Thursday, January 10, 2013

அவுத்து விட்ட கழுதை 4


Part 1 Part 2 Part 3


கல்லிடைல போய் இறங்கின சமயம் தாமிரபரணில நிறைய ஜலம் இருந்தது. பாத்ரூம்/பக்கெட்/பிளாஸ்டிக் மஃக்னு பழகி போன மெட்ராஸ் வாசியான என்னோட சரிபாதியை கூட்டிண்டு ஆத்தங்கரைக்கு கிளம்பியாச்சு. ‘ஆத்தங்கரை மரமே! அரசமர இலையே! ஆரம்பிச்சு ‘அண்டங்காக்கா கொண்டக்காரி’ வரைக்கும் இந்த ஆத்தங்கரைல எடுத்த பாட்டுதான் தெரியுமா?னு தாமிரபரணி மகாத்மியத்தை சொல்லிண்டே குளிக்கர இடத்தை அடைஞ்சோம். ஸ்படிகமா இருந்தது ஆத்தங்கரை ஜலம். சுகமா ஒரு குளியலை போட்டேன். திடீர்னு ஒரு அலறல், என்னடாப்பானு திரும்பி பாத்தா மேடம் தான் கத்தினது. ‘நீங்க மீன் கடிக்காது சொன்னேளே’னு பரிதாபமா கேட்டாங்க. கல்யாணத்துக்கு முன்னாடி ‘எங்காத்து பொண் பரமசாது’னு உங்க அப்பா கூட அள்ளிவிட்டார் நான் நம்பலையா?’னு மனசுக்குள்ள நினைச்சுண்டேன். இதே மாதிரி தான் சில வருஷங்களுக்கு முன்னாடி என்னோட கல்லிடை வந்த கிண்டி மாமாவும் மீன்கடிக்கு பயந்து துள்ளிகுதிச்சு ஓடினார். குளிச்சுட்டு வரவழில கண்ணுக்கு எட்டின தூரம் வரைக்கும் பச்சை நிறமே பச்சை நிறமேனு பாடும்படியா இருந்தது. வானத்தோட நீல நிறம், நடுல நடுல கொஞ்சம் வெள்ளை மேகம், தூரத்துல தெரியும் ஆத்தங்கரை பாலத்துல ஊர்ந்து போகும் பஸ்/லாரி, இதமான பொதிகைமலை காற்றுனு ரொம்ப ரம்மியமா இருந்தது.


ஆத்தங்கரை போகும் வழி


வர வழில எனக்கு தெரிஞ்ச ஒரு மாமி வட்டிக்காரன் மாதிரி என்னை பிடிச்சுண்டுட்டா. ‘ஏ தக்குடு எப்பிடி இருக்கை? உங்க ஊர்ல எல்லாரும் செளக்கியமா? பெங்களூர்ல நம்பாத்து ஜனனியை மடிவாலால வச்சு பாத்தையாமே?’னு வரிசையா பேசிண்டே இருந்தா. ‘ஆமாம் மாமி! உங்காத்து பொண்ணரசியை பாத்தேன். நம்ப ஊர்ல இருந்த வரைக்கும் கத்திரிக்கா நறுக்கர நைஃப் மாதிரி இருந்தா இப்ப பெங்களூர்ல கத்ரினா கைஃப் மாதிரி இருக்கா’னு நானும் மூச்சு விடாம பதில் சொல்லிட்டு நகர்ந்தேன். போய் இறங்கி ரெண்டு நாள் கூட ஆகலை அதுக்குள்ள நானும் தங்கமணியும் குருவாயூர் கிளம்பியாச்சு. குருவாயூர் போகனும்னு ரொம்ப வருஷமாவே நினைச்சுண்டு இருந்தேன், போதாக்குறைக்கு மேடமும் இந்த வருஷம் குருவாயூர் கூட்டிண்டு போவேளா?னு கேக்கவும் டபக்குனு டூர் ப்ளான்ல சேர்த்துட்டேன். திருனவேலி போய் குருவாயூர் எக்ஸ்பிரஸ்ல ஏறியாச்சு. காத்தால அஞ்சு மணிக்கே எனக்கு முழிப்பு வந்துடுத்து. வெளில நன்னா மழை பெஞ்சுண்டு இருந்தது. எல்லாரும் தூங்கிண்டு இருக்கும் போது தனியா உக்காச்சுண்டு ஜென்னல் வழியா வேடிக்கை பாத்துண்டு வரர்து ஒரு தனி சுகம். அதுவும் அதிகாலை பொழுதா இருந்தா கேக்கவே வேண்டாம். காத்தால ஆறு இருபது மணிக்கு குருவாயூர் ஸ்டேஷன் வந்துருந்து.

பரபரப்பே இல்லாத சின்ன அழகான ஊர் குருவாயூர். ரயில்வே ஸ்டேஷன்லேந்து கோவில் ரொம்ப பக்கத்துல தான் இருக்கு. ஆட்டோ பிடிச்சாலும் இருபது ரூபா தான் ஆகர்து. புக் பண்ணி வச்சுருந்த ரூமுக்கு போய் மடமடனு குளிச்சு நான் ரெடி ஆயிட்டேன். ஒரு வழியா அரைமணி நேரத்துல அம்மணியும் ரெடி. புது வேஷ்டி, அங்கவஸ்திரம், கோபி சந்தனமுமா நின்னுண்டு இருந்த என்னை பத்து வினாடி மேடம் கண்கொட்டாம பாத்தாங்க. நானும் பெருமை தாங்காம ‘என்ன அசப்புல பாக்கர்த்துக்கு பாலக்காட்டு மாதவன் மாதிரி இருக்கா?’னு அங்கவஸ்திரத்தை சரிபண்ணிண்டே கேட்டேன். ‘பஞ்சவாத்ய கோஷ்டில ஜெண்டமேளம் வாசிக்கரவர் மாதிரி இருக்கு’னு சொல்லிட்டு ஒரு நக்கல் சிரிப்பு. இந்த பொம்ணாட்டிகளே இப்படித்தான் மனசால ரசிச்சதை வாய் நிறைய பாராட்டவே மாட்டா. ஆம்பளேள் தான் லூசு மாதிரி ‘தேவதையா இருக்கை! அப்பிடியே அள்ளிண்டு போராடா!’னு தகுதிக்கு மீறி பாராட்டிடறோம். ‘சரி சரி விடுடா சூனா பானா! உன்னோட அழகு யாருக்கு வரும்!’னு எனக்கு நானே சமாதானம் சொல்லிண்டு கிளம்பினோம்.


பூ கோலம்


ஓணத்துக்கு 2 நாள் முன்னாடி நாங்க குருவாயூர்ல இருந்ததால எங்க பாத்தாலும் ஒரே பூ கோலமா இருந்தது. பொம்ணாட்டிகள் தலை நிறையா பூ வச்சுண்டா ஒரு தனி அழகுதான்னு சொல்லிண்டே ஆசையா ஒரு முழம் பூ வாங்கி தரலாம்னு பூக்காரர்ட விலை கேட்டா அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயோட மதிப்பை சொன்னார். இதுக்கு மேல வாங்கிதரலைனா ‘ஒரு முழம் பூ வாங்கி தர வக்கு இருக்கா?’னு தங்கமணி கேட்காட்டாலும் பூக்காரர் கேட்ருவார்னு பயந்து அவருக்கு தண்டம் அழுதேன். கேரளா கோவில்களுக்கே உண்டான தனிச்சிறப்பு அதோட கட்டுப்பாடுகள் தான். கோவில் விதிகளை யாருக்காகவும் விட்டுக்குடுக்கமாட்டா. யாரா இருந்தாலும் ஒரே ஒரு வரிசை தான். சினிமா தியேட்டர் மாதிரி 50 ரூபாய் வரிசை 300 ரூபாய் வரிசை அங்க கிடையாது. வரிசைல போகக்கூடிய ஆட்கள்ல பாதி பேர் கைல எதாவது ஒரு உம்மாச்சி புஸ்தகம் இருக்கு. வளவளனு வம்பு பேசிண்டு போகக்கூடியது நாம மட்டும் தான். அதே மாதிரி சுத்தமா குளிச்சு, நெத்தில சந்தனம் குங்குமம் இட்டுண்டு, கோடி வஸ்த்ரம் கட்டிண்டு பயபக்தியா வரும் மக்களை பாக்கர்துக்கே ஆசையா இருந்தது. கொஞ்சம் கொஞ்சமா எங்களோட வரிசை நகர்ந்து சன்னதிக்குள்ள போனோம். சுந்தரவதனன் மயில்பீலி அசைய மஞ்சள் பட்டாடை பளபளக்க பூமாலைகள் சூடி தீப ஒளியில் குழந்தையாய் காட்சி அளித்தான். சிலவினாடிகள் சில யுகங்கள் பெறும்னு சொல்லும்படியா சில வினாடிகள் கண்ணில் தோன்றி மறைந்த அந்த மாயாவியின் அழகில் மயங்கித் தான் போனோம்.

வெளில வந்ததுக்கு அப்புறம் ஒரு ஹோட்டல்ல ஆகாரம் பண்ணிட்டு ரூமுக்கு போய் டிரெஸ் மாத்திண்டு பக்கத்து ஊரான பாலக்காட்டுக்கு கிளம்பினோம். பாலக்காட்டுல எனக்கு தெரிஞ்ச ஒரு ஸ்னேகிதர் இருக்கார். பஸ்ஸோட சைஸ்லையும் இல்லாம மினிபஸ் அளவுக்கு சின்னதாவும் இல்லாம மத்யமமான ஒரு சைஸ்ல நாங்க போன பஸ் இருந்தது. தகரடப்பா மாதிரி பஸ் இருந்தாலும் க்ளைமாக்ஸ்ல வில்லனை துரத்தும் ஹீரோ மாதிரி சிட்டா பறந்தது வண்டி. போகர வழில ரோட்ல யாராவது அகஸ்மார்த்தா கஷ்கத்தை சொறியர்துக்கு கையை தூக்கினா கூட டிரைவர் உடனே ஒரு ஸ்டடன் ப்ரேக் போட்டு ‘வா வா!’னு அழைக்கரார். போகும் வழி முழுக்க காடும் மலையுமா இருக்கு. ஊருக்கு உள்ள இருக்கும் வீடுகளை காட்டிலும் கிராமங்களுக்கு நடுல வரும் மொரட்டு பங்களா வீடுகள் கண்களை மிரட்டர்து. வளைகுடா நாடுகளோட வளமை அந்த வீடுகள்ல பிரதிபலிக்கர்து. பாலக்காட்டுல யாராவது ‘போனாமாக்கும்,வந்தோமாக்கும்’னு பாலக்காடு ஸ்டைல்ல பேசிண்டு இருக்காளானு காதை தீட்டி வச்சுண்டு போனேன். பாலக்காட்டுல இருக்கும் போது தோஹால இருக்கும் ஒரு அக்காவையும் நம்ப அனன்யா அக்காவையும் நினைச்சுண்டே இருந்தோம்.

பாலக்காட்டுல சாயங்காலம் வரைக்கும் நண்பர் ஆத்துல பேசிண்டு இருந்துட்டு மறுபடியும் குருவாயூர் கிளம்பி வந்தோம். அடுத்த நாள் காத்தால 4 மணிக்கு முன்னாடி சுவாமி தரிசனம் பண்ணனும்னு நினைச்சோம் ஆனா செல்போன் அலாறம் அடிக்காம அழிச்சாட்டியம் பண்ணி ஏழு மணிக்கு போகும்படியா ஆயிடுத்து. மலபார்ல இருக்கும் எல்லா நகைகடை விளம்பரத்துலையும் வரும் அழகிகள் மாநாடு எதாவது நடக்கர்தோ!னு நாங்க வாயை பொழக்கும்படியா தங்கத்துல மாங்காமாலை தேங்காமாலை காசுமாலை போட்ட ஏகப்பட்ட கல்யாணஜோடிகள் கோவில் வாசல்ல கல்யாணம் பண்ணிக்க செட்டு செட்டா நின்னுண்டு இருந்தா. ‘என்னோட கையை நன்னா கெட்டியா பிடிச்சுக்கோ! எதாவது ஓமணக்குட்டி கூட்ட நெரிசல்ல என்னை ஆத்துக்காரர்னு நினைச்சு கூட்டிண்டு போயிடபோரா!’னு தங்கமணிக்கு எச்சரிக்கை பண்ணினேன். ‘ஓசில குடுத்தாலும் உங்களை ஓமணக்குட்டியோட அம்மா கூட திரும்பிபாக்கமாட்டா!’னு பதில் சொல்லி பழிப்பு காட்டினா. அதுக்கு அப்புறம் பக்கத்துல இருக்கும் ஆனைக்கோட்டைக்கு போனோம். திரும்பின பக்கம் எல்லாம் யானையா இருந்தது. சுமாரா 50 - 60 யானை பாத்து இருப்போம். யானை,ரயில் & வானவில் இதை எல்லாம் எத்தனை தடவை பாத்தாலும் அலுக்காது. யானை ஷவர் பாத் எடுக்கர்து,ஊசி போட்டுக்கர்து,மம்மு சாப்பிடர்து,விளையாடர்துனு எல்லா வேடிக்கையையும் பாத்துண்டு இருந்தோம்.

அடுத்த போஸ்ட்ல மதுரை திருச்சி போன கதை என்னாச்சுனு பாப்போம் கேட்டேளா!

15 comments:

lata raja said...

இந்த பொம்ணாட்டிகளே இப்படித்தான் மனசால ரசிச்சதை வாய் நிறைய பாராட்டவே மாட்டா. ஆம்பளேள் தான் லூசு மாதிரி ‘தேவதையா இருக்கை! அப்பிடியே அள்ளிண்டு போராடா!’னு தகுதிக்கு மீறி பாராட்டிடறோம்.
Ada ada, vegu seekram kaththunduttae!

Subhashini said...

கிண்டி மாமாவை வம்புக்கு இழுக்கரதே உன் வேலையா போச்சு தக்குடு அதென்ன கல்லிடை லேருந்து ரொம்ப சீக்கிரம் குருவாயூருக்கு போயாச்சு. கல்லிடை கதை நீண்டு வரணுமே.....:))

RVS said...

கிண்டி மாமாவை மீன் கடிச்ச கதையை ரெண்டு எபிசோடா எழுதவும்.

கல்யாணத்துக்கப்புறம் எழுதற போஸ்ட்ல ஒரு சின்ன வித்தியாசம் என்னான்னா.. சர்க்கரைப் பொங்கல்ல முந்திரி தூவினா மாதிரி ரொமான்ஸ் வருது... குட். கீப்பிட்டப்.

பொங்கல் நல்வாழ்த்துகள்!

அமுதா கிருஷ்ணா said...

யானைக்கோட்டையில யானைக்கூட ஃபோட்டா எடுத்துக்கலையா?உங்க பதிவுகளை வரிசையா படுச்சுட்டே இருந்தா நான் கூட அவாத்து பாஷை கத்துண்டுடுவேன் போல இருக்கு.

ஸ்ரீராம். said...

மதுரைக் கதைக்கு வெயிட்டிங்!

பூந்தளிர் said...

. ‘ஓசில குடுத்தாலும் உங்களை ஓமணக்குட்டியோட அம்மா கூட திரும்பிபாக்கமாட்டா!’

ஆத்துக்காரிகிட்ட இப்படியா மூக்கு உடைபடுவேள்?

அப்பாவி தங்கமணி said...

சூப்பர் போஸ்ட்... மூட் அவுட்டா இருக்கறப்ப ஆதித்யா சேனல் மாதிரி தக்குடு சேனல் கூட நல்லாவே வேலை செய்யுது ...:)

உன் போஸ்ட் படிச்சு படிச்சு உங்க ஊருக்கு போகணும்னு ஆசையே வந்துடுச்சு. ஆறு குளம் வயல் மேகம் வானம்னு சூப்பர்

க.மு vs க.பி என்ன விதியாசம்னா, பல்பு எண்ணிக்கை தான் வித்தியாசம். பல்பு மேல் பல்ப் வந்து உன்னை சேர, அதை வாங்கி தந்த பெருமை எல்லாம் உன் ஆத்துகாரியை சேர...:)

Porkodi (பொற்கொடி) said...

//க.மு vs க.பி என்ன விதியாசம்னா, பல்பு எண்ணிக்கை தான் வித்தியாசம். பல்பு மேல் பல்ப் வந்து உன்னை சேர, அதை வாங்கி தந்த பெருமை எல்லாம் உன் ஆத்துகாரியை சேர...:)//

ROFL!!!! sums up well. :D

Matangi Mawley said...

"panja vaathyam--- jenda melam..." ROFL!!!! :D:D:D

Renga said...

Simply super and i like it very much. It is equal to early morning One Glass Degree Coffee.

இராஜராஜேஸ்வரி said...இதயம் நிறைந்த இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்!

கோவை2தில்லி said...

வரிக்கு வரி கலக்கல்.... சிரிச்சு சிரிச்சு வாயே வலிச்சுடுத்து....

இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.

ezhil said...

இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்-எழில்

Ranjani Narayanan said...

திருநெல்வேலியும், தாமிரபரணியும் கண் முன்னால வந்துடுத்து!

'கத்திரிக்கா நறுக்கற நைஃப் மாதிரி இருந்தவ காத்ரீனா கைஃப் மாதிரி.....'

சிரிச்சு முடிக்கலை, கேட்டோ!

இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துகள்!

RAMVI said...

வழ்க்கம்போலவே இதுவும் கலக்கல்.

நடுவுல கேரளா கோவில்கள் பற்றிய தகவல்கள் எல்லாம் சிறப்பாக எழுதியிருக்கே.

உம்மாச்சி பதிவுல குருவாயூரப்பனை பற்றி எழுதலாமே.

Post a Comment

யெச்சுஸ்மி, comment பொட்டி இங்க இருக்கு.....:)