாதிரி உரிஞ்சுண்டு இருந்தான். பொறுக்கமுடியாம நம்ப மக்கள் திலகர் வழில ஒரு பிரிவாவும்,காந்தி வழில ஒரு பிரிவாவும் தொடர்ந்து போராடி கடைசில வெள்ளக்காரன் கிட்ட இருந்து சுதந்திரமும் கிடைச்சுது. அந்த போராட்டத்தை சுதந்திரப் போராட்டம்னு சொல்லுவோம். 63 வருஷம் கழிச்சி இப்போ இரண்டாவது சுதந்திர போராட்டம் தொடங்கியாச்சு. நமக்கு உள்ளயே இருக்கும் சில அட்டைபூச்சிகளுக்கு எதிரான போராட்டம் இது.



1947

ஒரு பக்கம் நாடு அபரிமிதமான வளர்ச்சியை எட்டிண்டு இருக்கு, இன்னொரு பக்கம் சோத்துக்கு வழி இல்லாம செத்துப்போறவாளோட எண்ணிக்கையும் ஜாஸ்தி ஆகிண்டே இருக்கு. நமக்கெல்லாம் ஆச்சர்யமா இருக்கலாம், ஆனால் இதுதான் நிதர்சனமான உண்மை. சமூக-பொருளாதார வல்லுனர்களால பல காரணங்கள் எடுத்து சொல்லப்பட்டாலும், பிரதானமான காரணம் லஞ்சம் & பொதுப் பணத்தில் ஊழல் இது இரண்டும் தான் முக்கிய காரணங்கள். அபரிமிதமான மக்கள்தொகையும் பெரும் சவாலா இருக்கு. “வாழும் வீட்டுக்கு ஒரு பெண்குட்டியும்,வைக்கோல்போருக்கு ஒரு கன்னுகுட்டியும் மதி!”னு ஒரு மலையாள வசனம் உண்டு. அதுமாதிரி ஊழலோட தீ கொஞ்சம் கொஞ்சமா பரவி தேசம் முழுசும் பத்திண்டு எரியர்து.

நாட்டோட செலவ செழிப்பை எல்லாம் ஒரு சில விஷக்கிருமிகள் கபளீகரம் பண்ணிக்கர்துனால நாடு அடைய வேண்டிய வளர்ச்சி வலுக்கட்டாயமா தடுக்கப்படர்து. மக்களோட அறியாமை தான் இதுக்கு எல்லாம் காரணம். அற்பமான விஷயங்கள்ல எல்லாம் நம்ப மனசு மயங்கி போய் இருக்கு. உடன்பிறப்பே! உளுத்தம்பருப்பே!னு சொல்லியாச்சுன்னா உடனே இங்க உள்ளவாளுக்கு வாயும் வயிரும் நிறையர்து. மண்ணாங்கட்டியாட்டமா மக்கள் இருக்கர்துனால தப்பு பண்ணரவாளுக்கும் செளகர்யமா இருக்கு.

நேத்திக்கு காத்தால வந்த லேட்டஸ்ட் மாடல் நோக்கியா போன் வாங்கி உபயோகிக்கனும்னு நமக்கு தெரியர்து, ஆனா 63 வருஷத்துக்கு முன்னாடி முழுக்க முழுக்க வெள்ளக்காரன் சட்டத்தை அப்பிடியே பாத்து ஈஅடிச்சான்காப்பியாட்டமா அடிச்சி நாம எழுதி வச்ச சட்டதிட்டங்கள் எதுலையும் மாற்றம் கொண்டுவரனும்னு யாருக்கும் தோணவே மாட்டேங்கர்து. ‘லூசுமாதிரி பேசாதே தக்குடு! சட்டத்துல திருத்தம் எல்லாம் ஆட்சில உள்ளவானா கொண்டு வரணும்!’னு சொல்லுவேள். நன்னா செளக்கியமா திடுகுதத்தம் பண்ணின்டு இருக்கும் கசவாளிகள் என்னிக்காவது திருத்தம் கொண்டு வந்து அவா தலைல அவாளே மண்ணை அள்ளி போட்டுப்பாளா? கிரைண்டர் தரேன்! மிக்ஸி தரேன்!னு செக்ஸியா அறிக்கை விடும் அட்டைபூச்சிகளை பாத்து பல்லை இளிக்கும் புள்ளைபூச்சிகளாதான் நாம இருக்கோம். இதை எல்லாம் தந்துட்டு சூப்பரா நம்ப தலைல மொளகாயை அரைச்சுட்டு போறா எல்லாரும்.இயந்திர அரைப்பானோ இல்லைனா கலப்பானோ எதுவா இருந்தாலும் ஆற்காட்டார் பீஸ்கட்டையை நிரந்தரமா பிடிங்கி வச்சுருந்தா ஒன்னும் பண்ணமுடியாதுடே!



உண்மையான சிங்கம்!

ஜனனாயகம் எல்லாம் ஒன்னும் இங்க கிடையாது பழையபடி மன்னராட்சி முறைதான் நடந்துண்டு இருக்கு. மத்தில இத்தாலி மகாராணியோட ஆட்சி, மாநிலத்துல ராஜராஜசோழன் ஆட்சி(மறுபடியும் மன்னார்குடி ஆட்சி வரும்னு சொல்லுண்டு இருக்கா எல்லாரும்). கடைசி வரைக்கும் மக்களாட்சி மட்டும் வரவே மாட்டேங்கர்து. இது எல்லாத்துக்கும் சங்கு ஊதற மாதிரி அன்னா ஹசாரேனு ஒரு புண்ணியவான் சில காரியங்கள் பண்ணின்டு வரர்து கொஞ்சம் சந்தோஷமா இருக்கு. அவர் சொல்லறபடி லோக்பால் மசோதா நிறைவேத்தியாச்சுன்னா ஊழல் பண்ணும் ஊதாரிகளுக்கு அடிக்கப்படும் முதல் சாவுமணி.

நம்ப எல்லாருக்குமே பல வருஷமாவே யாருக்காவது ஒருத்தருக்கு வாழ்க! சொல்லி சொல்லி பழக்கம் ஆயிடுத்து, எப்போதும் போடர வாழ்க!வை கொஞ்ச காலத்துக்கு அன்னா ஹசாரேவுக்கு நாம எல்லாம் போட்டாக்க புண்ணியமா போகும்.
ஒரு ஜெயம் கிடைச்சாச்சுன்னா அதை வெச்சுண்டு அடுத்தடுத்து பல போராட்டம் பண்ணுவேன்!னு உற்சாகமா சொல்லியிருக்கார் அந்த நல்லவர், அவரை நம்ப அரசியல்வியாதிகள் கிட்டேர்ந்து தள்ளிவெச்சு பத்திரமா பாத்துக்க வேண்டியது நம்மளோட கடமை. அந்த நல்ல மனிதருக்கு நோயற்ற வாழ்வையும்,ஆரோக்யமான உடலையும் அளிக்க உம்மாச்சியை பிரார்த்திக்கிறேன். எரியர்தை பிடுங்கினா கொதிக்கர்து தானா அடங்கும்ங்கர கதையா நமக்கு போராட்டகுணமே இருக்கமாட்டேங்கர்து. IPL பாக்கலைனா அகிலமே அஸ்தமிச்சு போயிடும்னு ஆர்பரிக்கும் இளைய சமுதாயத்தையும், சினிமாகாராளை பாத்த உடனே வேலையை விட்டுட்டு இடுப்புல கையை வச்சுண்டு வேடிக்கை பாக்கும் சமூகத்தையும் வெச்சுண்டு போராட்டம் பண்ணர்து அப்படிங்கர்து ஓட்டை வாளி, அறுந்த கயிறை வெச்சுண்டு கிணத்துல ஜலம் எடுக்க போன கதைதான்.



2011

ஹசாரே ஒன்னும் அவருக்கு பென்ஷன் கிடைக்கலைன்னு போராட்டம் பண்ணலை, நாம எல்லாம் எதிர்காலத்துல டென்ஷன் இல்லாம இருக்கனும்னு ப்ராணனை விட்டுண்டு இருக்கார். உலககோப்பை இறுதிப்போட்டில அலைமோதின கூட்டத்தை மாதிரி 10 மடங்கு கூட்டம் நாடு முழுவதும் அவருக்கு ஆதரவா இறங்கி போராட்டம் பண்ணினாதான் நாம எல்லாரும் ஜீவிச்சு இருக்கமுடியும். விளையாட்டு,ஆடல்,பாடல் இதை மாதிரி எந்த விஷயமும் நம்மோட போராட்ட குணத்தை மழுங்கடிச்சுர கூடாது,சேதுபந்தனத்துல அணில் கூட தன்னால முடிஞ்ச அளவுக்கு உபகாரம் பண்ணின மாதிரி நாம எல்லாரும் ஒன்னு சேர்ந்து இந்த விஷயத்துக்கு போராடியே தீரவேண்டிய கட்டாய நிலைமைல இருக்கோம். இதை விட்டுட்டு "கிரிக்கெட் ஒரு மதம் அதில் @#&ன் கடவுள்"னு வெட்டி வசனம் பேசிண்டு இருந்தாக்க, உருவிண்டு போகும் நம்ம வேட்டியை கூட நம்மாள காப்பாத்திக்க முடியாது.

ஜெய்ஹிந்த்! வந்தே மாதரம்!

Thursday, April 7, 2011

பதிவுலகில் தக்குடு

ரொம்ம்ம்ம்ம்ம்ப நாளைக்கு முன்னாடி நம்ப வல்லி அம்மா 'ஒரு தொடர்பதிவு எழுதுடா கோந்தை!'னு பாசத்தோட அழைச்சுருந்தாங்க, வழக்கம் போல தக்குடுவோட உலகமஹா சோம்பேரித்தனத்தால எழுதவே முடியலை. அதனால அதை இப்ப எழுதலாம்னு இருக்கேன்.



என் மனசோட ரூபம்....:)

1) வலைப்பதிவில் தோன்றும் உங்கள் பெயர்?
தக்குடு

2) அந்தப் பெயர் தான் உங்கள் உண்மையான பெயரா? இல்லை எனில் பதிவில் தோன்றும் பெயரை வைக்க காரணம் என்ன?

ஆரம்பத்துல இது என்னோட பெயரா இல்லாம இருந்தது, இப்போ இதுவே என்னோட பேர் ஆயிடுத்து, இந்த பேரை வைக்கர்த்துக்கு ப்ரத்யேகமான காரணம் எல்லாம் ஒன்னும் கிடையாது, எங்க அண்ணாவோட புள்ளையாண்டானை நான் அப்பிடிதான் கூப்பிடுவேன். அவனும் 3 மாச குழந்தையா இருக்கும் போதே தக்குடு!னு கூப்டாச்சுன்னா 'யே!'னு ஒரு சத்தம் குடுத்துட்டு அழகா சிரிப்பான். "எண்ணச்சிதறல்! படிக்கறவாளோட கதறல்!"னு எல்லாம் பேர் வைச்சுண்டு அடுத்தவா ப்ராணனை வாங்க வேண்டாம்னு தான் இந்த பேர். இந்த பேரை முடிவு பண்ணர்த்துக்குள்ள நான் பட்டபாடு நாய் கூட படாது. புலிகுட்டி பாண்டியன்,எலிகுஞ்சு டாக்டர் & சிலபல பேர் எல்லாம் லிஸ்ட்ல வெச்சுருந்தேன், நம்ப மனுஷா முழூபேரை சொல்லி கூப்பிடவே மாட்டா, புலிகுட்டி பேரை எப்பிடி பிரிச்சாலும் பிரச்சனை எதுவும் வராது ஆனா இரண்டாவது பேரை பிரிக்க ஆரம்பிச்சா நிலைமை கவலைக்கிடமாயிடும். அதனால தக்குடுபாண்டினு பேர் வெச்சு இப்போ அது தக்குடு ஆயிடுத்து.

3) நீங்கள் தமிழ் வலைப்பதிவு உலகில் காலடி எடுத்துவைத்ததைப் பற்றி?

என்னவோ அபூர்வராகங்கள் படத்துல காலடி எடுத்து வச்ச ரஜினி கிட்ட கேக்கர மாதிரி கேக்கரேளே? நிச்சயமா நான் எழுதர்து எல்லாம் எந்த பத்திரிக்கைலையும் போடமாட்டானு நன்னா தெரியும் (ஆனந்த விகடன்ல வரும் அளவுக்கு நாம என்ன இட்லி மாமி மாதிரி பெரிய எழுத்தாளரா), அந்த சமயத்துல தான் கூகிளாண்டவர் ஓசில தரார்னு கேள்விப் பட்டு எழுத ஆரம்பிச்சேன். நாமதான் ஓசில ஓசி குடுக்கர்தா சொன்னா ஓட்டையே போட்டுருவோமே இல்லையா! பெரிய்ய்ய்ய்ய இலக்கியத்தரம் எல்லாம் இதுல இருக்காது, ஆனா பக்கத்தாத்து திண்ணைல உக்காச்சுண்டு வம்பளந்த ஒரு அல்ப சந்தோஷமாவது படிக்கரவாளுக்கு கிடைக்காதா?னு ஒரு நம்பிக்கைல ஓடிண்டு இருக்கு.

4) உங்கள் வலைப்பதிவை பிரபலமடையச் செய்ய என்ன என்னென்னவெல்லாம் செய்தீர்கள்?

ஒன்னுமே பண்ணலை!னு தான் சொல்லனும். எவ்வளவோ பண்ணி இருக்கலாம். க்ஷண பொழுதுல குழாயடி சண்டை போடும் எதாவது ஒரு குழுமத்துல சேர்ந்து இருக்கலாம்,தெரிஞ்சவா தெரியாதவானு இல்லாம சகட்டு மேனிக்கு எல்லா ப்ளாக்குக்கும் போய் "அருமையாக சொன்னீர்கள்! எருமையாக நின்றீர்கள்!"னு ஒரு பிட்டை போட்டு இருக்கலாம், எல்லா ப்ளாக்கையும் பாலோ பண்ணி அவாளையும் வலுக்கட்டாயமா என்னோட ப்ளாக்கை பாலோ பண்ண வச்சு இருக்கலாம், ஆனா இது எதுவுமே தெரியாத அசடா போயிட்டேன். தெரிஞ்சவாளுக்கு மட்டும் மெயில் அனுப்பி வெச்சுண்டு இருக்கேன். அவ்ளோதான் நம்ப பிரயத்தனம்...:) பரஸ்பர முதுகு சொரிதல் & பதில் மரியாதை முயற்சிகளில் நமக்கு இஷ்டம் இல்லை.

5) வலைப்பதிவின் மூலம் உங்கள் சொந்த விஷயத்தை பகிர்ந்து கொண்டதுண்டா? ஆம் என்றால் ஏன்?அதன் விளைவு என்ன? இல்லை என்றால் ஏன்?

கேள்வியே தப்பு, சொந்த விஷயங்கள் தான் முழுமூச்சா ஓடிண்டு இருக்கு. கதை எல்லாம் எழுத மேல்மாடில நெறைய சரக்கு இருக்கனும் . நடுல நடுல மானே! தேனே! போட்டு கவிதை எழுதர்த்துக்கு என்ன தக்குடு?னு தானே கேக்கரேள்? மானே தேனேக்கு நடுல போடர்த்துக்கு எதாவது வேணுமே அதுக்கு எங்க போகர்து??( நாம என்ன சிவகுமரனா கவிதை எல்லாம் பொலந்துகட்டர்துக்கு)..:)

விஷேஷமான காரணம் எல்லம் கிடையாது, பின்னாடி வரப் போற எதிர்கால சந்ததிகளுக்கு திரட்டிபாலும்,குண்டலமும் போய்சேரனுமோ இல்லையோ! அதுக்குதான் எழுதர்து.

நிறைய பேருக்கு திரட்டிபால்,குண்டலம்,சிலுக்கு பத்தி கேட்கும்/பார்க்கும் போது தக்குடு ஞாபகம் வந்து ஒரு குட்டி சிரிப்பு அவா முகத்துல வருது இல்லையா! அதுதான் விளைவு...:)

6) நீங்கள் பொழுதுபோக்குக்காக பதிவுகளை எழுதுகிறீர்களா அல்லது பதிவுகளின் மூலம் சம்பாதிப்பதற்காகவா?

பொழுதுபோக்கா எழுத ஆரம்பிச்சு இப்போ நிறைய சம்பாத்யமும் பண்ணியாச்சு. எந்தவிதமான எதிர்பார்ப்பும் இல்லாத தங்கமான மனுஷாளோட இதயங்கள்ல தக்குடுவுக்கு கிடைச்ச குட்டியூண்டு இடம் தான் நான் சொன்ன சம்பாத்யம். ஒரு விஷயம் தெரியுமோ உங்களுக்கு? இந்த ஓசிபேப்பர் படிக்கரவாள்ல நிறையா பேர் இந்தியாவுக்கு தக்குடு வரும் போது ஆசையா அவாத்துக்கு கூப்பிட்டு வயிறு நிறையா சாப்பாடு போடறா! சென்னை கலாக்ஷேத்ரா பக்கத்துல இருக்கும் ஒரு ஆத்துல சாப்பிட்டு முடிச்சுட்டு என்னால நடக்கவே முடியலைனா பாத்துக்கோங்கோ!அமெரிக்கா,சிங்கப்பூர்,லண்டன்,கனடா எங்க போனாலும் சொந்தக்காரா ஆத்துக்கு போகாமையே 4 நாள் சாப்பாடு போட்டு ஆதரிக்கர்த்துக்கு ஆசையோட காத்துண்டு இருக்கும் அண்ணாமார்கள்,அக்காமார்கள்களோட அன்பான இதயங்கள் தான் தக்குடு பண்ணின சம்பாத்யம்...:)

7) நீங்கள் மொத்தம் எத்தனை வலைப்பதிவுகளுக்கு சொந்தக்காரர்? அதில் எத்தனை தமிழ் வலைப்பதிவுகள் உள்ளன?

நமக்கு 2 வலைபதிவு இருக்கு மாசத்துல 3 வெள்ளிக்கிழமை தக்குடு ப்ளாக்லையும் ஒரு பதிவு உம்மாச்சி காப்பாத்து ப்ளாக்லையும் எழுதிண்டு இருக்கேன்.

8) மற்ற பதிவர்கள் மீது எப்போதாவது உங்களுக்கு கோபம் அல்லது பொறாமை ஏற்பட்டது உண்டா? ஆம் என்றால் யார் அந்த பதிவர்? ஏன்?

ஏன் இல்லாம நிறையா உண்டு, சிலபேரோட எழுத்தை எல்லாம் படிக்கும் போது "இவாளால மட்டும் எப்பிடி இவ்ளோ அழகா எழுத முடியர்து?"னு பொறாமை பட்ட சமயங்கள் நிறையா உண்டு. ஒருத்தரை சொல்லி ஒருத்தரை சொல்லாம விட்டாக்க அது கஷ்டமா போகும். இங்க வந்துட்டு யாரும் வருத்தத்தோட போககூடாது, வேணும்னா என்னோட கமண்ட் செக்ஷனை கூர்ந்து கவனிச்சு போய் அவாளை படிச்சு பாருங்கோ தெரியும்!..:)(ஸ்ஸ்ஸ்ஸ்ப்பா! ஒரு வழியா சமாளிச்சாச்சு)

யார் மேலையும் கோவம் எல்லாம் எனக்கு கிடையாது. நமக்கு தோதா உள்ளவா கூட சேர்ந்துக்க வேண்டியதுதான், சம்பந்தாசம்பந்தம் இல்லாத பதிவை எல்லாம் படிச்சுட்டு கோவப்படர்துல பிரயோஜனம் இல்லை.

9) உங்கள் பதிவை பற்றி முதன் முதலில் உங்களை தொடர்புகொண்டு பாராட்டிய மனிதர் யார்? அவரைப் பற்றி, அந்த பாராட்டைப் பற்றி!

முதல் பதிவுக்கே 26 கமண்ட் போட்டு திக்குமுக்காட பண்ணின அன்பான மக்கள் இருக்கர்துனால தனிப்பட்ட முறைல யாரையும் சொல்லமுடியாது. திவா அண்ணா முதல் கமண்ட் போட்டார்னு வேணும்னா சொல்லலாம்...;)

10) கடைசியாக----விருப்பம் இருந்தால் உங்களைப் பற்றி பதிவுலகத்துக்கு தெரிய வேண்டிய அனைத்தையும் பற்றி கூறுங்கள்!

ஹலோ சொல்லவேண்டியதை எல்லாத்தையும் இங்க சொல்லிட்டா அப்புறம் போஸ்ட் எப்பிடி போடர்து...:)(இனிமே சொல்லர்த்துக்கு என்ன பாக்கி இருக்கு?னு எல்லாரும் சொல்லுவேள்னு தக்குடு அறிவான்)

2010லையே இந்த தொடர் பதிவை எல்லாரும் எழுதியாச்சு, அதனால யாரை அடுத்து எழுத அழைக்கர்துன்னே தெரியலை. எழுதாதவா யாராவது இருந்தேள்னா தக்குடு எழுத சொன்னான்!னு போட்டு(மறக்காம நம்ப கடைக்கு ஒரு லிங்க்கையும் குடுங்கடே!) எழுதிடுங்கோ!

குறிப்பு - 50 ரன் அடிச்சதுக்கு அப்புறம் பேட்டை தூக்க மறந்து போனவா 54 போஸ்ட் வந்ததுக்கு அப்புறம் காமிக்க எதாவது ரூல் இருக்கா? மன்னார்குடியின் மஹேந்தர்சிங் தோனி!! கொஞ்சம் ஜாரிச்சு சொல்லுங்கோளேன்...:)

Thursday, March 17, 2011

மூக்கும் முழியுமா......III

உம்மாச்சி ப்ளாக்ல புது போஸ்ட்



Part 1 Part 2 படிச்சாதான் யாரோட மூக்கு, யாரோட முழினு புரியும்!..:)

வண்டி புறப்பாடு ஆகர்துக்கு தயார் ஆச்சு, யாரோ ஒரு வெள்ளக்கார ஏர்ஹோஸ்டஸ் வந்து எல்லாருக்கும் புளிப்புமிட்டாய் குடுத்தா, நிறைய ரூபாய் குடுத்து டிக்கெட்டு வாங்கினதுக்கு நல்லதா ஒரு 5 STAR சாக்லேட் குடுக்கப்படாதோ! எதுக்கு எல்லாரும் மசக்கயா இருக்கர மாதிரி புளிப்புமிட்டாய் குடுக்கரா!!னு எனக்கு யோஜனையா இருந்தது, இருந்தாலும் குடுத்த காசுக்கு நம்மோட ஷேரை விட்டுடகூடாதுன்னு “மைக்கெல் மதன காமராஜன்”ல வரும் வரதுகுட்டி மாதிரி 2 புளிப்புமிட்டாய் எடுத்துண்டேன். புளிப்புமிட்டாய்க்கு வால் புடுச்சுண்டே அடுத்தாப்ல ஒரு கொழந்தை லெமன் ஜூஸ் குடுத்துண்டே வந்தது. அடராமா! ஏதுடா இது! சீமந்த விஷேஷ ஆத்துக்கு வந்தமாதிரி எல்லாம் ஒரே புளிப்பு வஸ்துவான்னா வந்துண்டு இருக்கு! அடுத்து என்னது மாங்காயும் நொக்கட்டான்புளியுமா?னு கேக்கலாம்னு வாயை திறக்கர சமயத்துல தான் லெமன் ஜூஸ் குடுச்ச டம்ப்ளரை வாங்கர்துக்கு நம்ப தீவாளி வந்தது.

தீவாளியோட Surname ஹரிலால்னு போட்டு இருந்தது (நிச்சயமா நைனாவோட பேராதான் இருக்கும்). டம்ப்ளரை குடுத்துட்டு “தாங்க் யூ தீவாளி!”னு சொன்னேன். தினசரி வாழ்க்கைலையுமே இந்த மாதிரி நமக்கு உபகாரமா இருக்கரவாளை "ஏ தக்காளி!" "இந்தாப்பா கோலப்பொடி" "ஏ கீரை! இங்க வா!"னு சொல்லாமா அவாளோட பேரை சொல்லி கூப்பிடும்போது அவாளுக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கும். தீவாளியும் ரொம்ப சந்தோஷமா சிரிச்சுட்டு போச்சு. எனக்கு பக்கத்துல இருந்த டவுசர்பாண்டியன் மட்டும் வைரமுத்துவா இருந்தா "தீவாளியின் கண்களோ மத்தாப்பூ! சிரிப்போ முத்துப்பூ! மொத்தத்தில் அவளே அழகின் முத்தாய்ப்பு!"னு கவிதை சொல்லி இருப்பார். நமக்கு தான் கவிதையே வராதே, அதுவும் போக பொம்ணாட்டிகளை தக்குடு நிமிர்ந்து கூட பாக்க மாட்டான்!னு லோகத்துக்கே தெரியும்(சந்தேகமா இருந்தா அகிலா மாமி கிட்ட கேளுங்கோ!). அதனால கிருஷ்ணா! ராமா!னு சொல்லிண்டு காதுல பஞ்சை வெச்சுண்டு சீட் பெல்ட்டை முதல் முயற்சிலயே வெற்றிகரமா போட்டுண்டு தயார் ஆனேன். வண்டி மெதுவா நகர ஆரம்பிச்சு அப்புறம் ஓட ஆரம்பிச்சு கடைசில பறக்கவும் ஆரம்பிச்சது.

நான் மெதுவா அல்லசல்ல யாரெல்லாம் இருக்கானு பாத்தேன். எனக்கு அடுத்து இருந்த நடைபாதைக்கு அடுத்து இருந்த வரிசைல எனக்கு நேர ஒரு குடும்பம் உக்காச்சுண்டு இருந்தது. அதுல இருந்த ரங்கமணி, தங்கமணி & குட்டீஸ் அச்சு அசலா ஒரு NRI-கு உண்டான எல்லா லக்ஷணங்களோட இருந்தா. ஆத்தங்கரைல இருக்கும் தும்பிக்கையாழ்வார் மாதிரி அந்த ரங்கமணிக்கு வேழ முகம் இல்லையே தவிர பேழை வயிறு (அதனால தான் புளிப்பு மிட்டாய் குடுக்கறாளோ?). ஜூஸை குடிச்ச உடனே கபார்னு தூங்க ஆரம்பிச்சுட்டார். பக்கத்துல இருந்த டவுசர் பாண்டி Apple ஐபாடை பாடாபாடு படுத்திண்டு இருந்தார். என்னோட திரைல தேடி புடிச்சு ஒரு ஹிந்தி படம் பார்த்துட்டு நானும் தூங்க ஆரம்பிச்சுட்டேன்.

நல்ல தூங்கிண்டு இருக்கும் போது யாரோ என்னோட கன்னத்தை தட்டி எழுப்பர மாதிரியும் “எச்சுஸ்மி சார்!”னு ஸ்வர சுத்தமா புல்லாங்குழல்ல ஊதற மாதிரி இருந்தது. கண்ணை முழிச்சு பாத்தா பரிவான முகத்தில் கனிவான சிரிப்போட நம்ப தீவாளி நிக்கர்து. நீங்க என்ன சாப்ட போறேள்?னு கேட்டது. கொட்டாவி விட்டுண்டே நளதமயந்தி மாதவன் மாதிரி “நோ பிஷ்! நோ எக்! நோ சிக்கன்/மட்டன்!”னு சொல்லிமுடிக்கவும் புன்சிரிப்போட போய்ட்டா. பிஸினஸ் கிளாஸ்ல உள்ளவாளுக்கு எல்லாம் “இன்னும் ஒருவாய்! இன்னும் ஒருவாய்! ஆஆஆஆ அம்ம்ம்ம்!னு சொல்லிண்டே ஊட்டியே விடுவா போலருக்கு! மன்னார்குடி/மாயவரத்தை சேர்ந்த மொரட்டு சம்பந்திகளுக்கு போடரமாதிரி அவாளுக்கு தான் முதல் பந்தி.அவாளுக்கு சாப்பாடு குடுத்துட்டு போர வழில மெதுவா "ஒரே ஒரு வெஜ் இருக்கு! நீங்க வேணா சாப்டுங்கோ!"னு சொல்லிண்டே ஒரு ட்ரே நிறையா தந்தா. எனக்கு குடுக்கர்தை பாத்துண்டே டவுசர்பாண்டியனும் கண்முழிச்சுட்டார். மத்தவா எல்லாருக்கும் சாப்பாடு வர 20 நிமிஷம் ஆச்சு, நமக்கு மட்டும் ஸ்பெஷல்..:) டவுசர்பாண்டியன் பரபரப்பான குரல்ல "என்னோட சாப்பாடுல வடை இல்லையே!"னு முதல் தடவையா தமிழ்ல பேசினார். “வாடி வா! வடையை பாத்தவிட்டுதான் தமிழ் வருதா உமக்கு?”னு மனசுல சொல்லிண்டே கனீர் குரல்ல “தீவாளி!”னு கூப்டு அவருக்கு வடை வாங்கி குடுத்தேன்.



ஆஹாரம்....:)

சாப்பாடு எல்லாம் நன்னா தான் இருந்தது, இருந்தாலும் உள்ளூர கொஞ்சம் பயம். அர்த்தராத்ரில நன்னா வடையும் வெண்பொங்கலும் நொசுக்கிட்டு அப்புறம் கலக்கி விட்ருத்துன்னா என்ன பண்ணர்து!!? சுச்சா போனாலே காலை அலம்பி 7 தடவை வாய் கொப்பளிக்கர நமக்கு கக்கா போய்ட்டு “பேப்பர்ல தொடச்சுண்டு வாங்கோ!”னு சொன்னா நன்னாவா இருக்கும், அதனால எக்காரணத்தை கொண்டும் ப்ளைட்ல கக்கா போககூடாதுன்னு சபதம் பண்ணின்டுதான் ப்ளைட்டே ஏறினேன். சாப்பிட்டு முடிஞ்ச உடனே அடுத்த காமெடி ஆரம்பமானது.

நல்ல 6 அடி உசரத்துல ஒரு வெள்ளக்காரி ஒரு 'ஐடக்கல்' வண்டியை தள்ளிண்டு வந்து ‘அரங்கேற்றவேளை’ பிரபு கிட்ட ‘சார் லட்ட்ட்ட்டுடுடு’!னு கேட்ட மாதிரி "சார் ட்ரிங்ங்ங்ஸ்!"னு கேட்டா. பந்தில பரிமாறர்த்துக்கு முன்னாடி வாழக்கா பொருத்துவல்ல கொஞ்சம் வாய்ல போட்டுப்பா,ரசத்துல கொஞ்சம் குடிச்சுப்பா,ஸ்வீட் & வடையை விண்டு வாய்ல போட்டு பாத்துப்பா, அதை மாதிரி இந்த வெள்ளைகாரியும் எல்லா சரக்குலையும் கொஞ்சம் கொஞ்சம் டேஸ்ட் பாத்துருப்பாளோ?னு ஒரு சம்சியம் எனக்கு. அவள் நெளுச்சுண்டு நின்ன ஸ்டைல் வேற அதை ஊர்ஜிதம் பண்ணரமாதிரி இருந்தது. பாட்டில் மூடியை மோந்து பாத்தாலே மயக்கம் போடற கேஸான நான் ஒரு டம்ப்ளர் தூத்தம் மட்டும் வாங்கி குடிச்சேன்.

அடுத்து நேர பக்கத்து சீட்டு ரங்கமணியை "சார் ட்ரிங்ங்ங்ஸ்!"னு கேக்க, அவர் ஏக்கமான முகத்தோட தங்கமணியை பாத்துண்டே ஷீணமான குரல்ல நோ! நோ!னு மறுத்தார். “மீசை வெச்ச ஆம்பிளையா இருந்தா க்ளாஸ்ல கையை வெச்சு பாருய்யா பாப்போம்!!”னு சொல்லற மாதிரி அவரோட தங்கமணி மொறச்சுண்டு இருந்தாங்க. ரயில்ல எல்லாம் டிக்கேட் எடுக்கர மாதிரி ஒரு 10 சீட் தள்ளி அவரோட தங்ஸ்சுக்கு டிக்கெட் ரிசர்வ் பண்ணி இருக்க கூடாதோ? லூசுமாதிரி பொண்டாட்டிக்கு பக்கத்து சீட்டை ரிசர்வ் பண்ணினா இப்பிடிதான் ஆகும். என்கிட்ட ரிசர்வ் பண்ண சொல்லி இருந்தா 2 வரிசையே தள்ளி பண்ணிவெச்சுருப்பேன். டவுசர்பாண்டியன் மொடாக் குடியனா இருப்பார் போலருக்கு, எதோ தேர் திருவிழால நீர்மோர் குடிக்கர மாதிரி சுர்ர்! சுர்ர்!னு உரிஞ்சு தள்ளிட்டார். “இந்த ரேஞ்சுல சோடா கலக்காம குடிச்சேள்னா தோஹால நீங்க பிடிக்க வேண்டிய மினிசோட்டா ப்ளைட்டை வீல் சார்ல போய் தான் ஓய் பிடிக்கமுடியும்!”னு அவர் கிட்ட சொன்னதுக்கு அப்புறம் நிப்பாட்டினார்.

தங்கமணி மட்டும் பக்கத்துல இல்லைனா இந்த ரங்கமணிகள் வாழ்க்கையை எப்பிடி எல்லாம் அனுபவிக்கரா தெரியுமோ! மாமியை மெட்ராஸுக்கும், பெங்களூருக்கும்,கல்லிடைக்கும் அனுப்பி வச்சுட்டு தோஹால சில மாமாக்கள் அடிக்கர கொட்டம் சொல்லி முடியாது..:) ஒரு வழியா நான் இறங்க வேண்டிய ஸ்டேஷனும் வந்தது, சாமான் செட்டை எல்லாம் எடுத்துண்டு இறங்கர இடத்துல டாடா சொல்லர்த்துக்கு நின்னுண்டு இருந்த தீவாளிட்ட “ரொம்ப சந்தோஷம் கோந்தை! அப்ப நான் போய்ட்டுவரேன்!”னு சொல்லிண்டு இப்பதான் இறங்கின மாதிரி இருக்கு, அதுக்குள்ள 1.5 வருஷம் முடிஞ்சாச்சு!!....:)

(கதை பலன் - யாரெல்லாம் கர்மசிரத்தையோட இந்த கதையை படிச்சுட்டு ஒழுங்கா கமண்டும் போடராளோ அவா போகும் ப்ளைட்ல நம்ப தீவாளி மாதிரி மூக்கும் முழியுமான பிகர் ஏர்ஹோஸ்டஸா வருவா. படிச்சது அக்கா & மாமிமார்களா இருந்தா பலன் அவாளோட ஆத்துக்காரரை போய் சேரும்...:) (சுபம்)

Thursday, March 10, 2011

மூக்கும் முழியுமா......II

Part I இவட நோக்கனும்

என்னை ஒரு ஆபிசர் அழைக்கவும் பக்கத்துல போய் பாஸ்போர்ட்டை குடுத்துட்டு தொண்டையை சரிபண்ணிண்டு பதில் சொல்ல தயாரானேன். அவர் உடனே என்ன சொன்னார் தெரியுமோ?? ஆத்தங்கரைல ஜலம் நிறைய இருக்கா?னு மெதுவான குரல்ல கேட்டார். எனக்கு ஒன்னும் புரியலை. “எனக்கு வி.கே.புரம் தான் சார், முதல் தடவையா வெளி நாடு போறீங்களா?”னு கேட்டார். நான் ஆமா!னு சொல்லி முடிக்கும் போது ' நச்'னு சீல் குத்தி “பேஷா போய்ட்டு வாங்கோ!"னு சொல்லி பாஸ்போர்ட்டை கைல தந்தார். தோஹால டோலோத்ஸவம் நடத்தி வைக்கர்த்துக்கு போகும் கடையனல்லூர் பாகவதர் மாதிரி ‘U’ ஷேப்ல இருந்த என்னோட நெத்தி கோபியை பார்த்துட்டு இப்படி சொன்னாரோ?னு எனக்கு ஆச்சர்யமா இருந்தது. எது எப்பிடியோ தாமிரபரணி தாயார் மாதிரி எங்க போனாலும் கூட வந்து காப்பாத்தர்து மட்டும் நன்னா புரிஞ்சது.

அதுக்கு அப்புறம் செக்யூரிட்டி செக் எல்லாம் முடிஞ்சு வெயிட்டிங் ஹால்ல போய் அப்பாஆஆஅடா!னு உக்காசுண்டேன். வெயிட்டிங் ஹால் நன்னா கலகலப்பா இருந்தது. துபாய் விமானம் ஒன்னு அந்த சமயம் புறப்பாடு ஆயிண்டு இருந்தது இன்னொரு பக்கம் எதோ சிங்கப்பூர் ப்ளைட்ல ஜெய்ஷ்ரீ மிஸ்ஸிங்! ஜெய்ஷ்ரீ மிஸ்ஸிங்!னு ஸ்பீக்கர்ல ஏலம் போட்டுண்டு இருந்தா. லிப்தான்ஸா ஏர்வேஸ் சும்மா சொல்லக் கூடாது அடா! அடா! அடா! என்ன ஒரு கவனிப்பு!! என்ன ஒரு கவனிப்பு!! “தோஹா வழியா போறேள்னா என்னையும் செத்த இறக்கி விட்டுட்டு போவேளா?”னு கேட்டு பாக்கலாம்னு நினைச்சேன், ஆனா “மூக்கும் முழியுமா பால்கோவா நிறத்தோட வேற ஏர்லைன்ஸை சேர்ந்த க்ரவுண்ட் கண்ட்ரோல் பிகர் யாராவது வந்து கூப்டானு வெள்ளந்தியா பின்னாடியே போயிடாதீங்கோ!”னு எங்க மன்னி எனக்கு முன்னாடியே உபதேசம் பண்ணி அனுப்பி இருந்தா அதனால கேக்கலை. ஒரு வழியா என்னோட ப்ளைட்டொட நம்பரையும் குழாய்மைக்செட்ல சொல்லி நாங்களும் ப்ளைட் உள்ள போய் சீட் தேடி உக்காசுண்டோம். எனக்கு நடு வரிசைல வலது பக்க ஓரத்து சீட்டு.



லிப்தான்ஸா.....:)

சீட் ரிசர்வ் பண்ணும்போதே கொஞ்சம் நடுசென்டர்ல சீட் போடுங்கோ!னு சொல்லி இருந்தேன். ரொம்ப பின்னாடி போயிடுத்துன்னா அப்புறம் தெரு சாப்பாட்டு பந்தி நடக்கும் ஹாலோட முகப்புல தாம்பூல பையோட நின்னுண்டு “எல்லாம் திருப்தியா முடிஞ்சுதா? வயிறு நிறைய சாப்டேளா?”னு ஜாரிக்கரமாதிரி யாரெல்லாம் ‘கக்கா’ போகர்துக்கு அவசர அவசரமா போறானு கணக்கு எடுத்துண்டு இருக்கனும் & ப்ளைட் மேடுல ஏறி இறங்கும் போதெல்லாம் தூக்கி தூக்கி போடும், அதுக்காக ரொம்ப முன்னாடி போயிட்டோம்னா எதிர்த்தாப்ல வரும் ப்ளைட்காரனோட ஹெட்லைட் நம்ப மூஞ்சிக்கு நேர அடிச்சு ராத்ரி முழுசும் தூங்க முடியாது

அதுவும் போக நடுசென்டர்ல தான் கொஞ்சம் தெளிவான நீரோட்டம் இருக்கும்!னு சொன்னதால ‘கஷ்ஷ்ஷ்டம்!’னு கரிச்சு கொட்டிண்டே இந்த சீட்டை மன்னி எனக்கு ரிசர்வ் பண்ணி குடுத்தா. எங்க மன்னி இதுக்கு முன்னாடி ஒரு தடவை இதே மாதிரி பயங்கரமா ஆட்டம் போட்ட எங்க அண்ணாவுக்கு சத்தம் இல்லாம ஏர்-இண்டியால ரிசர்வ் பண்ணி வெச்சுட்டா. அங்க இருக்கும் ஏர்ஹோஸ்டஸ் எல்லாம் அசப்புல பாக்கர்த்துக்கு ஒன்னு விட்ட 'ஆம்பூர்' அத்தைபாட்டி மாதிரி இருப்பா. ஏர்ஹோஸ்டஸ்புடவை & பன் கொண்டைல இருக்கர்துனால ‘அவுரங்காபாத்’ அத்தைபாட்டினு வேணும்னா சொல்லிக்கலாம். கத்தார் ஏர்வேஸ்ல எப்பிடி இருப்பானு இன்னும் தெரியாது, அதனால “போனா போகர்து மச்சினர் பொழச்சு போகட்டும்!”னு ஓரத்து சீட்டு பண்ணிகுடுத்தா.



அத்தைபாட்டி...:)

இருந்தாலும் டெக்னாலஜி இன்னும் இம்ப்ரூவ் ஆக்லைனு தான் நான் சொல்லுவேன். நம்ப டிக்கெட்டை ரிசர்வ் பண்ணும்போதே “கண்ண்ண்ணா லட்டு திண்ண ஆசையாஆஆ?”னு பேக்ரவுண்ட் வாய்ஸோட பக்கத்து சீட்ல யாரு முன்னாடி,பின்னாடி,அடுத்த சீட்ல யாரு இதெல்லாம் திரைல வந்தா எவ்ளோ செளகர்யமா இருக்கும்.( நான் சொல்லர்து கரெட்டுதானே ஷோபா மேடம்?). அல்லசல்ல யாரு வரானு நமக்கு ஒரு ஐடியா கிட்டுமே இல்லையா!!

எனக்கு அடுத்த சீட்ல அரைடவுசர் போட்ட புள்ளையாண்டான் உக்காசுண்டு இருந்தார். செந்திலுக்கு அப்புறம் உங்களுக்குதான் டவுசர் ப்ரமாதமா இருக்கு!னு சொல்லனும் வாய் வரைக்கும் வந்துடுத்து, இருந்தாலும் சொல்லலை. அவரோட முகத்துல இருந்த அசட்டு களையை வெச்சே அமெரிக்கா பார்ட்டினு புரிஞ்சுடுத்து. ஒரு ஆள் அமெரிக்காவா,லண்டனா இல்லைனா அலப்பறை பிடிச்ச கனடாவா என்பதை சில லக்ஷணங்களை வெச்சு கண்டுபிடிச்சுடலாம்.

டி-சர்ட் பாக்கெட்ல சின்னதா ஒரு முதலை எம்ப்ராய்டரி லோகோ, முக்கால் காலுக்கு 6 - 8 பாக்கெட் வெச்ச ஒரு டவுசர், நாரதர் கைல இருக்கும் சிப்லாகட்டை மாதிரி சதாசர்வ காலமும் இருக்கும் ஒரு ஆப்பிள் ஐபோன் & ஐபாட்(அதுல கித்தார் மியூசிக்கோட "வெல்கம் டூ ஹோட்டல் கலிபோர்னியா"னு நன்னா கனிஞ்ச வாழைபழ கொழகொழப்போட ஒரு பாட்டுதான் ஓடிண்டு இருக்கும்), ‘வேணாம்! வேணாம்!னு நம்ப சொன்னாலும் அவா பேசும் போது Wanna,gonna,gotta வார்த்தை ப்ரயோகம் இல்லாம நிச்சயமா பேச மாட்டா. கல்லிடை கான்வெண்ட்ல வேப்பமரத்தடில படிச்ச ஓட்ட இங்கிலிபீஷை வெச்சு that that worries, that that person-நு நம்ப சமாளிச்சாலும் பிடிவாதமா நம்ப கிட்ட இங்கிலிபீஸ்லதான் பேசுவா. பொதுவா இந்த மாதிரி சமயங்கள்ல நான் உடனடியா எங்க தெரு பிள்ளையாருக்கு நேந்துண்டு காலவரையற்ற மெளனவிரத்தை ஆரம்பிச்சுடுவேன்.

அந்த டவுசர் பாண்டியன் கிட்ட பேசிண்டு இருக்கும் போதே கேப்டன் மாமா எதோ அனோன்ஸ்மண்ட் பண்ணினார். நமக்கு சின்ன வயசுலேந்தே காதும் கண்ணும் கொஞ்சம் சூஷனை ஜாஸ்தி. அனோன்ஸ்மண்ட்ல யாரு ப்ரதானபைலட்,யாரு கோ-பைலட்,யாரு நமக்கு காப்பிதண்ணி எல்லாம் தரபோறா!னு வரிசையா சொன்னார். ஒரு பேர் கூட வாய்லையே நுழையலை, பகவானே! இப்படி மோசம் போய்ட்டேனே!னு வருத்தப்பட ஆரம்பிக்கர சமயத்துல “பக்தா! உன் பக்தியை யான் மெச்சினோம்!”னு பகவான் சொல்ற மாதிரி சொன்னான் பாக்கனும் ஒரு மேட்டர்!! காதுல தேன் பாயரதோட உண்மையான அர்த்தம் அன்னிக்கிதான் விளங்கித்து. கேப்டன் மாமா சொன்ன கடைசி ஏர்ஹோஸ்டஸோட பேர் 'தீவாளி'. வடக்கத்திக்காராதான் இப்படி தீவாளி/திருகார்த்திகைனு எல்லாம் பேர் வெப்பா. நம்ப சைடு எல்லாம் காயத்ரி,விஜி,அர்ச்சனா,கல்யாணி,கல்பனா,மீனா,உமா, நித்யா, ராஜி,ப்ரீத்தீ & etc etc இந்த மாதிரிதான் வெப்பா. ஸோ, தீவாளி குஜராத்தியா இல்லைனா டில்லியானு ஒரே யோஜனையா இருந்தது.

அப்போ என்ன நடந்தது தெரியுமோ?? (அடுத்த வெள்ளி தொடரும்.....)

Thursday, March 3, 2011

மூக்கும் முழியுமா.........

கல்லிடைல தாமிரபரணில குளிச்சுட்டு தலை துவட்டும் போது 2 - 3 தடவை பாத்து இருக்கேன். அதுக்கு அப்புறம் பூலோக சொர்கமான பெங்களூர்ல நித்யம் அதிகாலை 4.30க்கு அர்க்யம் குடுக்கும் போதும் அதே காட்சியை பாத்ததுண்டு. நான் மொட்டை மாடிக்கு அதிகாலைல வருவேன்னு அவளுக்கு எப்பிடித்தான் தெரியுமோ, கரெக்டா எதிர்த்தாத்து மாடிக்கு மேல அவளும் வந்துடுவா. பாக்கும் போதெல்லாம் ஒரு விதமான ஆசை வருமே தவிர மோஹம் வந்தது கிடையாது. தள்ளி இருந்து பார்க்கும் போதே ரொம்ப அழகா இருக்கும். “மூக்கும் முழியுமா இருக்கா!”னு சொல்லும் வசனம் நிச்சயமா அவளுக்கு தான் பொருந்தும். வில்லிப்புத்தூர் ரெங்கமன்னார் கோவில் கருடாள்வார் மாதிரி அவளுக்கு கூர்மையான மூக்கு. என்ன ஒரு கூர்மையான மூக்கு!னு ஆச்சர்யப்பட்டாலும், பஜாரியாட்டமா அவளோட சத்தம் ஊரையும் நாட்டையும் கலக்கும். எதுக்கு இப்போ கத்திண்டு இருக்கை?னு கேக்கனும் போல இருக்கும், கேட்டாலும் ஒன்னும் பெரிசா மாற்றம் எல்லாம் வந்துடாதுனு நன்னா தெரியும், அப்பிடியே வழுக்கிண்டு போகர மாதிரி 'பளபள'னு ஒரு சரீரம்.



நான் சொன்னது இவரைதான்...:)

சின்ன வயசுலேந்தே ஏரோப்ளேன்ல போகனும்னு ரொம்ப ஆசை உண்டு, ஆனா திருனெல்வேலி பஸ் ஸ்டாண்டுக்கும் கல்லிடை மெட்ரோவுக்கும் நடுல ஏரோப்ளேன் சர்வீஸ் கிடையாதுங்கர்துனால போகலை. தோஹாவுக்கு வரும் போதுதான் முதல்முதலா ‘மூக்கும் முழியுமா’ இருக்கும் ஏரோப்ளேல உக்காசுண்டு வந்தேன். தூரதேசத்துக்கு போறேன்னு எங்க அம்மா அப்பா எந்த அளவுக்கு கவலை பட்டாளோ அதே அளவுக்கு எங்க மன்னியும் கவலைபட்டா. ‘மத்தவா மாதிரி பிரமாதமான சாமர்த்தியமும் நம்ப மச்சினருக்கு கிடையாதே!!’னு அவாளுக்கு கவலை(இருக்காதா பின்ன!!). எங்க அண்ணா நல்ல நாள்லையே என்னை பயம் காட்டுவான். போதாகொறைக்கு அவன் ஆபிஸ்லேந்து வேற லண்டன் வரைக்கும் போய்ட்டு வந்துட்டான், இப்ப கேக்கவே வேண்டாம்.அந்த லண்டன் ஏர்போர்ட் பேர் கூட எனக்கு சரியா சொல்ல வராம கொஞ்சம் மாத்தி சொல்லி, எங்க மன்னி "கருமம்! கருமம்!"னு தலைல அடுச்சுண்டா. ‘ஹீத்ரூ ஏர்போர்ட்’னு சொல்லர்துக்கு பதிலா நான் ‘seethrough ஏர்போர்ட்’னு சொல்லிட்டேன்..:)

எதோ தங்கமலைக்கு போகும் விக்ரமபாண்டியனுக்கு ராஜகுரு வழிமுறை சொல்லி குடுக்கர மாதிரி எங்க மன்னி விளாவரியா சொல்லிகுடுத்தா. நடுல எங்க அண்ணா, "மாப்ப்ளே! எல்லாம் தாண்டிடலாம், இந்த இமிக்ரேஷந்தான் ரொம்ப கஷ்டம்! நிறையா கேள்வி எல்லாம் கேப்பா! பன் கொண்டை போட்ட எதாவது ஒரு காமாட்சி மேடம் வந்தா நீ பொழச்சை, ஒருவேளை கட்டம் போட்ட சட்டை & கண்ணாடி போட்ட சுப்பிரமணி ஆபிசரா இருந்தா நீ தொலஞ்சை!னு நல்ல பயம் காட்டினான். நான் போகவேண்டிய ப்ளைட் அர்த்தராத்ரி 1.30 பேயோட்டர சமயம்(நம்ப இட்லி மாமி போஸ்ட் போடும் நேரம்! என்றும் சொல்லலாம்).ஏர்போர்ட்டுக்கும் போயாச்சு, “வெற்றி நமதே விக்ரமபாண்டியா!”னு எங்க மன்னி வாழ்த்தி அனுப்பினா, நான் எங்கையாவது மாட்டிண்டு 'பக்க்ர! பக்க்ர!'னு முழிச்சா பாத்து ரசிக்கலாம்னு எங்க அண்ணா ஆவலா இருந்தான்.

என்னோட பாக்கேஜ் பொட்டில இருந்த புளிகாய்ச்சல்/பருப்புபொடி/சாம்பார்பொடி/ரசப்பொடி/கோலப்பொடி/புண்ணாக்குபொடி எல்லாம் நல்ல படியா தப்பிச்சாலும் எதிர்பாத்த மாதிரியே பிரச்சனை ஆரம்பம் ஆனது. என்னோட விசா நம்பரை கம்யூட்டர்ல அடிச்ச அந்த ஏரோப்ளேன் கம்பெனி பிகரோட முகம் அமைதியான ஜலபாத்ரத்துல விழும் முதல் மழைதுளியோட காட்சியை குடுத்து நெற்றியும் புருவமும் சுருக்கியது. ‘கல்யாணி!’னு பேர் போட்ட பேட்ச் குத்தின அந்த மாது இரண்டு மூனு தடவையா என்னோட விசா நம்பரை டைப்பிட்டு மண்டையை ஆட்டிண்டே அங்க இருந்த ஒரு ஆபிசரை கூப்பிட்டு எதோ சொல்லி என்னோட பாஸ்போர்ட்டை குடுத்தது. அதை எடுத்துண்டு காணாம போன ஆபிசர் சிலம்போட போன கோவலன் மாதிரி திருப்பி வரவே இல்லை.



சின்ன கவுண்டர்..:)

ஒரு மணி நேரம் ஆயாச்சு, போன மச்சான் போயே போனான்டி!னு ஆனதால நம்ப கல்யாணிகிட்ட மெதுவா 'எச்சுஸ்மீ'னு ஆரம்பிச்சு விஷயத்தை கேட்டேன். “உங்க விசா நம்பர் செல்லாது!னு வரர்தே சார்!”னு பதில் சொன்னா. "பெயரோ கல்யாணி! மங்களகரமான பெயர்! ஆனால் அமங்களமாய் பேசுகிறாயே கண்ணே!னு சொல்லனும் போல இருந்தது. இருந்த ஒரே ‘அல்லக்கை’ அனலிஸ்ட் வேலையையும் பெங்களூர்ல ராஜினாமா பண்ணிட்டு வந்தாச்சு, விசா செல்லாதுன்னு சொன்னா அப்புறம் கல்லிடைல இருக்கும் ராஜியோட மாமா பக்கத்துல திண்ணைலதான் உக்காச்சுக்கனும்னு ஒரே டென்ஷன். "பிரச்சனை மட்டும் சரிஆகட்டும் முருகா! திருச்செந்தூர்ல எங்க அண்ணாவுக்கு மொட்டை அடிக்கறேன்!"னு வேண்டுதல் எல்லாம் பண்ணிண்டு இருந்தேன்.



குலவிளக்கு with குத்துவிளக்கு...:)

அந்த சமயம் என்னோட பாஸ்போர்ட்டை கைல வெச்சுண்டு, திருக்கார்த்திகைக்கு முதல் விளக்கை வாசல்ல வைக்கர்த்துக்கு வர மாதிரி புல் மேக்கப்போட புடவை கட்டின ஒரு புண்ணியவதி பூமி அதிர வந்து “கங்கிராடுலேஷன்ஸ்! உங்க விசா நம்பர் செல்லும்! கல்யாணி அரபி டிரான்ஸ்லேட் பண்ணும் போது ஒரு நம்பரை விட்டுட்டாங்க!”னு இங்கிலிபீஸ்ல சொன்னா. சிரிச்சுண்டே அந்த புண்ணியவதி வந்து சொன்ன விதத்தை தள்ளி இருந்து பாக்கறவா "கங்கிராடுலேஷன்ஸ்! நீங்க அப்பா ஆயிட்டீங்க" மாதிரி புரிஞ்சுக்க வாய்ப்புகள் அதிகம்.

குலதெய்வத்தை வேண்டிண்டே இமிக்ரேஷன் பகுதியை நோக்கி நடையை கட்டினேன். எங்க ஊர் அண்ணாச்சி கடை மளிகை சாமான் லிஸ்ட் மாதிரி முதல்ல ஒன்னை பூர்த்தி பண்ணி தரசொன்னா . அதுக்கு அடுத்து என்னோட முறைக்கு காத்துண்டு இருந்தேன். இதுக்கு முன்னாடியே ஒரு வாரமா இமிக்ரேஷன் ஆளை சமாளிக்க ஸ்பெஷல் கமாண்டோ டெரியினிங் எல்லாம் எடுத்தேன். ‘அபியும் நானும்’ பிரகாஷ்ராஜ் மாதிரி “ஜப்பான்ல இருக்கர்து டோக்கியோ, போன்ல சிறந்தது நோக்கியா"னு நிறையா ஹோம்வொர்க் பண்ணினேன். என்னோட பாஸ்போர்ட் எந்த ஸ்டாம்பிங்கும் இல்லாம ‘அய்யா’ படத்துல வரும் நயந்தாரா மாதிரி புத்தம் புதுசா ‘பளிச்’னு இருந்ததால தான் இவ்ளோ தலைவலி. என்னை ஒரு ஆபிசர் அழைக்கவும் பக்கத்துல போய் பாஸ்போர்ட்டை குடுத்துட்டு தொண்டையை சரிபண்ணிண்டு பதில் சொல்ல தயாரானேன்.

அவர் உடனே என்ன கேட்டார் தெரியுமோ??..:) (அடுத்த வாரம் தொடரும்)


(Note - பிரஞ்சு மொழில எல்லாத்துக்குமே ஆண்பால் பெண்பால் உண்டு. அதனாலதான் ‘ஏரோப்ளேன்’ அவள் ஆனாள்...;)