என்னடா இது தக்குடு ஊர்ல இல்லாத அதிசயமா சீக்கரமே போஸ்ட் போட்ருக்கானே?னு எல்லாரும் ஆச்சர்யமா இருக்கா? பதிவை படிக்க படிக்க காரணம் புரியும்.
பொதுவா ஒரு ஆத்துல கடைசி குழந்தையா பொறந்தா அதுல பல சிக்கல்கள் உண்டு. நாம என்ன தான் கஷ்டப்பட்டு ஒரு நல்ல காரியம் பண்ணினாலும்(பண்ணினது கிடையாது, ஒருவேளை பண்ணினா)ஆத்துல நம்மை யாரும் கண்டுக்கவே மாட்டாங்க. அப்பிடியே கண்டுண்டாலும் 'இந்த சின்னப்பயலோட கார்யத்தை பாத்தேளா"னு தான் கேட்டுப்பாளே தவிர உருப்படியா ஒன்னும் ஒப்பேறாது. உங்களுக்கு மூத்தது அண்ணாவா இருந்தா அது ஒரு மாதிரி, அக்காவா இருந்தா கதை வேற மாதிரி.
எனக்கு வந்து வாய்ச்சது அண்ணாங்கர விஷயம் எல்லாருக்குமே தெரிஞ்சுருக்கும் (ஆமா! ஆமா!னு வம்புக்கு சப்பு கொட்டிண்டு சுபா மேடம் சொல்லும் பதில் எனக்கு கேக்கர்து). அந்தப் பயலை பத்திதான் இந்த பதிவு.
உங்களுக்கு எல்லாம்
பதிவர் அம்பியை (மூத்த பதிவர்!னு பீலா விட்டுண்டு அலையர்து தனி கதை) தான் தெரியும், தக்குடுவோட அண்ணாவை தெரியாது இல்லையா?
தந்திரம் பண்ணர்துல நம்பியார், சிரிக்கர்துல வீரப்பா, குசும்போட பேசர்துல அசோகன் ஆனா ஆத்துலையும் சரி வெளிலயும் சரி ஒரு எம்ஜிஆர் இமேஜ் இவனுக்கு (நம்ப கீதா பாட்டி அம்பத்தூர்ல அடிக்கர விசில் சத்தம் தோஹா வரைக்கும் கேக்கர்து). ஸ்கூல் படிக்கர காலத்துல சாயங்காலம் ஆத்துக்கு வந்தா வெளில விளையாடவே போக மாட்டான். அவனுக்கு கை,கால் & ட்ரெஸ்ல துளி அழுக்கு ஆகக் கூடாது, அதே மாதிரி எந்த காயமும் படாமா சக்கரகட்டியா உடம்பை பாத்துப்பான். கேரம்,செஸ்,சைனீஸ் சக்கர் இந்த மாதிரி உடம்புல படாத விளையாட்டா விளையாடுவான். எதுவும் இல்லைனா ஒரு புஸ்தகத்தை வெச்சுண்டு உக்காசுண்டுருவான்.

வாதாபி & வில்லாளன்...:)
தக்குடு அப்பிடி கிடையாது, ஸ்கூல் பையை வாசல இருந்தே ஆத்துக்குள்ள “சார் போஸ்ட்!” மாதிரி தூக்கி போட்டுட்டு 'ப்ளவுஸ்' சங்கரன்,’மாலாடு’ பாலாஜி,ரவிக்கு,ஹரிக்குட்டி,’மூஞ்சூர்’ மகேஷ்,’கிடுகிடு’கிரி,‘ரொட்டி சால்னா’ சேகர், கிச்சாகுட்டி,'சக்கப்பழம்' ஹரீஷ் இவாளோட விளையாட போயிடுவேன். நமக்கு எல்லாம் போட்டு இருக்கும் வெள்ளை கலர் ‘செளம்யா’ ப்ராண்ட் பனியன் மஞ்சக்கலர் ஆனா தான் ராத்திரி தூக்கமே வரும்.குறைஞ்சபட்சம் ஒரு ரத்தக் காயமாவது உடம்புல இருந்தா தான் சாப்பாட்ல கை வைக்கும் வீரப் பரம்பரை. தெரு தண்டர்துல எவ்ளோ பிசியா இருந்தாலும் சாப்பாடு டையத்துக்கு டாண்!னு வீட்ல ஆஜர் ஆயிடுவேன்.
நோகாமா நொங்கு திண்கர்துல எங்க அண்ணா மன்னன். தெரு முழுசும் இருக்கர எல்லா மாமிக்கும் தக்குடு செல்லப்பிள்ளைனு உங்க எல்லாருக்குமே தெரியும், அதனால நவராத்ரி சமயத்துல சுண்டல் கலெக்ஷன் ரொம்ப மும்மரமா நடக்கும். எங்க அண்ணா ஒரு ஆத்துக்கு கூட வரமாட்டான் ஆனா ஆத்துல இருந்த மேனிக்கே 50% சுண்டலை என்கிட்ட இருந்து தந்திரமா வாங்கி ஆட்டையபோடுவான். 'அலமேலு மாமியாத்துக்கு போனியா?' 'சுந்தரா மாமியாத்துக்கு போனியா?'னு ப்ராஜக்ட் மேனேஜர் மாதிரி வக்கனையா என்கிட்ட கேப்பான். 'செல்லம்மா மாமியாத்துக்கு ரெண்டாம்தரம் போ ல, அவாளுக்கு உன்னை ரொம்ப பிடிக்கும், ஒன்னும் சொல்லமாட்டா!னு ரெண்டாம் தடவை வேர அனுப்பி வெப்பான். நான் இப்போ இருக்கர மாதிரியே அப்போவும் கள்ளம் கபடமே தெரியாது, பைத்தியம் மாதிரி போய் வாங்கிண்டு வந்து அவனுக்கும் குடுப்பேன். 8 - 12 கிளாஸ் வரைக்கும் அவன் (ரொட்டி சால்னாவுக்கு ஆசை பட்டு) NCC-ல எல்லாம் இருந்தான். லொங்கு! லொங்கு!னு 2 மணி நேரம் “பீச்சே மூட், ஆகேசலேகா ஆயேமூட்!”னு பரேட் பண்ணினா 2 ரொட்டி கிட்டும், அதுல பாதி ரொட்டி டிபன் பாக்ஸ்ல போட்டு எனக்கு கொண்டு வருவான் (இல்லைனா நான் எதுலையும் பங்கு குடுக்கமாட்டேன்).
அந்தப் பய போட்ட பழைய ஸ்கூல் யூனிபார்ம் தான் எனக்கு வரும். அவன் துணியை எல்லாம் அழுக்காக்காம அப்பிடியே வெச்சுருந்து எனக்கு தள்ளி விட்டுடுவான். அவனுக்கு எப்போதும் புதுசு கிடைக்கும், பைத்தார தக்குடுவுக்கு எப்போதுமே பழைய ட்ராயர் தான். ‘உன்னோட சந்துல என்ன அருமாமனையா இருக்கு? தார்பாய்ல தான் உனக்கு ட்ராயர் தெய்க்கனும்!’ னு எங்க அம்மா என்னை சத்தம் போடுவா, ஏன்னா ஒரு ட்ராயர் போட்டு சரியா 2 மாசத்துல நமக்கு டிக்கில போஸ்ட் ஆபிஸ் ஓப்பன் ஆயிடும். ஆரம்பத்துல 15 பைசா போஸ்ட் கார்ட் சைஸ்ல இருக்கும் ஓட்டையை, ஒரே நாள்ல 10 ரூவா கவர் போஸ்ட் பண்ற சைஸுக்கு பெரிசாக்கி அடுத்த ட்ராயருக்கு அடி போடுவேன்.
நான் எட்டாம் கிளாஸ் படிச்சுண்டு இருந்த போது திடீர்னு ஒரு நாள் அவனுக்கு மதுரை காலேஜ்ல படிக்க இடம் கிடைச்சுருக்குனு சொல்லி மதுரை அனுப்பி வெச்சுட்டா, முதல்ல ஒன்னும் தெரியலை, அன்னிக்கி ராத்திரியே ஒரே அழுகையா வந்துடுத்து, நித்யம் அவனை 2 மிதியோ நாலு அடியோ குடுத்துட்டு அவன் மேல ஏறி படுத்துண்டாதான் எனக்கு தூக்கமே வரும் (வேற யாரையும் உதைக்கவும் முடியாது ஏன்னா, “கழுதை மிதியை கழுதைதான் தாங்க முடியும்!”னு எங்க அம்மா அடிக்கடி சொல்லுவா). அவன் இல்லைனவொடனே எதோ மாதிரி ஆயிடுத்து. 10 நாளைக்கு சாப்ட உக்காசுண்டா அவன் இல்லாட்டாலும் அவனோட சாப்படர தட்டையும் எனக்கு பக்கத்துல எடுத்து வெச்சுப்பேன், படுக்கையும் அதே மாதிரி தான். 'ஒளியும் ஒலியும்'ல தர்மத்தின் தலைவன் படத்துலேந்து 'தென்மதுரை வைகை நதி' பாட்டு வந்தா பயங்கர பீலிங் ஆகி கண்ணுல ஜலம் வந்துடும்.
எங்க அப்பா அம்மாவுக்கு அடுத்த படியா என் மேல அளவு கடந்த பாசம் வெச்சுருக்கும் ஒரு ஜந்து அவன் தான். குணமா/அனுசரனையா எல்லாம் அவனுக்கு பேச தெரியாது, எதாவது ரெண்டாம் தடவை கேட்டாளே சல்லு!புல்லு!னு எரிஞ்சு விழுவான். ப்ளாக்லதான் எதோ காமெடி பீஸ் மாதிரி வளைய வந்துண்டு இருக்கான். நான் அதெல்லாம் கண்டுக்கவே மாட்டேன். "அவன் எப்பிடி இருந்தாலும் அவன் தான் உன்னோட அண்ணா!"னு அம்மா சொன்னதுதான் மனசுல இருக்கு. 'டேய் அண்ணா!'/பெரிய மாப்ள!னு எப்போதும் மரியாதையாதான் அவனை கூப்பிடுவேன்.
எள்ளு ஒன்னை எட்டா பங்கு வெச்சுடுவான், துட்டு விஷயத்துல ஆசான் பயங்கர உஷார்! ஆனா நான் படிப்பு முடிச்சு வேலை தேட ‘பூலோக சொர்க்கமான’ பெங்களூருக்கு போன போது 4 சட்டை பேன்ட்,ஒரு துண்டு, 2 மயில்கண் வேஷ்டி வித் அட்டாச்சுடு அங்கவஸ்த்ரம் (வித் அட்டாச்சுடு ப்ளவுஸ் மாதிரி),ஒரு கோபிகட்டி,பஞ்சபாத்ரம்(சந்தி பண்ண) மட்டும் தான் கொண்டு போனேன். மத்தது எல்லாம் "அண்ணா பற்று" தான்..:)

இப்போ எதுக்கு அண்ணா புராணம்?னு கேக்கர்து புரியர்து! டிசம்பர் 1 தான் எங்க அண்ணா பூலோகத்துல உதிச்ச நாள். நான் நிச்சயமா கம்பர் கிடையாது, ஆனா அவன் எனக்கு என்னிக்குமே சடையப்ப வள்ளல் தான்! காசா பணமா? கூகுளாண்டவர் குடுத்த ஓசி ப்ளாக்ல அவனை பத்தி நாலு வரி எழுதலாம்னு தோணித்து.சொல்லியாச்சு!
டேய் அண்ணா! ஹேப்பி பர்த்டே டா! சந்தோஷமான மனசோடையும், ஆரோக்கியமான உடம்போடையும், பிக்கல் பிடுங்கல் இல்லாம தீர்க்காயூசா நீ இருக்கனும்னு உம்மாச்சி கிட்ட பிரார்த்தனை பண்ணிக்கறேன்.