Friday, July 30, 2010

ஷகிராவும் கவுண்டமணியும்.....

இந்த ஊருக்கு(Doha) வந்த புதுசுல கண்ணை கட்டி விட்ட மாதிரி இருந்தது, இப்போ கொஞ்சூண்டு கண்ணை அவுத்து விட்ட மாதிரி இருக்கு அவ்ளோதான். ஊருக்கே ஏசி போட்ட மாதிரி கண்ணுக்கு குளுர்ச்சியா ( நான் மரத்தை சொன்னேன்)இருக்கும் பூலோக சொர்க்கம் பெங்களூர்லேந்து வந்ததால் கொஞ்சம் கஷ்டமாதான் இருந்தது. ஆனால் நான் வந்த சமயம் இங்கையும் குளிர்காலமா இருந்ததால தக்குடு தப்பிச்சான்.



ஆபிஸுக்கு போனா அங்க எல்லாம் ஒரே ஷேக்கு மயமா இருந்தது (பின்ன என்ன 3/4 போட்ட பிகரா இருக்கும்?னு நக்கல் அடிக்க வேண்டாம்). கடைசியா என்னோட உயரதிகாரியை பாத்து 'கும்புடுக்கரேன் எஜமான்!'னு சொன்னேன் (இங்க்லிபீஸ்ல ரிப்போர்ட் பண்ணர்துன்னு சொல்லுவாங்க). அதுக்கு அப்புறம் என்னோட சீட்டுக்கு போனா பக்கத்து சீட்ல ஒரு சூடான்காரார், கொஞ்சம் தள்ளி இன்னொரு ஷேக்கு உக்காச்சுண்டு இருந்தார். சாப்டாமா கூட இருக்க முடியும், ஆனா பக்கத்துல உள்ளவாளோட பேசாம மட்டும் திருனெல்வேலிகாரனால இருக்க முடியாது. பக்கத்தாதுல பாம் வெடிச்சாலும் எட்டிப்பாக்காம ப்ளாக்ல ‘பாதுஷா செய்வது எப்படி?’ன்னு படிச்சுண்டு இருக்கர்துக்கு நான் என்ன சிட்டில உள்ளவனா??

எங்க ஊரா இருந்தா, அண்ணாச்சி! என்னா வெயிலு அடிக்கி!னு மெதுவா ஆரம்பிச்சோம்னா 30 நிமிஷத்துக்கு குறைவு இல்லாம அண்ணாச்சி நம்ப கூட பேசுவார். அந்த கதை எல்லாம் இங்க நடக்காதுன்னு எனக்கு நன்னாவே தெரியும். சூடான்காரர் நல்ல ஆறடி ஒசரத்தோட கூடை பந்தாட்ட வீரர் மாதிரி இருந்தார். மெதுவா அவர்ட்டதான் பேச்சு குடுக்க ஆரம்பிச்சேன். இருந்தாலும் ரொம்ப எல்லாம் ஸ்னேகம் ஆகலை. நம்ப ஊர்ல எல்லா பயலும் கிரிக்கெட் பைத்தியம் புடிச்சு அலையற மாதிரி இங்க உள்ளவாளுக்கு எல்லாம் கால்பந்தாட்டம்னா உசுரு. தச்சுமம்முவுக்கு நம்ப மாவுடு தொட்டுக்கர மாதிரி இவா எல்லாருக்கும் புட்பால் இருந்தா போதும்..

உலககோப்பை போட்டி நடந்த போது இவாளோட கோட்டியின் உச்சகட்டத்தை பாக்க முடிஞ்சுது. ‘இந்தவாட்டி for ஆப்ரிக்கா!’னு முடியும் கால்பந்தாட்டத்தோட அந்த விளம்பரப் பாட்டுக்கு நடுல 'ங்கொக்கா மக்கா, ங்கொக்கா மக்கா'னு வரும் அந்த வரியை கேட்டவுடன் எனக்கு ஆச்சர்யமா இருந்தது. எங்கையோ ஆப்பிரிக்கால இருக்கும் பாப் பாடகி ஷகிரா (பேரை கவனமா வாசிங்கடே!) நம்ப கவுண்டமணியோட ரசிகையா?னு ஆச்சர்யமா இருந்தது. கூர்மையா கேட்டதுக்கு அப்புறம்தான் அது 'ங்கொக்கா மக்கா’ இல்லை ‘வக்கா வக்கா!’னு மனசுல ஆச்சு

எனக்கு புட்பால் பத்தி ஒன்னுமே தெரியாது, பெனால்டினு சொன்னா எனக்கு எங்க ஊர்ல எலக்ட்ரிசிட்டி பில் கட்டலைன்னா, 15 தேதிக்கு அப்புறம் காக்கி டவுசர் போட்ட ஒரு மாமா வந்து அவாத்து பீஸ்கட்டையை பிடிங்குண்டு போவார். பில்+50 ரூவா அபராதம் கட்டினாதான் திருப்பி கரண்ட் வரும். இதுதான் எனக்கு தெரிஞ்ச பெனால்டி. (இப்போ எல்லா வீட்டு பீஸ் கட்டையையும் நிரந்தரமா ஆற்காடு மாமா பிடிங்கி வச்சுருக்கார்னு கேள்விப் பட்டேன்)

கார்னர்நு சொன்னா எனக்கு என்னோட பெங்களூர் ஆபிஸ்தான் ஞாபகம் வரும். முதல் ப்ளோர்ல கதவை திறந்தோன்னே 'கன்னிமூலகணபதி' மாதிரி கார்னர்ல சக்கப்பழமா ஒரு டில்லி பிகர் ரோலிங் சேர் நிறைஞ்சு உக்காசுண்டு இருப்பா. அதுதான் எனக்குத் தெரிஞ்ச ஒரே கார்னர்.

இங்க உள்ளவா கூட பேசனும்னா புட்பால் பத்தி பேசினா போதும்னு புரிஞ்சது. 10 அடி நகருவதற்குள் 10 தடவை பாஸ் பண்ணி கொண்டு போகர்து ஸ்பெயின் அணியோட சிறப்பாம்சம். வெறும் 3 பாஸ்ல 70 அடி வரைக்கும் கொண்டு போகர்து ஜெர்மனியோட திறமை. ஆக்ரோஷமான அணி அர்ஜெண்டினா- இந்த மாதிரி பல விஷயங்களை பிட்டு போடுவதற்கு உபயோகமாகும்னு தெரிஞ்சுக்க ஆரம்பிச்சேன்.

இந்த மாதிரி ஒரு சமயத்துல தான் ஒரு நாள் அந்த சூடான் காரர்ட மெதுவா ஒரு பிட்டை போட்டேன். அரை இறுதிப் போட்டிக்கு பிரேசிலும் இல்லை, அர்ஜெண்டினாவும் இல்லை இனிமே புட்பால் பாத்து என்ன பிரயோஜனம்? னு மெதுவா ஆரம்பிச்சேன்.(லீவு அன்னிக்கு லேடிஸ் காலேஜ் வாசல்ல காத்துக் கிடந்து என்ன பிரயோஜனம்!னு மனசுக்குள்ள சொல்லிண்டேன்). அவர் கையை டேபிள்ல வச்சுண்டு தலையை டேபிள்ல சாய்ச்சுண்டு இருந்தார். பக்கத்துல போய் பாத்தா கேவி! கேவி! ஒரே அழுகை. (வடிவேல் குரலில்)தாய்ப் பாசத்துல இவர் நம்பளை மிஞ்சிடுவார் போலருக்கே!!னு நினைச்சுண்டே அவரோட முதுகை தடவி குடுத்து, அவர் கழுத்துல இருந்த டையை வச்சு அவர் கண்ணை எல்லாம் துடைச்சு விட்டு சமாதானம் பண்ணர்துக்குள்ள போதும்! போதும்!னு ஆயிடுத்து.

அப்புறம் தான் தெரிஞ்சது அந்த ஆளு பிரேசில் & அர்ஜெண்டினாவோட கன்னாபின்னா ரசிகர்னு. நல்ல வேளை பிரேசிலை பத்தி கேவலமா எதாவது சொல்லியிருந்தென்னா என்னோட பல்லை ஒடச்சு இருப்பார் அந்த சூடான் சிங்கம். பல்லும் வாயும் தப்பிச்சது குலதெய்வம் பெருவேம்புடையார் புண்ணியத்துலதான்...:). அதுக்கு அப்புறம் அந்த சூடான் சிங்கம் தக்குடுவுக்கு பயங்கர தோஸ்த் ஆயிட்டார். இரண்டு வாரம் என்னோட ஆபிஸ் கார் டிரைவர் லீவு போட்டப்போ கூட இவர்தான் கால் டாக்ஸி மாதிரி தினமும் என்னை பிக்கப்பு, ட்ராப்பு எல்லாம் ஓசிலையே பண்ணினார்.

இங்க உள்ள ஷேக்கு கூட நான் இங்க்லீஷ்ல பேசின கதையை தனியா ஒரு பதிவா போடலாம்னு இருக்கேன்.

விரைவில் உங்கள் அபிமான ப்ரவுசர்களில் எதிர்பாருங்கள் 'ஓமணக் குட்டி டான்ஸ்'

Thursday, July 22, 2010

கதாகாலட்ஷேபம்

இடம் - உம்மாச்சி காப்பாத்து ப்ளாக்

நடத்துபவர் - உங்காத்து செல்லப்பிள்ளை தக்குடு

தலைப்பு - அங்க வந்துதான் பாருங்கோளேன்!

நாள் - வெள்ளிக் கிழமை (23/07/2010)

நேரம் - செளகர்யப்படும் போது எல்லாம் கேட்டுக்கலாம்.

அனுமதி இலவசம்! கமன்ட் போடாம படிக்கும் கணவான்களும் வரவேற்கப்படுகிறார்கள்......:)

Friday, July 16, 2010

கார்ப்ரேட் கச்சேரி

நாலு நாள் முன்னாடி தானைத்தலைவர் மஹாராஜபுரம் சந்தானம் அவர்களோட கச்சேரி ஒன்னு கேட்டுன்டு இருக்கும் போது என்னோட பெங்களூர் ஆபிஸ் ஞாபகம் வந்துருத்து. அதை பத்திதான் இந்த பதிவு.....:)

சங்கீத கோஷ்டிக்கும் ஆபிஸ் கோஷ்டிக்கும் பல ஒற்றுமைகள் உண்டு. அதுவும் இந்த கான்பரன்ஸ் கால் நடக்கும் போது பல காமெடியும் சேர்ந்து நடக்கும். அமேரிக்கா/லண்டன் துரைமார்கள் கூட நம்ப ப்ராஜக்ட் மேனேஜர் பேசும்போதுதான் இவ்ளோ கூத்தும். PM நடுல கொஞ்சம் மூச்சு விட்டு, அக்கம் குடிக்கும் போதெல்லாம் யா! யா! யெஸ் நு சொல்லி சமாளிக்கர்துக்கு ஒரு டீம் லீட் எப்போதும் ரெடியா இருப்பார். PM- க்கும் அந்த டீம் லீடுக்கும் ஒரு நல்ல புரிந்துணர்வு இருக்கும்.

கச்சேரிகள்ல வயலின் வித்வான் ரொம்ப முக்கியமானவர். பாட்டு வித்வான் பாடும் ராகம் முழுவதையும் வாங்கி வாசிக்கும் திறமை உள்ளவர். வயலின் வித்வான் வாசிக்கும் இந்த நேரத்தில் தான் பாட்டு வித்வான் கூஜாலேந்து ஏலம் பச்சக்கர்பூரம் போட்ட பாலை ரெண்டு டம்ப்ளர் உள்ள தள்ளிட்டு தெம்பாயிப்பார். ராகத்துக்கு அதிகம் முக்கியத்துவம் தரும் வித்வான்கள் வயலினுக்கு அதிக நேரம் தங்கள் கச்சேரியில் நேரம் ஒதுக்குவார்கள். பஞ்சரத்ன க்ருதியில் கூட 'ஜகதானந்த காரகா'வில் முதலில் வயலின் வித்வான் வர்ணம் வாசிக்க பின்பு அதை சந்தானம் பாடி அதன் பின்பு பாடல் வரியை பாடுவார். ராகத்தோட கட்டில் நல்ல புலமை இருக்கும் வித்வான் மட்டுமே வர்ணம் பாடமுடியும். சந்தானத்துக்கு இதெல்லாம் இடது கையால் டீ குடிக்கர மாதிரி.

சில சமயங்கள்ல நம்ப PM, பாட்டி வடை சுட்ட கதை லெவலுக்கு இறங்கி ஒரு விஷயத்தை சொல்லி புரியவைக்க முயற்சி பண்ணினாலும், அந்த பக்கம் இருக்கும் துரைமார்கள் 'சந்தைக்கு போனும்! ஆத்தா திட்டும்! காசு குடு!'னு சொன்னதையே சொல்லிண்டு இருப்பா. அந்த மாதிரி சமயத்துல அதிரடியாக அதே சமயம் அன்பாகவும் சொல்லி துரையை ஒத்துக்க வைக்கர்துக்கு டீம்ல ஒரு ஆளு இருப்பார். அந்த மாதிரி ஆள் கூடயும் PM-க்கு ஒரு நல்ல புரிந்துணர்வு இருக்கும்.

கச்சேரியில் ம்ருதங்க வித்வான் முக்கியமான ஒரு அங்கம். கச்சேரி கேக்கரவாளை தூங்காம பாத்துக்கர பொறுப்பு இவரை சேர்ந்தது. தாளத்துக்கு அதிகம் முக்கியத்துவம் தரும் பாட்டு வித்வானும் ம்ருதங்க வித்வானும் கண்களால் பேசிக் கொள்வதை மேடையில் நாம் பார்க்கலாம். 'சிந்துபைரவி'-ல டில்லி கணேஷோட கண் ஜாடைகள் எல்லாம் நீங்க பாத்துருக்கேளா?. சில பேர் ம்ருதங்கம் நல்ல அடிக்கரார்!னு சொல்லுவா, அது ரொம்ப தப்பான வார்த்தை ப்ரயோகம். சாப்ட வரேளா!ங்கர்துக்கும் கொட்டிக்க வரேளா!ங்கர்துக்கும் எவ்ளோ வித்யாசம் உண்டோ அதை மாதிரி..:) ம்ருதங்கத்துல ராகம் வாசிக்க முடியாது, தாளம் தான் வாசிக்க முடியும். வயலின்ல தான் ராகம் வாசிக்க முடியும்.

சில பேர் டீம்ல இருக்கர்தே தெரியாது. என்னமோ ஆள் எண்ணிக்கைக்கு அவனும் இருக்கான்னு எல்லாரும் நினைச்சுண்டு இருப்பா. முக்கியமான ஒரு கால் அன்னிக்கு அவர் உடம்பு சரியில்லாம லீவு போடும் போதுதான் அவரோட அருமை தெரியும். அவர் எவ்ளோ முக்கியமானவர்ங்கர்து அப்போதான் எல்லாருக்கும் தெரிய வரும்.



கச்சேரில பாட்டு வித்வான் பின்னாடி பரப்பிரம்மம் மாதிரி முகத்துல எந்த ரியாக்ஷனும் காட்டாம ஒக்காசுண்டு ஒருத்தர் தம்புரா போட்டுண்டு இருப்பா. சில கச்சேரிகள்ல தம்புரா போடும் ஆள் டாப் டக்கரா இருப்பா என்பது உப தகவல்...:). அதுக்கு பேர் ஸ்ருதி( நம்ப பாஸ்டன் நாட்டாமைக்கு அவர் ஸ்கூல் படிக்கர சமயத்துல சைட் அடிச்ச மூனாவது பெஞ்சுல நாலாவது பொண்ணோட பேர் ஞாபகத்துக்கு வந்தா அதுக்கு தக்குடு பொறுப்பல்ல..:P). எவ்ளோ பெரிய சங்கீத கலா நிதியா இருந்தாலும் ஸ்ருதிப்பெட்டி இல்லாம பாடமாட்டா. கிழக்கு கடற்கரை சாலை மாதிரி நன்னா விசாலமா இருக்கர ரோட்ல நடுல கோடு இல்லைனா எப்படி வண்டி ஓட்ட முடியாதோ அது போல ஸ்ருதி இல்லாம பாட முடியாது. இப்பெல்லாம் எல்லாருமே ஸ்ருதி பெட்டிதான் வச்சுக்கரா. சில பேர் மட்டும்தான் 'பப்'கையெல்லாம் வச்ச ஒரு குத்து விளக்கை தம்புராவுக்கு உக்காத்தரா.

எல்லாருமா கஷ்டப்பட்டு ஒரு ப்ராஜக்டை பண்ணி முடிச்சாலும். ‘நாங்க உங்க வேலையை செஞ்சுமுடிச்சுட்டோம்!’னு துரை கிட்ட நம்ப PM தான் சொல்லுவார். வாட் இஸ் த ஸ்டேடஸ்?னு நித்யம் பத்து தடவை கேட்டதை தவிர அவர் அந்த ப்ராஜக்ட்ல எந்த ஆணியுமே புடுங்கலைங்கர்து எல்லாருக்குமே தெரியும் தான். மனசாட்சியே இல்லாம இந்தாளு நாங்க செஞ்சோம்!னு சொல்றார் பாருடா!னு புதுசா வேலைக்கு சேர்ந்த அப்ரன்டிஸ்கள் புலம்புவதையும் நாம கேட்டுருக்கோம். ம்ம்ம்ம்ம்.....என்ன பண்ண முடியும்?? நமக்கு கோடிங் தட்டர்து மட்டும்தான் வேலை, அவருக்கு எவ்ளோ போப்பு(தக்குடு பாஷையில் பொறுப்பு)இருக்கு?னு சொல்லி சீனியர்கள் விளக்குவார்கள்.

கச்சேரியிலும் எல்லாருமே உயிரை குடுத்து உழைச்சாலும் பாடும் அந்த நபரைதான் சங்கீத வித்வான்!னு எல்லாரும் சொல்லுவா. மத்தவா எல்லாருக்கும் ம்ருதங்க வித்வான்! கடம் வித்வான்! வயலின் வித்வான்!னு தான் பேர். எதனாலன்னா பாட்டு வித்வானுக்கு எல்லாத்துலையுமே ஒரு புலமை இருக்கும். எப்போ தனியாவர்தனத்துக்கு நேரம் குடுக்கனும், எந்த வரிசைல பாட்டு பாடி கச்சேரியை கொண்டு போகனும், சபைல இருக்கரவாளோட ரசனை & புலமை என்ன போன்ற எல்லா விஷயமும் தெரிவதால் தான் அவர் சங்கீத வித்வான்.

Friday, July 9, 2010

மலையாள ப(ப்ப)டம்

ரொம்ப நாள் ஆச்சு சினிமா பக்கம் தலை வச்சு படுத்து, தமிழ் சினிமா தெலுங்கை விட மிஞ்சிருத்து, பொம்ணாட்டிகளுக்கு ஆறடிக்கூந்தல் இருக்கோ இல்லையோ, டாய்! டோய்!னு கர்ணகொடூரமா கத்திண்டு வரும் வில்லனின் அடியாட்கள் எல்லாருக்கும் இருக்கு(எல்லாரும் வாட்டிகா ஹேராயில் தலைக்கு தேய்ச்சுக்கராளோ?). இந்த காரணங்களால் சினிமாவே பாக்கர்து கிடையாது.

இந்த மாதிரி சமயத்தில் என்னோட ஒரு நண்பன் எனக்கு போன் பண்ணி, ஒரு மலையாளப்படம் இருக்கு, புது ப்ரிண்ட்! வேணுமா?னு கேட்டான். எனக்கு வயத்தை கலக்கிருத்து. இதே வார்த்தைகளை காலேஜ்ல படிக்கும் போது என் நண்பர்கள் அவாளுக்குள்ள பேசி நான் கேட்டுருக்கேன். ஒருவேளை 'அப்புக்குட்டனும் ஸ்வப்னதிவசமும்'-ங்கர மாதிரி ஏடாகூடமா படத்தை தந்துட்டா என்ன பண்ணர்து?னு கொஞ்சம் பயம். (ஹலோ அந்த பேர்ல ஒரு படமும் கிடையாது, கோப்ஸ் மாதிரி உடனே ஆன்லைன்ல அந்த படம் இருக்கானு தேடாதீங்கோ..:) ).


அதெல்லம் இல்லை, மம்முட்டி நடிச்ச படம்தான்!னு அவன் துண்டை போட்டு தாண்டி சத்தியம் பண்ணினதுக்கு அப்பரம் வாங்கி பார்த்தேன். வீட்டை தாண்டி வருவாயா, ரோட்டை தாண்டி வருவாயா? விபீஷணன்,கும்பகர்ணன்,புலி, கரடி போன்ற படம் பத்தி எல்லாம் உங்களுக்கு ஏற்கனவே தெரியும் என்பதால் 'லவுட் ஸ்பீக்கர்'ங்கர அந்த படம் பத்தி சில தகவல்கள் இந்த பதிவில். மம்முட்டி இதுல ஒரு கிராமத்தானாக வரார். கிராமத்தானுக்குரிய லக்ஷணமான வாயை அகலமா திறந்து பேசர்து, ரேடியோ கேட்பது, தலை வாராம இருக்கர்து, மலபார் பீடியை காதில் செருகி வத்திருப்பது போன்ற எல்லாம் இந்த கதாபாத்ரத்துல இருக்கு.எல்லாத்தையும் விட கிராமத்து மனுஷா ‘லொட லொட’நு பேசினாலும் பாசக்கார பயலுக என்பதை எல்லா இடத்திலும் நிரூபிக்கிறார்.



தக்காளி இல்லாம எப்படி தக்காளி ரசம் பண்ண முடியாதோ அதே மாதிரி ஒரு சீன்லையாவது சுகுமாரி(அனுபவம் மிக்க நல்ல திரை நடிகை)இல்லாம மலையாள படம் கிடையாது. முதல் சீன்லையே டாக்டரா வராங்க அந்த அம்மா. கதை இதுதான், தோப்பளாங்குறிச்சி(இடுக்கி ஜில்லா)லேந்து நகரத்துக்கு கொஞ்சம் காசு சம்பாத்யம் பண்ணனும்னு மைக்(மம்முட்டி) வரார். வந்த இடத்துல அமெரிக்காலேந்து நாப்பது வருஷம் கழிச்சு வந்த மேனனுக்கு தன்னுடைய ஒரு கிட்னியை தரமுன்வரார் கதானாயகன்.

இந்த படத்துல க்ரேசி சிங்கும்(லகாண் பட நாயகி) ஒரு கதாபாத்ரமா வரா. கதானாயகினு எல்லாம் சொல்ல முடியாது. கண்களால் கவிதை சொல்லும் க்ரேசிசிங் இந்த படத்துல ரொம்ப யதார்த்தமா நடிச்சுருக்கா. தமிழ் சினிமாவா இருந்தா க்ரேசி சிங்குக்கு ஜிங்குனு ஒரு சின்னக் கொழந்தேள் ட்ரஸ்ஸை போட்டுவிட்டு சுவிட்சர்லாந்து பனிக்கு நடுல புரட்டி எடுத்துருப்பாங்க.



மலையாளிகளுக்கே ஊர் பெருமை ரொம்ப ஜாஸ்தி. இந்த படத்தில் மம்முட்டியும் எதுக்கு எடுத்தாலும் தோப்பளாங்குறிச்சி! தோப்பளாங்குறிச்சி!னு உதாரணம் சொல்லறார். வயசான மேனனோட பழைய நினைவுகள் எல்லாம் கொல்லத்துல படமாக்கி இருக்கா. கொல்லம் கேரளால ஒரு அழகான இடம். 5 தடவை அங்க நான் போய்ருக்கேன். கொல்லம் மலை பாதைக்கு நடுல ஹோண்டா சிட்டி கார் ஆடி ஆடி வரும் அழகே அழகு! 6 டஜன் கதானாயகிகள் இருந்தாலும், ஐஸ் குட்டி கண்ணுலையே நிக்கரா, நெஞ்சுலையே விக்கரா!னு வாய் விட்டு ஜொள்ளி வாங்கிக் கட்டிக்கும் ரங்கு போல, எத்தனை கார் வந்தாலும் ஹோண்டா சிட்டியோட அழகுக்கு இணையாகாது.

நிற்க, படத்துல இல்லாத விஷயம் எதெல்லாம்னு சொல்ல வேண்டாமா, பாண்டிய மன்னனின் ஐயத்தை தீர்த்த வரிகளோ என எண்ணும் படியான,

//சிங்காரி நாத்தனார்! சிங்கிள் டீயை ஆத்தினாள்! கோடு போட்ட க்ளாசிலே எனக்கு ஊத்தினாள்// - போன்ற வரிகளை உடைய குத்துப் பாட்டு, குலுக்கு நடனம் எதுவும் இந்த படத்தில் இல்லைங்கர்து ஒரு முக்கியமான பாய்ண்ட்.

கதானாயகன் பஞ்ச் டயலாக் பேசி மொக்கை போட மாட்டார்.

கதானாயகனும், கதானாயகியும் கையை கோர்த்துண்டு கனவுல சிங்கப்பூர்ல (வாய் வழியா பூங்கொத்தி விடும்) சிங்கம் பக்கத்துலயோ அல்லது ஆஸ்திரேலியாவின் ஓப்ரா ஹவுஸ் பக்கதுலையோ பாட்டுப் பாடி நடனம் ஆடமாட்டார்கள்.

முக்கியமான விஷயம், படம் முடிஞ்சு இயக்குனர் பேரை மட்டும் போடாம 'ஜெயராஜ் மற்றும் அணி'னு போட்டது பாராட்டப்பட வேண்டிய விஷயம்.

நம்பாத்து பட்டாசாலைல(அர்த்தம் தெரியும்னு நினைக்கறேன்) அம்மா சமைச்சு வெச்ச சுண்டக்காய் வத்தக்குழம்புக்கு சுட்ட அப்பளாத்தை தொட்டுண்டு, ஓடும் க்ரைண்டர் சத்ததுக்கு நடுவில் அம்மாவோட பேசிண்டே சாப்பிடுவது போன்ற ஒரு யதார்த்தமான படம்.

(குறிப்பு - க்ரைண்டர் ஓடும் போது சத்தம் வருதுன்னா அப்போ க்ரைண்டர்ல உளுந்து ஓடிண்டு இருக்குனு புரிஞ்சுக்கனும், அரிசி ஓடும் போது சத்தம் வராது. அரிசி உளுந்தோட தரம் & ரேசியோவை வச்சும், எவ்ளோ நேரம் ஊறவைக்கறோம்ங்கர்தை பொறுத்தும், இடையில் விடப்படும் தண்ணியை பொறுத்தும், அரைக்கப்படும் நேரத்தை பொறுத்தும், மாவை ஒன்னுசேர கலப்பவரின் கையை பொறுத்தும் தான் இட்லியின் தரம் அமையும். இதுல எதாவது ஒன்னு மிஸ் ஆனாலும் உங்க மிஸ்ஸஸ் செய்யும் இட்லி இட்டிலி ஆகிவிடும். அப்புறம் 'இட்லி சரியா வரலை'னு சில பேர் மாதிரி போஸ்ட் போட வேண்டியது தான்...:P)

Friday, July 2, 2010

குண்டலமே! குண்ண்ண்டலமே!

தலைப்பை ராமராஜனோட செண்பகமே! பாட்டு மாதிரி பீலிங்கோடு வாசித்துக் கொள்ளவும். தலைப்பை பாத்தவுடன் பன்னீர் சோடா,கேரட் சாதம் பத்தி எல்லாம் எழுதின சிலபேர் நக்கலா சிரிக்கலாம், ஆனா பொதுமக்களுக்கு சேவை பண்ண வந்துட்டு அதுக்கெல்லாம் பயப்படமுடியுமா? ரைட்டு, இட்லி மாமி மாதிரி ஓவர் பில்டப்பு (தமிழில் அலப்பறைனு சொல்லுவா) குடுக்காம மேட்டருக்கு வரேன்.

குண்டலத்துக்கும் தக்குடுவுக்கும் உள்ள தொடர்பை பாக்கர்துக்கு கி.பி பத்தாம் நூற்றாண்டெல்லாம் போக வேண்டாம், தக்குடு கல்லிடை வீதிகளில் விளையாடிய பருவத்துக்கு போனாலே போதும். எங்க தெருல 65 வீடு, ‘உங்காத்து குக்கர் நாலு விசில் அடுச்சுருத்தே! இன்னும் கேஸை அணைக்கலையா?’னு பக்கத்தாத்து மாமி விசாரித்துக் கொள்ளும் அளவுக்கு அன்யோன்யம்(முகம் குடுத்து பேசத் தெரியாத சிட்டி மக்கள் மாதிரி கிடையாது). எங்க தெருல ஒரே பேருல 3 மாமிகள் இருந்தா. கரெக்டான மாமியை பிக்ஸ் பண்ணி அவாத்துக்கு போகர்துக்குள்ள எல்லாருக்கும் போதும்! போதும்!னு ஆயிடும். மூனு பேருக்கும் பொதுவான அந்த பேரு கோமா மாமி! மூனு பேருமே கண்ணாடி போட்டுண்டு இருப்பா, அதிர்ஷ்ட வசமா ஒரு கோமா மாமியாத்து மாமாவுக்கு கோவில்பட்டிக்கு மாத்தல் ஆகி அவா போய்ட்டா, ஆனா இந்த கோமா மாமி குழப்பம் தீர்ந்தபாடா இல்லை. மிச்சம் இருந்த ரெண்டு கோமா மாமியாத்து மாமாவும் பாங்க்ல வேலை பாத்துண்டு இருந்தா, அதனால பாங்க் கோமா மாமினு ஒருத்தரை மட்டும் பிரிக்க முடியாது. ரெண்டு பேருக்குமே 2 வாயாடி பொண்கொழந்தேள்(தக்குடுவுக்கு அக்கா வயசு அவாளுக்கு). இந்த கோமா மாமி குழப்பம் தீர்ந்தபாடா இல்லை.

அப்போதான் நான் ஒரு கோமா மாமியாத்து வெள்ளிக்கிழமை பூஜைக்கு தக்கரப்பொங்கல்(தக்குடு பாஷைல சர்க்கரை பொங்கல்) வாங்கிக்கர்துக்கு போனென். அன்னிக்கு அந்த மாமி காதுல குண்டலம் போட்டுண்டு இருந்தா, அதை பாத்துட்டு, ‘மாமி! இந்த தெருலையே உங்களுக்குதான் குண்டலம் ப்ரமாதமா இருக்கு!’னு ஒரு பிட்டை போட்டேன். ஒரு கரண்டி எக்ஸ்ட்ரா சக்கப் பொங்கலுக்காக இவ்ளோ பெரிய பிட்டாடா?என்பது போல அவாத்து மாமா படிச்சுண்டு இருந்த ஹிந்து பேப்பரை கீழே இறக்கிட்டு என்னை ஒரு பார்வை பாத்தார். ஆனா கோமா மாமிக்கு வாயெல்லம் பல்லு, அதுக்கு அப்பரம் சதா சர்வகாலமும்(எண்ணை தேச்சுக் குளிக்கும் நாள் தவிர) குண்டல பூஷணியாக அந்த மாமி தெருல வளைய வர ஆரம்பிச்சா. அந்த மாமிக்கு ‘குண்டல’ கோமா மாமி!னு பட்டப்பேர் வச்சுட்டேன். தெருல இருக்கர எல்லாருக்கும் ஒரு பெரிய குழப்பம் தீர்ந்த திருப்தி. இன்னோரு கோமா மாமிக்கு ‘ஸ்டைல்’கோமா மாமி!னு பெயர் சூட்டப்பட்டது(அந்த மாமி பயங்கரமா ஸ்டைல் பண்ணுவா).

1)குண்டலத்துல பல மாடல்கள் இருக்கு, எல்லா மாடலுமே எல்லாருக்கும் பொருந்தி வருவது இல்லை. அவாளோட முகத்தை பொறுத்து வித்யாசப்படும்.




2)இதை எல்லாம் விட முக்கியமான விஷயம் குண்டலம் போட்டுக்கரவா உம்மனாமூஞ்சியா இல்லாம ஒரு மில்லியன்டாலர் புன்னகையோட(எவன்டா அங்க!இளிச்ச வாய்!னு வாசிக்கர்து?) இருக்க வேண்டியது மிகவும் முக்கியம்.




3)கண்ணு முழி நல்ல நவாப்பழம் மாதிரி இருக்கரவாளுக்கு குண்டலம் முகத்தோட பொருத்தின மாதிரி அம்சமா இருக்கும்.






4)குண்டலம் அதுவா முகத்தோட இயல்பான அசைவுனால ஆடினாதான் நன்னா இருக்கும், சில பேர் வேணும்னே அதை ஆட்டர்துக்காகவே மண்டையை மண்டையை ஆட்டி முயற்ச்சி பண்ணுவா, அப்படி பண்ணவே கூடாது.



5)குண்டலம் போட்டுக்கர்துக்கு ஒரு வயது வரம்பு உண்டு, பக்கத்தாத்து காயத்ரி அக்கா அவாளோட குழந்தைக்கு குண்டல கோமா மாமியை காமிச்சு மம்மு ஊட்டர அளவுக்கு எல்லாம் வெச்சுக்காம கெளரவமா ஆறு கல் வைரத்தோடுக்கு மாறிக்கர்து உஜிதம். (ஊருக்கு போகும் போது அந்த மாமிக்கு எடுத்து சொல்லனும், தக்குடு சொன்னாதான் அந்த மாமி காதுலையே வாங்கிப்பா). இன்னும் அந்த கோமா மாமி குண்டலத்தை கழுட்டலை என்பது உபரி தகவல்.

இந்த மாதிரி ஒரு சமுதாய விழிப்புணர்வு(!!??) பதிவு போடப்போறேன்னு சொன்னவுடன் கால நேரம் பாக்காம போட்டோ எல்லாம் அனுப்பி வெச்ச என்னோட தோஸ்த் ‘துபாய்’ செளம்யாவுக்கு ஒரு சலாம்! தாங்க்யூ! செளம்யாமவ்ளே!...:)

குறிப்பு - பெரிய ஜவுளிக்கடை முழுவதும் துணிமணிகள் இருந்தாலும் எல்லாத்தையும் முதலாளியா உபயோகபடுத்தறார்? அதை மாதிரி இந்த பதிவுல உள்ள வர்ணனைக்கும் தக்குடுவுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. தக்குடுவுக்கு பொம்ணாட்டிகள் சமாசாரத்துல எல்லாம் அவ்வளவா இஷ்டமே கிடையாது அப்படிங்கர விஷயம் உங்க எல்லாருக்குமே நன்னா தெரியும் . இருந்தாலும் புதுசா வாசிக்கர்துக்கு வந்தவா யாராவது, 'ஓஓஓ! இந்தப் பிள்ளை ஏன் இப்படி எழுதியிருக்கு?'னு குழம்பிடக்கூடாது இல்லையா அதுக்குதான் இந்த குஸ்கி மன்னிக்கவும் டிஸ்கி).

பொது நலன் கருதி வெளியிட்டவர்,
'உங்கள் பாசத்துக்குரிய' தக்குடு