Thursday, July 14, 2011

கண்டக்டர்


வரலெக்ஷ்மி பூஜை ஸ்பெஷல் போஸ்ட் சுந்தரி உம்மாச்சி ப்ளாக்ல படிக்க தவறாதீகள்!!


Part 1 Part 2

பெண்களூர்ல நாங்க தங்கி இருந்த வீட்டை சுத்தி நாலு நாலு சப்பாத்தி பிகர்களா சேர்ந்து வாடகைக்கு வீடு எடுத்து தங்கி இருந்தா. அதுவும் இல்லைனா 10 - 12 பிகர்களை உள்ளடக்கிய பேயிங் கெஸ்ட்டா இருக்கும். பொறாமை பிடிச்ச சில பேர் நாங்க தான் இதுக்கு நடுல தங்கினோம்னு மாத்தியும் சொல்லர்து உண்டு. எங்களோடுது வீடுனு சொல்லர்தை விட மொட்டை மாடில வடிவமைக்கப்பட்ட அழகான கிளி கூண்டுனு சொல்லலாம். வீட்டோட சொந்தக்காரர் ரெட்டிகாரு! ஒன்னாம் தேதிலேந்து அஞ்சாம் தேதிக்கு உள்ள ஏழுகுண்டலவாடுவை பாத்துட்டு வந்து நமக்கு லட்டு ப்ரசாதமும் தருவார். திருப்பதில கோஷம் போடற மாதியே எங்களையும் பக்திபரவசத்தோட கூப்பிடுவார். எங்க அண்ணா பேரையும் என் பேரையும் முழுசா கூப்பிடர்துல அவருக்கு சொல்லமுடியாத ஆனந்தம்.

அதுக்காக வாடைகையை கம்மி பண்ணிடலை, எப்போதும் எங்க அண்ணாவுக்கு விண்டு குடுக்கும் லட்டுல கூட கொஞ்சம் லட்டு கிட்டித்து அவ்வளவுதான்!. ரெட்டி எப்போதுமே துட்டு விஷயத்துல ரொம்ப கெட்டி. வாரக் கடைசில எங்களுக்கு ஒரே போக்கிடம் பக்கத்துல இருந்த போஃரம் மால் தான். போகும் போது நிச்சயமா எங்க அண்ணா நடத்தி தான் கூட்டிண்டு போவான். திரும்பி வரும் போது சில சமயம் நல்ல மனசு இருந்தா பஸ்ல ஏறுவான். ஆனா அந்த ஊர்ல நடந்து போகர்தும் ஒரு தனி சுகம் தான் தெரியுமோ! அந்த ஊர்ல தொடர்ந்து பத்து நிமிஷம் நடந்தேள்னா நிச்சயமா ஒரு பார்க் வந்துடும். எங்க ஆத்துலேந்து நாங்க நடந்து போகும் முப்பது நிமிஷத்துக்குள்ள இரண்டு பார்க் வரும்னா பாருங்கோளேன். ‘மாப்ளே! மாப்ளே!’னு இரண்டு பேரும் மாறி மாறி பேசிண்டே நடந்துடுவோம்.

அவா ஊர்ல சாயங்கால சமயம் நாம மணி பாக்கர்துக்கு கடிகாரத்தை பாக்கனுங்கர அவசியமே இல்லை. பார்க்ல இருக்கரவா உக்காசுண்டு இருக்கும் பொஷிஷனை வெச்சே கண்டு பிடிச்சுடலாம். ரோட்லேந்து பாத்தேள்னா பார்க்ல இருக்கும் சிமெண்ட் சார்ல ஜோடிகள் கலகலனு சிரிச்சு பேசிண்டு இருந்தா அஞ்சரை மணினு அர்த்தம். ஆறு மணினா பையன் பொண்ணோட கையை புடுச்சுண்டு ஜோசியம் சொல்லிண்டு இருப்பான். ஒருத்தர் மடில ஒருத்தர் தலை வெச்சு தாசுண்டாச்சுன்னா ஆறறை மணி ஆயாச்சுனு அர்த்தம். ‘அதுக்கப்புறம்! அதுக்கப்புறம்!’னு ஏழு மணியை பாக்கர்த்துக்கு எல்லாரும் நாக்கை சப்பு கொட்டாதீங்கோ! ஏன்னா ஏழு மணிக்கு அந்த ஜோடி கிளம்பி போய் அடுத்த ஜோடி வந்துடும். "ஹே தக்குடு! இதை எல்லாம் எதுக்கு நீ பாத்துண்டு இருந்தாய்?"னு சிரிக்காதீங்கோ! எதிர்காலத்துல பொதுஅறிவு சம்பந்தமா எழுதனுமேங்கர கடமை உணர்ச்சிதான் காரணம். இதை விட சுவாரசியமான விஷயம் என்னன்னா, ஏகப்பட்ட பேர் அந்த சமயம் பார்க்ல அரை டவுசரை போட்டுண்டு கைவீச்சும் கால்வீச்சுமா வாக்கிங் பண்ணிண்டு இருப்பா. எதுவுமே நடக்காத மாதிரி வளையவரும் மத்திய மந்திரிகள் மாதிரி இதை கண்டுக்கவே மாட்டா.

மால்ல போய் நின்னுண்டு வேடிக்கை பாக்கர்து ஒரு நல்ல பொழுதுபோக்கு! அப்போ அங்க போய் ஒன்னுமே வாங்கமாட்டேளா?னு தானே கேக்கறேள்.எனக்கு வேண்டிய சாமான்செட்டு எதுவுமே அங்க கிட்டாது. நம்ப சாமான்செட்டெல்லாம் கல்லிடை காஸ்மோபொலிடன்ல மட்டும் தான் கிட்டும். பத்து ரூபா சாமானை ஐனூறு ரூபாய் குடுத்து லூசுதான் வாங்கும். ஒரு ரூபாயை ஒரு ரூபாயா பாக்கக் கூடாது, அதுக்குள்ள 20 ஆரஞ்சு மிட்டாய் இருக்குங்கற ஓர்மை வேணும்னு என்னோட தோஸ்த் ப்ளவுஸ் சங்கரனும் நானும் அடிக்கடி சின்னவயசுலையே சொல்லிப்போம். சப்பாத்தி பிகர்கள் & பிகர்களோட மண்டகப்படி உபயதாரர்(அதான்பா பாய் ஃப்ரண்ட்)அடிக்கும் லூட்டி காமெடியா இருக்கும். அந்த பிகர் “ஏ சாய்யே! ஓ சாய்யே!”னு கண்ணுக்கு தெரியர எல்லா வஸ்துவையும் வாங்கி தரசொல்லும். பிகரை கூட்டிண்டு வந்த மாக்கானும் சிரிக்கர மாதிரியே முகத்தை வெச்சுண்டு மனசுக்குள் கதறி அழுதுண்டே வாங்கி குடுப்பான். சில ஜோடிகளை பாத்தாக்க பையன் நல்ல வாட்டசாட்டமா கடோத்கஜன் மாதிரி இருப்பான், ஆனா அந்த பிகர் "என்னை தூக்கி விடு! எங்க அக்காளை ஏத்தி வுடு!"னு சொல்லும்படியா இருப்பா.

அதென்னவோ இந்த பொண்கொழந்தேளுக்கு கரடி பொம்மையை பாத்தாக்க ஏன் தான் இப்படி ஒரு பைத்தியமோ. ஒருவேளை அவாளோட அப்பா மாதிரியே இருக்கர்தால இருக்குமோ? “சோஓஓஓஒ ச்வீட்ட்ட்ட்ட்ட்ட்!”னு சொல்லிண்டு அதை கட்டிபுடிக்கர அழகை பாக்கனுமே! பேசாம கரடியா பொறந்துருந்தா ஜென்ம சாபல்யம் கிடைச்சுருக்கும்!னு அதை வாங்கிகுடுக்கும் பையன்கள் பரிதாபமா முழிப்பான். கரடி வாங்கமுடியாட்டியும் ஒரு நாகுட்டி பொம்மையாவது வாங்காம விடமாட்டா. அனேகமா எல்லா பைத்தியங்களும் இப்போ குங்க் ஃபூ பாண்டா கரடி பொம்மைக்கு shift ஆகி இருக்கும்னு நினைக்கறேன்.



பர்ர்ர்ர்ர்ர்கர்....;)

அங்க வியாபாரம் பண்ணும் பர்க்கர் பிசா பக்கத்துல எல்லாம் தலை வெச்சு கூட படுக்கமாட்டோம். நாலு பன்-னை ஒன்னு மேல ஒன்னு அடுக்கி வச்சு அதை ஒரே கடில கடிக்கர்துக்கு ஒவ்வொருத்தரும் வாயை பொளப்பா பாருங்கோ!!! பகவானே! வாயா இல்லைனா கொல்லம் ரயில்ல வரும் மலை குகையா!னு நமக்கு சந்தேகமா இருக்கும். இதே மாதிரி எப்ப பாத்தாலும் வாயை பொளந்துண்டு இருந்தாக்க ராமாயணத்துல வரும் கபந்தன் மாதிரி வாய் ஆயிடாதோ?னு எங்க அண்ணா கிட்ட சந்தேகம் கேப்பேன். பர்க்கர்,பிசா எல்லாம் வெள்ளக்காராளோட தேசத்துல உள்ள சீதோஷணத்தை மனசுல வெச்சுண்டு ஸ்ருஷ்டிக்கப்பட்ட வஸ்துக்கள். நம்ப ஊர்ல அடிக்கர வெயிலுக்கும் மழைக்கும் ஏத்த மாதிரியான இட்லி தோசை தான் நமக்கு சரியா இருக்கும். ஒரு விஷயம் கவனிச்சேளோ? நம்ப ஊர்ல இருக்கும் சமத்துகள் எல்லாம் பிசா,பர்க்கருக்கு ஆளா பறக்கர்து. கனடால இருக்கர சிலபேருக்கு இட்லி மாவு பொங்கலையே!னு கவலை பிடுங்கி திண்கர்து. ஹம்ம்ம்ம்ம்ம்! என்ன பண்ணமுடியும். அவாஅவா பண்ணின கர்மா....:))



பஸ்ல வரும் பராசக்தி!!

எல்லா கூத்தையும் பாத்துட்டு மாலுக்கு போய் திரும்பி வரும் போது பஸ்ல வருவோம். இந்த ஊர்ல பொம்ணாட்டி கண்டக்டர்கள் ஜாஸ்தி. பாரதி கண்ட புதுமை பெண்களா நம்ப கண்ணுக்கு அவா தெரிவா. கூட்டமா இருந்தா தாண்டி வந்து டிக்கெட் வாங்கமாட்டானு நினைச்சா நாம தான் ஏமாறுவோம். எப்பேர்பட்ட கூட்டமா இருந்தலும் நடுல புகுந்து வந்துடுவா. மரியாதை தெரியாத மெட்ராஸ்ல இருக்கறவா பேசற மாதிரி நீ! வா! போ!னு ஒருமைல பேசினா கர்னாடகாகாரா நம்ப கடவா பல்லை பேத்துடுவா. நம்ப ஊர்ல இருக்கர மாதிரியே பொம்ணாட்டிகளுக்கு தனியா 10 சீட் உண்டு. அது போக மிச்சம் உள்ள சீட்லையும் அவா பாட்டுக்கு வந்து உக்காச்சுப்பா. உங்களுக்கு அன்னிக்கி யோகம் நன்னா இருந்தா ஆரஞ்சு கலர் டீசார்ட் போட்ட ஒரு மார்டன் டிரெஸ் மகாலெட்சுமி உங்க பக்கத்துல வந்து உக்காசுண்டு எம்.பி த்ரீ ப்ளேயர்ல அழகா தலையை ஆட்டி ஹிந்தி பாட்டு கேட்டுண்டு இருக்கும். நாம ஏவிஎம் சரவணன் அப்பச்சி மாதிரி சமத்தா கையை கட்டிண்டு உக்காசுண்டு இருக்கனும்.

கண்டக்டர்கள் அடிக்கடி ‘உளக்கடே பன்ட்ரிரி'னு சொல்லிண்டே இருப்பா. ஆரம்பத்துல அதுக்கு “பன்னி மாதிரி வழியை அடச்சுண்டு நிக்காதீங்கோ!”னு சொல்லறார்தா அடிச்சு விட்ட எங்க அண்ணாவோட கப்சாவை அப்படியே நம்பிட்டேன். கன்னடம் தெரிஞ்சதுக்கு அப்புறம் தான் அதோட அர்த்தம் பிடிபட்டது. சேஞ்ச் கொட்ரிரீ!னு ஆம்பளை கண்டக்டர் & பொம்ணாட்டி கண்டக்டர் இரண்டு பேர்கிட்டயும் மரியாதையா நாம கேக்கலாம். முதல் தடவை நான் ஒரு பொம்ணாட்டி கண்டக்டர் கிட்ட திடீர்னு “சேஞ்ச் கொட்ரிரீ!”னு கன்னடத்துல பேசி சில்லரை வாங்கினதும் எங்க அண்ணா பயந்து போயிட்டான். அதுலேந்து என்னோட சேர்ந்து உக்காசுக்க மாட்டான். நாலு சீட்டு தள்ளியே தான் நிப்பான். என்னைக்காவது ஒரு நாள் ஒரு பொம்ணாட்டி கண்டக்டர் கையாள ‘திருசாத்து’ வாங்குவேன்னு எப்போதும் ஆவலா எதிர்பாத்துண்டு இருப்பான். பகவானோட புண்ணியத்துல கடைசி வரைக்கும் அந்த மாதிரி ஆகலை.

பெண்களூர் வாழ்க்கைல மறக்க முடியாத விஷயங்கள் எவ்வளவோ இருந்தாலும் அதுல பல விஷயங்கள் ரயில் பெட்டியின் ஜன்னலோரத்துல எதிர்பக்கமா வேகமா ஓடும் மரங்கள் மாதிரி மறந்து போயிடர்து. ஆனா சில விஷயங்கள் மட்டும் ஜன்னலை தாண்டி முகத்துல தெளிச்ச மழைச்சாரலா நினைவுல நிக்கர்து........

நினைவுகள் உள்ள வரை கனவுகள் தொடரும்..........

Thursday, July 7, 2011

பண்டாரம்

லோக விவஹாரங்களில் சிக்கித் தவிக்கும் ஆத்மா கூட ஒரு வகையில் பண்டாரம் தான். பரமாத்மாவின் பரபிரம்ம ஸ்வரூபத்தில் லயிப்பதற்கு பண்டாரமான ஜீவாத்மா பாடாய்படுகிறது.... இப்படி எல்லாம் எழுதர்துக்கு நான் என்ன மாதங்கி மேடமா?..:P தலைப்பு & ஆரம்ப வரியை பாத்துட்டு பயந்து ஓடிராதீங்கோ! அகிலா மாமி சொல்ற மாதிரி "கெட்டிக்காரன் பொய் எட்டு நாளைக்கு" . வரப் போகும் மேட்டர் என்னவோ உங்களுக்கு பழக்கமான விஷயம் தான் எப்போதும் பழைய ஹார்லிக்ஸ் பாட்டில்ல வரும் அம்மாவோட நார்தங்காய் ஊறுகாய் சில தடவை காம்ப்ளான் பாட்டில்ல போட்டு வருதோல்லியோ! அதை மாதிரி வெச்சுக்கோங்கோளேன்!..:)

ஒருத்தர் பார்த்த உடனே சிரிச்ச முகத்தோட செளக்கியமா இருக்கேளா? ஆத்துல எல்லாரும் செளக்கியம் தானே?னு வாஞ்சையோட ஜாரிச்சாக்க அவா திருனெல்வேலிக்காரா!னு ரொம்ப ஈஸியா கண்டுபிடிச்சுடலாம். இன்னிக்கும் எங்க தெருலேந்து பெங்களூருக்கு கல்யாணம் ஆகி போன ஒரு மாமி ஊருக்கு வந்தாக்க, தெரு முக்குலேந்து அவாத்தை கார் தொடர்துக்குள்ள சுமாரா ஒரு 50 செளக்கியமாவது கேட்டுட்டு தான் ஆத்துக்குள்ள காலடி எடுத்து வைப்பா. மிச்சம் மீதி இருக்கும் ‘செளக்கியமா?’ சாயங்காலம் தொடரும். செளக்கியமா கேக்கும் போது அவாளோட வலது உள்ளங்கை ஆசிர்வாத அபினயத்துல இருக்கும். "செளக்கியமா மாமி!"னு அவாளுக்கு ஒரு பட்டப்பெயரே உண்டு. இந்த மாதிரியான மாமிகளால் சீராட்டி பாராட்டி வளர்க்கப்பட்டதாலையோ என்னமோ எனக்கும் இந்த வியாதி உண்டு. “ஹே! வாட்ஸ் அஃப்?”னு கேட்டாலும் “நான் செளக்கியம்! உங்காத்துல எல்லாரும் செளக்கியமா!” தான் பதிலா டைப் அடிப்பேன்.

இப்ப இருக்கர ஜோலில வந்து சேரும் போது என்னொட உயரதிகாரி ஒரு தமிழர்னு தெரிஞ்ச போது கொஞ்சம் ஆசுவாசமா இருந்தது. இருந்தாலும் என்னோட தலைவர் ஆபிஸ்ல வெச்சு தமிழ்ல பேச மாட்டார். வெள்ளக்காரன் பேசக்கூடிய 'அக்மார்க்' இங்கிலீஷ்ல தான் சம்சாரிப்பார். அபூர்வமா சில சமயம் தமிழ்ல ரெண்டு வார்த்தை பேசுவார். அதுவும் வில்லங்கமா தான் இருக்கும். கரெக்டா சுச்சா போகர இடத்துல வெச்சுதான் “டிபன் சாப்பிட்டையா தக்குடு?”னு செந்தில் மாதிரி ஜாரிப்பார். ஒரு தடவை அவர் கேக்கர்துக்கு முன்னாடி முந்திண்டு நான் "இன்னிக்கி என்ன டிபன்?"னு கேட்டதுக்கு அப்புறம் அவர் கேக்கர்து கிடையாது. மத்தவா யார் கிட்டையும் “செளக்கியமா?” இங்க்லீஷ்ல கூட கேக்க முடியாது. அரபில கேகர்துக்கு நேக்கு அரபி தெரியாது. இருந்தாலும் நித்யம் ஒரு ஷேக்கும் நானும் (அசடுவழிஞ்சுண்டு) சிரிச்சுப்போம். அதுக்கு அப்புறம் நம்ப சூடான் சிங்கத்துகிட்ட கேட்டு அரபில "செளக்கியமா இருக்கேளா? உங்காளோட ஆத்துக்காரி(கள்)& குழந்தேள் எல்லாம் செளக்கியமா?"னு அவா பாஷைல கேக்கர்துக்கு பழகிண்டேன்.

ஒரு நாள் திடீர்னு தலைவர் என்கிட்ட வந்து “நாளைக்கு மத்தியானம் நம்பாத்துல சாப்பிட வந்துடு தக்குடு! அக்கா சொல்ல சொன்னா!”னு சொன்னார். “ஓஓஓ! அதுக்கென்ன பேஷா வந்துடலாமே!”னு சொல்லிட்டு அடுத்த நாள் அவாளுக்கும் எனக்கும் தெரிஞ்ச இன்னொரு பாச்சிலரையும் சேர்ந்து அழைச்சுண்டு ஒரு டஜன் வாழைப்பழத்தோட அவாத்துக்கு போனேன். அவாத்துக்கு போனதுக்கு அப்புறம் தான் தெரியர்து அவரோட தங்கமணி திருனெல்வேலி ஜில்லா!னு. அப்புறம் என்ன, 'அக்க்க்க்க்க்க்கா!' 'தம்ம்ம்ம்ம்ம்ம்பி!'னு ஒரே பாசமழைதான் போங்கோ! டென்னிஸ் மாட்ச் அம்பையர் மாதிரி என்னோட தலைவர் எங்க ரெண்டு பேர் முகத்தையும் மாத்தி மாத்தி பாத்துண்டு இருந்தார். வெறும் நெத்தியா சாப்பிட உக்கார வேண்டாமே!னு கால் அலம்பிட்டு நெத்தி நிறைய விபூதி இட்டுண்டு சாப்பிட ஹாலுக்கு போனா "அச்சு அசல் அதே மாதிரி இருக்கான் கோந்தை"னு அந்த அக்கா தனக்கு தானெ சொல்லிண்டா. ஒருவழியா திருனெல்வேலி கதை எல்லாம் பேசி முடிச்சுட்டு சாப்பிட போன இடத்துல நாலடி நீளத்துக்கு ஒரு இலை எனக்கு போட்டு இருந்தா அந்த அக்கா, இலையோட ஒரு பக்கத்துல 2 பேர் உக்காசுண்டு அடுத்த பக்கத்துல சாப்பிடர மாதிரி அகலம். எங்க ஊர் அக்காக்களுக்கே அபாரமான சகோதர பாசம் உண்டு.

அவாளொட ரங்கமணிக்கு டிபன் இலை மாதிரி ஒன்னை போட்டுட்டு "இலையவா சாப்பிடபோறேள்!"னு சொல்லி அவரோட வாயை அடச்சுட்டா. பால் பாயாசம் சகிதமா பிரமாதமான சாப்பாடு. எல்லாம் நல்லபடியா போயிண்டு இருக்கும் போது எங்க தலைவர் “பட்டூ! திடீர்னு எதுக்கு தக்குடுவை சாப்பிட கூப்பிட்டை?”னு கேட்டார். அந்த சமயம் நான் தக்காளி ரசத்துக்குள்ள முங்கி குளிச்சுண்டு இருந்தேன். “என்னோட ஜாதகத்துல கேது திசை நடக்கர்தாம், அதனால இந்த மாசம் உடம்பை படுத்தும்!னு ஆத்து ஜோசியர் சொல்லி இருக்கார். பரிஹாரமா திருவண்ணாமைல இருக்கும் ரெண்டு பண்டாரத்துக்கு என்னோட கையாலையே அன்னதானம் பண்ணனுமாம், திடீர்னு பண்டாரத்துக்கு எங்க போகர்து?னு கவலையா இருந்தது அப்போ தான் தக்குடு ஞாபகம் வந்தது!”னு அக்கா முகமலர்ச்சியோட சொல்லவும் என்னோட கூட வந்த புள்ளையாண்டானுக்கு புரை ஏறிடுத்து. அதோட சாப்பாட்டை நிப்பாட்டிட்டு "அப்ப நான் தான் அந்த ரெண்டாவது பண்டாரமா?"னு கேக்கர மாதிரி என்னை பாத்து முறைச்சான். பார்வையாலையே பால்பாயாசத்தை காட்டி " "நன்ன்ன்னா இருப்பை! நான் இன்னும் பாயாசம் விட்டுக்கலை, காரியத்தை கெடுத்துடாதே!"னு சொன்னேன். “எக்கேடும் கெட்டு போ!”னு சொல்லர மாதிரி என்னை பாத்துட்டு அவன் அமைதி ஆயிட்டான். அந்த "அச்சு அசல்" டயலாக்கோட தாத்பர்யம் எனக்கு அப்பதான் விளங்கித்து.



என்னைப்போல் ஒருவர்..:)

நான் கொஞ்சம் நிதானமாதான் சாப்பிடுவேன். முதல் பந்தில உக்காசுண்டா இரண்டாம் பந்தில உள்ளவா கூடதான் தச்சுமம்மு சாப்பிட முடியும். நிதானமா நான் சாப்பிட்டு முடிக்கர நேரம் அந்த அக்கா “நோக்கு திரட்டிபால் பிடிக்குமா?”னு கேட்டுண்டே வந்து இலைல போட்டா. “நன்னா கேட்டேள்! சாப்பாட்டுக்கு பதில் அதையே போட்டு இருந்தா கூட சாப்பிடுவேன்!”னு சொல்லிண்டே பெருமாள் கோவில் தீர்த்தம் மாதிரி மூனு தடவை வாங்கி நொசுக்கிண்டு இருக்கும் போது என்னோட தலைவர் கை அலம்பிட்டு வந்தார். “பட்டூ! எனக்கு திரட்டிபாலை கண்ணுலையே காட்டலையேடீ!”னு பரிதாபமா என்னை பாத்துண்டே கேட்டார். அக்கா அதை காதுலையே வாங்கிக்கலை. "கேது திசைக்கு 48 நாளைக்கு ஒரு பண்டாரத்துக்கு பால்கோவா கிண்டி குடுக்கனும்னு ஒரு பரிஹாரம் உண்டே உங்காத்து ஜோசியருக்கு தெரியாதா அக்கா?"னு கேட்டுபாக்க ஒரு நப்பாசை இருந்தாலும் என்னோட உயரதிகாரிக்கு பயந்து வாயை திறக்கலை.

அந்த அக்காவுக்கு நல்ல கைராசி! எந்த நேரத்துல "ஸ்டார்ட் மியூசிக்" பண்ணினாளோ, இப்ப வாராவாரம் அன்னதானம் நடக்கர்து. கருங்குளம் மாமாவாத்துல மாமி ஆஞ்சனேயருக்கு வடை மாலை சாத்தர அன்னிக்கு எல்லாம் எனக்கும் சாப்பாடு போடரா, என்ன விஷயம்னே புரியமாட்டேங்கர்து. "என்ன்னமோடா கோந்தை! ஆஞ்சனேயர் பூஜைல நீ வந்து சாப்பிட்டா மனசுக்கு ஒரு திருப்தி!"னு அந்த மாமி சொல்லிண்டு இருக்கும் போதே "ரெண்டே ரெண்டு வடை போடுங்கோ!"னு சொல்லி நைசா அஞ்சாவது வடைக்கு அடி போட்டுருவேன்..:) "கோந்தை!அடுத்த வாரம் சாப்பிட வந்துடு கேட்டையா!”னு பாலக்காடு மாமி ஒரு பக்கம் போன் பண்ண, போதாகுறைக்கு இப்ப கல்லிடைலேந்து வேற ஒரு அக்கா லிஸ்ட்ல சேர்ந்துருக்கா. எப்பிடியோ போங்கோ! பகவான் படி அளக்கறார்!..:)

போன வருஷம் சதுர்த்திக்கு பெங்களூர்லேந்து கல்லிடை வந்த “செளக்கியமா மாமி”யோட கார்ல ஓடிண்டு இருந்த பாட்டை கேட்ட உடனே தெருல எல்லாருக்கும் சிரிப்பு வந்துடுத்து. நித்யஷ்ரீ மஹாதேவனோட கனீர் குரல்ல "செளக்கியமா? கண்ணே செளக்கியமா?"னு பாடித்துன்னா எல்லாரும் சிரிக்க மாட்டாளா!!!