Thursday, April 12, 2012

கிச்சனும் கேசவனும்.........

அனைவருக்கும் தக்குடுவின் இதயம் நிறைந்த தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்


பிரம்மச்சாரியா இருந்த வரைக்கும் வீட்டுக்கு அவ்வளவு பிரமாதமான முக்கியத்துவம் எதுவும் குடுக்காம ‘கட்டையை சாய்க்கர்த்துக்கு ஒரு திண்ணை இருந்தா போறாதா ஓய்ய்!’னு மேல்துண்டை திண்ணைல தட்டிண்டே தாச்சுக்கும் ‘முடுக்கு’ மூச்சா மாமா மன நிலைலதான் இருந்தேன். ஆனா இந்த க்ரகஸ்தன் வாழ்க்கை இருக்கே. ஒருமாதிரியான சுகமான அவஸ்தை. கல்யாணத்துக்கு முன்னாடி இருந்த இடம் ‘மர்மதேசம்’ சீரியல்ல வந்த நவபாஷான லிங்க பெட்டி இருக்கும் குகைமாதிரி நல்ல காத்தோட்டமா(!!) வெளிச்சமா உள்ள இடம். போதாகுறைக்கு பாதிராத்திரி வரைக்கும் ஃபுட்பால் மேட்ச்சை பாத்துண்டு ‘ஆயாளு சவட்டிக் களைஞ்சு'னு கூப்பாடு போட்டுண்டு இருக்கும் ஒரு மலையாளி பார்ட்னரும் உண்டு. ‘ஆயாவ எதுக்கு சவட்டி களையரா?’னு அரைதூக்கத்துல புலம்புவேன். அவனும் இல்லைனா ஒத்தமரத்து குரங்கு மாதிரினா இருக்கனும்னு நினைச்சு அவனை திட்டமாட்டேன். தங்கமணி வரபோராங்கனு முடிவானதுக்கு அப்புறம் வீடு தேடர படலம் ஆரம்பம் ஆச்சு.

தேடிப் பிடிச்ச வீட்ல உள்ள நுழைஞ்ச உடனே முதல் ரூம் சமையல்கட்டு தான். கல்யாணம் கழிஞ்சு வந்த தங்கமணி வரும்போது கையோட 'சமைத்துப் பார்!' 'அறுசுவை!' 'கலக்கல் சமையல்!'மாதிரியான தலைப்பு போட்ட புஸ்தகம் சகிதமா வந்தாங்க. ‘கலக்கல்’ சமையல்ல நித்தியம் வயிறு கலக்கிடாமே இருக்கனுமே நாராயணா!’னு மனசுக்குள்ள படபடப்பு வந்தாலும் சாயங்காலம் 5 மணிக்கு சுனாமியை பாக்கர்துக்கு மேக்கப் போட்டுண்டு போய் மெரினால நின்ன பொம்ணாட்டிகள் மாதிரி மனசை திடப்படுத்திண்டேன். தங்கமணி கிட்ட போய் மெதுவா 'இந்த ‘கலக்கல் சமையல்’ ‘சமைத்துப்பார்’ ஐயிட்டத்தை உங்க அப்பாக்கு தம்பிக்கு எல்லாம் ட்ரை பண்ணி பாத்துருக்கேளா?'னு மெதுவா கேட்டேன். ‘இல்லை நீங்க தான் பர்ஸ்ட்’னு பல்லெல்லாம் வாயா பதில் வந்தது. ‘அதானே கேட்டேன்! ஆத்துக்காரருக்கு கலக்கிண்டு போனா பரவாயில்லை அப்பாவும் அம்பியும் செளக்கியமா இருக்கனும் இல்லையா?’னு நான் கேட்டதை மேடம் காதுலையே வாங்கலையே!



நம்பாத்து கிச்சன்!

வந்து ரெண்டாவது நாள் சப்பாத்தி பண்ணினா பாருங்கோ!!. பில்டிங்கே ஆத்து வாசல்ல வந்து நின்னுடுத்து. ‘பாத்தேளா! என்னோட சப்பாத்தி எப்பிடி எல்லாரையும் சுண்டி இழுத்துண்டு வந்துடுத்து பாருங்கோ!’னு சொல்றமாதிரி ஒரு பெருமித பார்வை தங்கமணி கிட்ட இருந்து. நான் என்னதோ ஏதோ!னு பயந்து போய் ரேளில வந்து பாத்தா ஒரே புகைமண்டலம். ஆத்துல எல்லா கதவையும் தாள்போட்டுண்டு கணபதி ஹோமம் பண்ணின மாதிரி இருக்கு. அடுப்புக்கு நேர இருக்கும் சிம்மணியை போட்டுண்டு தான் சமைக்கனும்னு எங்காத்து அம்மணிக்கும் தெரியலை எனக்கும் தெரியலை. ஃபயர் அலாரம் அடிச்சு ஊரையும் நாட்டையும் கலக்கிடுத்து. அன்னீலேந்து எப்ப சமைக்க போனாலும் திருட்டு தம் அடிக்கறவா மாதிரி ‘புகை வருதா? புகை வருதா?’னு கிச்சன்லேந்து ரேளில இருக்கும் என்கிட்ட கேட்டுண்டே இருப்பா. பால் காய்ச்சினா கூட சிம்மணியை போட்டுண்டு தான் எல்லாம் நடக்கர்து.

ஒரு நாள் சாயங்காலம் டீ குடிச்சுண்டு இருக்கும் போது ‘நாளைக்கு உங்களுக்கு நான் வெஜிடபிள் புலாவ் பண்ணிதரட்டுமா?’னு ரொம்ப ஆசையா கேட்டா. ‘புலாவ் எல்லாம் கொஞ்சம் கஷ்டமான ஐயிட்டம் பட்டூ! நாம மெதுவா லெமன் சாதம், தேங்காய் சாதம்னு பஜனையை கொண்டுபோவோம்’னு ஆனமட்டும் கெஞ்சிபாத்தேன். ம்ம்ம்ம்! காதுலையே வாங்கலையே! அடுத்த நாள் மத்தியானம் தட்டுல புலாவ் ரெடியா இருந்தது. பகவானை பிரார்தனை பண்ணிண்டு சாப்பிட ஆரம்பிச்சேன். டெபிள் டென்னிஸ் அம்பயர் மாதிரி என்னையும் புலாவ் தட்டையும் மாத்தி மாத்தி மேடம் பாத்துண்டு இருந்தாங்க. நான் சலனம் இல்லாம சாப்பிடர்தை பாத்துண்டே ‘கொஞ்சம் குழஞ்சுருத்து இல்லையா?’னு மெதுவா ஆரம்பிச்சாங்க. ‘அடுத்த தடவை புலாவ் பண்ணும்போது சனிக்கிழமை பண்ணு! அப்பிடியே கொஞ்சம் மிளகு ஜீரகமும் பொடிச்சு போடு! பெருமாளுக்கு சனிக்கிழமை பொங்கல் நிவேத்யம் பண்ணினா ரொம்ப விஷேஷம்! ‘புலாவ்’ பொங்கல் பிரமாதமா இருக்கு!’னு சொன்னதுக்கு அப்புறம் யாருக்கோ போன் பண்ணி '2 டம்பளர் ஜலம் தானே விடனும் மாமி!'னு சந்தேகம் கேட்டுண்டு இருந்தா. யாரோ தஞ்சாவூர் மாமியாம். அவா கிட்ட போன்ல கேட்டே பண்ணினதுதான் இந்த புலாவ்வாம்.

இந்த விஜய் டிவி, சன் டிவில வரும் சமையல் நிகழ்ச்சியை பாத்தா எனக்கு மனசு பதற ஆரம்பிச்சுடும். 'கல்யாணத்துல உங்க பெரியம்மா பக்கத்துல சிவப்பா குள்ளமா ஒரு பொண்ணு நின்னுண்டு இருந்துதே அது யாரு?' ஆபிஸ்ல உன்னோட வேலை பாக்கர்தா சொல்லிண்டு கட்டுகுட்டுனு ஒரு நாயர் பொண் ரிசப்ஷென்ல வந்தாளே அவளோட பேர் என்ன நிம்மியா?'னு நானும் மாஞ்சு மாஞ்சு ' நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி' சூர்யா மாதிரி கேள்விகேட்டாலும் அசராம ‘தனியாவை தனியாக மிக்சியில் அறைத்துக் கொள்ளவும்’லேந்து கரெக்டா பாலோ பண்ணுவா. நடுல எதாவது புரியாத சாமான் பேரையோ இல்லைனா கறிகாய் பெயரையோ அந்த சமையல் பொம்ணாட்டி சொன்னதுக்கு அப்புறம் நிலைமை என்னோட கட்டுப்பாட்டுக்குள்ள வரும். ‘அவள் சொல்லற கறிகாய்/ மாவு எல்லாம் அமெரிக்காலையோ இல்லைனா சிங்கப்பூர்லையோ தான் கிடைக்கும்’னு சமாளிக்கர்துக்குள்ள நாக்கு தள்ளி போகும்.

ஆரம்பத்துல சாம்பார் ரசமே பெரிய சாதனையா இருந்தது. இதுக்கு நடுல உப்பு/காரம் கூடியோ/குறைஞ்சோ போச்சுனா மறுபடியும் தேத்தி சமையல் பண்ண வைக்கர்துக்கு புரட்சித் தலைவி மாதிரி இட்லி கதை/சட்னி கதை எல்லாம் சொல்ல வேண்டி இருக்கு. ‘என்னங்க இன்னிக்கு சாம்பாரா ரசமா?’னு கேக்கும் போது ‘நீ முதல்ல பண்ணுடா பட்டூ! அதுக்கு அப்புறம் அது சாம்பாரா ரசமா?னு நாம பொதுக்குழுவை கூட்டி முடிவு பண்ணலாம்’னு சொல்லுவேன். நான் சமையல் பண்ணின போது பாத்திரத்தோட மேல்டாக்குல தெளிவா எடுத்தா அது ரசம். கொஞ்சம் கலக்கி எடுத்தா அது சாம்பார்னு ஒரு கொள்கை உறுதியோட இருந்தேன். ‘கலக்கல்’ சமையல் கொஞ்சம் தெளிவாகி கலங்காத சமையல் ஆனதுக்கு அப்புறம் வெளில உள்ளவாளை விருந்துக்கு கூப்பிட்டா போதும்னு ரகசியதீர்மானம் போட்டு வச்சுருக்கோம்.

‘பழைய குருடி கதவை தொறடி’ கதையா ஒரு வாரமா 'உங்களுக்கு பன்னீர் டிக்கா மசாலா பண்ணி தரேன்’னு சொல்ல ஆரம்பிச்சு இருக்கா. ‘பன்னீர் டிக்காவும் வேண்டாம் சந்தன டப்பாவும் வேண்டாம்! நாலு வாய் தச்சு மம்முவும் சாம்பார் மம்முவும் போட்டாலே நான் திருப்தி ஆயிடுவேன்’னு நானும் எவ்வளவோ கதறியாச்சு இருந்தாலும் இந்த உலகம் எப்போதுமே சாதுக்களை தான் சோதிச்சு பாக்கர்து. ஒரு நாள் இல்லைனா ஒரு நாள் இந்த தஞ்சாவூர் மாமி கைல மாட்டாமையா போவா அப்போ இருக்கு தீபாவளி!