Wednesday, October 1, 2014

தோஹா டு தோஹா Part 2


Part 1 படிக்க இங்கே கிளிக் பண்ணுங்கோ!
 
ப்ளைட்லேந்து இறங்கி வந்து இமிக்ரேஷன்ல ஒரு ரேஷன் வரிசை நிக்கும் பாருங்கோ அதை மாதிரி ஒரு கொடுமை எதுவும் கிடையாது. என்னோட இமிக்ரேஷன் ஃபாரத்தை ப்ளைட்ல வச்சே நான் எழுதி முடிச்சு ரெடியா வச்சுருப்பேன் ஆனா நமக்கு முன்னாடி இருக்கும் சில அசமஞ்சங்கள் அப்ப தான் நிதானமா எழுதிண்டே போவா (இதுல சில சமத்துகள் என்னோட ஃபாரத்தை பாத்து காப்பி வேற அடிப்பா). இந்த  சமத்து போய் நின்ன உடனே அங்க கவுண்டர்ல இருக்கும் கட்டம் போட்ட சட்டை ‘கையெழுத்து ஏன் சரிஞ்சு இருக்கு?’னு கேள்வி கேட்க ஆரம்பிச்சு அதுக்கு இவர் அசடு வழிஞ்சு நமக்கு பொறுமையே போயிடும். போன தடவை மெட்ராஸ்லேந்து கிளம்பும் போது ஒரு இமிக்ரேஷன் ஆபிசர் உங்களுக்கு பக்கத்து ஏர்போர்ட் திருவனந்தபுரம் தானே எதுக்கு மெட்ராஸ்லேந்து போறீங்க?னு பெரிய புத்திசாலி மாதிரி கேட்டார். திருவனந்தபுரத்து திரிபுரசுந்தரிகளை சைட் அடிச்சா என்னோட தங்கமணி பின்னி பிரியை கழட்டிடுவானா காரணம் சொல்லமுடியும், ‘உங்க மாமியார் வீடு மெட்ராஸ்ல இருந்தா அங்க வரமாட்டீங்களா சார்? ஏது நாங்க மெட்ராஸ் ஏர்போர்ட்டுக்கு வரகூடாதா’?னு நானும் சிரிச்சுண்டே பதில் சொன்னேன்.
 
டிபார்ட்மெண்ட் ஆட்கள் கிட்ட நாம கோபமாவும் பேசமுடியாது. நாமளே முன்னடி முகூர்த்தம் மூனு நாழிகை கணக்குல ஏர்போர்ட்டுக்கு ரெண்டு மணிக்கூருக்கு முன்னாடி வந்து நின்னுருப்போம், ஆபீசர் பாட்டுக்கு ‘இந்த பையனோட முழியே சரியில்லை, கொஞ்சம் விவரமா ஜாரிக்கனும்’னு நிப்பாட்டி வச்சுட்டார்னா டிக்கெட் பைசா கோவிந்தா ஆயிடும். நாம எந்த இடத்துல விட்டோம்? ம்ம்ம்.. நியாபகம் வந்துடுத்து! இமிக்ரேசன் முடிச்சு கஸ்டம்ஸ் ஸ்கேனின் மிஷின்ல சின்ன பெட்டியை அனுப்பினா அங்க ஒரு கஸ்டம்ஸ் மாமா மெதுவா பக்கத்துல கூப்பிட்டு ‘மஸ்கெட்லேந்து வந்த ப்ளைட்லதானே வந்தீங்க? உள்ள பிஸ்கட் எதாவது இருக்கா?’னு ஆரம்பிச்சார். ‘தங்கமணியோட 4 கிராம் மோதிரம் மட்டும் தான் இருக்கு வேணும்னா வெளில எடுத்துகாட்டரேன்’னு சொல்லவும் ‘போயிட்டு வாங்கோ!’னு அனுப்பிட்டார். கஸ்டம்ஸோட ஒரே கஷ்டமா போச்சு! ரெண்டு நாள் மாமனாராத்துல ரெஸ்ட் எடுத்துட்டு வழக்கம் போல பெண்களூர் கிளம்பினேன். ஜூலை - ஆகஸ்ட் அங்க மழைகாலம இருக்கர்தால தனியாதான் கிளம்பினேன். பெண்களூர்ல சிலபல நண்பர்களை பாத்துட்டு அடுத்த நாள் சிருங்கேரிக்கு ஒரு சொந்தக்கார அக்கா சகிதமா கிளம்பினேன். நாங்க கிளம்பர வரைக்கும் முகத்தை பாவமா வச்சுண்டு இருந்த அக்காவோட ஆத்துக்காரர் நாங்க கிளம்பினவுடனே சந்தோஷத்டோட உச்சத்துக்கே போயிட்டார். அவரும் அவரோட பையனும் ‘ஹைய்யா ஜாலி!னு கத்திண்டு ஒரே கும்மாளம். ‘ரெண்டு நாளுக்கு கூட ரெண்டு நாள் ஆனாலும் பரவாயில்லை தக்குடு! அக்காவை பாதில மட்டும் கூட்டிண்டு பெண்களூர் வந்துடாதே!’னு கையை பிடிச்சுண்டு கெஞ்சினார்.

 

மழைக்கால சிருங்கேரி
 
‘நான் இல்லாம அவரும் குழந்தையும் தவிச்சு போயிடுவா தெரியுமோ!’னு அக்கா பொலம்பிண்டு வந்தா. எதிர்பாத்த மாதிரியே போகும் வழி முழுக்க மழை. சிருங்கேரி மலையும் மலை சார்த்த இடம்னு நினைசுண்டு வந்தவா எல்லாருக்கும் மழையும் மழை சார்ந்த இடமா காட்சி கொடுத்தது. காத்தால தோரண கணபதில ஆரம்பிச்சு ராத்திரி சந்தரமெளீஸ்வர பூஜை வரைக்கும் எல்லாத்தையும் நிதானமா எந்தவித அவசரமும் இல்லாம தரிசனம் பண்ணினோம். காத்தால பூஜை பண்ணர்துக்கு கூப்பிடும் போது கல்லிடைகுறிச்சினு சேர்த்து சொல்லி நம்மை கூப்பிட்டதுதான் தாமசம், ஒரு மாமா எங்கேந்தோ ஓடியே வந்து ‘நீங்க கல்லிடைல எந்த தெரு? பெருமாள் கோவிலுக்கு முன்னாடியா பின்னாடியா? ராமசந்திரபுரம் தெருல காமேஷ்வர மாமாவை தெரியுமா? அவர் என்னோட ஆத்துக்காரியோட ஒன்னு விட்ட மாமா பிள்ளையோட ஷட்டகர்’னு வரிசையா பேசிண்டு இருந்தார்.
 
 

உடுப்பி தெப்பக்குளம்
 
ஒரு நாள் தங்கி இருந்துட்டு நேரா உடுப்பி கிருஷ்ணரை போய் தரிசனம் பண்ணிட்டு ரெண்டு மூனு டப்பா ஊதுவத்தி வாங்கினேன். நம்ப அக்கா கார்ல மட்டும் வந்து இருந்தா சுமாரா  நாலு சாக்குபை நிறைய ஷாப்பிங் பண்ணுவா, ‘பஸ்ல போகனும்கா! அடக்கி வாசிங்கோ!’னு நான் பொலம்பிண்டே இருந்ததால அரை சாக்குபையோட நிப்பாட்டிண்டா.  நேரா சாப்பாடு போடர இடத்துக்கு போயாச்சு. கர்னாடகால எந்த கோவில்ல இறங்கினாலும் மத்தியானம் & ராத்திரி சாப்பாடு கிடைக்கும். சாப்பாடும் சுடசுட இருக்கும்.  ஓசி சாப்பாட்டை திவ்யமா சாப்பிட்டு முடிச்சுட்டு மங்களூர் பக்கத்துல இருக்கும் கட்டில் துர்கா கோவிலுக்கு கிளம்பினோம். ‘கடீ’ அப்பிடின்னா நடுவில்னு அர்த்தமாம். ரெண்டு மலைகளுக்கு நடுல இருக்கர்தால இந்த பேர்னு கேள்விப்பட்டோம். உடுப்பிலேந்து மேப்ல பார்க்கும் போது பக்கத்துல இருக்கரமாதிரிதான் இருக்கு ஆனா பிரயாணம் பண்ண ஆரம்பிச்சா போயிண்டே இருக்கு. திருனெல்வேலி பஸ்ஸ்டாண்ட்ல இறங்கி பாபனாசம் பஸ்ஸை பிடிச்சா கல்லிடை வரமாதிரி சுலபமா ஒரு இடத்துக்கு போக முடியர்தா! என்னமோ அந்த ஊர்லையே பொறந்து வளர்ந்த மாதிரி ரெண்டு இடத்துல இறங்கி வண்டி வேற மாறி ஏறவேண்டி இருந்தது. தெரியாத ஊர் தெரிஞ்ச ஊர்னு வித்தியாசம் இல்லாம எந்த ஊர் பஸ்ல ஏறினாலும் ஏறி பத்து நிமிஷத்துல லோக வியவஹாரங்களை மறந்து அந்தர்முக தியானத்துக்கு போயிடுவேன் (தூங்க ஆரம்பிக்கர்தை கொஞ்சம் பாலிஷா சொல்லியிருக்கேன் கண்டுக்காதீங்கோ!) தங்கமணி பக்கத்துல இருந்தா தட்டி எழுப்பி தரதரனு இழுத்துண்டு இறங்கிடுவா, தனியா போனா இறங்க வேண்டிய இடத்துல இறங்கர்து கொஞ்சம் சந்தேகம் தான்.



கட்டில் கோவில் வாசல் 
 
கூட வந்த அக்கா பாவம் பேந்த பேந்த முழிச்சுண்டு இருந்தா. நான் அப்பப்போ கண்ணை லைட்டா முழிச்சு பாத்து அவர் இருக்காளா இறங்கிட்டாளானு செக் பண்ணிண்டு தூங்கிண்டு இருந்தேன். திடீர்னு பாத்தா ஆளை காணும், ஆத்தாடி நான் தான் ஆவுட்டா?னு எனக்கு நானே கேட்டுண்டு தேடிபாத்தா நம்ப அக்கா கீழ இறங்கியாச்சு! நானும் அடிச்சுபொறண்டு பையை தூக்கிண்டு இறங்கி ஓடினேன். நந்தினி நதியோட கரைல துர்கா தேவி கோவில் இருக்கு. நல்ல மழைகாலமா இருந்ததால நதில ஜலபிரவாகம். ஜலத்துக்கு நடுல கோவில்ல உக்காச்சுண்டு இருக்கர்தால ஜலதுர்க்கானும் பேர் இருக்கு. மத்தியான நேரமா இருந்ததால ஜாஸ்தி கூட்டம் இல்லை. கேரள பாணி கூரை அமைப்போட கோவில் இருந்தது. கோவிலுக்கு உள்ளையே நதியோட படித்துறை இருக்கு. அம்பாளை தரிசனம் பண்ணிட்டு சுத்தி வந்து சன்னதில உக்காசுண்டு லலிதா ஸகஸ்ரனாமம் பாராயணம் பண்ணினேன். இந்த கோவில் அம்பாளுக்கு இளநீர் காய்களை காணிக்கயா எல்லாரும் குடுக்கரா. கோவிலோட மடைபள்ளிலேந்து சூடான பூந்தியை ஏலக்கா கிராம்பு நெய் சகிதமா பாகுல போட்டு லட்டு பிடிக்கர வாசனை மூக்கை துளைச்சது. ரெண்டு பிரசாத லட்டுவை வாங்கி நொசிக்கிட்டு நேரா மங்களூர் வந்து பெண்களூர் கிளம்பினோம். ஊர்ல போய் இறங்கினா அங்க நம்ம அக்காவோட ஆத்துக்காரர்..........
                                                              (தொடரும்)