காத்தால ருத்ர ஜபம் முடிஞ்சு சாஸ்தா பீடத்துக்கு அபிஷேகம் ஆனதுக்கு அப்புறம் வெளி பிராகாரத்துல ஒரு மேடைல அலங்காரம் பண்ணி வச்சுருக்கும் 3 பெரிய விளக்குலதான் எல்லா பூஜையும் நடக்கும். குளத்து தீக்ஷதர் மாமா பெரிரிரிய கைமணியை 'டிங் டிங் டிங்'னு மெதுவா அடிச்சுண்டு பூஜை பண்ணும் அழகே அழகுதான். வழிவழியா வந்த பரம்பரையை சேர்ந்த வயசான மாமாக்கள் சாஸ்தாவோட பிரதி நிதியா பலகாய்ல கம்பீரமா உக்காசுண்டு இருப்பா. 12 மணிக்கு அப்புறம் பலகாய் ஸ்தானத்துகாரா எல்லாரையும் குடை/மேள தாளத்தோட பக்கத்துல இருக்கும் வாய்க்காலுக்கு நீராட்டர்துக்கு அழைச்சுண்டு போவா. ஆராட்டு நடக்கும் போது பசங்க வால்தனத்தை ஆரம்பிச்சுடுவா. பொதுவா பலகாய் ஸ்தானத்துகாரா மட்டும் ஸ்னானம் பண்ணிட்டு புது வஸ்த்ரம் கட்டிக்கர்து வழக்கம். அவா கூட போன சில அச்சுபிச்சு ஆட்களையும் சேர்த்து பசங்க குளுப்பாட்டி அனுப்பிடுவா. திடுதிப்புனு குளிச்ச அவாளுக்கு கட்டிக்க மாத்து வேஷ்டி கூட இல்லாம முழிச்சுண்டு இருப்பா. என்னவோ அந்த மாமாக்கள் ஆசைபட்டு ஸ்னானம் பண்ணின மாதிரி அவாத்து மாமிகள் " ஊர்ல கல்யாணம் மார்ல சந்தனம்ங்கர கதையா நீங்க எதுக்கு ஸ்னானம் பண்ணினேள்? கஷ்டகாலம்"னு கரிச்சுகொட்டுவா.

சாஸ்தா வரவு..:)
அது முடிஞ்சு சாஸ்தா வரவு பாட்டு எல்லாம் பாடிண்டே அவா எல்லாரையும் மறுபடி கோவிலுக்கு அழைச்சுண்டு வருவா. பலகாய் ஸ்தானத்துகாராளுக்கு குடுக்கர்துக்குனு தனியா இளனீர்,பானகம் எல்லாம் உண்டு. சில மாமாக்கள் இளனீருக்கு ஆசைபட்டுண்டு அவாளும் ‘திங் திங்’னு சாமி வந்த மாதிரி குதிச்சு எல்லாம் பார்ப்பா, அவாளுக்கு எல்லாம் குடுக்கர்த்துக்கு தனியா இளனீர் ஓட்டுல வாய்கால் ஜலம் ரொப்பி ஸ்பெஷல் இளனீர் தயார் பண்ணி வெச்சு இருப்போம். அதை குடிச்சவா அடுத்த 10 நிமிஷத்துல முடுக்கை பாத்து முடுக்கிண்டு ஓடுவா.
5000 பேர் சாப்பிடும் பந்தில நம்ப இஷ்டத்துக்கு எல்லாம் வாளியை எடுத்துண்டு பரிமாறமுடியாது. அதுக்கும் ஒரு முறை உண்டு. பாயாசம்/ஸ்வீட்/வடை பரிமாறும் பொறுப்பு எப்போதும் கிழி கிராமத்துக்கு மத்த அயிட்டம் எல்லாம் குலுக்கல் முறைல சீட்டு எழுதி போட்டு தீர்மானம் பண்ணுவா. சில கிராமத்துக்காரா எல்லாம் பெரிய அயிட்டம் எதுவும் வந்துடகூடாதே!னு உம்மாச்சியை பிரார்த்தனை பண்ணிண்டு இருப்பா. பரிமாறும் வேலை நடக்கும் போது கிராம தர்மாதிகாரி எல்லாம் சரியா நடக்கர்தா?னு கழுகு மாதிரி பாத்துண்டே இருப்பா. சரியான முறைல பரிமாறாட்டியோ அல்லது பரிமாறும் போது சிடுசிடுனு எரிஞ்சு விழுந்தாளோ அந்த கிராமத்து தக்கார் ராத்ரி நடக்கும் மீட்டீங்க்ல விளக்குக்கு நமஸ்காரம் பண்ணி மன்னிப்பு கேக்கனும். மெட்ராஸ்லேந்து வந்த யாரோ ஒரு மாமா ஒரு ஆர்வகோளாறுல வாளியை எடுத்துண்டு பரிமாற போயிட்டார். சர்வ நிதானமா அவர் பரிமாறின அழகை பாத்துட்டு எங்க தெரு கிச்சா மாமா " ஏ அம்பி! நீ இப்படி மோஹினி அவதாரம் அமிர்தம் பங்கு போடர மாதிரி டான்ஸ் ஆடிண்டு பரிமாறினாக்கா ராத்ரி நான் 500 நமஸ்காரம் பண்ணனும்டா!"னு சொல்லி வேற ஆளை பரிமாறசொன்னார்.
குட்டி குட்டி வானரங்கள் கைல ஜக்கை வெச்சுண்டு எல்லாருக்கும் ஜலம் கேட்டுண்டு வரும். சரிய்யா கங்கா மாமி பக்கத்துல போகும் போது ஏ கங்கை! ஏ கங்கை!னு ஜலம் கேக்க ஆரம்பிச்சிருவோம். வயசுல பெரியவாளை பேர் சொல்லி கூப்டா வாய்ல புண்தான்டா வரும் உங்களுக்கு!னு அந்த மாமியை கொஞ்சம் கத்த விட்டுட்டு அடுத்த வரிசைல காவேரி மாமியை பாத்த உடனே பொங்கி வரும் காவேரி! பொங்கி வரும் காவேரி!னு கூவ ஆரம்பிச்சுடுவோம்...:)

பச்சை பட்டுபுடவையில் கல்லிடை...:)
பந்தில இடம் பிடிக்கர்துக்கு மாமா மாமிகள் ஜாக்கிஜான் வேகத்துல ஓடுவா. இப்படிதான் ஒரு தடவை குண்டல கோமா மாமி பக்கத்துல ஒரு இடம் போட்டு வெச்சுருந்தா, அந்த பக்கமா வந்த இன்னோரு மாமா,
i) “யாருக்கு இடம் மாமி?”
"எங்க தெரு ‘வம்பு’ வைதேகி மாமிக்கு இடம் போட்டு் வச்சுருக்கேன் மாமா"
"ஓஓஓ! வைதேகி மாமி போன பந்திலையே சாப்டுட்டு கைஅலம்ப போயாச்சு, நான் உக்காந்துக்கறேன்.
ஓய்ய் மாமா! பொம்ணாட்டிகள் பக்கத்துல வந்து உக்கார வரேரே ஓய்! வேற எங்கையாவது போங்கோ மாமா!
உங்காத்து மாமாவும் நானும் கோத்ர தாயதிதான் மாமி அந்த வகைல பாத்தாக்கா நீங்க எனக்கு அங்கச்சி தான். பேசாம சாப்பிடுங்கோ மாமி!
.................................................................................
ii) “ஏ கோமா எப்பிடிடீ இருக்கை? உன்னோட ஆம்படையான் இப்ப நேரும்கூருமா இருக்கானாடீ? எங்கடீ உன்னோட ஆத்துக்காரன்?”
“அதோ! பாயாச வாளியை தூக்கிண்டு ஓடிண்டு இருக்காரே?
இங்க எல்லாருமே பாயாச வாளியோடதான் ஓடிண்டு இருக்கா இதுல எந்த பாயாசவாளியை போய் பாக்கர்து!!
கட்டம் போட்ட அன்ட்ராயர் கூட வெளில தெரியர்தே! அவர்தான் மாமி!”
....................................................................................
iii) ஏ அம்பி! அவியல் போடுறா! கூப்ட கூப்ட காதுல வாங்காத மாதிரியே போறையேடா?
கொஞ்சம் தள்ளி போனதுக்கு அப்புறம் “இதோட 8 தடவை அவியல் போட்டாச்சு! என்னதான் வயிரோ! பாயாசத்துக்கு எல்லாம் அவியலை தொட்டுண்டு சாப்பிடரார் அந்த மாமா, கஷ்ஷ்ஷ்டம்!”
இந்த மாதிரியான சம்பாஷனைகள் எல்லாம் சர்வசாதாரணமா கேக்கலாம்.
சுபம்